திருக்குறள்
துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி.
அதிகாரம் நெஞ்சொடுபுலத்தல் குறள் எண் -1299
அத்யாயம் -29
“என்ன ஆழ்ந்த சிந்தனை மகாராணி ?”
“நான் மகாராணியா? ஏன் ? “
“இல்லையா பின்ன? மகாராஜா தான் உங்களை கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்கறாரே “
“அவரு என்னை கண்ணுக்குள்ள வச்சு பார்த்தாலும் சரி காதுக்குள்ள வச்சு பார்த்தாலும் சரி அவங்க சித்தி தான் மகாராணி இதை அவரே தெளிவாச் சொல்லி இருக்காரு.” இளக்காரமாக புன்னகை வந்தது அவள் இதழில் .
அவள் பேசுவதைக் கேட்டுக் கெண்டே வந்தவன் சற்று நிதானித்தான்.
“ப்ச்! அதெல்லாம் விடு. இப்ப நீ உடம்பு தேறி வரணும். வேறு எதைப் பத்தியும் யோசிக்காத. தோழியின் கைகளை தன்னுடைய உள்ளங்கையில் வைத்து அழுத்திக் கொண்டாள் கீர்த்தி.
“நானும் அதைப் பத்தி தான் யோசிச்சிகிட்டு இருக்கேன், வீட்டுக்குப் போகணும் அங்க நான் எப்படி சமாளிப்பேன்? கதிரை என்னால தனியா சமாளிக்க முடியுமா? அதுவரை தெளிவாகப் பேசிக் கொண்டிருந்தவளுக்கு குழந்தைப் பற்றிய பேச்சு வரவும் கண்கள் குளமாகியது.
” நாங்களும் இது பத்தி எல்லாம் யோசிச்சோம். ரொம்ப கவனமா பார்த்துக்கறதா இருந்தா டிஸ்சார்ஜ் பண்ணிடலான்னு டாக்டர் சொல்லிட்டாங்க. நாளைக்கு நாள் நல்லா இருக்கு. உன்கிட்டையும் ஒரு வார்த்தை கேட்டுட்டு அப்புறமா முடிவெடுக்கலன்னு நினைச்சோம். டிஸ்சார்ஜ் செய்தா கண்டிப்பா கொஞ்ச நாளைக்காவது ஒரு நர்ஸு உன் கூட இருக்குன்னு டாக்டர் சொல்லிட்டாங்க. அது தவிரவும் சூர்யா சார் உன் கூட இருக்கப் போறாதா சொன்னாரு தாமரை.”
” எல்லாவற்றையும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தவள் , “வேண்டாம் கீர்த்தி. அவரை போகச் சொல்லு . அவங்க குடும்பம் அவருக்காக காத்திக்கிட்டு இருப்பாங்க. ” என்றாள் மறுப்பாக .
கேட்டுக் கொண்டே சூர்யா இப்போது உள்ளே வரவும் கீர்த்தி வெளியேறினாள் .
“ஏன் இதயா எனக்கு இவ்ளோ பெரிய தண்டனை?”
மௌனம்.
“நான் இருக்கும்போது இனி உன்னை …”தொண்டை அடைத்தது.
“உன்னை என் இதயத்துக்குள்ள வச்சு பார்த்துக்க எனக்கு அனுமதி தருவியா ?”
கேட்டாலும் அவளின் வயிற்றில் முகம் புதைத்து அழுதவனை லேசாக முதுகு நீவி சமாதானம் செய்தாள்.
இந்த அழுகை எனக்கானது இல்லை. பல விஷயங்களை வெளிப்படுத்த தெரியாமல் குழந்தை அழுவது போல இருந்தது அவளுக்கு .
கையில் குழந்தையுடன் சூர்யா நிற்க, கார்த்திக் அன்னை லலிதாதான் திருஷ்டி கழித்து அழைத்து வந்தாள் .
அந்த நொடி சூர்யாவுக்கு தன்னுடைய அரண்மைக்குள் தன்னுடைய மனைவியை உரிமையாக அழைத்துச் செல்ல வேண்டும் என்ற ஆசை வந்தது. மனைவி சரி. மகனை யாருக்கு எப்படி அறிமுகப்படுத்துவான்? சித்தப்பா இது என் குழந்தை. இல்லையில்லை உங்க குழந்தை . நான் இந்த நிலையிலிருந்து கஷ்டப் படக் கூடாது என்று தான் இவள் அத்தனை கஷ்டங்களையும் ஏற்றுக் கொண்டாள் .
ஜீரணிக்க கஷ்டமாக இருந்தது. நர்ஸின் உதவியோடு மெதுவாக வீல் சேரில் சென்றுக் கொண்டிருந்தவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
“இது தான் காதலா? இதுவும் காதலா ? எனக்கு இந்த உண்மையான காதலை அடைய தகுதி இருக்கிறதா ?”
முன்னே சென்றுக் கொண்டிருந்தவள் இவனின் பார்வையில் தானே தலை திரும்பியது.
“வாங்க !”
மனைவியின் அழைப்பில் தன்னுடைய பெரிய நீண்ட அடியில் இரண்டாவது அடியை வைத்து அவள் அருகில் வந்து விட்டான். கையில் அவள் மருத்துவமனை ரிபோர்டுகளை வைத்துக் கொண்டிருந்தவனின் மணிக்கட்டைப் பிடித்துக் கொண்டாள் .
உள்ளே சென்று கட்டிலில் படிக்க வைத்தான்.
இனி?
இப்போது கார்த்திக் வீட்டு கீழ் போர்ஷனில் தான் இவர்கள் இருக்கிறார்கள். காலியாக இருந்த இடம் தான். பழைய ஆட்கள் காலி செய்ததும் இன்னும் புதிதாக யாருக்கும் விடவில்லை. இவள் வரப் போகிறாள் என்றதும் பெயிண்ட் அடித்து சுத்தம் செய்து அடுப்பு வசதி செய்து எல்லாம் கீர்த்தி தான் ஓடி ஓடி செய்தாள்.
“நான் உங்க எல்லாரையும் ரொம்ப தொந்தரவு கொடுக்கறனே”
“சீ! உனக்கு செய்யறதுக்கு என்னடி?”
கீர்த்தியின் அன்பில் உருகித் தான் போனாள் தாமரை .
வீட்டுக்கு வந்ததும் சூர்யா அவளைத் தாங்கியதில் யாராக இருந்தாலும் உருகித் தான் போவார்கள். இவளும் தான். எல்லா விஷயங்களையும் ஓரமாக ஒதுக்கினாலும் அவர்களின் அந்தரங்க உறவை அவன் கொச்சைப் படுத்தியது அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை .
சூர்யா அடுத்த சில மாதங்களுக்கு ஊருக்கு வர முடியாது என்று குணசேகரன் மூலம் சித்தப்பாவுக்கு செய்தி அனுப்பி விட்டான். இந்த நேரத்தில் அவர்களின் இத்தனை வருட நம்பிக்கை துரோகத்தை அவனால் ஜீரணிக்க முடியவில்லை.
ஒரு புறம் காதல் மனைவி. அப்படியா? அட ஆமாங்க. எப்ப கதிர் விஷயம் தெரிந்ததோ அப்போதே உனக்கு நான்தாண்டா என்று அவன் மனதில் ஆட்சி செய்ய ஆரம்பித்து விட்டாள் இதயா .
அவளுடைய கவனிப்பு கதிருக்கு அதிகமாகவே இருந்தது. இவன் முகம் பார்ப்பதை அவள் தவிர்க்கும் போது அருகில் அமர்ந்து பிடிவாதமாக அவள் கையைக் கொண்டு இவனே தலைக் கோதிக் கொள்வான். குழந்தைக்கு முத்தம் கொடுத்தால் தானும் வந்து கன்னம் நீட்டுவான் .
“பாப்பா கை எங்க?”
“சாதம் போட்டு பப்பு போட்டு காய் ..
“நெய் நெய்” என்று கதிர் கத்தினான். சரி! சரி! நெய் போட்டு பிசைந்து காக்காக்கு ஒரு வாய், குருவிக்கு ஒரு வாய் என்றால், “எனக்கு” என்று கற்பனை விளையாட்டுக்கு கூட வந்து வாய் நீட்டுவான்.
அவன் தொலைந்துப் போன தன்னுடைய இள வயதை மீட்டுக் கொள்ள முயற்சி செய்கிறானா? அல்லது என்னுடைய காதலை அடைய முயற்சி செய்கிறானா? புரியா குழப்பத்தில் இருந்தாள் தாமரை .
நர்ஸு இல்லாத நேரங்களில் பாத்ரூம் போக வேண்டும்என்று மெதுவாக எழுந்து வாக்கர் உதவியுடன் அவள் நடக்க ஆரம்பித்தால் போதும் எங்கிருந்தாலும் வந்து தூக்குவான்னு நினைக்காதீங்க . அப்படி எல்லாம் தூக்க மாட்டாங்க. காதல் கதை என்றால் இப்படித் தானா ? அவளைத் தூக்கி வீல் சாறில் அமர்த்தி அழைத்துக் கொண்டு போவான். அந்த அம்மாக்கு பண்ணி இருக்கறது முதுகு ஆப்ரேஷன். அப்படி நெனைச்ச நேரத்துக்கு ஹீரோ தூக்கக் கூடாது. ஏதாவது காதல் சீன் வந்தாலே அவன் தூக்கினான். கழுத்தை கட்டிக் கொண்டாள் இப்படியே யோசிக்கப் படாது. இன்னொரு விஷயம் . பெட் பேன் பத்தி எல்லாம் நாம இப்ப யோசிக்க வேணாம்.
முதலில் சில நாட்கள் ரெஸ்ட் ரூம் போக வேண்டுமென்றால் அவளுக்கு நரகம் தான் .
“அம்மா!” முதல் முறை கத்தி விட்டாள் .
“அடுத்த முறை நான் உள்ள வரட்டுமா ?” கேட்டவனை ஆச்சரியமாகப் பார்த்தாள் .
“ஊருக்கே ராஜானாலும் பொண்டாட்டிக்கு புருஷன்தாண்டி. உனக்கு கஷ்டமா இருக்குன்னா வேணாம். நான் இங்கையே நிக்கறேன். கதவு தாழ் போடாத.”
சொன்னவனின் தலை கலைத்து விளையாட ஆசை வந்தது.
“அப்படி ஒன்னும் கையை கஷ்டப்பட்டு அடக்க வேணாம்” அவனே அவள் கையை எடுத்து தலை கலைத்துக் கொண்டான்.
இதயா படுத்துக் கொண்டால் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கம் திரும்ப முடியாது. பிள்ளை எழுந்து விடுவான் என்று அமைதியாக வலியை பொறுத்துக் கொள்வாள். அவளுக்கு வலிக்கும்போது எல்லாம் அவனும் அந்த வலியை உணர ஆரம்பித்தான். இது காதலா? திருமண பந்தமா ? எங்களுக்குள் இருப்பது என்ன? தங்கத்தில் தாலி இல்லாமல் கயிறில் தாலி கோர்த்திருந்தாள் . இவள் தானே மகாராணி ? இவள் இப்படி இருக்க நான் தானே காரணம்? இந்தக் கவலை அவன் மனதை கசக்கி பிழிந்து கொண்டிருக்கிறது.
இவர்கள் சொன்னது எல்லாம் உண்மைதான் என்று நம்பினாலும் சரியான ஆதாரம் தேவை. என்னதான் இருந்தாலும் அவர்கள் தான் தன்னை சிறு பிள்ளை பிராயத்திலிருந்து வளர்த்தது. ஒரு தனியார் நிறுவனத்திடம் அதை எல்லாம் ஊர்ஜிதப்படுத்தும் வேலையை ஒப்படைத்தான்.
அடுத்தது யாரை வேட்டையாடலாம் என்று இங்கே சித்தப்பா மனமும் உடலும் அலைபாய அவர் மகனோ எப்படி பெண்ணாக மாறுவது என்று ஆராய்ந்துக் கொண்டிருந்தான் . அவனைச் சொல்லியும் குற்றமில்லை. அவனின் பார்ட்னருக்கு திருப்தி வரவில்லை என்ற பேச்சு வர ஆரம்பித்து இப்போதெல்லாம் அது சண்டையாகப் போகிறது. ஆதவன் தெரிந்தோ தெரியமலோ காதல் வலையில் சிக்கி விட்டான். அவனுக்காக இவன் எந்த விஷயத்தையும் செய்யத் தயங்கப் போவதில்லை. அவன் வேண்டும். நித்தமும் அவன் வேண்டும். அளவுக்கு மீறிய காமம், அது போதாது என்று போதை மருந்து எல்லாம் சேர்ந்து ஆதவனின் வாழ்க்கை அஸ்தமித்துக் கொண்டிருக்கிறது . இதழோடு இதழ் பதித்து முத்தம் கொடுத்து அதனால் வரும் போதையா அல்லது அவன் வாயிலிருந்து இவன் வாயிக்கு மாறும் போதை தான் போதையா ? தெரியாமல் கட்டுண்டு கிடக்கும் நாட்கள் ஏராளம். இப்போது அது இல்லாமல் இவனுக்கு கஷ்டமாக இருக்கிறது. அவனோ வேறு ஒரு பெண்ணை, அட சீ ஆணா பெண்ணா? ஏதோ ஒன்று தேடிக் கொண்டிருக்கிறான். பல இடங்களில் இன்பம் அடைகிறான். அவன் இல்லாத வாழ்க்கை ஆதவனுக்கு நரகமாக போய்க் கொண்டிருக்கிறது.
===========================================================================
அந்த டிடெக்ட்டிவ் ஏஜென்சி நிறுவனம் கொடுத்த விவரங்கள் மூலம் தாமரை சொந்த அத்தை பெண் தான் என்பது அவனுக்குத் தெரிந்தது. சொன்னவர் பல ஆண்டுகள் அவர்கள் அரண்மனையில் இருந்து வேலை பார்த்த கணக்குப் பிள்ளை. முதலாளியின் பார்வை தன்னுடைய பெண் மீது பதியவும் ஏதோ சாக்கு சொல்லி வேலையை விட்டு நின்று தருமபுரி பக்கம் சென்று விட்டார்.
இதயா தன்னுடைய சொந்த அத்தை பெண் தான் என்று தெரியவும் அவளுக்கு முகமெங்கும் முத்தமிட்டு தன்னுடைய காதலை வெளிப்படையாகவே சொன்னான் சூர்யா .
விஷயம் என்ன என்று தெரியாவிட்டாலும் அவனின் முத்த மழை அவளுக்குப் பிடித்தது . இதைப் பற்றி அவளிடம் சொல்ல வேண்டுமா என்ற யோசனைதான் அவன் மண்டைக்குள் .
“மீ மீ” என்று கதிரும் முத்தம் வாங்கி கொள்ள வந்தான் “அப்பா சொல்லு கிஸ் கிடைக்கும் “
“அப்பா! அப்பா! என்று குதித்தான் “
மனைவியின் முகம் மாறுவதைப் பார்த்த சூர்யா, நீ அம்மான்னா நான் அப்பா தானே “
“அது..நீங்க..நீங்க எப்படி அங்க …அதாவது நீங்க அங்கப் போகும்போது நான் கதிரை உங்க கிட்ட கொடுக்க முடியாது. “
“நானே அங்க போவேணான்னு தெரியல இதயா “
“ஏன் ?”
“பயமா இருக்கு இதயா “
“பயமா உங்களுக்கா ?”
அவன் என்ன பதில் சொல்லப் போகிறான் …
துடிக்கும் இதயம் …
