“யாஹ், தேங்க் யூ.. மிஸ்..மீரா” என்றான் ரஞ்சன்.
அவன் புன்னகை மாறாமல் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் அமைதியாக இருக்க, மீண்டும் அவனே பேசினான்,
“என்ன மிஸஸ் சோனா, உங்க மீரா ஷோல மட்டும் தான் பேசுவாங்களா? நேர்ல இவ்வளவு அமைதியா இருக்காங்க?” என்றான்.
பின்னால் இருந்த சோனா மயூரியை முறைத்தபடி முன்னே வந்தவள்,
“இல்லை சார், நல்லா பேசுவா. அவளோட ஃபர்ஸ்ட் இன்டர்வியூ, அந்த பதட்டத்துல இருக்கான்னு நினைக்கிறேன்” என்று அவள் அருகே வந்தாள். “அப்புறம்.. இவங்களோட ஒரிஜினல் பெயர் மயூரி. மிஸஸ் மயூரி தான். ஷோக்காக தான் மீரான்னு மாற்றி வைத்திருக்கோம்” என்றாள் சோனா
மயூரியின் தோளைப் பற்றி அவள் காதருகே கிசுகிசுத்தாள்,
“என்னாச்சு மயூரி?” என்றவள் “வாங்க சார் வந்து உட்காருங்க” என்று அவன் அமர வேண்டிய இருக்கையை காட்டினாள் சோனா.
அவனும் மயூரியை பார்த்துக் கொண்டே வந்து அமர்ந்து சுற்றுமுற்றும் பார்த்தான்.
மயூரி அமராமல் சோனாவை பார்த்து, “ஒன் செகண்ட் சோனா” என்றபடி குளியலறையை நோக்கி விரைந்தாள்.
மூச்சு முட்டியது அவளுக்கு. வாஷ்பேஷனில் கைகளை ஊன்றி இருந்தப் படபடப்பை அடக்க முயன்றாள். கண்களில் கண்ணீர் வடிந்தது.
‘என்ன பண்ணி வச்சிருக்க பாரு மயூரி… அவரை எத்தனை தடவை முதுகில் குத்துவ’ என்று தன்னைத்தானே நொந்து கொண்டவள், ஒரு நீண்ட நெடிய மூச்சினை எடுத்தாள்.
கண்களை நீரால் அடித்து கழுவினாள். வெளியே வந்தாள். முகத்தை அழுந்த துடைத்தபடி வந்து அவனுக்கு எதிரே, அவள் அமர வேண்டிய இடத்தில் வந்து அமர்ந்தாள்.
கதிர் அவளுக்கு அருகே நிற்க, மயூரி ரஞ்சனை ஒரு முறை பார்த்தாள். இருவரின் விழிகளும் சில நொடிகள் ஒட்டி நிற்க, மயூரி குரலைச் சீர்செய்து,
“க்கும்…எஸ்..சோனா…” என்றாள்.
“ம்ம்.. யாஹ்..ஸ்டார்ட் பண்ணலாம் மயூரி…ஓகேதானே சார்” என்று ரஞ்சனையும் பார்த்து கேட்டாள் சோனா.
“யாஹ், ஷுயர்.. “என்றவன்,தன் அருகே இருந்த நீர் பாட்டிலை மயூரியிடம் எடுத்து நீட்டி, “உங்களுக்கு தேவைப்படும் மிஸஸ் மீரா” என்றான்.
அவள் கண்களின் சிவப்பினைக் கண்டவன், அவள் அழுதிருக்கிறாள் என்று அவனுக்குப் புரிந்தது. அவன் விழிகளை பார்த்தபடி அதை வாங்கி குடித்தவள், மீண்டும் அவன் புறம் நகர்த்தி வைத்தாள்.
ஒரு நெடிய மூச்சினை எடுத்து கண்களை மூடி திறந்தவள், தன் மைக்கில் திடமான குரலில் பேசினாள் ஆர். ஜேவாக,
“ஹாய் மக்களே! எல்லாருக்கும் இந்த மீராவோட குட்… மார்னிங். எப்படி இருக்கீங்க? இந்த டே எல்லாருக்கும் சூப்பரா போகணும்னு கடவுள் கிட்ட வேண்டிக்கிட்டு இன்னைக்கு நம்ம ஷோக்குள்ள போவோம். இன்னைக்கு நம்ம ஷோல ஒரு சர்ப்ரைஸ் இருக்கு. அதை தெரிஞ்சுக்கறதுக்கு முன்னாடி இந்த பாட்ட கேட்டுட்டு வாங்க” என்றவள் பாட்டை ஒலிக்கச் செய்தாள்.
‘ஒருநாள் சிரித்தேன் மறுநாள் துடித்தேன்… உன்னை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா’ என்று பாடலை ஓட விட்டு திரும்பி ரஞ்சனை பார்த்தாள்.
அவன் இதழ்கள் சிரிப்பில் லேசாக வளைந்தாலும், அதை யாரும் காணாமல் மறைத்துக் கொண்டான்.
சோனாவோ , “வாவ் சூப்பர் மயூரி.. அஸ் ஆல்வேஸ்…”என்று மயூரியின் தோள் தட்டியவள் “ஓகே சார், இனி மயூரி பார்த்துப்பா. வா கதிர்” என்றபடி இருவரை மட்டும் விட்டு அறையை மூடிவிட்டு வெளியே சென்றனர்.
கண்ணாடி அறையினுடே வெளியே சென்ற அவர்களை பார்த்திருந்த ரஞ்சன்,
“என்ன சிச்சுவேஷனல் சாங்கா..?” என்றான்.
அவனை நிமிர்ந்தும் பாராமல் அடுத்து பேச வேண்டியதை பார்த்தபடி இருக்க, ரஞ்சன் அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தவன் இல்லை, ரசித்தவன் புருவங்கள் மெச்சுதலில் உயர்ந்தது..
“ம்ம்…குட்..!”என்றான்.
பாடல் முடிய மயூரி மீண்டும் பேசினாள்,
“மக்களே இன்னைக்கு சர்ப்ரைஸ்னு சொன்னேனே… சாரி சாரி, இன்னைக்கு மட்டுமில்ல இனி எல்லா ஃப்ரைடேயும் ஒரு கெஸ்ட் வரப்போறாங்க ஹே…. “என்று குதூகளித்து மீண்டும் பேசினாள்.
“ இன்னிக்கி நம்ம கூட இருக்க கெஸ்ட் ஒரு பெரிய பிசினஸ் மேன் அவரோட ப்ராடக்ட்ஸ் நம்ம வீட்டில கண்டிப்பா இருக்கும். யாருன்னு கேட்குறீங்களா..? அதை யோசிச்சுக்கிட்டே இன்னொரு பாட்டை கேளுங்க” என்றவள் மீண்டும் பாடலை ஒலிக்க விட்டாள்.
அவள் பேசும் விதத்தை ரசித்தபடி ரஞ்சன் தன் இருக்கையில் அமர்ந்திருக்க, மயூரி அவனை திரும்பியும் பார்க்கவில்லை. அவனும் அவளின் கஷ்டம் உணர்ந்தவனாக ஏதும் பேசாமல் அமர்ந்திருந்தான். அவளின் மேலிருந்த பார்வையை மட்டும் அவன் அகற்றவே இல்லை. மீண்டும் பேசும் நேரம் வர, அவனை திரும்பி பார்த்தவள் குரலைச் செறுமி,
“இப்போ உங்க பேரை சொல்லிட்டு கொஸ்டின்ஸ் கேட்க ஆரம்பிப்பேன், நீங்க உங்க மைக்ல பேசுங்க” என்றாள் அவன் விழிகளைப் பார்க்காமல்.
அவனும் புன்னகையுடன்,
“ம்ம்…யாஹ்,ஐ யாம் ரெடி..“என்றான்.
மயூரி பேசினாள்,
“ மக்களே இன்னைக்கு நம்ம கெஸ்ட் யார் என்று கண்டுபிடித்தீர்களா? இதோ அவரே பேசுவார். வெல்கம், வந்தனம், நமஸ்கார் மிஸ்டர் ரஞ்சன்! வருக வருக என்று உங்களை வரவேற்கிறோம்..” என்று அவனைப் பார்க்க,
“ஹாய் குட்மார்னிங்” என்றான் அவன்.
“சொல்லுங்க, இந்த பிசினஸ் வேர்ல்டுல நீங்க இந்த இளம் வயசுல எப்படி இவ்ளோ சாதிச்சீங்க?” என்றாள் அவனைப் பார்த்தபடி.
“நோ.. நோ..நான் என்னங்க மீரா சாதிச்சிட்டேன்? எங்க அப்பா உருவாக்கி வைத்திருந்ததை இன்னும் பல மடங்கு உயர்த்தி இருக்கேன் அவ்ளோதான். ஒன்னு சொல்லட்டுமா மீரா ? ஜீரோல இருந்து ஒன் ஆக்குறது தான் கஷ்டம். அதுக்கப்புறம் அந்த ஜீரோக்கள் இடம் மாறுவது ரொம்ப சுலபமா கொண்டு போய் விடலாம். பிகாஸ்.. த ஃபார்முலா இஸ் ஆல்ரெடி ரிட்டன், ரைட்?”என்றான் தன் கம்பீர குரலில்
அவன் சொன்ன பதிலில் மனதில் ‘சபாஷ்’ கூறினாள் மயூரி. அதையே குரலிலும் கொண்டவளாக ,
“ஆனாலும் இவ்வளவு தன்னடக்கம் கூடாது சார். மக்களே, ரஞ்சன் சாரை பற்றி இன்னும் நிறைய தெரிஞ்சுக்க போறோம். இது ஏர் எப்.எம், காற்றோடு சுகமாக…” என்றவள் விளம்பரங்களை ஓடச் செய்தாள்.
இப்பொழுதும் அமைதியாகவே ரஞ்சன் அவளைப் பார்த்து அமர்ந்திருந்தான். அவளின் மனதிடம் அவனை வியக்க வைத்தது. அவள் ஒரு நொடியில் ஆர்.ஜேவாக மாறி தன் மனப்போராட்டத்தை பின் தள்ளி, தன் குரலில் துள்ளல் கொண்டு வந்ததில் அவன் வியப்பின் உச்சிக்கே சென்று விட்டான்.
விளம்பரங்கள் முடிய மீண்டும் பேசினாள்,
“எஸ் மிஸ்டர். ரஞ்சன், நீங்க லைஃப்ல நிறைய ட்ராஜடீஸ் பேஸ் பண்ணி இருக்கீங்க. ஒரு மேஜர் ஆக்சிடென்ட்… உயிரே போயிருக்க வேண்டும், உங்கள் கால்களை இழந்திருந்தீங்க. ஆனால் திரும்ப நீங்க எப்படி உங்களை புதுப்பிச்சுகிட்டு இப்படி உயர்ந்து நிக்கிறீங்க? சொல்லுங்க..” என்றாள் மிக ஆர்வமாக.
இந்த கேள்வியை சோனா எழுதி இருந்தாலும், மயூரியுமே அறிந்து கொள்ள விரும்பிய கேள்வி இது. தன் முன்னே அமர்ந்திருப்பவனின் தாயாரே அறியாத புரியாத கேள்வி ஆயிற்றே!
மென்புன்னகையுடன் மயூரியை ஆழமாக பார்த்தவன், “இதை நான் சொன்னா நீங்க நம்புவீங்களான்னு தெரியல…” என்றவன் குரலைச் செறுமி, “நீங்க தான் காரணம் மீரா” என்றான் சிறு சலனமும் இல்லாமல்..
அவன் சொன்ன பதில் புரியாமல் தடுமாறியவள்,
“க்கும்..என்ன சொல்றீங்க சார்? கொஞ்சம் எல்லாருக்கும் புரியிற மாதிரி சொல்லுங்க” என்றாள் குரலில் கேள்வியுடன்.
“ஹ்ம்ம்…எஸ் யூ ஆர் த ரீசன் மீரா “என்றவன் “உங்க ஷோவை கேட்டு தான் மீண்டும் எழுந்து நிற்கணும்னு நினைச்சேன். இன்னைக்கு உங்க முன்னாடி நின்னுட்டும் இருக்கேன்” என்றான் திடமாக அவளைப் பார்த்து.
அவன் பார்வையில் தடுமாறியவள்,
“ம்ம்..கொஞ்சம் கஷ்டம்தான் மக்களே… மிஸ்டர் ரஞ்சன் சொன்ன பதிலில் எனக்கும் கொஞ்சம் காய்ச்சல் வரும் போல தெரியுது. இந்த பாட்டை கேட்டுட்டு நியாயத்தை கேட்போம்” என்றபடி பாடலை ஓடச் செய்தாள்.
அவனை நிமிர்ந்து புரியாமல் பார்த்தவளை மென்புன்னகையுடன் பார்த்து ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கினான் ரஞ்சன். அவள் மனதில் பட்டாம்பூச்சிகள் பறக்க துவங்க, தன்னைத்தானே கடிந்து கொண்டு காகிதங்களைப் பார்க்க துவங்கினாள்.
பாடல் முடியும் வரை அமைதியாக இருந்தவள்,
“மக்களே! மிஸ்டர் ரஞ்சன் கிட்ட எனக்காக எல்லாரும் நியாயம் கேளுங்க. இதோ நானும் கேட்கிறேன். அவர் பதில் சொல்லியே தீரனும்” என்றபடி அவனைப் பார்க்க, சிரிப்புடன்,
“ஹா.. ஹா..என்ன மீரா,நீங்க நம்பலையா? நீங்க தான் காரணம். ஆக்சிடென்ட் ஆகி என்னை நானே தனிமைப் படுத்திக்கிட்டேன். அறையிலேயே இருந்தேன். எங்க அம்மாவை கூட உள்ள அலவ் பண்ண மாட்டேன். வாழ்க்கையில விரக்தி, துரோகம்னு சந்தித்த எனக்கு கிடைத்த ஒரே நிம்மதி என் அப்பாவோட சின்ன ரேடியோ. அதுல அவர் பாட்டு கேட்டுட்டே இருப்பார். அன்னைக்கு அதை ஏதேச்சயா ஆன் செய்தபோது நான் கேட்ட முதல் குரல் உங்களது…! நீங்கள் சொன்ன வார்த்தை ‘தைரியம்’” என்று கூறி அவளை ஆழ்ந்து பார்த்து மீண்டும் தொடர்ந்தான்.
“வாழ்க்கையில் தைரியம் என்கிற வார்த்தைக்கு உண்மையான அர்த்தத்தை நீங்க தான் எனக்கு சொல்லிக் கொடுத்தீங்க மீரா..” என்றான் புன்னகை மாறாமல்.
இதை கேட்டு திகைத்த மயூரி, அவனின் ஒற்றைப் புருவம் தூக்கிய பார்வையில் சுய உணர்விற்கு வந்தாள்,
“ஓகே சார், ரொம்ப தேங்க்ஸ். உங்க வார்த்தைகள் எனக்கு எனர்ஜி ட்ரிங்க்ஸ் குடிச்ச மாதிரி இருக்கு. மக்களே, நம்மளால் நாலு பேர் மேல வந்தா நம்மளுக்கும் சந்தோஷம் தானே? அதே சந்தோஷத்தோட இந்த பாட்டை கேளுங்க” என்றவள் அவனை ஆழ்ந்து பார்த்தாள்.
அவனும் அவளையே பார்த்திருந்தான். மயூரிக்கு அவன் கூறுவது உண்மையா..? அல்லது ஷோவிற்காக கூறுகிறானா..? என்று மனதில் குழப்பம்.
ஆனால் அவனின் பார்வை மாற்றம் இப்பொழுது லேசாக அவளுக்கு புரிந்தது.
பாடல் முடிய,
“ஓகே சார், உங்க பேமிலி பத்தி சொல்லுங்க” என்று கேட்டாள் மயூரி.
“என் அம்மா… அப்புறம் என்னோட வைஃப்…”என்று அவன் கூற
“ஓ…உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா? இளம் பெண்களே சோ…சாட்.. “என்றாள் மயூரி.
ரஞ்சன் சிரித்தபடி,
“என் மனைவி என் வாழ்க்கையில பெரிய மாற்றத்தை கொண்டு வந்தா. அவ பெயர்…” என்று அவன் அவளைப் பார்க்க,
மயூரி கண்களை விரித்து அவனைப் பார்த்து ‘வேண்டாம்’ என்று தலையசைக்க,
“அவங்க பேரு மயூரி. மிஸஸ் மயூரி ரஞ்சன்” என்றான் அவளை ஊடுருவும் பார்வை பார்த்தபடி.
மயூரி திகைத்து அவனையே பார்த்திருக்க, அவள் முன் சொடுக்கிட்டான் ரஞ்சன். சட்டென சுதாரித்தவள்,
“அப்புறம் மிஸ்டர் ரஞ்சன், உங்களைப் போல உங்கள் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறுபவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?” என்றாள்.
“ம்ம்…நம் வாழ்க்கையோட பாதையை சீர் செய்ய எங்கிருந்து வேணா ஹெல்ப் வரலாம். அதை நாம் உணர மட்டும் தான் செய்யணும். அதோட முக்கியமானது தைரியம்…தைரியமா, துரோகம் அது இதுன்னு யார் மேலேயும் பழி போடாமல்…தைரியமா நெஞ்ச நிமிர்த்தி தலையை நிமிர்த்தி சொல்லுங்க… ‘ஐ கேன் டூ இட் அண்ட் ஐ வில் டூ இட்..!” என்று அவள் கூறிய வார்த்தைகளை கூறி புன்னகையுடன் அவள் விழிகளைப் பார்த்தான்.
மயூரி கூறிய அதே வார்த்தைகள்! திகைத்தவள் சுய உணர்வுக்கு வந்தாள். தன் ஷோவை நிறைவு செய்து பேசி முடித்தாள்.
சோனா, கதிர் அனைவரும் கைதட்டியபடி அறைக்குள் வந்தனர். மயூரி ரஞ்சனை பார்த்தபடி எழுந்து நிற்க, சோனா மயூரி அருகே வந்து அவளை கட்டி அணைத்து,
“மயூரி.., சார் தான் உன் ஹஸ்பண்ட்னு நீ கூட சொல்லவே இல்ல பார்த்தியா?” என்றவள். ரஞ்சனை பார்த்து,
“சார் ப்ளீஸ்…மயூரி உங்களுக்கு தெரியாம வந்ததால இன்னும் ஒன் வீக்ல ரிலீவ் ஆகுறேன்னு சொல்றா. அதான் உங்களுக்கு தெரிஞ்சு போச்சே. அதோட இவளை பிடிக்கும், இன்னும் ஷோவை பிடிக்கும்னு சொன்னீங்க. அவள ஷோ பண்ண கண்டிப்பா அலவ் பண்ணுங்க சார் ப்ளீஸ்” என்றாள் சோனா மயூரியின் தோளில் கை போட்டபடி
ரஞ்சன் புன்னகைத்தபடி “ம்ம்…கண்டிப்பா.. வருவா.. “என்றான்.
மயூரி அவனைப் பார்த்திருக்க சோனாவோ ,
“வாவ் சூப்பர் மயூரி!” என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்.
முகத்தை சுருக்கி சோனாவை பார்த்த மயூரி, கன்னத்தை துடைத்தபடி அப்படியே ரஞ்சனை பார்க்க, அவனும் அவளின் முகம் மாற்றத்தில் சிரித்தபடி வெளியே சென்றான்.
மயூரிக்கு ஒன்றும் புரியவில்லை. ‘இது உண்மைதானா?’ என்று இருந்தது அவளுக்கு. அனைவரும் அவன் பின்னோடு செல்ல, மயூரி ரஞ்சனை பார்த்தாள். அனைவரும் அவர்களை வாழ்த்தினர்.
பிரியா கூட மயூரியைப் பார்த்து கைகளை ஆட்ட, அவளை ரஞ்சன் பார்க்க அவனைக் கண்டும் புன்னகைத்தாள் பிரியா.
அனைவரிடமும் விடைபெற்று வெளியே வர, ரஞ்சன் பிரியாவை பார்த்து,
“வாங்க கார்லயே போயிறலாம்” என்றவன் ஆனந்துடன் முன்னிருக்கையில் ஏறினான்.
மயூரி ஒன்றும் கூறாமல் பிரியாவுடன் பின் இருக்கையில் ஏறினாள். அவள் மனம் ஒருபுறம் மகிழ்ந்தாலும், மறுபுறம் என்னவென்றே புரியாமல் குழம்பித் தான் போயிருந்தது.
ஆனால் அவள் நிலைக்கு மாறாக பிரியாவோ வெகு குதூகலமாக இருந்தாள்.
“ஹய்யோ.. மயூரி.. இரண்டு பேரையும் பார்த்த உடனே என் உசுரு என்னிடம் இல்லை.. போச்சு.. இன்னைக்கு தான் நம்ம வாழ்ற கடைசி நாள்னு நினைச்சிட்டேன். ஒரு ஓரமா போய் பம்மிட்டேன்..!அப்புறம் ஷோ கேட்டதுக்கு அப்புறம் தான் போன உசுரு திரும்பி வந்துடுச்சு” என்றாள்.
மயூரி அவளைத் திரும்பி முறைக்க, ரஞ்சனும் ஆனந்தும் வந்த சிரிப்பை அடக்கியபடி இருந்தனர்.
ரஞ்சன் சிரிப்பைக் காட்டாமல் முகத்தை இறுக்கமாக்கியவன்,
“அப்புறம் உங்க கம்ப்யூட்டர் கிளாஸ் எப்படி போகுது?” என்றான் குரலில் கோபத்தைக் கொண்டு வந்து.
பிரியா சிரிப்பை நிறுத்தி மயூரி அருகே சென்று அவள் காதினுள், “உன் ஆளு என்ன மயூரி…?விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு சீதைக்கு ராமன் பிரதர் தானேனு கேட்கிறார்..!” என்றாள்.
“நீ பேசுறது எனக்கு தெளிவாவே கேட்குது. நான் கேட்டது போன வாரம் வீட்டுக்கு வந்து மயூரியையும் சேர்த்து கம்ப்யூட்டர் கிளாஸ் சேர்ந்தாயே அதை பற்றி” என்றான் ரஞ்சன் சற்று குரலை உயர்த்தி,
“ஆங்…அது…அது அண்ணா… மயூரி நீயே சொல்லிருடி. நான் வேணா ஓடுற கார்ல இருந்து வெளிய குதிச்சடுறேன்” என்றாள் லேசான நடுக்கத்துடன்.
வந்த சிரிப்பை வெகு பாடுபட்டு அடக்கினான் ரஞ்சன்.
“வாயை மூடு டீ..”என்றாள் மயூரி பற்களை கடித்தபடி,
ரியர் வியூ ஊடே மயூரியை ரஞ்சன் பார்க்க, அந்தப் பார்வையில் மயூரியின் உள்ளம் லேசாக பதறத் தான் செய்தது. மனதில் ஒரே போராட்டம், மகிழ்வதா இல்லை பதறுவதா? அமைதியாக அமர்ந்து இருந்தாள்.
அதன்பின் பிரியாவும் அமைதியாக வந்தாள். பிரியாவை அவர்கள் வீட்டு தெருமுனையில் இறக்கி விட்டவன்,
“இனிமே உன்னை இவளோட பார்த்தேன்…” என்று ரஞ்சன் மிரட்டலாகச் சொல்ல,
“அய்யோ…அண்ணா, இப்ப ரெண்டு அடி நடக்கிறேன், நீங்க கூப்பிடுங்களேன்… நீங்க யாருன்னு கேட்கிறேன். இப்பவே உங்க கார்ல உட்கார்ந்து இருக்க அந்த ஆன்ட்டி யாருன்னு தெரியலைங்க அண்ணா” என்றாள் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு.
சிரிப்பை அடக்கி முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு, “அது..அப்படியே திரும்பி பாக்காம ஓடிடு!” என்றவன் ஆனந்தை காரை எடுக்கச் சொன்னான்.
பிரியா பெருமூச்சுடன் திரும்பி நடந்தாள். மயூரியோ அவளைப் பார்த்தபடி அமைதியாக இருந்தாள். ரஞ்சன் அவளைத் திரும்பிப் பார்த்துவிட்டு நேராக அமர்ந்து கொண்டான். உதட்டில் மெல்லிய புன்னகை படர்ந்திருக்க, எதுவும் கூறாமல் அமைதியாகவே இருந்தான்.
வீடு வந்தவுடன் ரஞ்சன் இறங்க, மயூரியும் இறங்கி ஏதும் கூறாமல் வீட்டினுள் சென்றாள். ரஞ்சன் ஆனந்தை ஆபீஸுக்கு அனுப்பியவன், அவள் பின்னோடு வீட்டினுள் நடந்தான்.
