அத்தியாயம் -30.1 ( இறுதி )

வேனலின் வெண்பூவே

 

அத்தியாயம் 30.1

 

நாம சில விஷயங்களைக் கவனிக்காமல் போயிருக்கலாம். கணவன் மனைவி உறவில் தெரிந்த பின்பு கவனிக்காமல் விட்டால் வாழ்க்கையின் இறுதியில் வெறுமைதான் மிஞ்சும். 
   -ஆதி மனோகரன்.

அர்ஜூன் மாயா திருமணம் முடிந்து அடுத்த நாள் மாலை. முகி நெய்தல் நிழல் விடுதியின் தோட்டத்தில் இலுப்பை மரத்தின் அடியில் அமர்ந்திருந்தாள். இலுப்பைப் பூவின் மனம் காற்றில் பரவி இருந்தது. வெண்ணிறத்தில் கொத்துக் கொத்தாக இருக்கும், அதனைக் கிள்ளி கையில் வைத்து முகர்ந்து பார்த்தாள். அந்தக் காலத்தில் தீபம் ஏற்ற இலுப்பை எண்ணெயைப் பயன்படுத்துவார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறாள். நேற்று இந்த மரத்திற்கு அடியில் புகைப்படம் எடுத்தபோது மிகவும் பிடித்துவிட இப்போது ஓய்வெடுக்க வந்திருந்தாள். ஆதி அறையில் உறங்கி இருக்க, முகி அவனிடமிருந்து தப்பித்து வந்திருந்தாள் என்றுதான் கூற வேண்டும். அவளைத் தரையில் கால் வைக்க விடாமல் தொல்லை செய்து கொண்டிருக்க, முகிக்கு ஒரு கட்டத்தில் சலிப்பாகிவிட்டது.

‘இருக்குறப்ப கண்டுக்கவே இல்லை. இப்ப என்னன்னா இப்படி தாங்குறாங்க.’ என முனகிக் கொண்டாள்.

அன்று விடுதி பணியாளர்களின் உடையில் காமினி முகியின் தோளில் கைபோட்டபடி அமர்ந்தாள்.

“என்னக்கா இந்தப் பக்கம்?”

“சும்மா காத்து வாங்கலாம்னு.”

“என்ன சொல்றாரு மனோ ப்ரோ?”

“இம்சை பண்றாரு காமினி. இவரு காட்டுன வீடியோவில் எதுவும் இல்லைதான். தாகினிதான் ட்ரை பண்ணி அடி வாங்கி இருக்கா. மாதவி, அமிர்தா, தாகினி இவங்க எல்லாரும் கூட்டுன்னு எனக்கே தெரியும். அதுக்காக இவரு கூப்பிட்ட உடனே போய் என்னால் வாழவும் முடியலை. மன்னிக்கவும் முடியலை. அவர் என்னைக் காப்பாத்தி இருக்கணும். குழந்தைகிட்ட இருந்து அப்பாவைப் பிரிக்குறது சரியான்னும் தெரியலை. ஒரு தடவை ஊருக்குப் போய்ப் பார்க்கணும்னு தோணுது.”

“எனக்கு அவரு ஜென்யூனா இருக்குற மாதிரிதான் தெரிஞ்சுது. ஒரு சான்ஸ் குடுத்துப் பாருங்க. ஆனால் ஏதாவது பிராப்ளம்னா இங்க வந்துருங்க. பார்த்துக்கலாம்.”

அவளுடைய அறைக்கு அடம் பிடித்து வந்து விட்டுத் தெரிந்த மருத்துவர்களுக்கு எல்லாம் அழைத்து மருத்துவ அறிக்கையை அனுப்பிக் கருத்து கேட்டபின்னர் அவளுக்குத் தேவையான உணவுகள் அனைத்தும் வாங்கிக் கொடுக்க ஆரம்பித்தான். வெளியில் சென்று பழங்கள், உலர் கொட்டைகள் மற்றும் உலர் பழங்கள் என வாங்கிக் குவித்துவிட்டான்.

அவன் செயல்கள் அனைத்தும் பழைய ஆதியை நினைவு படுத்தினாலும், முகியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மனம் ஊசலாடியது.

“அக்கா ரிலாக்ஸ். தைரியமா போய்ப் பாருங்க. அவரைக் கல்யாணம் பண்ணிக்கிற முடிவையே தைரியமாக எடுத்தீங்க. ஒரு தடவை சான்ஸ் குடுத்துப் பாருங்க. அபிதா ஆன்ட்டி எப்படியும் ஃபாலோ அப்புக்கு வருவாங்க. நீங்கக் கவலைப்படாமல் இருங்க.”

தனக்கு இல்லாத தைரியத்தை காமினி முகிக்கு அளித்துக்கொண்டிருந்தாள்.
இருவரும் பின்பு கதை பேசியபடி பொழுதைக் கழிக்க ஆரம்பிக்க, சூரியனை அந்தப் பக்கம் போ என்று அனுப்பிவிட்டு நிலவு தன் வேலையைப் பார்க்க வந்தது.

“சரி, ரூமுக்குப் போய் ரெஸ்ட் எடுங்க. எனக்கு ஒரு கால் பேச வேண்டியது இருக்கு. முடிச்சிட்டு வந்தர்றேன்.” என முகியை காமினி அனுப்பி வைத்துக் கைப்பேசியை எடுத்துப் பேச ஆரம்பித்தாள். அப்போது இடையில் வந்த குறுஞ்செய்தியைக் கண்டதும் அழைப்பைத் துண்டித்து விட்டுக் கட்டுப்பாட்டு அறைக்கு வேகமாகச் சென்றவள், அங்கிருப்பவர்களுக்குக் உடனே கட்டளையிட்டாள்.

“ஸ்ட்ரோம் புரோட்டாகால்.” உடனே அவர்கள் இருக்கும் பயணிகளுக்கு அழைக்க ஆரம்பித்தார்கள். சமையலறைக்கும் அழைத்து உணவுப் பொருட்களைத் தயார் செய்து வைக்கக் கூறினார்கள்.

இரவு நேரம் என்பதால் பெரும்பாலான பயணிகள் விடுதியில்தான் இருந்தனர். உடனே அவர்களும் அறையின் கண்ணாடி ஜன்னல்களை இழுத்து மூட உடனே ஒவ்வொரு அறைக்கும் உள்ள ஷட்டர் பட்டனை காமினி அழுத்த அது மூட ஆரம்பித்தது. காமினி வெளிநாட்டிலிருந்து திரும்பியபோது புயல் மழையால் சேதமடைந்திருந்தது. ரெசிஸ்டென்ட் கிளாஸ் பயன்படுத்தி இருந்தாலும், கண்ணாடிகள் உடைந்திருந்தன. அப்போது அவள் கொண்டு வந்ததுதான் ஜன்னல்களுக்கு ஷட்டர் சிஸ்டம். அதீத கால நிலைகளைத் தாங்கும் வண்ணம் விடுதியை மாற்றி இருந்தாள்.

மாலுமியாகப் பயிற்சி எடுத்திருக்க, புயல்கள் பற்றிக் கணிக்கவும் ஓரளவு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தத் தெரிந்திருந்தது. இதற்காகவே ஒரு நபரைப் பணியிலும் வைத்திருந்தாள்.

கார்த்திக்கும் பொன்னம்பலமும் தகவல் கேள்விப்பட்டவுடன் பயப்படும் பயணிகளுக்கு நம்பிக்கைக் கொடுக்க, அவர்களை ஓரிடத்தில் அழைத்து வைத்துப் பேசிக் கொண்டிருந்தனர். கன்யா இன்னும் பணிக்கு வந்திருக்கவில்லை. பயணிகளிடம் பேசிவிட்டு கன்யாவுக்கு அழைத்தான்.

“சொல்லுங்க சீனியர்.”

“அம்மாவைக் கூட்டிட்டு ஹோட்டலுக்கு வந்துரு. தேவையான டிரஸ். டேப்ளட்ஸ் எல்லாம் வாங்கிட்டு வந்துரு. முடிஞ்சா ஃபுட்ஸும்.”

கன்யா வீட்டுக்கு வெளியில் வந்து பார்க்க ஒரே ஆரவாரமாக இருந்தது.

“என்னாச்சு சீனியர்?”

“புயல் வர வாய்ப்பு இருக்குன்னு அறிவிப்பு வந்திருக்கு. புயல் திசை மாறிப் போனாலும் அது கரையைக் கடக்கும்போது காத்தும் மழையும் பயங்கரமாக இருக்கும். அம்மாவோட வந்துரு. ஹோட்டல்ல இருக்குறதுதான் சேஃப்.”

“ஓகே.”

கன்யா அவன் கூறியபடி அனைத்தையும் செய்ய ஆரம்பித்தாள்.

ஆயத்த ஏற்பாடுகள் செய்து முடிக்க நேரம் பத்தைத் தொட்டுக் கொண்டிருந்தது. இன்னும் சில ஏற்பாடுகள் போய்க் கொண்டிருந்தது. அப்போதுதான் யோசித்தாள்.

‘ருத்ரா இன்னும் இங்கு வரவில்லை.’ உடனே சமையலறை மற்றும் ஆங்காங்கே அழைத்துக் கேட்க அவன் விடுதியில் இல்லையெனத் தகவல் கிடைத்ததும் உடனடியாக அபிதாவுக்கு அழைத்தாள்.

“ஆன்ட்டி என்ன பண்றீங்க?”

“ஹோட்டலுக்கு வரதுக்குப் பேக் பண்ணிட்டு இருக்கேன்மா.”

“ருத்ரா?”

“ருத்ரா வெளியே போயிட்டான்மா. ஹாட் ஸ்பிரிங்க்கு போறேன்னு சொல்லிட்டு இருந்தான். நான் போன் பண்ணேன் எடுக்கலை. மெஸேஜ் போட்டு விட்டுருக்கேன். வந்துட்டு இருப்பான்னு நினைக்கிறேன்.”

“சரி ஆன்ட்டி, பத்திரமாக வாங்க.”

ருத்ராவுக்கு காமினி அழைக்க ஆரம்பிக்க, அழைப்பு ஏற்கப்படவில்லை. உடனே தன் மகிழுந்தை எடுத்து வெப்ப நீருற்று இருக்கும் பக்கம் வாகனத்தைச் செலுத்தியவள் முழு வேகத்தில் அங்கு வந்து நின்றாள்.

இறங்கியவள் வேகமாக அவனைத் தேட ஆரம்பித்தாள். ருத்ரா அந்தச் சோலையில் சட்டையின் கைகளை மடக்கிவிட்டு, பேன்ட்டினை முட்டி வரை சுருட்டி விட்டுக் கால்களை மட்டும் நீருக்குள் தொங்கவிட்டு அமர்ந்திருந்தான்.

“ருத்ரா, இங்க என்ன பண்ணற? மெஸேஜ் பார்க்கலையா? ஹோட்டல் வரலையா?”

“பார்த்தேன். வரத் தோணலை. நீ கிளம்பு.”

“என்ன?”

இதுவரை பின்னால் நின்று பேசியவள் அவனைப் பிடித்து இழுக்க, எழுந்து நின்றவன், “ப்ச்ச் என்ன வேணும் சிவகாமி?” என்றான்.

“ஹோட்டல் போலாம் ருத்ரா.”

“நான் வரலை காமினி. நீ கிளம்பிப் போன்னு சொன்னேன்.”

“ருத்ரா, பேச டைம் இல்லை. வா.” அவன் கைபிடித்து இழுத்தாள்.

“இத்தனை பேர் இருந்தும் என்னைத் தேடி வரலை. நீ மட்டும் எதுக்கு என்னைத் தேடி வந்த சிவகாமி?”

“ஏன்னா நீ ருத்ரா.”

“நான் மட்டும் என்ன ஸ்பெஷல்? எனக்கு இத்தனை பேர் இருக்கும்போது என்னை நீ மட்டும் எதுக்குத் தேடி வந்த?”

காமினியின் முகம் அங்கிருந்த மெல்லிய வெளிச்சத்தில் மாறியது.

“ருத்ரா பிளீஸ்.”

“பதில் சொல்லு காமினி. நான் என்ன பண்ணனும்னு நீ எதுக்கு சொல்ற? நீ எனக்கு லவ்வரா? பொண்டாட்டியா? என்னை ரிஜக்ட் பண்ணதுக்கு அப்புறம் நீ யாரோ, நான் யாரோ.”

ருத்ராவை உணர்ச்சி மிகுதியில் அடித்திருந்தாள் காமினி. விழிகளில் நீரும் வர ஆரம்பித்தது.

“ஆமாண்டா உன்னால என் மனசு தடுமாறுச்சு. உன்னை எனக்கு எப்பவும் பிடிக்கும். அபிதா ஆன்ட்டி என்னைக் கொஞ்சும்போது கோபமாகப் பார்த்தாலும் அவங்க விட்டுட்டுப் போனவுடனே பயத்தில் என் கையைப் பிடிச்சுக்குவ. கொஞ்சம் பெரிய பையன் ஆனதிலிருந்து பசங்க கூட மட்டும் பழக ஆரம்பிச்ச. எங்கிட்ட ஒன்னு இரண்டு வார்த்தைதான். உன்மேல் அன்பு அக்கறை எப்பவும் உண்டு. ஆனால் அது இப்ப வேற மாதிரி மாறிருச்சு. என்னால அதை ஏத்துக்க முடியலை. எதுக்குடா என்னை டிஸ்டர்ப் பண்ண? எத்தனை வருஷமாடா என்னை லவ் பண்ணுற? இது இப்படித்தான் நடக்கணும்னா அப்ப அது ஏன் நடந்தது? என்னால முடியலைடா. இதை எப்படி ஹேன்டில் பண்றதுன்னு தெரியலை. அப்படியே வாழ்ந்துடலாம்னு நினைச்சுட்டு இருந்தேன்.”

காமினி உடைந்து அழ அவளை அணைத்துக் கொண்டான் ருத்ரசேனா. இதுவரை இருந்த அழுத்தம் மறைந்து காற்று வீச ஆரம்பித்தது.

அழுகையில் காமினியின் உடல் குலுங்கியது.

“இட்ஸ் ஆல்ரைட். இனி மழை பிடிச்சாலும் பிடிக்கும். வா! போலாம்.”

“நீ வேணும்னுதானே செஞ்ச எல்லாமே? சொல்லுடா.” விசும்பலுடன் எழுந்தது குரல்.

“நீ என்னைத் தேடி வருவேன்னு மனசு சொல்லுச்சு. ஆனால் லேட்தான் நீ. அதான் இங்கிருந்தே கிட்சனுக்கு இன்ஸ்ட்ரக்ஷன் குடுத்தேன்.”

“நீ வில்லன்டா.” அவன் மார்பில் அடித்தாள் காமினி.

அதற்குப் பதிலாக மெல்லிய சிரிப்பொலி மட்டும் எழுந்தது. அவனிடம் சரணடைந்த பிறகு, அலைகடலாய் அலைப்புற்ற அவள் மனம் அமைதியடையத் தொடங்கி இருந்தது.

“இப்ப வில்லன்ஸ் தான் ட்ரென்டிங். வில்லன் கெட் வாட்எவர் தே வாண்ட். கோ ஃபார் எனி லென்த் ஃபார் தெர் வுமன்.”

“நல்லா பேசற நீ.”

“கண்டிப்பா. கிளம்பலாம்.”

‘சிறு துளிகள் ஆசீர்வாதம் போல அவர்கள்மீது விழ ருத்ரா காமினியை இழுத்துக் கொண்டு மகிழுந்தை நோக்கி ஓடினான்.

“உன்னோட வெஹிக்கல் ருத்ரா?”

“டேக்ஸில வந்தேன்.”

இருவரும் மகிழுந்தில் ஏறிக் கொள்ள, ருத்ரா அதனைச் செலுத்த ஆரம்பித்தான். ஒரு கையால் சிவகாமினியைப் பிடித்திருந்தவன் மறுகையால் வாகனத்தை ஓட்டி விரைவாக விடுதிக்கு வந்து சேர்ந்தான்.

விடுதி வந்ததும் அவளது கையை விடுவித்தவன், வாகனத்தைக் கீழ் தளத்தில் தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு மின்தூக்கியில் செல்ல ஆரம்பித்தனர். புயல் வரும்போது மின்சாரம் முழுக்கத் துண்டிக்கப்படும்.

“என்னோட ரூமுக்குப் போலாம் காமினி. நீ உன்னோட சைட் எல்லாம் முடிச்சுட்ட கரெக்ட்டா?”

“ம்ம்ம்…”

“கார்த்திக்கும், அங்கிளும் பார்த்துக்குவாங்க.”

காமினி தயக்கத்துடன் தலையாட்டினாள். விடுதியில் அவன் தங்கும் அறையின் கதவைக் காமினி திறக்கச் செய்ய, அறையில் ஆங்காங்கே நறுமணம் நிரம்பிய மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டிருந்தன. அவனது அறை என்றதும் தயக்கம் அவளை ஆட்கொண்டது. காலெடுத்து உள்ளே போகத் தயங்க அவளைத் தோளைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றான்.

 

*****

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page