அத்தியாயம் 3

எந்தவிதப் பாகுபாடுகளும் இன்றி, ‘நான் இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் பொதுவானவன்!’ என்ற கர்வத்தோடு பகலவன் உதித்து, தன் பொற்கதிர்களைப் பூமியில் பரப்பிக்கொண்டிருந்தான். அந்த அதிகாலைப் பொழுதில், மகளிர் விடுதி அறையின் ஜன்னல் வழியே சூரிய ஒளி எட்டிப் பார்த்தது.

இரவு நேரப் பணியை முடித்துவிட்டு விடியற்காலையில்தான் அறைக்கு வந்து அசதியில் தூங்கிக் கொண்டிருந்தாள் மலரின் தோழி அனன்யா. புகழ்பெற்ற ஜி.ஆர்.டி மருத்துவமனையின் இதயவியல் (Cardiology) பிரிவில் செவிலியராகப் பணிபுரியும் அவளுக்கு, இரவெல்லாம் நோயாளிகளைக் கவனித்ததில் உடல் அத்தனை களைத்திருந்தது. 

தூங்கிக் கொண்டிருக்கும் தோழிக்குத் தொந்தரவு தராமல் சத்தமின்றிப் படுக்கையிலிருந்து எழுந்த மலர், பூனைப் பாதங்கள் போல மெல்ல நடந்து குளியலறைக்குள் புகுந்தாள். குளித்து முடித்துவிட்டு, அலுவலகத்திற்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள்.

மலர் தனக்கு மிகவும் பிடித்த பூ வேலைப்பாடு கொண்ட வானநீல நிற மேலாடையை (Tops) அணிந்து கொண்டாள். அது அவளது முன்னழகை மேலும் எடுப்பாகவும் அழகாகவும் காட்டியது. கண்ணாடியின் முன்னின்று தன் பிம்பத்தை ஒருமுறை ஆசை தீர ரசித்தவள், தன் உடைத் தேர்வை நினைத்துத் தனக்குள்ளேயே மெச்சிக் கொண்டாள். 

“பெர்ஃபெக்ட் மலர்! அனன்யாவோட இந்த ஸ்கை ப்ளூ டாப் அவளைவிட உனக்குத்தான் அழகா இருக்கு. அவ முழிச்சு இதைப் பார்த்துட்டு வம்பிழுக்கிறதுக்குள்ள நாம ஆபீஸுக்கு ஓடிடுவோம்!” கண்களில் குறும்பு மின்ன புன்னகைத்தாள். 

இருபத்திரண்டு வயது நிரம்பிய மலர்… அத்தனை நிறமெல்லாம் இல்லை, தமிழ் மண்ணின் மாநிறப் பெண். ஆனால், ஒருமுறை பார்த்தால் யாரையும் சட்டென்று ஈர்த்துவிடும் வசீகர முகபாவம் கொண்டவள். துறுதுறுப்போடு படபடக்கும் அவளது சிறிய விழிகளும், மனம் விட்டுப் புன்னகைக்கையில் கண்கள் சுருங்கி அவளது கன்னங்களில் விழும் ஒற்றைக் கன்னக்குழியும் எப்பேர்ப்பட்டவரையும் மயக்கிவிடும் பேரழகு!

செயற்கையாக கர்லிங் செய்யாமலேயே, இயற்கையிலேயே அழகாய்ச் சுருண்டு விழுந்த தன் அடர்த்தியான கார்முகில் கூந்தலை மேலே தூக்கி, அழகிய நெகிழிப் பிடிப்பானால் (clip) கச்சிதமாகக் கோத்து, தலைமுடியை தோளில் தளரவிட்டுச் சரிசெய்தாள். 

கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தைப் பார்த்து, “உன்னால எல்லாமே முடியும் மலர்… யூ ஆர் சோ க்யூட்!” என்று தனக்குத்தானே தன்னம்பிக்கையோடு உற்சாகமூட்டும் குரலில் கத்தினாள்.

“ஏய்… என்னடி காலைலேயே சத்தம்…” என்று தூக்கக் கலக்கத்தில் படுக்கையிலிருந்து சிணுங்கிய அனன்யாவைக் கண்டதும், அவளிடம் மாட்டிக் கொள்ளக்கூடாதே என்ற பதற்றத்தில், சத்தமின்றி அறையை விட்டு வெளியேறி, படிக்கட்டுகளில் வேகவேகமாகக் கீழே இறங்கினாள். 

எப்போதுமே அவள் விடுதி அறையிலிருந்து கீழே இறங்கி வாசலுக்கு வருவதற்கும், அலுவலக வண்டி வந்து நிற்பதற்கும் நேரம் சரியாக இருக்கும்!

அலுவலக வாகனம் வந்து நின்றதும், கதவைத் திறந்து கொண்டு உள்ளே ஏறினாள் மலர். ஏறிய வேகத்தில் முகமெல்லாம் புன்னகை மலர, ஓட்டுநரிடம், “குட்மார்னிங் அண்ணா… சாப்பிட்டீங்களா?” என்று வழக்கம்போல இன்முகத்தோடு விசாரித்தாள்.

அவளது எதார்த்தமான பேச்சில் புன்னகைத்த ஓட்டுநர், “நான் சாப்பிட்டேன் பாப்பா… நீங்க சாப்டீங்களா?” என்று மறுகேள்வி கேட்டார்.

“நமக்கு எப்பவும் கேண்டீன் காப்பியும் சமோசாவும் தான் பிரேக்ஃபாஸ்ட்!” தோள்களைக் குலுக்கியபடி அவள் சிரிக்க, “நம்ம கேண்டீன்லதான் காலையிலேயே டிபன் இருக்குல்ல… அதைச் சாப்பிட வேண்டியதுதானம்மா?” என்று அக்கறையோடு வினவினார்.

“எது, நம்ம ஆபீஸ் கேண்டீன் இட்லி தோசையா? அதை யார் சாப்பிடுறது… அடடா, தினமும் மதியம் கேண்டீன்ல அந்த சாப்பாட்டைச் சாப்பிடவே பிடிக்கறதில்ல… ஏதோ சமோசா நல்லா இருக்கும், அதனால அது போதும்னு விட்டுட்டேண்ணா!” என்றாள் சலிப்போடு.

வண்டியை நிதானமாகத் திருப்பியபடி, “ஆமாம்மா… நீங்க ஹாஸ்டல்ல தங்கி இருக்கீங்கள்ல, நைட் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவீங்க?” என்று அவர் அடுத்த கேள்வியை கேட்டதும்,

“ஹாஸ்டலுக்குப் பக்கத்துல இருக்குற ஹோட்டல்ல சாப்பிட்டுப்போம் அண்ணா… அது நம்ம கேண்டீன் சாப்பாட்டைவிடச் சுமாரா இருக்கும்! மாசம் முதல் தேதி சம்பளம் போட்டதும், ஃபர்ஸ்ட் எதாச்சும் நல்ல கடையா பார்த்து… பிரியாணி, மட்டன், சிக்கன்னு நானும் என் ஃப்ரெண்டும் அன்னைக்கு நல்லா சாப்பிடுவோம்.

“எனக்கு ஒரு நாள் சேலரி போடுவாங்க, அவளுக்கு இன்னொரு நாள் சேலரி போடுவாங்க. அதனால ரெண்டு நாள் ஃபுல் கட்டு கட்டுவோம்!” என்று சொல்லும்போதே அவளுக்கு நாவில் எச்சில் ஊறியது. 

“அதுக்கு அப்புறம் நமக்கு பட்ஜெட் கட்டுப்படி ஆகாதுண்ணா. அதனால தினமும் கேண்டீனும், ஹாஸ்டலுக்கு முன்னால இருக்கிற ஹோட்டலும்தான்!” என்று தன் கடின சூழலையும் பகடியாக்கிக் கலகலவெனப் பேசிக்கொண்டே வந்தாள்.

அவளது இந்த முகம் வண்டிக்குள்ளும் வெளி உலகத்திலும் மட்டும்தான். அலுவலகத்தின் வாசலைத் தொட்டுவிட்டால் மலரின் முகத்தில் இருக்கும் புன்னகை சட்டென்று மறைந்துவிடும். 

ஆபீஸில் மலர் சிரித்து எவருமே பார்த்ததில்லை; அது எப்போதாவது அரிதாக நடக்கும் நிகழ்வு. அலுவலக எல்லைகளைத் தாண்டி வெளியே வந்துவிட்டால், தன் தோழியிடமும் மற்றவர்களிடமும், அவள் தோழமையோடும் மகிழ்ச்சியோடும் பழகுவாள். அவளது இந்த இரண்டு வேறுபட்ட குணங்களுக்கும் பின்னால் ஒரு கசப்பான காரணமும் ஒளிந்திருந்தது.

அலுவலகத்தில் மலர் அசாத்திய திறமையோடு வேலை செய்வதைப் பார்த்து, அவளை மெச்சுபவர்களை விட அவளது வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுபவர்களே அதிகம். பெரும்பாலானோர் அவளிடம் இயல்பாகப் பேச்சு கொடுப்பதைக் கூடத் தவிர்த்தனர். 

இன்னும் சிலரோ, அவளிடம் நட்பாகப் பழகுவது போல் நடித்துத் தங்களின் வேலைகளையும் சுய தேவைகளையும் மட்டும் சாதுரியமாக நிறைவேற்றிக் கொண்டு, காரியம் முடிந்ததும் விலகிக் கொண்டனர். 

அப்படிப்பட்ட போலி நட்புகளால் பலமுறை ஏமாற்றங்களையும் துரோகங்களையும் மட்டுமே பரிசாகப் பெற்றிருந்தாள். அந்தத் தொடர் காயங்களால் தனக்குள் அவள் இறுகிப் போனாள்.

அதுமட்டுமன்றி, ஒரு உயர் பொறுப்பில் இருக்கும்போது தன் குழுவில் உள்ளவர்களிடம், வேலையைக் குறித்த நேரத்தில் சரியாக செய்து வாங்கிடவே, சில நேரங்களில் சற்று கூடுதல் கண்டிப்புடன் நடந்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்தமும் இருந்தது. அதனாலேயே அலுவலகத்தில் உள்ள அனைவரிடமும் மலர் குறிப்பிட்ட எல்லைக்கோட்டை வகுத்துக்கொண்டு அளவாகவே பழகி வந்தாள்.

‘நான் என் வேலையை நேர்மையா, சரியாத்தானே செய்றேன்? இதுல மத்தவங்க என் மேல பொறாமைப்படுறதுக்கோ, என்னை இழிவாப் பேசுறதுக்கோ, கோபப்படுறதுக்கோ என்ன காரணமிருக்கு? எல்லாரும் அவங்கவங்க திறமையை சரியா பயன்படுத்தி வேலையை செஞ்சா, அவங்களுக்கான வெற்றி கிடைக்கப் போகுது. இதுல என் மேல கோபப்பட்டு அவங்க என்னத்த சாதிக்கப் போறாங்க?’ என்று எண்ணற்ற முறை மலர் தனக்குள்ளேயே கேள்வி கேட்டுப் புலம்பியிருக்கிறாள். 

மனித மனங்களின் விசித்திரமான காழ்ப்புணர்விற்கும், அவர்களது நிறம் மாறும் குணத்திற்கும் அவளால் காரணங்களை கண்டறிய முடியவில்லை. நாள்கள், செல்லச் செல்ல, அவளும் அதைத் தெரிந்துகொள்ளத் தன் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

கேப் டிரைவருடன் அதுவரை கலகலவெனச் சகஜமாகப் பேசிக்கொண்டே வந்த மலர், வண்டியில் மற்ற ஊழியர்கள் ஏறியதும் சட்டென்று அமைதியாகி, ஜன்னலோரம் ஒதுங்கி அமர்ந்துவிட்டாள். 

தன் கைப்பையிலிருந்த அலைபேசியை எடுத்தவள், அன்று அலுவலகத்தில் முடிக்க வேண்டிய வேலைகளின் பட்டியலை பார்த்து, ஒவ்வொன்றாக மனதிற்குள் அசைபோடத் தொடங்கினாள்.

அங்கே அலுவலகத்தில், தன் மனதில் நேற்றிரவு விழுந்த அறையின் வடுவைத் தாங்கி, சற்றும் குறையாத கோபத்தோடு அமர்ந்திருந்தான் பாலா. ஆத்திரத்தில் அவனது விழிகளோ சிவந்திருந்தன. ஏதேனும் செய்து மலரைப் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில், மேசையின் மீது விரல்களைத் தட்டியபடி தீவிர யோசனையில் ஆழ்ந்திருந்தான். 

நண்பனின் தவறான மன ஓட்டத்தைக் கணித்துவிட்ட சசி, அவனருகே வந்து தோளைத் தொட்டான். “பாலா… நடந்ததை விடுடா. கொஞ்சம் மலரோட நிலைமையில இருந்து யோசிச்சுப் பாரு. அன்னைக்கு நீங்க செஞ்ச தப்புனால அவளுக்கு எவ்வளவு அழுத்தமாகியிருக்கும், ஏதோ அந்த ஆத்திரத்துல கையை ஓங்கிட்டா” என எடுத்துச்சொல்லிப் புரியவைத்து அவனை அமைதிப்படுத்த முயன்றான்.

பாலா சசியை ஏறிட்டுப் பார்த்து ஒரு வன்மமான புன்னகையை உதிர்த்தவன், “ஏன்டா? தப்பு பண்ணது அவனுங்க. அப்படி இருக்கும்போது அவ எதுக்குடா என்மேல கை வைக்கணும்? அத்தனை பேர் முன்னாடி என்னை அசிங்கப்படுத்தின அவளுக்கு… இன்னைக்கு இருக்கு கச்சேரி!” என்று பற்களைக் கடித்தான்.

பாலா அவளைப் பழி தீர்ப்பதற்காக என்ன செய்யப் போகிறானோ?!

அலுவலக வாகனம் வந்து நின்றதும் மலர் இறுக்கமான முகத்துடன் இறங்கினாள். நேராக உள்ளே சென்று, வருகைப்பதிவுக் கருவியின் மீது தன் விரலை அழுத்திக் கைரேகையை வைத்து வருகையைப் பதிவுசெய்துகொண்டாள். 

அதன் பிறகு, தன் இருக்கைக்குச் சென்றவள் சற்றும் தாமதிக்காமல், குழுவினரை அழைத்து அன்றைய தினம் முடிக்க வேண்டிய வேலைகளைத் திட்டமிட்டு ஒவ்வொன்றாகப் பிரித்துக் கொடுத்தாள். 

ஆனால், தன் குழுவில் இருந்த பாலாவிற்கும் சசிக்கும் மட்டும் அவள் எந்தவொரு வேலையையும் ஒதுக்கவில்லை. அவர்கள் இருவரும் குழுவில் இருக்கிறார்களா, இல்லை இந்த அலுவலகத்தில்தான் இருக்கிறார்களா என்பதுபோல அவர்கள் இருவரையுமே கண்டுகொள்ளாமல் இருந்தாள் மலர். 

அவளது அலட்சியமும் உதாசீனமும், ஏற்கனவே வெறுப்பில் கனன்று கொண்டிருந்த பாலாவின் ஆத்திரத்தை மேலும் பல மடங்கு எரியூட்டிக் காட்டுத்தீயாக மாற்றியது.

தேநீர் இடைவேளையின் போது… கேண்டீனில் மலர் அமர்ந்திருப்பதை தூரத்திலிருந்தே கவனித்துவிட்டான் பாலா. சசியை இழுத்துக்கொண்டு அவளது மேசைக்கு அருகாமையில் வந்து நின்றவன், மலருக்குத் தெளிவாகக் கேட்க வேண்டும் என்றே குரலை உயர்த்தி சத்தமாகப் பேசத் தொடங்கினான்.

“ஏன்டா சசி? மலர் மேடத்துக்கு தான் இந்தக் கம்பெனிக்கே சி.இ.ஓ போல நெனப்பு… அவங்க நம்மகிட்ட பேசாம, வேலை எதுவும் தராம இருந்தா, நாம உடனே ஃபீல் பண்ணி… அவங்க கால்ல போய் விழுந்துருவோமா? அடேங்கப்பா! சம்பளத்தை மட்டும் வாங்கிட்டு, ஒரு வேலையும் பண்ணாம சும்மா உட்கார்ந்திருக்கிறது எவ்ளோ ஹாப்பியா இருக்குது தெரியுமா? இந்த மாதிரி ஒரு வாய்ப்பு யாருக்காவது கிடைக்குமா? பேசாம நல்லா என்ஜாய் பண்ணலாம்டா!” என்று அவளை வம்புக்கு இழுக்கும் நோக்கில் கேலியாகச் சிரித்தான்.

இருவரையும் முறைத்துப் பார்த்த மலர், “இதெல்லாம் திருந்தாத ஜென்மங்கள்” என்று முணுமுணுத்தவாறு, அவர்களை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டாள். 

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு…

நிறுவனத்தின் மூத்த மேலாளர் நெடுமாறன், மலரைத் தன் அறைக்கு அழைத்துச் சில பென்டிரைவ்களை அவளிடம் கொடுத்தார். 

“மலர்… இதுல கம்பெனியோட ரொம்ப முக்கியமான ஃபைல்ஸ் இருக்கு. இதையெல்லாம் கொஞ்சம் சரிபார்த்துக் குடுங்க. இன்னைக்கு ஈவினிங் குள்ள இந்த வேலை முடிஞ்சாகணும்” என்று அதன் முக்கியத்துவத்தை உணர்த்தி அனுப்பினார்.

துரிதமாகத் தன் இருக்கைக்குத் திரும்பியவள், உடனே வேலையைத் தொடங்கினாள். கணினியின் முன்னமர்ந்து, எதையும் யோசிக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் அத்தனை வேலைகளையும் கச்சிதமாக முடித்துவிட்டு நிமிர்ந்தாள். 

தொடர்ந்து கணினியைப் பார்த்துக் கொண்டிருந்ததால் அவளுக்குத் தலை வலிப்பதுபோல் இருக்க, ‘ஒரு காபி குடித்துவிட்டு வந்தால் நன்றாக இருக்குமே’ என நினைத்தவள், அந்தப் பென்டிரைவ்களைப் பத்திரமாகத் தன் மேசை இழுப்பறைக்குள் வைத்துவிட்டு வெளியே சென்றாள்.

காபி குடித்துவிட்டுத் தன் இருக்கைக்குத் திரும்பிய மலரின் கண்கள், அங்கே கண்ட காட்சியால் அதிர்ச்சியில் விரிந்தன. இழுப்பறை அரைகுறையாகத் திறந்திருக்க, உள்ளே வைக்கப்பட்டிருந்த பென்டிரைவ்கள் எதையுமே காணவில்லை! அவளது இதயம் ஒரு நொடி ஸ்தம்பித்து நின்று, பின் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது. 

அதிலிருந்த அத்தனை கோப்புகளும் நிறுவனத்தின் முக்கிய ஆவணங்கள் ஆயிற்றே! பதற்றத்தில் அவளுக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. யாரிடம் சென்று கேட்பாள்? யார் மீது பழி போடுவாள்? தன் அறை முழுக்க, அலமாரிகளிலும் மூலை முடுக்கெல்லாம் பைத்தியம் பிடித்தவள் போல் தேடியும், அவை கிடைக்கவில்லை.

மலர் அங்கிருந்து வேகமாகச் சென்று கண்காணிப்புக் கேமரா பதிவுகளைச் சோதித்துப் பார்த்தாள். அவளது அறைக்குள் வேறு யாரும் நுழைந்ததற்கான எந்தவொரு தடயமும் அதில் பதிவாகியிருக்கவில்லை. நிலைமை அவளுக்கு இன்னும் பெரிய புதிராகவும் குழப்பமாகவும் மாறியது. செய்வதறியாது திகைத்தவள், தன் இருக்கைக்குத் திரும்பி வந்து அப்படியே தலைமேல் கை வைத்து அமர்ந்துவிட்டாள். 

அவளது விழிகளிலிருந்து கண்ணீர்த்துளிகள் உதிர்வதற்காகக் காத்திருந்தன. எதேச்சையாகத் தன் பார்வையை அலுவலகப் பொதுப் பகுதிக்குத் திருப்பினாள். 

அங்கே அவனது இருக்கையில் அமர்ந்தவாறே தன்னை நோக்கி வன்மமாய்ப் புன்னகைத்த பாலாவைக் கவனித்துவிட்டாள். உடனே இண்டர்காமை எடுத்து அவனைத் தன் அறைக்கு வருமாறு அழைத்தாள்.

அவள் அழைத்துச் சில நொடிகளிலேயே பாலா உள்ளே வர, அவனது உடல் மொழியே வேறாக இருந்தது. அனுமதி கேட்காமல் திமிராக நுழைந்தவன், மலர் அமரச் சொல்லும் வரை காத்திராமல், அவளுக்கு எதிரே இருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தான். அவளை ஏளனப் புன்னகையோடு அலட்சியத்தோடு ஏறிட்டுப் பார்த்தான்.

🌹காதல் மலரும்🌹 

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!