அத்தியாயம் 15

“நானே ஏதோ டென்ஷன்ல இருந்தேன்டா” பாலா சற்றுச் சோர்வான குரலில் கூறியதும், “என்ன உனக்கு டென்ஷன்? மலரோ, இல்ல நாளைக்கு உனக்கு மனைவியா வேற யார் வந்தாலும், அவங்களை என்ன பேசினாலும் இப்படித்தான் கேட்டுக்கிட்டுச் சும்மா இருப்பியா? அவங்களை விட்டுக் கொடுக்காமத்தான் இருக்கணும்” என்று சசி அழுத்தமாகவே உரைத்தான்.

“விடுறா… அவனுங்க நம்ம ஃப்ரெண்ட்ஸ் தானே?” என்று பாலா சமாளிக்க முயல, “அதெல்லாம் இல்லடா! நீ என் ஒய்ஃபைப் பத்தித் தப்பாப் பேசினா நான் கோபப்படுவேன். நீ யாரையும் பேச விடாம இருக்கறதுதான் உனக்கு நல்லது. அப்போதான் உன் ஃபேமிலி நல்லா இருக்கும்” சசி நண்பனுக்கு புத்திமதி கூறினான்.

“என்னடா, ஓவரா சப்போர்ட் பண்ணிப் பேசுற? ஃபிளவர் மேல உனக்கும் ஒரு கண்ணா?” என்று ராகவ் கேலியாகச் சிரிக்க, பாலாவுக்குக் கோபம் கரை கடந்தது.

“என்ன ராகவ் இப்படியெல்லாம் பேசுற? மைண்ட் யுவர் லிமிட்ஸ், இட்ஸ் ராங்! அவளைப் பத்தித் தப்பாப் பேசாதீங்க” என்று எச்சரித்த பாலா, ஆத்திரத்துடன் எழுந்து வெளியே சென்றுவிட்டான்.

இரவு… பாலா தன் அறையில் படுக்கையில் சாய்ந்திருந்தவன், தனிமையில் நிதானமாக யோசித்துப் பார்த்தான். 

‘நான் உண்மையிலேயே மலரைக் காதலிக்கிறேனா? அப்படி இருந்திருந்தால், ஏன் அவள் மீது எனக்கு இத்தனைக் கோபம்? அவளிடம் கொஞ்சம் பொறுமையாகப் பேசியிருக்கலாம். எதற்காக என் நண்பர்களின் கேலிப் பேச்சுகளை கண்டிக்காமல் வேடிக்கை பார்த்தேன்?’ என்று தன்னைத்தானே சுயபரிசோதனை செய்து கொண்டவன், இனி தன்னவளைப் பற்றியும், தங்கள் காதலைப் பற்றியும் யாரிடமும் வெளிப்படையாக உரையாடக்கூடாது என்றும், அவளது காதலுக்காகக் காத்திருக்க வேண்டும் என்றும் தீர்மானித்துக்கொண்டான்.

******

பாலா நினைத்த மாதிரியே கம்பெனியில் லாபம் பன்மடங்கு பெருக ஆரம்பித்தது. சொன்னபடியே மூன்றே மாதங்களில் தனஞ்செழியனுக்குப் பணத்தைத் திருப்பித் தந்தான். 

“என் மேல நம்பிக்கை வச்சதுக்கு ரொம்ப தேங்க்ஸ் அங்கிள்” என்று நெகிழ்ச்சியுடன் அவரை அணைத்துக்கொண்டான். 

பாலா, நிறுவன லாபத்தில் தன் நண்பர்களுக்கும் உரிய பங்குகளைப் பிரித்துக் கொடுக்க, அவர்களின் பெற்றோர்கள் அடுத்தடுத்து அவர்களது திருமண நிச்சயதார்த்தங்களை விமரிசையாக நடத்த ஏற்பாடு செய்தனர்.

பாலாவிற்குத் தன் நண்பர்களிடம் எந்தக் கோபமும் இல்லை. ஆனால், ரகுவும் ராகவும் மலரால்தான் தங்களுக்குள் பிரச்சினை வந்ததாக நினைத்து, அவள் மீது கடும் அதிருப்தியில் இருந்தனர். 

அலுவலகத்தில் தங்கள் நிச்சயதார்த்தத்திற்கு எல்லோரையும் அழைத்தவர்கள், மலரை மட்டும் வேண்டுமென்றே தவிர்த்துவிட்டனர். அவளுக்கு அது உள்ளுக்குள் கஷ்டமாகத்தான் இருந்தது. இருந்தாலும், பெண்ணவளுக்கு வலிகள் ஒன்றும் புதிதில்லையே!

எதையும் பெரிதாகக் கண்டுகொள்ளாமல் கடந்து சென்றுவிட்டாள் மலர். சசி மட்டும் தன்னுடைய நிச்சயதார்த்த விழாவிற்கு அவளை அன்போடு அழைத்திருந்தான். ரகுவும் ராகவும் தங்களுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்களை நண்பனின் நிச்சயதார்த்தத்திற்கு அழைத்து வந்திருந்தனர்.

பெற்றோர்கள் முன்னின்று சசியின் நிச்சயதார்த்தத்தை நடத்திக்கொண்டிருக்க, பாலாவிற்கு  மனம் சற்றுக் கனத்துப் போனது. மேடையில் நின்றிருந்தவன், அலுவலக நண்பர்களுடன் கீழே அமர்ந்திருந்த மலரையே பார்த்திருந்தான்.

‘தனக்கும் தன் தந்தையும் தாயும் இருந்திருந்தால், இதே மாதிரித் திருமணம் நிச்சயம் செய்திருப்பார்கள். என் வாழ்விலும் எல்லாம் நடக்க வேண்டிய வயதில் நடந்திருக்கும்’ என்று பாலாவிற்கு ஏக்கம் எழுந்தது. அவன் அங்கு புன்னகையுடன் அமர்ந்திருந்த மலரைப் பார்த்தான்.

‘உயிரோடு இல்லாவிட்டாலும் எனக்காவது பெயரளவில் சொல்லிக்கொள்ளப் பெற்றோர் இருந்தனர். ஆனால், அவளுக்கு? அவளால் மட்டும் எப்படி எல்லாவற்றையும் சந்தோஷமாக ஏற்றுக்கொள்ள முடிகிறது? அவள் மனதிற்குள்ளும் ஆசைகளும் ஏக்கங்களும் இருக்கும் அல்லவா?’ என்று சிந்தித்தான்.

இத்தனை நேரமும் பாலாவை ரசித்துக்கொண்டிருந்த மலர், அவன் தன்னை நோக்கிப் பார்வையைத் திருப்பியதும் சட்டென்று விழிகளை வேறுபுறம் அலைபாய விட்டாள். ஆனால், நீண்ட நேரமாக பாலா தன்னையே பார்த்தபடி ஏதோ யோசனையில் ஆழ்ந்திருப்பதைக் கண்டவளோ, அவனை மீண்டும் நோக்கினாள்.

பெற்றோரின் நினைவும், அவளது காதல் மறுப்பும் ஒருசேர அவனது விழிகளில் நீரைத் தளும்பச் செய்தன. அதைக் கவனித்தவள், ‘என்னாச்சு?’ என்பதுபோல் புருவங்களை உயர்த்தி வினவியதும், ‘ஒன்றுமில்லை’ என இடவலமாகத் தலையசைத்தான்.

சசி, ரகு, ராகவ் மூவரும் தங்கள் இணைகளுடன் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ள, பாலா மட்டும் அதில் தனியாக நின்றிருந்தான்.

“ஒரு நிமிஷம்” என்றுவிட்டு வேகமாக மேடையிலிருந்து இறங்கியவன், அங்கு யாரிடமோ பேசிக்கொண்டிருந்த மலரிடம் எதுவும் சொல்லாமல், அவள் கையைப் பிடித்துத் தரதரவென்று இழுத்து வந்து தன்னருகே நிற்க வைத்தான்.

ஒன்றும் புரியாமல் அவள் பாலாவின் முகத்தையே பார்த்திருக்க, “நேரா பாரு மலர்” என்று புன்னகையுடன் சொல்லிவிட்டு, அவளது தோளில் உரிமையோடு கையைப் போட்டுக்கொண்டான். புகைப்படம் எடுத்ததும், மலர் சட்டென அவன் அணைப்பிலிருந்து விலகி நின்றாள்.

“நாங்க கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு கூடச் சேர்ந்து நிக்கிறோம். நீ ஏன் மலரைக் கூப்பிட்டு வந்து இதுல நிக்க வைக்கிற?” என்று ராகவ் கடுப்புடன் வினவ, “நானும்தான் அவளைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்! அதனால அவ கூட நின்னு போட்டோ எடுத்துக்கிட்டேன்” சற்றும் தயக்கமின்றியே உரைத்தான் பாலா.

ரகுவும் ராகவும் மலரைக் கோபமாகப் பார்க்க, சசி மட்டும் புன்னகைத்தான். அவர்கள் பேசியதைக் கேட்டும் கேட்காதவாறு மௌனமாக மேடையிலிருந்து இறங்கிவிட்டாள் மலர்.

அலுவலக நண்பர்களிடமும், சசியிடமும் விடைபெற்று மண்டபத்திற்கு வெளியே அவள் செல்ல, பாலா விரைந்து காரை எடுத்து வந்து அவளருகே நிறுத்தினான்.

“நான் உன்னை ட்ராப் பண்றேன் மலர்… ப்ளீஸ்” எனக் கெஞ்சுதலாக அவன் கூறியதும், மறுக்கவியலாமல் அவளும் வாகனத்தில் ஏறி அவனருகே அமர்ந்தாள்.

சில நாட்களாக இருவருக்குமிடையே எந்த நெருக்கமான பேச்சுவார்த்தையும் இல்லாததால், காருக்குள் ஆழ்ந்த அமைதி நிலவியது. தன் மோதிர விரலில் வைரக்கல் பதித்த தங்க மோதிரம் அணிந்திருந்தவனோ, அந்தக் கையால் ஸ்டீயரிங்கைத் தட்டியவாறு அவளிடம் எப்படிப் பேச்சைத் தொடங்குவது எனச் சிந்தித்துக் கொண்டிருந்தான். அவளோ வெளியே வேடிக்கை பார்த்தபடியிருந்தாள்.

அவளை நோக்கியவன், நேர்த்தியான சேலையில், அளவான ஒப்பனையுடன் பேரழகாக இருந்தவளைப் பார்வையாலேயே விழுங்கினான். அவன் குறுகுறுவெனத் தன்னையே பார்த்திருப்பதை உணர்ந்தவள், மெல்லத் திரும்பினாள்.

அவள் விழியோடு விழி கலந்தவன், “இந்த சேலையில நீ ரொம்ப அழகா இருக்க மலர்!” என்று ரசனையாய்க் கூற, மென்னகை பூத்தாள்.

“நீங்கதான் இன்னைக்கு வேட்டி சட்டைல ரொம்ப அழகா இருக்கீங்க. நான் ஆபீஸ்ல உங்களை இந்த மாதிரிப் பார்த்ததே இல்லையா? கழுத்துல தங்க செயின், கையில தங்க பிரேஸ்லெட், மோதிரம்னு போட்டுப் புது மாப்பிள்ளை மாதிரி இருக்கீங்க!” என்று மலர் மெச்சியபடி அவனைப் புகழ, உள்ளுக்குள் பூரித்துத் தன் பிடரியை அழுத்தமாய்க் கோதிக்கொண்டான்.

காதல் ததும்பி வழியும் அவனது காந்த விழிப் பார்வையையும், இதழ்களை விரித்த புன்னகையையும், அவன் செய்கைகளையும் சொட்டு விடாமல் உள்வாங்கி மனதில் பதிய வைத்துக்கொண்டிருந்தாள்.

“ஏன் பாலா… திடீர்னு மண்டபத்துல மூட் அவுட் ஆகிட்டீங்க? இப்போ உங்க அப்பாவும் அம்மாவும் உயிரோட இருந்திருந்தா, இந்நேரம் உங்களுக்கும் கல்யாணம் ஆகியிருக்கும்னு நினைச்சீங்களா?”

அவன் மனதை அப்படியே படித்தவளாக அவள் கேட்டதும், ஆச்சரியத்தில் ஆழ்ந்தவன்,

“ஹ்ம்ம்… ஆமா. ஆனா, உனக்கும் அந்த மாதிரி ஃபீல் ஆகியிருக்கும்ல? நானாச்சும் கொஞ்ச வருஷங்கள் என் அப்பா அம்மா கூட வாழ்ந்திருக்கேன். நீ பேரண்ட்ஸ் இல்லாம ரொம்பக் கஷ்டப்பட்டிருப்பேல?” என்று அவளை எண்ணி தழுதழுத்தான்.

அவனது கோப வார்த்தைகளை விட காதல் வார்த்தைகளில் உடைந்தே போனாள். ‘என்னைப் பத்தியும் யோசிக்க, எனக்காகக் கவலைப்பட ஒருத்தனா!’ என்று நெகிழ்ந்த மலரின் விழிகளிலிருந்து வழிந்த கண்ணீர், அவளது கன்னத்தைத் தாண்டியிருந்தது. அவள் அழுவதைப் பார்த்தவன், பதறிப்போய் காரை ஓரமாக நிறுத்தினான். 

“மலர், நீ எனக்கு வேணும்… நான் உனக்காக எவ்ளோ வருஷம்னாலும் காத்திருப்பேன். எனக்கு யாருமில்லைன்னு தோணும் போதெல்லாம், ‘என் மலர் இருக்கா’ன்னு தான் மனசு சொல்லுது. உன்னைக் கல்யாணம் பண்ணிக்கணும்; நீ வாழ்க்கையில இழந்த எல்லா அன்பையும் உனக்குக் கொடுக்கணும். நீ, நான், நமக்குன்னு நம்ம குழந்தைகள்னு ஒரு அழகான குடும்பமா வாழணும்! 

“என் மனசுக்குள்ள இப்படி நிறைய ஆசைகளை வச்சுக்கிட்டு நான் காத்துக்கிட்டு இருக்கேன்.

என்னால நீ விலகிப் போறதைத் தாங்கிக்கவே முடியல. நாம கல்யாணம் பண்ணிக்கலாம்… ஐ லவ் யூ மலர், ஐ நீட் யூ!” என்று காதல் மொழிந்தவன், அவளது மெல்லிய பூவிதழ்களைத் தன் வலிய அதரங்களால் பற்றிக்கொண்டான். 

அவள் மீது தான் கொண்ட காதல், ஏக்கம், கனவுகள், ஆசைகள் எல்லாம் முத்தமாய்ப் பரிணமித்திருக்க, மலரும் அவனது அன்பில் கரைந்து, அதற்கு இசைந்து தன் இதழ்களை ஒப்புக்கொடுத்திருந்தாள்.

இருவரின் கண்களிலிருந்தும் கண்ணீர் வழிந்து கன்னங்களை நிறைத்துக் கொண்டிருக்க, பாலா அவளது முகத்தைத் தன் கரங்கொண்டு மென்மையாகத் தாங்கினான்.

தங்கள் வாழ்வின் வலிகளை அந்த நெருக்கத்தால் மறக்க எண்ணி, மீண்டும் இதழ்களைக் கவ்வி அந்தத் தருணத்தை நீட்டித்தனர். அவனது ஆழமான அன்பிலும், காதலிலும் தன்னை மறந்து போயிருந்த மலர், சட்டென ஏதோ நினைவு வந்தவளாகப் பாலாவைத் தள்ளினாள்.

“வேணாம் பாலா… ஏன் இப்படிப் பண்றீங்க?” என்று உதடுகள் நடுங்க அவள் வினவியதும், முத்த போதையிலிருந்து சட்டென்று மீண்டான்.

“நான் உங்களை லவ் பண்றேன்னு சொன்னேனா? உங்களை விட்டு விலகிப் போறப்பவே, எனக்கு உங்களைப் பிடிக்கலைன்னு நீங்க புரிஞ்சிருக்கணும்!” என்று அவள் கண்ணீரோடு கூற, அவனோ அதிர்ச்சியில் உறைந்தவனாய் அவளை நோக்கினான்.

“பாலா, நீங்க ப்ரொபோஸ் பண்ணப்பவே நான் உங்களை வேணாம்னு சொல்லிட்டேன். நம்ம ரெண்டு பேருக்கும் ஒத்துவராது. இந்தக் கல்யாணம் நடந்தா பின்னாடிப் பிரச்சினைகள்தான் வரும். நீங்க ஒரு பெரிய கம்பெனியோட எம்.டி. என்னைக்காவது ஒருநாள் கோபத்துல, ‘என்னோட சம்பளத்துலதான் நீ சாப்பிடுற; என்னோட ஸ்பான்சர்லதானே நீ வளர்ந்த?’ அப்படின்னு நீங்க கேட்டுட்டா, அதை என்னால தாங்கிக்க முடியாது. வேணாம்னு சொன்னா விட்டுருங்க!” என்று மலர் ஆத்திரத்தோடும் அழுகையோடும் பொரிந்து தள்ள, மறுமொழியேதும் பேசாமல் இறுக்கமான முகத்துடன் வாகனத்தை இயக்கினான்.

விடுதிக்கு அருகே காரை நிறுத்தியவன், “மலர்… நான் உன்னைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன். நீ எனக்கு மட்டும்தான் சொந்தம். எப்போ யாரோவா இருந்த உன்னை நான் கிஸ் பண்ணினேனோ, அன்னைக்கே நமக்குள்ள இருக்கிற உறவு தொடங்கிடுச்சு. இதை யார் நினைச்சாலும், ஏன் நீயே நினைச்சாலும் மாத்த முடியாது. நீ ஒருநாள் வருவ… ‘நான் உன்னை லவ் பண்றேன் பாலா’ன்னு சொல்லுவ; ‘நாம கல்யாணம் பண்ணிக்கலாம்’னு சொல்லுவ!” என்று உறுதியாகக் கூறியவன், இறங்கி அவளுக்காகக் கார் கதவைத் திறந்துவிட்டான்.

‘இத்தனை அழகாய் நேசத்தை உரைப்பவனுக்கு, பதிலுக்குக் காதலைக் கூடத் தர முடியாத பாவி நான்!’ என்று உள்ளுக்குள்ளேயே புழுங்கியவள், ஒன்றுமே பேசாமல் இறங்கிச் சென்றாள். பாலா அவள் போவதையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

விடுதி அறைக்குள் நுழைந்ததும் மலர் அப்படியே மெத்தையில் விழுந்தாள். “பாலா… ஐ லவ் யூ டா! ஐ லவ் யூ சோ மச்… ஆனா, நான் உனக்கு வேணாம்!” எனக் கதறி அழுதாள். அதன் பிறகு இரண்டு நாட்கள் அலுவலகத்திற்குச் செல்ல விரும்பாமல் விடுப்பு எடுத்தவள், அதற்கான மின்னஞ்சலைக் கூட அனுப்பவில்லை.

அவளது விலகலைத் தாங்க முடியாமல் உள்ளுக்குள் நொறுங்கிப் போனான் பாலா. தன் காதலின் உண்மையை அவள் உணரவில்லையே என்ற வலி அவனை வதைத்தது.

இரண்டு நாட்கள் கழித்து மலர் அலுவலகம் திரும்பியபோதும், அவன் அவளை அழைக்கவில்லை; அவளுக்கு எந்த வேலையும் கொடுக்கவில்லை. அவளே பாலாவின் கேபினுக்குச் சென்று அனுமதி கேட்டு உள்ளே நுழைந்தாள்.

“சாரி சார்… லீவ் இன்ஃபார்ம் பண்ண முடியல” என்று அவள் தயக்கத்தோடு கூறியதும், பாலா நிமிர்ந்து அவளைப் பார்த்தான். இரு நாட்களாக அவளைக் காண முடியாமல் கொண்ட தவிப்பும், அவளது ஒதுக்கத்தில் உண்டான வேதனையும் அவனது விழிகளில் அப்பட்டமாகத் தெரிந்தன. 

இருந்தாலும், அதை வெளிக்காட்டாமல், “உங்க இஷ்டத்துக்கு ஆபீஸ் வரீங்க… அதைக் கேட்டா கோபப்படுறீங்க… சொல்லுங்க மலர், நான் என்ன பண்ணட்டும்?” என்று தன் இதழ் கடையோரம் புன்னகை தவழ விளையாட்டாகக் கேட்டான்.

“சார், நான் செழியன் சார் ஆபீஸுக்கே போயிடுறேன்” அவள் சலனமின்றி கூறியதும், சிரித்த முகம் மாறி இறுகிப் போனவன், அழுத்தமாய் அவளை நோக்கினான்.

காதல் மலரும்🌹 

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!