சிறிது நேரத்திலேயே வர்ஷினி கௌரி வாங்கி தந்த பட்டு புடவையும், நகைகளையும் அணிந்து கொண்டு வந்தாள். அவள் வெளியே வந்ததும் ஆச்சரியத்தில் அவள் கண்கள் அகலமாக விரிந்தது. ஆம். கௌரி அந்த சீமந்தம் நடந்த இடத்தையே கல்யாணம் நடக்கும் இடமாக மாற்றி இருந்தான். ஐயர் அங்கு வந்து கல்யாணத்திற்கு தேவையான ஏற்பாடுகளை செய்துக் கொண்டிருந்தார் . ஓம குண்டமும் கூட மேடையில் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு வந்த அனைவரும் மதுமதியின் சீமந்தம் தானே சொல்லி அழைத்து இருந்தாங்க, இப்போ என்ன தீடீரென்று கல்யாண ஏற்பாடுகள் நடக்குது என்று ஒன்றும் புரியாமல் ஒருவருக்கொருவர் அவர்களுக்குள் பேசிக் கொண்டிருக்க மண்டபமே சலசலத்துக் கொண்டிருந்தது. தீடிரென்று மேடை ஏறிய விக்னேஷ் அங்கிருந்த அனைவரையும் பார்த்து எல்லோருக்கும் வணக்கம், இன்னும் சற்று நேரத்தில் என்னுடைய தம்பிக்கும்,வர்ஷினிக்கும் திருமணம் நடக்க போகிறது. நீங்க எல்லோரும் சிரம பார்க்காம கொஞ்ச நேரம் காத்திருந்து அவர்களையும் ஆசிர்வதிக்கணும். இந்த கல்யாணத்தை தீடிரென்று ஏற்பாடு செய்ததாலே எங்களாலே உங்ககிட்ட முன்பே சொல்ல முடியலே. அதுக்காக எங்களை மன்னிச்சுடுங்க . எல்லோரும் இந்த கல்யாணத்தை பார்த்துட்டுட்டு சந்தோஷமா மணமக்களை ஆசிர்வதித்து மறக்காம சாப்பிட்டு போங்க என்று கூறிவிட்டு கீழே வந்தான்.
சிறிது நேரத்தில் மாப்பிள்ளையை கூப்பிடுங்கோ என்று ஐயர் அழைக்க, கௌரி வந்து அவர் அருகில் அமர்ந்து ஐயர் சொல்ல சொல்ல மந்திரத்தை சொல்லி கொண்டிருந்தான். பின் வர்ஷினியை அழைத்து வந்து அவனது அருகில் அமர வைக்க வர்ஷினி கௌரியை முறைத்து கொண்டே இருந்தாள். கௌரி அவளை திரும்பி கூட பார்க்கவில்லை. எங்கே அவளை பார்த்தால் அங்கேயே அவனை திட்டிவிடுவாளோ என்று பயந்து கொண்டு அவளை பார்க்காமல் ஐயரை பார்த்துக்கொண்டே அவர் சொன்ன மந்திரத்தை தானும் சொல்லிக்கொண்டிருந்தான். கல்யாணத்திற்கு முன்பே எல்ல ஏற்பாடுகளையும் பண்ணிட்டு என்னை என் அப்பா மூலம் மிரட்டி இந்த கல்யாணத்திற்கு சம்மதம் சொல்ல வச்சியிருக்கான் இந்த கருவாயன். சங்கரு நீ என்கிட்ட தனியா மாட்டம்ல போய்டுவே, அப்ப உன்னை வச்சிக்கிறேன்டா என்று
மனதினுள் கருவிக்கொண்டே முகத்தை தூக்கி கொண்டு அமர்ந்திருக்க, ஐயர் அவளை பார்த்து கல்யாண பொண்ணு இப்படி முகத்தை உம்முன்னு வச்சிக்கலாமோ! நல்லா சிரிச்சிண்டு இரும்மா என்று சொல்ல வர்ஷினி வேணும் என்றே ஈ என்று முப்பத்திரண்டு பற்கள் தெரியும்படி சிரிக்க, உடனே ஐயர் கெட்டி மேளம் கெட்டி மேளம் என்று சொல்லி கௌரியிடம் தாலியை நீட்ட கௌரி அதனை வாங்கி வர்ஷினி கழுத்தில் கட்டி அவளை தன் மனைவியாக ஏற்றுக்கொண்டான். அனைவரும் பூ மாரி பொழிந்து அவர்களை வாழ்த்தினர். கௌரிக்கு இப்போதுதான் மூச்சை ஒழுங்காக விடவே முடிந்தது. இவ்வளவோ நேரம் எங்கே வர்ஷினி நடுவில் எழுந்து போய்விடுவாளோ என்று பயந்து கொண்டு தான் அமர்ந்திருந்தான்.கௌரிக்கு சந்தோஷத்தில் கண்ணீரே வந்துவிட்டது. வர்ஷினிக்கும் உள்ளுக்குள் சந்தோஷம் தான். ஆனால் அதை அவள் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. திருமணம் முடிந்ததும் பெண்கள் அனைவரும் கவிதாவை பிடித்துக்கொண்டனர். என்ன கவிதா, ஓரே மேடையில் இரண்டு கல்யாணம் பண்ணுவாங்க என்று தான் பார்த்திருக்கிறோம். ஆனா மருமகளுக்கு சீமந்தம் மகனுக்கு கல்யாணம்னு இரண்டு விஷேஷத்தையும் ஓரே மேடையில் வச்சி செலவை சிக்கனமா முடிச்சிட்டே போலிருக்கு என்று ஆளாளுக்கு கேள்வி கேட்க, கவிதாவிடம் முன்பே விக்னேஷ் கௌரியின் கல்யாணத்தை பற்றி சொல்லிருக்க கவிதாவும் அவர்கள் கேள்விகளுக்கு ஏற்றாற்போல் சமாளித்தாள். என் சின்ன பையன் வெளிநாட்டில் இருந்து வந்திருக்கான். அவன் பதினைந்து நாள் தான் லீவு போட்டிருக்கான். இப்போ ஊருக்கு போனா இன்னும் ஒரு வருஷம் கழிச்சு தான் வருவான், அதுக்குள்ள அவனுக்கு கல்யாணம் நடத்திடனும் தான் இன்னைக்கே வச்சிட்டோம் என்று ஒருவாறு சமாளித்து வைத்தாள்.
முறைப்படி எல்லா சம்பிரதாயங்களும் முடிந்து மண்டபத்தை காலி செய்ய சாயந்திரம் ஆகிவிட்டது. முதலில் கௌரியின் வீட்டுக்கு சென்று மணமக்கள் இருவரும் பால் பழம் அருந்திவிட்டு பின் வர்ஷினியின் வீட்டுக்கு சென்றார்கள். வர்ஷினியின் அப்பா கரண் தன்னுடைய நண்பர்கள், பக்கத்துக்கு வீட்டுக்காரர்கள் மற்றும் நெருங்கிய உறவினர் அனைவரையும் அழைத்து இருந்தார். எனவே வர்ஷினியும் கௌரியும் வீட்டுக்கு வந்ததும் அவர்களுக்கு ஆரத்தி எடுக்கவும், பால் பழம் கொடுக்கவும் மற்றும் மற்ற அனைத்திற்கும் வேண்டிய ஏற்பாடுகளை செய்து இருந்தார். மணமக்கள் கூடவே கவிதா மற்றும் மாசிலாமணியும் உடன் வந்திருந்தனர். அங்கு அனைவரும் சிறிது நேரம் இருந்து விட்டு சிற்றுண்டி அருந்திவிட்டு, கவிதா சாந்தி முகூர்த்தம் தன் வீட்டில் தான் செய்ய வேண்டும் என்று மகனையும் மருமகளையும் கையோடு தன்னோடே வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டாள்.
வீட்டுக்கு வந்ததும் கவிதா வர்ஷினியை பூஜை அறைக்கு சென்று விளக்கு ஏத்தும்படி செய்துவிட்டு பின் தன் அறைக்கு கூட்டிக் கொண்டு வந்தார். வர்ஷினியை பார்த்து, இத பாரு வர்ஷினி என்னடா உங்கிட்ட சொல்லாம திடீரென்று கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்களேனு வருத்தப்படாதே! அதெல்லாம் மனசில வசிக்காத. எனக்கும் முன்னாடி உம்மேலே என் புள்ளையை வேணாம்னு சொல்லிட்டாளே என்று கோபமாகத்தான் இருந்தது, ஆனா எப்போ அவன் உன்னை தான் கட்டிப்பேன்னு ஒத்தை காலுலே நின்னானோ அப்பவே என் கோபம் எல்லாம் போயிடுச்சி. எனக்கு என் பிள்ளை சந்தோசம் தான் முக்கியம். இப்போ நீயும் என் பொண்ணு மாதிரி தான். உனக்கு பிடிக்காதவனை கல்யாணம் பண்ணி வைக்கலையே, உனக்கும் என் பையனை பிடிக்கும்னு எனக்கு தெரியும். அதனாலே அவன் கிட்ட சண்டை ஏதும் போடாம இரண்டு பேரும் சந்தோஷமா இருங்க. சீக்கிரமா எனக்கு பேரனோ அல்லது பேத்தியோ பெத்துக்குடுங்க. அது போதும் என அவர் பாட்டுக்கு பேசிக் கொண்டே போக, வர்ஷினிக்கு இவங்களுக்கு என்ன பத்தின விஷயம் தெரியாதா, நான் அன்னைக்கே மது அக்காவிடம் எல்லாத்தையும் சொல்லிட்டேனே, அவங்க இவர் கிட்ட சொல்லலையா என்று புரியாமல் விழித்துக் கொண்டிருக்க, கவிதா என்னம்மா ஒண்ணுமே சொல்லாம என்னையே பார்த்துக்கொண்டிருக்கே, நான் சொன்னதெல்லாம் புரிஞ்சுதா என்று சற்று சத்தமாகவே கேட்க, வர்ஷினி என்ன பதில் சொல்வதென தெரியாமல் தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்.
அங்கு முதலிரவு அறையில் கௌரி சற்று பதட்டத்துடன் தான் இருந்தான். வர்ஷினி என்ன சொல்வாளோனு தெரியலையே, அவள் இந்த கல்யாணத்தை ஏற்று கொள்வாளா? அல்லது ரொம்ப கோவப்படுவாளா என பலவாறு சிந்தித்து கொண்டு அங்கும் இங்குமாக நடை பயின்று கொண்டிருந்தான். சிறிது நேரத்திலேயே வர்ஷினி பால் செம்புடன் உள்ளே வந்தாள். அவளை பார்த்த கௌரி ஆச்சரியத்துடன் அப்படியே அசையாமல் நின்று கொண்டிருந்தான். வெண் பட்டு உடுத்தி, அவன் வாங்கி தந்த நகைகளை அணிந்து தலையில் மல்லிகை பூ சூடி, புது தாலி மின்ன, கைகளில் கண்ணாடி வளையல்களும் தங்க வளையல்களும் சினுங்க, காலில் கொலுசு சத்தமும், மெலிதான மெட்டி சத்தமும் ஒலிக்க ஏதோ வானத்து தேவதை தான் கீழே இறங்கி வந்துவிட்டது போல் இருந்தது அவனுக்கு. கண் இமை கூட மூடாமல் அவளையே பார்த்து கொண்டிருந்தான்.
சட்டென்று அவனுக்கு பழைய பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது
“காஞ்சி பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டு வைத்து
தேவதை போல் நீ நடந்து வரவேண்டும்
அந்த திருமகளும் உன் அழகை பெறவேண்டும் ”
வர்ஷினி கதவை தாளிட்டு விட்டு அவனையே கோபமாக பார்த்தபடி பால் சொம்பை அருகில் வைத்தாள். கௌரி உட்கார் என்றதும் வர்ஷினிக்கு அதுவரை அடக்கி வைத்திருந்த கோபம் முழுவதும் வெளிப்பட்டது. ஏன் சங்கர் என்னை இக்கட்டில் நிக்க வைத்து கல்யாணம் பண்ணினே, என் அப்பா மூலமா உன் காரியத்தை சாதிஷ்ட்ட இல்ல என்று அருகில் இருக்கும் பொருட்களை எல்லாம் அவன் மீது வீச அவன் அது தன் மீது படாமல் அங்கும் இங்கும் உடம்பை வளைத்து தப்பித்துக் கொண்டிருந்தான். பின் தலையணையை எடுத்து அவனை அடிக்க தொடங்கினாள். அவனுக்கு அந்த அடி எல்லாம் உரைக்கவில்லை, இருந்தாலும் அவளிடம் ஏய் அடிக்காதடி, வலிக்குது, ஏதா இருந்தாலும் உட்காந்து பேசிக்கலாம். இப்படி வன்முறையில் இறங்கக்கூடாது என்று கட்டிலை சுற்றிக் கொண்டு ஓட, அவளும் அவனை விரட்டி விரட்டி அடிக்க, முதலிரவு அறை ஓட்டப்பந்தய மைதானமாக மாறியது. இறுதியில் இருவரும் மூச்சு வாங்க, களைத்து போய் படுக்கையில் சாய்ந்தனர்.
அப்போதும் வர்ஷினி அவனை விடாதவளாக இனிமேல் நான் உங்கிட்ட பேசமாட்டேன், நீயும் என்கிட்ட பேசாதே என்று சொல்லிவிட்டு கட்டிலின் ஓரமாக படுத்துக்கொண்டாள். கௌரி இதையெல்லாம் வர்ஷினியிடம் எதிர்பாத்துதான் இருந்தான். ஆனால் அவள் அவனிடத்தில் பேசமாட்டேன் என்று சொல்லியது தான் சிறிது வருத்தமாக இருந்தது. அதை எல்லாம் மனதில் எடுத்துக்கொள்ளாமல் வர்ஷினியிடம் வந்து இந்த பாலை குடித்து விட்டு படு என்று கூறியதும் எனக்கு அதெல்லாம் ஒன்னும் வேணாம் எல்லாம் நீயே குடிச்சிட்டு போய் தூங்கு என்று கண் திறக்காமலே கூறினாள். என்ன நம்ம பேபி ரொம்ப தான் கோவிச்சுக்குது, இதுக்கு மேலே அவளை தொந்தரவு செஞ்சா இன்னும் கோவப்படுவா, கொஞ்சம் விட்டு தான் பிடிக்கணும் என்று நினைத்துக் கொண்டு கட்டிலின் மறுபுறமாக படுத்துக் கொண்டான். காலையில் இருந்தே அலைந்த அலைச்சலில் கண் சொக்கவே உடனே தூங்கியும் போனான். வர்ஷினிக்கு தான் தூக்கம் வரவில்லை. அவளுக்கு அவனை பிடித்து இருந்தாலும் இப்படி ஏமாற்றி கல்யாணம் பண்ணி வைத்து விட்டார்களே என்று கோபமாக இருந்தது. அவளின் தந்தையின் மனநிலையை அவள் புரிந்து கொண்டாலும் ஏனோ அவர் மீதும் அவளுக்கு கோபம் தான். என்னை அப்படியே தனியா விட்டுட்டு போய்டுவேன் என்று தானே சொன்னாரு.
அம்மா உயிரோடு இருந்தா அப்பா இப்படி பேசி இருப்பாரா என்று மனதிற்குள் வெகு நேரம் புலம்பி கொண்டே இருந்தாள். பின் சோர்வின் காரணமாக எப்போது தூங்கினால் என்று அவளுக்கே தெரியவில்லை.
மறுநாள் வர்ஷினி எழுந்த போது கௌரி அருகில் இல்லை. மணியை பார்த்தாள். அது ஏழு என்று காட்டியது. குளியலறைக்கு சென்று தன் வேலைகளை முடித்து சுத்தமாகி வெளியில் வந்தாள். ஒரு இலகுவான காட்டன் சுடிதாரை உடுத்திக் கொண்டு கீழே வர, கவிதா அவளை பார்த்து வாம்மா வர்ஷினி, நைட் நல்லா தூங்கினியா? காப்பியா இல்லை டீ குடிப்பியா என்று உபசரிக்க, நானே போய் போடுக்கிறேன் அத்தை என்று வர்ஷினி சமையலறை நுழைந்து காபியை கலந்து கொண்டிருக்க,கவிதா அவள் பின்னாடியே வந்து உங்க அம்மா இருந்து இருந்தா இதெல்லாம் கேட்டிருப்பாங்க, என்னையும் உன் அம்மாவா நினச்சுக்க, நேத்து இரண்டு பேரும் சந்தோஷமா இருந்தீங்களா என்று கேட்க, வர்ஷினி நேத்து என்னை எந்த சூழ்நிலையில் கல்யாணம் பண்ணி வச்சாங்க, இன்னைக்கு இப்படி கேக்குறாங்க என்று மனதினில் எண்ணிக்கொண்டு என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்து கொண்டிருந்தாள். சின்ன வயதில் கவிதாவிடம் நன்றாக பழகினாலும் நடுவில் பழக்கம் விட்டு போனதால் அவளிடம் வர்ஷினிக்கு பேச பயமாகத்தான் இருந்தது. நல்ல வேளை அந்த சமயத்தில் கௌரி அங்கு வந்து அவளை காப்பாற்றி விட்டான். அம்மா எனக்கு ஒரு காபி தாங்க என்று கூறிவிட்டு ஹாலில் அமர கவிதாவும் மகனுக்கு காபி தயாரிக்கும் வேலையில் இறங்க அந்த பேச்சு அத்தோடு நின்றது. கவிதா காபியை எடுத்துக் கொண்டு கௌரியின் அருகில் வந்து இரண்டு பேரும் ரெடியாகி காலையிலேயே கோவிலுக்கு போய்ட்டு வந்துருங்க. நான் அதுக்குள்ள டிபன் ரெடி பண்ணிறேன். கவிதா அப்பாவும் வரதா சொன்னாரு. நீங்க கோவிலிருந்து வந்த உடனே எல்லாரும் சேர்ந்து டிபன் சாப்பிடலாம் என்று கூற கௌரி சரி என்று சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்றான். கவிதா, வர்ஷினி அங்கே நிற்பதை பார்த்து என்ன வர்ஷினி இங்கேயே நிக்கிறே, அவன் கூடவே போ, அவனுக்கு என்ன வேணுமோ பார்த்து செய் என்று அவளை விரட்ட, வர்ஷினிக்கு அவன் என்ன சின்ன பையனா, நேத்து வரைக்கும் அவன் வேலையை அவன் தானே செய்து கொண்டான் என்று மனதிற்குள் புலம்பியவாறே சரி அத்தை என்று கூறி தங்கள் அறையை நோக்கி சென்றாள். அங்கு அவன் குளியல் அறையில் குளிக்கும் சத்தம் கேட்டது. வர்ஷினி அவன் அலமாரியை திறந்து கோவிலுக்கு செல்ல வேண்டும் என்பதால் வேட்டியும் அதற்கு பொருத்தமான மெரூன் நிற சட்டையும் எடுத்து வைத்தாள். சிறிது நேரத்தில் அவன் டவலுடன் வர, அவனை அந்த கோலத்தில் பார்த்தவுடன் வர்ஷினி அதிர்ந்து முகத்தை திருப்பி கொண்டாள். கௌரி சிரித்தவாறே அவளை பார்த்து கொண்டே அவள் எடுத்து வைத்த ஆடையை அணிந்து கொண்டான். அவன் கீழே சென்றதும் வர்ஷினி தயாராகி கீழே வர கௌரி அவளையே ஏதோ காணாததை கண்டது போல் அ பார்த்துக் கொண்டிருந்தான். வர்ஷினி கணவனின் உடைக்கு ஏற்ப மெரூன் நிற புடைவையும் அதற்கேற்ப காதில் ஜிமிக்கி , கழுத்தை ஓட்டினால் போல் சிறிய நெக்லஸ், கையில் இரு வளையல்கள் என்று அம்சமாக இருந்தாள். அங்கே வந்த கவிதா அவனை பார்த்து டேய் வாயை மூடுறா, வாயில் ஈ எதாவது போய்ட்ட போது என்று அவனை கிண்டலடித்து இருவரையும் வழி அனுப்பி வைத்தாள். கோவிலில் தனக்கு ஒரு அதிர்ச்சியான சம்பவம் காத்திருக்கிறது என்று அறியாமல் வர்ஷினி கௌரியுடன் கோவிலுக்கு சென்றாள்.
