அத்தியாயம் -2

வேனலின் வெண்பூவே!

அத்தியாயம் 2

 

தனிமை ரொம்ப சின்ன வயசில் இருந்தே எனக்குப் பழக்கம். பிறந்த சில மணி நேரங்களுக்குள் தனியாக்கபட்டேன். ஆனால் அதெல்லாம் கூட என்னால் சமாளிக்க முடிஞ்சுது. ஆனால் இந்தத் தனிமையை என்னால் தாங்க முடியலை. குடும்பம்னு ஒரு அழகான கூடு இருந்து அது உடைஞ்சு போனால் அதோட வலியை அளவிட முடியாது. என்னால் முடியலை. உங்களுக்கு வாழ்க்கையில் இல்லாத ஒன்னு கிடைச்சு அது கையைவிட்டுப் போனால், எனக்கு எதுவுமே கொடுத்து வைக்கலை. சுய கழிவிரக்கம் தப்புதான் ஆனால் இந்த நொடி என்னால் இப்படித்தான் யோசிக்க முடியுது.
          -முகியின் நினைவலைகள்.

கைப்பேசியைக் கையில் வைத்திருந்த முகிக்கு எந்த ஒரு அழைப்பும் வரவே இல்லை. அவள் கருப்படித்து வைத்திருந்தால் எப்படி வரும்? ஆனாலும் அவள் மனதில் ஒரு எதிர்பார்ப்பு. ஆனாலும் இரண்டு வருடங்கள் கழித்து அவள் மனதில் ஒரு நிம்மதி. சுதந்திரக் காற்று தழுவுவதை நினைக்காமல் இருக்க முடியவில்லை. அவளுக்கென்று ஒரு இடம் அது.

மணியைப் பார்த்தவள், தன் பெட்டியிலிருந்து உடைகளை எடுத்துக் கொண்டு குளித்தவள் தயாராகி வந்தாள். வரவேற்பில் இருந்த பணியாளர் பையில் போட்டுக் கொடுத்த உணவுப்பட்டியல் அடங்கிய அட்டையை எடுத்தால் அது பத்து பக்கங்களுக்குச் சென்றது.

உணவுப் பட்டியலை வாசித்தவள் அதற்குப் பின் இருந்த சாகச விளையாட்டுகள், விடுதியில் உள்ள பகுதிக்கான வரைபடம் என அனைத்தும் இருந்தது. அன்று காலை உணவுப் பட்டியலைப் பார்த்தவள், தன் கைப்பேசியை, கைப்பையில் திணித்து விட்டு, கதவை மூடி அறையின் சாவியை அதற்குள் போட்டபடி நடக்க ஆரம்பித்தவள், உணவு உண்ணும் கூடத்திற்கு வந்தாள்.

உணவு உண்ணும் கூடத்தில் சில இடங்களில் நான்கு பேர் அமரக்கூடிய வகையில் நாற்காலிகளும், இருவர் அமரக்கூடிய வகையிலும், ஒருவர் அமர்ந்து உண்ணும் வகையிலும் கூட மேசைகளும், நாற்காலிகளும் இருந்தது. அந்த விடுதி மிகவும் அழகாக இருந்தது. வாடிக்கையாளர்களே உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதால் முகி தட்டை எடுத்து உணவை வைத்துக் கொண்டாள். முளைகட்டிய தானியங்கள் முதற்கொண்டு இருக்க வழக்கத்தைவிட அதிகமாக உண்ண ஆரம்பித்தாள்.

இடையில் சாப்பிடும்போது அவள் வெறுக்கும் குரல் மனதில் எழுந்தது.

‘நீ சாப்பிடறது, உடுத்துறது எல்லாம் என் பையன் சம்பாதிக்கிறது. இஷ்டத்துக்கு ஆர்டர் போட்டுத் திங்கற வேலை வச்சுக்காத.’

‘அத்தை அது என்னோட…’

‘என் பையன்தான் உனக்குக் கடனைக் கட்டி அழுதானே. சாப்பாடை கொஞ்சம் குறைச்சுப் பழகு. அப்புறம் அவன் வரதுக்கு முன்னாடி கொட்டிக்கிறதை நிறுத்து. இந்த மாதிரி லோக்கிளாஸ் எல்லாம் இப்படித்தான், சோத்துக்கு அலையறது.’ என அவர் சாடிய வார்த்தைகள் இப்போது இல்லை.

தான் என்ன உண்ண வேண்டும் என்பதை அவரால் இனி கேட்க இயலாது. சில நாட்களுக்குள் வேறு வீடு தேடி சென்று விட வேண்டும். முள்ளாய் குத்தும் அவர் வார்த்தைகள் இனி இல்லை. அவரது பேச்சுகளைத் தலையைக் குலுக்கி உதறியவள் உண்ண ஆரம்பித்தாள்.

மனது ரணமாய் வலித்தாலும் சுதந்திரமும், தன்மானமும் மீண்டது போலிருந்தது அவளுக்கு.

உண்டுவிட்டு அவர்கள் கொடுத்த பாத்திரத்தில் உணவை எடுத்துக் கொண்டவள் தன்னுடைய அறைக்குச் சென்று தன் அடையாள அட்டை, கருவிகள் அடங்கிய பையை எடுத்துக் கொண்டு, விடுதி ஏற்பாடு செய்து வைத்திருந்த மகிழுந்தில் பயணம் செய்து தான் செல்ல வேண்டிய பாதையில் இறங்கிக் கொண்டாள்.

இரவு நேரம் எட்டரையைத் தாண்டி இருக்க, அப்போது எப்போதும் போல் இரவு நேரத்தில் நடக்க ஆரம்பித்தான் ருத்ரசேனா. அவன் வருகையை எதிர்பார்த்தபடி கடற்கரைக் காற்றில் இள நீல வண்ணத்தில் குர்தி அணிந்திருந்த சிவகாமினி அமர்ந்திருந்தாள்.

அவளைப் பார்த்தும் அமைதியாக நடந்து சென்றவனைப் பார்த்ததும், ஆத்திரம் மூண்டது காமினிக்கு. தன்னை ஒரு பொருட்டாக அவன் எப்போதும் மதிப்பதில்லை. சிறு வயதிலிருந்தே அவளிடம் அவன் அதிகம் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்வதில்லை. சிவகார்த்திக்கிடம் கூட இலகுவாக உரையாடுவன் அவளைக் கண்டாலே வேப்பங்காய் போல் நகர்ந்து விடுவான்.

உடையில் ஒட்டியிருந்த மணலைத் தட்டியபடி எழுந்தவள், “ருத்ரா, நில்லு!” என்றபடி அவனுடன் இணைந்து கொண்டாள்.

அவளை ஒரு முறை திரும்பிப் பார்த்தவன் நடக்க ஆரம்பித்தான்.

“ருத்ரா, நான் சொல்றதை கேளு.”

அவளை நோக்கித் திரும்பியவன், “முடியாது சிவகாமி.” என நடக்க ஆரம்பித்தான்.

“இவனை…!” பல்லைக் கடித்தவள் அமைதியாக நின்றாள்.

“நான் எந்த முடிவு எடுத்தாலும், அதை ஏன் தடுக்கற ருத்ரா? உனக்கும் எனக்கும் எந்தப் பகையும் கூடக் கிடையாது. ஏன் ருத்ரா இப்படி செய்யற?” முதல் முறையாக ஓய்ந்து போய் ஒலித்தது அவள் குரல்.

“நான் கொண்டு வர எந்தப் புரப்போசலையும் நீ ஈஸியாகப் பாஸ் பண்ண விடறது இல்லை.”

“பேஸ்ட்ரி நீ கேட்ட. நான் மெனுவில் ஆட் பண்ணிட்டேன்.”

“அதை நீ அப்ரூவ் பண்ண ஆறுமாசம் ஆச்சு ருத்ரா. ஏன் இப்படி நான் செய்யணும்னு நினைக்கிறது எல்லாத்தையும் தடுக்குற? உனக்கும் எனக்கும் எதுவும் சொந்தப் பகை கூட இல்லை. அப்புறம் ஏன்?”

“நீ வொர்க் பண்ணறவங்க வெல்ஃபேரை யோசிக்கலை சிவகாமி.”

“ருத்ரா…”

“நீ என்ன செஞ்சாலும் இந்த மெனு சேஞ்ச் நடக்காது. யூ மே லீவ்.”

ருத்ரன் வேகமாக நடக்க, சிவகாமினி அவனை வேகமாகத் தொடர முயல,

“இனி…” என்ற வார்த்தை அவன் முடிக்கும் முன் ருத்ரனின் மார்பில் மோதியிருந்தாள்.

மணலில் தடுமாறி அவன் மார்பில் சேர்ந்திருந்தாள். அவனுடைய ஹூடியை இரு கைகளால் பற்றி இருந்தவள், நிமிர்ந்து அவனைப் பார்த்தான்.

ருத்ரனின் விழிகளில் கூர்மையும், கடுமையும் ஏறி இருந்தது.

அவள் இரு கைகளையும் பிடித்துத் தன்னை விட்டு விலக்கி நிறுத்தி வைத்தான்.

“சாரி ருத்ரா.”

அவன் ஒன்றும் சொல்லாமல் திரும்பி நடக்க, மீண்டும் அவனைத் தொடர்ந்தாள்.

“சிவகாமி, என்னை ஃபாலோ பண்ணி வராத. இது என்னோட பிரைவேட் டைம்.”

“பீச்சில் யாரு வேணாலும் இருக்கலாம் ருத்ரா.”

“உன்னை மாதிரி ஒரு ஹேஸ்டியான நபர் என்னோட பக்கத்தில் இருக்கறதை நான் விரும்பலை.”

“உன்னை நான் என்ன செஞ்சேன் ருத்ரா, நீ இப்படி என்னை வெறுக்குறதுக்கு?”

“சிலர் எதுவும் செய்யத் தேவையில்லை. உன்னை நான் வெறுக்கவும் இல்லை. உனக்கும் எனக்கும் வைப் மேட்ச் ஆகாது.” எனச் சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டான்.

சிவகாமினி சிலைபோல் அவன் கூறிய வார்த்தைகளில் உறைந்து நின்றாள். அவர்கள் இருந்த பக்கம் யாரோ மாணவர்கள் கத்தியபடி வர மீண்டும் தன்னிலைக்குத் திரும்பினாள்.

அவளை விட்டு நடந்து கொண்டிருப்பவன் பின்னால் மீண்டும் ஓடினாள்.

“வைப் மேட்ச் ஆகணும்னு என்ன இருக்கு? அது வேற இது வேற. இது பிஸ்னஸ் மட்டும்தான். இதுக்கு எனக்கு உன்னைப் பிடிக்கணும்னு இல்லை. உனக்கு என்னைப் பிடிக்கணும்னு இல்லை ருத்ரா. இந்தப் புரப்போசலைக் கன்சிடர் பண்ணு. மணியைப் பத்தி கவலைப்பட வேண்டாம். நான் பார்த்துக்கிறேன்.” என அவள் கூறியதைக் கேட்ட சிலர் அவளை ஒரு மாதிரி பார்த்து விட்டுச் சென்றனர். அதைக் கவனித்த ருத்ராவின் முகத்தில் இன்னும் கடுமை கூடியது.

“உன்னை நான் கிளம்பச் சொன்னேன்.”

‘இவன் இருக்கிறது புடலங்காய் மாதிரி. பேசறது பாகற்காய் மாதிரி.’ என மனதில் திட்டியவள் அவனை அப்பாவியாய் பார்த்து வைத்தாள்.

“நீ சொன்னா நான் கிளம்பிடணுமா? பப்ளிக் பீச் இது. நான் இங்கதான் இருப்பேன்.” என அழுத்தமாகக் கூறினாள் காமினி.

“நீ பாத் பண்ணு. இல்ல படுத்து உருளுமா. நான் தூங்க டைம் ஆச்சு. குட் நைட்.”

‘டிசிப்சிளினோட இருக்கிறது இல்லாமல் டிஞ்சர் குடிச்ச மூஞ்சி மாதிரியும் இருக்க இவனால்தான் முடியும். சரியான ஜிஞ்சர் ஈட்டிங்க் மங்கி.’ என மனதில் திட்டிவிட்டு, “குட் நைட். நான் இந்த விஷயத்தை நாளைக்குப் பேசுவேன்.” என்று கூறிவிட்டு அவனுக்கு எதிர் திசையில் நடக்க ஆரம்பித்தாள்.

தோள்களைக் குலுக்கியபடி ருத்ரன் எதிர் திசையில் நடக்க ஆரம்பித்தான்.

சில மீட்டர் தூரம் நடந்திருக்க, அப்போது மணலில் உட்கார்ந்து இருக்கும் பெண்ணைப் பார்த்தாள் காமினி. கொஞ்சம் இருட்டில் உட்கார்ந்திருந்தவளின் வரி வடிவம் சோகமாக இருப்பதைப் போல் தோன்றியது. அவள் பாட்டுக்கு நடக்க முயல, ஆனால் அந்தப் பெண்ணிடமிருந்து எழுந்த விசும்பல் சத்தம் தடுத்து நிறுத்தியது.

“மேம், ஆர் யூ ஆல்ரைட்?” என அருகே சென்று காமினி கேட்டவுடன் நிமிர்ந்து பார்த்தாள் பத்மமுகி.

விழிகளில் மின்னிய நீரைத் துடைத்தவள், “ஐம் குட்.” என்றாள்.

“ஹாய் ஐம் காமினி.” என அவள் அருகில் அமர்ந்து கைகளை நீட்டினாள். ஏனோ அந்தப் பெண்ணை விட்டுச் செல்ல மனம் வரவில்லை.

“ஐயாம் பத்மமுகி.”

“நைஸ் நேம். உங்களை நான் இந்தப் பக்கம் பார்த்தது இல்லை. ஊருக்குப் புதுசா? இங்க ஹோட்டல்ஸ்தான் இருக்கு.”

“ஊருக்குப் புதுசுதான். இங்க இருக்க நெய்தல் நிழல் ஹோட்டலில் தங்கி இருக்கேன்.”

“அடடே! அங்கயா மேம்?”

“ம்ம்ம்… குட் ஹோட்டல்.”

“ஃபேமிலி ஆர் பிரண்ட்ஸ் டிரிப்பா மேம்?”

“இன் தி மிடில் ஆஃப் டிவர்ஸ் டிரிப் காமினி.”

அப்போது அவள் விழிகளில் தெரிந்த வெறுமையும், வலியும் காமினியைத் தாக்கியது.

காமினியின் இயல்பே அதுதான். இப்படி யாராவது கஷ்டம் என்று நின்றால் அவளால் அமைதியாக வர இயலாது.

“சாரி சிஸ்டர். எல்லாம் சரியாகிடும்னு சொல்ல முடியாது. ஆனால் மாறும். கவலைப்படாதீங்க.”

பூசி மொழுகாமல் அவள் கூறிய வார்த்தைகள் முகிக்கு ஆறுதலாக இருந்தது.

“தேங்க்ஸ்!”

“உங்களுக்கு விருப்பம் இருந்தால் எங்கிட்ட சொல்லுங்க. நான் கேட்கிறேன். இந்தக் கடல் காத்துல உங்க சோகத்தை எல்லாம் கரைச்சு புது வாழ்க்கையை ஆரம்பிங்க.”

“ம்ம்ம்.”

“சாப்பிட்டீங்களா?”

“இன்னும் இல்லை.”

“வாங்க, நானும் நெய்தல் நிழல்லதான் வொர்க் பண்றேன். சாப்பிடலாம்.”

விடுதியில் வேலை செய்கிறேன் என்றதும் நிமிர்ந்து பார்த்தாள் பத்மமுகி.

“நீங்க ஹோட்டல் கெஸ்ட்னு முதல்லயே தெரியாது.”

காமினி விளக்கம் கொடுக்கவும், பத்மமுகியும் தன் உடையில் உள்ள மணலை தட்டி விட்டு எழுந்து அவளுடன் நடக்க ஆரம்பித்தாள்.

“நீங்க வொர்க் பண்றீங்களா?”

“ம்ம்ம். ஆர்க்கியாலஜி டிபார்ட்மெண்ட். தமிழ்நாடு கவர்மெண்ட்.”

“வாவ்! இட்ஸ் கிரேட்! இப்ப இங்க வந்திருக்கிறது கூட ரிசர்ச்சுக்கா?”

“இப்ப கொஞ்ச நாளுக்கு முன்னாடி நாங்க நடத்துன ஆராய்ச்சியில் சில பொருட்கள் கிடைச்சது. அதனால் மேலும் ஆய்வு செய்ய வந்துருக்கோம். நியூஸ் கூடப் பார்த்துருப்பீங்க.”

“பார்த்தேன் மேம். இன்ட்ரஸ்டிங்கான ஜாப் உங்களோடது.”

“ரொம்ப பொறுமையும் தேவை.”

“கண்டிப்பாக. உங்களை மீட் செஞ்சதில் ரொம்ப சந்தோஷம். உங்களுக்கு இங்க என்ன ஹெல்ஃப் வேணும்னாலும் கேளுங்க. நான் இருக்கேன்.”

உணவுக் கூடத்திற்கு சென்ற இருவரும் உணவை உண்ண ஆரம்பித்தனர். கைப்பேசி எண்களையும் பகிர்ந்து கொண்டனர்.

“இதைச் சாப்பிடுங்க. சூப்பரா இருக்கும்.” என முகியை நன்றாகக் கவனித்தாள் காமினி. என்னவோ முகியைப் பார்த்ததும் பிடித்து விட்டது அவளுக்கு.

முகியும் மெலிதாகச் சிரித்தபடி உண்டாலும் விழிகளில் அந்த வலி பிரதிபலித்தது.

“சரி அக்கா. குட் நைட்! நல்லா தூங்குங்க. நாளைக்கு மார்னிங்க். சிக்ஸ் தேர்ட்டி ரெடியாக இருங்க. நான் மெசேஜ் செய்யறேன்.”

“ஓகே மா.” என முகியும் தலை அசைத்தாள்.

பெண்கள் இருவரும் விடை பெற்றுச் செல்ல, காமினி அருகிலிருக்கும் தன்னுடைய வில்லாவிற்கு வந்தாள். வீட்டில் நுழைந்ததும் அவளுடைய தந்தையும், சகோதரனும் அமர்ந்திருந்தனர்.

“டாடி…” என ஓடிப் போய்க் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.

மகளின் செயலில் சிரித்தார் சிவ பொன்னம்பலம். நரை முடி ஆங்காங்கே எட்டிப் பார்க்க, கருமையான தேகத்தில் அறுபது வயதில் இருந்தார்.

“என்னம்மா இன்னிக்கு ரொம்ப ஹேப்பியா இருக்க? ருத்ரா ஓகே சொல்லிட்டானா?”

தன்னுடைய அக்காவை ஓரக்கண்ணில் பார்த்தபடி கைப்பேசியில் கவனம் வைத்திருந்தான் சிவகார்த்திக்.

“ஏன் டாடி நீங்க வேற, அவனோட ஃபுட் மட்டும் தான் நல்லா இருக்கும். ஆனால் ஹீ ஈஸ் பிட்டர். ஒத்துக்கவே இல்லை. ஆனால் நான் விடமாட்டேன்.”

“தட்ஸ் மை கேர்ள்!” என அவள் முதுகில் தட்டிக் கொடுத்தார்.

“சரி வா, சாப்பிடலாமா?”

“டாட், மேடம் ஏற்கனவே ஹோட்டலில் சாப்பிட்டாச்சு. இன்னிக்கு பட்டர் கார்லிக் சிக்கன், நாண் மெனுவில். மேடம் விட்ருவாங்களா?”

“என்ன பண்ணுறது? ருத்ராவோட சமையலை அடிச்சுக்கவே முடியாது. ருத்ராவை பார்த்துக் கத்துக்கோடா.”

“மேடம் என்னவோ செஃப்க்கு அசிஸ்டண்ட் மாதிரி பேசுறீங்க. சுடத் தெரிஞ்சது தோசை, சப்பாத்தி. நூடுல்ஸ். நீ பேசற.”

“எனக்கு அது தெரியுதுல்ல. உனக்கு என்ன தெரியும்?”

“எனக்கு காஃபி போடத் தெரியும்.”

“சரி சரி, இரண்டு பேரும் அமைதியாக இருங்க. நீ போய் ரெஸ்ட் எடு காமினி.”

“போ மினியன். போய் உன்னோட மினியன்களோட ஐக்கியமாகு.”

“போடா இடியட்.” என அவனைத் திட்டியவள் அறைக்குள் நடையைக் கட்டினாள்.

அவளுடைய அறை மஞ்சள் மற்றும் நீல வண்ணத்தில் வண்ணம் தீட்டப்பட்டு, மினியன் பொம்மைகள் நிறைய இருக்கும். மினியனின் விசிறி அவள். அதோடு ‘ஸ்மர்ப்ஸ்’ பொம்மைகளும் இருக்கும்.

ருத்ரனை எப்படி சரி செய்வது என யோசித்தபடி உறங்கிப் போனாள்.
அடுத்த நாள் காலையில் ருத்ரனின் கோபத்திற்கு ஆளாகி நின்றிருந்தனர் காமினியும், பத்மமுகியும்.

தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page