அத்யாயம் -22

திருக்குறள்

 

 

திருக்குறள்

உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.
காமத்துப்பால் அதிகாரம்  நெஞ்சொடுபுலத்தல் குறள் எண் -1292

அத்யாயம் -22

சடங்குகள் முடிந்ததும் சாப்பிடக் கூட தோன்றாமல் அப்படியே வந்து அறையில் தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டான் சூர்யா .

“என்னை கல்யாணம் செய்துக்கறீங்களா” நேர் கொண்ட பார்வையுடன் கேட்டது  இதயத் தாமரை தான்.

அடுத்தடுத்து நிறைய சடங்குகள் சம்ப்ரதாயங்கள் இருந்தாலும் செய்யும் மன நிலையில் மாப்பிள்ளை இல்ல. பெரியவர்களும் உள்ளே சென்று விட ஐயரும் அதற்கு மேல் அங்கே நின்று யாரிடம் என்ன பேசுவது என்றது தெரியாமல் அமைதியாக கிளம்பி விட்டார்.

மனம் கேட்காமல் சமையல் கார அம்மா தான் இருவருக்கு ஆரத்தி எடுத்து தாமரையை உள்ளே அழைத்துச் சென்றார்.

சாமி அறைக்கு அழைத்துச் சென்றவர்,

“விளக்கேத்துங்கம்மா ” என்றார்.

“இல்ல! அவரோட சித்தி அவங்க இல்லையே? அவங்க வந்து சொன்னாத் தான் சரியா இருக்கும் . இப்ப வேண்டாமே என்றாள் “

“பரவால்ல பார்த்துக்கலாம் மா . எப்படியும் அந்த பொண்ணு இருந்திருந்தா அவங்க செய்திருக்க மாட்ட்டாங்களா ? இப்ப அந்த இடத்துல நீங்க தானே? எதை பத்தியும் கவலை படாதீங்கம்மா .”

அவர் சொன்னாலும் இவளுக்குத் தான் உரிமை இல்லாத இடத்தில நிற்பது போல தோன்றியது. கீழ் உதட்டை கடித்துக் கொண்டு அமைதியாக இருந்துவிட்டாள் .

ஆளுயர விளக்கு. அழகாக அலங்கரிக்கப் பட்டிருந்தது. பாலிஷ் செய்திருக்கலாம் அல்லது புதியது கூட வாங்கி இருக்கலாம்.

விளக்கேற்றப் போனவள் கையை தானே பின்னுக்கு இழுத்துக் கொண்டாள் . அவள் விளக்கேற்றவே இல்லை. இன்றுமட்டுமில்லை. எப்போதுமே அந்த வீட்டில் அவளுக்கென்று எந்த மரியாதையும் கிடைக்கப் போவதில்லை .

தன்னுடைய ராஜாவுக்காக, அவனை யாரும் ஒற்றை வார்த்தை சொல்லி விடக் கூடாது என்பதற்காக அவனை அவள் திருமணம் செய்து கொண்டதற்கு பரிசு வேறு என்ன? அவள் அனைத்தையும் இழக்க வேணும். சுய மரியாதை, தன்னம்பிக்கை, சுதந்திரம்.எல்லாம். அவள் மட்டுமா? அநேகம் பெண்கள் அப்படித் தான்.

“தனம் தரும் கல்வி தரும்” என்று பாடி முடித்து விட்டு, மனதார இறைவனை பிரார்தித்துக் கொண்டாள்.

“கடவுளே நான் செய்தது தப்பா சரியான்னு எனக்குத் தெரியல. எனக்கு எப்பவும் நீங்க தான் கூட துணையா நிக்கணும்.. எந்த பிரச்சனை வந்தாலும் என்னால சந்திக்க முடியும். அதுக்கு நீங்க தான் எனக்குள்ள இருக்கற தைரியமா, தன்னம்பிக்கையா இருக்கணும். “

வேண்டிக் கொண்டு நெற்றியில் விபூதியும் குங்குமமும் இட்டுக் கொண்டு வெளியில் வந்தாள் .

“சார் எங்க?”
“அவரு அறைக்கு போய்ட்டாரும்மா “

“ஓ !” அடுத்து தான் என்ன செய்ய வேண்டும்? யாரிடம் கேட்பது?என்ன கேட்பது?

அதற்குள் அங்கே வந்த சித்தியும் சித்தப்பாவும்,

அதிகாரமாக வந்து சோபாவில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்தார்கள். சித்தியின் முகத்தில் அத்தனை ஆங்காரம், அதேசமயம் சித்தப்பாவின் முகத்தில் இருந்த எந்த ஒரு உணர்ச்சியும் இவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. இவள் தான் வீட்டில் வேலை செய்த சின்னப் பொண்ணு என்பது அவர்களுக்குத் தெரியாத போதும் அவள் மீது அத்தனை வெறுப்பு.

“ஏண்டி நீ அப்ப வீட்டுக்கு வந்த போதே எனக்கு சந்தேகமாத் தான் இருந்தது . யாரும் இல்லாத பிச்சைக்கார அனாதை நீ உனக்கு இந்த பங்களா வாழ்க்கை கேக்குதா? எங்களுக்கு சரி சமமா ?” பல்லைக் கடித்தார்.

“ஒரே மாசம், ஒரே மாசத்துக்குள்ள உன்னை இந்த வீட்டை விட்டு அவனே வெளில தள்ளுவான். தள்ள வைக்கறேன் பாரு!” என்று சொடக்கிக் கொண்டே கோபமாக எழுந்துக் கொண்டவர் தன்னுடைய உயர் ரக பட்டுப் புடவையின் முந்தியை தன்னுடைய வலது கையில் சுற்றிக் கொண்டார்.

“கங்கா ” குரல் ஓங்கி ஒலித்தது.

“அம்மா” என்று பதவிசாக வந்து நின்றார் அவர்,

“இந்த வீட்டுல இவ சமையல் கட்டு, சாமி அறை எங்கையும் போகக் கூடாது. தோட்டத்துல சுத்தம் செய்யற வேலையை இவதான் செய்யனும் . இவ வீட்டுல எங்கையாவது சுத்தறத நான் பார்த்தேன்னு வச்சுக்க உன்னோட குடும்பத்தோட நிலைமையை நினைவுல வச்சுக்கோ !”

சொல்லி விட்டு அவர் விறுவிறுவென்று முன்னே செல்ல சித்தப்பா இவள் அருகில் வந்து ஒரு பார்வை பார்த்து விட்டு சென்றார். அவர்களின்பார்வையில் தன்னை புழுவாக உணர்ந்தாள் அந்த நிமிடம்.

(இது என்ன பிரமாதம் வேற நிறைய பெசல் அயிட்டம் இருக்கு. நடிகர் வடிவேலு சொல்லவில்லை. ஆத்தார் தான் சொன்னது.)

கண்ணீர் நான் இதோ இருக்கிறேன் சொல்வதற்கு முன்பே, கணவனின் குரல் கேட்டது. ‘என் ராஜா என்னை அப்படி விட்டுட மாட்டாரு’ என்று சிறு வயதில் பார்த்த ராஜாவைப் பற்றி எண்ணிக் கொண்டே அவனது அறைக்கு வந்தாள்

“இதயா! இங்க வா “

“மாடியில் மூன்றாம் அறை. பெயர் தான் முதல் இரண்டு என்று. அந்த தளம் முழுவதுமே அவனுக்குத்தான் . முதலில் பெரிய அலுவலக அறை. அதை ஒட்டிய நூலகம், அதற்கு அடுத்து உடற்பயிற்சி கூடம். அடுத்து என்ன அறை என்றுத் தெரியவில்லை. பூட்டி இருந்தது.

அவள் இதற்கு முன்பு இங்கே வந்திருக்கிறாள். அலுவலகப் பணிக்காக. அப்போது அவன் அலுவலக அறையிலேயே காத்துக் கொண்டிருந்தான். அவர்கள் வீட்டில் சித்தப்பாவின் பிறந்த நாள் விழா என்று அரண்மனை களை கட்டத் தொடங்கியிருந்தது. இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு நான் அலுவலகம் வர மாட்டேன் என்று சில வேலைகளை இவளிடம் கொடுத்திருந்தான். ஒரு புது இடத்தை இவர்கள் கையகப் படுத்த வேண்டும். அதற்காக கார்த்திக்கும் வெளியூருக்குச் சென்றிருந்தான். அப்போதெல்லாம் இவள் அவனைப் பார்த்தது முழுக்க முழுக்க அலுவலக அறையில் தான். முதன் முதலில் இவள் அங்கே நுழைந்த போதே சித்தியின் பார்வை இவளை ஏளனமாக ஏற இறங்க அளவிட்டது.

சிறிது நேரம் கழித்து அவனுக்கு பழச்சாறு வாங்க வந்தவளுக்கு நல்ல மரியாதை கிடைத்தது.

“ஏய் பொண்ணே ! இங்க பாரு ஏதோ வீடு வரைக்கும் அவன் உன்ன உள்ள விட்டதுக்காக அவனை அப்படியே வளைச்சு கைகுள்ள போட்டுக்கலான்னு பாக்காத . உன்ன மாதிரி ஆளுங்களை எல்லாம் அவன் ஏன் வீட்டுக்குள்ள விடறான்னு தெரியல போயும் போயும் நீ சாதாரண வேலைக்காரி. அவன் மகாராஜா. எதையாவது செய்து அவன மயக்கி கைக்குள்ள போட்டுக்கலாம்னு பார்த்த அப்புறம் நஷ்டமும் கஷ்டமும் உனக்குத் தான்.”

இதைப் பற்றி தான் இப்போது சித்தி நினைவூட்டினாள்.

‘அப்பப்பா! எத்தனை அதிகாரத்தோரணை ?’ அப்போது இவள் பயந்து விட்டாள். பிறகு அவர் சொன்ன வார்த்தை மனதை கலங்கடித்தது . அன்று முளுக்கென்று கண்ணில் வந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு அன்று அவனுக்கு பழச்சாறு கொடுத்தாள். எந்த நேரத்தில் சித்தி வாய் வைத்தாரோ தெரியவில்லை இவளே அந்த வீட்டுக்கு மகாராணியாக வந்து நிற்கிறாள்.

இப்போது தனது அறையில் அவன் இருப்பான் என்று எண்ணியவள் அவனை உடற்பயிற்சி கூடத்தில் காணவும் அவளுக்கு ஆச்சர்யம்தான்.

அங்கே அவன் பில்லியட்ஸ் ஆடிக் கொண்டிருந்தான்.

குளித்திருப்பான் போலும். உடை மாற்றி இருந்தான். பளிச்சென்ற முகம். கன்னத்தில் மட்டும் அந்தத் தழும்பு.

சிறிது நேரம் அங்கே மௌனம் நிலவியது . என்னப் பேச வேண்டும் என்று அவன் யோசித்துக் கொண்டிருக்க, அவன் யோசனையை கலைக்கக் கூடாது என்று இவளும் அமைதியாகவே இருந்தாள் .

மௌனம் என்பது வெளியில் மட்டுமே இருக்கும். நம் மனமோ அண்ட சராசரங்களையும் அளந்து விட்டு வந்து விடும். அதற்கு பல நாட்கள் வேண்டாம். சில நிமிடங்களேப் போதும் இல்லையா ?

அவள் மனமும் அப்படித் தான் இருந்தது அப்போது.

“இவரு என்ன கேட்பாரு ? என்ன கேட்டா என்ன பதில் சொல்லணும்?” நேர்முகத் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தாள் என்று கூட சொல்லலாம் .

அந்த நேரத்தில் அவனை யாரும் அவமானப் படுத்தி விடக் கூடாது என்பது தான் அவள் நோக்கம். அது மட்டுமே அவள் நோக்கமாக இருந்தது .திருமணத்தில் இவளுக்கு அருகே இருந்தவர்கள் , “அய்யாவுக்கு என்ன குறையோ? ஏதேதோ காரணத்தை சொல்லி வர்ற பொண்ணுங்க எல்லாம் ஓடிடறாங்க.” என்று பேசிக் கொண்டிருக்கவும், மனம் தாங்காதவள் தான் உடனே , “இவனிடம் என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா?” என்று வந்து நின்றாள். இவள் அப்போது யோசிக்காத விஷயம், அவன் மூலம் இவளுக்கு ஒரு குழந்தை பிறந்தால் மட்டுமே அவர்களின் வாய் மூடும். இல்லை என்றால் இதே மாதிரிப் பேச்சுக்கள் வரும் . ஊருக்கு வாய் மெல்ல எதை வேண்டுமானாலும் அவலாக ஆவலாக வைத்துக் கொள்வார்களே. இன்று இது அடுத்த நாள், அடுத்த நிமிடம் வேறு ஒரு விஷயம் வம்பு பேச.

” ஏன் இதயா ? எதுக்கு என்ன கல்யாணம் செய்துகிட்ட? பணமா ?”

அவனின் கேள்வியில் வந்த கோபத்தை அடக்கிக் கொண்டாள் . ஏனென்றால் அவளின் ராஜாவுக்கு பணம் பற்றி தெரியாது. தனக்கு காலில் அடிபட்ட போது அவன் கண்களில் எத்தனை கருணை. வலியில் அவன் தோளைப் பிடித்திருக்கிறாள். நான் ராஜா என்ற அகம்பாவம் காட்டியதில்லை. அலுவகத்தில் வேலைப் பார்த்த போது கூட நீங்கள் எல்லாம் எனக்கு கீழ் தான் என்று எப்போதும் காட்டியதில்லை. ஆனால் இப்போது ஏன் இந்த வார்த்தை தன்னை நோக்கி செலுத்தப் படுகிறது?

“நான் பணத்துக்ககத் தான் உங்களை கல்யாணம்  செய்துகிட்டேன்ன்னு உங்களுக்கு ஏன் தோணுதுன்னு எனக்குத்  தெரியலை. பொதுவா பணக்காரங்களோட பிரச்சனை இது. எப்பவுமே மனுஷங்களை நம்பறதில்ல. போகட்டும். எனக்கு நீங்க மட்டும்தான் வேணும். உங்க அன்பு., உங்க காதல், உங்க குழந்தை “

இந்த வார்த்தை அவள் சொன்னபோது அவனுக்கு எப்படி இருந்ததோ.

அவன் அவளிடம் சொல்லும்போது அவளின் நிலை என்னவாக இருக்கும்?

ஒரே வார்த்தை தான் சொல்லும் நேரம், சொல்லும் பாவம் தோரணை எல்லாம் வேறாக இருந்தால்?

விளையாட்டில் இருந்து கவனம் இப்போது முழுவதும் அவளிடம் இருந்தது.

“என்கிட்டே இருக்கற பணம் தவிர வேற என்ன காரணம் இருக்க முடியும்? உனக்கும் எனக்கும் இருக்கற வயது வேறுபாடு., இந்த முகம் அதுல இருக்கற தழும்பு  எல்லாம் தாண்டி எதுக்கு  நீ தானே வந்து கல்யாணம்  செய்துக்க  கேக்கணும். பரிதாபமா?”

கைகளை கட்டிக் கொண்டு பேசிக் கொண்டிருந்தவன் பரிதாபமா என்று கேக்கும் போது அவள் முகத்துக்கு  அருகில் வந்து கேட்டான்.  அவனின் சூடான மூச்சுக்  காற்று  அவன் அடக்கி வைத்திருந்த கோபத்தை காட்டியது.

“உங்களுக்கும் எனக்கும் 7 வயது வித்யாசம். உங்க மூஞ்சிக்கு என்ன? இந்த தழும்பா? இதோட வால்யூ என்னனு எனக்குத் தெரியும் சார். அத்தனை குழந்தைங்களை காப்பாத்தும் போது கிடைச்ச இந்த பரிசு எத்தனை அழகு தெரியுமா? “

சொல்லிக் கொண்டே அவனின் கன்னத்தில் இருந்த தழும்பை தொடப் போனவள் கையை பின்னுக்கு இழுத்துக் கொண்டாள் .

இப்போது அவளின் கையை அவனே இழுத்து தன்னுடைய கன்னத்தில் அழுத்திக் கொண்டான். இது வேண்டும் போல இருந்தது. அதே சமயம் வேண்டாம் என்றும் மனதின் இன்னொரு ஓரம் அடம் பிடித்தது.  வாலிபத்திற்கான எந்த சந்தோஷமும் அவனைத் தீண்டியதில்லை. அவனது அசிங்கம் அவளுக்கு அழகாக இருந்தது.

முதன் முதலாக அவனின் கன்னத்தில் இருந்த தழும்பை ஒருத்தி ரசித்தாள் . முந்தைய நாள் தோழிகளுடன் சேர்ந்து வைத்துக் கொண்ட மருதாணி இப்போது அவள் கையில் நல்ல நிறம் கொடுத்திருந்தது. அந்த மருதாணி கை அவன் கன்னத்தில் பட்டதும் அவனுக்கு மேனி சிலிர்த்தது. மருதாணி வாசம் அவன் நாசிக்கு அருகில் வந்து, “என் வாசம் எப்படி? உனக்கு புடிச்சிருக்கா” என்றது. தன்னையும் அறியாமல் அவளின் இரு கைகளையும் எடுத்து தன்னுடைய கன்னத்தில் வைத்துக் கொண்டான்.

“நீ எதுக்கு என்ன கல்யாணம் பண்ணிக்கிட்ட?”

“நீங்க .. உங்களை யாரும் தப்பா பேசிக் கூடாது. அதுக்குத் தான் “

“ஏன் என்னை தப்பா பேசினா உனக்கு என்ன? என் மேல லவ்வா ?”

இளக்காரமாக வந்தது கேள்வி.

ஆமாம் என்ற பதில் அப்போது அவனிடம் சொல்ல அவளுக்கு தைரியம் வரவில்லை.

“ம் ! உண்மையான காரணத்தை சொல்லு.” குரல் லேசாக உயர்ந்தது .

“நீங்க எத்தனை தடவை எப்படி கேட்டாலும் இதுதான் பதில் “

அங்கே சிறு அமைதி..

“சரி ! சொல்லு உனக்கு எவ்ளோ வேணும்? “

“நான் கேக்கற விலையை உங்களால் கொடுக்க முடியுமா?”

“முதல்ல நீ சொல்லு”

“எனக்கு உங்க சொத்து நிச்சயம் வேணும். பணமா இல்ல. “

” வேற?

“குழந்தை. உங்க குழந்தை எனக்கு வேணும்.”

“தான் பேசத் தயங்கிய விஷயத்தை இவள் சட்டென போட்டு உடைத்து விட்டாளே “

“நீ என்ன பேசற?”

“சார் திருமணத்துக்கு அப்புறம் இது நடக்க கூடிய விஷயம் தான். இன்னிக்கு காலைல இந்த கல்யாணம் நின்ன போது உங்களுக்கு என்ன குறையோன்னு பேசிக்கிட்டாங்க. என்னால அதை ஏத்துக்க முடியல. அதுக்குத் தான் உங்களை திருமணம் செய்துகிட்டேன். உங்களுக்கு எந்த குறையும் இல்லன்னு காட்ட வேணாம்?”

இவனால் பதில் சொல்ல முடியவில்லை.

இப்போது அவன் அருகில் வந்தாள். அவன் கன்னத்தில் இருந்த தழும்பில் இதழ் பதித்தாள் ,

அவள் தனது செய்கையால் சொல்ல வேண்டியதை சொன்னாலும் இவனால் சட்டென முடிவெடுக்க முடியவில்லை.

மூச்சடைப்பது போல இருக்கவும் வேகமாக தனது அறைக்கே வந்து விட்டான். அயோ பாவம் அவன் தான் என்ன செய்வான்?அந்த அறை முழுவதுமே அலங்கரிக்கப்பட்ட பூக்கள் அவனைப் பார்த்து சிரித்தன .

என்ன செய்வது என்று புரியாதவன் தலையில் கை வைத்துக் கொண்டு அங்கே கட்டிலின் ஓரத்தில் அமர்ந்து விட்டான். நான் இப்போது இருக்கும் நிலையில் அடுத்த நிலைக்கு அவளுடன் செல்ல முடியுமா என்ற எண்ணம் தான் பயமாக அவனுக்கு வந்துவிட்டது அப்போது அங்கே வந்து அவள் ,

“காபி கொண்டு வரட்டுமா ராஜா ?” என்று அவனின் முகம் பார்த்து கேட்டான் இப்போது அவன் நிமிர்ந்து அவள் முகம் நோக்கினான்.

“நீ யாரு?” அவன் குரலில் தீவிரம்.

“உங்களுக்கு என்னை பார்த்தா யாராத் தெரியுது? நீங்க யோசிங்க. நான் காபி கொண்டு வாரேன்.”

இந்தக் குரல் அவனுக்கு புதியதாக இல்லை மிகவும் பழக்கப்பட்ட குரல் எங்கே என்று யோசித்துக் கொண்டிருந்தான். அவள் கொண்டு வந்த சூடான காபி இதமாக இருந்தது. அவன் குடித்து முடிக்கும் வரை காத்திருந்தாள். கடைசி மிடறு குடிக்க போனபோது அவன் கையை நிறுத்தி அதை இவள் வாங்கிக் குடித்தாள்.

“ஏய்! நீ எதுக்கு என்னோட எச்சில் குடிக்கற?”

“நீங்க தான் எனக்கு சாமி. சாமி எச்சில் எனக்கு பிரசாதம் “சொல்லி விட்டு ஓடியவளின் நினைவு வந்தது அவனுக்கு . அவள் இதே வார்த்தையை சொன்ன அந்த நாள் அவனுக்கு நினைவுக்கு வந்துவிட்டது.

 இப்போதும் அவன் அதே மரத்தின் நிழலில் தான் காத்துக் கொண்டிருக்கிறான் .

 துடிக்கும் இதயம் …

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page