வேனலின் வெண்பூவே
அத்தியாயம் 29
என்னோட கல்யாணம் நடக்கலை. ஆனால் எனக்கு நடக்காத ஒன்னை மத்தவங்களுக்கு நடத்திப் பார்க்கிறது ரொம்ப சந்தோஷமான ஒன்னு. என்னால் முடிஞ்ச அளவு பெஸ்டா இங்க மேரேஜ் பண்ண வரவங்களுக்கு அவங்க வாழ்க்கையோட பெஸ்ட் மொமண்ட்டை மறக்க முடியாத அளவு கொடுக்கணும்.
-காமினி.
இரவு நேரம். மாயா மயில் கழுத்து வண்ணமும், வெள்ளி நிற வண்ணமும் கலந்த புடவையில் செய்யப்பட்ட வேலைப்பாடுகளுடன் நகைகள் அணிந்து மின்னிக் கொண்டிருக்க, அருகில் அர்ஜூன் பட்டு வேட்டி சட்டையுடன் நின்றுகொண்டிருந்தான். இருவரின் முகத்திலும் புன்னகை குடி கொண்டிருந்தது.
அவர்களுக்குப் பின்னால் சிம்மாசனம் போல் இரண்டு நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. வரவேற்பு மேடையைப் பார்த்தவர்கள் அனைவரும் ஆவென்று ஒருமுறை அண்ணார்ந்து பார்க்கும்படி இருந்தது. மணமேடை கடலைப் பின்புலமாகக் கொண்டிருந்தது.
மேடையில் வான் நீல வண்ணத்தில் வண்ணம் கொண்டிருக்க, உச்சியில் புனல் போன்ற தோற்றத்தைக் கொண்ட ஐந்து தூண்கள் வட்டமாக நடப்பட்டிருந்தன. கீழே பேஸ்டல் நீல, பிங்க் வண்ணக் கம்பிகளைச் சுற்றி, மூன்று மலர் வளையங்கள் சூழ்ந்திருந்தன. புனல் போன்ற அமைப்பில் அதே வண்ணத்தில் பூவிதழ்கள் போல் விரிய, மேலே இருக்கும் வட்டத்தின் விளிம்பில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. படிக்கட்டில் பக்கவாட்டில் மஞ்சள், வெண்ணிற மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மேடையேறும் வழி முழுக்க அதே வண்ண மலர்களால் பாதை அமைக்கப்பட்டு, அது முடிவடையும் வழியில் அரைவட்ட வளையத்தில் உள்ளே நுழையும் வாயில் அமைக்கப்பட்டிருந்தது. அதன் அருகே, பெரிய பெரிய வேலைப்பாடுகள் கொண்ட பாத்திரத்தில் வெள்ளை நிற மலர்கள் அடுக்கப்பட்டு, அதன் அருகே உள்ள பலகையில் மணமக்களின் பெயர்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இரவு நேரம் என்பதால் விளக்குகள் அந்த இடத்தை மேலும் அழகாகக் காட்டியது.
மக்கள் அமரச் சாய் சதுர வடிவ அமைப்பில் இடம் இருக்க, அதன் நடுவே மணமக்கள் மேடைக்குச் செல்லும் பாதை இருந்தது.
வெள்ளை நிற குஷன் நாற்காலிகளில் வான் நீல துணியால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முன்னாள் அமைச்சரின் மகனின் வரவேற்பு என்பதால் பிரபலங்கள் வருவதும் போவதும் என இருந்தனர்.
அப்போது அந்த விடுதிப் பணியாளர்கள் இருவர் அந்தக் கூம்பு வடிவத்தில் பெரிய கேக் ஒன்றை தள்ளிக் கொண்டு வந்திருந்தனர். ஃபிரெஞ்சு நாட்டின் கேக் வகைகளில் ஒன்றான கேக் குரோம்பேஸ்கூ. சிறிய சிறிய டோநட் போன்ற மென்மையான பன் வடிவத்தில் இருக்கும் கேக்கை, கேரமல் கொண்டே கூம்பு வடிவத்தில் நிற்க வைக்க வேண்டும். ருத்ரசேனா ஐந்தடிக்கு கேக் செய்து, அதன் இடையே வெண்ணிற கீரிமினால் சாரல் போல் தூவி, பிங்க் நிற மலர்கள் போன்ற வடிவத்தில் ஒரு பக்கம் பொருத்தி இருந்தான். இடையில் ராஸ்பெர்ரி பழங்களும் எட்டிப்பார்த்தது.
அந்தக் கேக்கை வெட்டுவதற்கு மரத்தினால் ஆன கத்தி ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது. அந்தக் கேக்கினைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் மாயா முகம் மேலும் மலர்ந்தது.
“எனிதிங் பாஃர் யூ டியர். இங்க கிடைக்காதுன்னு நினைச்சல்ல. ருத்ரா ஃபிரான்சில்தான் படிச்சான். வொர்க் பண்ணான். உனக்காக ஸ்பெஷலா ரெக்வெஸ்ட் பண்ணேன். வா, கட் பண்ணலாம்.” என அழைத்தான் அர்ஜூன். மாயாவும் அவன் கரம் கோர்த்தபடி இருவரும் சேர்ந்து கேக்கை வெட்டினர்.
ஒரு பக்கம் விருந்துக் கூடத்தில் தமிழ் முறைப்படி அலங்கரிக்கப்பட்ட மர நாற்காலியில் விருந்து நடைபெற, மற்றொரு பக்கம் மேற்கத்திய முறைப்படி சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன. அதில் மேக்ரோன்களும் இடம் பெற்றிருந்தது. ருத்ராவிற்கு கீழ் வேலை செய்பவர்கள் கீழே உள்ள இன்னொரு சமையலறையில் அவ்வப்போது தேவையானவற்றை சமைத்துக் கொடுக்க ருத்ரா மேற்பார்வை பார்த்தபடி இருந்தான்.
இந்தக் காட்சியை அலைபேசியில் படம் பிடித்த சிவகாமினியின் அருகில் வந்து நின்றாள் பத்மமுகி.
“என்ன அக்கா டான்ஸுக்கு ரெடியா?”
“ஆடலாமே.”
“சும்மா லைட்டா கை, காலை மட்டும் தூக்குங்க. ஸ்ட்ரெயின் பண்ணிக்க வேணாம். எங்க அந்த லவ்வர் பாய்?”
“இருக்காரு இருக்காரு.”
கொஞ்ச தூரம் தள்ளி அமர்ந்திருந்த ஆதியைப் பார்த்தாள். மாயா அர்ஜூன் இருவருக்கும் பத்மமுகியை அறிமுகப்படுத்தி இருக்க அவளைத் திருமணத்திற்கு வரும்படி பத்திரிக்கை கொடுத்திருந்தனர். அதைக் கொண்டு ஆதி வர முயற்சிக்க அவனுக்கு அனுமதி மறுக்கப்பட, அங்கு வந்த அமைச்சர் ஒருவர் உதவியுடன் பத்திரிக்கை வாங்கி உள்ளே வந்து மனைவியின் மீது மொத்த கவனத்தையும் குவித்து அவளருகே அமர்ந்திருந்தான். அவனுக்குத் தெரிந்த பெரிய ஆட்கள் வரும்போது முகியை அழைத்து அறிமுகப்படுத்தியும் வைத்தான்.
அவனுடைய சொந்த அலுவலகத்தில் முகிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்க, இப்போது அமைச்சர்கள், தொழிலதிபர்களிடம் மனைவியை அறிமுகம் செய்து வைத்துக்கொண்டிருந்தான். முகி பெரிய இடத்து விழாக்களுக்குச் செல்ல மிகவும் தயங்குவாள், மாதவியும் மகனை மட்டும் தனியாகச் செல்லும்படி கூறிவிடுவார்.
பழைய நினைவுகளை உதறிய முகி ஆதியைப் பார்த்துத் தலையைக் குலுக்கி காமினியின் பக்கம் திரும்ப, காமினியின் விழிகளோ ருத்ரனைத் தேடியது. அவனை எங்கும் காணவில்லை. ஒருவேளை விருந்துக் கூடத்தில் உணவினைக் கவனித்துக் கொண்டிருக்கலாமென நினைத்தாள். இரவு விழாவில் காமினி, முகி, கார்த்திக் மூவருமே நடனமாடி அர்ஜூன் மாயாவை அழைக்க, அவர்களும் கலந்து கொள்ள, பிறகு இளசுகள் சேர்ந்து கொள்ள அந்த இடமே களைகட்டியது.
விழா முடிய மணி பத்தரை ஆகி இருக்க, அடுத்த நாள் காலை ஏழு மணிக்கு முகூர்த்தம் இருக்க, மணமக்கள் உறங்கச் சென்றனர். விருந்தாளிகளும் அவரவர் அறைக்குச் சென்றனர். முகியும் விழாவில் கலந்து கொண்டு ஆடிவிட்டு நன்றாக விருந்து உண்டுவிட்டு அறைக்கு வந்ததும் மாத்திரகளைப் போட்டு உறங்கிவிட்டாள். தன்னிடம் கத்தரித்தது போல் ஒரு சில வார்த்தைகளில் பதில் சொல்லும் மனைவியைப் பார்த்தபடி ஆதியும் உறங்கிப் போனான். நன்றாக ஆரம்பித்த பயணத்தின் வழியில் தன் மனையாளை அவன் தொலைத்திருக்க, மீண்டும் அவளைக் கண்டுபிடித்து மனையாளுடன் பயணத்தைத் தொடர அவன் உறுதி பூண்டிருந்தான்.
***
காமினி வைன் நிற லெஹங்காவில் மறுநாள் காலை முகூர்த்தம் நடக்கவிருக்கும் தோட்டத்தினைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தாள். அலங்காரம் முடிவடைந்திருந்தது. அங்குக் காவலுக்கு இருவரை வைத்து விட்டு, உணவுக் கூடத்திற்கு வந்தாள். அங்கும் விளக்குகள் அணைக்கப்பட்டு மெல்லிய வெளிச்சம் மட்டுமே வெளியிலிருந்து வந்து கொண்டிருந்தது.
உடல் மிகவும் அலுப்பாக இருந்தது. நாளைக் காலைத் திருமணம் முடிந்து காலை உணவை உண்டு விட்டு, மதியம் முழுக்க ஓய்வெடுத்த பின்னர், அர்ஜூன், மாயா தம்பதிகள் கிளம்பிவிடுவர்.
சமையல் கூடத்தில் உணவுகளை எடுத்துச் செல்லத் தனியாகப் பெரிய மின்தூக்கி உண்டு. அதையே பயன்படுத்த முடிவு செய்த காமினி, அதில் ஏறினாள். ஏறும்போது அவளுடன் சேர்ந்து ருத்ராவும் ஏறத் திகைத்துப் போனாள். அவள் அணிந்திருக்கும் அதே வைன் நிறத்தில் கோட் சூட், வெண்ணிறச் சட்டையில் இருந்தவன் கழுத்தில் இருக்கும் டையை தளர்த்திவிட்டு பட்டன்களைக் கழற்றி விட்டிருந்தான்.
ருத்ராவைப் பார்த்தும் எதுவும் பேசவில்லை காமினி.
“என்னை ரொம்ப தேடுன போல சிவகாமி?”
முகத்தைச் சுளித்தவள், “உன்னை நான் எதுக்குத் தேடணும்? நான் தேடலையே?” என்றாள்.
மின்தூக்கியின் கதவுகள் மூடிக் கொண்டது. அவள் அருகில் நெருங்கியவன் இதழ்களில் விரலை வைத்து, “அதை என் கண்ணைப் பார்த்துச் சொல்லு சிவகாமி. என்னைத் தேடலையா நீ?”
“இல்லை.”
“பொய் சொல்ற உன்னை என்ன செய்யலாம்?” அவன் விரல்கள் இதழ்களைத் தாண்டிக் கழுத்தைத் தொட, தன் கையால் அவனைத் தடுத்து நிறுத்தினாள்.
“என்ன ருத்ரா வேணும் உனக்கு? எதுக்கு எங்கிட்ட இப்படி கேம்ஸ்?” களைப்பில் சலித்துப் போய்க் கேட்டுவிட்டாள்.
“நான் கேட்டால் குடுத்துருவியா சிவகாமி?”
“இப்படி கேட்டால் நான் என்ன செய்யறது? உன்னோட இன்டென்ஷன் என்ன ருத்ரா? எதுக்கு என்னைச் சீண்டுற?”
“ஸ்மார்ட் கேர்ள்.” ஒரு கையால் அவள் தலைமுடியைக் கோதியவன் அருகில் மேலும் நெருங்க, காமினி விழிகளை இறுக மூடிக் கொண்டாள். அவள் நெற்றியில் முத்தமிட்டவன், “குட் நைட்” என்று கூறினான். காமினி விழிகளைத் திறக்கவும் அவன் இல்லை. மின் தூக்கியின் கதவு திறந்து கிடக்க, அதிலிருந்து வெளியேறிவள் தனக்கென்று விடுதியில் இருக்கும் அறைக்கு வர, அங்கே அவளுக்கென்று குரோம்பேஸ்கூ கேக்கின் இரு துண்டுகளும், அருகே “ஸ்வீட் ட்ரீம்ஸ் சிவகாமி” எனக் கையொப்பமிடப்பட்ட சிறிய கார்டும் இருந்தது.
***
அடுத்த நாள் காலை.
நெய்தல் நிழலுக்கு அருகே தனியாக ஒரு தோட்டம் உள்ளது. அதில் திருமணம் நடத்தவென்று ஒரு இடத்தை நடுவில் தனியாக ஒதுக்கி இருக்க, பச்சைக் கம்பளத்தை விரித்து விட்டது போன்ற புல்வெளியில் இலேசான பழுப்பு நிற மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதைச் சுற்றிலும் நான்கு புறமும் தூண்கள் அமைக்கப்பட்டு அவை அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளன. திருமணம் பாரம்பரிய முறையில் வேண்டும் என்று மாயா கேட்டிருக்க, தூண்களில் சுற்றியும் சம்பங்கி மலர்கள் ஒட்டப்பட்டிருந்தது. அதோடு மல்லிகைச் சரங்கள், மேரிகோல்ட் பூச்சரங்கள், பனையோலையால் ஆன தோரணங்கள் மற்றும் தென்னை ஓலையால் ஆன சரங்கள் தொங்கவிடப்பட்டு அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தன.
மல்லிகைச் சரங்களின் முனைகளில் சிறிய மணிகள் கட்டப்பட்டிருக்க, காற்றடித்தால் அவை ஒலி எழுப்பின. மேடைக்கு வரும் நுழைவு வாயிலில் மணமக்கள் அறிவிப்பு பலகையில் பூக்கள் அலங்காரத்துடன் சிறிய பெரிய அளவிலான முறங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மணமக்கள் தமிழ் முறைப்படி திருமணம் நடத்த வேண்டும் என்றிருக்க அதன்படி சடங்குகள் நடந்து கொண்டிருந்தது.
காமினி இடையில் ஒரு வேலையாக வெளியில் சென்றவள் தோட்டத்திற்கு வரும் வழியில் வெண்ணிற பட்டு வேட்டி சட்டையில் மரத்தில் சாய்ந்து நின்றுகொண்டிருந்தான் ருத்ரசேனா.
ஊதாப் பூ நிற சேலையில் வந்த காமினிக்கு ஆச்சரியம். ருத்ராவை பாரம்பரிய உடையில் பார்ப்பது அரிது. ஆச்சரியத்தில் புருவங்கள் உயர்ந்தாலும் அவனைக் கண்டு கொள்ளாமல் நகர முயற்சித்தாள். ஆனால் அதற்கு அவன் விட வேண்டுமே!
அவள் கையைப் பிடித்துத் தன்னருகே இழுத்து மரத்தில் சாய்த்தவன் ஒரு கையை அவள் தலைக்கு மேலே வைத்து நின்றான்.
“ஏய் மோகினி! என்னைக் கண்டுக்காம போற?”
“என்னை விடு ருத்ரா. யாராவது பார்த்திடப் போறாங்க.” அவளுடைய விழிகள் அங்கும் இங்கும் அலைபாய்ந்தது.
“அமைதியாக இருந்தால் நீ கேட்டதுக்கு பதில் சொல்றேன்.”
அவன் பதில் சொல்கிறேன் என்று கூறியதும் காமினி அமைதியாக அவன் விழிகளை ஏறிட அதில் தெரிந்த விஷயத்தில் தானாகப் பக்கவாட்டில் பார்த்தாள்.
“என்னைப் பாரு சிவகாமி.”
‘அவள் தாடையைப் பிடித்துத் திருப்பித் தன் விழிகளைச் சந்திக்க வைத்தான்.
“எதுக்கு உனக்கு இவ்வளவு பயம்? உன்னை நான் என்ன செஞ்சுருவேன். ஐ லவ் யூ! உன்னை ரொம்ப ஆழமாகக் காதலிக்கிறேன்.” அவள் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருக்க சட்டென்று சட்டைப் பையில் வைத்திருந்த மோதிரத்தை எடுத்து அவள் விரல்களில் மாட்டி விட்டிருந்தான்.
காமினி அவன் கூறிய செய்தியிலேயே உறைந்திருந்தாள். அவன் மோதிரம் மாட்டியதும்தான் அவள் நிகழ்வுக்குத் திரும்பினாள்.
தோட்டத்தில் மங்கல வாத்தியங்களின் ஒலி எழுந்து கொண்டிருந்தது. அவள் மோதிரத்தைக் கழற்ற முயல, “கழற்றி வீசிடாத, டைமண்ட் ரிங். அதை எங்கிட்ட திருப்பிக் குடுத்தாலும் யூஸ் இல்லை. என்னோட காதல் நீதான்!” அவள் இடையைப் பற்றித் தன் வசம் இழுத்தவன் நெற்றியில் முத்தமிட்டு, “இந்தப் புடவையில் ரொம்ப அழகு நீ. என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ காமினி.” என்று கேட்டிருந்தான்.
இவ்வளவு நாள் அலையால் முட்டி மோதிக் கொண்டிருந்த கரையை உடைத்திருந்தான் ருத்ரா. காமினியின் முகம் இறுகியது.
“காமினி மேம், எங்க இருக்கீங்க?” என்ற குரல் இலேசாகக் கேட்டது.
காமினி முகம் இறுக ருத்ராவைத் தள்ளிவிட்டவள், “நோ.” என மறுத்துவிட்டு அங்கிருந்து ஓட ஆரம்பிக்க, ருத்ரா இலேசான புன்னகையுடன் நின்றான்.
மாயா அர்ஜூன் திருமணத்தை வெண்ணிற கேரளா கசவுப் புடவையில் பார்த்துக்கொண்டிருந்தாள் பத்மமுகி. அவள் அருகில் ஆதி அமர்ந்து கொண்டு, அவர்களுடைய திருமணத்தைப் பற்றி நினைவுபடுத்த முகிக்கும் அதன் நினைவுகளே! காமினியைத் தேடி கன்யாவை முகி அனுப்பி இருக்க அவளும் இவர்கள் அருகில் வந்து அமர்ந்து கொள்ள, கார்த்திக்கும் இணைந்து கொண்டான். கன்யா ஒரு ஓரத்தில் நின்று திருமணத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள். ருத்ராவும் சில நிமிடங்களில் கார்த்திக்கின் அருகில் வந்து அமர, காமினி அவன் பக்கம் திரும்பவே இல்லை.
மாயா அர்ஜூன் திருமணத்தில் இப்படி பிணக்குகளுள்ள அறுவரும் அருகில் இருக்க, நால்வரின் பிணக்கு மட்டும் ஒரு முடிவுக்கு வரவில்லை. இடையில் கன்யாவைப் பார்த்த கார்த்திக் சிரிக்க, கன்யாவும் புன்னகைத்தவள் வேட்டி சட்டை நன்றாக இருக்கிறது எனச் சைகை செய்யவும், வாயசைத்து நன்றி கூறினான் கார்த்திக்.
அந்த நந்தவனத்தில் திருமணச் சடங்குகளைத் தவிர்த்து, சொந்தங்கள் பேசிக் கொள்ளும் மெல்லிய சத்தமும், மங்கல வாத்தியங்களின் சத்தமும் மட்டுமே எழுந்தது. திருமணம் நல்லபடியாக முடிந்தது.
அனைவரும் வேனலின் வெண்பூவான காட்டு இருப்பை (இலுப்பை) மரத்தின் அடியில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படம் எடுக்கும் பகுதியின் முன் நின்றனர். மஞ்சள் நிற துணி பெரிய செவ்வக வடிவ சட்டத்தில் சுற்றப்பட்டு, அதன் மேல் மல்லிகைச் சரங்களும், இருப்பைப் பூவினால் ஆன சரங்களும் அழகாகத் தொங்க விடப்பட்டிருந்தன.
மணமக்களுடன் ஒவ்வொருவரும் வரிசையாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மணமக்களுக்கு நேற்றே திருமணப் பரிசை ஆதி வாங்கி ‘மனோமுகி’ எனப் பெயரிட்டுக் கொடுத்து இருந்தான்.
மணமக்கள் ஓய்வெடுக்கச் சென்றுவிட, ருத்ரா, காமினி, கார்த்திக் மூவரும் தனியாக ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள, பொன்னம்பலமும் இணைந்து கொண்டார்.
அடுத்து மனோ, முகியும் சேர்ந்து ருத்ரா, காமினி, கார்த்திக்குடன் புகைப்படம் எடுக்க, அடுத்த புகைப்படத்தில் கன்யாவை காமினி அழைக்க அவளும் இணைந்து கொண்டாள். மனோ முகியை இழுத்துப் பிடித்துத் தனியாக ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள, முகி எரிச்சலுடன் ஆதியை முறைத்துக் கொண்டே இருந்தாள்.
பிறகு ஒவ்வொருவராக அந்த இடத்திலிருந்து விடுதிக்குத் திரும்ப ருத்ரா சென்றதற்குப் பின்னே காமினி அங்கிருந்து செல்ல முயல அதற்கு இடையூறாக ருத்ரா மரத்தின் மறைவிலிருந்து வெளியே வந்தான்.
“சிவகாமி.” என்று வந்தவனைப் பார்த்து எரிச்சல் எழுந்தது.
கைகளைக் கட்டி முறைத்தபடி நின்றவளின் தோள்மீது கைப்போட்டு, “சிரிச்சு போஸ் குடு. இல்லை இப்படியே டிபி வச்சுருவேன்.” என்றவுடன் காமினி பற்கள் தெரியாமல் புகைப்படம் எடுத்தாள். தூரத்தில் பணியாளர்கள் வருவதைப் பார்த்ததும் காமினியும் அமைதியாக நின்றாள்.
சுற்றி இருந்த காற்றும் மிக அமைதியாக இருந்தது. புயலுக்கு முன் வரும் அமைதி என்பது இயல்புதானே!
*****
