அத்தியாயம் 20

அத்தியாயம் 20

     
சிவகாமியும் கைலாசமும் இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் தனி ஆளாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் இப்பொழுது சிவகாமி கர்ப்பமாய் இருக்கிறாள். இந்தக் குடும்பத்தின் மூத்த வாரிசு அவளின் வயிற்றில் கருவாய் உருவாகி உள்ளது. இந்த நிலையில் அவர்களை வெளியே அனுப்பியது பெண்ணவளுக்கும் சரி ஒரு ஆணாய் ஆடவனுக்கும் மனது மிகவும் வலித்தது.
ராஜவேலுவுடன் சேர்த்து கற்பகநாயகியும் எதுவும் சொல்லவில்லை எனும்போது அவரும் ஒரு தாய் தானே என்ற எண்ணம் எழாமல் இல்லை கணவன் மனைவி இருவருக்கும்.

யாரும் ராஜவேலுவை தடுக்கவும் இல்லை, அவர்களைப் போகாதே என்று சொல்லவும் இல்லை. நொடியில் நடந்துவிட்ட நிகழ்வில் கைலாசம் தன்னுணர்வு வருவதற்கே சற்று நேரம் பிடித்தது.

மெல்ல தன் மனைவியைத் திரும்பிப் பார்த்தவனின் கண்களில் யாசகம் இருந்தது.
அதைக் கண்டவள் பதற்றமாய் அவனிடம் திரும்பியவள் அவனின் கரத்தை அழுந்தப் பற்றிக் கொண்டாள். உனக்கு எப்போதும் நான் இருப்பேன் என்று அந்த அழுத்தமே சொன்னது.

மனைவியை மறுகையால் அணைத்தவன் அந்த வீட்டை ஒருமுறை திரும்பிப் பார்த்து விட்டு மனைவியுடன் அங்கிருந்து வெளியேறினான்.

அப்போது அவன் மனதில் உதித்தது ஒரே ஒரு விடயம் தான். இனி எக்காலத்திலும் இந்த வீட்டில் தன்னவர்களுடன் உள்ளே நுழையக் கூடாது என்பதுதான்.

இவர்கள் வெளியேறியதைக் கண்ட மாணிக்கத்தின் விழிகள் விஷமமாய் புன்னகைத்தது.

‘ஒரு வழியா ரெண்டு பால் அவுட்…’ என்று தனக்குள்ளேயே சொல்லியவன் அங்கிருந்து சென்றான்.

தன் தாய் தந்தை கோபமாய் அமர்ந்திருந்த இடத்தை நோக்கி வந்தவன் கைகளைக் கட்டியபடி,

“அப்பா, அவங்க ரெண்டு பேரும் போயிட்டாங்க…” என்றான் வருத்தப்படுவது போல்.

“போகட்டும்டா… இந்தக் குடும்பத்தை விட்டுப் போனா தான் அவனுக்கு எப்படி பொழைக்கணும்னு தெரியும். எப்படி பொழைச்சு வர்றான்னு பார்க்கிறேன்.” என்றார் அப்போதும் ஆத்திரமாய்.

“ஆனால் அப்பா, அண்ணன் இப்படி பண்ணுவார் என்று நான் கொஞ்சம்கூட நினைக்கல…” என்றான் சோகமாய்.

“நானும் கொஞ்சமும் நினைக்கல சின்னவனே… எத்தனை முறை அவன்கிட்ட சொன்னே இந்தக் கல்யாணம் என்னோட கௌரவம் சம்பந்தப்பட்டதுன்னு… ஆனால் கொஞ்சம்கூட யோசிக்கல இல்ல! அவன் தங்கச்சி விருப்பப்பட்டாலும் அந்தக் கேடுகெட்டவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டான்ல இந்தக் குடும்பத்தோட மானம் மரியாதை கௌரவம் அந்தஸ்து இதெல்லாம் கொஞ்சம்கூட அவனுக்குத் தெரியலல்ல இனி அதை உணருவான். அவன் இந்த வீட்டுப் பக்கம் இனிமே வரக் கூடாது. இந்த வீட்டு வாசலையே மிதிக்கக் கூடாது.” என்றார் கோபமாய்.

“ஆமாங்க, நானும் புள்ளபூச்சி மாதிரி இருக்குற இந்தச் சிவகாமியை சுலபமா நினைச்சுட்டேன். நம்ம குடும்பத்துக்கு இப்படியொரு பிள்ளைங்களா? அந்த ரெண்டு பிள்ளைங்க செத்துட்டாங்க…” என்றார் கற்பகநாயகி கோபமாய்.

மேலும் இருவரின் கோபத்தையும் சற்று தூண்டிவிட்டவன் அங்கிருந்து விலகிச் சென்றான்.

“இனி இந்தக் குடும்பத்துக்கு நான் மட்டும்தான் வாரிசு. இந்தச் சொத்து அத்தனையும் எனக்கு மட்டும்தான். பரிமளம் தானே இருக்கா பாத்துக்கலாம். அவளுக்குச் செய்ய வேண்டியதை செஞ்சுட்டா அவ சொத்துக்குப் பங்கு வர மாட்டா. அதனால இனி இது என்னோட சாம்ராஜ்யம். நானே ராஜா நானே மந்திரி…” என்றபடி தன் அறையில் உள்ள கண்ணாடியைப் பார்த்துத் தனக்குத் தானே பேசிக் கொண்டான் மாணிக்கம்.

இத்தனையும் செய்தது மாணிக்கம்தான். வசுந்தரா தன் மனதுக்குப் பிடித்தவனை கல்யாணம் செய்து கொண்டிருப்பது அவளின் விருப்பமானால் கைலாசத்தை இந்தக் குடும்பத்தோடு விட்டுப் பிரித்தது இவனின் சகுனி வேலை தான்.

வசுந்தராவிற்கும் கைலாசத்திற்கும் இடையே உள்ள பாசத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டான் மாணிக்கம்.

திருமண மண்டபத்தில் வந்து தனக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை என்பதை வசுந்தரா சொல்லியது பெரிய அவமானமாய் போனது.

அது மட்டும் அமைதியாய் இருந்தவள் போலீசை இதற்குத் துணையாய் அழைத்தது தனது கௌரவத்திற்கு வந்த இழுக்காய் நினைத்தார்.

இவற்றையெல்லாம் பயன்படுத்தி இதற்குக் காரணம் கைலாசம் என்று பெற்றவர்களிடம் நாடகத்தை அரங்கேற்றியது மாணிக்கத்தின் கைவண்ணமே!

இவர்கள் இப்படி புலம்பியபடி இருக்க, இங்கே வித்யாதரனின் வீட்டிலோ பொன்னப்பன் கோபமாய் இருந்தார்.

*

“டேய் வித்யா! இது என்னடா அநியாயமா இருக்கு? நமக்கு வாழ்க்கை குடுத்த இடத்திலேயே கை வைக்கிறது மகா பாவம் இல்லையா? ஏண்டா! உன் புத்தி இப்படி போச்சு… நல்லாத்தானடா இருந்த? கடவுளே! நான் இந்தப் பாவத்தை எங்க போய்த் தொலைப்பேன்?” என்று புலம்பியபடி மகனைப் பார்த்தார்.

“சித்தப்பா, அது வந்து…” என்று அவன் சொல்வதற்குள்ளாகவே மற்றொரு அறையிலிருந்து வெளிவந்த வசுந்தராவும்,

“மாமா, இப்ப அவரு என்ன தப்பு பண்ணாருன்னு சொல்லிட்டு இப்படி பேசிட்டு இருக்கீங்க?” என்றால் சற்று கோபமாய்.

“நீ பெரிய வீட்டு பொண்ணு, உன் குடும்பம்தான் எங்களை வாழ வைத்த குடும்பம். உன்னை எங்களுக்குத் தெய்வம்னு நினைக்கிறோம். ஆனா நீயும் எங்களோட வந்து வாழறேன்னு சொல்றியே இது என்னம்மா நியாயம்?” என்றார் தாங்க முடியாமல்.

“நீங்கக் கோபுரம்மா நாங்க கூரை… கூரை கோபுரத்தில் வாழ ஆசைப்படக் கூடாதும்மா…” என்றார் வேதனையுடன்.

இவற்றையெல்லாம் அமுதாவும் ஓரமாக நின்று பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவளுக்கு நடந்த நிகழ்வை எப்படி எடுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை. மாணிக்கம் வேறு அவளைக் கோபமாய் முறைத்தபடி சென்றான். அது வேறு அவளின் மூளையைக் கலங்கடித்தது.

வசுந்தராவோ பெரியவரின் வார்த்தையைக் கேட்டு ஒரு விரக்திப் புன்னகையைத் தந்தவள்,

“நீங்களும் மனுசங்கதான் மாமா. உங்களோட நான் வாழறதுல எந்தக் குற்றம் குறையும் வந்துராது.” என்றாள் சிறுசிரிப்புடன்.

“நான் அதுக்கு சொல்லல தாயி, உங்க அப்பாதான் நாங்க இருக்குறதுக்கு இடமும் வாழறதுக்கு வாழ்க்கையும் குடுத்தார். இப்ப அவர் வீட்டுப் பொண்ணு இங்க இருக்குறது தெரிஞ்சதால அவரு என்ன பண்ணுவார்னு எங்களுக்குப் புரியல தாயி… இதால இந்த மக்களோட வாழ்வாதாரம் பாதிக்கும்போது பயமா இருக்குது தாயி…” என்றார் பெரும் கலக்கத்துடன்.

அவருக்குத்தான் தெரியும் ராஜவேலு, கற்பகநாயகியின் நிஜமான முகம்.

ஜாதி அந்தஸ்து மரியாதை பணம் இவற்றை மட்டுமே முதன்மையாய் பார்ப்பவர்கள் அவர்கள். தங்களுக்கு உதவி செய்ததுகூட இந்தப் பெண்ணின் பிடிவாதத்தாலும் அவர்களுக்குக் கிடைக்கின்ற பெயராலும் மட்டும்தானே என்பதை உணர்ந்தவர் அவர்.

“அப்படி அவ்வளவு சுலபமா அவரால உங்களை எதுவும் பண்ண முடியாது மாமா, நான் இருக்கேன். நான் பாத்துக்குறேன்.” என்றாள் நம்பிக்கையாய்.

அவள் என்னவோ நம்பிக்கை கொடுத்து விட்டாள் தான்…‌ ஆனாலும் பொன்னப்பனின் மனமோ ஏதோ விபரீதமாய் நடக்கப் போவதற்கு அறிகுறியாய் தவித்தது.

ஆனால் அவரின் எண்ணம் உண்மையாவதை அறியாமல் பெண்ணவளும் அவருக்கு ஆறுதல் சொன்னாள். ஆனால் அமுதாவின் மனதிலோ தன்னை முறைத்தபடி சென்ற மாணிக்கத்தை நினைத்து உள்ளம் குழம்பிப் போனாள்.

ஏன் இந்தக் கல்யாணம் அவளுக்கும் அதிர்ச்சிதானே! ஏன் அதை உணராமல் அவளை முறைத்தபடி செல்ல வேண்டும்? என்ற எண்ணம் அவளுக்கு எழாமல் இல்லை. ஆனால் அவளுக்கு மாணிக்கத்தைப் பற்றி முழுதாய் எதுவும் தெரியவில்லை. அவனின் உண்மை குணத்தை அறியும் நேரம் பெண்ணவளின் நிலைதான் என்னவோ?

ஆனால் அவளின் மனதிலும் ஒரு சிறுசுயநலமும் இருந்தது. அவளுக்கும் மாணிக்கத்திற்கும் திருமணம் நடக்க வசுந்தரா நிச்சயம் உதவி செய்வாளே என்று அவள் மகிழ்வாய் இருக்கும் நேரத்தில் மாணிக்கத்தின் கோபமுகம் அவ்வப்போது நினைவு வந்து அவளைக் குழப்பியது.

*

கைலாசமோ மனம் வலிக்கத் தன்னவளைப் பார்த்தபடி அந்தக் கோவிலில் அமர்ந்திருந்தான்.

அவளோ அவனைப் பார்த்து விட்டு, “எதுக்கு அத்தான் இப்படி பாத்துட்டு இருக்கீங்க?” என்றாள் மெல்லச் சிரித்தபடி.

அவளின் புன்னகை‌ முகத்தைக் கண்டவனுக்கு மனதோரம் மேலும் வலி பரவ, “என் மேல உனக்குக் கொஞ்சமும் வருத்தம் இல்லையா சிவா?” என்றான் வலியுடன்.

“நான் எதுக்கு வருத்தப்படணும்?” என்றவளுக்கு அவனின் கேள்வி சுத்தமாய் புரியத்தான் இல்லை.

“இல்லம்மா நான் இந்த ஊர்ல பெரிய வீட்டுப் பையன்னு தான் உன் வீட்டுல எனக்குக் கல்யாணம் பண்ணி வச்சாங்க. ஆனா என் குடும்பத்தோட மனிதாபிமானம் இல்லாத செயலால இன்னைக்கு உன்னைத் தெருவுல வச்சிருக்கேன். என்னை மன்னிச்சிடும்மா! என்னால நீயும் நம்ம குழந்தையும் ரொம்பவே கஷ்டப்படுறீங்க…” என்றான் உண்மையான வருத்தத்துடன்.

“என்ன பேச்சுங்க பேசிட்டு இருக்கீங்க? நான் உங்களோட மனைவி. உங்களில் பாதி இல்லையா! ஏன் பிரிச்சுப் பேசுறீங்க? நான் எங்க இருக்கேன்… உங்ககூட தானே இருக்கேன். ராமன் இருக்குற இடம் தான் சீதைக்கு அயோத்தி. அதுபோல நீங்க இருக்குற இடம்தான் எனக்கு மாளிகை. இனி உங்களையும் என்னையும் பிரிச்சுப் பேசாதீங்க…”‌என்றாள் ஆதங்கத்துடன் தன்னவன் மனம் வருந்துவதை தாங்காமல்.

அவளின் ஆதங்கத்தில் மனம் தவித்தவன், “இல்லடா, இனி இப்படி பேசலை. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு சும்மாவா சொன்னாங்க… நீ அந்தக் கடவுள் எனக்குக் குடுத்த வரம் சிவா.” என்றவன் அவளின் கையை அழுந்தப் பற்றிக் கொண்டான்.

அடுத்து என்ன செய்வது? எங்கே போவது? என்று புரியாமல் அமர்ந்திருந்தவனுக்கு தான் மட்டுமில்லாமல் கர்ப்பிணியான தன் மனைவியும் இப்படி இருப்பதில் தான் மனத்தாங்கலுடன் பேசினான்.

இத்தனை நடந்த பின்பும் தன் பிறந்தகத்திற்கு தன்னை அழைக்காமல் தன்னுடன் அமர்ந்திருந்த மனைவியின் மேல் காதல் பெருகியது ஆடவனுக்கு.

அவள் அழைத்திருந்தாலும் அவன் சென்றிருக்கமாட்டான் என்று அறிந்திருந்தாலும் அதை வார்த்தையால்கூட வெளிப்படுத்தாத, கணவனின் சுயமரியாதையைக் காக்கும் பெண்ணை யாருக்குத்தான் பிடிக்காமல் போகும்? முன்பைவிட சிவகாமியை அதிகமாய் பிடித்துப் போனது ஆடவனுக்கு.

அவளின் பொறுமையும் அன்பும் எப்போதும் போல் இப்போதும் ஆடவனை வியக்க வைத்தது என்றால் அது பொய்யில்லையே!

“சிவா, கோவில் நடை சாத்துற நேரம் ஆச்சு. இங்கிருந்து கிளம்பலாமா?” என்ற கணவனின் குரலில் அவனை நிமிர்ந்து பார்த்தவள் புன்சிரிப்புடன்,

“ம்ம் போலாங்க…” என்றாள் அன்புடன்.

“எங்கே போறோம்னு கேட்கலையேம்மா நீ?” என்றான் கேள்வியாய்.

“எங்கே போனா என்ன? உங்களோட இருக்கேன் இல்ல… அதுவே போதுங்க…” என்றாள் காதலுடன்.

அவளின் வார்த்தையில் எங்கேயோ படித்த பாரதியாரின்‌ வரிகள்தான் ஆடவனுக்கு நினைவு வந்தது.

‘இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்…’ என்ற வரிகளில் அவனை என்றதில் ‘இங்கிவளை யான் பெறவே என்ன தவம் செய்தேன்…’ என்ற வரிகள் தான் அவனுக்கு நினைவு வந்தது.

காதலுடன் அவளின் கரத்தைப் பற்றிக் கொண்டவன் அங்கிருந்து அழைத்துச் சென்றவனின் முன்னே வந்து நின்றவளைக் கோபத்துடன் பார்த்தான் ஆடவன்.

யார் அவளோ…?

அடுத்து பாகத்தில் பாக்கலாம் செல்லம்ஸ்.

மாலை வரும்…✍️

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page