வர்ஷினி தன் வேலையில் பிஸியாக இருந்தாலும் அவளுக்குள் மதுவின் குழந்தையை பார்த்தபின் தனக்கும் ஒரு குழந்தை வேண்டும் என்ற ஆவல் தோன்றி கொண்டே இருந்தது. அது ஒரு கட்டத்தில் அவள் மனதில் ஒரு பெரிய வடுவாக மாறியது. தன்னால் குழந்தை பெற்று கொள்ள முடியாமல் போய்விடுமோ என்ற பயம் அவள் மனதை வாட்டி எடுத்தது. முன்பெல்லாம் சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் கல்லூரிக்கு சென்று வந்தவள் இப்போது இயந்திரத்தனமாக சென்று வந்தாள். அவள் மனம் குழந்தை ஏக்கத்தால் சஞ்சலமாக தோன்றினாலும் அதை மறைத்து வெளியே தன்னை சாதாரணமாக காட்டி கொண்டாள். எங்கே கௌரி அவள் மனம் துன்படுவதை பார்த்துவிட்டால் அவன் மனம் வாடுமோ அல்லது தன் அண்ணனின் மகனை கண்டு பொறாமைப்படுகிறாள் என தவறாக நினைத்துவிடுவானோ என்று தன்னை கஷ்டப்படுத்தி அடக்கிக்கொண்டு எப்போதும் இருப்பது போல் காட்டிக்கொண்டாள்.
கௌரி முதலில் அவனுடைய வேலை பளு காரணமாக கவனிக்கவில்லை. பின்பு தான் வர்ஷினியை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான். அவள் முகத்தில் பழைய உயிர்ப்பு இல்லை. பழைய துறுதுறுப்பு இல்லை. எதையோ யோசித்து கொண்டே இருக்கிறாள். என்னாச்சு இவளுக்கு? என்று வெகுநேரம் சிந்தித்த பின்தான் கௌரிக்கு உண்மை புலப்பட்டது. அன்றைக்கு அண்ணனின் குழந்தையை காணொளி மூலம் பார்த்த பின் தான் இவள் இப்படி மாறி தெரிகிறாள். இவளுக்கும் குழந்தை வேண்டும் என்ற ஆசை தோன்றிவிட்டது போலும், ஆனால் தன்னால் முடியாமல் போனால் என்ன செய்வது என்று உள்ளுக்குள் கலங்குகிறாள் என்று சரியாக யூகித்தவன், உடனே அலைபேசியை எடுத்து அங்கு இருக்கும் புகழ் பெற்ற மருத்துவமனையில் மகளிர் நல மருத்துவருக்கு தொடர்பு கொண்டு முன்னேற்பாடு பதிவு செய்தான். அமெரிக்காவில் எல்லாம் சிறப்பு மருத்துவர்களை உடனே பார்க்க இயலாது. முன்பதிவு செய்த பின் தான் அவர்களை பார்க்க முடியும். அதுவும் உடனடியாக கிடைக்காது. இரு வாரமோ அல்லது ஒரு மாதமோ கழித்து தான் அவர்களை பார்க்க அனுமதி கிடைக்கும்.
வர்ஷினிக்கு இரு வாரம் கழித்து டாக்டர் இசபெல்லா ரியான் என்றவரிடம் பார்க்க அனுமதி கிடைத்தது. ஆனால் அதை வர்ஷினியிடம் சொல்லவில்லை. அவளே அவனிடம் எதுவும் சொல்லாததால் கௌரியும் வர்ஷினி நம்மிடம் இதுபற்றி வந்து பேசினால் சொல்லலாம், வீணாக அவள் மனதை கஷ்டப்படுத்தவேண்டாம் என்று அமைதியாக இருந்துகொண்டான்.
இரண்டு வாரம் கழித்து வர்ஷினியை அழைத்து கொண்டு டாக்டர் இசபெல்லா ரியானிடம் சென்றான். அவர் பார்க்க சாந்தமாகவும் அமைதியாகவும் இருந்தார். வர்ஷினி சொல்வதை பொறுமையாக கேட்டு கொண்டிருந்தார். பின் வர்ஷினியை பார்த்து இப்போ உங்களுடைய யூட்ர்ஸ் கண்டிஷன் எப்படி இருக்குனு ஸ்கேன் எடுத்து பார்த்த பின்பு தான் சொல்ல முடியும் என்று வர்ஷினியை ஸ்கேன் எடுக்க அழைத்து சென்றார்கள். சிறிது நேரம் கழித்து ஸ்கேன் ரிசல்டுடன் வந்த அந்த மருத்துவர் வர்ஷினி அருகில் அமர்ந்தார். அவர் ஆங்கிலத்தில் பேச தொடங்கினார், படிப்போரின் வசதிக்காக தமிழில் , நான் சொல்றதை இரண்டு பேறும் பொறுமையா கேக்கணும். படத்தப்படக்கூடாது. இந்த ஸ்கேனை பார்க்கும்போது வர்ஷினியின் யூட்ர்ஸ் ரொம்ப பலகீனமாகத்தான் இருக்கு. ஆனா இப்போ இருக்கிற மருத்துவ வளர்ச்சியாலே உங்களுக்கு குழந்தை பிறக்காது என்று சொல்ல முடியாது. நான் எழுதி கொடுக்கிற மாத்திரையை தவறாம சாப்பிட்டு வாங்க, உடனே கரு தங்களானாலும் கொஞ்ச நாட்களில் அல்லது கொஞ்ச வருஷத்தில் கண்டிப்பா குழந்தை பிறக்க வாய்ப்பு இருக்கு. அதற்கு நீங்க பொறுமையா காத்திருக்கணும். நீங்களே உங்களுக்கு கண்டிப்பாக குழந்தை பிறக்கும்னு நம்பனும். எனக்கு நிச்சயமாக குழந்தை பிறக்கும்னு உங்களுக்கு நீங்களே அடிக்கடி சொல்லிக்கோங்க. நான் எழுதி கொடுக்கிற மாத்திரைகளும், சத்தான உணவுகளும் உங்களுடைய நம்பிக்கையும் உங்களுக்கு மழலை பிறக்க உதவி செய்யும் என்று சொல்லி வர்ஷினி சாப்பிட வேண்டிய மாத்திரை மருந்துகளை எழுதி கொடுத்து எப்போதும் சந்தோஷமா மனநிலையை வச்சுங்கோங்க, உங்களுக்கு குழந்தை பிறக்க என்னுடைய வாழ்த்துகளும் ஆசிர்வாதங்களும் என்றும் கூறி அனுப்பி வைத்தார்.
வெளியே வந்ததும் வர்ஷினி உங்களுக்கு எப்படி தெரியும் நான் குழந்தை வேண்டும்னு ஆசைப்படறேனு என்று கேட்டவுடன் கௌரி, உன் முகத்தில் இப்பல்லாம் உண்மையான சந்தோசம் இல்லை. நான் என் வேலை பளுவினால் முதலில் உன்னை கவனிக்கலனாலும் போக போக தான் தெரிஞ்சுது உன் ஆழ் மனசில ஏதோ துயரம் இருக்குதுனு, அப்புறம் நான் நல்லா யோசிச்சபுரம் தான் புரிஞ்சுது அன்னைக்கு அண்ணி உங்கிட்ட குழந்தையை காட்டி பேசியதிலிருந்து தான் நீ ஒரு மாறி இருக்கேனு. அதனால்தான் இந்த மருத்துவரை பார்க்க அனுமதி வாங்கினேன் என்று கூற வர்ஷினி கண்ணீர் நிறைந்த கண்களுடன் ரொம்ப தேங்க்ஸ் சங்கர். எனக்கு என்ன வேண்டும், என்ன ஆசைப்படறேனு என் முகத்தை பார்த்தே தெரிஞ்சிக்கிற, இந்த அன்புக்கு நான் உனக்கு என்ன செய்தாலும் ஈடாகாது என்று அவனை கட்டி கொண்டாள்.
வர்ஷினிக்கு குழந்தை ஏக்கம் வராமல் இருப்பதற்கும் அவளை சந்தோஷமாக வைத்துக் கொள்ளவேண்டும் என்றே தன்னுடைய விடுமுறை நாளில் அடிக்கடி வெளியே அழைத்து கொண்டு போவான். ஒரு விடுமுறை நாளன்று அங்கிருக்கும் ஸ்ரீ பாலாஜி வெங்கடேஸ்வரா கோவிலுக்கு அழைத்து சென்றான். கோவில் மிக பெரியதாகவும் சுத்தமாகவும் இருந்தது. சாமியை பார்க்க கோவிலினுள் இருந்த படிக்கட்டில் ஏறி போய் சாமி தரிசனம் செய்தார்கள்.
அங்கே பெருமாள் அழகே வடிவமாய், அழகிய நம்பியாய் நம்மை பேரானந்தத்தில் மூழ்கடிக்கும் உருவமாய் நின்றுகொண்டிருந்தார். அங்கே கட்டிய பூக்கள் உடனடியாக கிடைக்காததால் அனைவரும் பூங்கொத்தை தான் கடவுளுக்கு அர்ப்பணிப்பார்கள். வர்ஷினியும் கௌரியும் பழங்களும் பூங்கொத்தையும் வாங்கி வந்து அங்கிருக்கும் கடவுளுக்கு கொடுத்து அர்ச்சனை செய்தார்கள். தனக்கு ஒரு குழந்தை பிறக்கவேண்டும் என்று மனதார அந்த கார்மேக கண்ணனை வேண்டிக்கொண்டாள். அங்கே பெருமாள் மட்டும் இல்லை. வினாயகர் முருகன்,சிவன், பார்வதி, முப்பெரும் தேவிகள், ஆஞ்சநேயர், ராமர் சீதா தேவி மற்றும் நவகிரஹங்கள் என அனைத்து தெய்வங்களும் அழகே உருவாக வீற்றிருந்தார்கள். வர்ஷினி அனைத்தையும் பார்க்கையில் மனசுக்கு இதமாகவும் அமைதியாகவும் இருந்தது. அக்கோவிலிலேயே உணவகம் இருந்தது. இருவரும் சாப்பிட்டுவிட்டு வெளியே வரும்போது எதிரில் ஒரு மூதாட்டி மயங்கி விழும் நிலையில் கீழே விழப்போக வர்ஷினி ஓடி போய் அவர்களை விழாமல் கையில் தாங்கி கொண்டாள். இவள் கையிலேயே அவர்கள் மயங்கியதும் தன்னிடம் இருக்கும் தண்ணீர் பாட்டிலை திறந்து தண்ணீர் தெளித்து அந்த அம்மையாரின் மயக்கத்தை தெளிவித்தாள். அவர்கள் மயக்கம் தெளிந்து எழுந்தவுடன் வர்ஷினியையும் கௌரியையும் பார்த்து ரொம்ப நன்றிம்மா. அந்த ராமர் சீதா தேவி போல ரெண்டு பேரும் இருக்கீங்க. உங்களுக்கு எந்த குறையும் வராது. நீங்க நல்லா இருப்பீங்க என்று வாழ்த்த, ரொம்ப நன்றி பாட்டி என்று வர்ஷினி சொல்லி கொண்டே இருக்கும்போதே ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் அவர்களிடம் பதற்றத்துடன் ஓடி வந்து ரொம்ப நன்றிங்க. இவங்க என் அம்மா தான். என் பொண்ணுக்கு கல்யாணமாகி ஐந்து வருஷமா குழந்தை இல்லாம இருந்தா.அதனாலே இவங்க முருகருக்கு வேண்டிக்கிட்டு மாதாமாதம் வரும் சஷ்டிலே சாப்பிடாம விரதம் இருக்காங்க இப்ப என் பொண்ணு கர்ப்பமா இருக்கா. இப்பாவது இந்த விரதம் இருக்க வேணாம்னு சொன்னா கேட்காம என் பேத்திக்கு நல்ல முறையில் குழந்தை பிறக்கறவரைக்கும் விரதம் இருக்கிறேன்னு இருக்காங்க. அதனால் தான் மயக்கம் போட்டு விழ இருந்தாங்க என்று சொல்லி முடித்து அந்த அம்மையாரின் கையை பிடித்து அழைத்து சென்றார். இதை கேட்ட வர்ஷினி, சங்கர் நானும் சஷ்டியில் முருகருக்கு விரதம் இருக்கலாமுன்னு நினைக்கிறேன் என்று சொல்ல உடனே கௌரி நீ வேண்டாம் வர்ஷினி, நீ இப்போதான் ஆரோக்கியமா இருக்கணும் , நல்லா சாப்பிடணும்னு, டாக்டர் குடுக்கும் மாத்திரைகளை தவறாமல் சாப்பிடணும் அப்போதான் உன் கருப்பை வலுபெறும்னு அன்னைக்கு டாக்டர் சொன்னதை மறந்திட்டியா, உனக்கென்ன இப்போ விரதம் இருக்கனும் அவ்வளவு தானே நான் சஷ்டி தோறும் நம்ம பிள்ளைக்காக விரதம் இருக்கேன். நமக்கு குழந்தை பிறக்கும் வரை நான் இருக்கேன் என்று சொல்ல வர்ஷினிக்கு அவன் மேலும் உள்ள காதலும், மதிப்பும் ஏறிக்கொண்டே போனது. நான் உனக்கு ரொம்ப கஷ்டம் கொடுக்கிறேனா சங்கர் என்று அவள் பழைய பல்லவியை பாட, நீ இப்படி சொல்லிக்கொண்டே இருப்பது தான் எனக்கு கஷ்டமா இருக்கு வர்ஷினி. குழந்தை நம்ம இரண்டு பேருக்கும் சொந்தம். நீ பத்து மாதம் கருவை சுமந்து கஷ்டப் படரத காட்டிலும் நான் செய்யிற இந்த சிறு வேண்டுதல் ஒன்னும் அவ்வளவு கஷ்டம் இல்லை வர்ஷினி என்று சொல்ல சொல்ல,வர்ஷினிக்கு இவன் எனக்கு கிடைத்த மிக பெரிய பொக்கிஷம், என் சங்கர் மனிதருள் மாணிக்கம் என்று பெருமை பொங்க அவனை பார்த்தாள்.
நாட்கள் வேகமாக நகர்ந்துகொண்டிருந்தது. கௌரியால் வேலையின் உள்ள நெருக்கடி காரணமாக அவனால் சொன்னபடி ஆறு மாதம் கழித்து இந்தியா செல்ல முடியவில்லை. அந்த வேலை நெருக்கடியிலும் எப்போதெல்லாம் வர்ஷினிக்கு குழந்தையின் ஏக்கம் அதிகமா இருக்கிறதோ அப்போதெல்லாம் வர்ஷினியை அவன் வெளியே கூட்டிக் கொண்டு சென்றுவிடுவான். அன்றும் வர்ஷினியின் முகம் வாட்டம் கண்டு கௌரி அவளை நியூயோர்க்கில் உள்ள லிபெர்ட்டி ஸ்டேச்சுக்கு அதாவது அங்குள்ள சுதந்திர தேவி சிலைக்கு அழைத்து சென்றான்.
அந்த சிலை இலீஸ் என்று சொல்லப்படும் தீவின் அருகில் இருந்தது. அந்த தீவுக்கு கப்பலில் தான் செல்ல முடியும். அந்த தீவு மிக பழமையான தீவு என்பதை அங்குள்ள கட்டடங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். அமெரிக்கர்கள் அந்த பழமை மாறாமல் அதை பாதுகாத்து வைத்திருக்கின்றனர். அந்த நாட்டிற்கு முதன் முதலில் குடியேறுதல் அல்லது குடியேற்ற செயல்முறை அதாவது தமது சொந்த நாட்டை விட்டு வேறு நாட்டிற்கு சென்று வாழ ஆவணங்களை சமர்ப்பித்து சட்ட ப்பூர்வமாக அனுமதி பெரும் இடமாக முன்னைய காலத்தில் இருந்தது. அங்கு செல்லும் அனைவரையுமே விமானத்தில் பயணிகளை பரிசோதித்து அனுப்புவது போல இங்கேயும் ஒவ்வொருவரையும் பரிசோதித்தே உள்ளே செல்ல அனுமதிக்கிறார்கள். அந்த காலத்தில் குடியுரிமை எவ்வாறு பெற்றார்கள் என்பதை எல்லாம் புகைப்படமாக அங்கு மாட்டி வைத்திருக்கின்றனர். அங்கு ஒரு அருங்காட்சியகம் வைத்து பராமரிக்கின்றனர். அதுமட்டில்லாமல் அதை பற்றியெல்லாம் ஆவண படங்கள் அங்கே காண்பிக்கப்படுகின்றன. கம்பியில்லா காதொலிபான்கள் அதாவது ஹெட் போன்கள் கேட்பவர்களுக்கு தரப்பட்டு அதன் மூலம் அந்த புகை படங்களின் வரலாற்றையும் அந்த இடத்தின் முக்கியத்துவத்தையும் நமக்கு தெரிவிக்கும் வசதியும் அங்கு உள்ளது. சிறிது தூரம் சென்றவுடன் ஹட்ஸன் நதியில் நாலாபுறமும் தண்ணீர் சூழ நடுவில் உயரமாக காட்சி அளிக்கிறது அந்த சுதந்திர தேவி சிலை. அதன் ஒரு கையில் தீப்பந்தமும் மறு கையில் சுதந்திர பிரகடனம் எழுதிய புத்தகமும் ஏந்தி கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது.
அந்த சிலையின் கம்பீரம் பார்ப்பவர்களை தன் அழகால் கட்டிபோட்டுவிடும் என்பது மறுக்க முடியாத உண்மை.
இந்த சிலை அமெரிக்கா மக்களால் உருவாக்கப்பட்டது அல்ல. பிரான்ஸ் நாடு 19ம் நூற்றாண்டில் இரு நாட்டிற்கும் இடையே நிலவிய நட்புறவின் வெளிப்பாட்டினை எடுத்தும் விதமாக பிரான்ஸ் நாடு இந்த சிலையை அமெரிக்காவுக்கு அன்பளிப்பாக வழங்கியது. இந்த சிலையின் உயரம் பீடத்தில் இருந்து சுமார் 93 மீட்டர் ஆகும். இந்த சிலையின் கீழே உள்ள பீடத்தை அமெரிக்கா மக்கள் ஒன்று சேர்ந்து பணம் திரட்டி கட்டினார்கள் என்று சொல்கிறார்கள்.
கௌரியும் வர்ஷினியும் அந்த சிலையை காண முதலில் காரில் சென்று நியூ ஜெர்ஸியை அடைந்து பின் அங்கிருந்து பயணிகள் கப்பல் மூலம் அந்த சிலை இருக்கும் இலீஸ் இடத்திற்கு சென்றார்கள். வர்ஷினி இப்போதுதான் முதன் முதலில் கப்பலில் பயணம் செய்கிறாள். அவளுக்கு இது புது வித அனுபவத்தை கொடுத்தது. அந்த பயணி கப்பல் மூன்று தளங்களை உள்ளடக்கி இருந்தது. சிறிது தூரம் சென்றவுடனேயே அந்த சிலை தெரிந்தது. கப்பலில் இருந்து அந்த சிலையை பார்க்க மிக அழகாக இருந்தது. சூர்ய ஒளியில் அந்த சிலை ஒவ்வொரு பக்கமும் வெவ்வேறு வண்ணமாக கட்சி அளித்தது. அனைவரும் கப்பலில் இருந்தவாறு அதனை தங்களுடைய அலைபேசி மூலம் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்தனர். வர்ஷினியும் கௌரியும் முதலில் கீழ் தளத்தில் சென்று தண்ணீருக்கு மிக அருகில் அமர்ந்து கொண்டனர். கப்பலுக்கு வெளியே
தடித்த, கனமான கயிறுகளை கட்டி மரக்கட்டையால் சற்று உயர்த்தி தண்ணீர் உள்ளே வராதபடி செய்திருந்தனர். அருகில் கடலை ரசித்து கொண்டே பயணிக்க சிறு சிறு பிளாஸ்டிக் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. இருவரும் அதில் சென்று அமர்ந்து நதியின் நர்த்தனங்களை ரசித்து கொண்டு இருந்தனர். கதிரவனின் கதிர்கள் பட்ட அந்த நதி மகிழ்ச்சி பொங்க உடல் மினு மினுக்க ஆடிய அழகை காண கண் இரண்டும் போதாது. நம்முடைய அத்தனை துன்பங்களையும் மாற்ற கூடிய சக்தி அந்த இயற்க்கைக்கு தான் உண்டு. அது புரிந்து தான் கௌரி வர்ஷினியை இங்கு அழைத்து வந்ததே. கப்பல் போகும் போது அந்த நதியில் இருந்து தண்ணீர் துளிகள் இவர்கள் மீது சாரலாய் விழும் போது யார் தான் அந்த இயற்கை ஓடு ஒன்றாமல் இருக்க முடியும். வர்ஷினியும் அதனோடு லயித்து போனாள். அவர்களுக்கு பக்கத்தில் இரு ஜோடிகள் அமர்ந்து தங்களையும் மறந்து ஒருவர்க்கொருவர் முத்தமிட்டு கொண்டிருந்ததை பார்த்தவுடன் வர்ஷினிக்கு மிகவும் வெட்கமாக இருந்தது. கௌரியும் இதெல்லாம் இங்கு சகஜம் என்று புன்சிரிப்போடு பார்த்து கொண்டு இருந்தான்.
