அர்ப்பணம் 13

அவனது குரலைக் கேட்டதுமே அதன் திசையைக் கண்டறிந்து தங்களது வீட்டு வாயிலை நோக்கித் தங்களது பார்வைகளை வீசினர் வீட்டினுள் இருந்தவர்கள். 

அங்குத் தனது தந்தை மற்றும் மற்ற உறவினர்களுடன் கம்பீரமாக நின்று கொண்டிருந்த வீரபத்திரனைக் கண்டதும் தங்கப்புஷ்பத்தின் வீட்டில் இருந்தவர்களுக்குத் திகைப்பு உண்டானது எனலாம்! 

அதுவும் அவனது அந்த மாப்பிள்ளைத் தோரணையும், அவனுடன் வந்து இருந்த உறவினர்களின் கரங்களில் இருந்தப் பொருட்களைக் கவனித்து விட்டு அதைக் கேள்வியாக நோக்கினர். 

அதைப் புரிந்து கொண்டு,”நாங்க உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தைப் பத்திப் பேசனும். உள்ளே வரலாமா?”என்றிருந்தார் வீரபத்திரனின் தந்தையான தர்மராஜ். 

அவரும் பக்கத்து ஊரின் பெருந்தலை என்பது தங்கப்புஷ்பத்தின் தந்தைக்கு நன்றாகத் தெரியும் ஆதலால்,”உள்ளே வாங்க”என அவரது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு அவர்களைத் தங்களது வீட்டிற்குள் வருவதற்கு அனுமதி அளித்து விட்டிருந்தார் காளிமுத்து. 

அவர்களை உரிய இடத்தில் அமரச் செய்து, குடிக்கத் தண்ணீரைக் கொடுத்து உபசரித்தார் வள்ளி. 

அதை ராஜனும், அவனது பெற்றோரும் ரசிக்கவில்லை! 

அதே சமயம் தனது விழிகளைக் கண்ணீர்த் துளிகள் மறைத்து இருந்ததன் காரணமாகத் தங்களது வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தாளிகளின் பிம்பங்கள் மங்கலாகத் தெரிந்ததால் அவர்களைத் தெளிவாக காணும் நோக்கத்துடன் தனது கண்ணீரைப் புடவைத் தலைப்பால் துடைத்துக் கொண்டு விட்டு நிமிர்ந்து பார்த்தவளுக்கு வீரபத்திரனின் தோற்றமும், அவனது கூரிய நேர்ப் பார்வையும் காணக் கிடைத்தது. 

அவனது அந்த உடல்மொழியிலும், முகத்தில் தெரிந்த தீவிரத்தையும் கண்டு ஏற்கனவே பயத்தில் இருந்தவளோ, மேலும் நடுங்கிப் போய் விட்டாள் தங்கப்புஷ்பம்! 

அப்பொழுது,“இங்காருங்க! எங்க வீட்டுல ஒரு நல்லக் காரியம் நடக்கப் போறச் சமயத்தில் இப்படி நீங்கத் திடுதிப்புன்னு வந்துருக்கீயளே? என்னச் சமாச்சாரம்?”என்று வீரபத்திரன் மற்றும் அவனுடன் வந்தவர்களிடம் கேள்விக் கேட்டார் சற்குணம். 

உடனே,”நாங்களும் ஒரு நல்லக் காரியத்தைப் பத்திப் பேசத் தான் வந்திருக்கோமுங்க”என்று அவருக்குப் பதிலளித்தான் வீரபத்திரன். 

அதைக் கேட்டு அங்கேயிருந்த அனைவரும் அவனைக் குழப்பத்துடன் ஏறிட்டனர். 

“நீங்க என்னச் சொல்ல வர்றீய?”என்றார் வளையாபதி. 

“நாங்க காளிமுத்து ஐயாவோட பொண்ணுத் தங்கப்புஷ்பத்தைப் எங்கப் பையனுக்குக் கல்யாணத்துக்குப் பேச வந்திருக்கோமுங்க!”என்று தாங்கள் வந்த விஷயத்தை அவரிடம் கூறியிருந்தார் தர்மராஜ். 

அதில் தங்கப்புஷ்பமும், அவளது பெற்றோர் மட்டுமின்றி ராஜன், வளையாபதி, சற்குணத்திற்கும் அதிர்ச்சி அடைந்து போனார்கள். 

“என்னய்யா கூறில்லாத் தனமாகப் பேசுறீய? நாங்க எங்களோட பொண்ணை எந்தங்கச்சிப் பையனுக்குக் கட்டி வைக்கிறதுக்காகப் பரிசம் போட்றதுக்காகத் தான் நாங்க எல்லாரும் இங்கே கூடியிருக்கோம்! அப்படி இருக்கும் போது நீங்க எப்படி இந்த மாதிரியான ஒரு எண்ணத்தோட எங்க வீட்டுக்கு வந்திருக்கீய? என் உங்களுக்கு இந்த விஷயத்தை யாரும் தெரியப்படுத்தலையா என்ன?”என்றக் காளிமுத்துவோ, 

அங்கே நின்றிருந்த அவனது நண்பனான சித்தனிடம், 

“நீ இந்த ஊர்க்காரன் தானே? நீ இவங்களுக்கு இந்தச் சேதியைச் சொல்லலையா என்ன?”என அவனிடம் அதட்டிக் கேட்கவும், 

அதற்கு அவனோ,”அதைப் பத்தி எல்லாம் தெரிஞ்சுத் தான் இவுக எல்லாரும் இங்கே வந்துருக்காவ!”என்று மொழிந்தான் சித்தன். 

அதைக் கேட்டவுடனேயே,”ஓஹோ! அப்படியா விஷயம்?”என்றச் சற்குணமோ, 

“ஏம்ப்பா! எல்லாத்தைப் பத்தியும் தெரிஞ்சும் நீ வந்து பொண்ணுக் கேட்கிறது நியாயமா சொல்லு?”என்று வீரபத்திரனிடம் வினவினார். 

அதில் தனது விழிகள் சிவக்க,”எல்லாம் நியாயம் தான்ங்க! நாங்க அந்தப் பொண்ணோட தாய், தகப்பன் கிட்டே பேசிக்கிறோம்! நீங்க அமைதியாக இருங்க!”என்றதுமே,

அவன் தன்னை அவமதித்ததை தாங்கிக் கொள்ள முடியாமல் தனது அகங்காரம் தலை தூக்கி விட்டதால், 

“நீ எங்கண்ணே, அண்ணிக்கிட்டே தானே பேசனும்னு நினைக்கிற? பேசு! அவுக சொல்றப் பதிலைக் கேட்டுட்டுச் சந்தோஷமாகத் திரும்பிப் போ!”எனத் தனது இதழ்களை இகழ்ச்சியாக வளைத்து அவனிடம் தெரிவித்தார் சற்குணம். 

“அதானே! மாப்பிள்ளை! தங்கச்சிம்மா! இவுகளுக்கு நல்லப் பதிலைச் சொல்லி அனுப்பி வுடுங்க! பரிசம் போட்றதுக்கான நல்ல நேரம் போயிடப் போகுது!”என்றிருந்தார் வளையாபதி. 

தனது மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டிப் பெண் கேட்டு வந்திருக்கும் அந்த ஆடவனைக் கொலைவெறியுடன் பார்த்திருந்தான் ராஜன். 

ஆனாலும் அவனது அந்த முரட்டுத் தோற்றத்தைக் கண்டுத் தனது பெற்றோரையும், மாமா, அத்தையையும் பேச விட்டுத், தான் அடக்கி வாசிக்க முடிவெடுத்து நடப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, 

தன் இரு விழிகளிலும் கனலைத் தேக்கி வைத்து அவனை முறைத்தான் வீரபத்திரன். 

அதில் தனது முதுகுத்தண்டுச் சில்லிட்டுப் போய் விடவும், 

தனது தாயின் பின்புறமாகச் சென்று மறைந்து கொள்ள, 

அதை ஏளனமாகப் பார்த்து விட்டு, 

“இவனையா உங்கப் பொண்ணுக்குக் கட்டி வைக்கப் போறீய?”எனத் தங்கப்புஷ்பத்தின் பெற்றோரிடம் ஆற்றாமையுடன் கேட்டிருந்தான் வீரபத்திரன். 

அதற்கு,”ஆமாப்பா! எந்தங்கச்சியோட மவனுக்குத் தான் எம்பொண்ணைக் கட்டிக் கொடுக்கனும்னு நாங்க எப்பவோ பேசி வச்சிட்டோம்! இடையிலே நீ இப்படி கூட்டத்தைக் கூட்டிட்டு வந்து இப்படி நடந்துக்கிறது சரியில்லை”என்றுரைத்தக் காளிமுத்துவோ, 

“நீங்கப் பக்கத்து ஊரோட பெருந்தலையாச்சே! உங்களுக்குக் கூடவா இது தெரியாது? நீங்க உங்க மயனுக்குப் புத்திமதி சொல்லாமல் இவர் கூப்பிட்டவுடனேயே வந்துட்டீயளா என்ன?”என்று தர்மராஜ்ஜிடம் அழுத்தமாக வினவ, 

அதில் அவருக்குத் தலையிறக்கமாகப் போய் விடவே, 

“நாம இதுக்கு மேலே இங்கே இருக்கிறது தப்புடா! அது நமக்கு மரியாதையாக இருக்காது! அதனால் நாம இங்கேயிருந்து போகலாம்”என்று தன்னுடைய மகனுக்கு அறிவுறுத்தினார் தர்மராஜ். 

அதில் அவரைத் திரும்பிப் பார்த்து,”கொஞ்சம் பொறுங்கப்பா”என்றவனோ,

“நான் இதைப் பத்தி உங்கப் பொண்ணுக் கிட்டே பேசிச், சம்மதம் கேட்கனும்னு ஆசைப்பட்றேன். அதுக்கு நீங்க அனுமதி தருவீயளா?”என்று அவளது பெற்றோரிடம் வினவி இருந்தான் வீரபத்திரன். 

அதில் தனது வேதனைப் பெருகிக் கிடந்த வதனத்தை உயர்த்தி அவனை நோக்கினாள் தங்கப்புஷ்பம். 

ஆனால்,”அவரை எதுக்கு இப்படி வெறிக்க, வெறிக்கப் பார்த்துட்டு இருக்கிற? தலையைக் கீழே தொங்கப் போடு டி! உசத்துனா கொன்றுவேன்!”என்று அவளை மிரட்டி விட்டு, 

“நீங்க என்ன அண்ணி வந்தவங்க வாயைப் பார்த்துட்டு நிற்கிறீய? இவளை உள்ளே கூட்டிட்டுப் போங்க”என வள்ளியிடம் இரைந்தார் சற்குணம். 

உடனே மாயையில் இருந்து விடுபட்டுக் கொண்டு எதுவும் பேசாமல் தனது மகளை இழுத்துக் கொண்டு உள் அறைக்குச் செல்ல முயலும் போது, 

அவரைத் தடுத்து நிறுத்தும் வகையில்,”கொஞ்சம் நில்லுங்க! நான் உங்கப் பொண்ணுக் கிட்டே அவளோட விருப்பத்தைக் கேட்கனும்னுச் சொல்றேன்ல? அவங்களுக்கு என்னைப் பிடிக்கலைன்னு அவங்களே வாயைத் திறந்து சொல்லட்டும்! அதுக்கப்புறம் நான் ஒரு நிமிஷம் கூட இங்கே இருக்க மாட்டேன்!”என்று அவரிடம் தீர்க்கமாக மொழிந்தான் வீரபத்திரன். 

“ஐயோ! இந்தாளுங்க எல்லாரும் இங்கேயிருந்து போவ மாட்டாங்க போல!”என்று சலித்துக் கொண்டு, 

“அண்ணே! அண்ணி இங்கே வாங்களேன்”எனத் தன்னுடைய தமையன் மற்றும் அவரது மனைவியைத் தன்னருகில் அழைத்து, 

“இந்தப் பையன் தனக்கு ஒரு முடிவுத் தெரியாமல் இங்கேயிருந்து போக மாட்டான் போலிருக்கு! அதனால் புஷ்பத்தைக் கூப்பிட்டு அவளோட வாயாலேயே இவனைத் தனக்குப் பிடிக்கலைன்னுச் சொல்ல வச்சிடலாம்! அப்போ தான் இதுங்க எல்லாம் நம்ம வீட்டை விட்டுப் போகும்ங்க”என்று அவர்களுக்கு யோசனையைக் கூறினார் சற்குணம்.

அதற்குத் தாங்களும் கட்டுப்படுவதை தவிர்த்து வேறு வழியில்லை என்ற நிதர்சனத்தைப் புரிந்து கொண்டு, 

“சரிம்மா. அது தான் இதுக்கானத் தீர்வாக இருக்கும்!”என்றுரைத்து விட்டுத், 

“சரிப்பா! நாங்க எங்க மகளையே உங்களுக்குப் பதில் சொல்லச் சொல்றோம்!”என வீரபத்திரனிற்கு உறுதி அளித்து விட்டுத் தங்கப்புஷ்பத்திடம் போய், 

“இங்காரும்மா! நீ அந்தப் பயலுக்கு உன்னோட பதிலைச் சொல்லிடு! அப்போ தான் அவங்க எல்லாரும் இங்கே இருந்து போவாங்க!”என்று அவளுக்கு வலியுறுத்தினார் காளிமுத்து.

“நானா? என்னால் முடியாது ப்பா! எனக்கு யாரையுமே பார்க்கப் பிடிக்கலை”என்று அவரிடம் திக்கித் திணறிப் பதிலளித்தாள் அவரது மகள். 

அதைக் கேட்டதும்,”ஏன் டி முடியாது? உனக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வச்சு நாங்க நிம்மதியாக இருக்கலாம்னுப் பார்த்தால் உன் தலையெழுத்து இப்படி ஒரு பிரச்சினையை இழுத்துட்டு வந்து விட்டிருக்கு! எனக்கு இதில் உன் மேலேயும் சந்தேகமாக இருக்கு! நீ அந்தப் பையனை ஏற்கனவே விரும்பி இருக்கிறப் போலவே! அதனால் தான் அவன் கிட்ட மறுத்துப் பேசத் தயங்குறியோ?”என்று அவளைச் சந்தேகத்துடன் பார்த்துக் கேட்டு விடவும், 

அதில் மனமும், உடலும் தொய்ந்து போய், மனதளவில் செத்துப் போய் விட்டிருந்தாள் தங்கப்புஷ்பம்.

அதனாலேயே தனது கண்களைத் துடைத்துக் கொண்டு,

வீரபத்திரனின் எதிரில் வந்து நின்று,”இங்கே பாருங்க! எனக்கு நீங்க யாருன்னு இதுக்கு முன்னாடி தெரியாது! இன்னைக்குத் திடீர்னு இங்கே வந்து எனக்குப் பரிசம் போட்ற நேரத்தில் அதை தடுத்து நிறுத்தி என்னென்னவோ உளறிட்டு இருக்கீய! எனக்கு என்னோட அத்தைப் பையனைத் தான் கல்யாணம் கட்டிக்கிறதுக்கு விருப்பம்! உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு எனக்கு இஷ்டமில்லை! அதனால் நீங்க இப்போ எங்க வீட்டை விட்டுக் கிளம்பிப் போகலாம்! தயவு செஞ்சிப் போயிருங்க!”என்று அவனிடம் தனது கைகளைக் கூப்பிக் கேட்டுக் கொண்டாள் தங்கப்புஷ்பம். 

அவளது அந்த வார்த்தைகளும், சொற்களும் தன்னை நிலைகுலையச் செய்து விட்டதை உணர்ந்து கொண்டவனோ, 

“நீங்க ஏதோ நிர்ப்பந்தத்தில் இந்தப் பதிலைச் சொல்றீங்கன்னு எனக்கு நல்லாவே புரியுது! அதை நான் என் கண்ணு முன்னாடியே பார்த்து தெரிஞ்சிக்கிட்டேன்! ஆனாலும் நான் உங்களுக்கு ஒரு வாக்குத் தர்றேன்! நீங்க இப்படி யார்கிட்டேயும் தலைக் குனிஞ்சு நின்னு அவங்களோட வார்த்தைகளைக் கேட்டுத் தான் ஆகனும்னு அவசியம் இல்லை! நான் உங்களை மதிச்சு நடத்துவேன்! என்னைக் கட்டிக்கச் சம்மதம் செல்லுங்களேன்”என்று அவளிடம் இறைஞ்சினான் வீரபத்திரன். 

அதில் கரையத் தொடங்கிய தனது மனதையும், உணர்வுகளையும் அடக்கிக் கொண்டு, 

“அதான், நான் உங்களுக்கானப் பதிலைச் சொல்லிட்டேனே? அதுக்கப்புறமும் எதுக்கு இப்படி திரும்பத் திரும்பச் சொன்னதையே சொல்லிக் கேட்டுட்டு இருக்கீய? நல்ல காரியம் நடக்கும் போது இப்படி அச்சாணியமாக வந்து பேசிட்டு இருக்கிறது நல்லாவா இருக்கு?”என்று வேண்டுமென்றே அவனை அவமானப்படுத்துவதைப் போல் பேசி விட்டாள் தங்கப்புஷ்பம். 

அதற்கு எந்த வித எதிர்வாதமும் வைக்காமல், அவளைப் பார்த்து விரக்திப் புன்னகையை உதிர்த்து விட்டுத்,

தன்னுடைய தந்தை, நண்பன் மற்றும் மற்ற உறவினர்களை அழைத்துக் கொண்டு அங்கேயிருந்து அகன்று விட்டிருந்தான் வீரபத்திரன்.

  • தொடரும்
❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!