ஆதுரி, துருபதன் இருவருமே கல்லூரி பருவத்தில் இருந்த உயிர் நண்பர்கள். ஆதுரி சிறு வயதில் இருந்தே சென்னையில் வளர்ந்தவள் அவளின் பூர்வீகமே சென்னை தான். ஆனால் துருபதனுக்கு அப்படியில்லை. மதுரை அருகே இருக்கும் ஒரு சிறிய கிராமம். குடும்பத்தார் அனைவரும் அங்கு இருக்க படிப்பதற்க்காக மட்டுமே இங்கு வந்தான்.
ஒரே வயதினைக் கொண்ட இருவருமே ஒரே பிரிவினை எடுத்து கல்லூரியில் படிக்க நட்பு வளர்ந்தது. துருபதன் ஹாஸ்டலில் தங்கிக் கொண்டான். முதல் சில மாதங்கள் யாரென்றே தெரியாது தான் அவர்களின் வாழ்க்கை கடந்தது.
கிளாஸ் லீடர் பொறுப்பில் துருபதன் இருக்கவே, சீனியரால் காதல் விவகாரத்தில் ஆதுரிக்கு பிரச்சனை வந்தது.
தான் யாரையும் காதலிப்பதாக இல்லை என்று ஆதுரி மறுத்து விட, விடாது அவளை வம்பிழுத்து கிண்டலடித்து தகராறு செய்தனர். அப்படி ஒரு நாள் ரேகிங் செய்யும் போது தான் துருபதன் கண்டு அவர்களிடம் வந்தான்.
தன் வகுப்பு மாணவன் கிளாஸ் லீடர் என்று ஆதுரிக்கு தெரியும். ஆனால் பேசியதில்லை.
“என்ன நடக்குது இங்கே ?” முன்னே வந்து சீனியரிடம் கேட்க,
“என்னடா சீனியர் கிட்டவே கெத்தா பேசுறா ? சட்டையை கழட்டுடா “ என்க,
“முடியாது. எதுக்கு இந்த பொண்ணை ரேகிங் பண்ணுறீங்க ? டிபார்ட்மெண்ட்ல கம்பிளைன்ட் பண்ண வேண்டியதா இருக்கும் “
“ஒ நீ அவ்வளோ பெரியா ஆளா. எங்கே பண்ணு பார்ப்போம். எலிக்குட்டி மாதிரி இருந்துக்கிட்டு எங்களையே எதிர்க்குறியா ?” கேட்டவாறு அவனின் சட்டையைப் பிடிக்க,
“சட்டையை விடுங்க சீனியர் “
“முடியாது. என்ன பண்ணுவே ? ஏதோ பெரிய ஹீரோ மாதிரி வர்றே. ஆமா உனக்கும் இந்த பொண்ணுக்கும் எந்த சம்மந்தம் ? என்னம்மா அவனை காதலிக்க சொன்னா முடியாதுன்னு சொல்லுற. ஒரு வேலை இவனை காதலிக்கிறையா ?” என்று துருபதனைக் காட்டி ஆதுரியிடம் கேட்க, அவளோ இல்லையென தலையசைத்தாள்.
“அப்போ என்ன மயிருக்கு நீ வந்திருக்கே ?” என்ற நொடி சீனியர் என்றும் பாராது சட்டையின் மீது கை வைத்த ஆத்திரத்தில் தாக்கினான்.
அவனின் ஒற்றை அடி தாங்க முடியாது அவனோ கீழே விழுந்து விட, மற்றவர்கள் வர அவர்களையும் தாக்கினான்.
துருபதனுக்கு மெல்லிய தேகமாக இருந்தாலும் விடுமுறை நாட்களில் தந்தையோடு செய்த விவசாயத்தின் விளைவும், தாத்தா கற்றுக் கொடுத்த சண்டைப் பயிற்சியும் தான் அவனை இப்போது இவ்வாறுச் செய்ய வைத்தது.
அங்கிருந்த அனைவரும் அவனின் தாக்குதலில் வாய் பிளக்காத குறையாக அதிர்ந்துப் போய் காண, ஸ்டாப் வந்து சத்தமிட்ட பின்னே சண்டை நின்றது.
சீனியரோ ரத்த காயங்களோடு இருக்க, துருபதனோ இன்னும் கூட தன் எனர்ஜி குறையாது நின்றான்.
அலுவலக அறை அழைத்துச் சென்று என்னவென்று துறைத்தலைவர் கேட்டு விசாரிக்க, தன்னை சில நாட்களாகவே சீனியர் துன்புறுத்தியதை கூறினாள் ஆதுரி.
துருபதணும் அவனின் பங்குக்கு கூற, சீனியர் மீது நடவடிக்கை எடுக்கவே, இவர்களை அனுப்பி விட்டனர். வெளியே வந்த நொடியே இவருக்குள்ளும் நட்பு மலர ஆரம்பித்தது.
“தேங்க்ஸ் “
“இட்ஸ் ஓகே. இனிமே ஏதாவது பிரச்சனை அப்படின்னா உன்னால முடியும்ன்னா சமாளி. இல்லையா என் ஹெல்ப் கேளு. நான் யாருன்னு தெரியும்ல “ என்க,
“அதான் இன்னைக்கு பார்த்தேன்னே ? புரூஸ்லீ மாதிரி இருந்துக்கிட்டு அடி ஒன்னு இடி மாதிரி இருந்ததை “ என்று சிரித்துக் கொண்டு கூற, புன்னகையோடு தங்களின் வகுப்பிற்குள் நுழைந்தனர்.
அன்றிலிருந்து அவர்களின் நட்பு வளர்ந்து வருடங்கள் கடந்தும் நீடித்தது. ஒவ்வொரு நாட்களும் ஆதுரி துணையாக நின்றான். அவளுக்கு என்னென்ன தேவையோ அதை அனைத்தையும் கற்றுக் கொள்ள வைத்தான். தினமும் வீட்டில் வந்து தன் நண்பனைப் பற்றி மகள் கூறவே பெற்றவர்களுக்குப் பார்க்க வேண்டுமென்ற ஆசை.
ஒரு நாள் விடுமுறை நேரம் வீட்டுக்கு அழைத்து வர, அப்படியே அவளின் குடும்பத்தாரோடு இணைந்து உறவினை வளர்த்தான். அவனைப் போல் தான் அவளும். கல்லூரிக்கு துருபதன் பெற்றோர் வர நேரிடம் போதெல்லாம் ஆதுரியைப் பார்த்து தான் செல்வார்கள்.
விழா நாட்களில் துருபதன் ஊருக்குச் சென்று வந்தால் போதும் ஆதுரிக்கு என்று தனி பை வந்துச்சேரும். நண்பன் ஊர் உணவு வகைகளுக்கு அடிமையாகிப் போனாள்.
விளையாட்டுப் போட்டிகள், தற்காப்பு கலைகள், தொழில் நுட்பம் கற்றுக் கொள்வது. சம்மர் கிளாஸ் என்று இருவரும் ஒன்றாக தங்களின் நேரத்தை செலுத்தினர்.
ஒரு சிலரின் பார்வைக்கு இவர்கள் காதலர்கள் என்றும். ஒரு சிலருக்கு இவர்கள் இருவரும் உடன் பிறந்தவர்கள் என்றும் தான் தோன்றும். நன்கு தெரிந்தவர்களுக்கு மட்டும் தான் நண்பர்கள் என்பதை அறிவார்கள்.
இப்படியே அவர்களின் கல்லூரி வாழ்க்கை ஐந்து வருடங்கள் முடிவுக்கு வர, ஆதுரியின் தந்தையோ உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஒரு வருடமாவது ஓய்வு வேணுமென்று மருத்துவர் கூறிவிட முழு பொறுப்பும் மூத்தவள் ஆதுரியை வந்துச் சேர்ந்தது.
செய்வதறியாது தவித்து நிற்க, அப்போது தான் கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்த துரு ஒரு வருடம் பார்க்கலாம் என்று நினைத்தான்.
“துரு, எனக்காக ஒரு உதவி பண்ணுறியா ? என் அப்பா நிலைமை என்னென்னு உனக்கு தெரியும். எங்களை நம்பி தான் லட்சக்கணாக்கான மக்கள் இருக்காங்க. எனக்கு இப்போ என்ன பண்ணனும் எப்படி இந்த தொழிலை எடுத்து நடத்த போறேன்னு தெரியல. என் கூட இருக்கையா ?” என்று நண்பனின் கரங்களைப் பிடித்துக் கொண்டு கெஞ்சுதலாய்க் கேட்க,
வேறெங்கோ வேலைப் பார்ப்பதற்கு இவளோடே வேலை செய்யலாம் என நினைத்து தன் நட்பிற்கு துணையாக நின்றான். திருக்குமரனின் வழிநடத்துதலால் இருவருமே ஒன்றாக தொழிலையும் கற்றுக் கொண்டனர். வெளியூர்ச் செல்லும் நாட்களில் துரு உதவியோடுச் சென்று வந்தாள்.
ஒரு வருடம் அப்படியே கடந்து விட, துருவின் தந்தையோ அவரின் பொறுப்புகளை மகனிடம் கொடுக்க நினைத்து வரக் கூறினான்.
ஏனோ ஆதுரியை விட்டுச் செல்ல மனமில்லாது மேலும் ஒரு வருடம் ஒட்டி விட்டான். சின்ன சின்ன சண்டைகள் வந்தாலுமே அடித்த நொடி பேசி விடுவர். திருக்குமரன் இப்போது மறுபடியும் தொழில் சாம்ராஜ்ஜியத்துக்குள் வந்து விட, துரு தான் விலகாது இருந்தான்.
திருக்குமரன், உமா தம்பதியருக்கு இரண்டு மகள்கள். மூத்தவள் ஆதிரி இரு பட்டங்களைப் பெற்று தந்தைக்கு உதவி புரிகிறாள். சிறியவள் ஹரிதா கல்லூரி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறாள்.
இரவு நேரம் போல் அன்றைய வேலை அனைத்தையும் முடித்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள் ஆதுரி. ஹரிதா அவளின் அறையில் இருக்க, பெற்றவர்கள் இருவருமே மகளின் வருகைக்காக காத்திருக்க, இன்முகமாக வரவேற்றனர்.
அயர்வோடு வந்தவளோ அப்படியே சோபாவில் சாய்ந்து அன்னையின் மடியில் தலை சாய்த்துக் கொள்ள, தானாக முன் வந்து மகளின் தலையை வருடி விட்டது அவரின் கரங்கள்.
“என்னம்மா ரொம்ப டயர்டா இருக்கா ?”
“ஆமாப்பா. பிரெஸ்சாகிட்டு வந்தா சரியாகிரும் “
“சரிம்மா. அப்போ சீக்கிரம் போய்ட்டு வா. சாப்பாடு சூடா இருக்கு “ என்கவே, தன்னிடம் ஏதோ பேச நினைக்கிறார்கள் என்பது புரிந்தது.
“நான் போறது இருக்கட்டும். ஏதோ என் கிட்ட சொல்ல வரீங்களே அது என்ன அதை சொல்லுங்க ?” என்றவாறு எழுந்து அமர,
“எப்படிம்மா கண்டு பிடிச்சே ?”
“எல்லாம் துரு சொல்லிக் கொடுத்தது தான். என்ன விசியம் ?”
“இன்னைக்கு உன் ஜாதகத்தை எடுத்துக்கிட்டு ஜோசியரை பார்க்க போனோம். அவர் உனக்கு மூனு மாசத்துல கல்யாணம் பண்ணனும் இல்லை அப்படின்னா எட்டு வருஷம் கழிச்சி தான் பார்க்கணுமாம். “
“ரொம்ப நல்லாதாப் போச்சு. நான் ஜாலியா இருப்பேன் “ என்க, மகளின் தலையிலே கொட்டினார் உமா.
“உனக்கு தங்கச்சி இருக்கா மறந்துராதே “
“அப்போ இப்போ நீங்க என்ன சொல்ல வரீங்க ? நான் இப்பவே கல்யாணம் பண்ணிக்கணுமா “ என்க, அவர்களும் ஆமென்று தலையசைத்தார்.
“மாப்பிள்ளைக்கு எங்க போவீங்க ?” அசட்டு எண்ணத்தில் இருந்தவளோ கேசுவலாகக் கேட்க,
“துருவை தான் பார்க்கலாம்ன்னு நினைக்கிறோம். உனக்கு கல்யாணம் எண்ணம் வந்ததுமே எங்க நினைப்புல முதல்ல வந்ததே அவன் தான். உனக்கு பொருத்தமா நல்ல வாழ்க்கை துணையா இருப்பான். என்ன சொல்லுற ?”
“நாங்க ரெண்டு பிரெண்ட்ஸ்ப்பா “
“அதுனால என்ன ? நல்லது தானே. தெரியாத ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழுறதுக்கு பதில் நல்லா தெரிஞ்ச ஒருத்தன்னா உனக்கு நல்லது தானேம்மா “ என்க, சில நொடி யோசித்தாள்.
தனக்கு துணை என்பதை விட தன் குடும்பத்துக்கே துணையாக வருங்காலத்தில் துரு நிச்சியமாக இருப்பான் என்பதால் சரியென்றாள்.
“சரிப்பா. ஆனா துருக்கு இதுல விருப்பம் இருக்குமா தெரியல. நானே பேசிப் பார்க்குறேன் “ என்கவே, பெற்றவர்களுக்கு இவள் சம்மதித்தாலே அதுவே நிம்மதி என்று நினைத்தனர்.
பின் மாடியேறி தன் அறை நோக்கி சிட்டாக பறந்துச் சென்றாள். எதையுமே மனதில் போட்டு உடம்பை வருத்திக் கொள்ளக் கூடாது என்று தந்தைக்கு நடந்ததை வைத்து உணர்ந்துக் கொண்டவளோ எளிதாகவே இதனை எடுத்துக் கொண்டாள்.
டி.ஆர் குரூப் ஆப் கம்பெனி அலுவலக அறை அதிரடியாக இருந்தது. காரணம் தன் முன்னிருந்த இருவரையும் தனது மொழியால் அர்ச்சனை செய்துக் கொண்டிருந்தான் தேவகாந்தன்.
“எல்லாம் சரியா இருந்தும் எப்படி இப்படி நடந்தது சொல்லுங்க ? கோடி ரூபாய் லாபம் தர்ற பிராஜெட் எப்படி கைமீறிப் போச்சு. இது எனக்கு கிடைக்கலைன்னு தெரிஞ்சா மத்தவங்க என்னை பார்த்து என்ன நினைப்பாங்க “ என்று கத்தவே,
“சாரி சார். என்னென்னு நாங்க பார்க்குறோம் “
“இதுக்கு மேல என்னத்த நீங்க புடுங்கப் போறீங்க ? இதுக்கெல்லாம் காரணம் நிச்சியம் எனக்கு வர வேண்டியதை தட்டி பறிச்ச அந்த எஸ்.ஜே கம்பெனி தானே ? அவனை நான் சும்மாவே விட மாட்டேன் “ என சீறியவனோ தன் கைமுஷ்டியை டேபிளில் மீது குத்த, அந்த கண்ணாடி டேபிளிலோ விரிசலடையச் செய்தது.
பட்டென முன்னிருந்தவர்கள் பயந்து ஒரு அடி பின்னே நகர, தன் கைபேசியை எடுத்து தனக்கு கீழ் வேலைப் பார்க்கும் அடியாளை அழைத்தான்.
“வழக்கம் போல நான் உனக்கு போட்டோ சென்ட் பண்ணுறேன். அவரை எப்படி தீர்த்து கட்டுவீங்களோ தெரியாது. முடிச்சிருங்க “ என்க, முன்னே கேட்டுக் கொண்டிருந்த இருவருமே அதிர்ச்சியோடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
கைபேசியை அணைத்தவனோ, “லுக், உங்களை நம்பி கொடுத்த பொறுப்பை நீங்க உருப்படியா பண்ணலை. சோ இப்பவே நீங்க பேப்பர் போடுங்க “ என்று விரல் நீட்டிச் செல்லுமாறு கூறினான்.
“சார் இந்த ஒரு தடவை எங்களுக்கு எக்ஸ்கியூஸ் கொடுங்க “ என்க,
“செட்டில்மெண்ட் வேணுமா இல்லை ஒரேடியா செட்டில் பண்ணவா “ விழிகளில் அனல் தெறிக்க கர்ஜிக்கவே, அர்த்தம் புரிந்த இருவருமே அந்த நொடியோ அங்கிருந்து ஓடோடி விட்டனர்.
தேவகாந்தனைப் பொறுத்தவரை இது சிறிய விசியமாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாதவன். தன்னிடம் வந்துச் சேர வேண்டுமென நினைத்து விட்டால் அதற்காக எத்தனை உயிரையும் எடுக்க துணிய தயங்க மாட்டான்.
