அத்தியாயம் 21

அத்தியாயம் 21

 

“அண்ணா, நடந்தது எல்லாம் இப்பத்தான் எனக்குத் தெரிஞ்சது. என்னை மன்னிச்சிடுங்க! என்னாலதான் உங்களுக்கு இந்தக் கஷ்டம். அண்ணி, நீங்களும் என்னை மன்னிச்சிடுங்க!” என்ற வசுந்தராவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

“நீ இப்படி செய்வேன்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கலை வசு. உன் மேல எத்தனை நம்பிக்கை வச்சிருந்தேன், ஆனா எனக்குக்கூட சொல்லாம இப்படி செஞ்சிட்டியே?” என்றவனுக்கு தங்கையின் மீது வருத்தம்தான் மேலோங்கியது.

“அண்ணா, நான் உங்ககிட்ட சொல்லகூடாதுன்னு நினைக்கலை. ஆனா நீயும் ஒத்துக்கலைன்னா என்னால வேற என்ன செய்ய முடியும் சொல்லு பாக்கலாம்?” என்றாள் ஆற்றாமையாக.

“சரி, எப்படியோ உன் மனசு போல வாழ்க்கை அமைஞ்சது எங்களுக்குச் சந்தோஷம்தான். நாங்க கிளம்பறோம் வசு. இனிமே உன்னோட வாழ்க்கையை நீ நல்லபடியா பாத்துக்கோ.” என்று தன் மனைவியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றவனின் முன்னே நின்றவள்,

“அண்ணா, அண்ணியை இந்த நிலையில் எங்க அழைச்சிட்டு போற? நம்ம குடும்பத்தோட மூத்த வாரிசை அவங்க சுமந்துட்டு இருக்காங்க. ஆனா இப்படி யாரோ மாறி அவங்களை எங்கே அழைச்சிட்டு போற?” என்றாள் படபடப்புடன்.

அதைக் கேட்டவன் ஒரு வெற்றுப் புன்னகையை சுமந்து, “எது நம்ம குடும்பத்தோட மூத்த வாரிசா? அப்படி யாரும் அங்கே இருக்குறவங்க நினைக்கலையே வசு… பிள்ளைத்தாச்சி பொண்ணுன்னுகூடப் பாக்காம அவளை வெளியே அனுப்பும்போது அங்கே இருந்த யாரும் நினைக்கலையே… அவ்வளவு ஏன் நம்மளை பெத்த அம்மாவும் ஒரு பொண்ணு தானே? அவங்களே அதை நினைக்கலை. பரிமளம் எப்பவும் எதையும் கண்டுக்கமாட்டா. வேணாம் வசு, எங்களுக்கு இனி யாரும் இல்லை. எனக்கு இவ… இவளுக்கு நான்… எங்களுக்குன்னு இருக்குற சொந்தம் எங்களுக்குப் பிறக்கப் போற பிள்ளைதான்.” என்றவனின் குரலில் அத்தனை வலி கொட்டிக் கிடந்தது.

“அண்ணே, அப்படி சொல்லாத… யாரு போனா என்னை? உன் தங்கச்சி நான் இருக்கேன். உன் பையனோட அத்தை நான் இருக்கேன். வா அண்ணே என்னோட, என் வீட்டுக்குப் போலாம். என் புருஷன் எதுவும் சொல்லமாட்டாரு. அவரு ரொம்பவே நல்லவரு அண்ணா.” என்று தன் அண்ணனிடம் கிட்டத்தட்ட கெஞ்சினாள் பெண்ணவள்.

“இல்லம்மா… உனக்கு நாங்க பாரமா இருக்க விரும்பலை. இத்தனை நாளாக என் அப்பா அம்மான்னு நினைச்சேன்… ஆனா அவங்களுக்கு என்னைவிட என் குழந்தையைவிட அவங்களோட வீண் வறட்டு கௌரவம் தான் பெருசா போயிடுச்சு. போதும்மா… நீ உன் குடும்பத்தைப் பாரு. சிவா வா, போலாம்.” என்றபடி தன் மனைவியைக் கைப்பிடித்து அழைத்துச் சென்ற தன் தமையனையும் தாயான அண்ணியையும் பார்த்தவளின் மனம் உடைந்து போனது.

தன்னால்தான் தன் அண்ணன் குடும்பம் இன்று வீட்டை விட்டும் ஊரை விட்டும் வெளியே செல்வதைக் கண்டவளின் மனதில் குற்றவுணர்ச்சி உண்டானது.

அதே குற்றவுணர்வுடன் தான் தன் வாழ்க்கையை வித்யாதரனுடன் ஆரம்பித்தாள்.

“அன்னைக்கு சிவகாமியை அந்த ஊரைவிட்டுக் கூட்டிட்டு வந்தேன். வெளியே வந்ததுக்கு அப்புறம் இவளை இவளோட அப்பா வீட்டுல விட்டுட்டு நான் வேலை தேட வெளியே போலாம்னு நினைச்சேன். ஆனா அதிலே இவளுக்குக் கொஞ்சமும் விருப்பம் இல்லை. அதுக்கு பின்னாடியும் இவளை அங்கே விட எனக்கு விருப்பம் இல்லை. அதுமட்டும் இல்லாமல் எங்களை வேணாம்னு சொன்னவங்க எங்களுக்கும் வேணாம்னு தோணுச்சு. அதுதான் இங்கே வரக் கூடாதுன்னு வடநாட்டுப் பக்கம் போயிட்டோம்.

அதுக்குப் பின்னாடி எப்பவும் நாங்க அந்த ஊருக்குப் போகணும்னு நினைக்கலை. ஆனா அங்கே நடக்குற ஒவ்வொரு விஷயமும் எங்களுக்குத் தெரிஞ்சிடும். அவங்களுக்கு வேணா எங்க மேல பாசம் இல்லாம போகலாம். ஆனா எங்களுக்கு அவங்க மேல பெத்தவங்கங்கிற பாசம் இருந்துச்சு. அதுதான் அவங்களைப் பத்தி எல்லாம் தெரிஞ்சிக்க இங்கே எனக்கு வேண்டப்பட்டவங்களை பாத்துக்கச் சொன்னேன். அப்போதான் இங்கே நடந்த எல்லாமே எனக்குத் தெரிஞ்சது. அதுவும் விவேகா உங்க அப்பா அம்மாவுக்கு இவங்க செஞ்சதை நினைச்சு நான் கண்ணீர் விடாத நாள் இல்லை. அப்போ இருந்து இவங்க மேல் இருந்த பாசத்தை தூக்கி எறிஞ்சிட்டேன். அவங்க மனுசங்கன்னே என்னால நினைக்க முடியாத அளவுக்கு அவங்களோட தவறுகள் இருந்துச்சு.

இதோ இந்த அப்பாவி பொண்ணோட வாழ்க்கையும் ஒன்னுமில்லாம ஆக்கினாங்க அவங்களோட பணம் பதவியை வச்சு!

அருந்ததி, உன் அப்பன் மாணிக்கம்தான். ஆனா உன்னோட அம்மா அந்தச் சகுந்தலா இல்லை. இதோ உன் முன்னாடி அழுதுட்டு இருக்குற அமுதாதான் உன்னோட அம்மா!” என்று கைலாசநாதன் சொல்லச் சொல்ல அதில் அதிர்ந்து இருந்தவர்கள் கடைசியில் சொன்னதை வைத்து அருந்ததி அதிர்ந்தாள் என்றால் அதைவிட அதிகமான அதிர்ச்சி அமுதாவின் விழிகளில்தான் தெரிந்தது.

“பெரியப்பா, என்ன சொல்றீங்க? என்னோட அம்மா அம்முமாவா? ஆனா இவங்க அங்கே வேலை தானே செஞ்சிட்டு இருக்காங்க. அதுமட்டும் இல்லாம சகுந்தலாவை தானே என்னோட அம்மான்னு சொன்னாங்க?” என்றவள் அதிர்ச்சியாய் அமுதாவை பார்த்தாள் என்றால் அமுதாவின் கண்களிலோ கண்ணீர் நதியாய் தடம் பதித்தது அவளின் கன்னங்களில்.

அவளின் அழுகையைக் கண்ட சிவகாமியோ வேகமாய் அமுதாவிடம் வந்து அவளை அணைத்து ஆறுதல்படுத்த இத்தனை நேரம் அமைதியாய் அழுதவள், “ஆஆஆ…” என்று கத்திக் கதறினாள்.

பாவம் எத்தனை வருட ஏக்கமோ அழுகையை இப்படிக் கதறி வெளிப்படுத்திய பெண்ணவளுக்கு! அவளின் கதறலில் அவளின் வலி தெரிந்தது அங்கிருந்த அனைவருக்கும். ஏன் அருந்ததிகூட தன்னைத் தாயாய் இருந்து வளர்த்தவர் தான் தன் தாய் என்பதை அறிந்ததும் அவளின் மனநிலையோ பூமி சுற்றுவதை நிறுத்தியது போல் இருந்தது.

கேள்வியாய் தன் பெரியப்பனைப் பார்க்க அவரோ,

“நீதான் அமுதாவோட பொண்ணுன்னு அவளுக்குத் தெரியாது அருந்ததி. நீ பிறந்ததும் இறந்துட்டதா தான் அவகிட்ட சொல்லிருக்காங்க. அதுவும் உன்னோட உயிரைக் காப்பாத்தறதுக்குத்தான்.” என்றார் பதிலாய்.

“ஆனா ஏன் எதுக்கு பெரியப்பா? எனக்கு இன்னமும் முழுசா புரியலை பெரியப்பா.” என்று புரியாமல் கேள்வி எழுப்ப ஒரு பெருமூச்சுடன் அவளைப் பார்த்தவர் விவேகனை பார்க்க, அவரின் பார்வையிலிருந்து எதுவும் விளங்கவில்லை ஆடவனுக்கு.

“நாங்க இந்த ஊரைவிட்டுப் போனதுக்கு அப்புறம் நிறைய விஷயம் நடந்துடுச்சும்மா…” என்றவரின் நினைவுகள் மீண்டும் கடந்த காலத்தை நோக்கிச் சென்றது.

வசுந்தராவின் திருமணம் முடிந்த அடுத்த பத்துநாளில் ராஜவேலு மாரடைப்பில் இறந்துவிட அந்தப் பழியும் வசுந்தராவின் மீதுதான் திரும்பியது கற்பகநாயகிக்கும் மாணிக்கத்திற்கும். ஏன் பரிமளம்கூட தங்கையை அதிலிருந்து வெறுக்க ஆரம்பித்தாள். முதலில் அதிர்ந்த வசுந்தராகூட பின்பு தன் வாழ்வை வாழ ஆரம்பித்தாள். பிறப்பும் இறப்பும் இறைவனின் நியதி. அதற்கு இவள் ஒரு காரணியே அன்றி இவளே முழுமுதற் காரணமும் இல்லை.

வசுந்தராவிற்கும் வித்யாதரனிற்கும் திருமணமாகி இரண்டு மாதங்கள் ஆகியது. கணவனுடன் தன் வாழ்வை மகிழ்வாய் வாழ ஆரம்பித்த வசுந்தராவிற்கு அவ்வப்போது தன் தமையனின் நினைவு வந்தாலும் அவர்கள் எங்கிருந்தாலும் நன்றாக இருந்தால் போதும் என்ற வேண்டுதலுடன் தன் வாழ்வை வாழ ஆரம்பித்தாள்.

முன்பு தோழியாய் இருந்தவள் இப்போது அண்ணியாய் ஆனதும் தோழிகள் இருவருக்கும் இன்னும் பாசம் அதிகமாய் ஆனது. ஆனால் அமுதா மாணிக்கத்தை விரும்புவதை வசுந்தராவிடம் சொல்லவில்லை. வசுந்தராவும் அது தனக்கு தெரிந்ததாய் காட்டிக் கொள்ளவில்லை.

அதே நேரம் அமுதா மாணிக்கத்துடன் பழகுவதை நிறுத்தவும் இல்லை. முதலில் மாணிக்கம் அவள்மீது கோபமாய் இருப்பதைப் போலக் காட்டிக் கொண்டவன் தன் பின்னே அவளைச் சுற்ற வைத்தான். அதற்கு ராஜவேலு இறந்த நேரத்தை அவளின் கவனத்தை தன் மீது திசை திருப்ப ஆரம்பித்தான்.

தந்தையின் இழப்பில் தான் சோகமாக இருப்பதாகக் காட்டிக் கொண்டவனை நம்பிய பேதையவள் அவனைத் தன் அன்பால் மாற்ற நினைத்தாள். அதனால் முன்பைவிட அவனை அதிகமாய் நம்பினாள். அவனின் வார்த்தைகளை வேதவாக்காய் எடுத்துக் கொண்டாள்.

இந்த நிலையில்தான் வசுந்தரா கர்ப்பமானாள். அதைக் கேட்ட அமுதா மகிழ்ச்சியுடன் அந்த விஷயத்தை மாணிக்கத்திடம் பகிர்ந்து கொண்டவளுக்கு தெரியவில்லை, தான் ஒரு குடும்பத்தின் அழிவுக்குத் தூது போகின்றோம் என்று!

தங்கையின் மேல் அத்தனை பாசம் வைத்திருந்தவனின் கண்களில் பணமும் பதவியும் கண்ணை மறைக்கத் தங்கையை அழிக்க வேண்டும் என்று அவளை அழிக்கும் நொடிக்காகக் காத்திருந்தான் மனித உரு கொண்ட மிருகமவன்.

அன்று தன் தாய் இருந்த அறைக்கு வந்த மாணிக்கம் மூலையில் முடங்கிக் கிடந்த கற்பகநாயகியின் அருகே வந்து அவரிடம் அமர்ந்தவன்,

“அம்மா, நீங்க அப்பாவை இழந்துட்டு இப்படி மூலையில இருக்குறீங்க… ஆனா உங்களை இப்படி ஆக்கிட்டுப் போனவ நிம்மதியா குடும்பம் குழந்தைங்கன்னு வாழப் போறா…” என்றான் கண்ணைக் கசக்கியபடி.

அதுவரை எங்கேயோ வெறித்தபடி பார்வையை பதித்திருந்த கற்பகநாயகியும் கேள்வியாகத் தன் மகனைக் காண,

“அந்த வசுந்தரா மாசமா இருக்காளாம்… உன் பூவையும் பொட்டையும் பறிச்சவ இன்னைக்கு குடும்பம் குழந்தைங்கன்னு நிம்மதியா வாழப் போறா… எனக்கு மனசே ஆறலைம்மா. நிர்ணயிச்ச கல்யாணம் நின்னு போனதும் உன் மகள் ஓடிப் போயிட்டாளாமே அப்படின்னு கேட்குறவங்களுக்கு பதில் சொல்ல முடியாம அதிர்ச்சியில நம்ம அப்பாரு இறந்துட்டாரு… ஆனா அவரு இறந்ததுக்கு இந்த ஓடுகாலிதான் காரணம். எந்தவிதமான குற்றவுணர்ச்சியும் இல்லாம இவமட்டும் புருசன் புள்ளைன்னு நிம்மதியா வாழறதை பாக்க பாக்க நெஞ்சு வேகுதும்மா…” என்றான் வராத கண்ணீரைத் துடைத்தபடி.

அவனின் வார்த்தைகளைக் கேட்ட கற்பகநாயகியின் வதனமோ கோபத்தில் சிவந்து தீச்சுடராய் எரிந்தது.

அந்தக் கோபம் அவரை மனிதி என்பதிலிருந்து இறக்கியது. அவரின் ஆத்திரமும் கோபமும் ஒரு அப்பாவி உயிரைத் தீக்கிரையாக்கியது. அதன் சுவடு இன்னமும் ஆழமாய் குற்றவுணர்ச்சியாய் அவரின் மனதில் தங்கி அவரைக் கொஞ்சம் கொஞ்சமாய் கொன்று கொண்டிருந்தது.

‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண 
நன்னயம் செய்துவிடல்.’

என்ற வள்ளுவனின் வாய்மொழிக்கேற்ப அவரைத் தலைகுனியச் செய்தது வசுந்தராவின் பெருந்தன்மையான செயல்.

அப்படி கற்பகநாயகி என்ன செய்தாரோ? வசுந்தராவின் எதிர் செயல்தான் என்னவோ? அடுத்தடுத்த பாகங்களில் பாக்கலாம் செல்லம்ஸ்.

மாலை வரும்…✍️

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page