அத்தியாயம் 21

கரண் போனை எடுத்து என்னப்பா கௌரி எப்படி இருக்க? என்று அவர் பேசிக் கொண்டிருக்க, கௌரி என்ற பெயர் கேட்டவுடன் வர்ஷினி அறையில் இருந்து வேகமாக ஓடி வந்தாள்.எப்போதும் கௌரி, கரண் வேண்டுகோளுக்கு இணங்க, வர்ஷினி கல்லூரி சென்ற பிறகு தான் பேசுவான். இன்று ஏனோ அவனுக்கு வர்ஷினியின் குரலையாவது கேட்டுவிடவேண்டும் என்ற ஆவல் எழும்ப, போன் பண்ணிவிட்டான். வேகமாக வந்த வர்ஷினி தந்தையின் கையில்  இருந்த அலைபேசியை வாங்கி, என்ன சங்கர் எப்படி இருக்கே? ஊருக்கு போனதில் இருந்து எனக்கு ஒரு போன் கூட பண்ணவேல, பெரிய ஆள் ஆயிடிங்க போல இருக்கு. இவ கிட்ட எல்லாம் ஏன் பேசணும்னு நினைக்கிறீங்களா?என்று அவள் திட்டிக் கொண்டே போக, அவள்  சண்டை போடுவதை இரசித்த கௌரி பரவாயில்லை, மாமா  சொன்ன ஐடியா ஒர்கவுட் ஆகுது போல இருக்கு. நம்ம ஆளு நம்மை ரொம்மத்தான தேடி இருக்கா. என்ன இருந்தாலும் பெரியவங்க பெரியவங்க தான்.  ஓல்ட் ஐஸ் கோல்ட்னு  பழமொழி சரியாத்தான் சொல்லி இருக்காங்க, இந்த கத்து கத்து கத்துறா, இதுவும் நல்லாத்தான் இருக்கு, என் ரசகுல்லா குட்டி குஷ்பூவுக்கு என்று அவள் சண்டை போடுவதும் ரசித்த அவன்  அவளிடம் நான் ஏற்கனவே ஆறு  அடிக்கு மேலேயே பெரிய ஆளா வளர்ந்து இருக்கேன், இதற்கு மேலே வளர்ந்த நல்லா இருக்காது வர்ஷினி , நான் பேசினால் தான் உனக்கு பிடிக்கலையே, அதனாலதான் உன்னை ஏன் தொந்தரவு செய்யணும்னு  தான் நான் இவ்வளவு நாலா உங்கிட்ட பேசல என்றதும், என்னடா, நீ என்கிட்ட பேசறது பிடிக்காது எல்லாம் ஒன்னும் சொல்லல. கல்யாணத்தை பத்தி மட்டும் பேசாதேனு தான் சொன்னேன். ஒரு நண்பனா  என்கிட்ட பேசமாட்டியா? என்று கேட்க கௌரி இந்த வேதாளம் முருங்கை மரத்தை விட்டு இறங்கவே இறங்காதா ! என்று நினைத்துக் கொண்டு சரி வர்ஷினி இனிமேல் தினமும் பேசுறேன் என்று சொன்னதும் சாப்பிட்டியா சங்கர்? என்றதும், உனக்கு இரவுனா எனக்கு காலையில் தானே, இப்போ எனக்கு மணி 11 ஆகுது காலையிலே சாப்பிட்டேன், கொஞ்ச நேரம் வெளியில் வந்தேன், சரி அப்படியே மாமா கிட்ட பேசலாம்னு போன் செய்தேன். வர்ஷினி, வேலா வேளைக்கு சாப்பிடு, ரொம்ப நேரம் வேலை செய்யாதே, நல்லா தூங்கணும் என்று வரிசையாக பல அறிவுரைகளை கூறிவிட்டு அலைபேசியை வைத்தாள். கௌரி, இப்பவே  பாதி மனைவியாயிட்டா, இன்னும் தாலி கட்டிட்டா முழு மனைவி தான் ஆனா அதற்கு தா சம்மதம் சொல்ல மாட்டேன்ங்கிறா என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு பெருமூச்சு விட்டான்.

 

பகலவனும் ,பால் போன்ற நிலவும்  நித்தமும் தன் கடமையை நீங்காமல் செய்ய நாளும் ஓடிக்கொண்டிருந்தது. மதுமதி கருவுற்றிருந்தாள். அதை கேட்டவுடன் கவிதாவுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. அவளுக்கு பலவாறு அறிவுரைகள் கூறி தாமே அங்கே வந்து அவளை பத்திரமாக பார்ப்பதாக கூறினாள். ஐந்தாம் மாதமே அவளுக்கு சீமந்தமும் பண்ணிவிடவேண்டும் என்ற ஆசையும் இருந்தது. அதன்படி அவளே அவர்கள் இருக்கும் கிராமத்திற்கு சென்று மதுமதியுடன் தங்கி அவளை நன்றாகவே பார்த்துக்கொண்டாள். மதுமதிக்கு நான்காம் மாதம் முடிந்ததும் விக்னேஷிடம் வந்து, தம்பி மதுவுக்கு அடுத்த மாதமே வளைகாப்பு பண்ணிடலாம்ப்பா. ஒன்பதாம் மாதம் வச்சா வயித்தில புள்ளையை வச்சிக்கிட்டு அவளுக்கு எழுந்துக்க, உட்கார  எல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கும் என்றதும் விக்னேஷ் அதெல்லாம் பண்ணிலாமா, உங்ககிட்ட முக்கியமா ஒரு விஷயம் பேசணும், சொல்லுப்பா என்ன விஷயம்?என்று கவிதா கேட்டதும், கௌரி கல்யாணத்தை பத்தி என்ன முடிவும்மா எடுத்திருக்கே ? அவன் என்னடானா வெளிநாட்டில் போய் உட்கார்ந்திட்டான். அவனுக்கு கல்யாணம் பண்ற எண்ணம் எல்லாம் உங்களுக்கு இருக்கா இல்லையா?என்று அதட்டல் விதமாக கேட்க, கவிதாவுக்கு அவன் அவ்வாறு மிரட்டலாக  பேசியது கோபத்தை உண்டாகவில்லை மாறாக சந்தோஷமாக இருந்தது. தன் தம்பியை பற்றி அவன் அக்கறையாக பேசியது  தான் கவிதாவின் சந்தோஷத்திற்கு காரணம். விக்னேஷ், அவன் அந்த வர்ஷினி புள்ளைய தான் மனசில நினைச்சிட்டு இருக்கான். நான் எத்தனை பொண்ணை காட்டினாலும் ஏதாவது குறை சொல்லி தட்டி கழிச்சிடுறான். ஆனா அந்த வர்ஷினி புள்ளைக்கு இவன் மேல ஆசை இருக்கிறதான்னு தான் தெரியல. அது தாம்பா என்ன செய்யறதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்கேன் என்று அவள் பாவமாக சொல்வதை பார்த்து விக்னேஷ் எனக்கும் கௌரி வர்ஷினியை காதலிச்சது தெரியும்மா. அவன் அந்த பொண்ணு மேல உயிரா இருக்கான். அண்ணனா நான் எதுக்கு இருக்கேன்? நான் பாத்துக்கிறேன். நானும் மதுவும் போய் வர்ஷினி கிட்ட பேசறோம் . அவ மனசில என்ன இருக்குனு தெரிஞ்சிட்டு  அவளை சமாதானப்படுத்தி இந்த கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன்மா. நீ ஒன்னும் கவலைப்படாதே என்ற மகனின் பேச்சை கேட்ட கவிதாவின் மனம் குளிர்ந்தது. இதை தானே தன் மகனிடம் எதிர்பாத்தாள் அவள். தன் பெரிய மகன் குடும்பத்தை நல்ல விதமாக வழிநடத்தி அண்ணனும் தம்பியும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று. அவள் நினைத்து நிறைவேறியதில் அவ்வளவு பூரிப்பாய் இருந்தது கவிதாவுக்கு. நீ உன் விருப்பம் போல செய்யுப்பா. கௌரிக்கும் ஒரு நல்லது நடந்தா எங்களுக்கு ரொம்ப சந்தோசம் தான். மதுவை பத்திரமா பார்த்து அழைச்சிட்டு போப்பா, அவ சீமந்தத்தையும், கௌரியின் கல்யாணத்தையும் பக்கத்து  பக்கத்திலே வச்சுக்கலாம் என்று மகிழ்சியாய் கூறினாள். 

 

விக்னேஷுக்கு ஓரே யோசனையாய் இருந்தது. வர்ஷினிக்கு முதல் கல்யாணம் சரியில்லை, புருஷன் ரொம்ப கொடுமைபடுத்திறான் தான் விவாகரத்து ஆய்டுச்சுன்னு கௌரி சொன்னான்.  இந்த மாதிரி சூழ்நிலையிலே அந்த பொண்ணு இன்னொரு கல்யாணத்திற்கு சம்மதிக்குமா, இவனும் கல்யாணம் பண்ணா அந்த பொண்ணைத்தான்  கல்யாணம் பண்ணுவேன்னு நிக்கிறான் என்று எண்ணிக்கொண்டே மதுவை தேடி சென்றான். மது படுக்கையில் படுத்திருந்தாள். அவள் இடத்தில நெருங்கி சென்ற விக்னேஷ் அவள் அருகில் அமர்ந்துக்கொண்டு  உடம்பு ரொம்ப சோர்வா இருக்குனு சொன்னே, இப்ப எப்படி இருக்கு மது? என்று கேட்க  இப்ப கொஞ்சம் பரவாயில்லைங்க, என்ன விஷயம் அத்தான், என்கிட்ட ஏதாவது சொல்லனுமா என்று வினவ விக்னேஷ் கௌரியின் திருமணத்தை பத்தி கூறிவிட்டு, உன்னால சென்னைக்கு, வர்ஷினி வீட்டுக்கு  வர முடியுமா? உனக்கு கஷ்டமா இருந்தா சொல்லு நான் அம்மாவை கூடிக்கொண்டு போறேன் என்றதும், மதுமதி, வேண்டாங்க, அத்தைக்கு வர்ஷினி மேல சிறிய கோபம் இருக்கு. வர்ஷினி ஏதாவது சொல்ல போய் இவங்க இருக்கிற கோபத்தில் ஏதாவது தப்பா பேசிட்டாங்கன்னா  அப்புறம் இந்த கல்யாண முயற்சியே நின்னு  போய்டும். நான் வர்ஷினிகிட்ட பக்குவமா பேசறேன், அவ ஏற்கனவே கல்யாணம் ஆனதாலே கௌரி மாமாவை திருமணம் பண்ண தயங்குறானு நினைக்கிறேன், இந்த விஷயத்தை நாம போய் பேசினாத்தாங்க சரியாய் இருக்கும் என்றிட, அப்பனா நாம நாளைக்கே போய் பேசுவோம் என்று விட்டு இருவரும் தூங்க சென்றனர்.      

 

மறுநாள் விக்னேஷும் மதுமதியும் சென்னைக்கு காரில் கிளம்பினர். நேராக வர்ஷினியின் வீட்டிற்கே கார் சென்றது. வீட்டை அடைந்ததும் விக்னேஷ் கதவை தட்ட, கரண் வந்து கதவை திறந்தார். விக்னேஷ் மதுமதியை பார்த்ததும் சந்தோஷமாக வாங்க, வாங்க ,என்று வரவேற்று அமர வைத்தார். எப்படி இருக்கே விக்னேஷ்? எப்படி இருக்கே மதுமதி? உங்களை எல்லாம் பார்த்து எத்தனை நாளாச்சு? அம்மா, அப்பா எல்லாம் நல்லா இருக்காங்களா என்று பொதுப்படையாய் விசாரித்து, உள்ளே பார்த்து வர்ஷினி, இங்கே வாம்மா ,யார் வந்திருங்காங்க பாரு, என்று குரல் கொடுக்க வர்ஷினி வெளியே வந்ததும் இவர்களை பார்த்து ஆச்சர்யப்பட்டாள். வாங்க, இங்க இருங்க, ரொம்ப தொலைவில் இருந்து வந்திருங்கீங்க, கொஞ்ச நேரத்தில் டிபன் செஞ்சிடுறேன், இருந்து நல்லா திருப்தியா சாப்பிட்டு போங்க என்று அவள் சமையலறை செல்ல முற்படும்போது மதுமதி அவள் கையை பிடித்து அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் வர்ஷினி, நீ வா உங்கிட்ட தனியா பேசணும் என்று அவளை அழைத்து கொண்டு தனி அறைக்கு சென்றாள்.

 

 இங்கு கரண் விக்னேஷிடம் கௌரி உன்னைப்பத்தி நிறைய சொல்லியிருக்கார்ப்பா. நீ வக்கீல் தொழிலை விட்டுவிட்டு விவசாயம் செய்றதா சொன்னான். அதையும் வெற்றிகரமா செய்றதை கேட்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்ததுப்பா. நாங்க மக்களை காக்க இராணுவத்தில் பணிபுரிவது போல் இதுவும் மக்களுக்காக  சத்துள்ள சிறந்த உணவா தயாரித்து கொடுப்பது ரொம்ப புனிதமான தொழில்தாம்பா. ஆனால் இந்த விவசாயத்தை மதிக்கிறது தான் ஆள் இல்லாம போயிடிச்சு. எல்லாரும் நிறைய பணம் சமபாதிக்கணும்னு பணத்தை நோக்கித்தான் போறாங்க தவிர அந்த பணத்தை அனுபவிக்க அவங்க ஆரோக்கியமாக இருக்கனும் அதற்கு நல்ல உணவுகளை விளைவித்து தறவங்களை மதிக்கணும் அவங்களுக்கு வேண்டியதை செஞ்சி தரணும் என்பதை மறந்துடறாங்க. விவசாயிகளின் கஷ்டம் யாருக்குமே பெரியதாக தெரியவேயில்லை, அதை யாருமே புரிஞ்சிக்கிறதும் இல்லை என்று பேச விக்னேஷ் அதற்கு ஆமோதிப்பது போல்  தலையாட்டினான். 

 

உள்ளே மதுமதி  வர்ஷினியிடம், வர்ஷினி இங்கே பக்கத்தில் வந்து உட்கார். உங்கிட்ட பேசணும் என்றதும் வர்ஷினியும் அவள் அருகில் வந்து அமர்ந்தாள். மதுமதி உனக்கு கௌரி மாமாவயை பிடிக்குமா? என்று கேட்க, அவளும் பிடிக்கும் என்று  தலையசைக்க, பின்னே ஏன் அவரை கல்யாணம்  பண்ணிக்க மறுக்கற?  வர்ஷினி சற்று உள்ளே போன குரலில் என் நிலமையை பத்தி உங்களுக்கு தெரியாதுன்னு நினைக்கிறேன். என்னுடைய முதல் திருமணம் எனக்கு சரியா அமையல. என்கிட்ட கௌரி என் கல்யாணத்திற்கு முன்னே அவருடைய காதலை சொன்னாரு. அப்பா மறுத்த நான் இப்போ என் கல்யாண வாழ்க்கை சரியில்லை என்பதற்காக அவரை மண முடிக்க சம்மதிப்பது என்ன  நியாயம்? கௌரி ரொம்ப நல்லவர். அவருக்கு ரொம்ப நல்ல மனசும் கூட. அப்படிப்பட்டவருக்கு என்ன மாதிரி பொண்ணு எதுக்கு? அவர்கிட்ட இருக்கிற அழகுக்கும், வசதிக்கும் அவருக்கு ஏத்த மாதிரி ஒரு நல்ல பொண்ணா பாத்து கட்டி வையுங்க என்று வந்த அழுகையை உள்வாங்கிக் கொண்டு கூற, மதுமதி அவளை ஆழமாக பார்த்து உனக்கு நிஜமாகவே கௌரி மாமா மீது ஆசையே இல்லையா? அவர் மீது உனக்கு காதலே இல்லையா? அவரை நீ நேசிக்கவே இல்லையா? என்று கேட்டுக் கொண்டே போக, அதற்குமேல் வர்ஷிணியால் அழுகையை அடக்க முடியவில்லை. கண்களில் கண்ணீர் ஆறாய் பெருகியது. ஆசை இருந்தா மட்டும் போதுமாக்கா, அதிருஷ்டம் வேண்டாமா? தகுதி வேண்டாமா? எனக்கு அவரை கல்யாணம் பண்ணிக்க தகுதியே இல்லக்கா என்று விம்மலுடன் கூற அவள் அழுகையே அவள்  கௌரியின் மீது வைத்துள்ள காதலை வெளிச்சம் போட்டு காட்டியது மதுவுக்கு. உடனே மது ஆனா கௌரி மாமா உன்னைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்  இல்லனா எனக்கு கல்யாணமே வேண்டாம் என்று பிடிவாதமா சொல்றாரும்மா.கௌரி மாமா உன் மேல் எவ்வளவு காதல் வச்சியிருக்கார்னு உனக்கே தெரியும்   அவர் நீ வேண்டாம்னு சொன்னதையும் பெருசா எடுத்துகில, உன் முதல் கல்யாணத்தையும்  அவரு கல்யாணமாகவே பார்க்கல, அவரே உன்னை மனைவியா ஏத்துக்க நினைக்கும் போது நீ ஏன் மறுக்கிற? கௌரி மாமாவை போல புருஷன்  அமைவது எல்லாம் ரொம்ப பாக்கியம். இந்த நல்ல வாய்ப்பே ஏன் நீ தள்ளிவிடறே என்றதும், அது மட்டும் காரணம் இல்லக்கா. எனக்கு கல்யாணம் ஆனா குழந்தை பிறக்க வாய்ப்பு கம்மினு டாக்டர் சொல்லிட்டாங்க. எனக்கு நடந்த கல்யாணத்தில எனக்கும் அந்த கேடுகெட்டவனுக்கும்  நடந்த  சண்டையில அவன் என்னை தள்ளி விட, நான் படிக்கட்டில் உருண்டு விழுந்த போது  அந்த படிக்கட்டு கீழே இருந்த க்ரில்  கம்பி என் வயித்தில ஆழமா குத்திடிச்சி. அதில் என் கர்ப்பப்பை பாதிக்கப்பட்டு ரொம்ப நாள் மருத்துவமனையில் இருந்து தேறி வந்தேன். ஆனா கர்ப்பபையில் அடிபட்டதாலே ஒரு குழந்தையை  தாங்கிற அளவுக்கு சக்தி இல்லைனு சொல்லிட்டாங்க.  குழந்தை பெத்துக்க தகுதி இல்லாத இந்த பாவியை கல்யாணம் பண்ணி அவர் கஷ்டப்பட கூடாதுனு தான் நான் அவரை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்றேன்னு வர்ஷினி கதறி அழ அவளை பார்க்கவே மதுமதிக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. இந்த விஷயம் கௌரி மாமாவுக்கு தெரியுமா  என்று கேட்க. அவருக்கு தெரியும்க்கா. அவருடைய பெரிய மனசுக்கு இதெல்லாம்  ஒரு விஷயமாகவே தெரியல, ஆனா எனக்கு தான் மனசு வலிக்குது. இப்படி பட்ட ஒரு நல்ல மனுஷனை கல்யாணம் பண்ணா  என்னால குழந்தை  பெற்று தர முடியாம போயிடுமேனு வேதனையாய் இருக்கு என்று அவள் கண்ணீர் நிறைந்த முகத்துடன்  மதுவை பார்க்க, மதுமதி சற்று யோசித்து விட்டு, இப்போ மருத்துவ வசதி எவ்வளவோ வளர்ச்சி அடைஞ்சிருக்கு.சிறந்த மருந்து,ஆரோக்கியமான உணவு, நல்ல ஓய்வு இதெல்ல்லாம் ஒழுங்கா பின்பற்றினா கண்டிப்பா நீயும் குழந்தை பெத்துக்கலாம். அப்படி பெத்துக்க முடியாவிட்டாலும் ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்துக்கோ . இந்த காலத்திலே உடம்பு ஆரோக்கியமா இருக்கிற ஜோடியே குழந்தை பெத்துக்க யோசிக்கிறாங்க, அழகு போய்டும் , அதை வளர்கிறது ரொம்ப கஷ்டம்னு ஆயிரம் காரணம் சொல்லறாங்க. அதனாலே இப்போ  இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை. உன்னை கொஞ்சமும் மதிக்காத உன் பெண்மைக்கு மதிப்பு கொடுக்காத  அந்த ஆள் கிட்டயே நீ சகிச்சிட்டு இருந்தபோது உன்னை தன் உயிர் போல் நேசிக்கிற இன்னும் சொல்லப்போன தன் உயிரை விட மேலா உன்னை நேசிக்கறவரை நீ வேண்டாம்னு சொல்றது ரொம்ப தப்பும்மா. நான் இப்படி சொல்லறேன்னு தப்பா எடுத்துக்காதே, உன்னுடைய முன்னாள் கணவர் செய்யற தப்பை தான் நீயும் செய்யற. அவன் உன்னுடைய அன்பை புருஞ்சிக்காம உன்னை அவமதித்து அனுப்பியது மாதிரிதான் நீயும் கௌரி மாமாவின் அன்பை புரிஞ்சிக்காம அவரை காயப்படுத்திற என்று சொன்னதும் வர்ஷினி அதிர்ந்து அய்யோ! அப்படியெல்லாம் இல்லக்கா. தயவு செஞ்சு அப்படி எல்லாம் பேசாதீங்க. அவர் முதலே என்கிட்ட காதல் சொன்னப்பவே  எனக்கு அவர் மேல காதல் இருந்தது. ஆனா அதை புரிஞ்சிக்கிற வயதும் மனப்பக்குவமும்  அப்ப எனக்கு இல்லை. இப்ப அவரை நான் மனதார காதலிக்கிறேன் என்று உணர்ச்சி வேகத்தில் அவளையும் அறியாமல் அவள் வாயாலே கௌரியை காதலிக்கிறேன் என்று ஒத்து கொண்டாள். 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page