அத்தியாயம் 26

 

​வீட்டினுள்  மயூரி ரஞ்சனுடன் வருவதை பார்த்த மரகதம், திகைத்தார். மயூரியை பதற்றத்துடன் பார்த்திருக்க, ரஞ்சன் அவரை நேராகப் பார்த்தான். 

“உங்க மருமகளோட கம்ப்யூட்டர் கிளாஸ் இன்னையோட முடிஞ்சாச்சு,” என்றான். 

மயூரி எதுவும் கூறாமல் அறையை நோக்கி நடக்க, மரகதம் அவள் பின்னோடு சென்ற ரஞ்சனை கண்டு, 

“ரஞ்சன் அவ போகலைனு தான் சொன்னா.. “ என்று அவர் ஆரம்பிக்க, ரஞ்சன் எதுவும் கூற வேண்டாம் என்று கையை உயர்த்தினான்.

 மயூரி மாடி ஏறுவதைத் திரும்பிப் பார்த்தவன், தாயைப் பார்த்து ஒற்றைக் கண்ணைச் சிமிட்டி விட்டுப் புன்னகையுடன் அவள் பின்னே ஏறினான். மரகதம் நிம்மதிப் பெருமூச்சுடன் தன் அறைக்குச் சென்றார்..

அறைக்குள் சென்ற மயூரி தன் ​பையை மேஜையில் வைத்துவிட்டு அப்படியே நின்றாள். பின்னோடு கதவு திறந்து பூட்டும் சத்தம் கேட்க, அவன் காலடி ஓசை மனதைத் பதறச் செய்திருந்தாலும் மனதைத் திடப்படுத்திக் கொண்டு,

 “என்ன…க்கும்…சாரி, உங்ககிட்ட சொல்லாம நான் ஆர்.ஜே-வா வேலை பார்த்ததற்கு, பரதம் கத்துக்கிட்டதுக்கு… உங்களுக்குத் துரோகம் பண்ணணும்னு நினைக்கல, ஆனா சூழ்நிலை…” என்று அவள் கூறியபடி அவனை நிமிர்ந்து பார்க்க, அவன் இறுகிய முகத்துடன் கையை உயர்த்தி நிறுத்தச் சொன்னான். 

அவளோ, “நீங்க இன்னைக்கு ஷோல சொன்னதெல்லாம் சமாளிக்கத் தானே, புரியுது…” என்றவளை, மேலும் பேச வேண்டாம் என்று கையை மீண்டும் உயர்த்தி நிறுத்தினான்.

​அவள் அமைதியாக அவனைக் கண்களில் கலக்கத்துடன் பார்க்க, தன் அலமாரியைத் திறந்தவன் அதனுள் இருந்து ஏதோ எடுத்தபடித் திடமான காலடிகளுடன் அவள் அருகே வந்தான். அவள் முன்னால் நீட்டிய அவன் கைகளில் சலங்கை! 

அவன் அன்று ஆத்திரத்துடன் உடைத்த அவளுடைய அதே சலங்கை. அவற்றைக் கண்டவுடன் அவளுக்குக் கண்கள் கலங்கியது. விரல் நடுங்க அதை அவன் கைகளிலிருந்து எடுத்தவள், அது இப்பொழுது சரி செய்யப்பட்டுப் பழைய பொலிவுடன் இருப்பதைக் கண்டு மேலும் அழுகை வந்தது. அவற்றை அருகே இருந்த மேஜை மேல் வைத்தவள், கண்ணீரை அடக்கப் பெரும்பாடு பட்டாள். மேஜையை இறுக்கமாகப் பற்றிப் பெரிய மூச்சினை எடுத்து, அழுகையை அடக்க முயற்சித்தவள், முடியாமல் முகத்தை மூடி விம்மி அழுதாள்.

​ஏதும் கூறாமல் அவளையே பார்த்திருந்த ரஞ்சன், மெதுவாக அவள் தோளைத் தொட்டான். அவன் கரம் பட்டவுடன் அதைத் தட்டிவிட்ட மயூரி, கண்களில் நீருடன் அவனை முறைக்க, அவன் அவள் கன்னம் பற்ற கைகளை நீட்டினான். அதையும் தட்டிவிட்டவள், அவன் மார்பில் சரமாரியாக அடித்தாள். அவள் அடிகளை அமைதியாக வாங்கியவன் அவளைப் பார்த்தபடி நின்றிருந்தான். 

அடித்தபடி அவன் சட்டையை கொத்தாகப் பற்றியவள், அவன் விழிகளைப் பார்த்துக் கண்ணீருடன் அவனை உலுக்கியபடி கதறினாள்.

 “ஏன் இப்படி எல்லாம்? நான் என்ன தப்பு செஞ்சேன்? உங்ககிட்ட இருந்து கொஞ்சமா அன்பை மட்டும்தானே எதிர்பார்த்தேன்? நீங்க என்னோட கனவைப் பற்றி யோசிக்கல, என்னோட சம்மதத்தைக் கேட்கல. உங்க கோபம் எல்லாத்தையும் அமைதியா தாங்கினேன்… ஆனா… உங்களோட விருப்பத்துக்கு மாறா நடந்ததுக்காக இவ்வளோ பெரிய தண்டனையா? நீங்க அன்னைக்கு சலங்கையை உடைச்சப்போ,… என்னோட உயிரையும் சேர்த்துதான் உடைச்சிட்டீங்க!” என்று அவன் சட்டையை பற்றி உலுக்கியும், அவன் மார்பில் அடித்தும் புலம்பி அழுதாள்.

​அவன் அவள் கதறலை கேட்க முடியாமல் அவள் கைகளைப் பற்றித் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொள்ள, அவள் அழுதபடி அவன் அணைப்பிற்குள் அடங்க மறுத்து அவனைத் தள்ளினாள். ஆனால் அவனின் வன்மையான கரங்களின் இறுகிய அணைப்பிலிருந்து விடுபட முடியாமல், அழுகையுடன் அவன் மார்பிலேயே முகம் புதைத்துக் கதறினாள். 

அவன் ஏதும் கூறாமல் சற்று நேரம் அவளை அணைத்தபடி அமைதியாக நின்றான். மெல்ல மெல்ல அவள் அழுகை அவனின் வருடலில் அடங்கியது.

​ஒரு கட்டத்தில் லேசான தேம்பலுடன் நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தவள், சட்டென அவனிடமிருந்து விலகி நின்றாள். 

அவளின் கண்ணீர் அவன் சட்டையை நனைத்திருக்க, அதைப் பார்த்தபடி “சாரி” என்று விலகி நடக்கப் போனவளை இழுத்து மீண்டும் அணைத்துக் கொண்டான். 

இந்த முறை அவள் திமிரவில்லை. தயங்கியபடி அவளது கைகளும் அவனை அணைத்துக் கொண்டது. மெல்ல அவனை நிமிர்ந்து பார்த்தவள் நெற்றியில், தன் முதல் அச்சாரத்தைப் பதித்தான் ரஞ்சன். 

கண்களில் நீர் சுரக்க, கண்களை மூடி அவன் முத்தத்தை ரசித்தாள் மயூரி. அவளை நிமிர்ந்து பார்த்தவன், அவள் கன்னங்களில் வழிந்த கண்ணீரைத் தன் பெருவிரலால் துடைத்தபடி, அவன் கரம் அவள் கன்னத்தைத் தாங்கி அவனைப் பார்க்க வைத்தவன். 

“போதும் மயூரி, நீ அழுததும் நான் தவிச்சதும் எல்லாம் போதும்,” என்றான் ரஞ்சன் மெல்லிய குரலில்.

​அந்தக் குரலில் மெல்ல கண்கள் திறந்து, “உங்களுக்குத் துரோகம் செய்யணும்…” என்று ஆரம்பித்தவள் இதழில் ஒற்றை விரலை வைத்து நிறுத்தினான். 

“போதும், உன் மனசுல என்ன இருக்குன்னு எனக்குத் தெரியும், நீ எந்த விளக்கமும் தர வேண்டாம்,நான் தான் உன்கிட்ட எல்லாமே சொல்லணும்..”என்றான். 

 அவள் கண்களை விரித்து அவன் மார்பில் தலை சாய்த்தபடி அவனை அண்ணாந்து பார்த்தபடி இருக்க, மென் புன்னகையுடன் அவளை தோளோடு அனைத்தபடி சோபாவை நோக்கி நடந்தான்,

“வா.. உட்கார்ந்து..பேசலாம்..” என்றான்.

 சோபாவில் அமர்ந்து அவன் அவளை அமரச் சொல்ல அவள் சற்று தள்ளி அமர்ந்தாள்.அவள் இடையை பற்றி தன்னோடு நெருக்கி அமர வைத்தான்.அவன் இழுத்த வேகத்தில் அவன் தோள் மீது சாயந்தவள் நிமிர்ந்து அவன் முகம் பார்த்து வெட்கத்துடன் சிரித்தாள்.

 “போதும், இனிமேல் தள்ளி எல்லாம் உட்கார முடியாது. ஆறு மாசம் ஆகி இருக்கும், மேடம் பக்கத்துல உட்காரவே ,” என்றான் கேலிச் சிரிப்புடன். 

அவள் அவன் முகம் பார்த்து முறைத்தபடி, “ம்ம்..நீங்கதானே உங்க விரல் நுனிக்கூட என் மேல படாதுன்னு சொன்னீங்க? பின்ன  என்னைச் சொல்றீங்க?” என்றாள் கேள்வியாக.

​அவள் கண்களைப் பார்த்தபடி அவள் கன்னம் பற்றியவன், “நான்தான் சொன்னேன், அதற்கு பனிஷ்மென்டா இனிமேல் உன்னைத் தள்ளி இருக்கவே விடமாட்டேன்,” என்றான் குழைவாக. 

அவள் அவன் கைகளைப் பற்றிக் கண்களைப் பார்த்துப் புன்னகைத்தவள், “சொல்லுங்க ரஞ்சன், ஏன் இவ்வளவு கஷ்டம்?” என்றாள். 

ஒரு நெடிய மூச்சுடன் அவன் தோளில் சாய்ந்திருந்த, அவள் தலை மேல் முகம் சாய்த்துக் கொண்டு கூறினான்.

 “உனக்கு ஒரு உண்மை தெரியுமா மயூரி? நம்ம வாழ்க்கையில சந்தோஷம் இருக்கிற வரை அதை நாம் உணர்றதே கிடையாது. அது நம்மகிட்ட இருந்து போகும் போதுதான் அதோட அருமை புரியும்,” என்றவன் ஒரு நெடிய மூச்சை விட்டான்.

​மயூரி அவன் மார்பில் கைவைத்து, “ரொம்ப கஷ்டமா இருந்தா வேண்டாம் ரஞ்சன்,” என்றாள் மென் புன்னகையுடன்.

அவள் கரம் பற்றி அதில் முத்தமிட்டவன், “ஒன் அண்ட் லாஸ்ட் டைம், இது எல்லாத்தையும் என் மனசுல இருந்து இறக்கி வச்சே ஆகணும் மயூரி,” என்றவன் தொடர்ந்தான். 

“அப்பா இருக்கிற வரைக்கும் என் விருப்பம் மட்டுமே அவருக்குப் பிரதானம். அம்மா பத்தி உனக்கே தெரியும், ரெண்டு பேருக்குமே நான் தான் உலகம், என் சந்தோஷம்தான் அவர்களுக்கு முக்கியம். அப்பா பாடுபட்டு உழைச்சு ஒரு நிலைமைக்கு வந்தார். அவர் வளர்ச்சியை நான் வளரும் போது பார்த்துதான் வளர்ந்தேன்.”

“ பணம் நிறைய சேர்ந்த போதும் கூட, அப்பாவும் அம்மாவும் அதன் மதிப்பைக் சொல்லிக் கொடுத்து, ஒழுக்கத்தோட முக்கியத்துவத்தைப் புரிய வைத்துதான் வளர்த்தாங்க. ஆனா அப்பாவோட இழப்பு என்னை ரொம்பப் பாதித்தது.அப்போ நான் காலேஜ் செகண்ட் இயர், வழிகாட்டுதல் இருக்க வேண்டிய வயசுல அப்பாவை இழந்தேன்.”

​”அம்மாவும் அப்பாவோட இழப்புல ரொம்பக் கஷ்டப்பட்டாங்க. மன அழுத்தத்துல தொழிலைக் கட்டிக் காப்பாற்றுவதிலும்.அவங்களோட கஷ்டம் எப்படி இருந்திருக்கும்னு இப்ப எனக்கு நல்லா புரியுது. ஆனா அப்போ என்னை ஒதுக்கிட்டாங்க, இனி நம்ம இஷ்டம் என்று ஆணவம்தான் தலைக்கு ஏறியது. கை நிறைய காசு, அம்மாவும் அப்பாவை இழந்த வருத்தத்திலிருந்து வெளியே வரத்தான் நான் ஊர் சுத்துறேன்னு நினைச்சு, நான் கேட்ட போதெல்லாம் பணம் கொடுத்தாங்க. அவங்களும் பாவம் எத்தனை தான் பார்த்துப்பாங்க..“

“வீட்டுக்கு நான் ரோசியைக் கூட்டிட்டு வந்த அப்புறம்தான் அவங்க என்னைக் கண்டிக்க ஆரம்பிச்சாங்க. ஆனா எனக்கு அது வெறுப்பாதான் இருந்தது. அந்தப் போதை கொடுத்த வேகம், அவள்தான் என்னோட தேவதைன்னு தப்பா புரிஞ்சுகிட்டேன். “

“அந்த ஆக்சிடென்ட்..!அப்போதான் அவ தேவதை இல்ல சாத்தான்னு புரிஞ்சுகிட்டேன். ‘ஒரு நொண்டியை வைச்சு காலம் முழுக்க வீல் சேர் தள்ள முடியாது’ என்று அவள் சொன்ன வார்த்தை…” என்றவன் கரம் மயூரியை மேலும் தன்னோடு இறுக்கிக் கொள்ள, அவன் மார்பில் இருந்த கரத்தாலே லேசாகத் தட்டிக் கொடுத்தாள் மயூரி.

​”என்னை நானே வெறுக்க ஆரம்பிச்சு, என் முன்னாடி சுயமா நடக்குறவங்களைப் பார்த்தாலே வெறுப்பு வந்தது. என்னால முடியாதே..?, எனக்குத் துரோகம் பண்ணிட்டாங்களேன்னு கோபம். இந்த அறைக்குள்ளேயே முடங்கினேன். என்னைப் பத்தி தெரிஞ்சவங்க ரோஸி மாதிரிதான் நினைப்பாங்கன்னு வெறுப்பு. எந்த ஒரு வெளித் தொடர்பும் இல்லாமல் இங்கேயே இருந்தேன். ஒருநாள் எதேச்சையா என் டிரஸ் எடுக்கும் போது இந்த ரேடியோ கீழே விழுந்தது,” என்று தன் பாக்கெட்டினுள் இருந்த அந்தச் சிறிய வானொலியைக் காட்டினான். 

“இது எங்க அப்பாவோடது. அவர் எப்பவுமே வெச்சிருப்பார். தனியா வேலை பார்க்கும்போது பாட்டு கேட்டுட்டே இருப்பார். அப்பாவே எனக்குக் கொடுத்ததா என் மனசு நினைச்சது. இதை ஆன் செய்தேன். அப்போ நான் கேட்ட அந்த குரல் உன்னோடது… இந்த மீராவோடது,” என்று கூறியவன், அவன் தோளில் சாய்ந்திருந்தவள் உச்சியில் முத்தமிட்டான்.

​அவள் அவனை நிமிர்ந்து பார்க்க, “நீ சொன்ன வார்த்தைகள் எனக்கு எவ்வளவு பெரிய மனமாற்றத்தைத் தந்தது தெரியுமா?” என்றவன், “தைரியம்னா என்ன, மனசுக்குள்ள அதை எப்படி வளர்த்துக்கணும்னு  புரிஞ்சுகிட்டேன். மனசுக்குள்ள வளர்க்கவும் செஞ்சேன். தைரியம்தான் ஒருத்தனை மேலே கொண்டு வரும் மன வலிமைனு புரிந்தது. அதுக்கப்புறம் மீள ஆரம்பிச்சேன். ஆனா யார் கூடயும் பேச விருப்பம் இல்லை. எல்லாரும் என்னை நொண்டின்னு நினைச்சிடக் கூடாதுன்னு நினைச்சேன். அந்த ஊனம் சரியாகிவிடும் என டாக்டர் சொன்னப்ப, உன் வார்த்தைதான் என்னை யோசிக்க வைச்சது. அதுக்கப்புறம் மெல்ல மெல்ல நடக்க ஆரம்பிச்சு ஆபீஸ் போக ஆரம்பிச்சேன். உன் ஷோ கேட்கிறது மட்டும் நிப்பாட்டவே இல்லை.”

​”முதல்ல உன் குரல் மட்டும் போதுமானதா இருந்தது. அப்புறம் அம்மா கல்யாணம் பேச ஆரம்பிச்சபோது, ஏனோ..? அந்த குரலுக்குச் சொந்தக்காரியை எனக்குச் சொந்தமா மாத்தணும்னு தோணுச்சு. அது யாருனு தெரியறதுக்குள்ள… அம்மா உன்ன பேசி முடிவு பண்ணாங்க. ஆனா நீ…கல்யாணம் வேணாம்னு ஓடிப்போன..!,” என்றவன் அவள் மூக்கை பிடித்து செல்லமாக ஆட்டினான். 

“ம்ம்.. என் லட்சியம் பரதம் கத்துக்கணும், ஆனா மிஸ்டர் முத்து ஒரு ஹிட்லர்”என்றாள்.

“தெரியும்…பின்னாடி விசாரிச்சு தெரிஞ்சுகிட்டேன்,” என்றவன் தொடர்ந்தான்.

 “நீ ஓடிப்போயிட்டேன்னு உங்க அப்பா சொன்னதும், எனக்கு ரோஸி மாதிரிதான் நீயும்னு தோணுச்சு. ‘அது எப்படி அவள் போகலாம்?’னு உன்னைப் பிடிச்சு கல்யாணம் பண்ணியேத் தீரணும்னு நினைச்சேன். ஆனா,கல்யாண நாள் அன்னிக்கு உன் அண்ணன் என்னை நொண்டினு சொன்னபோது நீ பேசியது.. ஹ்ம்ம்.. அப்பவே உன் பக்கம் மனசு சாஞ்சிருக்கணும். ஆனா ஓடிப்போனாளேனு கோபம்..”

​”ஆரம்பத்துல உன்னைப் பிடிக்கல. அப்புறம் போகப் போக உன் குறும்பும், எவ்வளவு உன்னை வலிக்கப் பேசினாலும் உன்னிடமிருந்த மன உறுதியும் என் மனசை அசைக்கத்தான் செய்தது.”

“இருந்தாலும் அந்த குரலுக்குச் சொந்தக்காரியைப் பார்த்து நன்றியாவது சொல்லணும்னு உங்க ரேடியோ ஸ்டேஷன் வந்து விசாரிச்சேன். சோனா உனக்காக எந்த டீடைல்ஸும் தரல. அவ்வளவு நம்பிக்கை! அப்புறம் ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி கிட்ட சொல்லி கண்டுபிடிக்கச் சொன்னேன். அவங்க டீடைல்ஸ் கலெக்ட் பண்ண முடியல, ஆனா ‘அவங்களுக்குத் தெரியாம போட்டோ எடுத்தோம்’னு கொடுத்தாங்க,” என்றபடி தன் சட்டை பாக்கெட்டில் இருந்த புகைப்படத்தைக் காட்டினான். 

அதைப் பார்த்த அவள் அவனைப் பார்த்து “கேடி!” என்றாள்.

​அவன் சிரித்தபடி, “என் மயூரிதான் மீரா, என் வாழ்க்கையை சரி பண்ண வந்த தேவதைன்னு.. எப்போ எனக்குத் தெரிஞ்சது தெரியுமா?” என்றான். 

அவள் கேள்வியாக அவனைப் பார்க்க, அவன் அவள் நெற்றியில் முட்டி, 

“உன் சலங்கையை உடைச்சிட்டுப் போனேனே உன் பிறந்தநாள் அன்னைக்கு… அன்னைக்குதான் ஆபீஸ் போனப்ப ஏஜென்சியிலிருந்து இந்த போட்டோவைக் கொடுத்தாங்க,” என்றான். 

அவள் முகம் மலர அவனைப் பார்க்க,அவனோ பெருமூச்சுடன் “போட்டோ பார்த்ததும் சந்தோஷப்படறதா கஷ்டப்படறதானே தெரியல.?. உன்கிட்ட வந்து கேக்குற மாதிரியா உன்கிட்ட நடந்துகிட்டேன்? என்ன பண்றதுன்னு தெரியல. வீட்டுக்கு வந்து சாரி சொல்லலாம்னு பார்த்தா, நீ பெட்டியைக் கட்டிக்கிட்டு உன் வீட்டுக்குப் போயிட்டே. அப்புறம் என்ன செய்ய? சரி நம்ம ஆசை பட்ட பொண்டாட்டிதானே… எப்படியாவது புரிய வைக்கலாம்னு பார்த்தா நீ அழுது கரைஞ்சிட்ட,” என்றான்.

​அவள் கன்னம் சிவக்க, “பின்ன அவ்வளவு கோபப்பட்டா? ஏற்கனவே உங்களுக்குத் துரோகம் பண்றேன்னு குற்ற உணர்ச்சியில் இருந்தேன், என்னை நானே குற்றவாளி கூண்டில் ஏத்திகிட்டேன்.. அப்புறம் உங்க மேல காதல் வேற வந்து தொலைச்சிருச்சு..,” என்றாள் வெட்கத்துடன் முகத்தை அவன் தோள்களில் சாய்த்து. 

“ம்ம்..அதுவும் எனக்குப் புரிந்தது. ஈகோ கண்ண மறைச்சப்போ உன் காதல் புரியல, ஆனா உண்மை புரிஞ்சப்போது..உன் காதலைத் தேடி ஓடி வந்தேன்,” என்றான் அவள் கன்னம் தாங்கி. 

அவள் வெட்கத்துடன் புன்னகைக்க, “ஆனாலும் இந்த ஒரு வாரத்தில் உன்னை மறுபடியும் ஆர்.ஜே-வா மாத்துறதுக்குள்ள எத்தனை போன் உன் ஹெட் ஆபீஸ்க்குப் பண்ணேன் தெரியுமா?” என்றான். 

அவள் புன்னகையுடன் “தேங்க்ஸ்” என்றாள்,எம்பி அவன் கன்னத்தில் முத்தமிட்டு, அவன் பார்வை மாற்றத்தை உணர்ந்து எழுந்து ஓட முயன்றவளை எட்டி பிடித்தான்.

​பிடித்தவன் தானும் எழுந்து “வா” என்று அவள் கை பற்றியபடி, சலங்கையை எடுத்துக்கொண்டு நடனப் புகைப்படங்கள் இருந்த அந்த அறைக்கு அவளை அழைத்துச் சென்றான். சலங்கையைக் கட்டச் சொன்னான். 

அவளும் புன்னகையுடன் கட்டிக்கொண்டு நின்றவள், “டேப் ரெக்கார்டர் இல்லையே, பின்ன எப்படி ஆடுறது?” என்றாள் செல்லக் கோபத்துடன். 

அவன் புன்னகையுடன் மேஜையிலிருந்த புல்லாங்குழலை எடுத்து, ஒற்றைப் புருவத்தைத்  ஏற்றி இறக்கி, இதழில் பொருத்தி வாசிக்கத் துவங்கினான். அவள் சுழன்று ஆடத் தொடங்கினாள்.

 மீராவிற்காக காத்திருந்த ரஞ்சனின் அந்த வேங்குழலின் நாதமும், அவள் சலங்கையின் ஒலியும் காற்றினிலே கீதமாக கரைந்து மரகதத்தின் மனதையும் நிறைத்தது..

                         முற்றும் 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page