அத்தியாயம் 3

‘அம்மா தாயே உனக்கு கோயில் கட்டி கும்பிடுறேன். என்னை நீ வேணும்னா நாலு அடி அடிச்சுக்கோ, அவங்க கிட்ட போட்டுக் குடுத்திடாத. அப்படியே என்னை கொன்னு பொதச்சுடுவாங்க’ விஷ்ணு கண்களால் கெஞ்சி மனதிற்குள் கேட்டிட, ‘போனாப் போகுது பொழச்சுப் போ’ என்பதைப் போல் நதியா அவனைப் பார்த்திட, நிம்மதி பெருமூச்சு விட்டான்.

“சரி இப்போ எங்க மித்து என்ன நினைக்கிறான்னு சொல்லு?” என்று சத்யா மேலும் அவளைத் தூண்டிட, சிறிது நேரம் யோசித்தவள், “இந்த பொண்ணை வீட்டுக்கு கூப்பிட்டு போறோமே, அம்மா என்ன சொல்வாங்க அப்படின்னு யோசிக்கிறார்” என்றாள்.

செல்போனில் பார்வையை பதித்திருந்த மிதுன், சட்டென நிமிர்ந்து அவளைப் பார்த்திட, “மித்து அப்படித்தான் நினைச்சியா சொல்லுடா?” நண்பர்கள் அவன் முகம் பார்த்து கேட்டிட, பதிலேதும் பேசாமல் அவளையே அழுத்தமாய் பார்த்திருந்தான்.

‘ஐயையோ தேவையில்லாம வாயை குடுத்துட்டோமோ? நம்மள வேணாம்னு சொல்லிடுவாரோ? நானே சும்மா ஏதோ ஒரு ஃப்ளோல அடிச்சுவிட்டேன்’ இப்போது மனதிற்குள் புலம்புவது அவள் முறை ஆயிற்று. “மித்து.. அம்மாவை எப்படி சமாளிக்கப் போற? வீட்ல என்ன சொல்லப் போற?” கேலிப் பேச்சுகளை ஒதுக்கி நண்பர்கள் சீரியஸாக கேட்டிட,

“தெரியல டா, சமாளிக்கணும்.. சரி நாங்க கிளம்புறோம்” என்று நண்பர்களிடம் விடைபெற்ற மிதுன், “விச்சு எல்லாம் ரெடியா? வீட்டுக்கு போகலாமா?” நடந்துகொண்டே கேட்டிட, விஷ்ணுவும் நதியாவும் அவன் பின்னே நடந்தார்கள். அவன் நடக்கும் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அவனுக்கு பின்னே ஓடினார்கள்.

மூவரும் மிதுனின் ரோல்ஸ் ராய்ஸ் காரில் ஏறிட, டிரைவர் காரை எடுத்தார். விஷ்ணு டிரைவருக்கு அருகில் அமர்ந்திருக்க, நதியா மிதுனுக்கு அருகில் கொஞ்சம் தயக்கத்தோடு தான் அமர்ந்திருந்தாள். “ரவி.. அந்த ஜீவல்லரி ஷாப் போங்க” என்று டிரைவரிடம் கட்டளையிட்ட மிதுன், “விச்சு.. 10 பவுன்ல லேட்டஸ்ட் மாடல் தாலி செயின் வாங்கிட்டு வா” என்று அவன் செல்போனில் பார்வையைப் பதித்தவாறே சொன்னான்.

‘பரவாயில்ல அவருக்கும் கொஞ்சம் மனசாட்சி இருக்கு. கல்யாணம் தான் பண்ணிக்க போறார் போல’ மனதோடு நினைத்த விஷ்ணு தாலி செயினை வாங்கி வந்து மிதுனிடம் தந்திட, அதை வாங்கியவன் நதியாவிடம் தந்தான். 

தாலி செயினை கைகளில் வாங்கியவள், கேள்வியாய் அவனைப் பார்த்திட, “இதை போட்டுக்கோ.. யார் கேட்டாலும் நமக்கு கல்யாணம் நடந்தது அப்படின்னு சொல்லிடு” மிதுன் செல்போனை பார்த்தவாறு தான் அவளிடம் பேசினான்.

‘அடப்பாவி.. அதான நீங்க திருந்திட்டாலும்’ என்று நினைத்தவாறு விஷ்ணு பாவமாய் நதியாவை பார்க்க, மன வேதனை தாளாமல் அடக்கிக் கொண்டிருந்த கண்ணீர் அவளையும் மீறி சொட்டு சொட்டாக அவள் கண்களை நனைத்திட, அந்த செயினை தன்னுடைய கழுத்தில் போட்டுக் கொண்டாள்.

“இந்த விஷயம் உங்க மூணு பேரையும் தாண்டி வெளில போகக்கூடாது” மிதுன் கணீர் குரலில் கர்ஜிக்க, மூவரின் தலையும் தன்னிச்சையாக மேலிருந்து கீழாக ஆடிட, அதன் பிறகு அங்கு அமைதியே நிலவியது. 

சக்கரவர்த்தி இல்லம்.. அது வீடல்ல.. பங்களா வும் அல்ல.. ஒரு குட்டி அரண்மனை.

கார் பெரிய காம்பவுண்ட் கேட்டைத் தாண்டி உள்ளே சென்று, வீட்டு வாசலில் நின்றதும் மிதுன் இறங்கி விடுவிடுவென உள்ளே சென்றிட, விஷ்ணுவும் நதியாவும் லக்கேஜ் டிராலியை எடுத்துக் கொண்டு பின்னே சென்றார்கள். ஹாலில் அமர்ந்திருந்த மிதுனின் தங்கை வைஷாலி அவனை பார்த்ததும், ” அண்ணா..” என்று ஓடி வந்து அவனை அணைத்திட, “காலேஜ் முடிஞ்சு வந்துட்டியாடா? சொல்லு இன்னைக்கு எக்ஸாம் எப்படி பண்ணியிருக்க?” முகம் மலர்ந்து கேட்டவன் அவள் தலை வருடினான்.

இவர்களை நெகிழ்ச்சியாக பார்த்திருந்த குடும்பத்தினர்,  மிதுனின் அருகில் நின்றிருந்த நதியாவை பார்த்து திகைக்க, “இது நதியா. நான் இவளை தான் கல்யாணம் பண்ணியிருக்கேன்” மிதுன் ஆரவாரமின்றி அமைதியாய் சொன்னான்.

மிதுனின் பாட்டி ருக்மணியம்மாள்(சக்கரவர்த்தியின் அம்மா), தாயார் ராதா, பெரிய தம்பி தேவ் சக்கரவர்த்தி, அவனுடைய மனைவி ரூபிணி, சின்ன தம்பி சூர்யா சக்கரவர்த்தி, தங்கை வைஷாலி, ரூபிணியின் அப்பா(ராதாவின் தம்பி), அம்மா, அவளின் தங்கை அதிதி என மொத்த குடும்பமும் அதிர்ச்சியாய் அவர்களைப் பார்த்தது. 

“மித்து கண்ணா.. என்னடா இப்படி ஒரு குண்டை தலைல தூக்கிப் போடுற?” அதிர்ச்சியாய் நெஞ்சில் கை வைத்தவாறு ருக்மணி கேட்க, அவருக்கு அருகில் சென்றமர்ந்தவன், “பாட்டிமா.. அவளோட அம்மாவுக்கு உடம்பு சரியில்ல, ஹாஸ்பிடல்ல சீரியஸ் கண்டிஷன்ல இருக்காங்க. வேற வழியில்லாம ஹாஸ்பிடல்ல அவங்க முன்னாடி நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க வேண்டிய சூழ்நிலை” பொய்யோடு கொஞ்சம் உண்மையும் கலந்து மிதுன் உரைத்திட்டான்.

பேரன் எது செய்தாலும் சரியாகத் தான் இருந்திடும் என்று புரிந்திருந்த பாட்டி, “லவ்வா இருந்திருந்தா முன்னாடியே சொல்லியிருக்கலாம்ல கண்ணா.. இப்போதான தேவ், ரூபிணி கல்யாணம் நடந்தது. அப்போவே உன் கல்யாணத்தையும் சேர்த்தே நடத்திருக்கலாமே” பேரனின் திருமணத்தை பார்க்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் கேட்டிட, “அவளோட அப்பா ரீசன்டா தான் இறந்து போயிட்டாரு.. அம்மாவுக்கும் உடம்பு சரியில்ல பாட்டிமா சாரி” என்று அவனுக்கு அவளைப் பற்றி தெரியாத பொய் கதைகளையும் சொல்லி, அவரை சமாளித்தான்.

“இங்க வா மா..” ருக்மணி நதியாவை அழைத்திட, அவருக்கு அருகில் சென்றவளை இழுத்து தனக்கு அருகில் அமர செய்தவர், “உன்னோட பேர் என்னம்மா?” வாஞ்சையாய் அவள் தலை வருடிக் கேட்டிட, 

இவ்வளவு நேரம் பதற்றத்தோடே அவர்களை பார்த்திருந்தவள், அவர் தலை வருடலில் ஆசுவாசமாகி மெதுவாக, “நதியா..” என்றாள். “ஹ்ம்ம்.. நீ ஒண்ணும் கவலைப்படாத. உன்னோட அம்மா சரியாகிடுவாங்க. இப்போ பூஜையறைக்கு போய் விளக்கேத்திட்டு மிதுன் ரூமுக்கு போ” என்று சொல்ல, சரியென்று தலையாட்டினாள்.

இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த ராதா, “அத்தை நீங்க என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? எவளோ ஒருத்தியை கொண்டு வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு உங்க பேரன் சொன்னா நாம அவளை ஏத்துக்கணுமா?” மகன் இப்படி செய்துவிட்டானே என்ற ஆதங்கத்தில் கோபமாய் பேசிட,

“அம்மா.. உங்களுக்கு தெரியாம கல்யாணம் பண்ணிக்கிட்டேன். நடந்தது நடந்திடுச்சு. நடக்கப் போறதை பத்தி யோசிக்கலாம்” என மிதுன் இந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தான்.

“உன் அப்பா போன பிறகு இங்க எல்லாமே உன்னோட ராஜ்யம் தான. அம்மான்னு மதிக்கிறதே இல்ல. நான் ரூபிணியை கல்யாணம் பண்ணுன்னு சொன்னப்போ எனக்கு கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டு இப்போ இவளை கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்கிற. நீ முடிவு பண்ணிட்டா இங்க யார் மாத்த முடியும். என்னமோ பண்ணு போ” என்றவாறு அவர் கோபமாக எழுந்து சென்றிட, மிதுன் செய்ததில் எனக்கும் விருப்பமில்லை என்பது போல், மற்றவர்களும் எழுந்து சென்றனர். 

அவன் எதிர்பார்த்தது தான் இதெல்லாம். நதியா அவர்களை திகைத்துப்போய் பார்த்திருக்க, “நீங்க ரெண்டு பேரும் கவலைப்படாதீங்க. போகப் போக கோபம் குறைஞ்சு எல்லாரும் சரியாகிடுவாங்க” என்று ருக்மணி அவள் தலையை வருடினார்.

“பூஜையறைக்கு போ மா” என்று அவர் சொல்லிட, மிதுன், “வேணாம் பாட்டிமா இப்போதான் கடைல நான்வெஜ் சாப்பிட்டு வந்தோம். அவ குளிச்சுட்டு அப்புறமா மத்ததெல்லாம் பண்ணட்டும்” என்க, சரி உங்க ரூமுக்கு கூப்பிட்டு போ” என்றவாறு அவர் எழுந்து அறைக்கு சென்று விட்டார். 

நடந்த மொத்த கூத்துகளையும்  பார்த்தவாறு அமைதியாக நின்றிருந்த விஷ்ணுவிடம், “வெயிட் பண்ணு வரேன்” என்று மிதுன் சொல்லி சென்றிட, டிராலியை இழுத்துக் கொண்டே அவன் பின்னே ஓடினாள் நதியா.

அந்த பெரிய ஹாலின் மத்தியில் எதிரெதிர் திசைகளில் செல்லும், இரண்டு சிறிய தளங்களாகப் பிரிக்கும் நீண்ட படிக்கட்டுகள் இருக்க, மிதுன் அதில் ஏறி தன்னுடைய அறைக்குச் செல்ல, அவளும் அந்த சூட்கேஸை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டே அவன் பின்னே செல்ல, திரும்பிப் பார்க்காமலே அவன் பாட்டிற்கு சென்று கொண்டிருந்தான்.

ஒருவழியாக அவள் மேலே ஏறிச் சென்றால், அவனை காணவில்லை. நிறைய அறைகள் இருக்க, எந்த அறைக்குள் நுழைந்தான் என்று தெரியாமல் அவள் திருதிருவென விழித்தபடி அங்கேயே நின்றிருக்க, அந்த தளத்தின் மத்தியில் இருந்த பெரிய அறையில் இருந்து எட்டிப் பார்த்தவன், “நதியா.. கம் திஸ் சைட்” என்க, அவள் உள்ளே சென்றாள். 

பெரிய விசாலமான அறை. அது ஒரு சிறிய அளவிலான வீடு என்றே சொல்லலாம். உள்ளே சிறிய அளவிலான கிச்சன், பாத்ரூம், டிரெஸ்ஸிங் ரூம், கணினியுடன் இருக்கும் ஸ்டடி ரூம் என சகல வசதிகளும் இருந்தது. அவன் திருமணத்திற்கு பிறகும் பயன்படுத்திக் கொள்ள ஏற்றவாறு வடிவமைத்திருந்தான். 

அதுமட்டுமல்லாமல் பணம், சொத்துப் பத்திரங்கள், முக்கிய ஆவணங்களை வைக்க யாருக்கும் தெரியாத ஒரு அண்டர்கிரவுண்ட் லாக்கர் அறையும் கூட அந்த அறைக்குள் உள்ளது. 

அறையின் சுவர்களின் பெயின்டிங்ஸ், இன்னும் சிலை கலைப் பொருட்கள் அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருக்க, நதியா நின்ற இடத்திலேயே அந்த அறையை சுற்றி சுற்றி பார்த்தவாறு இருந்தாள்.

மிதுன், “நதியா..” என்றழைத்திட, அவனை பார்த்தவள், “சொல்லுங்க சார்” என்றிட, “இந்த ரூம்ல இருக்கிறது பாஸ்வேர்ட் லாக். இதான் பாஸ்வேர்ட்” என்று ஒரு நான்கு இலக்க எண்ணை சொன்னவன்,

“இந்த வீட்ல இருக்கிற எல்லாருக்கும் பாஸ்வேர்ட் தெரியும். அவங்க தவிர இங்க வேலை பார்க்குறவங்க வந்தா வெளில இருக்கிற பெல் அடிப்பாங்க. பெல் சத்தம் கேட்டா, அங்க ஸ்கிரீன்ல யார் வந்திருக்காங்கன்னு பார்த்துட்டு பாஸ்வேர்ட் போட்டு ஓபன் பண்ணு. மேக்ஸிமம் யாரும் இந்த ரூமுக்கு வர மாட்டாங்க. உனக்கு என்ன வேணும்னாலும் இண்டர்காம்ல கால் பண்ணி சொல்லு, கொண்டு வருவாங்க. 

“விச்சு நம்பர் உன்கிட்ட இருக்குல, வேற ஏதாவது வேணும்னா அவனுக்கு போன் பண்ணு. யார் என்ன கேட்டாலும் நான் சொன்னதையே சொல்லி மெயின்டெய்ன் பண்ணிக்கோ. மேக்ஸிமம் யார் கூடவும் பேசாத, அவாய்ட் பண்ணிக்கோ. நான் சமாளிச்சுக்கிறேன். ரூம்லேயே இரு, வெளில எங்கேயும் போகாத. நவ் யூ டேக் சம் ரெஸ்ட், வில் கேட்ச் யூ லேட்டர்” என்று மூச்சுவிடாமல் பேசிவிட்டு சென்றவனை பார்த்து மூச்சுவாங்கி நின்றிருந்தாள் நதியா.

அங்கிருந்த மெத்தையில் விழுந்தவள், “நான் எங்க இருந்தேன். இப்போ இங்க இருக்கேன். என் வாழ்க்கைல இப்படிலாம் நடக்கும்னு நான் நினைக்கவே இல்லையே” புலம்பியபடியே தூங்கிப் போனாள்.

இரவு மிதுன் வந்து எழுப்பும் வரை நதியா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அவளிடம் ஒரு பழக்கம் உண்டு. அவள் தூங்கிக் கொண்டிருந்தால் யார் வந்து எழுப்பினாலும் உடனே விழித்திட மாட்டாள், எவ்வளவு அடித்து எழுப்பினாலும் சிறிது நேரம் கழித்து தான் கண் விழிப்பாள்.

மிதுன் அரை மணி நேரமாக அவளை எழுப்பிக் கொண்டிருக்கிறான். தொடக்கத்தில் தொண்டையைச் செருமினான். பிறகு “நதியா..” என்றழைத்துப் பார்த்தான். பிறகு குளித்து விட்டு, சாப்பிட்டு முடித்து வந்தவன் அப்போதும் அவள் தூக்கத்திலேயே இருக்க, அருகில் சென்று தோளில் தட்டினான், தோளில் அடித்தும் கூட பார்த்தான். அவள் அசையவில்லை. (என்னடா இது மிதுன் சக்கரவர்த்திக்கு வந்த சோதனை)

வெறுத்துப் போனவன், அவள் கன்னத்தில் தட்டி கொஞ்சம் சத்தமாக “நதியா வேக்கப்” என்றழைக்க, அரண்டு போய் கண் விழித்தாள். கால்களை நீட்டி கைகளை முறுக்கிக் கொண்டே எழுந்தவள், அவனைப் பார்த்து, “போயிட்டு உடனே வந்துட்டீங்க சார்” என்க, மிதுன் கண்ணாலேயே அங்கிருந்த டிஜிட்டல் வாட்சைக் காட்ட, அவள் திரும்பிப் பார்த்தால் மணி பதினொன்று. 

அசந்து தூங்கிட்டேன் போல” அவள் கொட்டாவி விட்டவாறு சொல்ல, “போய் குளிச்சுட்டு வா” என்றான்.

“இந்நேரத்துக்கு எதுக்கு குளிக்கணும்?” கேட்டவள் குழப்பமாய் அவனைப் பார்த்திட, “நீ எதுக்கு இங்க வந்திருக்கன்னு உனக்கு ஞாபகம் இருக்கா? இல்ல ஞாபகப் படுத்தனுமா?” மிதுன் அவளை அழுத்தமாய் பார்த்துக் கேட்டிட, முகம் வெளிறிப் போனாள்.

❤️‍🔥மோகம் தீர்ப்பாள்❤️‍🔥

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page