அத்தியாயம் -5

வேனலின் வெண்பூவே!

 

அத்தியாயம் 5

 

“சமையல் ஒரு கலைன்னு சொல்லுவாங்க. நிச்சயமாக! ஆனால் சமையல் ஒரு அறிவியல், வேதியியல், இயற்பியல், உயிரியல் இப்படி அனைத்தும் சேர்ந்தது. எதைச் சமைக்கலாம், சமைக்கக் கூடாதுன்னு முடிவு செய்யறது அறிவியல், சமைக்கிற ஒவ்வொரு பொருளுக்கு ஒரு வேதிப்பண்பு இருக்கு. சமைக்கிறதுக்கு வெப்பம், இயக்கம் போன்றவை அவசியம். ஒரு தாவரமோ இல்லை விலங்கோ சமைக்கப் பயன்படுத்தப்படும். ஊட்டச்சத்துகளோட சமைக்கிறது மருத்துவம். அதுதான் உணவே மருந்துன்னு சொல்றாங்க. சரியான உணவுப் பழக்கம் இருந்தால் சரியான வாழ்க்கை இருக்கும். நான் இவ்வளவு நேசிக்கற சமையல்ல எனக்கு யாரும் குறுக்கிடறது பிடிக்காது.
        -ருத்ரசேனா.

தன் வீட்டு பலகணியில் நின்று கடல் அன்னையின் இதமான தழுவலான கடல்காற்றை அனுபவித்துக் கொண்டிருந்தான் ருத்ரன். மனதுக்குள் சிவகாமினியின் திட்டத்திற்கு ஒப்புக் கொண்டது ஓடிக் கொண்டிருந்தது. தன்னை ஒரு வழியாக ஒப்புக் கொள்ள வைத்து விட்டாள் சிவகாமினி.

சிவகாமினி படிப்பில் கெட்டி, அதோடு சுட்டித் தனமும் நிறைந்தவள். ருத்ரன் சாராசரி படிப்பு, அதிக விளையாட்டு, அத்தோடு அதீத அமைதியைக் கொண்டவன். சமையல் என்பது சிறு வயதில் இருந்தே கற்றுக் கொண்டவன். சிறு வயதினருக்கான சமையல் போட்டியில் பலவற்றில் வென்றவன், சமையலை முடித்தது பாரீஸ் நகரமாகும்.

அங்கும் பல விருதுகள் அவன் கைவசம் உண்டு. இந்திய சமையலோடு, ஐரோப்பா சமையலையும் சேர்த்து புது விதமாகச் சமைத்து பரிசுகளை வென்றிருக்கிறான்.

அவன் என்ன யோசிக்கிறான் என்று தெரியாத அமைதி அவனுடைய மிகப்பெரிய பலங்களுள் ஒன்று. அவனுக்கு நேர்மாறாக முகத்தில் உணர்வுகளை வெளிப்படுத்துபவள் சிவகாமினி. இப்படி இரு துருவங்களான இருவரும் பள்ளி படிக்கும்போது எங்கும் மோதிக் கொள்ளவில்லை. ஆனால் ஒரே இடத்தில் வேலை செய்யும்போது மோதல் என்பது இயல்பே! அதுவும் நெய்தல் நிழலின் வருங்கால நிர்வாகிகள் மூவருள் இவனும் அடக்கம் என்பதால் இது சாத்தியமே!
நெய்தல் நிழலின் நாற்பது சதவீத பங்குகள் அவனுக்குச் சொந்தம். நேரடி நிர்வாகத்தை விட்டு அவன் மனதுக்குப் பிடித்த சமையலைக் கையில் எடுத்து விட்டான். சிவகாமினியும், சிவகார்த்திக்கும் நிர்வாகத்தில் இருந்தனர். ஆனாலும் ருத்ராவிடம் கலக்காமல், அவன் சம்மதம் கூறாமல் விடுதியில் எந்த முக்கிய முடிவும் தாளில் கூட அச்சிடப்பட்டு விடாது என்பதுதான் உண்மை.

சிவகார்த்திக் ருத்ராவின் முடிவுகளுக்குப் பெரும்பாலான நேரத்தில் ஒத்துப் போய்விடுவான். அவர்களின் தந்தையும் அவ்வாறே. ஆனால் சிவகாமினி என்ற அனாமலி அப்படி இல்லை. அவள் சிந்தனையும் சற்றே வித்தியாசம்தான். நெய்தல் நிழலின் உள் அலங்கார அமைப்பு அத்தனையும் கொண்டு வந்தது அவளின் திட்டமே. அது வாடிக்கையாளர்களை மிகவும் கவர்ந்திழுத்தது. விடுதியில் ஒரு சிறு பிரச்சினை என்றாலும் உடனே அதைச் சரி செய்து விட்டுத்தான் அவள் ஓய்வாள். இப்படி அவள்மேல் மதிப்பு இருந்தாலும், இருவருக்கும் ஒத்துப் போகாது என்பதுதான் உண்மை.

“ருத்ரா, இங்க என்னப்பா செஞ்சுட்டு இருக்க? தூங்கலையா?”

“தூங்கணும்மா.” ருத்ராவின் குரலே கனிந்து ஒலித்தது.

“நீங்க ஏம்மா மாடி ஏறி வந்தீங்க? கால் வலிக்கும்.” வலது பக்கத்தில் நடக்க உதவும் உலோக ஊன்றுகோலின் உதவியுடன் நின்றவரைப் பார்த்தான்.

“வாங்க, கீழ போலாம்.”

அன்னையால் சரியாக நடக்க முடியாத காரணத்தால் வீட்டிலேயே இவருக்கு மின் தூக்கி வசதி செய்து கொடுத்திருந்தான். அன்னை மேலே வர நினைத்தால் சிரமப்படக் கூடாது என்பது காரணம். ருத்ராவிற்கு அன்னை மீது மிகவும் பிரியம். சமையல் செய்யச் சொல்லிக் கொடுத்த முதல் ஆசான் அவர்.

தன் தன்னையின் கைப்பிடித்து மின் தூக்கியில் கீழே அழைத்துச் சென்றான்.

“நீங்கச் சாப்பிட்டீங்களாம்மா?”

“இல்லைப்பா.” என அன்னை கூறியதும் உடனே தட்டில் உணவைப் போட்டு வைத்தான்.

“சாப்பிடுங்க அபிதா மேம்.”
அவருக்கு எதிரில் அமர்ந்து கொண்டவன் புன்னகையுடன் அவரைப் பார்க்க, அவருக்கும் ஒரே புன்னகை.

“சரி, இன்னிக்கு காமினி என்ன செஞ்சா?”

காமினி செய்ததைக் கூறியவுடன் அபிதாவுக்கு சிரிப்பு. வாய்விட்டுச் சிரித்தேவிட்டார்.

“ஏன்டா அவள் கேட்டதும் ஒத்துகிட்டு இருக்க வேண்டியதுதானே? பாரு என்னலெல்லாம் உன்னைச் சம்மதிக்க வைக்கச் செய்ய வேண்டி இருக்கு.”

“நீங்க அந்த மேடமுக்கு சப்போர்ட் பண்ணாதீங்க.”

“உனக்கு முன்னாடியே நான் தூக்கி வளர்த்த பொண்ணுடா.”

“அந்த எட்டு மாசத்துக்கு என்ன பில்ட்அப் கொடுக்கிறீங்க? சரியான ராங்கிமா. தான் நினைச்சதை செஞ்சிடணும்.”

“நீ மட்டும் என்ன குறைச்சலா? இரண்டு பேருமே அப்படித்தான்.” எனக் கேலிக்குரலில் சொல்ல ருத்ரன் முகத்தைச் சுருக்கினான்.

“அம்மா நீங்க எனக்குச் சப்போர்ட்டா? இல்லை சிவகாமிக்கு சப்போர்ட்டா?”

“நான் அப்படி எல்லாம் பிரிச்சுப் பார்க்கிறது இல்லை. நான் இரண்டு பேருக்கும் பொதுவான ஆள். நீ வயித்துல இருக்கும்போது, காமினி, கார்த்திக் இரண்டு பேரையும் எவ்வளவு நாள் நான் தூங்க வச்சுருக்கேன். இரண்டு பேருமே குழந்தையாக இருக்கும் போதே அப்படி தூங்குவாங்க. யாரையும் அதிகம் டிஸ்டர்ப் பண்ணவும் மாட்டாங்க. நைட் கம்முனு தூங்குவாங்க. நீங்கப் பசங்களா போயிட்டீங்கடா. காமினி பொண்ணு. ஒரு பொண்ணுக்கு அம்மாவோட கைடன்ஸ் சில இடங்களில் தேவைப்படும். ராணி போனதுக்குப் அப்புறம் பெண் துணைன்னு காமினிக்கு இல்லை. எதா இருந்தாலும் இங்கதான் ஓடி வருவா. நீ பொறந்தப்ப, அண்ணா இரண்டு பேரையும் கூட்டிட்டு வந்திருந்தாங்க. காமினி தூங்கவும் உன் பக்கத்தில் படுக்கப் போட்டுட்டாங்க. நீ காமினி கையைப் பிடிச்சுட்டு விடவே இல்லை. காமினி எழுந்ததும் உன்னோட கையைப் பிடிச்சுட்டு விடவே இல்லை.”

“அய்யோ… மம்மி! பாருங்க புல்லரிக்குது. காமினி புராணத்தை நிறுத்துங்க.”

“எல்லாருக்கும் ஸ்கூல்ல அம்மா வந்து கூட்டிட்டுப் போறப்ப புள்ளை கண்ணு கலங்கிடும். ஆனால் காட்டிக்கவே மாட்டாள். நீ லேட்டா ஜாயின் பண்ண. அதனால் உன்னோட சேர்த்து அவங்களையும் நானே கூட்டிட்டு வருவேன்.”

கன்னத்தில் கை வைத்தபடி அமர்ந்து கதை கேட்டுக்கொண்டிருந்தான் ருத்ரன். காமினி புராணம் எளிதில் முடியாது. அதோடு அவனுக்கும் பல வருடங்களாகக் கேட்டுப் பழகி இருந்தது.

அவன் வீடு, விடுதி எங்கும் தவிர்க்க இயலாத ஒரு நபர்களில் அவள் முதன்மை என்பதுதான் உண்மை. அவனுடைய அன்னை உண்டுவிட்டு அறைக்குச் செல்ல வீட்டின் அழைப்பு மணி குருவிபோல் ஓசை எழுப்ப, எழுந்து சென்று கதவைத் திறந்தான் ருத்ரா.

எதிரில் இளம்பச்சை நிறத்தில் புடவையில் நின்றுகொண்டிருந்தாள் காமினி.

“இன்னிக்கு என் பிரண்ட் ஃபங்க்ஷனுக்கு வந்திருந்தாள். அத்தைக்குப் பிடிச்ச மக்ரூன் வாங்கிட்டு வரச் சொல்லி இருந்தேன்.”

“உள்ளே வா.”

“இல்லை டைம் ஆச்சு. அத்தை தூங்கி இருப்பாங்க. நான் நாளைக்குப் பார்த்துக்கிறேன்.” அவள் பேச்சுக்குத் தலையசைத்தவன் அவளை மேலும் உள்ளே அழைக்கவில்லை.

காமினியின் வீடு அவர்கள் இருக்கும் அதே தெருவின் இறுதியில் அமைந்திருக்கிறது. காமினி இரு சக்கர வாகனத்தில் வந்திருக்க, வீட்டை விட்டு வெளியே வந்த ருத்ரன் அவள் பத்திரமாக வீடு போய்ச் சேரும்வரை பார்த்திருந்தவன் அதன் பின் உள்ளே வந்தான்.

பத்மமுகிக்கு பகலெல்லாம் நன்றாகப் போவது போலத் தோன்றினாலும் உறக்கம் என்பது அவளை அண்டவில்லை என்றே கூற வேண்டும். கண்ணாம்பூச்சி காட்டிக் கொண்டே இருக்கிறது. இரவில் போர்வைக்குள் வற்றாத நதியாக விழிகள் நீரைக் கொட்டிக் கொண்டேதான் இருக்கின்றன.

இங்கு வந்து அவள் மனம் விட்டுப் பேசியது சிவகாமினியிடம் மட்டும்தான். தெரியாத இடத்தில் அவளின் அன்பு மனதை நெகிழ வைத்திருந்தது. எந்த ஒரு உள்நோக்கமுமின்றி இயல்பாகப் பேசிப் பழகுவளைப் முகிக்கும் பிடித்திருந்தது.

நாளைச் சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் விடுமுறை. அதனால் இங்கு இருக்கும் விளையாட்டுகளில் பங்கு கொண்டு மனதை மாற்ற வேண்டும். இரவைப் போலப் பகலும் சென்றால் தன் மன நிலை மிகவும் மோசமாகி விடும். பகலெல்லாம், வெயிலில் வேலை செய்தாலும் உறக்கம் என்பது வர மறுக்கிறது.

உடல் களைத்து அதுவே உறங்கி விட வேண்டும். மனதைப் புண்படுத்தும் நினைவுகளில் மூழ்கவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தாள் அவள். ஆனாலும் பல முயற்சிகள் மோசமாகத் தோல்வி அடைந்திருந்தன. உடலோடு உயிராக வாழ்ந்தவனை மறக்க முடியுமா என்ன?

இரண்டு மாதங்கள் கழித்து முகியின் முன்னால் நின்றிருந்தான் அவன். அவள் வேலை முடித்துவிட்டு, அலுவலகத்தில் அறிக்கையைச் சமர்ப்பித்து விட்டு வந்தவள் வெகுவாகச் சோர்ந்து போயிருந்தாள். அப்போது அவள் அருகே மகிழுந்து வந்து நின்றது. அதிலிருந்து ஒருவன் இறங்கவும் முகிக்கு எங்கேயோ பார்த்தது போல் இருந்தது.

இறங்கும்போது அவளைப் பார்த்தானே ஒரு பார்வை, உயிரை ஊடுருவிச் செல்லும் பார்வை அது. அவள் அருகில் வந்து கையை நீட்டி, “ஹாய் பத்மமுகி, நான் ஆதி மனோகரன்.” என்றதும் அவளுக்கு அவன் பெயர் நினைவடுக்கிலிருந்து வெளிப்பட்டது.

“நீங்க இங்க?”

“சொல்றேன். வெளியே போய்ப் பேசலாமா? காஃபி ஆர்…?”

“காலையில் சாப்பிட்டது. மதியம் சாப்பிடலை. சாப்பிடணும்.” என்றாள். சோர்வாக இருப்பதால் உண்மை சரளமாக வந்தது.

“சரி வாங்க. ஹோட்டல் போலாம். காரில் ஏறுங்க.” எனக் கார்க்கதவைத் திறந்து விட்டான். அவனுடன் முன்பக்கம் ஏறி அமர்ந்தாள்.

அவனுடைய பதவி அவளை மறுக்கவிடவில்லை. ஆனால் தன்னை எதற்காகப் பார்க்க வர வேண்டும் என்ற யோசனை மனதுக்குள் ஓடியது.

“சார், எங்கிட்ட எதாவது இல்லீகல் ஃபேவர்னா இப்பவே நான் இறங்கிடறேன்.” என்றாள் எந்தவித ஒளிவும் மறைவுமின்றி.

“இது பர்சனல் விஷயம்.” எனப் பூடகமாகக் கூறியவனைப் முழுவதுமாக ஏறிட்டாள்.

அன்றிருந்தது போலே இன்றும் இருந்தான். அன்று அவனைச் சரியாகக் கவனிக்கவில்லை. ஆனால் இன்று நன்றாக அவன் முகத்தைப் பதித்துக் கொண்டாள்.

சில நிமிடங்களில் சைவ உணவகம் ஒன்று வர, அங்கேயே நிறுத்தச் சொன்னாள். பிரபல சைவ உணவகம் அது.

இருவரும் கைகளைக் கழுவிட்டு எதிர் எதிரே அமர்ந்தனர்.

“நீங்க என்ன சாப்பிடுறீங்க சார்?”

“பில்டர் காஃபி மட்டும் போதும்.”

“என் டிரீட் சார். சாப்பிடுங்க.”

அவள் கூறியதில் புன்னகை ஒன்று அவன் முகத்தில் உதயமானது. 
கருப்பு நிற சாட்டின் சட்டை, நீல நிற ஜீன்ஸ் அணிந்திருவந்தவளின் கழுத்தில் குட்டி தங்கச் சங்கிலி வளைந்து நெளிந்து கிடந்தது. வியர்த்துக் கிடந்த கழுத்தில் அது மினுமினுத்தது.

அவனைப் பற்றிய யோசனையில் இருந்த புருவம் ஏறி இறங்கியவிதம், தலைமுடி காற்றில் பறந்தது என்ற அனைத்தும் அவன் விழி லென்சின் மூலம் மூளைக்குள் பிம்பமாய் பதிந்து கொண்டிருந்தது.

தனக்கு சப்பாத்தி, தயிர் சேமியா என உணவைச் சொல்லிவிட்டு அவனைப் பார்த்து, “இப்ப சொல்லுங்க சார்.” என்றாள்.

“நீங்கச் சாப்பிட்டு முடிங்க. அப்பறம் பேசிக்கலாம்.”

“ஹான்… ஒகே.”

உணவும் ஒரு சில நிமிடங்களில் வந்து விட அதை வேகமாக உண்டு முடித்தாள். எதிரில் ஆதி மெதுவாக வடிகொட்டை நீரைப் பருகிக்கொண்டிருந்தான்.

அவள் உண்டு முடித்துக் கைக்கழுவி வந்ததும், “அந்த ஃபங்க்ஷனில் உங்களைப் பார்த்தப்ப ரொம்ப பிடிச்சிருந்தது. இரண்டு மாசமாக உங்களைத் தேடுனேன்.” என்றான்.

“எனக்குக் கல்யாணம் பண்ணிக்க ஓகே. ஆனால் உங்க விருப்பம்னு ஒன்னு இருக்கே. அதனால் எங்கிட்ட பழகிப் பார்த்துட்டு உங்க முடிவைச் சொல்லுவீங்களா?”

“யூ மீன் டேட்டிங்?”

“என்னைப் பத்தி உங்களுக்குத் தெரியாது இல்லையா? அதான் முதல்ல பிரண்ட்ஸா பழகுவோம். உங்களுக்கு ஒத்து வராதுன்னா விட்ரலாம்.” என்றான்.

தீடிரென்று ஒருவன் வந்து தன்னைப் பிடித்திருக்கிறது என்று கூறுகிறான். அவனைப் பற்றி எதுவும் அவளுக்கும் தெரியாது. தன்னைப் பற்றியும் அவனுக்குத் தெரியாது. இப்படி இருக்கையில் முகி என்ன பதில் கூறி இருப்பாள்?

 

தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page