‘அம்மா தாயே… உனக்குக் கோயில் கட்டி கும்பிடுறேன். என்னை நீ வேணும்னா நாலு அடி அடிச்சுக்கோ, ஆனா அவங்ககிட்ட போட்டுக் குடுத்திடாத. அப்படியே என்னைக் கொன்னு புதைச்சிடுவாங்க’ என்று விஷ்ணு கண்களால் கெஞ்சி மனதிற்குள் மன்றாட, ‘போனாப் போகுது… பிழைச்சுப் போ’ என்பதுபோல் நதியா அவனைப் பார்த்ததும், நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.
“சரி, இப்போ எங்க மித்து என்ன நினைக்கிறான்னு சொல்லு?” என்று சத்யா மேலும் அவளைத் தூண்டிட, சிறிது நேரம் யோசித்தவள், “இந்த பொண்ணை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறோமே, அம்மா என்ன சொல்வாங்களோன்னு யோசிக்கிறார்” என்றாள்.
செல்போனில் மூழ்கியிருந்த மிதுன், சட்டெனத் தலைநிமிர்ந்து நேருக்கு நேராக அவள் கண்களைச் சந்திக்க, “மித்து… அப்படித்தான் நினைச்சியா? சொல்லுடா” என்று நண்பர்கள் வினவ, அவன் மௌனமாக அவளையே அழுத்தமாகப் பார்த்திருந்தான்.
‘ஐயையோ! தேவையில்லாம வாயைக் குடுத்துட்டோமோ? நம்மள வேணாம்னு சொல்லிடுவாரோ? நானே சும்மா ஏதோ ஒரு ஃபுளோல அடிச்சுவிட்டேன்’ – இப்போது மனதிற்குள் புலம்புவது அவள் முறையாயிற்று. “மித்து… அம்மாவை எப்படிச் சமாளிக்கப் போற? வீட்ல என்ன சொல்லப் போற?” கேலிப் பேச்சுகளை ஒதுக்கிவிட்டு நண்பர்கள் சீரியஸாகக் கேட்க,
“தெரியலடா, சமாளிக்கணும்… சரி, நாங்க கிளம்புறோம்” என்று நண்பர்களிடம் விடைபெற்ற மிதுன், “விச்சு, எல்லாம் ரெடியா? வீட்டுக்குப் போகலாமா?” என நடந்துகொண்டே கேட்க, விஷ்ணுவும் நதியாவும் அவனைப் பின்தொடர்ந்தனர். மிதுனின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் இருவரும் அவனுக்குப் பின்னே ஓடினர்.
மூவரும் மிதுனின் ரோல்ஸ் ராய்ஸ் காரில் ஏறியதும், ஓட்டுநர் காரை இயக்கினார். விஷ்ணு டிரைவருக்கு அருகில் அமர்ந்திருக்க, நதியா மிதுனுக்குப் பக்கத்தில் ஒருவித தயக்கத்தோடு அமர்ந்திருந்தாள்.
“ரவி… அந்த ஜூவல்லரி ஷாப் போங்க” என்று ஓட்டுநரிடம் கட்டளையிட்ட மிதுன், “விச்சு… 10 பவுன்ல லேட்டஸ்ட் மாடல் தாலிச் செயின் ஒண்ணு வாங்கிட்டு வா” எனச் செல்போனில் பார்வையைப் பதித்தவாறே கூறினான்.
‘பரவாயில்ல… அவருக்கும் கொஞ்சம் மனசாட்சி இருக்கு. கல்யாணம்தான் பண்ணிக்கப் போறார் போல’ மனதிற்குள் நினைத்த விஷ்ணு தாலிச் செயினை வாங்கி வந்து மிதுனிடம் தந்திட, அதை வாங்கியவன் அப்படியே நதியாவிடம் கொடுத்தான்.
தாலிச் செயினை கைகளில் வாங்கியவள், முகத்தில் குழப்ப ரேகைகளோடு அவனை ஏறிட்டாள். “இதைப்போட்டுக்கோ… யார் கேட்டாலும் நமக்குக் கல்யாணம் நடந்துடுச்சுன்னு சொல்லிடு” மிதுன் செல்போனிலிருந்து பார்வையை அகற்றாமலே அவளிடம் பேசினான்.
‘அடப்பாவி… அதானே! நீங்க திருந்திட்டாலும்…’ என்று நினைத்தவாறு விஷ்ணு பாவமாய் நதியாவைப் பார்க்க, மனவேதனை தாளாமல் அடக்கிக் கொண்டிருந்த கண்ணீர் அவளையும் மீறிச் சொட்டுச் சொட்டாக அவள் கண்களை நனைத்திட, அந்தச் செயினைத் தன் கழுத்தில் அணிந்துகொண்டாள்.
“இந்த விஷயம் உங்க மூணு பேரையும் தாண்டி வெளில போகக்கூடாது” என்று மிதுன் கணீர் குரலில் கர்ஜிக்க… மூவரின் தலைகளும் தன்னிச்சையாக மேலிருந்து கீழாக ஆடின. அதன் பிறகு கார் வீட்டிற்குச் செல்லும் வரை அங்கு அமைதியே நிலவியது.
சக்கரவர்த்தி இல்லம்… அது வீடல்ல, பங்களாவும் அல்ல… ஒரு குட்டி அரண்மனை!
கார் அந்தப் பெரிய காம்பவுண்ட் கேட்டைத் தாண்டி உள்ளே நுழைந்து, முகப்பில் நின்றதும் மிதுன் இறங்கி விடுவிடுவென உள்ளே சென்றான். விஷ்ணுவும் நதியாவும் லக்கேஜ் டிராலியை எடுத்துக்கொண்டு அவன் பின்னே தொடர்ந்தனர்.
ஹாலில் அமர்ந்திருந்த மிதுனின் தங்கை வைஷாலி, அவனைக் கண்டதும், ” அண்ணா…” என்று ஓடிவந்து அவனை அணைத்துக்கொள்ள, “காலேஜ் முடிஞ்சு வந்துட்டியாடா? இன்னைக்கு எக்ஸாம் எப்படிப் பண்ணியிருக்க? சொல்லு…” முகம் மலரக் கேட்டவாறு அவள் தலை வருடினான்.
இவர்களை நெகிழ்ச்சியாகப் பார்த்திருந்த குடும்பத்தினர், மிதுனின் அருகில் நின்றிருந்தவளைக் கண்டு திகைக்க… “இது நதியா. நான் இவளைத்தான் கல்யாணம் பண்ணியிருக்கேன்” என்று அவன் ஆரவாரமின்றி, அமைதியாகக் கூறினான்.
மிதுனின் பாட்டி ருக்மணியம்மாள்(சக்கரவர்த்தியின் அன்னை), தாய் ராதா, பெரிய தம்பி தேவ் சக்கரவர்த்தி, அவனுடைய மனைவி ரூபிணி, சின்ன தம்பி சூர்யா சக்கரவர்த்தி, தங்கை வைஷாலி, ரூபிணியின் அப்பா(ராதாவின் தம்பி), அம்மா, அவளின் தங்கை அதிதி என மொத்தக் குடும்பமுமே அதிர்ச்சியில் உறைந்து அவர்களைப் பார்த்தது.
“மித்து கண்ணா… என்னடா இப்படி ஒரு குண்டை தலையில தூக்கிப் போடுற?” முகவாட்டத்துடன் நெஞ்சில் கை வைத்தவாறு ருக்மணி கேட்க, அவருக்கு அருகில் சென்றமர்ந்தவன், “பாட்டிமா… அவளோட அம்மாவுக்கு உடம்பு சரியில்ல, ஹாஸ்பிட்டல்ல சீரியஸ் கண்டிஷன்ல இருக்காங்க. வேற வழியில்லாம அவங்க முன்னாடி நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க வேண்டிய சூழ்நிலை” பொய்யோடு கொஞ்சம் உண்மையும் கலந்து மிதுன் உரைத்தான்.
பேரன் எது செய்தாலும் சரியாகத்தான் இருக்கும் என்று உணர்ந்திருந்த பாட்டி, “லவ்வா இருந்திருந்தா முன்னாடியே சொல்லியிருக்கலாம்ல கண்ணா… இப்போதானே தேவ் – ரூபிணி கல்யாணம் நடந்தது. அப்போவே உன் கல்யாணத்தையும் சேர்த்தே நடத்தியிருக்கலாமே” பேரனின் திருமணத்தைக் கண்குளிரக் காண முடியவில்லையே என்ற வருத்தத்தில் ஆதங்கப்பட்டார்.
“அவளோட அப்பா ரீசன்டாதான் இறந்து போயிட்டாரு, அம்மாவுக்கும் உடம்பு சரியில்ல. அதான் பாட்டிமா… சாரி” என அவளைப் பற்றித் தனக்கே தெரியாத பொய்க் கதைகளைச் சொல்லி அவரைச் சமாளித்தான் மிதுன்.
“இங்க வாம்மா…” ருக்மணி நதியாவை அழைத்திட, அவருக்கு அருகில் சென்றவளை இழுத்து அமர வைத்தவர், “உன்னோட பேர் என்னம்மா?” வாஞ்சையாய் அவள் தலை வருடியபடி விசாரித்தார்.
இவ்வளவு நேரமும் பயந்த விழிகளுடன் அவர்களைப் பார்த்திருந்தவள், அவரது தலை வருடலில் ஆசுவாசமாகி, “நதியா…” என மெதுவாக மொழிந்தாள். “ஹ்ம்ம்… நீ ஒண்ணும் கவலைப்படாதம்மா, உன்னோட அம்மா சரியாகிடுவாங்க. இப்போ பூஜையறைக்குப் போய் விளக்கேத்திட்டு மிதுன் ரூமுக்குப்போ” என்று ருக்மணி சொல்ல, சரியெனத் தலையசைத்தாள்.
இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த ராதா, “அத்தை, நீங்க என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? எவளோ ஒருத்தியை அழைச்சிட்டு வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு உங்க பேரன் சொன்னா, நாம அவளை ஏத்துக்கணுமா?” மகன் இப்படிச் செய்துவிட்டானே என்ற வேதனையில் தன் ஆத்திரத்தை வார்த்தைகளாகக் கொட்டித்தீர்த்தார்.
“அம்மா… உங்களுக்குத் தெரியாம கல்யாணம் பண்ணிக்கிட்டேன், நடந்தது நடந்துபோச்சு. இனி நடக்கப்போறதைப் பத்தி யோசிக்கலாம்” என மிதுன் இந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றான்.
“உன் அப்பா போன பிறகு இங்க எல்லாமே உன்னோட ராஜ்யம்தானே? அம்மான்னு ஒருத்தி இருக்கிறதை நீ மதிக்கிறதே இல்ல. நான் ரூபிணியைக் கல்யாணம் பண்ணிக்கச் சொன்னப்போ மறுத்துட்டு, இப்போ இவளைக் கூட்டிட்டு வந்து நிக்கிற. நீயே முடிவு பண்ணிட்டா அப்புறம் இங்க யாரு மாத்த முடியும்? என்னமோ பண்ணு போ…” என்றவாறு அவர் கோபமாக எழுந்து செல்ல, ‘மிதுன் செய்ததில் தங்களுக்கும் விருப்பமில்லை’ என்பதைப் போல மற்றவர்களும் அங்கிருந்து நகர்ந்தனர்.
அவன் இதையெல்லாம் எதிர்பார்த்ததுதான். நதியா அவர்களை மிரட்சியுடன் பார்த்திருக்க, “நீங்க ரெண்டு பேரும் கவலைப்படாதீங்க. போகப் போகக் கோபம் குறைஞ்சு எல்லாரும் சரியாகிடுவாங்க” என்று ருக்மணி அவளுக்கு ஆறுதலாகப் பேசினார்.
“பூஜையறைக்குப் போம்மா…” என்று அவர் சொல்ல, மிதுன் குறுக்கிட்டு, “வேணாம் பாட்டிமா, இப்போதான் ஹோட்டல்ல நான்-வெஜ் சாப்பிட்டு வந்தோம். அவ குளிச்சுட்டு அப்புறமா மத்ததெல்லாம் பண்ணட்டும்” என்றான். “சரி, உன் ரூமுக்கு அழைச்சிட்டுப் போ” என்றவாறு ருக்மணி எழுந்து தன் அறைக்குச் சென்றார்.
நடந்த மொத்தக் கூத்துகளையும் கவனித்தவாறு அமைதியாக நின்றிருந்த விஷ்ணுவிடம், “வெயிட் பண்ணு வரேன்” என்றுவிட்டு மிதுன் நகர்ந்திட, டிராலியை இழுத்துக்கொண்டே அவன் பின்னே ஓடினாள் நதியா.
அந்தப் பெரிய ஹாலின் மத்தியில் எதிரெதிர் திசைகளில் பிரிந்து செல்லும் நீண்ட படிக்கட்டுகள் இருக்க, மிதுன் அதில் ஏறித் தன்னுடைய அறைக்கு விரைந்தான். அவளோ அந்தச் சூட்கேஸை சிரமப்பட்டுத் தூக்கியபடி அவனைப் பின்தொடர, அவன் ஒருமுறை கூடத் திரும்பிப் பாராமல் தன் பாட்டிற்குப் போய்க்கொண்டிருந்தான்.
ஒருவழியாக அவள் மேலே ஏறிச் சென்றபோது அங்கே அவனைக் காணவில்லை. வரிசையாகப் பல அறைகள் இருக்க, அவன் எந்த அறைக்குள் நுழைந்தான் என்று தெரியாமல் திருதிருவென விழித்தபடி நின்றிருந்தாள். அப்போது அந்தத் தளத்தின் மத்தியில் இருந்த பெரிய அறையிலிருந்து எட்டிப்பார்த்தவன், “நதியா.. கம் திஸ் சைட்” என அழைக்க, அவள் தயங்கியபடியே உள்ளே நுழைந்தாள்.
அது ஒரு பெரிய விசாலமான அறை. சொல்லப்போனால் சிறிய அளவிலான வீடு என்றே சொல்லலாம். உள்ளே சிறிய அளவிலான சமையலறை, குளியலறை, உடை மாற்றும் அறை, கணினியுடன் கூடிய படிப்பு அறை எனச் சகல வசதிகளும் இருந்தன. திருமணத்திற்குப் பிறகும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அவன் அதை வடிவமைத்திருந்தான். அதுமட்டுமின்றி பணம், சொத்துப் பத்திரங்கள் மற்றும் முக்கிய ஆவணங்களைப் பாதுகாப்பாக வைக்க யாருக்கும் தெரியாத ஓர் இரகசிய அறை அதனுள் அமைக்கப்பட்டிருந்தது.
அறையின் சுவர்களில் ஓவியங்களும், அலமாரிகளில் கலைநயமிக்கச் சிலைகளும் அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருக்க, நதியா நின்ற இடத்திலிருந்தே அந்த அறையை வியப்புடன் சுற்றிச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“நதியா…” என மிதுன் அழைக்க, வியப்பிலிருந்து மீண்டு அவனைத் திரும்பிப் பார்த்தவள், “சொல்லுங்க சார்” என்றிட, “இந்த ரூம்ல இருக்கிறது பாஸ்வேர்ட் லாக். இதான் பாஸ்வேர்ட்” என்று ஒரு நான்கு இலக்க எண்ணைக் கூறியவன்,
“இந்த வீட்ல இருக்கிற எல்லாருக்கும் பாஸ்வேர்ட் தெரியும். அவங்க தவிர இங்க வேலை பார்க்குறவங்க வந்தா வெளியில இருக்கிற பெல் அடிப்பாங்க. பெல் சத்தம் கேட்டா, அங்க ஸ்கிரீன்ல யார் வந்திருக்காங்கன்னு பார்த்துட்டுப் பாஸ்வேர்ட் போட்டு ஓபன் பண்ணு. மேக்ஸிமம் யாரும் இந்த ரூமுக்கு வரமாட்டாங்க. உனக்கு என்ன வேணும்னாலும் இண்டர்காம்ல கால் பண்ணிச் சொல்லு, கொண்டு வருவாங்க.
“விச்சு நம்பர் உன்கிட்ட இருக்குல்ல? வேற ஏதாவது வேணும்னா அவனுக்குப் போன் பண்ணு. யார் என்ன கேட்டாலும் நான் சொன்னதையே சொல்லி மெயின்டெயின் பண்ணிக்கோ. மேக்ஸிமம் யார்கூடவும் பேசாத, அவாய்ட் பண்ணிக்கோ, நான் சமாளிச்சுக்கிறேன். ரூம்லேயே இரு, வெளில எங்கேயும் போகாத. நவ் யூ டேக் சம் ரெஸ்ட், வில் கேட்ச் யூ லேட்டர்” என்று மூச்சுவிடாமல் பேசிவிட்டுச் சென்றவனைப் பார்த்து, மூச்சுவாங்கி நின்றிருந்தாள் நதியா.
அங்கிருந்த மெத்தையில் அப்படியே சரிந்தவள், “நான் எங்கிருந்தேன்… இப்போ இங்கிருக்கேன். என் வாழ்க்கையில இப்படிலாம் நடக்கும்னு நான் கனவுல கூட நினைக்கலையே…” எனப் புலம்பியபடியே உறங்கினாள்.
இரவு மிதுன் வந்து எழுப்பும் வரை நதியா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அவளிடம் ஒரு பழக்கம் உண்டு. தூங்கிக்கொண்டிருந்தால் யார் வந்து எழுப்பினாலும் உடனே விழித்திட மாட்டாள். எவ்வளவு முயன்று எழுப்பினாலும் சிறிது நேரம் கழித்துத்தான் கண்விழிப்பாள்.
மிதுன் அரை மணி நேரமாக அவளை எழுப்பிக் கொண்டிருக்கிறான். தொடக்கத்தில் தொண்டையைச் செருமினான். பிறகு, “நதியா…” என்று பலமுறை அழைத்துப் பார்த்தான். அதற்குள் அவனே குளித்துவிட்டு, இரவு உணவை முடித்துவிட்டு வந்தபோதும் அவள் தூக்கத்திலேயே இருக்க, அருகில் சென்று தோளில் தட்டினான். தோளைப் பிடித்து உலுக்கியும் பார்த்தான். அப்போதும் நதியா அசையவே இல்லை. (என்னடா இது… மிதுன் சக்கரவர்த்திக்கே வந்த சோதனை!)
வெறுத்துப் போனவன், அவள் கன்னத்தில் தட்டிச் சற்றுச் சத்தமாக, “நதியா… வேக்கப்” என்றழைக்க, அரண்டு போய்க் கண்விழித்தாள். கால்களை நீட்டித் தேகத்தை முறுக்கிக்கொண்டே எழுந்தவள், அவனைப் பார்த்து, “போயிட்டு உடனே வந்துட்டீங்க சார்?” என்க, மிதுன் அங்கிருந்த டிஜிட்டல் கடிகாரத்தைத் தன் கண்களாலேயே காட்டினான். அவள் திரும்பிப் பார்த்தபோது மணி பதினொன்றாகியிருந்தது.
“அசந்து தூங்கிட்டேன் போல…” அவள் கொட்டாவி விட்டவாறு சொல்ல, “போய்க் குளிச்சுட்டு வா” என்றான்.
“இந்நேரத்துக்கு எதுக்குக் குளிக்கணும்?” என்றவள் குழப்பமாய் அவனைப் பார்த்திட, “நீ எதுக்கு இங்க வந்திருக்கன்னு உனக்கு ஞாபகம் இருக்கா? இல்ல… அதையும் நானே ஞாபகப்படுத்தணுமா?” மிதுன் அவளை அழுத்தமாய்ப் பார்த்துக் கேட்க, நதியாவின் முகம் சட்டென வெளிறிப்போனது.
❤️🔥மோகம் தீர்ப்பாள்❤️🔥
