கண்கள் 4
அஷ்வினியை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் தவித்த செல்விக்கு, அஷ்வினி கூறிய ‘மாற்றானின் மனைவி நான்’ என்ற வார்த்தை அதிகம் வலியைக் கொடுத்தது.
‘தன் மகன் கூறியது உண்மையா? இல்லை, இந்தப் பெண் கூறியது உண்மையா? யார் பக்கம் நியாயம் இருக்கிறது? யார் கூறுவது உண்மை?’ என்று புரியாமல் தவித்துப்போன செல்வி, தீரனிடமே இதற்கான பதிலைக் கேட்டறிந்துகொள்வோம் என்றெண்ணியவர், நேராகத் தீரனைத் தேடி வந்தார்.
தீரனின் அறைக்கு வெளியே பரமன் நின்றுகொண்டிருக்க, அங்கு வந்த செல்வி தீரனின் அறைக்குள் நுழைய முற்பட, அவரைத் தடுத்தான் பரமன்.
“என்னடா? நான் தீரனைப் பார்க்கணும். வழியை விடு!” என்றவர், அவனைக் கடந்து செல்ல முற்பட, அவரைத் தடுத்த பரமன், “இப்போ நீங்க உள்ளே போகக் கூடாது” என்று கூறினான்.
“என் மகனைப் பார்க்க எனக்கு யார் அனுமதியும் தேவை இல்லை!” என்றவர், பரமனை முறைத்துவிட்டு தீரனின் அறைக்குள் நுழைந்தார்.
அறைக்குள் மது அருந்திக்கொண்டிருந்த தீரன், கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு கோபமடைந்து, “பரமா…” என்று கர்ஜிக்க, செல்வியின் உடல் தூக்கிவாரிப் போட்டது.
அறையில் தீரனோ ஒரு கையில் சிகரெட்டையும், மற்றொரு கையில் மதுக்குவளையையும் தாங்கியபடி அமர்ந்திருந்தான்.
“என்னடா இதெல்லாம்? எவ்வளவு நாளா உனக்கு இந்தப் பழக்கம்?” என்ற செல்வி, கண்ணீருடன் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
வாங்கிய அடியைச் சிறு வலியுடன் நாக்கடியில் மறைத்தவன், செல்வியைப் பார்க்க, அவரோ, “ஏன்டா இப்படி எல்லாம் பண்ணுற? அவள் என்னன்னா வேற ஒருத்தனுடைய மனைவியை நீ கடத்திட்டு வந்திருக்கிறதா சொல்லுறாள். நீ என்னன்னா அவளை உன் மனைவின்னு சொல்லுற? இப்போ பாரு, தனியா குடிச்சிட்டு இருக்க? நல்லாத்தானேடா இருந்த? என்னடா ஆச்சு உனக்கு?” என்று இயலாமையுடன் பேசியவர், அப்படியே தொய்ந்து அமர்ந்தார்.
அவர் அருகில் மண்டியிட்டு அமர்ந்த தீரன், “மா…” என்று அவர் கன்னத்தைத் தொடப்போக, அவனது கைகளைத் தட்டிவிட்டார் செல்வி.
“இங்க பாரும்மா, யாரு என்னை நம்பலனாலும் எனக்கு எந்தக் கவலையும் இல்லை. ஆனால், நீ என்னை நம்பணும். நான் தப்பு பண்ணியிருப்பேன்னு நீ நம்புறியா?” என்றவன், வலியுடன் செல்வியின் முகத்தைப் பார்க்க, அவன் கண்களில் தெரிந்த கலக்கமே அவரை உயிருடன் வதைத்தது.
“என் மகன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனால், அந்தப் பொண்ணு சொல்லுறது உண்மையா இருந்தால், நீ பண்ணுறது பெரிய பாவம் தீரா. அந்தப் பாவம் உன் வாழ்க்கையை அழிச்சிடும்.”
“ஹான்… இதுக்கு மேல இழக்கிறது என்கிட்ட ஒண்ணுமே இல்லம்மா. ஏற்கனவே என் வாழ்க்கை அழிஞ்சிடுச்சும்மா” என்று மேற்கொண்டு எதுவும் பேசாமல் மேசையில் இருந்த மதுபாட்டிலை எடுத்துக்கொண்டு வெளியே வந்தவன், ஒரு கணம் திரும்பி, “நீங்க இன்னைக்கே ஊருக்குக் கிளம்புங்க. பரமன் உங்களை அழைச்சிட்டுப் போவான்” என்றான்.
“எதுக்குடா? நான் இங்கே இருந்தால் அந்தப் பொண்ணை உன்னால எதுவும் பண்ண முடியாதுன்னு பார்க்கிறியா? உன் திட்டத்துக்கு நான் தடையா இருப்பேன்னு நினைச்சுத்தானே என்னை இங்கிருந்து போகச் சொல்லுற? இதுல இருந்தே தெரியுது, அந்தப் பொண்ணு சொல்லுறதெல்லாம் உண்மைதான் போல. உன்னை என் மகன்னு சொல்லிக்கிறதுக்கே…” என்றவரால் அதற்கு மேலும் பேச முடியாமல் போனது.
“ஏன்மா, நிறுத்திட்ட? சொல்லு… உன்னை என் மகன்னு சொல்லிக்கிறதுக்கே அசிங்கமா இருக்குன்னு சொல்லு. சொல்லும்மா!” என்றவனின் மனதில் இருந்த வலி அவன் கண்களில் பிரதிபலிக்க, அவனுடைய தாயும் கண்கலங்கி நின்றார்.
“டேய் தீரா, அம்மா அப்படி சொல்லலடா. எனக்குத் தெரியாதா என் மகனைப் பத்தி? இருந்தும் இதையெல்லாம் நீ ஏன் பண்ணுற? அந்தப் பொண்ணு பாவம்டா. அவளை அவள் புருஷன் கிட்டயே கொண்டுபோய் விட்டுடு. பெண் பாவம் பொல்லாதது தீரா. அது நம்ம தலைமுறையையே அழிச்சிடும். அவள் உனக்கு வேண்டாம்டா. அம்மா உனக்கு இவளைவிட நல்ல பொண்ணா, அழகான பொண்ணா பார்த்துக் கல்யாணம் பண்ணி வைக்கிறேன். இந்தப் பாவம் நமக்கு வேண்டாம்டா” என்று அவன் முன் வேண்டி நின்றார் செல்வி.
அவர் கூறியதையெல்லாம் கேட்டு விரக்தியாகச் சிரித்த தீரன், “பொண்ணுக்கு அலையுற பொறுக்கின்னு நினைச்சியாம்மா உன் பையனை?” என்றான்.
“டேய் தீரா, அம்மா அப்படி சொல்லலடா!”
“போதும்… என்னைப் புரிஞ்சிக்கிற இடத்தில் இப்போ நீங்களும் இல்லை. உங்களுக்குப் பதில் சொல்லுற இடத்தில் நானும் இல்லை. நான் செய்யுறதெல்லாம் உங்களுக்குத் தவறா தெரிந்தால், அது என் தப்பு இல்லம்மா” என்றவன், “பரமா!” என்று அழைக்க, விரைந்து வந்தான் அவன்.
“எங்கடா போய்த் தொலைஞ்ச? அம்மாவை ஊருக்கு அழைச்சிட்டுப் போய் விட்டுட்டு வா!”
“தீரா…” என்று செல்வி இடைமறிக்க,
“பத்திரமா போயிட்டு வாங்கம்மா. அப்பாவைக் கேட்டதா சொல்லுங்க.”
“தீரா, நீ எப்போ வருவ?”
“சீக்கிரமே வருவேன். உங்க மருமகளோட!” என்றவனின் கண்கள் அஷ்வினியின் அறையில் பதிந்திருந்தன.
“டேய் தீரா, அந்தப் பொண்ணு பாவம்டா. இதெல்லாம் வேண்டாம்டா. நமக்கு எதுக்கு இந்தத் தேவையில்லாத பிரச்சினை? ஊருல அவள் ஒருத்திதான் பொண்ணுன்னு இருக்காளா என்ன? வேண்டாம்டா தீரா!”
“உண்மைதான். ஊருல எத்தனையோ பொண்ணுங்க இருக்காங்கதான். ஆனால், எனக்குப் பொண்டாட்டின்னு அவள் ஒருத்திதான்ம்மா இருக்காள். நான் சொன்னாலும் சில விஷயம் உங்களுக்குப் புரியாது. என் உயிரே போனாலும் என் உரிமையை என்னால விட்டுக்கொடுக்க முடியாது” என்றவன், பரமனிடம், “அம்மாவை அழைச்சிட்டுப் போ” என்று கூறியபடி நேராக அஷ்வினியின் அறைக்குள் மதுபாட்டிலுடன் நுழைந்தான்.
அதைப் பார்த்து ஆழ்ந்து பெருமூச்சுவிட்ட செல்வி, தன் இயலாமையை எண்ணி நொந்தபடியே பரமனுடன் தன் கணவரின் வீட்டிற்குப் புறப்பட்டார்.
மருத்துவமனையில் கௌதம் மயக்கம் தெளிந்து கண்விழித்தான்.
“கௌதம், இப்போ எப்படிடா இருக்கு உடம்பு?” என்று கேட்டபடி ராதிகா அவன் அருகில் வந்தாள்.
“எல்லாம் உங்களாலதான், அம்மா!” என்று கோபத்தில் அவன் கர்ஜிக்க, அருகில் இருந்த தேவராஜோ, “தப்பு கௌதம்! அம்மாகிட்ட இப்படித்தான் பேசுவியா?” என்று கண்டிக்க,
கௌதமோ முகத்தைத் திருப்பிக்கொண்டு, “எல்லாரும் இங்கிருந்து வெளியே போங்க. அஷ்வினியை எப்படிக் கண்டுபிடிக்கணும்னு எனக்குத் தெரியும்” என்றவன், எழுந்துகொள்ள முயன்றான்.
அருகில் இருந்த செவிலியர் ஒருவர், “சார், எழுந்துக்காதீங்க…” என்று கூறியபடியே அவன் அருகில் வந்தாள்.
“மூவ்… டோன்ட் டச் மீ!” என்று கோபத்தில் கூறிய கௌதம், செவிலிப்பெண்ணை உருத்து விழித்தான்.
“கௌதம், நான் சொல்லுறதைக் கேளுடா. அஷ்வினி உனக்குத்தான். அப்பா எல்லா வகையிலும் அவளைத் தேட முயற்சி பண்ணிட்டுத்தான் இருக்காரு. நீ பொறுமையா இருடா. டாக்டர் உன்னை ஓய்வெடுக்கச் சொல்லியிருக்காரு.”
“சும்மா இருங்கம்மா! அவன் என் பொண்டாட்டியைத் தூக்கிட்டுப் போயிருக்கான். அதை பார்த்துட்டு சும்மா ஹாஸ்பிட்டலில் படுத்துக்கிடக்க நான் என்ன கையாளாகாதவனா? எனக்கு அவள் வேணும். எனக்காகக் கண்டிப்பா அவள் காத்துட்டு இருப்பாள்!” என்றவன், கட்டிலிலிருந்து எழுந்துகொள்ள மீண்டும் முயற்சிக்க, விரைந்து வந்த அந்தச் செவிலிப்பெண் அவனைப் பிடித்துக்கொண்டாள்.
அவளது கையைப் பிடித்து உதறித் தள்ளியவன், “என்னைத் தொடாதன்னு சொன்னேன். உனக்குப் புரியலையாடி?” என்றவன், அருகில் இருந்த பூஞ்சாடியை எடுத்து அவளை நோக்கி வீசினான். அது அவள் தலையில் பட்டு, ரத்தம் பீறிட்டு வெளிவந்தது.
அப்போது மருத்துவர் அவனைப் பரிசோதிக்க அறைக்குள் வரவும், அந்த நிகழ்வு நடக்கவும் நேரம் சரியாக இருந்தது.
அதைக் கண்ட மருத்துவர், “என்ன நடக்குது இங்க? அல்லி, என்ன ஆச்சு?” என்றவர், அந்தச் செவிலிப்பெண்ணிற்கு உதவி செய்தார்.
“என்ன இது, சுத்தக் காட்டுமிராண்டித்தனமா இருக்கு? எவ்வளவு தைரியம் இருந்தால் எங்க ஹாஸ்பிட்டல் ஸ்டாஃப் மேலேயே கை வச்சிருப்பீங்க?” என்று கேட்ட மருத்துவரைத் தடுத்த செவிலிப்பெண் அல்லி, “நானேதான், டாக்டர். கீழே விழுந்துட்டேன். இதை இப்படியே விட்டுடுங்க” என்றாள்.
அவள் வெளியே செல்லும்போது கௌதமை ஆழ்ந்து பார்க்க, அவனோ ஒரு ஏளனச் சிரிப்புடன் அவளை ஒதுக்கினான்.
மருத்துவரோ ஒன்றும் புரியாமல் விழித்தவர், பின்னர் தான் வந்த வேலையைப் பார்த்துவிட்டு, “ஒரு வாரம் கம்ப்ளீட் ரெஸ்ட்ல இருக்கணும்” என்றவர் வெளியே சென்றார்.
“ஏன் கௌதம், இந்த மாதிரியெல்லாம் நடந்துக்கிற? ஒரு வாரம் பொறுத்துக்கோடா. அஷ்வினி இருக்கிற இடம் எப்படியும் தெரிஞ்சிடும். அவள் உனக்குத்தான். அம்மா சொன்னதை நல்லா நினைவில் வச்சிக்கோ” என்றவள், அடுத்து நேராகச் சென்றது என்னவோ விருஷாலியைப் பார்க்கத்தான்.
விருஷாலியைப் பார்க்க இரவுப் பொழுதில் அந்தக் கானகத்திற்குள் நுழைந்தாள் ராதிகா.
அந்த ராட்சத முகம் கொண்ட மரத்தின் இடுக்கில் நுழைந்தவள், அன்று போலவே இன்றும் மௌனம் காத்து நின்றாள்.
அவள் வருகையை உணர்ந்து கண்விழித்த விருஷாலி, “சொல்லு ராதிகா, அவன் வந்தானா?” என்று கேட்க,
நடந்த அனைத்தையும் அவளிடம் கூறினாள் ராதிகா.
“எனக்கு ரொம்பப் பயமாயிருக்கு விஷா. அஷ்வினி இல்லாமல் கௌதம் என்ன பண்ணுவான்னு எனக்கே தெரியல! இப்போவே அவன் நடவடிக்கையெல்லாம் ரொம்ப மோசமா மாறிட்டு வருது. அவளைக் கண்டுபிடிக்கப் போறேன்னு சொல்லிக் கிளம்பப் பார்க்கிறான். தீரனால் கௌதமுக்கு ஏதாவது ஆகிடுமோன்னு எனக்குப் பயமா இருக்கு. என்ன பண்ணுறதுன்னே தெரியவில்லை.”
அதைக் கேட்ட விருஷாலியின் உதடுகள் மெலிதாக விரிந்தன.
“அஷ்வினி மறுபடியும் கௌதம் கிட்ட வருவாள். இன்னும் ஒரு வாரத்தில் அவள் இருக்கக்கூடிய இடம் உனக்குத் தானாகத் தெரிய வரும். அப்போ அவளே கௌதமைத் தேடி வருவாள். நம்பிக்கையோட போ… அஷ்வினி கௌதம் கிட்ட வந்த பிறகு, தீரனால் எதுவும் செய்ய முடியாது. அஷ்வினி தீரனைப் பிரியும் நேரம், அவன் உயிரும் உடலை விட்டு பிரியும் நிலை வரும்.”
“அப்போ தீரன் உயிருக்கு…?”
“அவன் உயிர் இனி விதியின் பிடியில். அதிலிருந்து அவன் மீள்வது இயலாத காரியமாகும்” என்று விருஷாலி கூற, நிம்மதியாக அவ்விடத்தை விட்டு விடைபெற்று வந்தாள் ராதிகா.
இங்கு முழுப் போதையில் தீரனோ, மதுபாட்டிலுடன் அஷ்வினியின் அறைக்குள் நுழைந்தான்.
இன்று ஏனோ அவன் மின்விளக்கை அணைக்க மறந்தவன், அதன் பிறகே அதனை உணர்ந்து அறைக்குள் பார்க்க, அங்கு அஷ்வினி எங்கும் இல்லாமல் இருந்தாள்.
“எல்லாம் விதி!” என்றவன், கதவைக் காலால் அடித்துச் சாத்திவிட்டு, மின்விளக்கை அணைத்தபடி மெத்தையில் அமர்ந்துகொண்டான்.
அப்போது குளியலறையிலிருந்து வெளியே வந்த அஷ்வினி, அறையின் இருளை உணர்ந்து விழிக்கும் முன், அவனது கைவளைவில் அகப்பட்டிருந்தாள்.
“என்னை விடு!” என்றவள், அவனிடமிருந்து விடுபட முயல, அது முடியாமல் போனது.
அவனிடமிருந்து வெளிப்பட்ட மதுவின் வாசனை அவளை முகம் சுழிக்க வைத்தது.
“என்னை விடு! வாந்தி வர மாதிரி இருக்கு!” என்றவளால், அவனிடமிருந்து வெளிவரும் மதுவின் வாடையைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் போனது.
“ஐயோ, நான் தான் எதுவுமே பண்ணலையேடி! அதுக்குள்ள எப்படி வாந்தி?” என்று கேலியாகக் கேட்ட தீரன், “ரொம்ப ஆசைப்படுற போல. அப்போ வாந்தி வர வச்சிட்ட வேண்டியதுதான்!” என்றவன், அவளை அப்படியே கட்டிலில் தள்ளி, அவள் மீது படர்ந்தான்.
காரோ சட்டென வேகத்தடையில் ஏறி இறங்க, அந்த அதிர்வில், “யோவ் மாமா, வண்டியை எங்கடா கொண்டுபோய் முட்டுன?” என்று தலையைத் தடவியபடி தூக்கத்திலிருந்து கண்விழித்தாள் மோகினி.
“ஏய், என்னடி கொஞ்சம்கூட மரியாதை இல்லாமல் பேசுற?” என்று தேவகி அவளைச் சத்தம் போட, சலிப்பாகத் தலையைத் திருப்பிக்கொண்ட மோகினி,
“செம்மையா ஒரு ஆன்டி ஹீரோ கனவில் வந்தான். இப்படி வண்டியை எங்கேயோ கொண்டுபோய் முட்டி என்னை எழுப்பிவிட்டு, என் கற்பனையில் கனலை அள்ளிப் போட்டீங்களே! இனி அவன் கதையை நான் எப்படி தெரிஞ்சுக்கிறது?” என்றாள்.
“அப்படி என்ன கனவுடி?” என்று தேவகி கேட்க,
“அது, ஒருத்தன் அக்கா, செம்ம ஸ்மார்ட்டா இருந்தான். கல்யாணம் நடக்கப்போற நேரம் பொண்ணைத் தூக்கிட்டான். அப்புறம் வலுக்கட்டாயமா அவள் கழுத்துல தாலியும் கட்டிட்டான். ஆனால், அடுத்து என்ன நடக்கும்னு ஆர்வமா பார்த்த நேரம், நீங்க எழுப்பிவிட்டீங்க. ஆமா, அப்புறம் என்னதான் நடக்கும்?”
“வேற என்ன நடக்கும்? அஜால் குஜால் தான் நடக்கும்!” என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் வண்டியை ஓட்டியபடியே கூறிய கார்த்திக், தேவகியின் முகத்தைப் பார்க்க,
அவளோ அவனை அனல் தெறிக்கப் பார்த்தவள், மோகினியின் தலையில் ஓங்கி கொட்டியபடி, “வயசுக்குத் தகுந்த மாதிரியா பேசுற?” என்று கேட்டாள்.
“நான் என்ன சொன்னேன்? கார்த்திக் தானே சொன்னான்! அவனை அடி. அதை விட்டுட்டு ஒரு புள்ளைப்பூச்சிகிட்ட உன் வீரத்தைக் காட்டுற. போங்க, நான் மறுபடியும் தூங்கி என் ஹீரோவுடைய வாழ்க்கை என்ன ஆச்சுன்னு பார்க்கிறேன்!” என்றவள், கோபமாக மீண்டும் கண்களை மூடித் தூங்கத் தொடங்கினாள்.
