”அச்சோ…ஏன் மயூரி..? அவளை ஏன் அடிச்சுக்கிட்டே இருக்க?ஏதாவது யோசி” என்றவர் நிதானித்து “ம்ம்…இல்லைன்னா… நான் ஒரு ஐடியா கொடுக்கிறேன்.. அதை வேணா ஃபாலோ பண்ணு” என்றார் மரகதம்.
“வேற வழி இல்லை,சொல்லுங்க அத்தை..இப்போதைக்கு என் மூளை டிராபிக் ஜாம் ஆகி இருக்கு எதையும் யோசிக்க முடியல..” என்றாள் மயூரி சோகமாக.
“அதெல்லாம் மூளை இருக்கவங்க கவலைப்படணும், அதான் ஆண்டி ஐடியா சொல்றேன்னு சொல்றாங்க இல்ல..?அதை மட்டும் ஃபாலோ பண்ணு போதும்” என்றாள் பிரியா அவளை முறைத்தபடி இருந்த மயூரியிடம் .
சிரித்த மரகதம் ”மயூரி நீ கவனி..ஏதாவது ஒரு கம்ப்யூட்டர் கோர்ஸ் சேர்த்திருக்கறதா சொல்லிட்டு,ஒரு மாசம் மட்டும் அவளுக்கு ஷோ பண்ணி கொடு. இதோ இவளை காலையிலேயே தினமும் வர சொல்லு, கோர்ஸ் போறத, கேட்க தான் இவ இன்னைக்கு வந்தான்னு ரஞ்சன் கிட்ட சொல்லிக்கலாம்” என்றார்.
யோசனையுடன். “எல்லாம் சரிதான் அத்தை…அவர் கண்டுபிடிச்சிட்டா..?ரொம்ப கஷ்டம்..மறுபடியும் அவருக்கு துரோகம் பண்ணதா நினைப்பார் தானே, என்னால தாங்க முடியாது” என்றாள் கண்கள் கலங்க.
”ப்ச்..அப்படி எல்லாம் எதுவும் ஆகாது, ஒரு மாசம் தானே பாத்துக்கலாம். அதோட ரஞ்சன் முன்ன போல இப்ப இல்ல.. அதை தான் நான் ஒரு வாரமா உன் கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கேன், நீ தான் கேட்க மாற்ற” என்றார்.
மயூரிக்கு மனமே இல்லை ஆனாலும் வேறு வழி இல்லாமல் சோனாவை அழைத்து,ஒரு மாதம் மட்டும் வருவதாக கூறினாள்.அவள் மகிழ்ச்சியில் கூத்தாடினாள். பிரியாவும் அடுத்த நாள் வருவதாக மகிழ்வுடன் கிளம்பி சென்றாள்.
மயூரிக்கு தான் மனம் வருத்திக் கொண்டே இருந்தது. இரவு உணவின் போதும், அறைக்குள் சென்றபோதும் ரஞ்சனின் முன்னே இருக்கவே அவளுக்கு கஷ்டமாக இருந்தது.கணவன் மனைவிக்குள் எந்த ஒலிவு மறைவு எதுவும் இருக்கக்கூடாது என்ற கொள்கை உடையவள் மயூரி.
முதலில் அவனை ஏமாற்றியது அவன் அவளை விருப்பம் இல்லாமல் திருமணம் செய்ததற்கு பழிவாங்குவதாக எண்ணிக் கொண்டுதான், ஆனாலும் அவள் மனம் உறுத்தத்தான் செய்தது.
மரகதத்திடம் கூறிய பிறகு சற்று மனம் நிம்மதி அடைந்தது. ஆனால் அவனைப் பற்றி தெரிந்த பின்பு மீண்டும் மனம் உறுத்த துவங்கியது. அதற்குள் அவனுக்கு உண்மை தெரிந்து விட,காதல் பூத்திருந்த மனம் அவனை ஏமாற்றக்கூடாது என்று எண்ணியது.அதுவே இப்பொழுதும் அவளை கஷ்டப்படுத்தியது.
காலையில் அவன் கிளம்பிய நேரம் அவளும் கிளம்ப,அவளை மேலிருந்து கீழ் வரை ஆராய்ந்த ரஞ்சன் தன் பையை எடுத்துக் கொண்டே,
“எங்க கிளம்பற.?” என்றான்.
அவனை நிமிர்ந்து பார்க்காமலே “பிரியா… கம்ப்யூட்டர் கோர்ஸ் போகலாம்னு சொன்னா..வீட்டுலயே சும்மா தானே இருக்கேன் அதான்..” என்று அவள் மெதுவாக அவனை நிமிர்ந்து பார்க்க,
அவளை பார்த்துக் கொண்டிருந்தவன் விழியை நேராக பார்த்தாள்.அவன் அவளை ஆழ்ந்து பார்த்தானே தவிர எதுவும் பேசவில்லை
“சரி போ” என்றவன் கதவை திறக்கும் முன் மீண்டும் திரும்பி ” கம்ப்யூட்டர் கோர்ஸ்னா…பீஸ்க்கு காசு இருக்கா..?” என்றவன் தன் பர்சை எடுத்து இரண்டு ஐநூறு ரூபாய்களை அவளிடம் நீட்டினான்.
மயூரிக்கு மனம் வலித்தது’ இப்படி நம்பும் அவனை ஏமாற்றுகிறோமே..!’ என்று தவித்தது
“இந்தா புடி…” என்றவனிடம் நடுங்கும் கரங்களை நீட்டினாள் . அவள் கரங்களில் பணத்தை திணித்தவன், ஏதும் கூறாமல் திரும்பி கீழே இறங்கினான்.
மயூரிக்கு கண்கள் கலங்க அதை அடக்கிக் கொண்டே அவனுடன் உணவு மேஜையில் தலையை குனிந்த படி அமர்ந்தாள்
“சாப்பிட்டு கிளம்பு, நானே கொண்டு போய் டிராப் பண்றேன்” என்றான் ரஞ்சன் உண்டபடி.
மயூரி என்ன கூறுவது என்று விழித்தபடி அமைதியாக இருக்க மரகதம் பேசினார்
“பிரியா வருவா.. ரஞ்சன். அவளோடு போயிட்டு வரட்டுமே..” என்றார் அவனை ஆராய்ந்தபடி,
அவன் நிமிர்ந்து மயூரியை பார்த்தவன்,எதுவும் கூறாமல்” சரி” என்று அமைதியாக கூறினான்.
மயூரிக்கு உணவு தொண்டையில் அடைத்தது. மரகதத்திற்கும் அவன் உடனே ஒத்துக் கொண்டது ஒரு மாதிரி தான் இருந்தது. இருவரும் அமைதியாக இருந்தனர்.
ரஞ்சன் உண்டு முடித்து எழுந்து வாயிலுக்கு வரவும்,பிரியா வீட்டினுள் வரவும் சரியாக இருந்தது. அவளை ஒற்றைப் புருவத்தை தூக்கியபடி பார்த்தான் ரஞ்சன் அவளோ,
“ஹி…ஹி..குட் மார்னிங் அண்ணா” என்றாள் நெற்றியில் கைவைத்தபடி,
அவன் “ம்ம்..” என்று மட்டும் கூறியவன் கிளம்பிவிட.
பிடித்து வைத்திருந்த மூஞ்சை வெளியேற்றிவிட்டு உள்ளே சென்றாள் பிரியா.
உள்ளே மயூரி கஷ்டப்பட்டு உணவை விழுங்கியவள், மரகதிடம் கண்கள் கலங்க கூறினாள்
“ரொம்ப கஷ்டமா இருக்கு அத்தை.. அவர்.. அவர் ஏதாவது பேசி இருந்தா கூட பரவாயில்லை” என்றாள் தலையை குனிந்தபடி.
மரகதம் அவள் தோள் தொட்டு “கவலைப்படாத மயூரி, ஒரு மாசம் தானே…எல்லா பிரச்சினையும் சீக்கிரமே முடிஞ்சிடும், போயிட்டு வா” என்றார்.
கண்களை துடைத்து விட்டு ஒரு நெடிய மூச்சினை வெளியேற்றியவள் பிரியாவுடன் கிளம்பினாள்.
வானொலி நிலையத்தை அடையும் வரை மனது முரண்டி கொண்டே தான் இருந்தது.இருந்தாலும் மனம் ஒரு வாரம் இருந்த வேதனையில் இருந்து லேசாக பறப்பது போல் உணர்ந்ததும் உண்மைதான்.
வானொலி நிலையத்தை அடைந்ததும் மயூரி மனம் முழுதாக தன் பாரத்தை இறக்கி வைத்தது என்றுதான் கூற வேண்டும்.
ரஞ்சனின் எதிர்பில்லாமல் அவனுக்கு தெரிந்து தன் மனதிற்கு பிடித்த செயல்களை செய்தால் இன்னும் இதமாக இருக்கும் என்று அவள் மனம் ஏங்கியது.
மயூரி உள்ளே செல்ல சோனா மிகவும் மகிழ்வுடன்
“தேங்க்ஸ் மயூரி,எனக்காக இவ்வளவு தூரம் வந்ததற்கு” என்றவள் நிறுத்தி “இப்படி எல்லாம் சொல்வேன்னு நினைச்சியா…?மவளே..!ஒரு வாரமா நான் எவ்வளவு பிரஷர்ல இருக்கேன் தெரியுமா..? யாரு டி அவன்..உன்ன கட்டுனவன். அவ்ளோ பெரிய அப்பாடக்கரா…! இப்படி பயப்படுற..?அதான் உன் கையில் ஒரு சம்பாத்தியம் இருக்குல்ல, இண்டிபெண்ட்டா இருக்க வேண்டியதுதானே. நீ என்ன அவருக்கு அடிமையா..அவருடைய பர்மிஷன் இல்லாமல் உன்னால எதுவும் செய்ய முடியாதா என்ன..?” என்றாள் சற்று கடுமையாக.
புன்னகை ஒன்றை உதிர்த்த மயூரி,”சோனா நீ சொல்றது எல்லாம் ஓகேதான். ஆனால் நான் அவரை விரும்புகிறேன்.. அவரை மீறி அவரை ஏமாத்திட்டு..செய்வதற்கு எனக்கு…என் மனசுக்கு பிடிக்கல அவ்வளவுதான்..” என்றவள் “சரி இப்ப என்ன.. நான் ஷோக்கு ரெடியாகவா வேணாமா..?” என்றாள் மயூரி முகத்தை திருப்பிக் கொண்டு
“ஓகே, ஓகே,மறுபடியும் போயிறாதே” என்றவள் அவளை உள்ளே அனுப்பினாள்.
மயூரிக்கே ஆச்சரியம் தான் தனக்கு ஏன் ரஞ்சனை பற்றி பேசியதும் இவ்வளவு கோபம் என்று, ஆனாலும் மனது கொஞ்சம் லேசானதை உணர்ந்தாள்.
அந்த மகிழ்வுடன் நிகழ்ச்சியை நடத்தி முடித்தவள் வெளியே வந்தாள்.சோனா தன் கேபினுக்கு அவளை அழைத்தாள்.மயூரியும் உள்ளே சென்று பிரியாவுடன் அவள் எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.
மயூரியை நிறைவாக பார்த்த சோனா “ஹப்பா… ஒரு வழியா உன்னை வர வச்சுட்டேன், ஒரு ரெண்டு வாரம் அதுக்குள்ள அடுத்த ஆளை செலக்ட் பண்ணிடுவேன்.. ஒரு சின்ன காண்டஸ்ட் கூட அனவுன்ஸ் பண்ணி இருக்கோம் அதோட இன்டர்வியூவும் நடக்குது… சோ, உனக்கு சீக்கிரமே விடுதலை தான்” என்று சொன்னாள் ஒரு பெருமூச்சுடன் “ஆனாலும் உன்னை மாதிரி ஒரு நல்ல ஆர் ஜேவ, மிஸ் பண்ணுவேன்” என்றாள் மேஜை மேல் இருந்த மயூரியின் கைகளை பற்றி.
“ம்ம்..எனக்கும் இந்த வேலையை விடுறது, உங்களை எல்லாம் விட்டு போறது ரொம்ப கஷ்டமா தான் இருக்கு” என்றாள் மயூரி.
”ஓகே.. மயூரி நாம உன்னோட ஷோவ கெஸ்ட் இன்வைட் பண்ற மாதிரி சேஞ்ச் பண்ணனும் சொன்னேன் இல்லையா. அடுத்த வாரத்துல இருந்து..ஷோக்கு வீக்லி ஒரு கெஸ்ட் வருவாங்க, நீ ஸ்டார்ட் பண்ணிட்டு புதுசா வர்ற ஆர்.ஜேக்கு ஒரு இன்ட்ரோ மாதிரி கொடுத்துட்டு.. ப்ராப்பரா ரிலீவ் ஆகிக்கோ ” என்றாள்.
“சரி,சோனா..அப்போ நெக்ஸ்ட் வீக் லைவ் ஷோ பண்ணனுமா.. ம்ம்..காலையில ஷோ ஒன்பது மணிக்கு தானே…ஓகே, நான் ரெடியா இருக்கிறேன்..” என்றவள் “சோனா யாரு ஃபர்ஸ்ட் கெஸ்ட்..?எப்படி கெஸ்ட் செலக்ட் பண்ணுவீங்க …செலிப்ரட்டிஸ் தானே” என்றாள்.
“இல்ல மயூரி நீ.. மோட்டிவேஷனல் ஷோ மாதிரி கொண்டு போன.. அதனால லைஃப்ல கஷ்டப்பட்டு முன்னேறினவங்க..அந்த மாதிரி யாரையாவது தான் இன்வைட் பண்ண சொல்லி இருக்காங்க.ரெண்டு பேரு ட்ரை பண்ணிட்டு இருக்கோம்.. உனக்கு ஷோ பண்ற முந்தின நாள் தெரிஞ்சிடும்.பேசிக் கேள்விகள் மட்டும் கேட்டா போதும்” என்றாள் சோனா.
”ஓகே அப்போ நான் கிளம்புறேன் சோனா..” என்று எழுந்தாள் மயூரி.
“அப்புறம் மயூரி புதுசா செலக்ட் பண்ணவங்கள.. உன் கூட சேர்த்து ரெண்டு பேரா ஷோ..பண்ண ஆரம்பிச்சுட்டு…அப்படியே நீ ரிலீவ் ஆகிக்கோ” என்றாள் சோனா இருக்கையில் இருந்து எழுந்து கொண்டே..
மூவரும் வெளியே வந்தபடி இருக்க மயூரி புன்னகையுடன் தலையசைத்தாள்.
“ஓகே சோனா..” என்றவள் அருகே வந்த கதிரோ
“என்ன மயூரி நீ இனிமே வரமாட்டியாமே ஏன்..?” என்றான்
“ப்ச்..கல்யாணம் ஆகிவிட்டது கதிர் அண்ணா அவ்வளவுதான்” என்றாள் மயூரி புன்னகையுடன்.
“ஏன்..? எனக்கும் தான் கல்யாணம் ஆயிருச்சு,நம்ம சோனாவை பாரு பெங்களூரில் வீட்டுக்காரரை விட்டுட்டு இங்க வந்து ஹாயா.. இருக்கா” என்றான் சிரிப்புடன்.
“டேய்,உனக்கு என்ன வம்பு இழுக்கலைன்னா..பொழுது போகாதே, போடா… ஒழுங்கா ஷோக்கு ரெடியாகு” என்றாள் சோனா அவன் முதுகில் அடித்து,மயூரி புன்னகையுடன் கதிரை பார்த்து கை அசைத்து விட்டு கிளம்பினாள்.
வெளியே வந்ததும் பிரியா கேட்டாள், ” ஏன் மயூரி..? உன் ஆளு இப்பல்லாம்..முன்னை மாதிரி ரொம்ப மோசம்னு தோணலை.. உன் மாமியார் கூட அதானே சொன்னாங்க.பேசாம நேரா போய் அவர் காலில் விழுந்து.. அப்படியே… திரும்பி படுத்து,அவர் முகத்தைப் பார்த்து உண்மைய சொல்லிட்டு.. இனிமே இப்படி ஒரு தப்பு நடக்காது சாமினு …பாவ மன்னிப்பு கேட்டா..!அவரும் மன்னிச்சிடுவாருன்னு தான் நினைக்கிறேன்” என்றாள் பிரியா.
“ம்ம்…கீழே தலையை அவர் கால் கிட்ட வச்சு மன்னிப்பு கேட்கும் போது அந்த கால என் கழுத்து மேல வச்சு.. பாவமன்னிப்ப ஒரே தா…மேல கொடுத்துட்டா..! நீ நிம்மதியா இருப்ப…! அப்படித்தானே பிரியா செல்லம்…?” என்றாள் மயூரி அவள் தோளில் கை போட்டு தன்னுடன் இருக்கியபடி.
“ஆமா இல்ல, இதுல அப்படி ஒரு சட்ட சிக்கல் இருக்கோ..?” என்று வானை பார்த்து யோசித்தாள் பிரியா.
“உன் சட்டைல என்னைக்கு சிக்கல் இல்லாம இருந்துச்சு..? விடு நானே என் வில்லனை சமாளிச்சுக்கிறேன்.உதவுறேன்னு நீ ஏதாவது செஞ்சு என்னை கொலை பண்ணாம இருந்தா போதும்..!” என்றாள் மயூரி.
இவ்வாறு மேலும் நான்கு நாட்கள் கலகலப்பாகவே சென்றது. காலை ரஞ்சன் அலுவலகம் கிளம்பும்போது ப்ரியா வந்துவிடுவாள். மயூரியும் கிளம்பி விடுவாள்.இருவரும் இரண்டு மணி நேரம் கம்ப்யூட்டர் வகுப்பு என்று கூறிக் கொண்டே சென்றனர்.
ரஞ்சனும் மயூரியை எதுவும் கேட்பதில்லை. ஆனால் மயூரிக்கு அவனின் இந்த மௌனம் மனதில் குற்ற உணர்வை கூட்டத்தான் செய்தது.
இருந்தும் இரண்டு வாரங்கள் தானே.. என்று மனதை கல்லாக்கி கொண்டு அமைதியாக இருந்தாள்.
அன்று ஷோவை முடித்து வெளியே வந்த மயூரியிடம் சோனா கூறினாள்
“இன்டர்வியூ செஷனா மாத்த சொன்னாங்க இல்ல..? நாளைக்கு அது பர்ஸ்ட் ஷோ” என்றாள் சோனா.
மயூரி சிறு வியப்புடன் “என்ன சோனா..ஒன் வீக் ஆகும்னு சொன்ன..? இப்ப போர் டேஸ்ல இன்டர்வியூ பண்ணனும்னு சொல்ற..?” என்றாள்.
“ஆமா நானும் அப்படித்தான் நினைச்சேன் பிரைடே.. அந்த ஷோ ஸ்டார்ட் பண்ணா வீக் எண்டு ஃபீல்… நல்லா இருக்கும்னு ஹெட் ஆபீஸ்ல பீல் பண்றாங்க” என்றவள் குரலை தாழ்த்தி “நம்ம ஹெட் ஆஃபீஸ்ல நிறைய பக்தி பழங்கள் இருக்காங்க…நல்ல நாள்ல தான் எல்லாத்தையும் ஸ்டார்ட் பண்ணணுமாம் ” என்றாள் சிரிப்புடன்.
மயூரியும் உடன் புன்னகைத்து “சரி கெஸ்ட் யாரு..?அதுக்கேத்த மாதிரி ரெடி பண்ணிக்கிறேன்” என்று கேட்டாள்.
”அதை ஏன் கேக்குற..! நம்ம ரெண்டு பேரை சொன்னா.. ஹெட் ஆபீஸ்ல இருந்து மூன்றாவது.. ஒரு ஆள சொல்லி இருக்காங்க. இன்னைக்கு காலையில தான் சொன்னாங்க.நம்ம கதிரையும் காரத்தியையும் அனுப்பி இருக்கேன்.அவருக்கு டைம் செட் ஆனா… அவர் இந்த வீக்.. இல்லைன்னா,ஏற்கனவே செலக்ட் பண்ண ரெண்டு பேர்ல ஒருத்தர்.ஈவினிங் உனக்கு டீடைல்ஸ் ஓட மெசேஜ் பண்றேன்” என்று முடித்தாள் சோனா.
“ம்ஹ்ம்…எப்ப பாத்தாலும் பரபரப்பாவே இருக்க வைங்கடா.. நல்லா வருவீங்க” என்றாள் மயூரி புன்னகையுடன்.
சிரித்த சோனா “அப்போ தான் லைஃப் ஜாலியா… இருக்கும்.. மயூரி..? அதோட பேசிக் கொஸ்டின்ஸ் தானே.. அதெல்லாம் நீ சமாளிச்சுருவ..! உன்னால எதுவும் முடியும்..!” என்றாள் சோனா மயூரியின் தோள் தட்டி
மயூரி நடந்தபடி,
“ம்ம்…இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தியே உசுர ஊசலாட வைங்க..!” என்றபடி கிளம்பினாள் பிரியாவும் உடன் கிளம்பி இருவரும் வீடு திரும்பினார்.
வீட்டினுள் நுழைந்த மயூரி மரகதத்தை தேடினாள்,அவர்
அடுக்களையில் மதிய உணவை சமைத்துக் கொண்டு இருக்க,
“அத்தை,உங்க பையன் எங்க..?” என்றாள்.
“அவன் கிளம்பிட்டான்.. ஏன் கேக்குற..?” என்றார் அவர்.
“இல்லை முக்கியமான விஷயம் சொல்லணும்..,அப்புறம் நான் பேசிக்கிட்டு இருக்கும்போது திடீர்னு அசரீரி மாதிரி வந்து நிற்பார். அதான் முதல்லயே கேட்டுட்டேன்” என்றாள் அடுப்பு மேடையில் ஏறி அமர்ந்தபடி
காயை கிண்டிக் கொண்டிருந்தவர் சட்டியில் கரண்டியை தட்டி விட்டு கரண்டியையும் மயூரியையும் மாறி மாறி பார்க்க மயூரி புன்னகையுடன்,
“ஹி.. ஹி..டமாசு அத்தை டமாசு” என்றவள்.
“நாளைக்கு சீக்கிரம் போகணும் அத்தை. நாளைல இருந்து வீக்லி ஒரு விஐபி இன்டர்வியூ பண்ணனும்” என்றாள் சரளா வெட்டி வைத்திருந்த வெண்டைக்காயை வாயில் போட்டபடி
“சரி… அதுக்கு நான் என்ன செய்யணும்..?” என்றார் மரகதம் சமைத்தபடி.
“ஒன்னும் பண்ண வேண்டாம்..உங்க பையன் எதுவும் கேட்டால் என்ன சொல்றது..? ப்ளீஸ் ஹெல்ப் மீ அத்தை ” என்றாள் கெஞ்சலாக.
அவர் புன்னகையுடன் “எனக்கு தெரிஞ்சு அவன் ஒன்னும் கேட்க மாட்டான்…நீ அவன் எழும்பும் முன்னையே கிளம்பிடு” என்றார்.
“அது கூட நல்ல ஐடியா தான்” என்றவள்,அவருடன் வேறு விஷயங்களை கலகலப்பாக பேச தொடங்கினாள்.
இரவு ரஞ்சன் வர தாமதமானது, அறையில் அமர்ந்து அடுத்த நாள் ஷோவிற்காக தயார் செய்து கொண்டிருந்தாள் மயூரி.ரஞ்சன் அறைக்குள் திடீரென வந்தான்.
சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தவளை, அவனும் பார்க்க அவனைப் பார்த்தபடி எழுதிக் கொண்டிருந்ததை மூடி வைத்தாள் மயூரி.
அவனும் அவள் விழிகளில் இருந்து அவள் மூடி வைக்கும் காகிதங்களை பார்த்துவிட்டு மீண்டும் அவள் விழியே பார்த்தான்.
பின் குரலை செருமி “க்கும்…அப்புறம் கம்ப்யூட்டர் கிளாஸ் எப்படி போகுது..?” என்றான், தன் லேப்டாப்பை மேஜை மேல் வைத்துவிட்டு.
“ம்ம்…நல்லா போகுது ஒரு வாரம் தானே ஆகுது” என்றாள்.
“புக்ஸ்..எல்லாம் வாங்கிட்டியா..?” என்றான் குளிக்க உடை எடுத்தபடி.
“இன்னும் லிஸ்ட் தரல. தந்தவுடனே வாங்கிருவேன்.” என்றாள்.
அவன் திரும்பி இருப்பதை சாதகமாக கொண்டு, தன் பேப்பர்களை பையினுள் அடுக்கினாள்.
அவன் ஒன்றும் சொல்லாமல், திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு குளியலறையினுள் சென்றுவிட, அவள் தன் பையினை கீழே வைத்து விட்டு, விறுவிறுவென சென்று படுத்துக் கொண்டாள்.
கண்களை மூடி படுத்தவளுக்கு தூக்கமும் வந்துவிட,அவன் குளித்து முடித்து வரும் முன்னையே உறங்கியும் போனாள். குளித்து முடித்து வந்த ரஞ்சன், கைகளை மார்புக்கு குறுக்கே கட்டி..அவள் முன்னே நின்று அவள் முகத்தையே பார்த்திருந்தான்.
அந்த நிர்மலமான முகம் அவன் மனதை ஏதோ செய்ய.. தலையை உலுக்கியபடி புன்னகையுடன் சென்று மறுபக்கம் படுத்துக்கொண்டான்.
மறுநாள் காலை அவன் கண் விழித்தபோது.. மயூரி அவன் அருகே இல்லை. எழுந்து சுற்றும் முற்றும் ஆராய, அவள் கிளம்பி விட்டதற்கு அடையாளமாக அவள் உடமைகள் இல்லை. எழுந்து அறையை விட்டு வெளியே வர, கீழே மயூரி மரகதத்திடம் விடை பெறுவது தெரிந்தது. அமைதியாக அறைக்குள் சென்று விட்டான்.
கீழே குளித்து இறங்கிய மயூரி காலை உணவை கூட உண்ணாமல் பதற்றமாக கிளம்பினாள். அவள் பதற்றத்தை பார்த்த மரகதம்
“இப்ப எதுக்கு இவ்வளவு சீனு உன்னோட பேச்சைக் கேட்க வர போற விஐபி தான் பதறணும் ” என்றார் கேலியாக.
வாயிலில் செருப்பை போட்ட மயூரி நின்று மாமியாரை பார்க்க, உடன் இருந்த பிரியாவும் சிரிக்க இருவரையும் முறைத்து விட்டு
“வீட்ல என்னோட நலம் விரும்பி இருக்கிறதால உங்க ரெண்டு பேரையும் சும்மா விடறேன்.. இல்ல ஒரு கை பார்த்து விடுவேன்” என்றபடி கிளம்பினாள்.
பிரியாவும் “அவர் உனக்கு நலம் விரும்பி இல்ல.. டி..எங்களுக்கு தான்” என்று சிரித்தபடி இருவரும் நடந்தனர்,மரகதமும் சிரித்தபடி உள்ளே சென்றார்.
மயூரி வானொலி நிலையத்தை அடைந்தவுடன்,காலை நேர நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் அனைவரும் அவளுக்கு வாழ்த்து கூறினார்கள் சோனாவை தேடியவளிடம்
“ அவளும் கதிரும் கெஸ்ட இன்வைட் பண்றதுக்காக ஃப்ளவர்ஸ் வாங்க போய் இருக்காங்க..நீ ரெடி ஆகி இருப்பியாம் .. “ என்றாள் ரிசப்ஷனில் இருப்பவள்.
“ம்ம்.. ஓகே யாரு வர போறாங்க..?” என்றாள் மயூரி.
“ உனக்கு சொல்லலையா..? யாரோ ஒரு தொழில் அதிபர். ஹெட் ஆஃபீஸில் இருக்க நம்ம டீம் லீடோட ஃபிரண்ட் .சோனா டேபிள் மேல கொஸ்டின்ஸ் ரெடி பண்ணி இருக்காங்க.. அதையும் உன்னோட பிரிபரேஷன்சோட ஜாயின் பண்ணிக்கோ.. “என்று விட்டு தன் வேலையை பார்த்தாள் அவள்.
“அடேய்..ஷோ பண்ணும் போதாவது யாருன்னு சொல்லுவீங்களா..? இல்ல ஸ்கிரீன் போட்டு ஒளிச்சு வச்சுக்குவீங்களா..?” என்று கேலி பேசியபடி ஷோ நடத்தும் அறைக்குள் சென்றாள் மயூரி.
தன் பொருட்களை வைத்துவிட்டு சோனா தயார் செய்திருந்த கேள்விகளை வாசிக்க துவங்கினாள்.
கேள்விகளை படிக்க ஆரம்பித்தவள் ஏளன புன்னகையுடன்
“அப்பாவோட பிசினஸ் டெவலப் பண்ணதுக்கு இவ்வளவு சீனா..? ம்ம்..உனக்கு எதுக்கு பெரிய இடத்து பிரச்சினை…மயூரி,சமூகம் ஹெட் ஆபீஸ்க்கு தெரிஞ்ச இடம்..!நம்ம வாழ்க்கை ஏற்கனவே கபடி விளையாடிட்டு இருக்கு.. இதுல இந்த பிரச்சனை வேறா…?” என்று தனக்குள் பேசிக்கொண்டு கேள்விகளை வரிசைப்படுத்திக் கொண்டிருந்தாள்.
கதிர் அவசரமாக வந்தான். “ஏய் மயூரி, கெஸ்ட் வந்துட்டார்.இந்தா..உன் கையில ஒரு பொக்கே வச்சுக்க, அவர் இங்க வந்ததும் கொடுத்து விஷ் பண்ணு ஓகே..!” என்றபடி வெளியே செல்ல
மயூரியும் பூக்களை வருடிக்கொண்டு பெருமூச்சுடன் எழுந்து அறையின் வாயில் அருகே செல்லவும், அந்த விருந்தாளி வாயிலுக்கு வரவும் சரியாக இருந்தது.
பூக்களைப் பார்த்திருந்தவள் விழிகள் வாயிலில் நின்ற அந்த கால்களை பார்த்தவுடன்,அவள் இதய கூட்டினுள் லேசாக ஒரு இடி இறங்கியது. இருக்காது..! என்று தனக்கு தானே மனதை திடப்படுத்திக் கொண்டு மெல்ல விழிகளை உயர்த்தி வாயிலில் நின்றவன் விழிகளை பார்த்தவளுக்கு தலைசுற்றி கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது.
எச்சிலைக்கூட்டி விழுங்க முயன்றாள்,அவன் கூறிய பார்வையில் தொண்டை வறண்டது. அவன் பின்னே கையை அசைத்து பூங்கொத்தை அவனிடம் கொடுக்க சொல்லி சைகை செய்த கதிரை கண்டவள்,கண்கள் லேசாக கலங்க துடித்தது.
மூச்சை இழுத்து பிடித்து பூக்களை அவனிடம் நீட்டி “க்கும்…. வெல்…வெல்கம் சார்..!” என்றாள் தட்டு தடுமாறி.
“ஒரு வழியா பேசிட்டீங்களே… மீரா..!” என்றான் ரஞ்சன்.
