ரஞ்சனை பற்றி அனைத்தையும் கூறி முடித்த மரகதம சொன்னார்
”அவனுடைய மாற்றத்துக்கு என்ன காரணம்..? அவ்வளவு வெறுப்பிலிருந்து அவன் எப்படி வெளியே வந்தான்..? என்று எதுவும் தெரியாது. ஆனால்.. ஏதோ ஒரு வெறியோடு தன்னைச் சீர்ப்படுத்திக்கொண்டான் மயூரி, ஒரே மாசத்துல ஸ்டிக் வச்சு நடக்கிற அளவுக்குத் தீவிரமா உடற்பயிற்சி செஞ்சான்.நீயே பாக்குறியே நீ கல்யாணம் பண்ணி இத்தனை நாட்களுக்குள்ள ஸ்டிக்கும் இல்லாம நடக்க ஆரம்பிச்சுட்டேனே, அவ்வளவு மன வலிமை…”என்றவர் மீண்டும் தொடர்ந்தார்.
“அவனோட பள்ளி நண்பன் ஆனந்தையும் சேர்த்துக்கிட்டு, எல்லாத்துக்கும் அவனை உதவிக்கு வச்சுக்கிட்டான். ஆனந்தும் அவனுக்கு உண்மையாகவும், நம்பிக்கையாகவும் இந்த ஆறு மாசமா இருக்கான்” என்றவர் சிறு இடைவெளி விட்டார்.
”அவர் வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டம் இருந்தாலும் தன்னை ஒரு பீனிக்ஸ் போல மீட்டெடுத்திருக்கிறார். உண்மையிலேயே கிரேட் தான் அத்தை உங்க பையன். ஆனா… என் வாழ்க்கையில ஏன் விளையாடுனார் ..?” என்றாள் மயூரி.
லேசான மென்புன்னகை மரகதத்தின் உதட்டிலும் அரும்பியது. மயூரியின் தோளைத் தட்டியபடி ஒரு நெடுமூச்சு விட்டவர்,
“அதை ஏம்மா கேக்குற? ரெண்டு மாசம் அவன்கிட்ட போராடி, கடைசில வீட்டை விட்டுட்டுப் போயிருவேன்னு மிரட்டி கல்யாணத்துக்குப் பெண் பார்க்க ஆரம்பிச்சேன்.”
”உன்னை ஒரு சினேகிதி வீட்டுக்குப் போகும்போது காலேஜ் வாசல்ல பார்த்தேன். அப்போ அங்க இருந்த ஒரு செருப்பு தைக்கிறவருக்காக,உன் கூட படிக்கிற பெண்கிட்ட வாதம் செஞ்சுகிட்டு இருந்தே. ஏனோ..?உன்னால ரஞ்சனைப் புரிஞ்சுக்க முடியும்னு தோணுச்சு. ஆனந்த்கிட்ட சொல்லி உன்னைப்பற்றி விசாரிக்கச் சொல்லி, உங்க அப்பாகிட்ட பேசி முடிச்சேன். விருப்பமே இல்லாம என் கட்டாயத்துக்காகத் தான் ஒத்துக்கிட்டான்.ஹ்ம்ம்…அப்பனு பாத்து நீ கல்யாணம் வேண்டாம்னு ஓடிட்டன்னு, உங்க அப்பா கால் பண்ணாரு. அவ்வளவுதான், நான் கூட என்னதான் விஷம் வச்சுக் கொல்லப் போறான்னு பார்த்தா..!, ‘கட்டுனா உன்னைத்தான் கட்டுவேன்னுட்டான்…!’. அப்புறம்தான் உனக்குத் தெரியுமே” என்று முடித்தார்.
”ஏன் அத்தை.? இப்படி ஒரு கொலைகாரன்கிட்ட போய் என்னை மாட்டிவிட உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு?” என்றாள் மயூரி நாடியில் கைவைத்தபடி
அவளைப் பார்த்து மென்மையாகப் புன்னகைத்தவர், இவ்வளவு கஷ்டத்திலும் மனதையும் உடலையும் சீர்செய்து கொள்ளும் மருமகளைக் கண்டு பெருமையாகக் கூறினார்,
“அது ஒன்னும் இல்ல மயூரி, இந்த பீசு எவ்வளவு அடிச்சாலும் தாங்கும்னு தோணுச்சு, அதான்!” என்றார் சிரிப்பை அடக்கிக்கொண்டு.
அவரைப் போலியாக முறைத்தவள், “உங்களுக்கு எவ்வளவு பெரிய நல்ல மனசு” என்று மரகதத்தின் கன்னத்தைப் பிடித்து முத்தமிட்டவள் சிரித்தாள்.
மரகதமும் உடன் சிரித்தார்,சிரித்து முடித்து மாமியாரைக் கட்டிக்கொண்டு அவர் தோளில் நாடி பதித்தவள்,
“ஆனா நீங்க சொல்றது உண்மைதான் அத்தை. இவரைப் பார்த்ததும் ஏனோ மனசு ‘இவர் உனக்கானவர்’னு சொன்னது. மேலும் என் அண்ணன் இவரைத் திட்டும்போது எனக்கு அவ்வளவு கோபம். அது ஏன்.. என்று எனக்கே புரியல..? ஆனா இப்போ அவரைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டதும் அவரோட கஷ்டமும் கோபமும் எனக்குப் புரியுது” என்றாள்.
அவளின் கையைப் பற்றி, “நீ புரிந்துகொள்வாய் என்று எனக்குத் தெரியும் மயூரி” என்றார் கண்கள் கலங்கப் புன்னகையுடன்
அவரைப் பார்த்தவள், “ஆனா அத்தை, விதியோட விளையாட்டு பார்த்தீங்களா? உங்க மகன் பரதம் கத்துக்கிட்டு பல மெடல், பாராட்டுகள் வாங்கி இருந்தாலும், இப்போ அவருக்கு அது மேல அவ்வளவு வெறுப்பு. ஆனா எனக்கு அதைக் கத்துக்கணும்னு வெறி. எப்படி ஒரு ஜோடிப் பொருத்தம்!” என்று சிரித்தாள்.
அவள் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டவர்,
“நீ அவனுக்குத் தெரியாமலேயே கத்துக்கோ. என்னைக்காவது ஒருநாள் அவன் மனசு மாறுவான், அதுக்கப்புறம் சொல்லிக்கலாம். ஆனா ஒன்னு, அதுவரைக்கும் அவனைத் சீண்டாம இருந்து உன் உயிரைக் காப்பாத்திக்க” என்றார்.
“ம்ம்..சரி, ட்ரை பண்றேன் அத்தை” என்றாள். அவள் பதிலில் இருவரும் சிரித்தனர்.
பேசியபடி மீண்டும் வீட்டினுள் செல்ல , சரளா இவர்களைப் பார்த்து மென் புன்னகையுடன்,
“அம்மா உங்களுக்கு ஏற்ற மருமக தான். இதே வேற ஒருத்தியா இருந்தா, ஏன்.. நானே கூட போம்மா..’நீயும் ஆச்சு உன் மகனும் ஆச்சு’ன்னு போயிருப்பேன் ” என்றார்.
இருவரும் சிரிக்க, மயூரியோ, “சரளா அக்கா, என்னோட கனவுக்கு அவங்க ஹெல்ப் பண்றாங்க. அவங்க பையனுக்காக நான் இங்கே இருக்கேன்” என்று சிரித்தாள்.
“அதானே நானும் சொல்றேன், நல்ல ஜோடி தான்..ரெண்டு பேரும்…” என்று கூற மூவரும் சிரித்தபடி மாலை நேரக் காபிக்கு அமர்ந்தனர்.
அதே நேரம் ரஞ்சனும் வந்தான். மூவரின் மலர்ந்த முகத்தைப் பார்த்தான். பார்வை மயூரியிடம் வந்து நின்றது. அவளின் கண்களில் பயமும் இல்லை. அதைக் கண்டவனுக்கு ஏளனப் புன்னகை அரும்பியது.
“அம்மா, உங்க மருமகளுக்கு சோத்துல உப்பு தான் போடுவீங்களா?நீங்க இனிமே காபிலையும் உப்புப் போட்டுக் குடுங்க” என்றபடி மாடியேறத் துவங்கினான்.
மயூரி அவனையே பார்த்து இருக்க, மரகதம் அவள் முகத்தின் முன் கைகளை அசைக்க, சிலிர்த்து எழுந்தவளைப் புன்னகையுடன் பார்த்த மரகதம்,
“உன் மண்டைக்குள்ள என்ன ஓடுதுன்னு எனக்குப் புரியுது. என் மகனை ரசிக்க ஆரம்பிச்சுட்ட. என் முன்னாடியே சைட் அடிக்கிற பாத்தியா?” என்றார்.
வெட்கப் புன்னகையுடன், “அத்தை, அந்த ரூம்ல இருந்த உங்க பையனோட போட்டோ ஞாபகம் வந்தது. அதுக்கும் இப்பயும் ஒரே ஒரு வித்தியாசம் தான் அதை தான் நினைச்சுகிட்டு இருந்தேன்” என்றாள்.
“ம்ம்..என்ன வித்தியாசம்?” என்றார் மரகதமும் புரியாமல்.
“உங்க பையனோட சிரிப்பு. “என்றாள் பூரிப்புடன்.”அதைத் திருப்பிக் கொண்டு வரணும்னு தோணுது அத்தை” என்றாள் மயூரி.
அவள் கையைப் பற்றி, “உன்னால் முடியும் மயூரி, உன்கூடவே நானும் இருக்கேன்” என்றார் மரகதம்.
இருவரும் இணைந்து புன்னகைத்துக் கொண்டனர்.
இப்படியே மயூரி ரஞ்சனுக்குத் தெரியாமல் பரதநாட்டியம் கற்றுக் கொண்டும், ஆர்.ஜே-வாகவும் பணி புரிந்து கொண்டு இருந்தாள்.
சலங்கை பூஜைக்கு மரகதத்தை அழைத்துச் சென்றாள். மரகதமும் மகிழ்வுடன் சென்றார். இப்படியே ஒரு மூன்று மாதம் சென்றிருக்கும். ரஞ்சனின் பாதையில் மயூரி அதிகம் குறுக்கிடவில்லை.
இப்பொழுதெல்லாம் அந்த அறையைச் சுத்தம் செய்யும் பொறுப்பை மயூரி எடுத்துக்கொண்டாள். அவன் வெளியே செல்லும்போது சுத்தம் செய்துவிடுவாள்.
கூடவே அவனின் படங்களை ரசித்துக் கொள்வாள். அலைப்பேசியில் அந்தப் படங்களைப் பதிவு செய்தும் கொண்டாள். இரவில் தூங்கும் அவன் முகத்தைப் பல நாள் தூக்கம் இல்லாமல் ரசித்துச் சிரித்திருக்கிறாள்.
இப்பொழுதெல்லாம் மரகதத்துடன் ஊர் சுற்றுவது போல, பிரியாவுடன் வெளியே செல்வது போல என்று மரகதத்தின் பாதுகாப்புடனும் பரத வகுப்பிற்கும்,ஆர்.ஜே-வாகப் பணியாற்றவும் சென்றாள்.
டிரைவர் கந்தசாமி பெரிய உதவியாக இருந்தார். ஒருமுறை பிரியாவுடன் காரில் செல்லும்போது ரஞ்சனை நினைத்துப் புன்னகைக்க, மயூரியை வினோதமாகப் பார்த்தாள் பிரியா.
மயூரியின் முகத்தின் முன் சொடுக்கிட்டாள் பிரியா
“என்ன…டி..ஆச்சு உனக்கு?” என்றவளிடம் வெட்கப் புன்னகை உதிர்த்தாள் மயூரி.
“ச்சை..இந்தக் காதலில் விழுந்தவனுங்க பிரண்டா மட்டும் இருக்கவே கூடாது. கந்தசாமி அண்ணா நீங்க சொல்லுங்க” என்று பேச்சை மாற்றினாள்.
இவ்வாறு நாட்கள் சந்தோஷமாகச் சென்றது. மயூரி எவ்வளவு தான் ரஞ்சனைக் கண்டு பயந்தாலும், இப்பொழுதெல்லாம் அவனின் மீது பித்தாகச் சுற்றினாள்.
அவனின் கோபப் பார்வை கூட அவளுக்குப் பிடித்தமான ஒன்றாக இருந்தது. அவன் வீட்டில் இல்லாத நேரங்களில் அதிகம் அவனின் புகைப்படங்களும் சலங்கையும் இருந்த அறையில் கழித்தாள்.
அவ்வப்போது பரதமும் ஆடினாள். கால்களில் சலங்கை இல்லாமல் ஆடுவதால், மரகதம் அவ்வப்போது எச்சரித்தாலும் மயூரி பெரிதும் கவலைப்படவில்லை.
அன்று காலையில் ரஞ்சன் வேலைக்குச் சென்றதும் வேகமாக அந்த அறைக்குள் ஓடினாள். உள்ளே சென்று அவள் சலங்கையை, அவன் சலங்கை அருகே வைத்தாள். இரண்டையும் வருடியவள், அவள் சலங்கையைக் கால்களில் கட்டினாள்.
இன்று ஏனோ..! சலங்கை கட்டிக்கொண்டு ஆட விரும்பினாள். ஏனெனில் அன்று அவள் பிறந்தநாள். மனதில் பெரும் மகிழ்ச்சியுடன் ஆடத் துவங்கினாள்.
ஏதோ யோசித்தவள். அறையைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள். கீழே பார்க்க, மரகதம் வாசலில் நிற்க,
“அத்தை இன்னைக்கு மட்டும் பாட்டுப் போட்டு சலங்கை கட்டி ஆடுறேனே…ப்ளீஸ்” என்றாள்.
பெருமூச்சு ஒன்றை விட்டவர், “சரி பர்த்டே பேபி, ஆசையா கேட்கிற. அதான்..சீக்கிரம் முடிச்சிட்டு வந்துரு. உன் நேரம் சரியில்லைன்னா வில்லன் வந்துருவான் சரியா? எதுக்கும் உன் போனை எடுத்துட்டுப் போ, வில்லன் வந்தா கால் பண்றேன்” என்றார்.
“சரி” என்றவள் சந்தோஷமாகச் செல்லை உள்ளே கொண்டு சென்றாள். ஆனால் அவள் துரதிர்ஷ்டம், இரவில் சைலன்ட்டில் போட்டதை மறந்து அப்படியே வைத்ததுதான்.
பாடல் ஓட ஓட மயூரி சந்தோஷமாக ஆடினாள்.
கிட்டத்தட்ட கடைசி வரிகள் ஆடும் நேரம் கதவு” படார்” என்று திறந்தது. அதிர்ந்து நின்றாள் மயூரி.
வாசலில் அன்றை விடக் கொடூரமாக ரஞ்சன். மயூரிக்கு நெஞ்சை அடைத்தது. அவன் பின்னே மரகதம் பதற்றத்துடன் நின்றிருந்தார். மயூரி கண்கள் கலங்க நின்றாள்.
இப்பொழுதெல்லாம் ஸ்டிக் இல்லாமல் லேசாக நொண்டி நடக்கத் தொடங்கியிருந்தான் ரஞ்சன். அவளை உறுத்துப் பார்த்தபடி வந்தவன், அவளைக் கடந்து சென்று பாடிக் கொண்டிருந்த டேப் ரெக்கார்டரை எடுத்துச் சுவற்றில் அடித்தான்.
அவன் அடித்த வேகத்தில் அது சுக்கல் சுக்கலாகா ஆனது. காதுகளைப் பொற்றி கண்களை இறுக மூடிப் பயத்தில் நடுங்கினாள் மயூரி. வாசலில் நின்ற மரகதம்,
“ரஞ்சன் வேண்டாம்” என்று கத்தினார்.
“அம்மா!அங்கேயே நில்லுங்க ” என்று ரஞ்சனும் கத்தினான்.
மரகதம் பதற்றத்துடன் அங்கேயே நின்றுவிட, மயூரியின் பக்கம் திரும்பியவன் அவளைக் குரூரமாகப் பார்த்தான்.
”நீ பரதம் கத்துக்கிறியா?” என்றான் மெதுவாக. ஆனால் உறுதியான காலடிகளுடன் அவள் அருகே நடந்தபடி
மயூரி பயத்துடன் பின்னே நடந்தாள். இரண்டெட்டுப் பின்னே சென்றவள் சுவற்றில் முட்டி பயத்துடன் அவனைப் பார்த்தாள். அவன் முன்னேறிக்கொண்டே,
“நான் கேள்வி கேட்டா எனக்குப் பதில் வரணும்” என்றான் ரஞ்சன்.
“ரஞ்சன் நான் சொல்றத கேளு,எனக்கு எல்லாமே தெரியும், எனக்குத் தெரிஞ்சுதான் அவ…” என்று மரகதம் சொல்லியபடி அறைக்குள் வர,
அவரைப் பார்த்துத் திரும்பியவன், “அம்மா!நீங்க உள்ள வந்தா அந்த நிமிஷம் இவ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போயிருவா” என்றான் கடுமையாக.
எடுத்து வைத்த காலடி அப்படியே இருக்க நின்றார் மரகதம்.
மயூரியிடம் மீண்டும் திரும்பியவன்,
“சொல்லு, நீ பரதம் கத்துக்கிறியா?” என்றான் அந்த அறையே அதிர.
அவள் “ஆம்” என்று தலையை ஆட்டினாள். கண்களை இறுக மூடித் திறந்தவன்,
“என்னைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டு என்னால முடியாதுன்னு வேணுனே பண்ற.. இல்ல?” என்றான் அடிக்குரலில்.
அந்தக் குரலில் மயூரிக்கு உயிரே நடுங்கியது. “அப்படி இல்ல” என்று குரல் நடுங்கக் கூறியவளை நிறுத்தச் சொல்லிக் கையை உயர்த்தினான்.
அவள் பயத்தில் நடுங்க, “சலங்கையைக் கழட்டிக் கொடு” என்றான் அதே மிரட்டும் குரலில்
மயூரியோ “இல்லை” என்று உதட்டை இறுக மூடித் தலையை அசைத்தாள்.
“என்ன கொலைகாரனாக்காத, கழட்டிக் கொடு” என்றான் சத்தமாக மீண்டும்.
வாசலில் நின்ற மரகதத்தை அழுகையுடன் பார்த்தாள் மயூரி. அவர் கழட்டிக் தரும்படி செய்கை செய்ய, வேறு வழி இல்லாமல் கழட்டினாள் மயூரி.
அதை கைகள் நடுங்க,அவன் கையில் கொடுத்த அடுத்த நொடி, அவன் மொத்த வெறுப்பையும், கோபத்தையும் திரட்டி சலங்கையை தரையில் வீசியெறிந்தான் ரஞ்சன்.
அதன் சலங்கைகள் அறுந்து அந்த அறை மொத்தமும் சிதறி ஓடியது. கண்களை இறுக மூடி நின்றிருந்தாள் மயூரி.
திரும்பி அவளை முறைத்த ரஞ்சன், “எவ்வளவு தைரியம் இருக்கணும் உனக்கு?” என்று அவளை நெருங்கச் சென்றான்.
அவனைத் தடுத்து மயூரிக்கும் அவனுக்கும் நடுவே நின்றார் மரகதம்.
”போதும் ரஞ்சன் போதும்! அதான் எல்லாம் முடிஞ்சிடுச்சே” என்று அழுதுகொண்டே கத்தினார்.
அவர் பின்னே இருந்த மயூரியை உறுத்து விழித்தவன், மரகதத்தைப் பார்த்து, “இவ என்றைக்கும் என் மனைவியாகப் போறதில்லை. இதுக்குத்தான் நான் திருமணமே வேணாம்னு சொன்னேன்..சீ..” என்றவன் திரும்பி சென்றுவிட்டான்.
அப்படியே தளர்ந்து நிலத்தில் விழுந்தாள் மயூரி. அன்று வரை சேர்த்திருந்த தைரியம் அனைத்தையும் விடுத்து, சிதறிய சலங்கையைப் பார்த்து கதறினாள். மரகதம் அவளை அணைத்துத் தேற்ற முயன்று தோற்றுப்போனார்.
