கௌரியும் வர்ஷினியும் அமெரிக்கா செல்ல விமானத்தில் ஏறினர். வர்ஷினி இதற்கு முன் விமானத்தில் பயணித்ததில்லை, கிட்டத்தட்ட இருபது மணி நேரம் பயணம் செய்யவேண்டும். எனவே அவளுக்கு இது புது வித அனுபவமாக இருந்தது. விமானத்தில் ஏறியவுடன் மூன்று இருக்கைகள் இருக்கும் இடத்தில் இருவரும் அமர்ந்தார்கள். இவர்களுக்கு ஒதுக்க பட்ட இடம் ஜன்னல் ஒரே இருக்கையை அடுத்தும் வரும் இடங்கள். சிறிது நேரம் கழித்து உடல் பருமனான பெண்மணி அங்கு வந்து அமர்ந்தாள். அவர் அமர்ந்தவுடன் இருவருக்கும் இடம் போதவில்லை. சற்று நெருக்கமாகவே அமரும் நிலை. கல்யாணம் ஆன இந்த இரண்டு வாரத்தில் வர்ஷினியும் கௌரியும் தங்கள் வாழ்க்கையை இன்னும் தொடங்க ஆரம்பிக்காத நிலையில் இந்த நெருக்கம் வர்ஷினிக்கு சற்று பதட்டத்தை கொடுத்தது. ஆனால் கௌரிக்கு ஏதோ மலர் பந்து ஒன்று தம் மீது சாய்ந்தது போல் சந்தோஷத்தை தான் கொடுத்தது. வர்ஷினிக்கு இப்படியே கிட்டத்தட்ட ஒரு நாள் முழுவதும் பயணிக்கவேண்டும் என்று நினைக்கையிலேயே உள்ளுக்குள் ஏதோ செய்தது. சிறிது நேரம் கழித்து விமானம் பறப்பதற்கான அறிக்கையை விமானி கூற பக்கத்தில் இருந்த அந்த பெண்மணி வர்ஷினியிடம் பேச்சு கொடுத்தாள். உன் பேரு என்னம்மா என்று சகஜமாக கேட்டு விட்டு, என் பேரு ஜெயசுதா எனக்கு ஒரு பெண்ணும் பிள்ளையும் இருக்காங்க . இரண்டு பேரும் அமெரிக்காவில் தான் இருக்காங்க. என் மருமக கர்ப்பமா இருக்கா. இன்னும் கொஞ்ச நாளில் குழந்தை பிறக்க போகுது. அதனால் தான் நான் அவளை பாத்துக்கறதுக்காக அமெரிக்கா போறேன், எனக்கு அவ்வளவா ஆங்கிலம் படிக்க, எழுத தெரியாது. இரண்டு விமானம் மாறி போகணுமாமே அதனாலே எனக்கு அமெரிக்கா போற வரைக்கும் உதவ முடியுமா என்று கேட்டதும், வர்ஷினி உங்க பயணசீட்டை காட்டுங்க என்று கேட்க, அவர்களும் காட்ட, இவர்கள் போகும் அதே வழியில் தான் அவர்களும் போகவேண்டியிருந்ததால் சரி ஆண்ட்டி என்று வர்ஷினியும் உதவுவதாக ஒத்துக்கொண்டாள்.
விமானம் புறப்பட்டதும் அந்த அம்மையார் தூங்கிவிட்டார். வர்ஷினி இருக்கையில் இருந்த சிறிய பொழுதுபோக்கு கணினி திரையில் விமானத்தில் கொடுத்த ஹெட் செட்டை மாட்டிக்கொண்டு ஒரு பழைய படத்தை பார்கலானாள். கௌரியும் ஒரு ஆங்கில படத்தை பார்த்துக் கொண்டிருந்த போதே வந்த அலுப்பின் காரணமாக பாதி படத்திலேயே தூங்கிவிட்டான். சிறிது நேரம் கழித்து இவர்கள் இருக்கையில் ஓரமாக அமர்ந்திருந்த ஜெயசுதா அம்மையார் கழிவறை செல்ல நடு நடுவே எழுந்துக் கொள்ளும்போது இவர்களும் எழுந்து அவர்களுக்கு வழிவிட்டார்கள். அந்த அம்மையார் சக்கரை வியாதி உள்ளவர் போல. எனவே ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை எழுந்து கொள்ள கௌரியால் சரியாக தூங்க முடியவில்லை. இரவெல்லாம் அந்த அம்மையாரின் தொந்தரவால் இருவராலும் நன்றாக உறங்க முடியவில்லை. கௌரிக்கு சற்று எரிச்சலாக இருந்தாலும் அவரின் வயதின் காரணமாகவும், அவர்களால் தான் வர்ஷினி தன்னுடன் நெருங்கி அமர்த்திருந்ததாலும் அவரை எதுவுமே சொல்ல மனம் வரவில்லை.
ஒரு வழியாக அவரையும் அழைத்துக்கொண்டு இரு விமானங்கள் மாறி அமெரிக்கா வந்து சேர்ந்தனர். அங்கு ஜெயசுதா அம்மையாரின் மகன் இருவருக்கும் நன்றி கூறி அவரை அழைத்து சென்றார். இவர்கள் வந்தது குளிர் காலமாதலால் வெளியில் கடும் குளிர். போட்டிருந்த குளிராடையையும் மீறி உடம்பு வெடவெடத்தது வர்ஷினிக்கு. கௌரியுடன் அப்படியே ஒண்டிக்கொண்டு தான் செல்ல வேண்டி இருந்தது.
வாடகை கார் வரும்வரை காத்திருந்து, இருவரும் தங்களுடைய அப்பார்ட்மெண்ட் வந்து சேருவதற்குள் இரவாகி விட்டது.
இரண்டு பேருக்குமே மிகவும் அலுப்பாக இருந்தது. இரவு வெகு நேரம் ஆனதால் ஒரு சாப்பாடு கடையும் திறந்திருக்கவில்லை . கௌரியும் இந்தியாவுக்கு செல்ல வேண்டும் என்பதால் முன்பே குளிர் சாதன பெட்டியை காலி செய்து விட்டு தான் சென்றிருந்தான். எனவே அதிலும் ஒன்றும் இல்லை. மளிகை பொருட்கள் கொஞ்சம் இருக்கவே கௌரி அவசர அவசரமாக வந்து கோதுமை மாவை கலந்து அதில் சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து தனக்கும் வர்ஷினிக்கும் கோதுமை தோசை சுட்டான். தொட்டுக்க வீட்டிலேயே இட்லி பொடி இருப்பதால் அதையே வைத்து வர்ஷினிக்கு கொடுத்தான். வர்ஷினியும் பசிக்கு அதை மறுக்காமல் வாங்கி உண்டாள். தோசை நன்றாகவே இருந்தது. பரவாயில்லையே நன்றாகவே தோசை சுடுகிறான் என்று மனத்திற்குள்ளாகவே அவனை மெச்சவே செய்தாள், ஆனால் வெளியில் எதையுமே காட்டிக்கொள்ளவில்லை. களைப்பு மிகுதியால் இருவருமே சீக்கிரமாகவே உறங்கிவிட்டனர்.
மறுநாள் வர்ஷினி சீக்கிரமாகவே விழித்து விட்டாள். வீட்டில் ஹீட்டர் இருப்பதால் வீட்டுக்குள் குளிர் தெரியவில்லை, அதனால் இரவு நன்றாக தூங்கி காலையிலே விழிப்பு வந்து விட்டது. விழித்ததும் கழிவறை செல்ல உள்ளே போக அப்படியே அதிர்ந்து விட்டாள். ஏனென்றால் அமெரிக்காவில் உள்ள வீடுகளில் நம் இந்திய கழிவறை போல் தண்ணீர் ஊற்றி கழுவும் வசதி கிடையாது. அமெரிக்காவில் வாழும் அனைவரும் தண்ணீருக்கு பதில் மெல்லிழை காகிதம் அதாவது டிஷு பேப்பர் தான் உபயோகிப்பார்கள். வர்ஷினிக்கு இது தெரியாது ஆதலால் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு நின்று இருந்தாள். அவசரமாக கழிவறைக்கு வேறு போக வேண்டிய நிலை, கௌரியை எழுப்பலாம் என்றால் அவனிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் நெளிந்து கொண்டிருக்க, கௌரி, அறையின் விளக்கொளியில் கண் திறந்து பார்த்த பொது வர்ஷினி கண்களை உருட்டிக் கொண்டு நிற்பதை பார்த்து, படுக்கையில் இருந்து எழுந்து வந்து அவளை பார்த்து என்ன வர்ஷினி? என்னை வேணும்? ஏன் இப்படி நிக்கிறே ?என்று ஒன்று புரியாமல் அவளை பார்க்க, அவனிடத்தில் எப்படி சொல்வது என்று தயங்கிய வர்ஷினி, பின் ஒருவாறு கழிவறை உபயோகப்படுத்தனும் , கழிவறை பக்கத்தில் தண்ணீர் குழாயே இல்லை. இவ்வளவு பெரிய வீடு பார்த்திருக்கே, கழிவறையில் தண்ணீர் ஊற்றும் வசதி உள்ள இடமா பார்த்து இருக்க கூடாதா! கை கழுவ சிங்க் மட்டும் தான் இருக்கு என்று ஒன்று புரியாமல் புலம்ப, கௌரிக்கு சிரிப்பு பொத்திக் கொண்டு வந்தது. இருந்தும் அதனை அடக்கி கொண்டு, இங்கு இருக்கிற எல்லா வீடுகளிலும் கழிவறையில் தண்ணீர் போக வசதி கிடையாது. பக்கத்தில் இருக்கும் குளிக்கும் தொட்டியில் தான் தண்ணீர் போக வசதி இருக்கும். கை கழுவும் சிங்க்இல் தண்ணீர் போக வசதி இருக்கு. நீ கழிவறையை உபயோகப்படுத்தினா டிஷு பேப்பரில் தான் துடைச்சிட்டு சிங்க்ல கை கழுவனும் என்று ,வர்ஷினி அய்யய்யோ, இங்க இருக்கிறவங்க எல்லோரும் சுத்தமா இருக்கமாட்டாங்களா? என்னால முடியாது. நீ எனக்கு ஒரு கப் அல்லது மக் இருந்தா கொடு நான் தண்ணீர் கீழே சிந்தாம பயன்படுத்திக்கொள்கிறேன் என்று அவனிடம் கப்பை வாங்கி கொண்டு உள்ளே சென்றாள். கௌரிக்கு அவள் முகத்தில் தோன்றிய உணர்வுகளை நினைத்து சிரிப்பாக வந்தது. வாய் விட்டு சத்தம் போட்டு சிரித்தான்.
குளித்து முடித்து வெளியே வந்த வர்ஷினிக்கு பசி எடுத்தது. ஏதாவது சமைக்கலாம் என்று வெளியே வர, ஹாலில் ஒரு பகுதியை சமையலறையாக இருக்க, அங்கு சென்று என்ன இருக்கிறது என்று ஆராய்ந்து ரவை கையில் கிடைக்கவே உப்புமா செய்யலாம் என்று செய்ய ஆரம்பித்தாள். தீடீரென்று அலாரம் போன்ற பெரிய சத்தம் சமையல் பகுதியில் இருந்து வந்தது. வர்ஷினி சுற்றுமுற்றும் பார்க்க ,மேலே சீலிங்கில் இருந்து தான் சத்தம் வந்தது. சத்தம் நின்றபாடில்லை. தொடர்ந்து அடித்துக் கொண்டு தான் இருந்தது. குளித்து கொண்டிருந்த கௌரி குளியலறை வரை சத்தம் கேட்கவே அவசர அவசரமாக இடையில் டவலை கட்டிக்கொண்டு வெளியே வந்தான். வர்ஷினி காலையில் விழித்தது போலவே திரு திருவென ஒன்றும் புரியாமல் விழித்து கொண்டு இருக்க, அங்கு வந்த கௌரி பால்கனி கதவை திறந்து விட்டு வெளியேற்றும் விசிறியை அதாவது exhaust fanயை போட்டு விட்டான். சிறிது நேரத்தில் சத்தம் அடங்கி அமைதியாகியது. வர்ஷினி புரியாமல் அவனை பார்க்க, கௌரி நீ சமைக்கும் போது மறக்காமல் இந்த காற்றை வெளியேற்றும் விசிறியை போட்டுவிடு. ஏன்னா இங்கு வீடுகள் எல்லாம் மரத்தில் தான் கட்டி இருக்காங்க. மரம் சீக்கிரமா தீ பிடிக்கும் காரணத்தால எல்லா வீடுகளிலும் இந்த அலாரத்தை வச்சியிருப்பாங்க. நீ இதை போடலானா இப்படி தான் கத்தும். கொஞ்ச நேரம் தொடர்ந்து கத்துச்சின்னா அப்புறம் போலீசும் தீயணைப்பு
ஆளுங்களும் வந்துருவாங்க என்று கூற வர்ஷினி என்ன ஊர் இது. சுதந்திரமா சமைக்க முடியல. ஆய் கூட சுதந்திரமா போக முடியல என்று தனக்குள் முணுமுணுக்க அது கௌரிக்கு நன்றாக கேட்டு விட்டது. அவன் உள்ளே சென்று அவளுக்கு தெரியாமல் வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்து கொண்டிருந்தான்.
பின் இருவரும் சாப்பிட்டு விட்டு அங்கிருக்கும் இந்திய பொருட்கள் விற்கும் கடைக்கு சென்றார்கள். அந்த கடையை பார்க்க பார்க்க வர்ஷினிக்கு ஆச்சரியமாக இருந்தது. அவ்வளவு பெரிய மளிகை கடையை அவள் சென்னையில் பார்த்தது இல்லை. சென்னையில் பெரிய டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் மற்றும் மால்களில் கடைகள் பார்த்திருக்கிறாள் தான் ஆனாலும் குவியல் குவியலாக பிரெஷான காய்கறிகள் கொட்டி கிடந்தன. ட்ராலியை தள்ளிக் கொண்டு அங்கிருக்கும் காய்கறிகள், மளிகை சாமான்களை வாங்கி கொண்டு பணம் செலுத்தி வெளியே வர அங்கு ஒரு மூன்று வயது அமெரிக்க குழந்தை நல்ல சிவப்பாக, நீல நிற கண்களுடன் புஸு புஸு வென அழகாக இருந்தது. அது தன் மழலை மொழியில் ஹாய் என்று கையசைத்து இவளை அழைக்க, இவளும் அதை தூக்க போக, உடனே கௌரி அவளை தடுத்து அவசரமாக அவளை கையை பிடித்து அழைத்து சென்றான். வர்ஷினிக்கு அவன் மீது கோபமாக வந்தது. ஏன்டா, அந்த குழந்தை எவ்வளவு அழகா இருக்கு, தூக்க போனா ஏன்டா என்னை இழுத்துட்டு வந்துட்டே என கோபமாக கூற, உடனே கௌரி இது நம்ம ஊரு இல்லை வெளிநாடு. இங்கு இருக்கிற சட்டம் எல்லாம் வேற மாதிரி இருக்கும். நாம் சட்டத்தை மதிச்சு நடந்துக்கடலான அபராதம் கட்ட வேண்டி இருக்கோம் என்று கூற,குழந்தையை தூக்கறதுக்கும் அபராததிற்கும் என்ன சம்பந்தம், என்ன உளறான் இவன் என்று நினைத்துக் கொண்டு அவனை பார்த்த வர்ஷினி, குழந்தையை ஆசையா தூக்க சென்றது ஒரு குத்தமா அதற்காக அபராதம் எல்லாம் கட்டணுமா என்று ஆச்சரியமாக அவனை பார்த்து கேட்க, இங்க எல்லாம் நம்ம ஊரு போல எந்த குழந்தையையும் அப்படி எல்லாம் பெற்றோரின் அனுமதி இல்லாமல் தூக்கி கொஞ்ச கூடாது. உன்னை குழந்தை பிடிச்சிட்டு போற ஆளுன்னு உன் மேலே கேஸ் போட்டுடுவாங்க என்று அவன் கூற வர்ஷினிக்கு தூக்கி வாரி போட்டது. ஏன்டா ஒரு குழந்தையை தூக்கி கொஞ்சறது அவ்வளவு பெரிய குத்தமா என்று அப்பாவியாய் கேட்க, இங்க எல்லாம் அப்படிதான். நாம ஊரில் சாதி வெறி, இனவெறி போல் இங்குள்ள மக்களுக்கு நிற வெறி இருக்கு. நான் எல்லோரையும் தப்பா சொல்லல . ஆனாலும் இங்கு இருக்கிற ஒரு சிலர்ஆளுங்க நிறத்தை பாத்துதான் நட்பா பழகுவாங்க. என்று விவரித்து கூற, வளர்ந்த நாடுனு சொல்லறாங்க இந்த ஊரில் கூட இப்படி நடந்து கொள்கிறார்களே என்று வருத்தமாக இருந்தது வர்ஷினிக்கு.
ஒரு சில ஊர்களை தவிர பெரும்பாலும் அங்கு கார் இல்லாமல் வெளியே செல்ல முடியாது. கௌரிக்கு ஏற்கனவே கார் ஓட்ட தெரியும் ஆதலால் அவனுக்கு கஷ்டமாக தெரியவில்லை. எனவே அவனும் அங்கு கார் வாங்கியிருந்தான். இருவரும் பொருட்களை காரில் ஏற்றி கொண்டு வீட்டுக்கு வரும் வழியில் வர்ஷினி வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தாள். எங்கும் பனி நிறைந்திருந்தது. கீழே வெண் பட்டு விரித்தாற்போன்று வெண்மையாக காட்சி அளித்தது. காருக்குள்ளும் ஹீட்டர் இருப்பதால் குளிர் தெரியவில்லை. மரங்கள் எல்லாம் இலை உதிர்ந்து வெள்ளை பனி மூடி வெள்ளை பூக்கள் பூத்திருப்பது போல் காட்சியளித்தது. பார்க்கவே மிக ரம்மியமாக இருந்தது. அங்கு போக்குவரத்து சிக்னலில் ஒரு அமெரிக்கன் கையில் ஒரு பதாகை யை தாங்கி நின்றுகொண்டிருந்தான். அதில் நான் அநாதை. எனக்கு உதவி செய்யுங்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் என்று எழுதி இருந்தது. அதை பார்த்ததும் வர்ஷினி நம்ம நாட்டை ஏழை நாடு என்று கூறும் இவர்கள் நாட்டிலும் இந்த நிலை தானோ என்று எண்ணி கொண்டே அவனை அழைத்து அவனுக்கு பணம் கொடுக்கும்படி கௌரியிடம் சொல்ல கௌரியும் அவனை அருகில் அழைத்து பாத்து டாலரை அவனுக்கு அளித்தான். அதனை பார்த்ததும் அவன் கண்களும் உதடுகளும் சிரிக்க நன்றி, கடவுள் உங்களை ஆசிர்வதிக்காட்டும் என்று ஆங்கிலத்தில் சொன்னான்.
கௌரி ஊரில் இருந்து வந்த மறுநாளே வேலைக்கு சென்றிருந்தான். வர்ஷினி அவனுக்காக விடியற்காலையிலேயே எழுந்து அவனுக்கு தேவையான காலை சிற்றுண்டி, மற்றும் மதிய உணவு எல்லாவற்றையும் சமைத்து அவனுக்கு சாப்பாடும் கட்டி குடுத்து வழி அனுப்பி வைத்தாள். பின் வீடு வேலைகளை முடித்து அவள் நேரம் பார்க்கையில் ஒன்பது மணி ஆகியிருந்தது. அவளுக்கு தனியாக சாப்பிடுவது பிடிக்கவில்லை. கௌரி, அவன் கூடவே சாப்பிட அழைத்தும் அவளால் காலையிலே சாப்பிட முடியவில்லை, காலையில் ஏழு மணிக்கே அவளுக்கு சிற்றுண்டி சாப்பிட்டு பழக்கமில்லை எனவே பிறகு சாப்பிடுவதாக சொல்லிவிட்டாள். என்னதான் வேலை செய்தாலும் அவளுக்கு நேரத்தை நகர்த்துவது சிரமமாக இருந்தது. அவளுக்கு பகலில் தூங்கி பழக்கம் கிடையாது, தொலைக்காட்சி நாடகங்களும் பார்க்க பிடிக்காது. எனவே பழைய தமிழ் படத்தை ஓடவிட்டு பார்த்து கொண்டிருந்தாள். எவ்வளவு நேரம் தான் படம் பார்ப்பது, வெளியில் சென்றால் தேவலாம் என்று எண்ணி குளிருக்கான ஆடையை எடுத்து அணிந்து வெளியே வர அங்கு பனி பழை பொழிந்து கொண்டு இருந்தது.
அவளுக்கு இந்த பனி மழையை பார்ப்பது புதிது அல்லாவா. அதை பார்க்க அவளுக்குள் உற்சாகம் கரை புரண்டது. அந்த பனியில் உருண்டு புரண்டு விளையாடவேண்டும் என்று ஆவல் தோன்றியது. அங்கெல்லாம் எப்போதுமே வீட்டிற்கு வெளியில் ஆள் நடமாட்டம் அவ்வளவாக இருக்காது. இன்னும் பனிக்காலத்தில் சுத்தமாக இருக்காது. எப்போதுமே அமைதியே அங்கு குடி கொண்டிருக்கும். அது வர்ஷினிக்கு வசதியாய் போய்விட ஆசை தீரும் வரை அதில் உருண்டு புரண்டு விளையாடினாள். கையில் பனியை பந்து போல் உருட்டி சிறு பிள்ளை போல் தூக்கி தூக்கி போடு குதூகலித்தாள். ஏதோ ஒரு கோப்பை மறந்து விட்டதால் அதை எடுத்துக் கொள்ள வீட்டுக்கு வந்த கௌரி இதை பார்த்து அப்படியே இரசித்து கொண்டு நின்று இருந்தான். அவள் குதித்து குதித்து விளையாடும்போது அவளுடைய சிறிய அடர்த்தியான முடி அவளுடனே மேலும் கீழும் ஆட கௌரிக்கு பார்க்க பார்க்க அவள் மீது காதலும் மோகமும் கூடியது. வர்ஷினி இங்கு சந்தோஷமாக தான் இருக்கிறாள் என்று நினைக்கையிலேயே அவனுக்கும் மகிழ்ச்ச்சியாய் இருந்தது. அவளை தொந்தரவு செய்யாமல் அவனே கதவை திறந்து தான் தேடி வந்த கோப்பை எடுத்துக் கொண்டு சென்றான்.
ஆனால் அவள் செய்த மற்றோரு காரியம் அவனை சங்கடத்தில் ஆழ்த்தியது. அப்படி என்ன செய்தால் வர்ஷினி?
