வேனலின் வெண்பூவே
அத்தியாயம் 30.4
மூன்று மாதங்கள் கழித்து, ருத்ரசேனா காமினியின் திருமணத்திற்கு வந்து சேர்ந்திருந்தனர் மனோமுகி தம்பதியினர். அவர்களது விடுதியிலேயே திருமணம் நடக்க, அங்கேயே அறையில் தங்கி இருந்தனர்
மனோமுகி நீதிமன்றத்தில் இணைந்து வாழ முடிவெடுத்திருப்பதாகக் கூற நீதிமன்றம் விவாகரத்தை ரத்து செய்துவிட்டிருந்தது.
சிவப்பு நிற சில்க் காட்டன் புடவையில் முகமெல்லாம் பூரித்து, வயிறு பெரிதாகி கொஞ்சம் எடை போட்டிருந்தாள். அவளின் புடவை மடிப்பு நிற்க உதவிக் கொண்டிருந்தான் அவன். மனோ மனைவியைத் தரையில் விடாமல் அதற்குப் பின் தாங்கினான் என்பதுதான் உண்மை. இருவருக்கும் இருந்த பிணக்குகள் மறைந்து விட்டிருக்க, அமைதியாக மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்திருந்தாள் முகி.
“ரொம்ப அழகா இருக்க முகி! நீங்களும் அம்மா மாதிரியே பிறக்கணும் பேபி.” என ஆதி புடவை மடிப்பைப் பிடித்துவிட்டு முகியின் வயிற்றில் காதை வைத்துத் தன் குழந்தையுடன் பேச ஆரம்பித்தான்.
அவனின் பேச்சை ரசித்தவள் திருமணத்திற்குத் தாமதமாகிவிட்டது என அவனை முடுக்க அவளை மெல்ல அழைத்துக் கொண்டு சென்றான் மனோ.
நெய்தல் நிழலின் தோட்டத்தில் அரண்மனையில் காணப்படும் தங்க நிறத் தூண்கள் கொண்ட பந்தலில் சிவப்பு ரோஜாக்கள் இதய வடியில் பின்புலத்தில் ஒட்டப்பட்டிருக்க, சுற்றிலும் வெண்ணிற மலர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
மேடையின் கூரையில் சம்பங்கி மலர்ச் சரத்தில் தாமரை மலர் முனையில் தொங்க அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மணமேடையில் பட்டு வேட்டி சட்டையில் ருத்ரன் அமர்ந்திருக்க, தங்கப் பல்லக்கில் தனது மகளை அழைத்து வந்தார் சிவபொன்னம்பலம். சிவகார்த்திக்கும் ஒரு கைப்பிடித்திருந்தான்.
பல்லக்கின் திரையை நீக்கி, சிவப்பும் தங்க சரிகையும் நிறைந்த பட்டுப் புடவையில் சர்வ அலங்காரத்துடன் தாரகையாய் இறங்கினாள் சிவகாமினி. அவளைக் கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் ருத்ரா. மணமக்கள் இருவரையும் மன நிறைவுடன் பார்த்தபடி நின்றிருந்தார் அபிதா.
விடுதியின் பணியாளர்களும் கலந்து கொண்டிருக்க, அதில் கன்யாவும் இருந்தாள். சிவகாமினியும் கன்யாவிடம் முன்பு போல் பேச ஆரம்பித்திருக்க அவளுக்கு அதீத மகிழ்ச்சி. கன்யாவின் அம்மா வீட்டில் ஏதாவது சிறப்பாகச் செய்தால் சகோதர, சகோதரிகள் இருவருக்கும் கொண்டு வந்து கொடுக்கும் அளவு நட்பு மீண்டும் வளர்ந்திருந்தது. கார்த்திக்கும் காதலென்ற பேச்சை மீண்டும் எடுக்கவில்லை. நட்பு மட்டுமே பாராட்டினான். அதைக் காலத்தின் கையில் விட்டுவிட்டான்.
சடங்குகள் முடிய ருத்ரன் காமினியின் திருமணம் நடந்தேறியது. அங்கிருப்பவர்கள் அனைவரின் முகத்திலும் புன்னகை பூத்திருந்தது. இருவருமே விடுதி விவகாரங்களில் இன்னும் அவ்வப்போது கருத்து வேறுபாடுகளுடன் வாதிட்டுக் கொண்டிருந்தனர். பேசிச் சரி செய்தும் கொள்வர்.
முகி மனோ தம்பதியினர் மணமக்களை வாழ்த்தச் சிவகாமினி அகமுக மகிழ்வுடன் முகியைத் தோளணைத்துக் கொண்டாள்.
“ஹேப்பி மேரீட் லைட்!”
“தேங்க்ஸ் அக்கா.”
“கொஞ்ச நேரத்தில் கிளம்பிடுவேன்மா. கண்டிப்பா வீட்டுக்கு விருந்துக்கு வந்துரு. ருத்ரா வந்துருங்க. காமினியை நல்லாப் பார்த்துக்கோங்க.”
அவனும், “கண்டிப்பாக.” என உறுதியளித்தான்.
திருமணம் முடிந்ததும் தம்பதிகள் வெளிநாட்டுக்குப் பறந்துவிட்டனர். வாழ்க்கை இயல்பாகச் செல்ல ஆரம்பித்தது.
***
சில மாதங்கள் கழித்து அழகிய ஆண் குழந்தையை ஈன்றெடுத்தாள் பத்மமுகி. ஆதி மனோகரனை கையில் பிடிக்க முடியவில்லை. மதியம் வலி வந்து மருத்துவமனையில் அனுமதித்து இருக்க, குழந்தை அன்னையை பாடுபடுத்தி இரவு நேரம் பிறந்திருந்தான். அதுவரை பிரவச வார்டினை நடந்தே தேய்த்துவிட்டான் ஆதி. அவனுடன் சுக்ரீவும் இருந்தான். மாதவிக்கும், அமிர்தாவுக்கு விஷயம் தெரிவிக்கப்பட்டாலும் அவர்கள் வரவில்லை. மாதவி வீட்டை விட்டுச் சென்றபிறகு அதிகம் அவனைத் தொடர்பு கொள்ளவில்லை. அப்போதுதான் அவனுக்கும் தன் அன்னையின் குணம் புரிய ஆரம்பித்தது.
இன்னும் சிலரிடம் மருமகளைப் பற்றித் தவறாகப் பேசிக்கொண்டிருந்தார். பலருக்கும் மாதவியைப் பற்றித் தெரியும் என்பதால் அதைக் கண்டுகொள்ளவில்லை.
அமிர்தாவின் குழந்தைகளிடமும் மற்றும் மாமாவிடமும் ஆதி இன்னும் பேசிக்கொண்டிருந்தான். மாதவி பேசவில்லை என்றாலும் அவரைப் பற்றிய தகவல்களும் அவனுக்கும் தெரியும்.
***
இரவு நேரம் நட்சத்திரங்களைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான் ருத்ரா. அப்போது காமினியின் கைப்பேசிக்கு செய்தி வர அதை எடுத்துப் பார்த்தவன் தன் மனைவியை அழைத்தான்.
“ஆன்ங்கர் போட்டுட்டு வா சிவகாமி.”
காமினியின் சொகுசுப் படகில் நச்சென்று நங்கூரத்தை கடல் நீருக்குள் போட்டவள், “உன்னை இந்தப் பேரு சொல்லிக் கூப்பிட வேண்டாம்னு எத்தனை டைம் சொல்றது?” எனப் புசுபுசுவென மூச்சு விட்டபடி அவன் எதிரில் நின்றாள்.
தன் மனைவியை வம்பிழுத்துவிட்ட திருப்தியில் புன்னகைத்த ருத்ரா, அவளை இழுத்துப் பின்பக்கமாக அணைத்துக் கழுத்தில் முகத்தைப் பதிக்க தென்றல் முகத்தில் மோதியது. அவளுடைய கைகளையும் பிடித்துப் பக்கவாட்டில் நீட்டினான். ஓய்வுக்காக இருவரும் கடலுக்குள் வந்திருந்தனர். கடல் அலையில் மெல்ல தள்ளாடிக் கொண்டிருந்தது படகு.
“நாம பெரிய ஜாக் ரோஸ். கையை எடு ருத்ரா.”
“அவங்க சேராம போன ஜோடிகள். கடலுக்குள் வந்துட்டு அப்படிப் பேசி வைக்காத.” என அவள் காதைக் கடித்து வைத்தான்.
“உன்னோட முகி அக்காவுக்குப் பேபி பாயாம்.”
“அப்படியா? நாளைக்கே நான் கிளம்பிப் போறேன். நீயும் வரியா? கார்த்திக்கைக் கூட்டிட்டுப் போகணும்.”
அவள் தலையில் கொட்டியவன், “அதென்ன நீ போற? நாம போகலாம்னு சொல்லு. நமக்கு இப்ப கல்யாணம் ஆகிடுச்சு.” என்றான்.
“அதை அப்பப்ப ஞாபகப்படுத்துடா. இன்னும் பழையபடி ஆர்க்யூமென்ட்டிலேயே போயிட்டு இருக்கு வாழ்க்கை.”
“ஓ! ஹஸ்பண்டா நடந்துகிட்டா போச்சு.” என மனைவியைத் தூக்கியவன் பார்வையில் இருந்த செய்தியில் பெண்ணவள் தடுமாற அவன் தோளில் முகத்தைப் புதைத்துக் கொண்டான்.
அவள் வெட்கம் நீக்கி, அவளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி தானும் மகிழ்ச்சிக் கடலில் முத்தெடுத்தவன் இறுதியில் அவள் தலைகோதியபடி இருந்தான்.
“ருத்ரா, இன்னும் நீ எதுக்கு என்னை அடிக்கடி கிஸ் பண்ணுனேன்னு சொல்லவே இல்லை. நேரடியா சொல்லி இருக்கலாமே?”
“சொன்னா நீ உடனே ஏத்துட்டுருப்பியா? அதான் முதலில் உன்னைச் சீண்டிப் பார்த்தேன். நீ எப்பவும் போல் என்மேல் இயல்பாக அன்பைக் காமிச்சிருப்ப. அதை மாத்தறதுக்குத்தான் கிஸ் பண்ணேன்.”
புன்னகைத்தவள், “ஐயாம் ஸோ ஹேப்பி ருத்ரா! நான் நம்ம வாழ்க்கை இவ்ளோ சந்தோஷமாக இருக்கும்னு நினைக்கலை. ஐ லவ் யூ.” என்றாள்.
மனைவியின் நெற்றியில் முத்தமிட்டவன், “ஐ லவ் யூ டூ சிவகாமி.” எனக் கூற சிவகாமினி அவன் கன்னத்தைப் பிடித்துக் கடித்து வைத்தாள்.
***
அடுத்த நாள் சிவகார்த்திக்குடன் தம்பதிகள் இருவரும் முகி இருக்கும் மருத்துவமனைக்குச் சென்றிருந்தனர். முகி அமர்ந்திருக்க மனோ அவளுக்கு உணவை ஊட்டிக்கொண்டிருந்தான். தென்றலாய் இருக்க வேண்டிய காதல் இடையில் ஆதியின் உறவுகளால் அனலாய் மாறி வெண்பூ போன்ற மனதுடையவளை வாட்டி இருக்க, ஆதி மீண்டும் தென்றலாய் மாறி அவளை அன்பில் மூழ்கடித்திருந்தான்.
தொட்டிலில் படுத்திருந்த குழந்தை விழித்திருக்க காமினி கையில் எடுத்துக் கொண்டாள். காமினிக்கும் ஆதியின் அன்பைப் பார்த்துத் திருப்தியே. குழந்தைப் பேறை பெண்கள் மட்டுமே சமாளிக்க வேண்டும் என்று நினைக்கும் ஆண்கள் மத்தியில் ஆதி மூன்று மாதங்கள் விடுப்பு எடுத்திருப்பதை அறிந்தபோது அவளுக்கும் மகிழ்ச்சியே. வீட்டில் இருந்தும், அவ்வப்போது அலுவலகத்திற்கும் சென்று வேலை பார்த்துக் கொள்ள முடிவெடுத்திருந்தான்.
“செல்லக்குட்டி இங்க பாருங்க. அத்தை வந்திருக்கேன். அம்முகுட்டி.” என அவன் கழுத்தில் ஒரு தங்கச் செயினைப் போட்டுவிட்டாள் காமினி. என்ன புரிந்ததோ குழந்தை பொக்கை வாயைக் காட்டிச் சிரித்தது.
ருத்ராவும், கார்த்திக்கும் மனோவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். குழந்தையை எப்படிப் பிடிக்க வேண்டும் எனக் காமினி சொல்லிக் கொடுக்க ருத்ராவும் பிடித்துக் கொஞ்சிவிட்டு சிவகார்த்திக்கிடம் தர, குழந்தை அவன் சட்டையை நனைத்துவிட்டான். சிவகார்த்திக் பாவமாய் விழிக்க, “அப்படி பண்ணுடா என் செல்லக்குட்டி. வெரி குட்டா செல்லம்.” எனக் காமினி குழந்தையைப் பாராட்ட அறையில் இருந்த ஐவரின் முகத்திலும் புன்னகை மலர்ந்தது. குழந்தையின் முகத்திலும் சிரிப்பு அழகாக ஒளிர்ந்தது.
முற்றும்.
