தன் பெற்றோரிடம் வயலில் நடக்கும் வேலையை மேற்பார்வை பார்த்து விட்டு வருவதாக கூறித் தான் இங்கே வந்திருந்தான் ராஜன்.
ஆனால் அதைச் செய்யாமல் நன்றாக உறங்கிக் கொண்டிருக்க, வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண்களோ,”இப்படி வந்து மல்லாக்கப் படுத்து எழுந்து போறதுக்குத் தான் நிதமும் இங்கே வந்துட்டுப் போறான் கட்டையில போறவன்!”என்று அவனை வசை பாடினர்.
அவர்களது அந்தச் செயலுக்கும் ஒரு காரணம் உண்டு. ஏனென்றால், அங்கே வேலை செய்யும் பெண்களைத் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் கேடு கெட்டப் பழக்கமும் ராஜனுக்கு இருக்கிறது.
அதனாலேயே அவன் அனைவரின் வாயிலும் விழுந்து கொண்டிருக்கிறான்.
அவனை வசை பாடுவதன் மூலமாகத் தங்களது மனப் பொருமலைத் தீர்த்துக் கொண்டார்கள் அந்தப் பெண்கள்.
இதே சமயம் உறங்கிக் கொண்டிருந்தவனுக்கு விழிப்புத் தட்டவும் சாவதானமாக எழுந்து அமர்ந்து கழட்டி வைத்திருந்த கைக்கடிகாரத்தை எடுத்து மணி பார்த்தான்.
“நாலு மணி ஆயிடுச்சா!”என்று சொல்லிக் கொண்டவனோ, தனது சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டான் ராஜன்.
அவன் அறையிலிருந்து வெளியே வரும் காட்சியைக் கண்டதும் வயலில் வேலைப் பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் தங்களது வாய்க்குப் பூட்டுப் போட்டுக் கொண்டனர்.
ராஜன்,“முத்து!”என்றதும்,
அவனிடம் வந்து,“ஐயா”எனப் பவ்யமாக கூறியவனிடம்,
“எல்லாரும் வேலையை ஒழுங்காகப் பார்த்தாங்களா?”என்க,
“ஆமாங்கய்யா”என்றான் முத்து.
“சரி. எல்லாருக்கும் தினக் கூலியைக் குடுத்து வீட்டுக்கு அனுப்பி வை”என அவனுக்கு உத்தரவு பிறப்பித்து விட்டுத் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்து வீட்டை அடைந்தான் ராஜன்.
அவனது வண்டிச் சத்தத்தைக் கேட்டதும்,”அடியேய் புஷ்பா! உன் புருஷன் வந்துட்டான் போல! கை, கால், முகம் கழுவுறதுக்கு வாளியில் தண்ணீரை நிறைச்சு வச்சிட்டியா? ஒவ்வொன்னையும் சொல்லிக் கொடுக்கனும்!”என்று நொடித்துக் கொண்டார் சற்குணம்.
“வச்சிட்டேன் அத்தை”என்றுரைத்தாள் தங்கபுஷ்பம்.
“அவன் கை காலைத் துடைக்கத் துணியையும், குடிக்கத் தண்ணீரையும் எடுத்துட்டுப் போய்க் கொடு”என்று அவளுக்கு உத்தரவிட்ட மாமியாரிடம்,
“சரிங்கத்தை”என்றவளோ, அவர் சொன்ன பொருட்களை எடுத்துக் கொண்டுக் கணவரிடம் சென்றாள்.
அவனும் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு அவளிடம் இருந்து துண்டை வாங்கித் துடைத்து விட்டுத் தண்ணீர் செம்பை வாங்கிப் பருகினான்.
அதன் பின்னர் அவளிடம் செம்பைக் கொடுத்தவனோ,”ஒரு காப்பிப் போட்டு எடுத்துட்டு வா”என்று மனைவிக்குக் கட்டளையிட்டு விட்டு உள்ளே சென்றான் ராஜன்.
“சரிங்க” என்று சமையலறைக்கு விரைந்தாள் தங்கபுஷ்பம்.
“என்னடா வயலில் ரொம்ப வேலையா? ஒரு போனு கூடப் பண்ணி சொல்ல முடியலையா?”என்று அவனை அதட்டிக் கேட்டார் சற்குணம்.
“ஆமாம்மா. வேலை செய்றவங்களை மேற்பார்வை பார்த்துட்டு இருந்தேன். அதான் போனு பண்ண முடியலை”என்று இயல்பாகப் பொய் சொன்னான் ராஜன்.
அவனிடம் காப்பித் தம்ளரைக் கொடுத்து விட்டுத் தள்ளி நின்று கொண்டாள் தங்கபுஷ்பம்.
தன் கணவன் அவனது பெற்றோரிடம் பேசும் போது அதில் அவளும் கலந்து கொள்ளக் கூடாது என்பது அவளுக்கு இடப்பட்ட கட்டளையாகும்.
அதனாலேயே அவர்களின் சம்பாஷணையில் கலந்து கொள்ளவில்லை அவள்.
“பக்கத்தில் ஏதாவது வயல் விலைக்கு வந்தா வாங்கிப் போடனும்டா! அதை விசாரிச்சு வைய்யி”என்று மகனிடம் கூறினார் வளையாபதி.
“ஏன்ப்பா? நமக்கு இருக்கிற வயலே போதும்ல? இன்னும் எதுக்கு வாங்கனும்?”என்றான் ராஜன்.
“வாங்கித் தான் ஆகனும்டா! அப்போ தான் நம்மளோட சொத்து மதிப்பு இன்னும் ஏறும். அதுவும் அடிமாட்டு விலைக்குக் கேட்டுப் பாரு!”என்று அவனுக்கு அறிவுறுத்தினார் சற்குணம்.
இரவு நேரத்தின் போது உணவைத் தயாரித்து முடித்து விட்டுக், கணவன், மாமியார், மாமனாருக்கும் பரிமாறி விட்டு அவர்கள் உண்ணும் வரைக் காத்திருந்தாள் தங்கபுஷ்பம்.
அவர்கள் மூவரும் சாப்பிட்டு விட்டுச் சென்றவுடன் தானும் அடுக்களையில் உட்கார்ந்து வேகவேகமாக உணவை விழுங்கி முடித்து விட்டுப் பாத்திரங்களைத் துலக்கி வைத்து, வரவேற்பறைக்கு வந்தவளிடம்,”நாளைக்குக் காலையில் இட்டிலி அவிச்சு, சாம்பார் வை. மதியத்துக்குக் குடல் குழம்பு வைக்கனும். சரியா?”என்ற சற்குணத்திடம்,
“சரிங்கத்தை” என்று கூறிக் கொண்டு இருக்கும் போதே,
“ஏய் புஷ்பா! ரூமுக்கு வா”என்றழைத்தான் ராஜன்.
உடனே அவள் தன்னுடைய மாமியாரைத் தான் ஏறிட்டுப் பார்த்தாள்.
“அதான் கூப்பிட்றான்ல? போ”என்று கூறி அவளை அனுப்பி வைத்து விட்டுக் கணவரிடம் பேசத் தொடங்கினார் சற்குணம்.
அவள் அறைக்குள் வந்ததும் தாழ்ப்பாளைப் போட்டு விட்டுத் தங்கபுஷ்பத்தைக் கட்டித் தழுவினான் ராஜன்.
அந்த அணைப்பில் உருகிக் கரைய வேண்டியவளோ, கடமைக்கு நின்று கொண்டிருந்தாள்.
ஏனெனில் அவனது அந்தத் தழுவலில் மருந்துக்கும் காதல் இல்லை. காமத்தின் மொத்த உருவமாகத் தான் காணப்பட்டான் அவளது கணவன்.
ராஜனின் கைகள் அவளது சரீரத்தில் வஞ்சனையின்றி அத்துமீறத் துவங்கியது.
தன் உடம்பு முழுவதும் பூரான் ஊறுவதைப் போன்றதொரு உணர்வு தான் ஏற்பட்டது தங்கபுஷ்பத்திற்கு.
ஆனாலும் பல்லைக் கடித்துக் கொண்டு அமைதியாக இருந்தாள்.
அவளை இழுத்துக் கொண்டு கட்டிலுக்குப் போய்த் தங்களது உடைகளைக் களைந்து மனைவியை வெறித்தனமாக ஆட்கொள்ள ஆரம்பித்தான் ராஜன்.
காமப் பிசாசாக மாறியவனுடைய இச்சைக்கு விருப்பமே இல்லாமல் உடன்பட்டாள் தங்கபுஷ்பம்.
தனது இதழ்களைக் கவ்விக் கடித்தவன், மேலும் முன்னேறத் தொடங்கவும், அவனுடைய கொடூரத் தாக்குதலுக்குத் தயாரானாள்.
கணவனின தொடுகை எப்போதும் மனைவியை அமைதிப்படுத்த வேண்டும். ஆனால் இங்கோ, ராஜனின் தொடுகைகள் யாவும் தங்கபுஷ்பத்திற்குள் நடுக்கத்தை வரவழைத்தது.
அதையெல்லாம் கண்டு கொள்ளாமல், அவளை மேலும் நடுக்கமுறச் செய்யும் வகையில் அவளது சரீரத்தில் காயங்களை ஏற்படுத்திக் கொண்டு இருந்தான் ராஜன்.
அவ்வப்போது தொண்டையை மீறி வந்த அழுகையை அடக்கிக் கொண்டாள்.
“என்னடி என்னைக் கட்டிப் பிடிக்காமல் இருக்கிற?”என்று கேட்டவனிடம்,
“மறந்துட்டேன்ங்க”என்றவளோ தனது கரங்களால் அவனது முதுகைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள் தங்கபுஷ்பம்.
அதில் மேலும் பித்தம் தலைக்கேற அவளுடைய மார்புகளை முத்தமிட்டுக் காயப்படுத்தினான் ராஜன்.
அதில் ஏற்பட்ட வலியைத் தனது பற்களை அழுந்தக் கடித்துக் கட்டுப்படுத்தினாள்.
அதன் பிறகு கீழிறங்கியவனின் உதடுகள் தங்கபுஷ்பத்தின் கருத்த இடையைக் குறி வைத்தது.
அதில் சர்வமும் துடித்துப் போய் விட்டது அவளுக்கு.
அதற்குப் பிறகு நடந்தவை யாவும் அவளது உயிரைக் கொஞ்சம், கொஞ்சமாக உறிஞ்சி எடுத்ததைப் போலாகி விட்டது.
தனது இச்சை ஒரு வழியாக அடங்கி விட்டதால் மனைவியிடம் இருந்து விலகிப் படுத்தான் ராஜன்.
தன்னுடைய கண்களின் ஓரத்தில் கண்ணீர் வழிய விட்டத்தைப் பார்த்துப் படுத்து இருந்த தங்கபுஷ்பத்திற்கு உலகமே வெறுத்துப் போய் விட்டது.
அவள் இப்படியானதொரு தாம்பத்தியத்தை வாழ்நாளிலும் எதிர்பார்க்கவில்லை.
தினமும் இரவில் அவள் அனுபவிக்கும் இந்த நரக வேதனையில் இருந்து எப்போது விடுதலை கிடைக்கும்? என அவள் எண்ணாத நாளில்லை.
இதே சமயம், தங்கள் மகளான ஈஸ்வரிக்கு வரன் பார்ப்பதைப் பற்றிக் கணவரிடம் பேசிக் கொண்டு இருந்த முனீஸ்வரியோ,
“கொழுத்தப் பணம் இருக்கிற வீடாகவும், நமக்குச் சமதையாக இருக்கிறவுகளாகப் பார்த்துப் பொண்ணுக் கொடுக்கனும். அப்போ தான் அவளை நல்லா பார்த்துப்பாங்க!”என்று கூறவும்,
“நம்ம அளவுக்குச் சொத்து இருக்கிறவுக இந்தச் சுத்து வட்டாரத்துல யாருமே இல்லைடி!”என்றார் தர்மராஜ்.
“அப்போ பக்கத்து ஊரில் மாப்பிள்ளைப் பார்க்கலாம்ங்க”என அவருக்கு யோசனை கூறினார் முனீஸ்வரி.
“ஹேய் என்னடி பேசுற? அதெல்லாம் சரி வராது! எதுவாக இருந்தாலும் நம்ம ஊருக்குள்ளே, நம்ம ஆளுங்களுக்குள்ளே மட்டும் தான், சம்பந்தம் கலக்கனும்! அதை விட்டுட்டு என்னென்னவோ பேசிட்டுத் திரியுறவ!”என்று அவரை அதட்டினார் கணவர்.
“அப்போ பணக்கார மாப்பிள்ளையைத் தேடிப் பிடிங்க”என்றவரை முறைத்த தர்மராஜோ,
“பார்க்கிறேன்”எனக் கூறி விட்டு உறங்கச் சென்று விட்டார்.
“அந்த தங்கபுஷ்பம் இப்போ என்னப் பண்ணிட்டு இருப்பாள்டா?”என்று தன் நண்பனிடம் வினவினான் வீரபத்திரன்.
“அந்தப் பொண்ணைப் பத்தி இப்போ ஏன் கேட்கிற?”என்றான் சிலம்பன்.
“அவளைப் பார்க்கனும்டா! நான் அவ வீட்டுப் படியேறிப் போய்ப் பொண்ணுக் கேட்டும் எனக்குக் கட்டிக் குடுக்காமல் அவளோட அத்தைப் பையனுக்குக் கல்யாணம் செஞ்சிக் கொடுக்கப் போறதாக அவங்கம்மா, அப்பா சொன்னாவளோ! அதைச் செஞ்சி இருப்பாங்க தானே?”
“அப்படித் தான்னு நினைக்கிறேன்டா. பக்கத்து ஊர் தானே! நீ போய் விசாரிச்சுப் பாரு”என்று அவனிடம் கூறினான்.
“ம்ஹ்ம். போவனும். ஈஸ்வரிக்குக் கல்யாணத்துக்கு மாப்பிள்ளைப் பார்க்கப் போறாக போல”என்றதும்,
இங்கே சிலம்பனின் முகம் சட்டென்று சுருங்கிப் போயிற்று.
அதை நண்பனிடம் காட்டிக் கொள்ளாமல்,”அது உனக்கு எப்படி தெரியும்?”என வினவ,
“மதியானம் சாப்பிட வீட்டுக்கு வரும் போது சின்னம்மா அவுக வீட்டாளுங்க கிட்டே போனுல பேசிட்டு இருந்ததை எதேச்சையாக கேட்டேன்”என்றுரைத்தான் வீரபத்திரன்.
சிலம்பன்,“என்ன மாதிரியான மாப்பிள்ளையை எதிர்பார்க்கிறாகளாம்?”
“சின்னம்மாவோட எதிர்பார்ப்பு என்னவா இருக்கும்னு உனக்கே தெரியுமே! எல்லாம் பணம், பவுசு உள்ளவுகளைத் தான் தேடுவாக”என்று அவனிடம் கூறவும்,
அதற்கு அவனோ,”அவுகளுக்கு எப்பவும் பணத்து மேலே தான் கண்ணு! குணத்தைப் பார்க்கவே மாட்றாக! இதனால் பாதிக்கப்படப் போறது ஈஸ்வரி தான்”என்றவனது குரலில் ஏகத்துக்கும் வருத்தம் பொதிந்து இருந்தது.
“ஆமாடா. அவ ஒரு விதத்தில் எனக்குத் தங்கச்சி மாதிரி. ஆனால் அவ என் கூடப் பிறந்தவ கிடையாது. அதனால் அவளோட வாழ்க்கையைப் பத்தின முடிவை எடுக்க எனக்கு உரிமை இல்லை”என்றவனிடம்,
“உன்னைப் பார்த்து இந்த வீடும், ஊரும் அந்தப் பயம் பயப்படுது. ஆனால் நீ என்னடான்னா இப்படி சொல்ற?”எனக் கேட்டான் சிலம்பன்.
“ம்ஹூம்! ஆனால் ஈஸ்வரி விஷயத்துல நான் ஏதாவது முடிவு எடுக்க நினைச்சா அது எனக்கே திரும்பிக்கும். அந்தளவுக்கு எப்போடா வாய்ப்புக் கிடைக்கும்னுக் காத்துட்டு இருக்காங்க எங்க சின்னம்மா. அதனாலேயே நான் அமைதியாக இருக்கேன்”என்று அவனுக்குப் பதிலளித்தான் வீரபத்திரன்.
“எனக்குப் புரியுதுடா. ஆனால் உன்னால் முடிஞ்சதைச் செய்யலாம்ல?”என்றவனை அழுத்தமாகப் பார்த்து விட்டு,
“ஏன்? உனக்கு அவளைக் கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இருக்கு தானே? அப்போ நீயே நேரடியாகப் போய் சின்னம்மா கிட்டே பொண்ணுக் கேட்க வேண்டியது தானேடா?”என்று பொட்டில் அடித்தாற் போல் கேட்டு விடவும்,
அதில் திகைத்துப் போனவனோ,”அப்படியெல்லாம் இல்லடா!”என்ற சிலம்பனுக்கு வியர்த்து வழிந்தது.
“அப்படியா? சரி மச்சான். நான் தான் உன்னைத் தப்பாக நினைச்சிட்டேன். இப்போ போய்த் தூங்கலாம்”என அவனிடம் கூறி விட்டுச் சென்றான் வீரபத்திரன்.
ஆனால் தான் பதின் பருவத்தில் இருந்து ஒரு தலையாக காதலித்துக் கொண்டிருக்கும் ஈஸ்வரிக்கு வேறு மாப்பிள்ளைப் பார்க்கப் போகும் செய்தியைக் கேட்டதில் இருந்து தன்னுடைய உறக்கத்தைத் தொலைத்து விட்டுப் பேதலித்துப் போனதைப் போன்ற நிலையில் இருந்தான் சிலம்பன்.
- தொடரும்
