அத்தியாயம் 22

அத்தியாயம் 22

 

வசுந்தராவின் கரு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து கொண்டிருந்தது. வித்யாதரன், பொன்னப்பன், அமுதா என மூவரும் அவளை உள்ளங்கையில் வைத்துத் தாங்கினார்கள். ஆனாலும் அவளின் மனதில் ஒரு ஏக்கம் இருந்தது.

‌தன்னை விட்டுப் பிரிந்து சென்ற தன் மூத்த சகோதரனைப் பற்றிய தகவலைத் தேடி தோற்றுத்தான் போனாள் பெண்ணவள்.

கைலாசநாதன் தன் மனைவியை அழைத்துக் கொண்டு எங்குச் சென்றானோ யாருக்கும் அது தெரியவில்லை. சிவகாமியின் பிறந்த வீட்டிற்குக்கூட அவர்கள் செல்லவில்லை. அவளின் பெற்றோர்கூட அவளைத் தேடிக் கொண்டிருப்பதாகத் தகவல்.

‌பெண்ணவளின் மனம் ஊமையாய் கண்ணீர் வடித்தது தன் தமையனை வெளியே அனுப்பி வைத்த குற்றவுணர்ச்சியில்.

அதே சமயம் அமுதாவிற்கு மாணிக்கத்தின் மேல் இருந்த காதல் எனும் போதை அதிகமாய் ஆனது. அவன் என்ன சொன்னாலும் அதற்கு எதிர்கேள்வி கேட்காமல் தலையாட்டி வைத்தவள் ஒரு விடயத்தில் மட்டும் தெளிவாய் இருந்தாள் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆம். எந்தச் சூழ்நிலையிலும் அவளை அவள் இழக்கவில்லை. ஏனோ அவனின் பேச்சிற்கு சரி என்று முதலில் ஒத்துக் கொண்டாலும்கூட அவள் வளர்ந்த விதம் அவளை அதற்குச் சம்மதிக்க விடவில்லை.

‌எத்தனையோ முறை முயன்றும்கூட அவனால் அவளை அடைய முடிவில்லை. அதுவே அவனுக்கு அவளின் மேல் கடுப்பைக் கிளப்பியது. ஆனாலும் அவளை அடையும் தருணத்திற்காய் காத்திருந்தான்.

இந்த நிலையில்தான் வசுந்தராவிற்கு ஏழாம் மாதம் நடக்கையில் கோவிலுக்கு வந்தவள் குளக்கரைப் படியில் காலை நனைத்துக் கொண்டிருந்த வேளையில் கால் வழுக்கிக் கீழே விழுந்தவளின் அடிவயிற்றில் அடிபட, “அம்மா…” என்ற அவளின் அலறல் அந்தப் பகுதியையே அலற வைத்திட, அவளின் அலறலைக் கேட்டுச் சந்தோஷமாய் நின்றபடி துடிக்கும் அவளையே வேடிக்கை பார்த்திருந்தது அந்த முக்காடிட்ட உருவம்.

அந்த உருவம் யாரோ…?

சற்று நேரத்திற்கு எல்லாம் அவளின் அலறல் சத்தம் கேட்டு அந்த இடத்தில் கூட்டம் கூடிவிட அவளின் மேல் மரியாதை வைத்திருந்த சிலர் அவளைக் காப்பாற்ற தூக்கிக் கொண்டு ஓடினார்கள் அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு.

இந்த விடயத்தைக் கேட்ட வித்யாதரனும், பொன்னப்பனும் மருத்துவமனைக்கு வருவதற்குள்ளாக வசுந்தராவையும் குழந்தையையும் காப்பாற்ற முடியாது எனப் பக்கத்து டவுனிலிருந்து பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட்டனர்.

இவர்களும் பதறியடித்துக் கொண்டு அங்கிருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு செல்லும் வழியில் அந்த மோட்டார் சைக்கிள் வெடித்துச் சிதறியது.

அந்த இடத்திலேயே வித்யாதரனும், பொன்னப்பனும் தீயில் கருகி இறந்துவிட்டனர்.

அங்கே மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வசுந்தரா தன்னவனை எதிர்நோக்கி வலி வேதனையுடன் காத்திருக்க, ஆனால் அவளுக்கு வந்த செய்தியோ அவன் தீயில் கருகிய செய்திதான்.

வேதனை தாளமாட்டாமல், “ஆஆஆ…” என்று ஓங்கிக் குரலெடுத்துக் கதற அவளின் அலறலில், அவளின் புதல்வனை பூமித் தாய் தன்னோடு அரவணைத்துக் கொண்டாள்.

குறைபிரசவத்தில் பிறந்த வசுந்தராவின் மகனோ சுத்தமாய் அழாமல் இருக்க மருத்துவர்களோ அவன் இறந்துவிட்டான் என்று நினைக்கும் நொடியில் உங்கள் நினைவுக்கு அப்பாற்பட்டவன் நான் என்ற செய்தியுடன், “வீல்…” என்று அந்த இடத்தையே பிளந்தெடுப்பது போல் கதறினான்.

ஆனால் வசுந்தராவின் நினைவுகளோ தன்னவனின் பின்னே சென்று அவளைக் கோமாவிற்கு தள்ளியது.

பிறந்தவுடன் தந்தையை இழந்து, தாய் உயிர் இருந்தும் நினைவு இல்லாமல் இருக்க, தாயின் ஸ்பரிசமும் தந்தையின் ஸ்பரிசமும் கிடைக்காமல் அனாதையாய் இருந்தான் விவேகன்.

வசுந்தராவின் வாழ்வை நிலைகுலைய செய்துவிட்ட நிம்மதியில் தன் பண்ணை வீட்டில் சந்தோஷமாய் மது குடித்துக் கொண்டிருந்தான் மாணிக்கம்.

அவனின் முன்னே இருந்தவளைக் கண்டவனின் கண்கள் இரத்தச் சிவப்பேறியது.

தன் ரகசியத்தை அறிந்து கொண்டவள் அவள் மட்டும் தான். ஆனால் அவளைக் கொல்ல அவனின் மனம் நினைக்கவில்லை. அவனின் விருப்பப்படி அவளை அனுபவிக்க வேண்டும். எந்தக் கற்பைக் காப்பாற்ற தன்னை விட்டு விலகியே இருந்தாளோ இன்று அதே கற்பை அவளிடமிருந்து பறிக்க வேண்டும் என்ற வெறிதான் அவனிடம் இருந்தது.

ஆம். அங்கே ஆழ்நிலை மயக்கத்தில் இருந்தவள் அமுதாதான்.

வசுந்தராவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நேரம் அவள் மாணிக்கத்தை தேடி வர, அங்கே அவனும் இன்னொரு உருவமும் பேசிக் கொண்டிருந்ததை கேட்டவள் அதிர்ந்துதான் போனாள். அன்றுதான் அவள் நேசித்தவனின் அரக்க குணத்தைக் கண்டவள் அங்கிருந்து தப்பிச் செல்லும் நேரம் அவளைக் கண்டுவிட்டவன் அவளின் தலையில் அடித்து அவளின் அரை மயக்க நிலையில் அவளருகில் வந்தவன் எள்ளலாகச் சிரித்தபடியே அவளையே பார்த்தவன்,

“பாருடா, செல்லத்துக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சிடுச்சு. என்னடா பண்றது? இப்படியே இருடா செல்லம்… உன் குடும்பத்தை முழுசா அழிச்சிட்டு வரேன்.” என்றபடி தன் கையில் வைத்திருந்த கட்டையால் மீண்டும் ஓங்கி அடிக்கப் பெண்ணவளோ ஆழ்ந்த மயக்கத்திற்குச் சென்றாள்.

அவளை அங்கிருந்து தூக்கி உள்ளே இருந்த அறையில் போட்டவன் அங்கிருந்து சென்றுவிட்டான்.

இதோ இப்பொழுதுதான் அவனின் பழி தீர்க்கும் படலத்தை முடித்துவிட்டு வந்திருந்தவன் முகத்தில் உதிரம் வழிய ஆழ்நிலை மயக்கத்தில் இருந்தவளைப் பார்த்தபடி குடித்துக் கொண்டிருந்தான்.

அவனின் விழிகளுக்கு அவளின் அழகு போதையேற்றியது. அந்த அழகை அடையத்தானே அவளிடம் அத்தனை நல்லவனாய் காட்டிக் கொண்டது.

இன்று அந்த அழகை அடைய வேண்டியது அவனின் இலக்கு.

அவனின் மனம் இன்று அத்தனை சந்தோஷமாய் ஆர்ப்பரித்தது. அவனின் அடுத்த இலக்கு இன்று நிறைவேறிய சந்தோஷம் அவன் போதையேறிய கண்களில் மேலும் போதையேற்றியது. அவளைக் கண்களில் வக்கிரத்துடனும் பேராசையுடனும் நெருங்கும் நேரம் அவனின் அலைபேசி சத்தமிட்டுத் தன் இருப்பை உணர்த்தியது.

அதை எடுத்துக் காதுக்குக் கொடுத்தவன் அந்தப் பக்கம் என்ன சொல்லப்பட்டதோ அடுத்த நொடியே ஆத்திரத்துடன் அங்கிருந்து சென்றான் மயக்கத்தில் இருந்தவளை பார்த்தபடி.

ஆனால் அந்த நேரத்தில் மயக்கத்தில் இருந்தவளோ மெல்ல மெல்ல தன் மயக்கத்திலிருந்து வெளியே வர அவன் வெளியேறியதைக் கண்டு மெல்ல எழுந்தவளுக்கு அங்கிருந்து தப்பிப்பது தான் முதல் வேலையாக இருந்தது.

மனம் கனக்க அங்கிருந்து அடிப்பட்ட தலையுடன் தப்பித்தாள் பெண்ணவள். அவள் அங்கே செல்வதற்குள்ளாகவே வசுந்தராவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்த நேரம் அவளின் கணவனும் மாமனாரும் தீயில் கருகி இறந்த செய்தி அவள் காதுகளை எட்டியது.

அவளுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. இது எப்படி நடந்தது என்று யோசிக்கும் திறனையும் சுத்தமாய் இழந்திருந்தாள் பெண்ணவள்.

அதே நேரம் தலையில்பட்ட அடியுடன் அவளிடம் வந்த அமுதாவிற்கும் தமையனும் தந்தையும் இப்பூவுலகில் இல்லாத செய்தியை எப்படி வசுந்தராவிடம் சொல்வது என்று புரியாதவளுக்கு அதிக வேலை வைக்காமல் ஊரின் ஆட்கள் தெரியப்படுத்தியிருக்க அப்பொழுது தான் பிறந்த பச்சை பிள்ளையும் தந்தை இறந்த செய்தி தெரிந்தோ தெரியாமலோ அந்த மருத்துவமனையே அதிரக் கத்தி கொண்டிருந்தது.

தங்கள் வீட்டின் பாதுகாவலர்களாய் இருந்த ஆண்கள் ஒரே நேரத்தில் இறந்த துக்கம் பெண்களைப் பலமிழக்க செய்தது.

பிள்ளை பெற்ற பச்சை உடம்புடன் தனது கணவனுக்கும், மாமனாருக்கும் இறுதி காரியங்களைச் செய்தாள் வசுந்தரா. அமுதாவோ அழுதழுது சுயநினைவு இல்லாமல் கிடந்தாள்.

அவளின் மனதில் இருந்த குற்றவுணர்ச்சியும் அவளை மேலும் பலமிலக்க செய்தது. எத்தனை பெரிய அரக்கனை நேசித்திருக்கிறாள்?

தான் ஏமாந்ததுக்கும் தன் அண்ணன், அப்பா இருவரின் மரணத்திற்கும் அழுதே சலித்தாள். அவளைச் சமாளிக்க முடியவில்லை எவராலும்.

ஒரு சிலரோ அவளின் வேதனையை அழுது தீர்த்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிட இங்கே ஒருத்தியோ அழாமல் வெறித்த பார்வையுடனேயே தன்னவர்களுக்கு இறுதி மரியாதை செய்துகொண்டிருந்தாள்.

தன் வலியையும் வேதனையையும் உள்ளுக்குள்ளே போட்டு உருக்கிக்கொண்டிருந்தாள். இங்கே இப்படியிருக்க, அவளின் பிறந்த வீட்டிலோ மாணிக்கத்தின் திருமணம் சகுந்தலாவுடன் யாரும் எதிர்பாராத நேரத்தில் நடந்து முடிந்திருந்தது.

அதன் காரணமாய் ஜாதகத்தில் தோஷம் எனக் கற்பகநாயகியால் சொல்லப்பட்டது.

ஆனால் ஊர் மக்களோ அதிர்ச்சியில் இருந்தனர். என்னதான் பிடிக்காத மகள் என்றாலும் கூட இப்படியா செய்வது என்று பேசாதா ஆட்கள் இல்லை. ஆனால் அவர்கள் முன்னிலையில் யாருக்கும் சொல்லும் தைரியம் வந்துவிடவில்லை. பின்னே யார் மாணிக்கத்திடம் விரோதம் பகைத்துக் கொள்வது?

முன்பே அடங்காமல் திரிந்தவன் இப்போது சர்வாதிகாரி போலத்தானே திரிகிறான். அதுவும் கைலாசநாதன் வீட்டை விட்டும், ராஜவேலு உலகத்தை விட்டும் சென்றுவிட அதற்கு மேல் அவனை அங்கே அடக்க யார் தான் இருக்கிறார்கள்?

அவன் வைத்ததுதான் அங்கே சட்டமானது. வசுந்தராவும் பெரிதாய் எதிலும் கலந்து கொள்ளாதது அவனுக்குச் சாதகமாய் போய்விட அதில் வந்த துணிவுதான் இன்று வசுந்தராவின் குடும்பத்து ஆட்களை அழிக்க வைத்தது.

விபத்தில்தான் தன் குடும்பத்து ஆட்கள் இறந்தது என்று அவள் நினைத்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் அது மாணிக்கத்தால் திட்டமிடப்பட்டு செய்த சதி என்று தெரிந்தால் பெண் சிங்கத்தின் கர்ஜனை எப்படி இருக்கும் என்று யாரும் அறியவில்லை.

ஏன் கற்பகநாயகியே மகளின் மாங்கல்யம் பறிக்கப்பட்டதை பெரிதாய் எடுத்துக் கொள்ளாமல் மகனுக்குத் திருமணம் செய்து வைத்த உயர்ந்த தாயல்லவா? ஆனால் அதன் வினையை அனுபவிக்க காலமகள் நாட்களை வெகுபக்கமாய் அல்லவா வைத்திருந்தாள்.

அவர்களின் அராஜகத்திற்கு நாட்கள் வெகுகுறைவு. இது இறைவனின் கட்டளை அல்லவா!

‌அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்! ஆனால் நிச்சயம் கொல்லும். அதன் வீரியம் அவர்களின் குடும்பத்தையே சிதைக்கும் நொடியும் வெகுவிரைவில்…?

வித்யாதரனும், பொன்னப்பனும் இறந்து முழுதாய் ஒரு மாதம் முடிந்து விட அவர்களின் இழப்பிலிருந்து இன்னும் பெண்களால் எளிதாக வெளிவர இயலவில்லை.

ஆனால் அதே நேரம் பிறந்த குழந்தை அந்த வீட்டில் இருக்க அவர்களால் தங்கள் வேதனையைக்கூட முழுதாய் வெளிப்படுத்த இயலாத நிலையில் இருந்தனர்.

குழந்தைகாகவெனச் சற்று தன்னை மீட்டுக் கொண்டாள் வசுந்தரா. ஆனால் அமுதாவோ வாழும் ஒவ்வொரு நொடியும் பயத்தையும் துக்கத்தையும் சுமந்து கொண்டிருந்தாள்.

குழந்தையைக்கூட அவள் இன்னமும் சரியாகப் பார்க்கவில்லை. அந்த அளவுக்கு அவளின் மனம் வேதனையில் தத்தளித்து கொண்டிருந்தது.

சரியாய் மூன்று மாதம் கழித்துத்தான் அமுதாவின் நிலையைக் கவனித்த வசுந்தரா அவளிடம் பேச வேண்டும் என்று நினைத்தாள்.

அன்று இரவுக் குழந்தையை உறங்க வைத்து விட்டுத் தன்னவனின் நினைவில் உழன்று கொண்டிருந்த வசுந்தராவின் காதுகளில் முனகல் சத்தம் கேட்க வேகமாய் தனது கட்டிலுக்கு பக்கத்தில் மற்றொரு கயிற்றுக் கட்டிலைப் போட்டுப் படுத்திருந்த அமுதாவிடமிருந்து சத்தம் வந்ததைக் கண்டு மெல்ல எழுந்து அவளிடம் சென்று, “அமு…” என்று மெல்லக் கைவைத்து எழுப்ப, “ஆஆஆ…” என்ற அலறலுடன் பயந்து எழுந்தாள்.

அவளின் அலறலிலும் கண்களின் அலைபாய்தலிலும் வசுந்தராவோ பயந்துதான் போனாள்.

ஆனால் அடுத்து அமுதா‌ அவளைப் பார்த்துக் கேட்ட கேள்வியில் வசுந்தராதான் அதிர்ச்சியின் எல்லைக்கே சென்றாள்.

 

அப்படி அமுதா என்ன தான் கேட்டாளோ? அடுத்த பாகத்தில் பாக்கலாம் செல்லம்ஸ்.

‌மாலை வரும்…✍️

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page