மிதுன் அலுவலகத்திற்குக் கிளம்பிச் சென்றிட, நதியா அறையைச் சுத்தம் செய்யும் பணியாட்களிடம், ‘அந்த அறையில் எந்தச் சுவிட்ச் எதற்கு இருக்கிறது? எந்தெந்தப் பொருட்களை எங்கு வைக்க வேண்டும்? மிதுனுக்குப் பிடிக்காத விஷயங்கள் என்ன?’ என்று கேட்டுத் தெரிந்துகொண்டாள். பின்ன… நேற்று வாங்கிய அறை அப்படி! மறுபடியும் அடி வாங்கக் கூடாது என்று நினைத்துத் தன் வேலைகளைச் சரியாகச் செய்யத் தொடங்கினாள்.
அந்தத் தளத்தில் ஒரு பால்கனியும், அதில் அழகுச் செடிகள் நிறைந்த பூந்தோட்டமும் உள்ளன. அதோடு பீன்பேக் மற்றும் சோபாக்கள் போடப்பட்ட சிட் அவுட்டும் இருக்கிறது. அங்கிருந்து கீழே பார்த்தால் வீட்டைச் சுற்றியிருக்கும் தோட்டமும், சற்றுத் தள்ளி வேலையாட்கள் தங்கியிருக்கும் வீடுகளும் தெரியும்.
நதியா தன் தோழியிடம் பேசும்போதும், மாலைப் பொழுதுகளிலும் அங்கே வந்து அமர்ந்துகொள்கிறாள். அந்த இயற்கைக் காற்றும், பூக்களின் நறுமணமும், அங்கு சிறகடிக்கும் பட்டாம்பூச்சிகளும் அவள் மனதிற்கு இதமாக இருக்கின்றன. அவ்வப்போது வைஷாலியும் அங்கே வந்து அவளுடன் கதை பேசிவிட்டுச் செல்வாள்.
அது தேவ்வின் மனைவி ரூபிணிக்குப் பொறுக்கவில்லை. ஏற்கனவே ‘மிதுனைத் திருமணம் செய்துகொள்ள முடியவில்லையே’ என்ற வெறுப்பில் இருந்தவளின் கோபமெல்லாம், இப்போது நதியாவின் மீதுதான் திரும்பியிருந்தது.
ரூபிணி சிறு வயதிலிருந்தே மிதுனை நேசித்து வந்தாள்; ஆனால், அவனுக்கோ அந்த எண்ணம் ஏதும் இல்லை. ராதாவிற்குத் தன் அண்ணன் மகள் ரூபிணியை மிதுனுக்கும், அதிதியை தேவ்விற்கும் மணமுடித்து வைக்க விருப்பம்.
தேவ் ரூபிணியை விரும்பினான். இதையறிந்த மிதுன் ராதாவிடம் பேச, அவரோ இதற்குச் சம்மதிக்கவே இல்லை. எனினும், அவன் பிடிவாதமாக நின்று அவர்கள் இருவருக்கும் திருமணத்தை நடத்தி முடித்தான்.
மிதுன் தன்னைப் பிடிக்கவில்லை என்று கூறிய ஆத்திரத்தில், ‘எனக்கும் அவன் வேண்டாம்’ என மறுத்துவிட்டாள் ரூபிணி. தேவ் தன்னை நேசிக்கிறான் என்று தெரிந்ததும், முழு மனதுடன் அவனை ஏற்றுக்கொண்டாள். இருவரும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கின்றனர். இருந்தாலும் அவளுக்கு மிதுன் மீது கோபம் இருக்கிறது; இப்போது அது நதியாவின் மீதும் திரும்பியிருக்கிறது.
அதுமட்டுமன்றி… ராதா நதியாவை ஏற்றுக்கொண்டால், இந்த வீட்டின் மூத்த மருமகள் என்ற தகுதியும் பறிபோய்விடுமல்லவா?! எப்படியாவது நதியாவை இந்த வீட்டை விட்டுத் துரத்திட நினைக்கிறாள். (அக்ரிமெண்ட் முடிஞ்சா அவளே வீட்டை விட்டு போயிடுவா. நீ வேற ஏம்மா கஷ்டப்படுற)
அன்று மாலை நதியா, வைஷாலி இருவரும் சிட் அவுட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, அங்கு வந்த ரூபிணி, “வைஷு… அத்தை உன்னை இவகூட பேசக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்கள்ள, அப்புறம் ஏன் பேசிட்டு இருக்க?” என்று ஆணவத்தோடு கர்ஜிக்க,
“அவங்க எங்க அண்ணி நான் பேசுவேன். உனக்கென்ன ரூபி” மாமன் மகள் என்பதால் விளையாட்டாய்ப் பேசினாள் வைஷாலி.
அது இன்னும் அவள் கோபத்தை அதிகமாக்க, “அவ உனக்கு அண்ணினா அப்போ நான் யாரு? நான் தான் இந்த வீட்டுக்கு முதல்ல வந்தேன். நாந்தான் இந்த வீட்டோட மூத்த மருமகள். நீ என்னையும் அண்ணின்னு தான் கூப்பிடணும்” என்றாள்.
“நாம என்ன அப்படியா பழகியிருக்கோம். நான் சின்ன வயசுல இருந்தே உன்னை ரூபின்னு தான் கூப்பிடுவேன். இப்போ திடீர்னு அண்ணின்னு கூப்பிட சொன்னா எப்படி?”
“அது அப்படிதான். இனிமே மரியாதையா பேசிப் பழகு”
நதியாவோ ஏதோ டிவி சீரியலில் நடக்கும் சண்டை போல இதை வேடிக்கைப் பார்த்திருந்தாள்.
“நீ வேற வந்து ஃபன் பண்ணிட்டு இருக்க, அண்ணி பண்ணின்னு. அப்படிலாம் உன்னை கூப்பிட முடியாது” வைஷு உரிமையாய் விளையாடிட,
“அப்படியே அடிச்சேன்னு வை. இரு தேவ் வரட்டும். அவன் வந்து உன்னை அடிச்சாதான் நீ அடங்குவ” ரூபிணி ஆக்ரோஷமாகக் கத்தினாள்.
“இப்போ எதுக்கு தேவ்கிட்ட சொல்லப்போற? அவங்க வெளில இருந்து வந்தவங்க. அதனால மரியாதையா பேசுறேன். நாம ஃப்ரெண்ட்ஸ் தானே?” அண்ணன் மீதிருந்த பயத்தில் அவளுக்கு கண்ணீர் வர,
“எதுக்கு சின்ன பொண்ணுகிட்ட இவ்வளவு கோபமா பேசுறீங்க? பொறுமையா சொன்னா கேட்டுக்க போறா…” மனம் தாங்காமல் நதியா வைஷாலிக்கு ஆதரவாகப் பேசினாள்.
“எவ்வளவு தைரியம் இருந்தா நீ என்கிட்ட இப்படி பேசுவ? நான் எப்படி இருக்கணும்னு சொல்றதுக்கு நீ யாரு? உன்னை அத்தைகிட்ட சொல்லி என்ன பண்றேன் பாரு…” கோபம் குறையாமல் ரூபிணி பேசியதும், நதியாவுக்கு சிரிப்பு வந்துவிட்டது.
“இங்க பாருங்க ரூபிணி… எதுக்கு இவ்வளவு நீளமா சீரியல் டயலாக்கெல்லாம் பேசுறீங்க? ஏன் சின்ன குழந்தை மாதிரி தேவ்கிட்ட, அத்தைகிட்ட கம்பிளையண்ட் பண்றேன்னு சொல்றீங்க? லெட் பீ ஃப்ரெண்ட்ஸ்” என்று நதியா கைக்குலுக்கக் கையை நீட்ட, அவளோ சட்டென அதைத் தட்டிவிட்டு வேகமாகக் கீழே இறங்கிச் சென்றாள்.
வைஷாலி இதைப் பார்த்துச் சிரித்தபடி நின்றிருக்க, “நான் ஒண்ணு சொன்னா கோச்சுக்காதடா வைஷு… என்னதான் இருந்தாலும் ரூபி உன் அண்ணனோட வைஃப். மத்தவங்க முன்னாடி உன் ஃபேமிலில இருக்கவங்களை விட்டுக் கொடுத்துப் பேசக்கூடாது சரியா?” என்றாள் நதியா.
“நீங்களும் எங்களோட ஃபேமிலிதான். உங்க முன்னாடி தானே நான் அவங்களை கிண்டல் பண்ணேன்?!” என்ற வைஷுவின் கேள்விக்கு அவளிடம் எந்தப் பதிலுமில்லை. ‘நான் இவர்களுக்கு உறவில்லை என்பதை எப்படிப் புரிய வைப்பது?’ மனதிற்குள் நினைத்து புலம்பியவாறு அறைக்குச் சென்றாள்.
இரவு… மிதுன் வீட்டிற்குள் நுழைந்ததும், ராதா அவனுக்கு முன்பாக வந்து நின்றவர், “என்ன நினைச்சுட்டு இருக்கா நீ கூப்பிட்டு வந்தவ?” என்று கேட்க, “என்னம்மா என்ன ஆச்சு?” அவர் பேசுவது புரியாமல் கேள்வியாய் ஏறிட்டான்.
“நான் சீரியல் வில்லி மாதிரி பேசுறேனாம், சின்ன குழந்தை மாதிரி பிஹேவ் பண்றேன்னு அந்த நதியா கிண்டலடிக்கிறா. வைஷுவும் அவ கூட சேர்ந்துட்டு என்னைக் கேலி பேசுறா” ரூபிணி கொஞ்சம் பொய்யையும் சேர்த்துத் திரித்துக் கூறியதும்,
மிதுன் இண்டர்காமில் வைஷாலி, நதியா இருவரையும் கீழே அழைக்க, அவர்களுடன் தேவ்வும் சூர்யாவும் சேர்ந்தே இறங்கி வந்தனர்.
“வைஷு… என்ன நடந்துச்சு சொல்லு?” மிதுன் இறுக்கமான குரலில் வினவியதும், அவள் நடந்ததை விவரித்தாள்.
“வைஷு… என்ன இது புதுப்பழக்கம்? மத்தவங்க முன்னாடி அண்ணியை நீ அப்படி பேசலாமா?” மனைவிக்குப் பரிந்து கொண்டு வந்தான் தேவ்.
“நதியா அண்ணியும் நானும் மட்டும்தானே இருந்தோம். நாங்க ஒண்ணும் தப்பா பேசல” தான் செய்தது சரியென்று வாதிட்டாள் கடைக்குட்டி.
“எதிர்த்து பேசாதன்னு சொல்லியிருக்கேன்ல, அடி வாங்கப் போற” என தேவ் அதட்டிட,
“வீட்டுக்கு வந்து கொஞ்ச நாள் ஆகல. அதுக்குள்ள பெரிய பஞ்சாயத்து பண்ணிட்டா. எல்லாம் இவன் குடுக்கிற இடம்தான். ஒண்ணு இந்த வீட்ல அவ இருக்கணும், இல்ல நான் இருக்கணும்” ராதா இதுதான் சமயம் என்று தன் மனதில் உள்ளதை வெளிப்படுத்தினார்.
“நதியா… நீ ஏன் ரூபிணிகிட்ட அப்படிலாம் பேசுன?” ஏற்கனவே அலுவலக அழுத்தத்தில் இருந்த மிதுனுக்கு, இங்கு நடக்கும் பிரச்சினை அவன் ஆத்திரத்தைக் கிளறியிருந்தது.
நதியா அவன் கோபத்தைக் கண்டு மிரண்டவள், “அது வந்து… ரூபிணி வைஷுவை திட்டுனாங்க. அதான்” என்று சொல்லி முடிப்பதற்குள் தன் இரும்புக் கரத்தால் அவளை அறைந்திருந்தான் மிதுன்.
“உன்னை ரூமை விட்டு வெளில வரக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல. இத்தனை நாளா இந்த வீட்ல ஒரு பிரச்சினையும் வந்ததில்ல. உன்னால இனிமே ஏதாவது ப்ராப்ளம் வந்தது தொலைச்சிடுவேன். ரூபிணிகிட்ட சாரி கேளு” அவள் மீது தவறு இல்லை எனத் தெரிந்தாலும் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்திட நினைத்துக் கூறினான்.
வலி தாங்காமல் கன்னத்தைக் கையால் பற்றிக் கொண்டு தலை குனிந்திருந்தவள், ரூபிணிக்கு அருகில் சென்று, “சாரிங்க…” என்றுவிட்டு அறைக்குச் சென்றாள்.
இதுவரை வீட்டில் மிதுனின் ருத்ர முகத்தைக் கண்டிராதவர்கள் கொஞ்சம் அரண்டுதான் போயினர். அதுவும் அவன் நதியாவை அடிப்பான் என்று அவர்கள் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. ராதாவுக்கு மகன் குடும்பத்திற்குத்தான் முக்கியத்துவம் தருகிறான் என்ற எண்ணத்தில் அவன் மீதிருந்த கோபம் கொஞ்சம் குறைந்தது. ரூபிணிக்கு அவள் அடிவாங்கியதில் மனம் நிறைந்துவிட்டது.
மிதுன் அறைக்குச் சென்று பார்த்தால், நதியா மெத்தையில் குத்துக்காலிட்டு கால்களுக்குள் முகம் புதைத்து அழுதுகொண்டிருந்தாள்.
“எனக்கு இந்தப் பிரச்சினையை எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியல. நீ ரூமை விட்டு வெளில போகாம இருந்திருந்தா இதெல்லாம் நடந்திருக்காது” தான் செய்தது சரியென்று அவன் வாதிட, பதிலேதும் பேசாமல் எழுந்து குளித்து வந்தவள், உடைகளை களைந்து மெத்தையில் படுத்தாள்.
அவன் அமைதியாய் அவள் முகத்தைப் பார்த்திருக்க… “நான் இங்க ஒரு ஸ்டாஃப், அவங்க உங்க ஃபேமிலி. நீங்க செஞ்சது சரிதான்” அவனது குற்ற உணர்ச்சியைப் புரிந்து, அவனைத் தேற்றினாள்.
“நமக்கு டைம் இல்ல. உங்க டைமை வேஸ்ட் பண்ணாதீங்க…” நதியா உடைந்த குரலில் சொல்ல, அவன் எழுந்து வந்தான். என்னதான் வெளியே அவனுக்கு ஆறுதல் கூறினாலும், தான் செய்யாத தவறுக்குக் கிடைத்த தண்டனையால் அவள் மனம் தகித்தது.
தன் தாய்க்காக எல்லா வலிகளையும் ஏற்றுக்கொள்கிறாள். ஆனால், ‘அவர் உடல்நலம் சரியாகிவிட்டதா? எங்கு இருக்கிறார்? என் வலிகளுக்குத் தீர்வாக என் அம்மா எனக்குப் பழைய மாதிரி கிடைப்பாரா?’ என யாரிடம் போய்க் கேட்பாள். விடை தெரியாத கேள்வியாகிவிட்டது அவளது வாழ்க்கை!
அதற்குப் பிறகு நதியா அறையை விட்டு வெளியே செல்வதைத் தவிர்த்தாள். பொழுதுபோக்கிற்காகத் தொலைக்காட்சி பார்ப்பதும், சிறிது நேரம் கைப்பேசியில் செலவிடுவதும், மதிய வேளைகளில் அசதியில் நன்கு தூங்குவதுமாக அவளது நாட்கள் நகர… தன் தாய் குணமாகிவிட வேண்டும் என்ற பிரார்த்தனை மட்டுமே அவள் மனமெங்கும் நிறைந்திருந்தது! அவ்வப்போது வைஷாலி மட்டும் அங்கு வந்து அவளிடம் பேசிச் செல்வாள்.
அறைக்குள்ளேயே அடைந்து கிடப்பது அவளுக்கு வெறுப்பாய் இருக்க, விஷ்ணுவிற்கு அலைபேசியில் அழைத்தவள், “அண்ணா… எனக்குக் கொஞ்ச திங்க்ஸ் வேணும், வாங்கித் தாங்க” என கட்டளையிட்டாள்.
அவன் மிதுனிடம் கேட்ட பின் வாங்கி அனுப்பினான். ஒரு டிரைபாட், ரிங் லைட் என வீடியோ எடுப்பதற்குத் தேவையான சில உபகரணங்களை வாங்கியிருந்தாள். நதியா கல்லூரி படிக்கும்போது தோழிகள், நண்பர்களுடன் சேர்ந்து நடனமாடி ரீல்ஸ் செய்வாள். எப்போதாவதுதான் அதைச் சமூக ஊடகங்களில் பதிவேற்றுவாள்; மற்ற நேரங்களில் எடுத்து வைத்து நண்பர்களுடன் பார்த்துச் சிரித்துக்கொள்வாள்.
தற்போது தனியாகவே இருப்பதால் தினமும் நடனமாடி வீடியோ எடுப்பது, அதை எடிட் செய்வது என பொழுதை போக்கிக் கொண்டிருந்தாள். வீடியோக்களை நெருங்கிய தோழிகளுக்கு மட்டும் அனுப்புவாள். இதிலும் வைஷாலி அவளுடன் இணைந்துகொண்டாள்.
மிதுன் அவளுடைய சமூக வலைத்தளக் கணக்குகளை கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறான். அவள் எடுக்கும் வீடியோக்களை போடாததால் அவன் இதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.
அன்று விஷ்ணு மிதுனைப் பார்க்க வீட்டிற்கு வந்தவன், கடவுச்சொல்லைப் போட்டு அறைக்குள் நுழைந்தான். எதிர்ப்பட்ட நதியாவிடம், “என்னம்மா கண்ணு சௌக்கியமா…?” என்று அவன் பாட்டுப் பாட, “ஆமாம்மா கண்ணு சௌக்கியம் தான்…!” என எதிர்ப்பாட்டு பாடினாள்.
“தங்கச்சி தேறிட்ட போல” விஷ்ணு கிண்டலாகக் கேட்க, “அண்ணா… எல்லாம் உங்க சார் ட்ரெயினிங் தான்” என்று புன்னகைத்தாள்.
மிதுன் குளியலறையில் இருக்க, இருவரும் இங்கு சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். “அண்ணா… அம்மாவுக்கு ஆபரேஷன் பண்ணிட்டாங்களா? அவங்க எப்படி இருக்காங்க? நீங்க போய் பார்த்தீங்களா?” அவள் கண்கலங்கியபடி விசாரிக்க,
“எனக்கும் அம்மா எங்க இருக்காங்கன்னு நிஜமா தெரியாது. ஆனா தினமும் அவங்க ஹெல்த் கண்டிஷன் எப்படி இருக்குனு சாருக்கு போன் வரும். உன் அம்மாவுக்கு மூட்டு ஆபரேஷன் பண்ணிட்டாங்க, ஹார்ட் ஆபரேஷன் 15 நாள் கழிச்சு பண்ணனும்னு சொல்லியிருக்காங்க. அங்க அவங்களை நல்லாத்தான் கவனிச்சுக்கிறாங்க. நீ ஒண்ணும் கவலைப்படாம இரு” அவள் முக வருத்தத்தை பார்த்து ஆறுதலாய்ப் பேசினான்.
❤️🔥 மோகம் தீர்ப்பாள் ❤️🔥
