விழிகளும், முகமும் சிவந்து ருத்ரமூர்த்தியாக நின்றவனை காண்கையில் மயூரிக்கு நாக்கு மேலன்னத்தில் ஒட்டிக்கொண்டது.
பாடல் ஓடிக்கொண்டே இருக்க பற்களை கடித்தபடி அவளை கொலை வெறியுடன் பார்த்திருந்த ரஞ்சன்
”அதை நிப்பாட்டு”
என்று வார்த்தைகளை நெருப்பாக கடித்து துப்பினான்.
கைகள் நடுங்க அதை அணைத்தவள், அவனை திரும்பிப் பார்த்தாள்,வெளியே வரும்படி வலது கையில் சொடுக்கிட்டு சைகை செய்தான் ரஞ்சன்.
கால்கள் நடுங்க அவனை தாண்டி நடந்தவளுக்கு அவனை நிமிர்ந்து பார்க்க தைரியம் இல்லை, இருந்தும் மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்தவள்
”உங்…உங்களுக்கு… பரதம் தெரி..”
என்று கேட்கும் முன்
”ஸ்டாப் இட்”
என்று வீடே அதிர கத்தி இருந்தான் ரஞ்சன்.
அவனை அதிர்ந்து பார்த்தபடி நின்று இருந்தாள் மயூரி. அவள் அருகே நெருங்கி அவள் முகத்தின் அருகே குனிந்து பார்த்தவன், அவள் கழுத்தை வலக்கையால் பிடித்திருந்தான். அருகில் இருந்த சுவற்றில் தள்ளி அவள் கழுத்தை நெரித்தான் ரஞ்சன். அவள் மூச்சுக்கு திணற,அவள் அருகே குனிந்து
”எனக்கு பொறுமை ரொம்ப குறைவு அதோட லிமிட்ட நீ தாண்டி ரொம்ப நாளாச்சு.உன்ன..”
என்று பற்களை கடித்தபடி கைகளின் இறுக்கத்தை மேலும் கூட்டினான்.
மயூரிக்கு மூச்சு முட்டியது. கழுத்தை நெரித்த அவன் ஒற்றை கையை ஒரு கையால் விளக்க முயன்றபடி, மறு கையால் அவன் தோளிலும், நெஞ்சிலும் குத்தினாள்.
முகம் சிவக்க மூச்சு திணறி நின்றவளை கண்டு அவனுக்கு சிறிதும் இரக்கம் வரவில்லை.
”ரஞ்சன்”
என்று அதிர்ந்த குரலில், அவன் பிடி லேசாக தளர்ந்தாலும் அவளை விடவில்லை,திரும்பி குரல் வந்த திசையில் நின்ற தன் தாயை ஒரு குரூர பார்வை பார்த்தான்.
மரகதம் ஓடி வந்தவர், மயூரியை நெரித்துக் கொண்டிருந்த அவன் கையைப் பிடித்து இழுத்தபடி
”ரஞ்சன் விடு அவளை,என்ன… பண்ணிக்கிட்டு இருக்க..?!”
என அவரும் அவன் தோளில் அடித்தார்.
“என்ன ரொம்ப சீண்டிக் கிட்டே இருக்கா..!”என்று அவள் கழுத்தை பிடித்திருந்த கரத்திலிருந்து அவளை உதறி கீழே தள்ளினான்.
கீழே விழுந்த மயூரி இருமலுடன், கண்களில் நீருடன்,கழுத்தை வருடியபடி அவனை பார்த்தாள்.அவள் அருகே ஓடி வந்த மரகதம் அவள் முதுகை தடவியவர்
”மயூரி ஒன்னும் இல்லையே”
என்றார். பின் திரும்பி ரஞ்சனை முறைக்க
அவன் மயூரி அருகே வந்தவன் அவள் முன் சொடுக்கிட்டு
”தேயர் இஸ் அன் லிமிட் ஃபார் எவரிதிங்..அண்ட் திஸ் இஸ் இட்..! இன்னும் ஒரு தடவை,ஒரே… தடவை.. உன் உயிர் உன்கிட்ட இருக்காது”
என்றவன் திரும்பி தன் அறையை நோக்கி நடந்தான்.
அந்த அறையை கடக்கும் போது ஒரு நிமிடம் நின்று உள்ளே பார்த்தவன், மீண்டும் மயூரியை திரும்பி முறைத்தான்.மீண்டும் தன் அறையை நோக்கி நடந்து சென்று கதவை அடித்து சாற்றினான்.
மயூரி அதிர்ந்து நெஞ்சில் கை வைத்தபடி மரகதத்தை பார்த்தவள் கண்கள் கலங்க மரகதத்தை கட்டிக்கொண்டாள்.
”நீ ஏன் மயூரி இங்க வந்த”
என்றவர்.
அவள் முதுகை வருடிவிட்டார்,ஒரு பெருமூச்சுடன்
”நான் உனக்கு முன்னையே எல்லாத்தையும் சொல்லி இருக்கணும்”
என்றவர் கண்களும் கலங்கியது.
அவளை மெல்ல எழுப்பி கீழே தன்னறைக்கு அழைத்து சென்றார். சரளா அவசரமாக நீரும், கொஞ்சம் சூடான பாலும் எடுத்து வந்தார்.
கொஞ்சம் நீரை அருந்திய மயூரிக்கு இருமல் வந்தது.அவள் அருகே அமர்ந்து முதுகை தடவிய மரகதம் கண்கள் கலங்கியது
”என்ன… மன்னிச்சிடு மயூரி”
என்று குரல் தழுதழுக்க கூற மயூரியும் கண்கள் கலங்க..
”ம்க்கும்…இல்லை…. என்.. என்..தப்பு தான்.நீங்க சொன்னதுக்கு அப்புறமும் அந்த ரூமுக்குள்ள போனது… என் தப்பு தான்.”
என்றாள்.
மரகதத்திடம் மௌனம் அவள் முதுகை தடவியவர் நெடிய மூச்சை வெளியேற்றியபடி
” மயூரி”
என்று ஏதோ சொல்ல ஆரம்பிக்க..
அந்த அறையின் கதவை சட்டென திறந்தான் ரஞ்சன். பயத்துடன் மயூரி அவனை பார்க்க, மரகதம் அவனை முறைத்தார்.
மயூரியை ஏளனமாக பார்த்த ரஞ்சனின் இதழ்களும் ஏளனமாக சுழித்தது. பின் மரகதத்தை பார்த்தவன்
”நான் கிளம்புறேன்”
என்று திரும்பியவன்.
மீண்டும் திரும்பி மயூரியை பார்த்தபடி தாயிடம் கூறினான்.
”உங்கள் மருமகளை அடங்கியிருக்கச் சொல்லுங்க..தேவையில்லாம என்ன கொலைகாரனா.. ஆக்கிடுவா போல இருக்கு…”
என்றவன் திரும்பி நடந்தான்.
மயூரியை திரும்பி பார்த்த மரகதம் அவள் தோளை தட்டியவர் ஒரு நொடியை மூச்சுடன்
”வா சாப்பிடலாம்”
என்றவரை, கண்கள் கலங்க மயூரி இறைஞ்சுதலாக பார்த்தாள்.
”வா மயூரிமா…இன்னைக்கு உனக்கு எல்லாத்தையும் சொல்றேன்”
என்றார்.
அவளை சமாதானம் செய்து அழைத்துக்கொண்டு உணவு மேஜைக்கு செல்ல சரளாவும் கண்கள் கலங்க
”என்னை மன்னிச்சிருங்க.. அம்மா..! தம்பி ஊருக்கு போயிருந்ததால தான் கொடுத்தேன். இப்படி திடீர்னு வரும்னு நான் நினைச்சு கூட பாக்கலை”
என்றார் குரல் நடுங்க
”விடு சரளா என்னிக்கு இருந்தாலும் மயூரிக்கு தெரிய வேண்டியதுதானே.. இதில் என் தப்பும் இருக்குதானே”
என்றார்.
இருவரும் அமைதியாக உண்ண, மயூரி கஷ்டப்பட்டு உணவை உண்டாள்.உண்டு முடிக்க மயூரியை அழைத்துக் கொண்டு மரகதம்,ரஞ்சன் காலையில் உடற்பயிற்சி செய்யும் மரத்தடிக்கு சென்றார்.
வெகு நேரம் அமைதியே அங்கு வியாபித்தது, மடியில் கோர்த்திருந்த விரல்களையே பார்த்திருந்தாள் மயூரி, மரத்தை பார்த்திருந்த மரகதம் பேசினார்.
”உன் மனசுக்குள்ள ஆயிரம் கேள்விகள் இருக்கும் மயூரி.. அதுக்கு எல்லாத்துக்கும் விடை,என் மகனோட கடந்த காலத்தை நான் சொல்லி முடிக்கும் போது உனக்கே புரியும்”
என்றவர் ரஞ்சனின் கடந்த காலத்தை கூற துவங்கினார்.
ரஞ்சன் ஒரே மகன் என்று செல்லமாக வளர்க்கப்பட்டவன் தான் ஆனாலும் மரகதம் – செல்வம் தம்பதிகளின் கண்டிப்பும் அன்புமாக அருமையான மாணவனாகவே இருந்தான். பள்ளியில் இருந்தே அனைத்திலும் முதலிடம் தான் அவன்.
படிப்பில் முதல் மாணவனாக இருந்தவனுக்கு எட்டாம் வகுப்பு படிக்கும் போதே பரதத்தில் அப்படி ஒரு ஆர்வம். பரதத்தில் நிறைய சாதிக்க அவனுக்கு ஏனோ ஒரு பிரியம்.அதேபோல் கூடை பந்திலும் ஆர்வம் அதிகம். இரண்டிற்க்குமே தனித்தனியாக வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார் செல்வம்.
அந்த வகுப்புகளுக்கும் சென்றவன். இரண்டிலும் நன்றாகவும் சிறப்பாகவும் அவன் சாதித்தான்.அவன் பன்னிரண்டாம் வகுப்பில் அரங்கேற்றமும் செய்து வைத்தார் செல்வம்.
அவன் கல்லூரியிலும் தன் தந்தையின் தொழிலை மேம்படுத்தும் சம்மந்தமான படிப்பயே படித்தான்.
ரஞ்சன் கல்லூரி இரண்டாம் ஆண்டில் படித்துக் கொண்டிருக்கும் போது செல்வம் திடீரென மாரடைப்பால் இறந்து போனார்.
தந்தையின் இழப்பு ரஞ்சனை வெகுவாக பாதித்தது. மரகதமும் கணவரின் இறப்பு, தொழிலை திடீரென சுமக்கும் பொறுப்பு, என்று ரஞ்சனை கவனிக்க தவறினார்.
ரஞ்சன் தவறான பாதையில் செல்ல துவங்கினான்.பதினெட்டு வயதானதும், அவனுக்கென்று கொஞ்சம் தொகை வந்து சேர்வது போல அமைத்திருந்தார் செல்வம். தந்தையின் வழிகாட்டல் இல்லாததால் அது அதிகப்படியான தொகையாகவே அவனுக்கு வந்து சேர்ந்தது.
பெரிய தொகையும் புதிய இளமையும் ரஞ்சனின் ஆணவத்தை கூட்டியது. அதில் அவனுடன் இணைந்த நண்பர்கள் அவனை உபயோகித்தார்களே தவிர, நல்வழிப்படுத்த யாரும் இல்லாமல் ஊதாரியானான் ரஞ்சன்.
இரவு நேர பார்ட்டிகளும்,குடி,சூது என்று தன் இளமையையும் பணத்தையும் சேர்த்தே கரைத்தான் ரஞ்சன்.மரகதத்தின் போதனைகள் வெட்டிப் பேச்சுகளும், வீணான கண்டிப்புகளும் ஆக தோன்றியது அவனுக்கு.
கல்லூரியில் உடன்படிக்கும் நண்பனின் தங்கை என்றவள் காதல் வலையை வீச,அதில் தவறாமல் சிக்கினான் ரஞ்சன். காதலிக்க ஆரம்பித்த உடனே ரஞ்சன் வீட்டில் அவள் கட்டளைகள் விதிக்க துவங்கினாள்.கேட்டதே சரளா சமைத்து வைக்க வேண்டும் என்ற நிபந்தனைகள்.
ரஞ்சனின் விருப்பங்கள் என்று மரகதம் பொறுத்துக் கொண்டார்.இவ்வாறு மேலும் ஒரு வருடம் சென்றது,ரஞ்சன் இறுதி ஆண்டு படிக்கும்போது அவனின் உச்சகட்ட ஆட்டம் துவங்கியது.
ஒரு நாள் இரவு குடிபோதையில் அவளையும் தோளோடு அணைத்து கொண்டு வந்தான் ரஞ்சன். அன்று மரகதத்தின் பொறுமை பறந்தது. அவளை டிரைவருடன் வீட்டிற்கு அனுப்புமாறு வாயிலிலேயே நின்று சண்டையிட்டார்.
முடியாது என்று கோபப்பட்ட ரஞ்சன் அப்பொழுதே அவளுடன் வெளியே செல்ல எத்தணிக்க,மரகதம் எவ்வளவு தடுத்தும் காரில் ஏறி பறந்தான்.
குடிபோதையும், தாயின் மேல் இருந்த கோபம் என்று அனைத்தையும் காரின் வேகத்தில் காட்டினான் ரஞ்சன். அப்பொழுது அந்த கோரம் நிகழ்ந்தது. லாரியின் மேல் மோதாமல் இருக்க காரை வேகமாக ரஞ்சன் திருப்ப,வந்த வேகத்துக்கு கார் நான்கு முறை சுழன்று தலைகீழாக விழுந்தது.
சீட் பெல்ட் போடாமல் இருந்த ரஞ்சன் உயிர் பிழைத்ததே பெரிய விஷயம் என்று ஆகியது, உடன் சென்ற காதலி சீட் பெல்ட் அணிந்ததில் காலில் லேசான பிராக்சருடன் தப்பினாள்.
. ஒரு மாதம் கழித்து கண் விழித்த ரஞ்சனிற்கு,விபத்தை விட நண்பர்களின் விலகளே அதிகம் வலி தந்தது. கால்கள் சரி ஆனதும் காண வந்த காதலி என்ற பேய் அவன் நடப்பதற்கு பத்து சதவீதமே வாய்ப்பு இருப்பதாக கூறி, நொண்டியை விரும்ப முடியாது என்று குரூரமாக கூறி சென்றாள்.
யாரும் இல்லாமல் தாயின் கண்ணீரும் அவனுக்கு மனிதர்கள் மேல் வெறுப்பை அதிகமாகவே தந்தது. இரண்டு மாதங்கள் கழித்து வீட்டிற்கு வந்த ரஞ்சன் அவன் அறையில் அடைந்தான்.
இனி காலால் நடக்க முடியாது என்கின்ற நிலைமையில் இனி எங்கே பரதம் ஆடுவதும், கூடை பந்து விளையாடுவதும் என்ற விரக்தி அவனின் கோபத்தையும் மனவலியையும் அதிகப்படுத்தியது.
பரதமும்,கூடை பந்தும் சம்பந்தமான அனைத்து பொருட்களையும் காணவே விரும்பாமல் தூக்கி எறிந்தான்.அவனின் வேதனையை காண விரும்பாமல் அதை தனி அறையில் பூட்டினார் மரகதம்.
மூன்று வேளை உணவிற்கும் காலை கடன்களை நிறைவேற்றுவதற்கும் மட்டுமே மரகதத்தை அறைக்குள் அனுமதித்தான். அதுவும் வெறுப்புடனும்,விரக்தியுடனும் வேறு வழியில்லாமல்.
அலைபேசி,தொலைக்காட்சி என்று எந்த ஒரு வெளி தொடர்பும் இல்லாமல் அவன் அறையிலேயே இருந்தான். முடி திருத்துவது கூட அவனே சரியில்லாமல் செய்து கொண்டு ஒரு பைத்தியக்காரனைப் போல இருந்தான்.
நண்பர்களும்,வாழ்க்கையும் அவனுக்கு துரோகம் இழைத்து விட்டதாக எண்ணி வெறுத்தான். இவ்வாறு ஆறு மாதங்கள் ஓடியது.
திடீரென ஒரு நாள் டாக்டரை அழைத்து வரச் சொல்லி தன்னால் நடக்க இயலுமா என்று பரிசோதித்துக் கொண்டான்.
வாய்ப்புகள் இருப்பதால் தீவிரமாக உடற்பயிற்சி செய்தான். மீண்டும் கம்பெனியை காண சென்றான். வெளியே வந்தான். ஆனால் இறுகிப்போனான் ரஞ்சன். யாருமே நெருங்க முடியாத ராட்சசன் ஆனான்.
