அத்தியாயம் 2

நேர்முகத் தேர்வில் நதியாவைத் தெரிவுசெய்த பின் கிளம்பியவன், காரில் நேராகச் சென்று இறங்கியது, சக்கரவர்த்தி நிறுவனத்தின் உற்பத்தித் தொழிற்சாலைக்குத் தான். கோட் பொத்தான்களைக் கழற்றி நிதானமாக இறங்கியவன், அங்கிருக்கும் பழைய தேவையற்ற பொருட்களை வைக்கும் கிடங்கிற்குள் சென்றான்.

அங்கு ஒருவனை அடித்துக் கைகள் பிணைக்கப்பட்ட நிலையில் கட்டித் தொங்கவிட்டிருக்க, இவனைப் போலவே கோட் சூட் அணிந்த இரண்டு பேர், இவ்வளவு நேரம் ஓய்வின்றி அவனை அடித்துவிட்டு அமர்ந்திருந்தனர்.

‘என்னடா நம்ம நாயகனுக்கு பெயரில்லையா? சரியா கூட காட்ட மாட்டேங்கிறாங்க’ அப்படின்னு தானே நினைக்கிறீங்க. ஹீரோ இன்ட்ரோ கொடுத்திடலாமா?!

கிடங்கிற்குள் நுழைந்து வேகமாகத் தன் கோட்டைக் கழற்றியவன், அங்கிருந்த மெய்க்காப்பாளரிடம் கட்டையை வாங்கி, கையோடு பிணைக்கப்பட்டிருந்தவனை

அடிக்க, அடி வாங்கியவன் பொறி கலங்கி நிமிர்ந்து பார்க்கையில்… பழுப்பு நிற விழிகளோடு ருத்ரமூர்த்தியாய் நின்றிருந்தான் நம் கதையின் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி! சக்கரவர்த்தி குடும்பத்தின் மூத்த வாரிசு!

முப்பது வயது இளைஞன். திராவிட நிறத்தில் இருந்தாலும் முகத்தில் ஒரு களை இருந்தது! அவனது செதுக்கப்பட்ட உடற்கட்டுகள், அவன் தினந்தோறும் ஜிம்மில் கடினமாக உடற்பயிற்சி செய்து தன் உடலை மெருகேற்றி வைத்திருப்பதைப் பறைசாற்றின. 

அவனது பழுப்பு நிறக் கூர்மையான விழிப் பார்வையில் காண்பவர் மயங்கிடக் கூடும்! அவன் கட்டளையிட வேண்டியதில்லை… ஒற்றைப் பார்வையை வீசினால் போதும், மறுபேச்சின்றி அந்த வேலை தானாக நடந்திடும்!

கொஞ்சம் பழைய செவ்ரான் ஸ்டைலில் அடர்த்தியான மீசையும், அதற்கேற்றாற்போல் ட்ரிம் செய்த தாடியும் வைத்திருந்தான். அவன் சதுர வடிவ முகத்திற்கு அது கூடுதல் அழகுடன் வசீகரத்தைத் தந்தது! என்ன… மூக்கு தான் கொஞ்சம் பெரியதாகிவிட்டது! அதனால் கோபமும் பெரிதாக வருமோ? முகம் பெரிது என்பதால் அது அவன் அழகை ஒன்றும் கெடுத்துவிடப் போவதில்லை. (ரொம்ப ஓவரா வர்ணிச்சுட்டேனோ)

“ஏன்டா நாயே… என்கிட்ட சம்பளத்தை வாங்கிட்டு, எனக்கே துரோகம் பண்ண உனக்கு எப்படிடா மனசு வந்தது? எவ்வளவு தைரியம் இருந்தா நீ சக்கரவர்த்தி கம்பெனிக்குள்ள டூப்ளிகேட் புரொடக்டைக் கொண்டு வந்திருப்ப? உன்னை…” – ஆத்திரத்தில் கண்மண் தெரியாமல் அவனை அடித்தான்.

இந்த மாதிரி கேவலமானவங்க கூட நாயை ஒப்பிட்டுப் பேசக்கூடாது மித்து. நாயை வளர்த்தா அது நன்றியை மட்டும்தான் காட்டும், நமக்காக உயிரைக் கூட தரும். ஆனா இவனுங்க பணத்துக்காக நம்ம உயிரைக் கூட எடுப்பானுங்க” கால் மேல் கால் போட்டு ஆசுவாசமாகப் பெருமூச்சொன்றை விட்டுப் பேசியவன், மிதுனின் ஆருயிர்த் தோழன் அரவிந்தன்.

“ஏன்டா அந்த ராஜீவ் பைத்தியக்காரனுக்கு வேற வேலையே இல்லையா? ஒவ்வொரு வருஷமும் பெஸ்ட் இண்டஸ்ட்ரியலிஸ்ட் அவார்டு வாங்கணும்னா அவன் தயாரிக்கிற பொருளோட தரத்தை உயர்த்தணும். அதை விட்டுட்டு நம்ம கம்பெனி பொருளோட தரத்தைக் கம்மி பண்ணப் பார்க்குறான், டூப்ளிகேட் பொருளைக் கொண்டு வந்து வைக்கிறான். அவனை எதுக்கு இன்னும் விட்டு வைச்சிருக்க? எனக்கென்னமோ கடைசியா உனக்கு நடந்த ஆக்சிடென்ட் கூட அவன் பண்ணது தான்னு தோணுது” தன்னுடைய அனுமானங்களை ஆராய்ந்து நீண்ட உரையைப் பேசியவன் மிதுனின் மற்றொரு தோழன் சத்யன்.

மிதுன், அரவிந்தன், சத்யன் மூவரும் பள்ளி பயிலும் காலத்தில் இருந்தே உயிர் நண்பர்கள். கல்லூரி, ஜிம், ட்ரெக்கிங், டூர், தொழில் என எல்லா இடங்களிலும் மூவரும் பார்ட்னர்கள். சில கிரைம்களிலும் கூட கூட்டாளிகள் தான்.

இந்தியாவின் முக்கிய பெருநகரங்களில் எல்லாம் கிளைகளைக் கொண்டிருந்த ‘சக்கரவர்த்தி இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தின் நிறுவனர், மிதுனின் அப்பா சக்கரவர்த்தி. அவன் கல்லூரி முடிக்கும் தருவாயில், விபத்தொன்றில் தந்தை இறந்துவிட, மொத்த நிறுவனங்களின் பொறுப்புகளையும் அதோடு குடும்பப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டான்.

மிதுனின் அப்பாவை விபத்து என்ற பெயரில் கொன்றது வேறு யாருமில்லை, அவன் சொந்தச் சித்தப்பாவே தான். தொழில் போட்டியின் காரணமாகத் தந்தை கொலை செய்யப்பட்டிருக்க, பழிக்குப் பழியாக அவரைத் தீர்த்துக்கட்டிய பின், நிறுவனப் பொறுப்பை ஏற்கும் முதல் கையெழுத்தைப் போட்டான்.

அன்றிலிருந்து மொத்த நிறுவனங்களையும் திறம்பட நிர்வகித்து, தனது பிசினஸ் சாம்ராஜ்யத்தை முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான். அடுத்த சில ஆண்டுகளிலேயே நாடெங்கும் தன்னுடைய பிசினஸை விரிவு செய்தான். கடந்த ஐந்து வருடங்களாக இந்தியாவின் சிறந்த தொழிலதிபர் பட்டியலில், ஒவ்வொரு வருடமும் முதலிடத்தில் இருப்பவன் மிதுன் சக்கரவர்த்தி!

எத்தனை வளர்ச்சியோ, அத்தனை துரோகங்கள்… அத்தனை இழப்புகள்… அத்தனை சவால்களைச் சந்தித்திருக்கிறான். யாரையும் எளிதில் நம்பிட மாட்டான், ஆனால் நம்பிக்கைக்குரியவர்கள் சிலரையும் கூடவே வைத்திருக்கிறான். மிதுனின் பிசினஸ் அகராதியில் பேச்சுவார்த்தை எல்லாம் இல்லை. பழிக்குப்பழி, ரத்தத்திற்கு ரத்தம் தான்! தவறு செய்தது யாராக இருந்தாலும் தண்டனை கிடைத்தே தீரும்.

தன் நிறுவனங்களின் கீழ் வேலை செய்யும் பணியாளர்கள் அனைவருக்கும் தேவையானதைச் செய்திடுவான்… அதே சமயம் துரோகிகள் இருந்தால் வேரோடு அழித்திடுவான். அலுவலகத்திலும் பொது இடங்களிலும் இவனைச் சிரித்த முகத்துடன் காண முடியாது… எப்போதும் இறுக்கமாகத்தான் இருப்பான். ஆனால், வீட்டிலும் நண்பர்களுடனும் இருக்கும்போது அந்த இறுக்கம் மறைந்துவிடும்… எந்நேரமும் புன்னகையுடன்தான் இருப்பான்!

“இவனை என்ன செய்யலாம்னு இருக்க?” அந்த துரோகியைச் சுட்டிக்காட்டி அவன் நண்பர்கள் கேட்டதும், “போலீஸ்ல ஹேண்ட்ஓவர் பண்ணிடுங்க… நான் கோகுல்கிட்ட பேசுறேன். சாகுற வரைக்கும் ஜெயில்லயே இருக்கட்டும்” – மிதுன் சொல்லிவிட்டு நகர, கூட்டாளிகள் அவனை அதிர்ச்சியுடன் பார்த்திருந்தனர்.

மிதுன் கண்ணைக் காட்ட, அங்கிருந்த மெய்க்காப்பாளர்கள் அவனை இறக்கி, காவல்துறையிடம் ஒப்படைக்கத் தூக்கிச் சென்றனர்.

“மித்து… உனக்கு என்னாச்சு? நீ என்னடா இப்படி மாறிட்ட? பழைய மிதுனா இருந்திருந்தா இந்நேரம் அவனைக் கொன்னுட்டுதான் அடுத்த வேலையே பார்த்திருப்ப. இப்போ என்னடான்னா போலீஸ், அது இதுன்னு இவ்வளவு பொறுமையா பேசுற?” திகைப்பு குறையாமல்  அரவிந்தன் கேட்க,

“ஏன் மித்து… உனக்கு ஆக்சிடென்ட் ஆனதுல தலையில அடிபட்டு மூளை எதுவும் குழம்பிடுச்சா? நீ பண்றது எல்லாமே வித்தியாசமா இருக்கே” – சிரிக்காமல் சத்யன் நண்பனை கிண்டல் செய்திட, மென்புன்னகை உதிர்த்தான் மிதுன்.

“சிரிக்கிறது கூட மாறிடுச்சு. ஏன்டா இப்படி மாறிட்ட? உன் மாமா பொண்ணு ரூபிணி உன்னைத்தான் கல்யாணம் பண்ணனும்னு ரொம்ப ஆசையோட இருந்தது. கல்யாணமே வேணாம்னு அந்தப் பொண்ணை உன் தம்பிக்கு கல்யாணம் பண்ணி வைச்சுட்ட. உனக்கு வேற ஏதும் பிரச்சனையா? எங்களுக்குத் தெரியாம ஏதும் மறைக்கிறியா?” – அரவிந்தன் ஆதங்கமாய் கேள்வி எழுப்ப,

“இதையே எத்தனை தடவை கேட்பீங்க? முதல்ல ரெண்டு பேரும் கிளம்புங்க. எனக்கு நிறைய வேலை இருக்கு” – தன் நண்பர்களைப் பேசியே சமாளித்து, அவர்களையும் உடனழைத்துக் கிளம்பினான் மிதுன்.

அவன் நண்பர்கள் இவ்வளவு பேசினாலும், ‘மிதுன் செய்வதும், முடிவெடுப்பதும் சரியாகத்தான் இருக்கும்… அதில் நிச்சயம் ஏதேனும் காரணம் இருக்கும்’ என்ற நம்பிக்கையில், எந்த விஷயத்திலும் அவனை அவர்கள் வற்புறுத்துவதில்லை.

துரோகியை அடிக்கும்போது சட்டையில் ஆங்காங்கே தெறித்த ரத்தத் துளிகள் தெரியாமல் இருக்க, அந்த கருப்பு நிறக் கோட்டை மாட்டிக்கொண்டான் மிதுன். மூவரும் காரில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றிட, அங்கே அப்போதுதான் விஷ்ணுவும் நதியாவும் காரில் வந்திறங்கினர்.

“வந்துட்டாங்க மும்மூர்த்திகள்! ஒண்ணு முழுசா வெந்தது, ஒண்ணு அரை வேக்காடு, ஒண்ணு வேகவே வேகாதது’ – உள்ளுக்குள் எரிச்சலோடு அவர்களை அர்ச்சித்தவன், “நதியா… இப்போ சார் கூட ரெண்டு பேர் வருவாங்க. குறுகுறுன்னு பார்ப்பாங்க, தப்பா நினைச்சுக்காத” என்று கூறிவிட்டு அவள் அருகில் நிற்க,

நிறுவனத்தின் கீழ்த்தளத்தில்… மிதுன் தன் நண்பர்களுடன் காரில் வந்திறங்கியவன், “இவங்கதான் அந்தப் பொண்ணு, பேரு…” என்றவாறு யோசனையாய் இழுக்க, “சார்… மிஸ்.நதியா” விஷ்ணு எடுத்துக் கொடுக்க, அரவிந்தும் சத்யனும் அவனை முறைத்தனர்.

“என்ன விச்சு… நீதான் இன்டர்வியூலாம் பண்ணி செலக்ட் பண்ணியாம். எனக்குக் கூட ஒரு நல்ல பொண்ணு பார்க்கணும், கல்யாணத்துக்குத்தான்… இன்டர்வியூ பண்ணிடலாமா?” – சத்யன் கேலியாகச் சிரித்திட, ‘உனக்கு யாருப்பா பொண்ணு தருவாங்க? கொஞ்சம் விட்டா மூணு பேரும் சேர்ந்து இதே வேலையைச் செய்ய வச்சுருவீங்க போல’ – விஷ்ணுவால் இதைப் பேச முடிந்திடுமா என்ன? வழக்கம்போல மனதிற்குள் புலம்பியவன்,

“சத்யா சார்… மிதுன் சார் சொன்ன வேலையைச் செஞ்சேன், அவ்வளவுதான். எனக்கும் இதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்ல” என்று பற்கள் தெரிய இளித்து வைத்தான்.

அரவிந்த், சத்யா இருவரும் நதியாவின் முகத்தையே பார்த்தனர். நீண்ட நேரமாக அவர்கள் அழுத்தமாகப் பார்த்திருக்க, அவளுக்குச் சங்கோஜமாக இருந்தது. 

பார்வையைத் தாழ்த்திக்கொண்டவள் நெளிந்திட, ‘அப்படியே கண்ணாலேயே நல்லவங்களா, இல்லையான்னு ஸ்கேன் பண்றாங்களாம் முட்டா பீசுங்க! இவங்க கண்டுபிடிச்சுட்டாலும்… பணத்தைப் பார்த்தாலே எல்லாரும் மாறிடுவாங்க. நீங்க பண்ற டார்ச்சருக்கே ஆப்போசிட் பார்ட்டி எவனாச்சும் பெரிய லம்ப் அமவுண்ட் கொடுத்தா, நானே உங்க மூணு பேரையும் போட்டுத் தள்ளிடுவேன். வேஸ்ட் ஃபெல்லோஸ்!’ மனதிற்குள் மூவரையும் வறுத்தெடுத்தான் விஷ்ணு.

“நீ என்னமா படிச்சிருக்க?” அரவிந்த் நதியாவைப் பார்த்து நெற்றியை நீவியபடி விசாரிக்க, “பி.எஸ்சி சைக்காலஜி படிச்சிருக்கேன் சார்” அமைதியாகப் பதிலளித்தாள் நதியா.

“ஓ… இந்த மைண்ட் ரீடிங் பண்ணுவாங்களாமே, டூ யூ நோ தட்?” சத்யன் ஆர்வமாய்க் கேட்க, அவள் “தெரியும் சார்…” என்றதும், சட்டென அவளைத் திரும்பிப் பார்த்தான் விஷ்ணு.

“நாங்க மனசுல என்ன நினைச்சாலும் கண்டுபிடிச்சுடுவியா?” அரவிந்தனும் அவர்கள் பேச்சில் இடைநுழைய, “சென்ட் பர்சன்ட் சொல்லிட முடியாது. ஆனா முடிஞ்ச அளவு கண்டுபிடிச்சுடுவேன்” நதியா சிறு புன்னகையுடன் கூறினாள்.

“அய்யோ! அப்போ காலைல இருந்து நான் மனசுல நினைச்ச எல்லாத்தையும் கண்டுபிடிச்சிருக்குமோ இந்த பொண்ணு?’ விஷ்ணு தனக்குள் பேசிக்கொண்டிருக்க, அவனைப் பார்த்துச் சுட்டித்தனமாக முறுவலித்தவள், ‘ஆமாம்’ என்பதுபோல் கண்களைச் சிமிட்டிட, அதிர்ச்சியில் நெஞ்சைப் பிடித்துக்கொண்டான்.

“சரி, இப்போ நான் என்ன நினைச்சேன் சொல்லு?” என சத்யா கேட்டதும், மற்றவர்கள் அவள் என்ன சொல்வாள் என்று ஆவலாய்ப் பார்த்திருக்க, “நம்ம சொல்றதைக் கேட்காம அவர் கூட சேர்ந்து இன்டர்வியூ பண்ணிருக்கான் இந்த விச்சு. இவனை வேலையை விட்டுத் துரத்தினால்தான் மிதுன் சார் சரியாவார்… அப்படின்னு நினைச்சீங்க” எனச் சீரியஸான முகத்துடன் நதியா முடிக்க, அரவிந்தும் சத்யனும் வெடிச்சிரிப்பு சிரித்தனர்.

விஷ்ணு இவர்களை அதிர்ச்சியாய்ப் பார்த்திருக்க, “மித்து… ஷீ இஸ் சம்திங் டிஃபரண்ட். சோ மிச்சீவியஸ். நம்ம பேசினதை வச்சுச் சும்மா அசம்ப்ஷன்ல சொல்லுது. நான் அப்படி நினைக்கலை” சத்யன் தன் மனதில் நினைத்ததை மறைத்துப் பொய்யாய்ச் சமாளிக்க,

‘சும்மாவே இவங்க சேர்ந்தா என்னை ராக்கிங் பண்ணுவாங்க. இதுல புதுசா ஒரு வானரம் இவங்க குரூப்ல சேர்ந்திடுச்சா?’ என்று நினைத்த விஷ்ணு, “அய்யோ…” என்று சத்தமாகக் கத்தினான். ‘இந்தப் பொண்ணு கண்டுபிடிச்சிருக்குமோ?’ என மெதுவாய் அவள் பக்கம் திரும்பிட, அவன் மனதைப் படித்தவள் கோபமாய் அவனை முறைத்தாள். 

❤️‍🔥 மோகம் தீர்ப்பாள் ❤️‍🔥 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page