வேனலின் வெண்பூவே
அத்தியாயம் 30.3
மூன்று நாட்கள் கழித்து மனோவுடன் முகி தன்னுடைய வீட்டுக்குத் திரும்பி இருந்தாள். புயலில் மாட்டியதில் சிறுபயம்தான். ஆனால் புயல் நெய்தல் நிழல் இருக்கும் நகரில் கரையைக் கடக்காமல் இறுதி நேரத்தில் திசையை மாற்றி வலுவிழந்து போய்க் கரையைக் கடந்திருக்க இரண்டு நாட்கள் மழை மட்டும் விட்டு விட்டுப் பெய்து கொண்டிருந்தது. குளிரும், சாரளத்தை மூடியுள்ள இரும்பு பாதுகாப்பு மீது மோதும் காற்றும், புயல் இருக்கும் அறிகுறியைச் சொல்லிக் கொண்டே இருந்தது. மின்சாரமும் துண்டிக்கப்பட முகிக்கும் பயம்தான். ஆதி அவளைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டான்.
அறையில் அவசர காலத்திற்கு மின்கலத்தில் இயங்கும் விளக்குகள் தரப்பட்டிருந்தது. மக்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடி இருந்தனர். புயல் இந்தப் பக்கம் வரவில்லை, மழையும் காற்றும் மட்டும்தான் இருக்கும் என்ற அறிவிப்பு வந்தவுடன் பலரின் பயம் நீங்கி அறைக்குச் சென்று நிம்மதியாக ஓய்வெடுத்தனர்.
மழை நின்றுவிட மக்கள் கிளம்பலாமென அறிவிப்பு வந்து விட்டது. ஆதி முகியை ஊருக்கு அழைத்துக்கொண்டிருந்தான்.
“ஒரு கன்டிஷன் ஆதி. அங்க எனக்கு இருக்கப் பிடிக்கலைன்னா நான் வந்துருவேன். எனக்கு என்னோட குழந்தை ஒரு நல்ல என்விரான்மெண்ட்டில் வளர்றது முக்கியம்.”
“உனக்கு எந்தக் குறையும் வராமல் நான் பார்த்துக்கிறேன்.” என அவன் உறுதி கொடுத்தான்.
“பார்க்கலாம். இதை நீங்கக் காப்பாத்த ட்ரை பண்ணுங்க.” என்றவள் அவனிடம் அதிகம் பேசவில்லை. ஆதிதான் அவளிடம் அதிகம் பேசிக் கொண்டிருக்கிறான்.
கிளம்பும் நேரம் வந்ததும் முகி காமினியைப் பார்த்து விடைபெறச் சென்றிருந்தாள். காமினியின் குடும்பமே அந்த இரண்டு நாட்களாகக் கண்விழித்து பயணிகளை நன்றாகக் கவனித்துக் கொண்டனர். அதன் அலுப்பில் விடுதி அறையில் ஓய்வில் இருந்தாள் காமினி. முகி அதனால் அறைக்கே சென்று விடைபெற, காமினி அவளைத் தோள் அணைத்து விடைகொடுக்க இருவரின் விழிகளிலும் நீர் துளிர்த்திருந்தது. முன்பின் யாரும் தெரியாத ஊரில் சோகத்தில் முகி இருக்கும்போது தாய் மடியாய் தாங்கிக் கொண்டவள் காமினி அல்லவா!
தனக்கும் ருத்ராவுக்கும் திருமணம் என்று கூற முகிக்கு அவ்வளவு மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியில் மீண்டும் அறைக்கு வந்திருக்க ஆதி கதவைத் திறக்கும் போதே இலுப்பை மலர்களை முகத்துக்கு முன் வைத்தபடி நின்றிருந்தான்.
திருமணத்தின்போது மரத்தினடியில் விழுந்து கிடந்த இலுப்பை மலர்களை எடுத்துச் சுவாசித்துக் கொண்டிருந்தாள் அவள். என்னவோ அந்தப் பூ அவளுக்குப் பிடித்து விட்டிருந்தது.
“மழையில் நிறைய பூக்கொட்டி போயிருச்சு முகி. இதுதான் கிடைச்சது.” என அவளுக்குக் கொடுக்க முகி பேசாமல் வாங்கிக் கொண்டாள்.
***
இருவரும் வீட்டிற்குள் நுழைந்த போதே, மாதவியும், அமிர்தாவும் கால்மேல் கால் போட்டபடி தொலைக்காட்சியைப் பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.
முகிக்கு அந்த வீட்டுக்குள் நுழையும்போது உடலில் நடுக்கம் ஏற்பட்டது. அவளின் கையைப் பிடித்துக் கொண்டு ஆதி நுழைய, முகியை எதிர்பாராத மாதவியும், அமிர்தாவும் அதிர்ந்தனர்.
“ஆதி, எதுக்கு இந்த ஓடுகாலி திரும்ப இங்க வரா? எவன் கூட இத்தனை நாள் இருந்தாளோ?” என மாதவி வார்த்தைகளைக் கொட்ட முகியின் முகம் சுருங்கியது.
“அமிர்தா, உன் வீட்டுக்கு நீ கிளம்பிப் போ. அம்மா, உங்க பேரில் அப்பா வாங்குன வீட்டுக்கு இன்னும் கால் மணி நேரத்தில் கிளம்பி இருக்கணும். உங்க திங்க்ஸ் எல்லாம் அங்க வைக்கப் பேக்கர்ஸ் மூவர்ஸ் வந்துருவாங்க.”
“ஆதி, எதுக்கு அம்மா அங்க போகணும்? அம்மாவைப் பார்த்துக்கிறது உன்னோட கடமைடா. அம்மா உடம்பு சரி இல்லாமல் தனியா கஷ்டப்படுவாங்க. எல்லாம் இவ சொல்லிக் குடுத்துப் பண்றியா? ரொம்ப நல்லா இருக்குடா?”
“என் பொண்டாட்டி சொல்லிக் குடுக்க வேண்டியது இல்லை. அவ நினைச்சிருந்தால் நீங்க ரெண்டு பேரும் குடும்ப வன்முறை அப்புறம் அவளுக்கு டிரக்ஸ் கொடுத்த வழக்கில் ஜெயிலுக்குப் போயிருக்கலாம். அதோட என்னோட காலண்டெரில் தாகினியை வச்சு மேனிபுலேட் செஞ்சதுக்கும் கம்பெனி கேஸ் குடுத்தால் அவ்வளவுதான் தெரியுமா? நான்தான் சுக்ரீவ்கிட்ட வேணாம்னு சொல்லி இருக்கேன். அவனுக்குக் கம்பெனின்னு வந்துட்டா வேற எதுவும் முக்கியமில்லை தெரியுமா?”
“ஆதி, இப்படி பொண்டாட்டியோட சேர்ந்துட்டு அம்மாவை வீட்டை விட்டு அனுப்பலாமா? ரொம்ப தப்பு. இந்தப் பாவம் உன்னைச் சும்மா விடாது. நீ ஒரு நல்ல மகனே இல்லை. கட்டுனவளுக்காக இப்படி உன்னை வளர்த்த அம்மாவைக் கைவிடலாமா? உங்கிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கலை. உன் பொண்டாட்டி முந்தானையை பிடிச்சிட்டு… அனாதைகளுக்கு எங்க தெரியும் குடும்பத்தோட அருமை? குலம் கோத்திரம் தெரியாதவளை இதுக்குத்தான் வீட்டில் விடக் கூடாது.” அமிர்தா அழுதபடியே ஆதியிடம் பேச அவர்களின் முதலைக் கண்ணீரைப் பார்த்தவனுக்கு வெறுத்துப் போனது.
“அப்புறம் இன்னொரு முறை என் பொண்டாட்டியைப் பத்தி தப்பா பேசுற வேலை வச்சுக்கக் கூடாது. அவளுக்கு நான் இருக்கேன். நல்ல குலத்தில் பொறந்த நீதான் என் பொண்டாட்டிக்குக் குழந்தை பொறக்கக் கூடாதுன்னு மாத்திரை குடுத்திருக்க. இது கிரிமினல் அஃபென்ஸ் தெரியுமா? இப்ப அவ ஓகே சொன்னாலும் இரண்டு பேர் மேலேயும் கேஸ் குடுத்துருவேன். அப்புறம் இது என் சம்பாத்தியத்தில் நான் வாங்குன வீடு. இதில் உங்க இரண்டு பேருக்கும் இடமில்லை. வெளிய போ. மீறி நீ ஏதாவது ட்ரை பண்ணினால் நான் மாமாகிட்ட சொல்லிடுவேன். அப்புறம் அம்மா உங்களோட கிரெடிட் கார்டு கட் பண்றேன். இனி அப்பா உங்களுக்கு அலாட் பண்ண அளவு பணம் சரியாக வரும். அதை வச்சு வாழ்ந்துக்குங்க. இல்லைன்னா அதையும் கட் பண்ண எனக்குத் தெரியும். சீக்கிரம் கிளம்புங்க.” என அவர்களிடம் மேலும் வாதிட விரும்பாமல் ஆதி முகியை இழுத்துச் செல்ல, அறைக்குள் வந்தவன் தலையைக் கோதிக் கொண்டான். அவனுக்குமே தான் பேசிய அனைத்துமே வலித்தது. மனதில் அவர்கள்மீது இருக்கும் பாசம் இன்னும் மறையவில்லை. ஆனால் தன் மனைவியின் நிம்மதியும் பாதுகாப்பும் மிகவும் முக்கியம். தன்னுடைய வாழ்க்கையை அன்னைக்காகவும், சகோதரிக்காகவும் இழக்கத் தயாராக இல்லை.
ஆதியின் விழிகளில் கண்ணீர் சுரந்திருந்தது. அவனின் செய்கைகளைப் பார்த்த முகி கணவனின் தோளைத் தொட்டு திருப்பியவுடன் முகியை அணைத்துக் கொண்டான் மனோ.
“மன்னிச்சிரு முகி. நிஜமா இவங்க இவ்வளவு மோசம்னு எனக்குத் தெரியாது. அம்மா அக்கா மேல இருந்த பாசம். ஆனால் அது எல்லாம் நடிப்புன்னு அவங்க பேசினதிலிருந்து தெரிஞ்சுது. தாகினிகிட்ட ஆபிஸ் நம்பரிலிருந்து பேசினது ரெக்கார்ட் ஆகி இருக்கு. உன்னைப் பத்தி அவங்க தப்பாப் பேசறதும், நம்மோட மீட்டிங்கை எல்லாம் டெலிட் பண்ணி இருக்காங்க. நிஜமாக அவங்க உங்கிட்ட நல்லா நடந்துக்கிறாங்கன்னு நம்புனேன். ஆனால் அவங்களுக்கு என்மேல் பாசமே இல்லை. ஜஸ்ட் பணம் சம்பாதிக்கற மனுஷன். அப்பா இதுக்குத்தான் சொத்தை எல்லாம் என்பேரில் எழுதிட்டுப் போனாரோ என்னவோ எனக்குத் தெரியலை. அம்மாவும், அக்காவும் நிறைய பணம் மத்த பிராப்பர்டீஸில் இருந்து எடுத்து இருக்காங்க. இன்னிக்குத்தான் சுக்ரீவ் அனுப்புன ரிப்போர்ட்ஸ் வந்துச்சு. நான் உன்னை நல்லாப் பார்த்திருக்கணும். தப்புப் பண்ணிட்டேன்.”
ஆதியின் முதுகை ஆறுதலாகத் தட்டிக் கொடுத்தவள், “இட்ஸ் ஓகே ஆதி. அவங்க என்னை எவ்வளவு வேலை வாங்கி இருந்தாலும் செஞ்சிருப்பேன். கான்ட்ராசெப்டிவ் குடுத்ததைக் கண்டுபிடிச்சதும் அதை எடுக்குறதை விட்டுட்டேன். அப்பவும் நீதான் எனக்கு முக்கியம்னு நினைச்சேன். தாகினி கூட உன்னைப் பார்த்ததை என்னால் தாங்கிக்க முடியலை. நான் அவ்வளவு நாள் எல்லாத்தையும் பொறுத்துட்டு இருந்ததே வேஸ்ட்டுன்னு அந்த நொடி தோணுச்சு. அதான் கிளம்பிட்டேன்.”
‘மன்னிச்சிரு முகி. என்னைச் சுத்தி நடக்கிறது தெரியாமல் இருந்துட்டேன். நீ என்னை விட்டுப் போகலைன்னாலும் எனக்கு எதுவும் தெரியாமல் வாழ்ந்திட்டு இருந்திருப்பேன். நீ என்னை விட்டுப் போனதும் பைத்தியம் பிடிச்ச மாதிரி இருந்துச்சு. நைட் ரோடு ரோடா தேடுனேன். டைவர்ஸ் பேப்பர் பார்த்ததும் மொத்தமாக உடைஞ்சிட்டேன். நீ இல்லாத வாழ்க்கையை என்னால் நினைச்சே பார்க்க முடியலை. இந்த ஒரு சான்ஸ் குடு.” என இறுதியில் மனைவியின் காலில் மண்டியிட்டு அவள் வயிற்றில் முகத்தைப் புதைத்துக் கொண்டான்.
முகி வீட்டுக்குத் திரும்பி வரும் போதெல்லாம் அவளுக்குப் பெரிதாக எதிர்பார்ப்பு ஒன்றுமில்லை. ஆதி அன்னையை, அக்காவை மீறி எதுவும் செய்யமாட்டான் என்று நினைத்திருக்க இருவரையும் இப்படி வெளியில் அனுப்புவானென எதிர்பார்க்கவில்லை.
கீழே மகளும், தாயும் பேசிக் கொள்வது கேட்டது.
“வா, அமிர்தா போலாம். இருக்குறதும் போயிடக் கூடாது. ஆதி அப்படியே உங்க அப்பனை மாதிரி. கேஸ் குடுத்தால் கஷ்டம்.” என மகளை அழைத்துக்கொண்டிருந்தார். விட்டால் பணம் கிடைக்காமல் போய்விடும் என்ற நிலையில் இருவரும் மேலும் எதுவும் பேசாமல் கிளம்பிப் போயினர்.
அவர்களை அவ்வப்போது ஏதாவது விழாவில் சந்திக்க நேரிடலாம். என்ன வேண்டுமானாலும் அவர்கள் பேசிக் கொள்ளட்டுமே, அவளுக்குத் துணையாக ஆதி இருப்பான் என்ற நம்பிக்கைத் துளிர்த்திருந்தது. அவனுமே தன்னைப் போல் பாசம் என்ற பெயரில் மோசம் செய்யப்பட்டவன் என்பதும் தெளிவாகப் புரிந்திருந்தது.
ஆதியின் கைகளை விடுவித்து அவனைப் போலவே அமர்ந்து அவனைக் கட்டிக் கொண்டாள் முகி.
“இன்னொன்னு சொல்லட்டுமா ஆதி? உங்க அம்மா ஹெல்த்துக்கு எதுவும் இல்லை. அவங்க மெடிக்கல் ரிப்போர்ட்ஸ் எல்லாமே ஃபைன். நான் பார்த்திருக்கேன்.”
“எத்தனை பொய் சொல்லி இருக்காங்கன்னு தெரியலை முகி.”
“பார்த்துக்கலாம் ஆதி.”
“உனக்குக் கேர் டேக்கர் ஒருத்தங்களை ஏற்பாடு பண்ணி இருக்கேன். அத்தோட வீட்டு வேலைக்கும் ஆள் வந்துருவாங்க. அவங்க நாளையிலிருந்து வந்துருவாங்க. நீ எப்ப வேணாலும் ஆபிஸுக்கு வர முடியும். என்பேரில் இருக்குற கம்பெனி ஷேர் பாதி உன்னோட பேருக்கு மாத்திட்டேன். உன்பேரில் ஒரு ஃபார்ம் ஹவுஸ் வாங்கி இருக்கேன். இந்த வீட்டையும் நம்மளோட பேரில் மாத்த ஏற்பாடு செய்திருக்கேன். அப்புறம் நீ அங்க பார்த்துட்டு இருந்த வேலை அதை என்ன செய்யறது?”
“அது கொஞ்ச நாளில் முடிஞ்சிடும். போய் முடிச்சிட்டு வந்துருவேன்.”
“நானும் கூட வருவேன்.”
“உங்க வொர்க் என்ன செய்யறது?”
“அங்க இருந்தே கோஆர்டினேட் செய்ய வேண்டியதுதான். இப்ப நீ ரெஸ்ட் எடு.” என மனைவியின் கையைப் பிடித்தவன் மெத்தையில் அமர்ந்து அவள் தோள் சாய்ந்து கொண்டான்.
*****
