சுற்றுலா பயணிகள் நிறைந்த மூணாறின் பரபரப்பான மதிய வேளையில் வருணின் கார் அவன் வீட்டிற்கு சீறிக்கொண்டு சென்றது.
‘இப்போது எங்கே என்னை கூட்டி செல்கிறாய்?’ என்று கேட்கவும் துணிவின்றி, இயலிசை கண் மூடி காரை இறுக பற்றி கொண்டு அமர்ந்திருந்தாள்.
முதலில் பார்த்ததை விட மிக பெரிய அளவிலான வீட்டிற்கு முன் கார் நின்றதும் அவளுக்கு கொலையே நடுங்கியது. வருண் இங்கே முன்பை விட திமிராக நடந்து செல்ல, வழியில் எதிர்பட்ட வேலைக்காரர்கள் எல்லாம் வந்து அவனிடம் வணக்கம் வைத்தார்கள்.
மாலையும் கழுத்துமாய் அவன் பின்னால் வரும் ஒருத்தியை எவரும் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. கண்டு கொண்ட சிலரும் மூஞ்சியை திருப்பி கொண்டு செல்ல, முன்பின் தெரியாத தன் மீது அவர்களுக்கு ஏன் இத்தனை கோபம் என்று அவளுக்கு புரியவில்லை.
மாடிவரையில் அவன் பின்னால் ஓட்டமும் நடையுமாக வந்தவள் ஒரு அறைக்குள் அவன் நுழைந்ததும் உள்ளே செல்ல தயங்கி வாசலிலேயே நின்று விட்டாள். தனியாக கீழே செல்லவும் பயமாய் இருந்தது, தகவல் கேட்க வசதியாய் மாடி பக்கம் வேறு யாரும் வரவும் இல்லை. பல நிமிடங்கள் கழித்தும் அவன் வெளியே வராததால் கதவை தட்டி பார்த்தாள், பதிலில்லை.
கதவை பூட்டாமல் வெறுமனே சாத்தி விட்டிருந்ததால் அவனை தேடி பார்த்திட நினைத்து உள்ளே நுழைந்தாள். ரொம்பவும் பெரிய அறை, நட்ட நடுவில் கிங் சைஸ் பெட், பெட்டின் பின்புறம் பால்கனி கதவு. இடதுபுறம் சோபா செட், டிரஸ்ஸிங் டேபிள், பாத்ரூம் கதவு என வரிசையாய் இருக்க, வலதுபுறம் ஒரு பஞ்ச்சிங் பேங் மட்டும் தனியே தொங்கி கொண்டிருந்தது.
இவ்வளவு நேரம் இதைத்தான் அடித்து துவைத்திருப்பான் போல, பாவம் வாங்கிய அடியால் வளைந்து நெளிந்து அந்தரத்தில் ஆடிக்கொண்டு இருந்தது. பாத்ரூமுக்குள்ளிருந்து தண்ணீரின் சத்தம் கேட்க அவன் அதன் உள்ளிருப்பது அவளுக்கு ஊர்ஜிதமானது.
அவள் ஏற்கனவே வெளியே அரை மணி நேரத்திற்கும் குறையாமல் நின்றிருந்ததால் கால்கள் ஓய்வை கெஞ்சிட, இயல் முன் யோசனையின்றி போய் பெட்டின் ஓரத்தில் அமர்ந்தாள். வெளிவந்த வருண் அவளை அங்கே கண்டதும் செய்த முதல் வேலை சரேலென அவளை இழுத்து கீழே தள்ளி விடுவதுதான்.
ஏற்கனவே காலையிலிருந்து சாப்பிடாமல் இருந்ததாலும், அவன் கீழே தள்ளி விடுமளவு மோசமாய் இருப்பான் என எதிர் பார்க்காததாலும் அவன் இழுத்த போட்ட வேகத்திற்கு இரண்டடி தள்ளி போய் விழுந்தாள். தூக்கி எறியப்பட்ட பொம்மை போல பறந்து போய் விழுந்ததால் கை கால் மூட்டுகளில் நல்ல சிராய்ப்பு.
“யார கேட்டு என் பெட்ல உட்க்காந்த?”
கை காலில் ரத்தம் கசிவதை கூட பொருட்படுத்தாமல் அவளை முறைத்து கொண்டு நின்றவனை பார்த்து, அவளும் கண்ணீரை துடைத்து விட்டு எழுந்தாள்.
“நான் உங்க பெட்ல கூட உக்கார கூடாதுன்னா எதுக்காக பொய் சொல்லி என்ன கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்தீங்க?” விசும்பலோடு வந்து விழுந்தது அவள் வார்த்தைகள்.
“லிசன், நீ கேக்குற கேள்விக்கெல்லாம் நான் பதில் சொல்லனும்னு அவசியம் இல்ல, மூவ்” என்று அங்கிருந்து போக முயன்றவன் முன்னால் வந்து நின்று,
“பதில் சொல்லலன்னா நான் உங்கள விட மாட்டேன்” என்றாள்.
வருண் அவளை ஆச்சரியமாய் பார்த்தான், ‘பொதுவாக இந்த சூழ்நிலையில் மற்ற பெண்கள் என் பண செழுமையை கண்டு பல் இளித்திருப்பார்கள், இல்லையென்றால் வாழ்க்கையே போச்சு என்று அழுது புரண்டு அம்மா வீட்டை தேடி ஓடியிருப்பார்கள். இவள் என்னவென்றால் நான் பலம் வாய்ந்த எதிரி என்று தெரிந்துமே அசராமல் எதிர்த்து நிற்கிறாளே, ஒரு வேளை நட்டு கழண்ட கேஸா?’ என்று அவளை கூர்ந்து கவனித்தான்.
அழுதழுது சிவந்திருந்தாலும் தெளிவான கண்கள், நடுக்கத்திலும் அவனுக்கு வழிவிட மறுத்து குறுக்காக நிற்கும் முருங்கை காய் கரங்கள். தன்னை விட ஐந்து வயது சின்ன பெண்தான் என்றாலும் முகத்தில் பயத்தை மறைக்க முயன்று துணிச்சலாய் இருப்பதாய் காட்டி கொள்ள முயல்வதை பார்த்து, அவன் மனதினுள் இளநகை பூத்தது. இதுவே வேறு ஒரு சூழ்நிலையாய் இருந்திருந்தால் நிச்சயம் அவன் அவளில் தன்னை தொலைத்திருப்பான்.
இயல் தன் கீச்சு குரலில், “அட்லீஸ்ட் இந்த வீட்ல நான் என்ன செய்யலாம் என்ன செய்ய கூடாதுன்னாவது எனக்கு தெரியனும்ல, அதுக்காகவாது என் கேள்விக்கு பதில் சொல்லுங்க..” என்றாள்.
அவளெதிரில் மிடுக்காக நின்று கைகளை கட்டி கொண்டு வருண், “கேளு” என்றான்.
“நீங்க யாரு?”
” ‘டேஸ்-டீ’ டீ கம்பெனியோட எம்டி. இப்ப உனக்கு புரியுமே..”
அவள் சந்தேகமாய், “அப்போ அந்த ஆக்ஸிடென்ட்ல இறந்தது…”
“ஆமா, என்னோட குடும்பம்தான்..”
“அப்புறம் என்னை ஏன் கல்யாணம் பண்ணீங்க?”
“உங்க மூணு பேரோட நிம்மதிய அழிக்க, வாழும் போதே நரகத்த காட்ட..”
“எதுக்காக?”
“ரவியால உண்டான என்னோட இழப்ப கொஞ்சமாவது ஈடு கட்றதுக்காக..”
“உங்களுக்கு இருக்குற வசதிக்கும் பவர்க்கும் என்னை கல்யாணம் பண்ணாமலேயே அத செய்ய முடியுமே”
“ஆனா உன்ன வேற எவனாவது காதலிச்சு தொலச்சிருந்தா, நீ இங்கிருந்து தப்பிச்சு போய் சந்தோஷமா வாழ்ந்திடுவியே!!”
“என்னை என்ன செய்ய போறீங்க?”
“நீ பயப்படுற அளவுக்கு எதுவும் இல்ல, உங்க அணணன் முழிக்கிற வரைக்கும் ஜஸ்ட் இங்க வேலக்காரியா என் கன்ட்ரோல்ல வைக்க போறேன்.”
“நான் போலீஸ், மனித உரிமை ஆணையம்னு போனா என்ன செய்ய முடியும் உங்களால?”
“தாராளமா போ, கேஸ் பைல் பண்ணு, என்னை எதிர்த்து உன்னால ஒரு ஆணியும் புடுங்க முடியாது. ஏன்னு தெரியுமா நான் உனக்கு தாலி கட்டுனதுக்கு எந்த ஆதாரமுமில்ல. ஆனா நான் உங்க அம்மாகிட்ட பணம் கொடுத்ததுக்கு எல்லா ஆதாரமும் இருக்கு. எவன் வந்து கேட்டாலும் நீ இந்த வீட்டு வேலக்காரினு அடிச்சு சொல்லுவேன், உங்க அம்மாவுக்கு இன்னும் கொஞ்சம் பணம் குடுத்தா போதும், அவங்களே கூட எனக்கு ஆதரவா சாட்சி சொல்ல ரெடியா இருப்பாங்க.”
அவளுள் பதற்றம் அதிகமானது, அவன் சொல்வது அத்தனையும் சரிதான். இது தன் சக்திக்கு மீறிய விஷயம் என்ற நிதர்சனம் அவளுக்கு தாமதாக புரிய அவனிடம் இறைஞ்ச ஆரம்பித்தாள்.
“என்னத்தான் கல்யாணம் பண்ணி என் வாழ்க்கையே அழிச்சுட்டீங்கள்ள, இனிமே ஆயுசுக்கும் வேலக்காரியா இங்கயே இருக்குறேன். அதுக்கு பதிலா என் அண்ணன விட்டுட கூடாதா? உணர்ச்சி இல்லாம உயிர மட்டும் சுமந்திட்டு இருக்குறவனுக்கு கொஞ்சம் இரக்கம் காட்டுங்களேன்.”
“என்னோட சைடு நாலு உயிர் போயிருக்கு, உங்க சைடு மூணு உயிரத்தான நான் கேக்குறேன். என்னால உங்களுக்கு காட்ட முடிஞ்ச இரக்கம் அவ்ளோதான்.”
அவள் அழுகையோடு, “பழி வாங்கனும்னு நினைக்கிறவரு எங்கள பாத்ததுமே கொல்ல வேண்டியதுதான? இல்ல என்னையாவது இப்பவே கொன்னுட வேண்டியதுதான?..”
“ஏன் அவசரபடுற? நான் டாக்டர்ஸ் கிட்ட நல்லா விசாரிச்சுட்டேன், ஒன் ஆர் டூ மன்த்ஸ்க்குள்ள ரவி கண்ணு முழிச்சிடுவானாம். அது வரைக்கும் மட்டும் நீ உயிர கையில புடிச்சிட்டு இருந்தா போதும்.”
“அதுக்கப்புறம்?”
“சிம்ப்பிள், அவன் கண்ணு முன்னால உன்னையும் உங்க அம்மாவையும் பொணமா தூக்கி போட்டுட்டு அவன தூக்கி ஜெயில்ல போட்ருவேன். அவன் வாழ்க்கையயே வெறுத்த பின்னாடி, அவனையும் கொன்றுவேன்.”
மிரண்ட பார்வையோடு அவனை பார்க்க, வருண், “ஏன்னு புரியலயா? அவனுக்கு நீதான் ரொம்ப இஷ்டமாமே.. உன்ன பொணமா பாக்குற வலி இருக்கே, அது அவன் சாகுற வலிய விட கொடுமையா இருக்கும் தெரியுமா?”
“ஒருவேள அதுக்கு முன்னாடியே நான் செத்து போயிட்டா?” அவள் குரலில் துக்கம் நிறைந்து இருந்தது.
“இட்ஸ் வெரி சிம்பிள், நீ தப்பிச்சிடுவன்ற பயம் இல்ல எனக்கு. ரவி கண்ணு முழிக்கிற வரைக்கும் ஒரு ஐஸ் பாக்ஸ்ல உன் டெட் பாடிய ப்ரீஸ் பண்ணி வச்சிட்டு போய்கிட்டே இருப்பேன்.”
“என் அண்ணனுக்காக நான் உங்கள கொன்னுட்டா?”
“நீ செத்தாலும் சாவியே தவிர, இன்னொரு உயிர கஷ்ட படுத்த மாட்டன்னு எனக்கு நல்லாவே தெரியும். என்ன பாக்குற? உன்ன பத்தி எதுவும் தெரியாமலேயா குழந்தை இருக்குற வீட்டுக்குள்ள விடுவேன்னு நினச்ச? ஸீ, இதுக்கு மேல உன்கிட்ட நின்னு பேசிட்டு இருக்க எனக்கு டைம் இல்ல, உனக்கு அழுறதுக்கு ஒன் டே டைம் தர்றேன். இன்னிக்கே நல்லா அழுது முடிச்சுட்டு நாளைல இருந்து வேலைய பாக்க ஆரம்பி” என்றவன் அவளை அப்படியே அம்போவென விட்டுவிட்டு சென்றான்.
இயலுக்கும் யோசிக்க சிறிது நேரம் தனிமை தேவைப்பட்டது, மனித உருவில் இருக்கும் இந்த எமனை எதிர்த்து தனக்கு உதவும் வகையில் யாராவது இருக்கிறார்களா என்று யோசிக்க தொடங்கினாள். அவளுக்கு தெரிந்ததெல்லாம் அடித்தட்டு மக்கள், அவர்களும் இந்த ஆக்ஸிடென்ட் சம்பவத்திற்கு பிறகு கொஞ்சம் ஒதுக்கம் காட்டியது ஏன் என இப்போதுதான் புரிந்தது.
அவளை கொல்வதற்கான மொத்த திட்டத்தையும் இவ்வளவு தைரியமாக அவளிடமே சொல்லி விட்டு போகிறான் என்றால், அவனுக்கு எவ்வளவு தூரம் அதிகார பலம் இருக்க கூடும் என்று அவளுக்கு தெளிவாக தெரிந்தது. மொத்த உலகமும் வருணுக்கு ஆதரவாக நிற்பதை போலவும், எதிர் திசையில் தான் தனி ஆளாய் நிற்பது போலவும் அவள் மனதினில் மாய தோற்றம் தோன்றியது.
அவனிடமிருந்து தங்களை காப்பாற்றி கொள்ள சில காலம் அவன் பேச்சிற்கு கட்டு பட்டுதான் ஆக வேண்டும் என்று தெளிவாக தெரிந்தது. எழுந்து மாலையை கழற்றி கையில் எடுத்து கொண்டு முகத்தை முந்தானையால் அழுந்த துடைத்து கொண்டு கீழே இறங்கி வந்தாள். அதே நேரத்தில் வருண் தருணை ஸ்கூல் முடித்து அழைத்து வந்தான்.
இயல், “நான் எங்க தங்கனும்?”
“குட், இப்பத்தான் நீ உன் சிச்சுவேஷன புரிஞ்சிகிட்ட போல. வீட்டுக்கு பின்பக்கமா வொர்க்கர்ஸ் தங்குறதுக்குனு குவார்ட்டர்ஸ் இருக்கு. ஒரு நாலஞ்சு ரூம் சும்மா இருக்கும், உனக்கு புடிச்சத செலக்ட் பண்ணிக்கோ போ..”
“என்னோட டிரஸ்ஸ எல்லாம் நான் என் வீட்டுக்கு போய் எடுத்துட்டு வரனும்.”
“நீ போக தேவையில்ல, போன் பண்ணி உங்க அம்மாவ எடுத்து வைக்க சொல்லு டிரைவர அனுப்பி எடுத்துட்டு வர சொல்றேன்” என்று தன் செல்போனை தந்துவிட்டு தருணுடன் மாடிக்கு சென்றுவிட்டான்.
இயல் வீட்டு நம்பருக்கு போன் போட்டாள்.. கோகிலா போனை எடுத்ததும், “அம்மா நான் இயல் பேசுறேன். இவரு நம்மள பொய் சொல்லி ஏமாத்திட்டாரு..”
“என்னடி சொல்ற?”
“ஆமா, இவரு ரவி கூட ஒண்ணும் வேல பாக்கல, பெரிய டீ கம்பெனி ஓனரும்மா, பெரிய பணக்காரரு. ஏன் இப்டி செஞ்சாருன்னா..” என்று அவள் முடிக்கும் முன்,
“ரொம்ப நல்லதா போச்சுடி, ஹாஸ்பிடல் பில் கட்டி முடிஞ்சது, இனிமே வீட்டு செலவுக்கு என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருந்தேன். நல்ல நேரத்துல வந்து என் வயித்துல பால வாத்தடி. நீ ஒண்ணு பண்ணு அவன்கிட்ட கொஞ்சம் அப்டி இப்டின்னு பேசி அவன கைக்குள்ள போட்டு வச்சுக்கோ.”
அவள், “அம்மா..” என்று அலறினாள்,
அதை பொருட்படுத்தாத கோகிலா, “நான் சொல்றதக் கேளு, புதுசா கல்யாணம் ஆனவன் நீ சொன்னதுக்கெல்லாம் பூம்பூம் மாடு மாதிரி தலை ஆட்டுவான். எப்டியாவது அவன தாஜா பண்ணி வீட்டு செலவுக்கு வாரா வாரம் ஒரு பத்தாயிரம் குடுத்துவிடு.”
“ஐயோ.. இல்லம்மா, நம்ம மூணு பேரையும் கொல்றதுக்காக தான் இதெல்லாம் பண்றாராம். நீங்க உடனே அண்ணன கூட்டிட்டு இந்த ஊர விட்டே தப்பிச்சு எங்கியாவது போயிடுங்கம்மா.”
“என்ன இயல் பெரிய பணக்காரனுக்கு பொண்டாட்டி ஆனதும் எங்கள ஊர விட்டு விரட்ட பாக்குறியா? எங்கள கொல்ல நினைக்கிறவன், நம்மள பாத்ததுமே என்னையும் ரவியையும் கொண்ணு போட்டுட்டு உன்ன எங்கயாவது தூக்கிட்டு போய் இருக்கலாம்ல?.. இத்தன நாளா சும்மா இருந்திருப்பானா, இல்ல இவ்வளவு பணம் குடுத்து உன்ன கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போயிருப்பானா?”
” …… “
“தப்பு கிப்புனு எனக்கு கிளாஸ் எடுக்காத, ஆம்பளனா அப்டிதான் இருப்பான், நீ அட்ஜஸ்ட் பண்ணி போற வழிய பாரு. உன்ன ஒண்ணும் ஊரு உலகத்துல இல்லாதத செய்ய சொல்லல புரிஞ்சதா?” என்றதும் இயல் போனை கட் பண்ணி விட்டு வாய் மூடி அழ தொடங்கினாள்.
அவன் தன் தாயை எவ்வளவு தூரம் சரியாக கணித்து வைத்திருக்கிறான் என்றும், கடவுள் ஏதாவது கதவை திறக்கும் வரையில் தான் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்றும் இயல் உணர்ந்து கொண்டாள். வருண் தன் போனில் ஆட்டோ கால் ரெகார்டிங் ஆப் வைத்திருப்பது இயலுக்கு தெரியாததால், அதை அப்படியே அவனிடம் திருப்பி தந்துவிட்டு குவார்ட்டர்ஸை பார்க்க சென்றுவிட்டாள்.
இங்கே அவன் அவர்களின் உரையாடலை முழுவதும் கேட்டு முடித்து, “ஸோ.. அம்மாவும் பொண்ணும் சேர்ந்து ப்ளான் பண்ணி என்னை கவுக்க போறீங்களா???” என்று உறுமினான்.
காதால் கேட்டதை மட்டும் வைத்து இயலின் திட்டத்தை தெரிந்து கொண்டதாய் நினைத்தவனுக்கு, அவளின் உண்மையான உணர்வுகளை படம்பிடிக்க முடியாது போன செல்போனால் உதவ முடியவில்லை.
