அத்தியாயம் 21

அத்தியாயம் 21

மிதுன் அன்று காலை அலுவலகத்திற்குச் சென்றதும், முதல் வேலையாக ராகுலுக்கு செல்பேசியில் அழைத்தான். நண்பனின் பெயரை திரையில் பார்த்தும் போனை எடுக்காதவன், திரும்பத் திரும்ப அழைத்ததால் அட்டென்ட் செய்தான். 

“மித்து… இன்னும் அந்த பொண்ணு கிடைக்கல. ஆக்சிடென்ட் நடந்த இடத்துக்கு பக்கத்துல இருக்கிற ஏதாவது சிசிடிவி ஃபுட்டெஜ் கிடைக்குமான்னு விசாரிச்சுட்டு இருக்கேன். கிடைச்சதும் சொல்றேன்” மிதுன் இதைத்தான் கேட்பான் என முன்கூட்டியே பதிலைச் சொன்னான் ராகுல்.

“அதை விடு. நான் ஒரு பொண்ணு போட்டோ அனுப்புறேன். எனக்கு அவ ஃபுல் டீடெயில்ஸ் வேணும், அதும் டூ டேய்ஸ் குள்ள. மேக் இட் குயிக்” என்று கூறிய மிதுன், கையோடு நதியா போட்டோவையும் அவன் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பியிருந்தான்.

அன்று மாலை அவர்கள் தொழிற்சாலையில் தீ விபத்து எனக் கேள்விப்பட்டு விஷ்ணுவுடன் மிதுன் அங்கே சென்றான். தேவ், அரவிந்த், சத்யா மூவரும் அங்கிருந்தனர். நல்லவேளை தொடக்கத்திலேயே தீயைக் கண்டறிந்ததால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை, பொருட்சேதம் மட்டுந்தான். அங்கு பணியிலிருந்தவர்கள் பத்து பேர் தீவிபத்தில் காயமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க, அவர்களை பார்க்கச் சென்றனர்.

சின்ன சின்னக் காயங்களுடன் தப்பித்திருந்தவர்களை பார்த்ததும் மிதுன் முகத்தில் அப்பட்டமான வேதனை தெரிந்தது. அவன் தன்னுடைய தொழிலுக்கு ஆதாரமாக நினைப்பது தொழிலாளர்களைத்தான். அவர்களுக்குத் தேவையானதை சரியான நேரத்தில் செய்து தருபவன், அவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றதும் தாங்க முடியாத மன உளைச்சலில் இருந்தான். 

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு, அவர்கள் முழுமையாக குணமாகும் வரை விடுப்பும் பணமும் தருமாறு கட்டளையிட்டிருந்தவன், அங்கிருந்து நேராகச் சென்றது அவனுடைய சித்தப்பாவின் கம்பெனிக்குத் தான். எதிரில் வந்த காவலாளிகளை ஒரே கையில் அடித்து வீழ்த்தியவன், MD அறைக்குள் நுழைந்தான்.

மிதுன் அங்கு அமர்ந்திருந்த ராஜீவ் சட்டையைப் பிடித்து இழுத்து அடிக்க ஆரம்பிக்க, அவனுக்குப் பின்னால் வந்த அரவிந்த் வேகமாக அவனைத் தடுத்தான். 

கோபத்தில் மிதுனின் பழுப்புநிற விழிகள் சிவந்திருக்க, ராஜீவின் கழுத்தை நெறித்தபடி அவனைத் தரையிலிருந்து மேலே தூக்கியிருந்தான். ராஜீவ் மூச்சுக்குத் திணற, அரவிந்தாலும் அங்கிருந்த அகிலனாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை, மிதுனைத் தடுக்கவியலாமல் திகைத்திருந்தனர். 

திடீரென ராஜீவ் மனைவி ஸ்ருதியும், அவளைத் தொடர்ந்து அவனுடைய மகள் சாக்ஷியும் உள்ளே நுழைய, ஸ்ருதியைப் பார்த்ததும் மிதுன் அவனைக் கீழே போட்டிருந்தான். அவன் சுதாரித்து எழுந்து அமர, அப்போதுதான் “அப்பா..” என்றவாறு சாக்ஷி உள்ளே நுழைந்தாள்.

வேறெதுவும் பேசாமல் அங்கிருந்து ஆக்ரோஷமாக வெளியே சென்றவன், ராஜீவின் அலைபேசி எண்ணிற்கு அழைத்து, “உன் பொண்டாட்டி, பொண்ணு முகத்துக்காகத்தான் நீ இன்னும் உயிரோட சுத்திக்கிட்டு இருக்க. இன்னைக்கும் அவங்க வரல என் ஆளுங்க மேல கை வச்சதுக்கு இந்நேரம் நீ இல்லாம போயிருப்ப. இனிமே என் விஷயத்துல தலையிட்ட, நான் அவங்களுக்காக பாவமெல்லாம் பார்க்கமாட்டேன். உன்னை கொன்னுப் போட்டுட்டுப் போயிட்டே இருப்பேன்” எனக் கர்ஜித்தவாறு அங்கிருந்து வெளியேறினான்.

தங்களின் தலைமை அலுவலகத்திற்குத் திரும்பிய பிறகும், மிதுனின் மனம் ஒருநிலையில் இல்லை. ஆத்திரம் குறையாமல் அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தான். அவன் அன்று சந்தித்த கோர விபத்திற்குப் பிறகு, அங்கு கேட்ட மரண ஓலங்களுக்குப் பிறகு, ‘யாரையும் கொல்லக் கூடாது’ என்ற எண்ணத்தில் இருந்தான். ‘மரணத்தின் விளிம்பு வரை சென்று வந்தவனுக்கு ஞானம் வரும் என்பார்களே, அதனால் எந்த உயிரையும் எடுக்கக்கூடாது’ என தீர்க்கமாக முடிவெடுத்திருந்தான். 

ஆனால் ராஜீவின் எண்ணமெல்லாம் ‘மிதுனை எப்படி அழிக்கலாம், அவனுடைய தொழிலை எப்படி முடக்கலாம்’ என்பதுதான். அதைச் செய்ய விடாமல் தடுப்பதே அவனுக்கு பெரும் வேலையாக இருக்கிறது. 

‘மிதுன் தான் செய்வதைக் கண்டுபிடித்து விடுவான்’ என்று ராஜீவிற்குத் தெரியும், இருந்தாலும் ‘அவன் மன நிம்மதியைக் குலைக்க வேண்டும்’ என எதையாவது திட்டமிட்டு நிகழ்த்திக் கொண்டேதான் இருப்பான். 

நண்பர்கள் எவ்வளவு சமாதானப்படுத்த முயன்றும், மிதுனின் மனம் அமைதியடையவில்லை. தன் மடிக்கணினியைத் திறந்தவன், நதியாவின் வீடியோக்களைக் காணத் தொடங்கினான். 

மெல்லிய ஆண்மகனை பெண்ணுக்கு பிடிக்காது…

முரடா உனை ரசித்தேன்…

தொட்டதும் விழுந்துவிடும் 

ஆடவன் பிடிக்காது…

கர்வம் அதை மதித்தேன்…

முடி குத்தும் உந்தன் மார்பு 

என் பஞ்சு மெத்தையோ…

என் உயிர் திறக்கும் முத்தம் 

அது என்ன வித்தையோ…

உன்னைப் போலே ஆண் இல்லையே…

நீயும் போனால் நான் இல்லையே…

நீர் அடிப்பதாலே 

மீன் நழுவ வில்லையே…

ஆம் நமக்குள் ஊடலில்லை..

உன்னோடு வாழாத

வாழ்வென்ன வாழ்வு…

என் உள்நெஞ்சு சொல்கின்றது…

பூவோடு பேசாத காற்றென்ன காற்று…

ஒரு பூஞ்சோலை கேட்கின்றது…

இந்த பாடலுக்கு அவன் புகைப்படத்தை பார்த்தவாறு அவள் நடனமாடி, ரீல்ஸாக எடிட்டிங் செய்து வைத்திருந்தாள். நதியாவிற்கு காதலன் இருந்திருந்தால் அவனோடு ஆடியிருப்பாள். அவளுடைய வீட்டில் ஆளுயர டெட்டிபியர் ஒன்று இருக்கும். அதை கட்டிப்பிடித்து டூயட் பாடல்களுக்கு ஆடிக்கொண்டிருந்தாள்.

இந்த வீட்டில் பாவம் அவளுக்கு கிடைத்தது மிதுனின் ஆளுயர புகைப்படம் தான். அதைப் பார்த்து, தொட்டு, ரசித்துக்கொண்டே இன்னும் சில காதல் பாடல்களுக்கு நடனமாடியிருந்தாள். 

அவள் ரீல்ஸ் செய்ய தேர்ந்தெடுக்கும் பாடல்களும், அவளுடைய எடிட்டிங்கும் தான் அவனுக்குப் பிடித்திருந்தன. இவ்வளவு நேரம் நடந்ததெல்லாம் மறந்து போய் மடிக்கணினியின் திரையையே அவன் கண்கொட்டாமல் பார்த்திருக்க, எதிரில் அமர்ந்திருந்த நண்பர்கள் எழுந்து அவனுக்கு அருகில் சென்று, லேப்டாப்பை பார்த்ததும் வாயை பொத்திக் கொண்டனர்.

‘போச்சா… போச்சா… அவங்களும் பார்த்துட்டாங்களா?’ விஷ்ணு மனதிற்குள் நினைத்து சிரித்துக்கொண்டான். “மித்து… என்னடா இதெல்லாம்?” அரவிந்த் அதிர்ச்சியாய்க் கேட்க, மிதுன் பதிலேதும் பேசாமல் மடிக்கணினியை எடுத்துக் கொண்டு கிளம்பினான். 

“உன்கிட்ட தானே பேசுறோம். நீ பாட்டுக்குக் கிளம்புற? எங்க போற?” என்று சத்யா வினவியதும், “வீட்டுக்குக் கிளம்புறேன். ஐ நீட் சம் ரெஸ்ட்” என்றவாறு வெளியே சென்றான். 

அறைக்குள் நுழைந்தவனை நதியா ஆச்சரியத்தோடு நோக்கியவள், ‘என்ன இப்போலாம் தினமும் சீக்கிரமா வந்திடுறார் போல?!’ என தன்னோடு நினைத்திருக்க, அவனோ குளித்து பார்மல் உடையிலிருந்து டி-ஷர்ட் ஜீன்ஸ்க்கு மாறியிருந்தான். 

‘மன அமைதிக்காக வெளியே செல்லலாம்’ என்ற யோசனையில் தன்னையே திகைப்போடு பார்த்துக்கொண்டிருந்த நதியாவின் பக்கம் திரும்பி, அவளுக்கருகில் சென்றான்.

‘வேணாம் மிதுன் அவளைக் கூப்பிடாத’ மூளை அவனுக்குக் கட்டளையிட, “நதியா வா… கொஞ்சம் வெளியில போயிட்டு வரலாம்” அவனது இதழ்களோ அவன் மனதில் தோன்றியதை உரைத்தன. 

நதியா அருகில் இருக்கும்போதெல்லாம் மிதுனின் மூளை செயல்படுவதில்லை. செயல்பட்டாலும் அவன் அதைக் கண்டுகொள்வதில்லை. அவள் உடை மாற்றி வர, டிரைவரை வேண்டாம் என்றுவிட்டு காரில் இருவர் மட்டும் கிளம்பினர்.

மிதுன் கூலர்ஸ் மாட்டிக் கொள்ள, ‘இவர் ஏன் நைட் டைம்ல கூலர்ஸ் போட்டிருக்கார்? சாருக்கு அப்படியே காக்க காக்க சூர்யான்னு நினைப்பு. நான் ஜோதிகா மாதிரி தான் இருக்கேன், ஆனா அவர் ஒண்ணும் சூர்யா மாதிரி இல்ல’ அவள் மனதிற்குள் நினைத்ததும், அவளுடைய மனசாட்சியே அவளைக் காறித் துப்பிட, சிரித்துக்கொண்டாள்.

அவள் சிரிப்பைப் பார்த்ததும், ‘பழைய நதியா திரும்பிவிட்டாள், ஏதோ மனதிற்குள் நினைத்து சிரிக்கிறாள்’ எனக் கண்டறிந்தவன், “என்னாச்சு நதியா? எதுக்கு சிரிக்கிற?” அதைக் கேட்டும் விட்டான்.

“ஒண்ணுமில்ல சார்… ஒரு ஜோக் ஞாபகம் வந்தது சிரிச்சேன்” என்று அவள் சமாளிக்க, “அடல்ட்ஸ் ஒன்லி ஜோக்கா? நான் கூட ஏதோ அந்த மாதிரி பட சீன் ஞாபகம் வந்து சிரிச்சியோ அப்படின்னு நினைச்சேன்” எனக் குறும்பாகக் கேட்டவன், அவள் என்ன பதில் சொல்வாள் என அவளைத் திரும்பிப் பார்த்தான்.

“அய்யோ… நான் அதெல்லாம் பார்க்கமாட்டேன்ப்பா” என்றவள் திருதிருவென விழித்தாள்.

“அதைப் பார்க்கிறதுல என்ன இருக்கு? அது ஒண்ணும் தப்பான விஷயம் இல்லையே?” அவள் ஆமாம் என்று ஒத்துக்கொள்ளும் வரை அவனும் விடுவதாயில்லை. “சார்… நான் சத்தியமா பார்த்ததில்ல” தவறாக நினைத்து விடுவானோ என அவள் பொய் சத்தியமே செய்திட, மிதுன் வாய்விட்டு சத்தமாகச் சிரித்தான்.

இருவரும் சேர்ந்து சென்றது கோயம்புத்தூர் உக்கடத்தில் இருக்கும் பெரியகுளம் ஏரிக்கு. அதுதான் இப்போது ‘ஐ லவ் கோவை பார்க்’ ஆகிவிட்டதே! சென்னைக்கு மெரீனா எப்படியோ கோவைக்கு இந்த பெரியகுளம். ஏரியைப் பார்த்தவாறு அங்கிருந்த கல் இருக்கையில் அமர்ந்தவர்கள், வீசும் குளிர்காற்றில் அமைதியாய் அந்த இதமான தருணத்தை ரசித்திருந்தனர். 

“இங்க ஏற்கனவே வந்திருக்கியா நதியா?” மிதுன் அவர்கள் மௌனத்தைக் கலைக்கும்படி பேச்சைத் தொடங்கினான். “ஹ்ம்ம்… ஃப்ரெண்ட்ஸ் கூட வந்திருக்கேன்” மீண்டும் அவள் மனதில் பழைய நினைவுகளின் கனம் வந்து ஒட்டிக்கொள்ள, “வா… நாம போய் ஏதாவது சாப்பிட வாங்கிட்டு வரலாம்” என்று அவளை அழைத்துச் சென்றான்.

அங்கிருந்த படகுக்குழாமில் முதலை போன்ற தோற்றமுள்ள படகு புதிதாய் வந்திருக்க அதிலேறிக் கொண்டனர். இவர்களைப் போலவே இன்னும் இரண்டு காதல் ஜோடிகள் தான் அதில் அமர்ந்திருந்தனர்.(இவங்க தான் காதல் ஜோடி இல்லையோ)

படகில் அமைதியாக அமர்ந்திருந்த இருவரும், கரிய இருளில் மின் விளக்குகளின் வெளிச்சத்தில் நீரின் அழகை ரசித்திருந்தனர். இன்னும் சிறிது தூரம் சென்றதும் வானில் இருந்த முழு நிலவின் ஒளி நீரில் பட்டுச் சிதறிட, அது பார்ப்பதற்குக் கொள்ளை அழகாய் இருந்தது. மிதுன் அவளை நெருங்கியமர்ந்து, அவள் தோளில் கையைப் போட, நதியா திரும்பி அவனைப் பார்த்தாள். அவனோ ஏரியில் பார்வையைப் பதித்திருந்தான். 

தன் தோளின் மீதிருந்த அவனுடைய கையை அவள் எடுத்துவிட, அதன் பிறகு பேசாமல் இருந்துகொண்டான். படகு சவாரி முடிந்ததும் அங்கிருக்கும் ரிவர்வியூ ஃபுட் ஸ்டாலுக்கு சென்றவர்கள், ஏரியைப் பார்த்தவாறு எதிரெதிரே அமர்ந்துகொண்டனர்.

“ரெண்டு செஸ்வான் ஷவர்மா, ஒரு மொஜிட்டோ, ஒரு கசாட்டா ஐஸ்கிரீம் கொண்டு வாங்க” என்று உணவினை ஆர்டர் செய்தான். 

நதியா அவனை ஆச்சரியத்தோடு உற்றுநோக்க, அவனோ தன் அலைபேசியில் பார்வையைப் பதித்திருந்தான். 

நதியாவின் புகைப்படங்களை வைத்தே ‘அவள் அடிக்கடி எங்கு செல்வாள்? என்ன சாப்பிடுவாள்?’ என எல்லாவற்றையும் தெரிந்துகொண்டவன், அவளுக்காகத்தான் இங்கே வந்தான். ஆனால் அவள் மூலமாகத் தன்னுடைய காதல் கனவுகளை அவன் நிறைவேற்றிக் கொண்டிருந்தான். 

ஆர்டர் செய்தவை வந்ததும் நதியா ஏரியைப் பார்த்தபடி அவற்றை உண்ணத் தொடங்க, மிதுனோ அவளின் இதழைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

‘இந்த இதழ்களில் என்னதான் இருக்கிறது?! என்னை கட்டியிழுத்திடும் வித்தை! அவளுக்காக இதையெல்லாம் செய்ய வைத்திடும் விந்தை! ஆனால் ஏதோ ஒன்று இருக்கிறது’ ரசனையோடு அதில் லயித்திருந்தான். (விட்டா கவிதையே எழுதுவான் போல…)

இருவரும் சாப்பிட்டு முடித்து ஏரிக்கரையோரம் அமர்ந்தனர். வீட்டிற்கு வெளியே சென்று நீண்ட நாட்கள் ஆகியிருந்ததால் நதியா அந்த தருணங்களை ரசித்திருக்க, அவனோ அவளை இல்லையில்லை… அவள் இதழைத்தான் ரசித்திருந்தான். 

நதியா மிதுனின் பக்கம் திரும்பியவள், மோகத்தோடு புன்னகைத்தவனைக் கண்டு பதிலுக்கு இதழ் விரித்து அவளும் ஒரு முறுவலைத் தர, அதில் மயங்கியவன் அந்த இதழ்களை தனக்குச் சொந்தமாக்கியிருந்தான். 

காற்றின் ஈரப்பதமும், அவளுடைய ஈர இதழ்களும் ஏனோ அவனுக்கு வெப்பத்தைத்தான் தந்தன. அவர்கள் முத்தத்திற்கு காதலென்றும், மோகமென்றும் பெயர் வைத்திட மனமில்லாமல் தவித்திருந்தவன், முத்தத்தை ஆழமாக்கி அதை வன்முத்தமாக்கிட, அவன் தந்த முத்த போதையில் மனம் தொலைந்திருந்தவள், அதிலிருந்து மீண்டு அவனுடைய மார்பில் கை வைத்துத் தள்ள முயற்சித்தாள்.

மூச்சுக்கு விலகியவன் மீண்டும் அவள் இதழைப் பற்றிக்கொள்ள, ‘பொது இடத்தில் இப்படி செய்கிறானே?’ என்ற தவிப்பு ஒருபக்கம், ‘புதிதாக அவன் ஏதேதோ செய்கிறான்’ என்ற குழப்பம் மறுபக்கம் என நதியா அவஸ்தையில் நெளிந்தாள். 

❤️‍🔥 மோகம் தீர்ப்பாள் ❤️‍🔥 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!