அத்தியாயம் 22

மதுமதி அனைத்தையையும் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்தாள். பின், நீ கௌரி மாமாவை கல்யாணம் பண்ணிக்கிறது தான் நல்லதுன்னு தோணுது. உங்க கல்யாணம் முதல்ல நடக்கட்டும், மற்றதெல்லாம் பொறுமையாக அப்புறமாக பார்த்துக்கலாம் என்று சொல்லிவிட்டு வெளியே வந்தாள். அதன் பிறகு மதுமதியும் விக்னேஷும்  அங்கேயே சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு காரில் கிளம்பினர். காரில் போகும்போது விக்னேஷ்  மதுமதியிடம், வர்ஷினி என்ன சொன்னா மது ? என்று ஆவலாய் கேட்க, வர்ஷினியிடம் பேசிய அனைத்தையும் ஒன்று விடாமல் ஒப்புவித்தாள். எல்லாவற்றையும் கேட்ட விக்னேஷ் மது, நீ எனக்கு ஒரு சத்யம் செய்து தரணும் என்று கேட்க, மதுமதி என்னதென்று புரியாமல் அவனை பார்க்க, விக்னேஷ், வர்ஷினிக்கு குழந்தை பிறக்கறது கஷ்டம் என்கிற விஷயத்தை வீட்டில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று கேட்க, மதுமதி அதிர்ந்து அவனை பார்த்து ஏன் அத்தான் சொல்லக்கூடாது, நாளைக்கு இந்த விஷயம் தெரியவரும் போது அத்தை நம்மளை தப்பா  நினைச்சிக்க மாட்டாங்களா? என்று கூற, அம்மா கேட்டா நான் பதில் சொல்லறேன் இப்போதைக்கு  இந்த விஷயம் தெரிய வேண்டாம். அம்மாவிற்கு தெரிஞ்சா வர்ஷினி கல்யாணத்திற்கு சம்மதித்தாலும்  இவங்க ஓரேடியா மறுத்துருவாங்க. அப்புறம் கௌரிக்கு கல்யாணம் ஒன்று நடக்காமலே போயிடும். அவன் கண்டிப்பா வர்ஷினியை விட்டா வேறு யாரையும் திருமணம் செஞ்சிக்க மாட்டான். சின்ன வயசிலிருந்தே என் தம்பிக்கு நான் எதுவும் செய்ததில்லை. அவனை எப்பவும் எனக்கு போட்டியாகத்தான் நினைத்து இருக்கேன். ஆனா அவன் எப்பவும் என்னை அண்ணனாகத்தான் பார்த்திருக்கான். என்கிட்ட வச்ச பாசத்திலும், மரியாதையிலும் இன்னைக்கு வரைக்கும் அவன் குறை வச்சதில்லை. அவனும் அவனுக்கு பிடிச்ச பெண்ணோடு கல்யாணம் செஞ்சுட்டு சந்தோஷமா இருக்கனும் தான் இந்த விஷயத்தை அம்மாகிட்ட சொல்ல வேணாம்னு சொல்றேன். சத்தியமா வேறு எந்த காரணமும் இல்லை. எனக்கு நம்பிக்கை இருக்கு. அவனுக்கு கண்டிப்பா குழந்தை பிறக்கும். எனக்காக நீ இந்த உதவியை செய்வாயா என்று விக்னேஷ் கேட்டதும் மதுமதி அவன் மனநிலையை புரிந்துக் கொண்டு சத்தியமா நான் சொல்லமாட்டேன் என்று  அவனுக்கு வாக்கு கொடுத்தாள். 

 

வீட்டுக்கு வந்ததும் கவிதா இரண்டு பேரையும் பிடித்துக் கொண்டாள். வர்ஷினி என்னம்மா சொன்னாள்? என்று கேட்க, மதுமதி அவ ஏற்கனவே கல்யாணம் ஆனதால கௌரி மாமாவை கல்யாணம் பண்ணிக்கலாமா வேண்டாமா என்று மன குழப்பத்தில் இருக்கா. நான் சொல்லி புரியவச்சிட்டு வந்திருக்கேன் என்று நாசுக்காக மேலோட்டமாக சொல்லி முடித்தாள். உடனே கவிதா அந்த பொண்ணு எப்பதான் குழப்பம் இல்லாமே நல்ல முடிவா எடுத்திருக்கு, இப்போ எடுக்க, அவ சரிப்பட்டு வரமாட்டாம்மா. அவங்க அப்பா என்ன சொன்னார் என்று கேட்க , அவ அப்பாவுக்கு சம்மதம் தான் அத்தை என்று கூறியதும், உடனே கவிதா அப்பாவுக்கு சம்மதம் இருந்து என்ன பண்றது, இவ தான் சம்மதம் சொல்ல மாட்டேன்றாளே, சரி நா போய் உன் சீமந்தத்துக்கு வேண்டிய ஏற்பாடு செய்கிறேன். வீட்டில் ஒரு நல்லது நடந்தா அடுத்து அடுத்து கண்டிப்பா நல்லது நடக்கும் என்று சொல்லிக்கொண்டு அங்கிருந்து சென்றாள். மதுமதிக்கு தான் உண்மையை மறைக்கிறோமே என்று சற்று கவலையாய் இருந்தது.   

 

கௌரிக்கு விக்னேஷ் போன் பண்ணியிருந்தான். வர்ஷினி வீட்டுக்கு சென்று பேசியது அனைத்தையும்  அவனிடம் தெறிவிக்க, கௌரி, எனக்காக நீங்க வர்ஷினி வீடு வரைக்கும் போய் பேசியத்திற்கு ரொம்ப தேங்க்ஸ் அண்ணா என்று சொல்ல, தேங்க்ஸ் எல்லாம் சொல்லி என்ன வேற்று மனிதனாக்காதே என்று அதையும் அதட்டலாக சொல்ல கௌரி சிரித்துக் கொண்டே சரி என்று சொன்னான். விக்னேஷ், வர்ஷினி என்ன சொன்னாள்னு கேட்கவே இல்லையே என்று விக்னேஷ் கேட்க, வேறென்ன சொல்லிருப்பா, வழக்கம்போல தான், கௌரி ரொம்ப நல்லவர், அவருக்கு நான் பொருத்தமானவள் இல்லை, என்னாலே அவர் வாழ்க்கை கெடக்கூடாது என்று சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி இருப்பா. பரவாயில்லையே வர்ஷினியை பற்றி நல்லாத்தான் புரிஞ்சி வைச்சிருக்கே என்று விக்னேஷ் சொல்ல, அட நீ வேறு அண்ணா, இந்த வசனத்தை கேட்டு கேட்டு என் காதில் இரத்தமே வருது, நான் என்னத்தான் சமாதானம் சொன்னா கூட அவ கேட்கவே மாற்றா என்று புலம்பியதும், விக்னேஷ் நான் வேணா ஒரு ஐடியா சொல்லறேன், என்று விக்னேஷ் தன் திட்டத்தை கூற, கௌரியும் சூப்பர் ஐடியா அண்ணா. இப்பதான் நீ கிரிமினல் லாயர் என்பதை நிருபிச்சியிருக்கே என்றதும் விக்னேஷ், ஏய் படவா, போன போகட்டும், தம்பி ரொம்ப காதலிலே உருகிறானே கொஞ்சம் உதவி செய்யலாம்னு பார்த்தா என்னையே நீ கிண்டல் செய்யிறியா என்று பொய்யாக கோபித்து கொள்ள, கோவிச்சுக்காதீங்க அண்ணா, நீங்க என் செல்ல அண்ணா, பட்டு அண்ணா தானே என்று கொஞ்ச, போதும்  போதும் டா, உன் கொஞ்சல் எல்லாம் வர்ஷினிகிட்ட வச்சிக்கோ, பின்னாடி உனக்கு தேவைப்படும் இப்போ நான் சொல்றதை நல்லா  கேட்டுக்கோ, நான் இங்கு எல்லாம் ஏற்பாடும் செஞ்சிடுறேன், நீ சீமந்தத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே வந்திரு. இந்த வாய்ப்பை விட்டா உன்னாலே வர்ஷினியை கல்யாணம் பண்ணிக்க முடியாது. இதெல்லாம் உனக்காக மட்டும் செய்யல, வர்ஷினிக்காகவும் தான். அந்த பொண்ணு உன்னை விரும்புறேன்னு மது கிட்ட சொல்லி இருக்கு. வர்ஷினி ரொம்ப பாவம்டா, சின்ன வயசிலேயே அம்மாவை இழந்து, வாழ்க்கையை இழந்துனு ரொம்ப கஷ்டப்பட்டிருக்கு. நம்ம கண் முன்னாடியே வளர்ந்த பொண்ணு, நீ அந்த பொண்ணை நல்லா பாத்துப்பேன்னு நம்பிக்கையில் தான் நான் இதுலே இறங்கிறேன், இதை பத்தி வர்ஷினி அப்பாகிட்ட பேசிடு என்று சொல்ல கௌரியும் சரி என்று தலையாட்டி  விட்டு போனை வைத்தான்.    

 

கௌரி சொன்னபடியே ஒரு வாரத்திற்கு முன்பே சென்னை வந்து இறங்கினான். சீமந்தத்துக்கு துணி எடுக்கும் போது வழக்கம் போல் வர்ஷினிக்கும் எடுத்தான். ஆனால் இந்த தடவை உயர் ரக பட்டு புடவையும் போட்டு கொள்ள நிறைய நகைகளையும் வர்ஷினிக்கு என்று பாத்து பாத்து  வாங்கினான். இடையில் ஒரு நாள் வர்ஷினி வீட்டில் இல்லாத சமயம் பார்த்து கரணிடம் தங்கள் திட்டத்தை விவரிக்க, அவர் இதெல்லாம் சரியா வருமா என்று கேட்க, மாமா கண்டிப்பா சரியாய் வரும், உங்களை நம்பி தான் நாங்க இந்த பிளானையே போட்டோம் என்று கூற அவரும் தன் பெண்ணின் வாழ்க்கைக்காக சரி என்று ஒத்துக்கொண்டார் 

 

சீமந்தம் நாளும் வந்தது. அன்று மதுமதி அழகிய அரக்கு வண்ண புடைவையில் உடம்பு முழுவதும் சரிகை மின்ன முந்தானையில் கிருஷ்ணன் வெண்ணை அருந்துவது போல் பட்டு ஜரிகையிலேயே வேலைப்பாடு செய்து இருந்தார்கள். அதை பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது. விக்னேஷ் அந்த புடைவையை மதுமதிக்கென்றே சிறப்பாக ஆர்டர் செய்து காஞ்சிபுரத்தில் இருந்து தருவித்து இருந்தான். அதனோடு அவன் வாங்கி தந்த அணிகலன்களையும்  அணிந்து லேசான ஒப்பனை யுடன் சற்று மேடிட்ட வயிற்றுடன் அவள் நடந்து வரும் அழகு  விக்னேஷுக்கு கண் கொள்ளா காட்சியாய் இருந்தது. அவன் அவளையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க, அதை கண்ட மதுமதியின் கன்னம் வெட்கத்தில் சிவந்து மேலும் அவளை மிளிர வைத்தது. மேடை பிரம்மாண்டமாக பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.  அதில்  வேலைப்பாடுகள் நிறைந்த  அழகிய நாற்காலி ஒன்று போடப்பட்டிருந்ததில் மதுமதி அமர வைக்கப்பட்டிருந்தாள். அவளை சுற்றிலும்  நூற்றியொன்று வண்ண வண்ண தட்டுகளில் பழங்களும், உலர்ந்த பழ வகைகளும் மற்றும் பாதாம், பிஸ்தா, வால்நெட் போன்ற நட்ஸ் வகைகளும்  சீர்வரிசையாக அடுக்கப்பட்டு இருந்தது.  அதன் நடுவே மதுமதி அலங்கரிக்கப்பட்ட பொம்மை போல் அமர்ந்திருந்தாள். முதலில் கவிதா வந்து அவளுக்கு நலங்கு வைத்து வளையல் போட, பின் வரிசைசையாக ஒவ்வொருவரும் வந்து அவளுக்கு வளையல் அணிவித்தனர். 

 

இறுதியாக விக்னேஷ் அவளுக்கு வைர வளையல்களை அணிவித்தான். அதை பார்த்த மதுமதி இவ்வளவு விலை உயர்ந்த வளையல் எதுக்கு அத்தான், சாதாரண கண்ணாடி வளையலே போதும் என கூற கேட்ட விக்னேஷ் நீ என் ஆசை பொண்டாட்டி உனக்கு வாங்கி கொடுக்காம வேறு யாருக்கு வாங்கி கொடுக்க போறேன் என்று அவள் கன்னத்தை பிடித்து லேசாக கிள்ள, அவள்  வெட்கத்தாலும், பூரிப்பாலும் ஆசையாக அவனை பார்த்தாள். 

 

கௌரி, வர்ஷினி  எப்ப வருவா, நேரம் ஆகிண்டே போறதே இன்னும் இவளை ஆளையே காணோமே என்று எண்ணிக்கொண்டு வாசலையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். சிறிது நேரம் கழித்து வர்ஷினியும் அவள் தந்தையும் வர அப்போதுதான் கௌரிக்கு மூச்சே வந்தது. வர்ஷினி வந்ததும் அவள் கையை பிடித்து இழுத்து கொண்டு கரணையும் தன்னுடன் வருமாறு கண்களால் அழைத்து தனியறை  நோக்கி சென்றான்.  உள்ளே வந்ததும் வர்ஷினியிடம் ஒரு பையை கொடுத்து  இதிலே நான் வாங்கின புடவை நகை எல்லாம் இருக்கு சீக்கிரம் போட்டுட்டு தயாராகி வா என்று கூறிவிட்டு கரணிடம்  கண்களால் அவளை அழைத்து வருமாறு சொல்லிவிட்டு விறு விறுவென்று சென்று விட்டான். வர்ஷினிக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் உடுத்தி இருக்கும் உடை நல்லாத்தானே இருக்கு, இவன் எதுக்கு வேறு புடவை உடுத்தனும்னு இதை கொடுத்துட்டு போறான் என்று  புரியாமல் பையை திறந்து பார்க்க  அதிர்ந்தே விட்டாள். அதில் விலையுர்ந்த புடைவையும் மற்றும் மணப்பெண் அணியக்கூடிய அத்தனை நகைகளும் இருந்தன. இவன் என்ன பையை மாத்தி கொடுத்துடானோ? அவனுடைய அண்ணிக்கு கொடுக்க வேண்டிய பையாய் இருக்குமோ? இல்லையே ! அவனுடைய அண்ணி  தயாராகி அமர்த்திருந்தாங்களே என்று குழப்பத்துடன் தந்தையை பார்க்க, கரண், என்னம்மா பார்த்து கொண்டே இருக்கே, சீக்கிரமா இந்த புடைவை நகைகளை போட்டுகொண்டு வெளியே வா, உனக்கும் கௌரிக்கும் கொஞ்ச நேரத்தில் கல்யாணம், வெளியில் உனக்காக எல்லோரும் காத்துக்கொண்டிருக்காங்க என்று கூற வர்ஷினி திடுக்கிட்டு தந்தையை பார்த்தாள். இது நானும் விக்னேஷும் சேர்ந்து எடுத்த முடிவு. இப்ப நீ இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கலைனா, நான் எங்காவது கண் கானா இடத்துக்கு போய்டுவேன். இதை நான் உன்னை மிரட்டுவதற்காக சொல்லலை, என்னாலே உன்னை தினம் தினம் இப்படி பாக்க முடியலம்மா. நான் தான் உனக்கு சீக்கிரமா கல்யாணம் பண்ணி உன் வாழ்க்கையை கெடுத்திட்டோம்னு ஓரே குற்ற உணர்ச்சியாய் இருக்கும்மா. அதனாலதான் சொன்னேன் என்னை விட்ருமா, நான்  போய்ட்றேன்னு. என்னடா முதல் கல்யாணத்தை தான் வற்புறுத்தி செய்ய வச்சாரே இப்பவும் இப்படி செய்யுறாரே என்று  தப்பா நினைக்காதம்மா. அப்போ உங்க அம்மாவின் உடல்நிலையை மனசுல வச்சுட்டு செஞ்சது, ஆனா இப்போ  உன் எதிர்காலத்தை மட்டும் மனசில வச்சிட்டு, செய்யறது. நீ நல்ல இருக்கணும், சந்தோஷமா இருக்கணும் என்றது மட்டும் தான் யோசிச்சி இதுக்கு நான் சம்மதிச்சேன். என் காலத்துக்கு அப்புறம் நீ அனாதையா நிக்கக்கூடாது  என்று நினைச்சுதாம்மா இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். கௌரி ரொம்ப நல்ல பையன். அவன் உன்மேலே உயிரா இருக்கான். அவன் என்னைவிட உன்னை நல்லாவே பாத்துக்குவான். தயவு செய்து வேண்டாம் மட்டும் சொல்லாதம்மா என்று அவர் அவளை கெஞ்சும் முகத்துடன் பார்க்க, வர்ஷினி அப்பா என்னை பத்தியும்  என் மனசு பத்தியும்  உங்களுக்கு நல்லாவே தெரியும், எல்லாம் தெரிஞ்சும் ஏம்ப்பா இப்படி? என்று அவள் கண்ணீருடன் சொல்ல, சும்மா பழசையே நினச்சு உன் வாழ்க்கையும் கௌரியின் வாழ்க்கையையும் பாழகிடாதே. உன்னை பத்தி கௌரிக்கும் தெரியும் அவங்க வீட்டிலேயும் சொல்லியாச்சு, அவங்களே இதை பெரிசா எடுக்காதப்ப நீ ஏன் அதேயே பிடிச்சி தொங்கிட்டு இருக்கே என கோபமாக கேட்க, வர்ஷினி, என்னாலே முடியாதுப்பா என அழுதுக்கொண்டே கூற அப்ப சரி இதுக்கு மேலே நான் எதுவும் சொல்ல விரும்பலை. என் சொல்லுக்கு உங்கிட்ட மரியாதை இல்லாத போது நான் எதுக்கு உன் கூட இருக்கனும். எல்லாம் முடிவும் நீயே எடுக்கிற அளவுக்கு இப்போ வளர்ந்திட்ட, உன் இஷ்டப்படியே செய்யுமா. ஆனா நான் உன் கூட இருக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டு வெளியே கிளம்ப போக, அப்பா என்று வர்ஷினி அவர் கையை பிடித்து அவரை கட்டி கொண்டு என்னை விட்டுட்டு போகாதீங்கப்பா ! என்று கதறி அழ, அவள் அழுவதை பார்த்து கரணுக்கு உள்ளுக்குள் நெஞ்சு வெடிப்பது போல் இருந்தது. உன்னை இப்படி அழவைக்கறது என்னோட ஆசை இல்லம்மா. இனிமேலும் நீ அழக்கூடாது என்பதுக்காகத்தான் இப்படி பேச வேண்டியதாய் இருக்கு. என்னை மன்னிச்சுடும்மா என்று நினைத்துக்கொண்டு மனதை கல்லாக மாற்றி கொண்டு வர்ஷினியிடம் நான் போக வேண்டாம்ன்னா  இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கோ என்று கூற, வர்ஷிணிதான் தன் தந்தை மீது மிகுந்த பாசம் கொண்டவள் ஆயிற்றே, சரிப்பா உங்க விருப்பப்படி கௌரியை கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டே பையை திறந்து புடைவையை எடுக்க, கரண் நான் வெளியில் நிக்கிறேன், சீக்கிரமா ரெடியாகி வா என்று சொல்லிவிட்டு வெளியில் செல்ல அங்கே கௌரி அவரை எதிர்பாத்து நின்றுக் கொண்டிருந்தான். ஆவலுடன் சென்று அவரை பார்த்து என்ன மாமா, வர்ஷினி கல்யாணத்திற்கு சம்மதம் சொன்னாளா என்று கேட்க அவள் எங்கே சம்மதம் சொன்னாள், நான் தான் அவளை சம்மதிக்க வச்சியிருக்கேன். என் பொண்ணு இதுவரைக்கும் ரொம்ப அழுதுட்டா கௌரி, இனிமேல் அவளை நீ தான் அவ கண்களில் கண்ணீர் வராம பாத்துக்கணும்  என கலங்கியபடியே சொல்ல, கௌரி அவர் வேதனையை புரிந்து கொண்டு சூழ்நிலையை மாற்றும் விதமாக கவலைப்படாதீங்க மாமா, வர்ஷினியை வெங்காயம் கூட நறுக்க விடமாட்டேன்  என்று கூற கரணின் முகத்தில் லேசாக புன்னகை மலர்ந்தது.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page