“நான் இந்த ஆபீஸ்க்கு அடிக்கடி வரலனாலும், ‘இங்க இருக்கிற அத்தனை பேரோட கேரக்டர்ஸ், இங்க நடக்கிற விஷயங்கள், யார் வேலையை சரியா பண்ணுவாங்க’ இதெல்லாம் எனக்கு நல்லாவே தெரியும். இன்னைக்கு உங்க ரெண்டு பேர் கூடவும் பேசணும்னுதான் நான் ஆபீஸ்க்கே வந்தேன்.
“மலர்… நீங்க இப்ப எடுத்திருக்கிற முடிவு சரியானு எனக்குத் தெரியல. அடுத்து கம்பெனியோட ப்ரோக்ரெஸ் பார்த்தா மட்டும்தான் நீங்க எடுத்த முடிவு சரியா, இல்லையான்னு நீங்களே புரிஞ்சுப்பீங்க” என்று மலரிடம் கனிவாகச் சொல்லிவிட்டு, எம்.டி பாலாவை நோக்கித் திரும்பினார்.
“ஜெகனோட டீம் இப்போ லீடர் இல்லாம இருக்கு. அந்த டீமோட லீடரா நான் உன்னை இப்போ போஸ்ட் பண்றேன். இதுவும் கொஞ்ச நாளைக்குத்தான், பாலா. நீ இங்க மேனேஜ்மென்ட்ல நல்லா ட்ரெயின் ஆனதும், உன்னோட சொந்த பிசினஸை திரும்ப எடுத்துப் பண்ணலாம். எப்ப அதுக்கான தகுதி வந்துடுச்சுன்னு உனக்கே தோணுதோ, அப்ப நீ என்கிட்ட வந்து சொல்லுப்பா” என்று அவனுக்கு நம்பிக்கையூட்டினார்.
“உன் ஃப்ரெண்ட்ஸ் கெட்டவங்கனு நான் சொல்ல வரல… உன் ஃப்ரெண்ட்ஸுக்கும் உன்னை மாதிரியே அவசர புத்தி. பொறுப்பா எதையும் எடுத்துக்க மாட்டேங்கிறாங்க. அது இந்த வயசுக்கே உரிய வேகம். நீங்க எல்லாரும் கொஞ்சம் நிதானமா இருந்தா மட்டும்தான், திரும்பவும் உங்க பிசினஸை சக்சஸ்ஃபுல்லா சரியான பாதையில கொண்டு போக முடியும்” எனத் தனஞ்செழியன் மிகுந்த அக்கறையோடு, தான் மனதில் நினைத்த அத்தனையும் அவனிடம் சொல்லிமுடித்தார்.
“ஓகே அங்கிள்… நான் இனிமேல் எல்லா விஷயங்களையும் நிதானமாக் கையாளுறேன்; என் பொறுப்பைச் சரியா செய்றேன். நீங்க என் ஒர்க்கை பார்த்துட்டு, ‘இனி உன் அப்பாவோட பிசினஸை நீயே பார்த்துக்கோ’ன்னு எப்ப முழு நம்பிக்கையோடு சொல்றீங்களோ, அப்போ இங்க இருந்து போறேன்.
“ரொம்ப தேங்க்ஸ் அங்கிள்… நீங்க என்மேல இவ்வளவு அக்கறை வச்சிருக்கிறது எனக்கு சந்தோஷமா இருக்கு. அப்பாவுக்கு அப்புறம் நான் ரொம்ப மதிக்கிற ஒரே ஆள் நீங்கதான். நீங்க எனக்கு எப்பவும் நல்லதுதான் பண்ணுவீங்கனு எனக்குத் தெரியும்” என்று பாலா உணர்ச்சிவசப்பட்டுக் கூறினான். அவனது கம்பீரக் குரல் சற்றே தழுதழுத்தது. அதன் பிறகு, பாலாவும் மலரும் அவரிடம் விடைபெற்று எம்.டியின் அறையை விட்டு வெளியேறினர்.
அறைக்கு வெளியே வராந்தாவில் நடந்து கொண்டிருந்த மலரின் பாதையை மறித்து நின்றான் பாலா.
“ஐ ஆம் ரியலி சாரி மலர்… இதெல்லாம் தெரியாம உங்களை ரொம்பக் கஷ்டப்படுத்திட்டேன்” என்று மீண்டுமொரு முறை அவளிடம் மனதார மன்னிப்பு வேண்டினான்.
அவனை நிமிர்ந்து பார்த்தவள், “பாலா… நான் அன்னைக்கு நடந்த எல்லாத்தையும் மறந்துட்டேன். நீங்க உங்க முன்கோபத்தைக் கட்டுப்படுத்திக்கிட்டா உங்களால பிசினஸ்ல நிறைய சாதிக்க முடியும். ஒரு தோழியா மட்டும்தான் நான் இதை உங்ககிட்ட சொல்றேன். நான் சொல்றது தப்புன்னா மன்னிச்சுக்கோங்க” என்று அவனது குற்ற உணர்வைப் போக்க நினைத்தாள்.
தன்னைக் கடந்து சென்றவளை விழிகளை விரித்துப் பிரமிப்புடன் நோக்கினான் பாலா. ‘தோழியா…?’ என்று அவளது வார்த்தையைத் தனக்குள்ளேயே உச்சரித்தவனின் இதழோரம், ஒரு மெல்லிய புன்முறுவல் அரும்பியது.
பாலா, ஜெகனின் குழுவிற்குப் புதிய தலைவனாகப் பொறுப்பேற்றுக் கொண்டான். தன் குழுவினரின் ஒத்துழைப்போடு, நிர்வாகம் அவனிடம் ஒப்படைத்த அத்தனை திட்டங்களையும் குறித்த காலத்திற்குள் கச்சிதமாக முடித்துக் காட்டினான்.
தொழில் நுணுக்கங்களில் எத்தகைய சந்தேகங்கள் எழுந்தாலும், எவ்விதத் தயக்கமுமின்றி நேரடியாக மலரின் கேபினுக்கே சென்று அவளிடம் கேட்டுத் தெளிவு பெற்றான். சில இக்கட்டான சூழல்களில் அவளது ஆலோசனைகளைக் கேட்டு, அதன்படியே தன் குழுவை வழிநடத்தவும் பழகிக்கொண்டான்.
*****
அன்று அதிகாலையிலேயே காப்பகத்தில் தன்னோடு வளர்ந்த தோழியின் திருமணத்தில் கலந்து கொண்டாள் மலர். விசேஷம் முடிந்த கையோடு உடை மாற்றக்கூட நேரமில்லாமல், புடவையோடு அலுவலகத்திற்குள் நுழைந்தாள்.
நவீன காலத்து ஆடைகளிலேயே அவளைப் பார்த்துப் பழகிய ஊழியர்கள், “என்ன மலர்… இன்னைக்கு உங்களுக்கு ஏதும் விசேஷ நாளா?” என்று ஆச்சரியமாகக் கேட்க, அவளோ “அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல” என்று சிரித்தாள்.
தொழில்நுட்ப ரீதியாக எழுந்த ஏதோ ஒரு சந்தேகத்தைத் தெளிவுபடுத்திக் கொள்ள மலரின் கேபினுக்குள் நுழைந்த பாலா, புடவையின் நளினத்தில் பேரழகியாய் நின்றவளைக் கண்டதும் அப்படியே அசைவற்று உறைந்து போனான்.
அவனது விசித்திரப் பார்வையைக் கவனித்த மலர், தன் இருக்கையில் அமர்ந்து கணினியை இயக்கியவாறே, “என்ன பாலா… என்னாச்சு?” என்று புருவங்களை உயர்த்தி வினவினாள்.
“மலர்… இன்னைக்கு உங்களுக்குப் பர்த்டே வா?” அவன் கணீர் குரலில் மென்மை கொஞ்சம் ஏறியிருந்தது.
“இல்லையே… ஏன் அப்படிக் கேட்கிறீங்க?” அவள் குழப்பமாக அவனை நோக்க, “இல்ல… சாரிலாம் கட்டிட்டு வந்திருக்கீங்களே. அதான் கேட்டேன்” என்று தலையைக் கோதியபடி லேசான தயக்கத்தோடு புன்னகைத்தான்.
“மார்னிங் ஒரு மேரேஜ்க்கு போயிருந்தேன், அதான் அப்படியே அதே சாரில வந்துட்டேன்” அவள் சாதாரணமாகச் சொல்ல,
“இந்த சாரில நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க” தன்னையுமறியாமல் அவனது இதழ்கள் மனதில் உள்ளதை முணுமுணுத்தன.
சட்டென்று நிமிர்ந்தவள், “என்ன பாலா… என்ன சொன்னீங்க?” எனத் தன் கண்களைச் சுருக்கி அவனைக் கூர்மையாக நோக்கிட,
“சாரி நல்லா இருக்குனு சொன்னேன். வேற ஒன்னும் இல்லையே…” எனச் சிரித்து சமாளித்தவன், ‘கொஞ்ச நேரத்துல அடி வாங்கியிருப்போம்… ஜஸ்ட் மிஸ் ஆகிடுச்சு!’ என்று மனதில் நினைத்துக்கொண்டான்.
அந்தி சாயும் அழகான பொன் மாலைப் பொழுது… பணி முடிந்து அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் கிளம்பிக்கொண்டிருந்தனர். கீழ்தளத்தில் உள்ள வாகன நிறுத்தத்தில் பாலா தனது காரை நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.
வீசிய பெருங்காற்றில் மலரின் புடவை முந்தானை வேகமாய்ப் பறந்து, பாலாவின் முகத்தை உரசியது. தன் முகத்தை மூடியிருந்த ஆடையை அவன் சட்டென்று விலக்க, யாரோ சேலையை இழுப்பதுபோல் தோன்ற திரும்பிப் பார்த்தாள்.
புடவை காற்றிற்கு இழுக்கிறது என்று தெரிந்துகொண்டவள், முந்தானையை பிடித்து தன்புறம் இழுக்க, அது பறந்து மீண்டும் அவனிடமே சென்றது.
பதற்றத்தில் மறுபடியும் மலர் அதை வேகமாய் இழுக்க, நிலை தடுமாறி கீழே விழவிருந்தாள். அவளைப் பாய்ந்து தாங்கிப் பிடிக்க நினைத்தவனும், தடுக்கி அவள் மேல் விழுந்துவிட, அந்த ஆறடி கம்பீரமான மனிதனுக்குள் குட்டி பெண் மானாய் சிக்கிக்கொண்டாள் பாவை.
அவளது மெல்லிய உடலை மொத்தமாய் அவன் ஆக்கிரமித்திருக்க, அவளால் இம்மியளவு கூட அசைய முடியவில்லை. இத்தனை அருகிலிருக்கும் அவளது முகத்தையும், இதழ்களையும் இமைக்காது கண்டு ரசித்திருந்தான்.
அவனது அழுத்தம் தாளாமல் “ஆஆ… கொஞ்சம் தள்ளுங்க பாலா…” என்று மலர் முனகியதும், சிந்தனை கலைந்தவன், தன் கைகளைத் தரையில் ஊன்றி மெல்ல எழ முயன்று, தோற்று மீண்டும் அவள் மீதே விழுந்தான்.
அவனது முன்னுடல் மொத்தமும் அவளது மேனியை உரசிக் கொண்டிருக்க, அவஸ்தையில் நெளிந்தாள். பாலா சட்டென அவளருகே பக்கவாட்டில் சாய்ந்தான். அவனது உடலுக்குள் ஹார்மோன்கள் பெரும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்க, ஆசுவாசமாக பெருமூச்சுகளாக விட்டுத் தன்னைச் சமன்படுத்த முயன்றான்.
இப்போது மலர் எழுந்துகொள்ள முயற்சிக்க, அவளது புடவை முந்தானை அவனுக்குக் கீழே சிக்கியிருந்தது.
ஏற்கனவே அவனது அருகாமையும், உடலின் வெம்மையும் அவளுக்குள் படபடப்பை தந்திருக்க, சேலையை இறுக்கமாகப் பற்றி இழுத்தாள். அதுவோ அவனிடமிருந்து வரமாட்டேன் என பிடிவாதம் பிடித்தது.
அவளது முகமெங்கும் நிறைந்திருந்த கலக்கத்தை கண்டவன், “மலர்… கூல்… கூல்… ஒரு நிமிஷம் இரு. ரொம்ப இழுத்தா சேலை கிழிஞ்சிடும்” என்று அவளைத் தன் மீது சாய்த்துக்கொண்டான்.
அவனது மார்பில் விழுந்திருந்தவளுக்கு அவனது இதயம் படபடக்கும் ஓசை கேட்டது. அதைவிட அவளது உள்ளமோ தடதடத்துக் கொண்டிருந்தது.
“வேற வழியே இல்ல… வெயிட்” என்று பாலா அவளை புரட்டி அருகே படுக்க வைத்தபின், தன் பலத்தையெல்லாம் ஒன்று திரட்டி எழுந்தான்; கையைக்குடுத்து அவளைத் தூக்கியும் விட்டான்.
‘அய்யோ போச்சு… ராட்சசி சும்மாவே நம்மள பொறுக்கினு கழுவி ஊத்துவா! இன்னைக்கு பத்ரகாளியா மாறப் போறா!’ என்று தனக்குள்ளே அவன் புலம்பிக்கொண்டிருக்க, சேலைப்பிடிகள் தளர்ந்ததில் சுலபமாய் எழுந்து நின்றாள் மலர்.
அவன் தேகத் தீண்டலில் அவளுள் உணர்வுகள் வெடித்துக் கிளம்பியது. உள்ளுக்குள் தோன்றிய அதிர்வை மறைத்து, “சாரி பாலா… தெரியாம நடந்திருச்சு” என்று அவனைப் பார்க்கத் துணிவின்றி விறுவிறுவென அங்கிருந்து நகர்ந்தாள்.
பாலா ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்துக் கொண்டிருக்க, மலர் நிறுவனத்திற்கு அருகிலிருந்த பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்து சென்றாள்.
பெண்ணவளின் மீது கிடந்ததை நினைக்கும்போதே பாலாவிற்கு உள்ளுக்குள் சிலிர்த்தது. உடலில் இரசாயன மாற்றங்கள் உண்டாகியிருக்க, மின்சாரம் பாய்ந்த உணர்வு. இன்னும் அவள் மேனியின் வெப்பம் தன்னை தாக்குவதை போலவே இருக்க, தன் சிகையை அழுந்தக் கோதிக்கொண்டான்.
வாகனத்தை இயக்கி அவன் வெளியே செல்கையில், அங்கே நடந்து கொண்டிருந்த மலரைக் கண்டதும் காரின் வேகத்தைக் குறைத்தான். சாளரம் வழியே எட்டிப் பார்த்தவன், “மலர்… வாங்க நான் உங்களை ட்ராப் பண்றேன்” என்றான்.
“வேணாம் பாலா… உங்களுக்கு எதுக்கு கஷ்டம்? இப்போ பஸ் வந்திரும். நான் போயிக்கிறேன்” என மலர் மறுத்துக்கூற, வண்டியை நிறுத்திவிட்டு வேகமாக இறங்கி வந்தான்.
“வாங்க மலர்… எனக்கொரு கஷ்டமும் இல்ல. நானே ட்ராப் பண்றேன்” என்று பாலா கார் கதவை திறந்துவிட, அதற்கு மேலும் மறுக்க முடியாமல் வாகனத்தில் ஏறி அமர்ந்தாள்.
அவளருகே வந்து ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தவன், “மலர்… நீங்க எங்க போகணும்?” என விசாரிக்க, “ஆதம்பாக்கத்துல இருக்க அன்னை அன்பாலயா ஹோமுக்குப் போகணும்” என்றாள்.
“என்ன திடீர்னு ஹோமுக்குலாம் போறீங்க?” அவன் மெல்லிய புன்னகையோடு கேட்க, “நான் வளர்ந்தது, படிச்சதெல்லாம் அங்கதான். இன்னைக்கு ஒரு புது டோனர் வர்றாங்களாம், அவங்ககிட்ட பேச மதர் என்னை வர சொல்லியிருந்தாங்க” என்று கூறியவள், “ஒரு நிமிஷம் அந்த ஸ்டேஷனரில நிறுத்துங்க” என சுட்டிக் காட்டினாள்.
அவன் வாகனத்தை ஓரமாக நிறுத்தியதும், கடைக்குள் சென்றவள், சிறிது நேரம் கழித்து ரெண்டு பெரிய நெகிழிப் பைகளோடு வந்தாள். அவளுக்காகக் காத்திருந்தவன் காரின் பின்னிருக்கை கதவைத் திறந்துவிட, பைகளை அங்கே வைத்துவிட்டு முன்னிருக்கையில் வந்து அமர்ந்தாள்.
“ஹோம்ல இருக்க குட்டீஸ் ஸ்டேஷனரி திங்க்ஸ் கேட்டாங்க, அதான் வாங்கிக்கிட்டேன். சாரி பாலா… என்னால உங்களுக்கு ரொம்ப தொந்தரவு” என்று வருத்தமாக அவள் முகத்தை வைத்துக்கொள்ள, “அதெல்லாம் ஒண்ணுமில்ல மலர்… இட்ஸ் ஓகே” என்றவன் காரை இயக்கினான்.
மலர் வெளியே வேடிக்கை பார்த்திருக்க, பாலாவோ ஸ்டீயரிங்கை இயக்கியவாறு அவளைக் கண்களால் அளந்தான். அவள் அணிந்திருந்த வான நீல நிற சில்க் காட்டன் புடவையில் அடர் நீல நிற பார்டர் வைத்திருந்தது. அதை சிங்கிள் ப்ளீட் வைத்து விரித்து விட்டு அழகாய்க் உடுத்தியிருந்தாள். கோண வகிடெடுத்து தலைமுடியைப் பின்னியிருந்தாள். காற்றில் அவளது கீற்று முடிகள் கன்னத்தைத் தீண்டி விளையாடியது.
அவனது பார்வையை உணர்ந்தவளாக அவள் திரும்பியதும், சட்டென்று சாலையில் கண்களைப் பதித்தான்.
“பாலா… உங்க அப்பாக்கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சுனு எம்.டி சொன்னாரே? எப்போ? எப்படி?” என மலர் வினவியதும், அவள் புறம் திரும்பியவன், “ஆமா… நான் யூஜி ஃபர்ஸ்ட் இயர் படிக்கும் போது டெல்லில அப்பாவும் அம்மாவும் போன கார் ஆக்சிடென்ட் ஆகிடுச்சு. ரெண்டு பேருமே இப்போ உயிரோட இல்ல” என்றான் இறுக்கமான குரலில்.
“அப்போ உங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருந்திருக்கும்ல பாலா…”
“நான் ஹையர் செகண்ட்ரி படிக்கும்போதிருந்தே, என்னோட பாட்டிக்கிட்ட விட்டுட்டு அப்பாவும் அம்மாவும் பிசினஸுக்காக அடிக்கடி வெளியூர் போயிடுவாங்க. மேக்ஸிமம் ஹாலிடேஸ்ல தான் அவங்களை பார்ப்பேன், அவங்ககூட இருப்பேன். அதனால முதல்ல எனக்கு அந்தக் கஷ்டம் தெரியல. ரெண்டு வருஷம் முன்னாடி பாட்டி இறந்தப்போதான் என்னால அதைத் தாங்கிக்க முடியல” அவன் குரல் உடைந்து கரகரத்தது. சட்டென்று விழிகளில் நீர் கோத்துக் கொண்டது.
அவனது கண்ணீரைப் பார்த்து திடுக்கிட்டவள், “சாரி பாலா… எதை எதையோ பேசி உங்களை வருத்தப்பட வைச்சிட்டேன்” என்றாள் உள்ளிழுத்த குரலில்.
பாலா மறுபக்கம் திரும்பித் தன் விழியோரம் கசிந்திருந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டவன், அவளைப் பார்த்து புன்முறுவலித்தான்.
கம்பீரமான ஆணவன் குழந்தை போல அழுகிறான்… மலர் அவனது முகத்தையே பார்த்தாள். அந்த காந்த விழிகள் அவளை ஈர்த்தன. பாலா திரும்பி பார்த்ததும், சட்டென்று பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.
‘இன்று ஏன் இவளை அழைத்தேன்; இப்போது ரசிக்கின்றேன்! அவளிடம் என் மனதிலுள்ள பாரங்களை இறக்கி வைக்கின்றேன். அவளுக்கு முன்பாக அழுகின்றேன்’ என யோசித்த பாலா தன்னைத்தானே புதிதாய் உணர்ந்தான்!
🌹காதல் மலரும்🌹
