அலை கடல் பெண்ணவள்

அலை 30

 

 தூரத்தில் வானம் கருமையாகத் தெரிந்தது. மயூரியின் கண்களில் கண்ணீர் வந்தது. “வீனஸ்…” என்று அவள் மெதுவாகச் சொன்னாள். “உனக்கு ஏதோ ஆபத்து…” அவளது மனம் அந்த இரவு முழுவதும் அமைதியாக இல்லை. ஏனெனில் அந்தக் கனவு ஒரு சாதாரண கனவு இல்லை. அது ஒரு இதயத்தின் அழைப்புபோல இருந்தது. அவளது கண்களில் தூக்கம் இல்லை. அவளது உள்ளத்தில் ஒரு தெரியாத அச்சம் மட்டும் இருந்தது. அந்த நேரத்தில் அறையின் கதவு மெதுவாகத் திறந்தது. உள்ளே வந்தாள் அம்பை. “மயூரி… இன்னும் நீ தூங்கவில்லையா?” என்று அவள் மெதுவாகக் கேட்டாள். மயூரி திரும்பிப் பார்த்தாள். அவளது கண்களில் இருந்த பயத்தை அம்பை உடனே கவனித்தாள். “என்ன ஆயிற்று?” என்று அவள் அருகில் வந்து கேட்டாள். மயூரி ஒரு நொடி அமைதியாக இருந்தாள். பிறகு மெதுவாகச் சொன்னாள். “அம்பை… நான் ஒரு கனவு கண்டேன்…” அம்பைச் சிரித்தபடி கேட்டாள். “கனவா? அதற்காக இப்படி பயப்படுகிறாயா?” மயூரி தலை அசைத்தாள். “இல்லை… அது சாதாரண கனவு இல்லை.” அவள் மெதுவாக எல்லாவற்றையும் சொன்னாள். கடலில் புயல் உண்டாவது, எரியும் கப்பல், கப்பல் உடைந்து போவது, வீனஸ் கடலில் விழுவது, மரத்துண்டைப் பற்றிக் கொண்டு போராடுவது என்றவள் கடைசியாக, “அந்தக் கனவில் வீனஸ் என்னைப் பார்த்து ‘மயூரி…’ என்று அழைத்தான்.” எனக் கூறினாள். அந்த வார்த்தையைக் கேட்டவுடன் அம்பையின் முகம் மாறியது. அவள் திடீரென அமைதியாகிவிட்டாள். அவளது கண்களில் ஒரு அதிர்ச்சி தெரிந்தது. “நிச்சயமாக அப்படியே சொன்னானா?” என்று அவள் மெதுவாகக் கேட்டாள். மயூரி தலை குனிந்து, “ஆம்!” என்றாள். அம்பைக் கட்டிலின் ஓரத்தில் உட்கார்ந்தாள். சில நொடிகள் அவள் எதுவும் பேசவில்லை. பிறகு மயூரியைப் பார்த்துச் சொன்னாள். “மயூரி… சில கனவுகள் சாதாரண கனவுகள் அல்ல. இதயம் தொலைவில் இருக்கும் ஒருவரின் துயரை உணரும்போது அப்படி கனவாக வரும் என்று மூதாட்டிகள் சொல்வார்கள்.” மயூரியின் இதயம் அந்த வார்த்தையைக் கேட்டதும் நடுங்கியது. “அப்படியென்றால்…” என்று அவள் கேட்டாள். அம்பைத் திரும்பி வெளியே பார்த்தாள். மழை இன்னும் பெய்துக்கொண்டிருந்தது. “வீனஸ் இப்போது கடலில் இருக்கிறானே…” அந்த வார்த்தை அறையின் அமைதியை வெட்டியது. மயூரியின் கண்ணீர் அவள் அறியாமல் வழிந்தது. அம்பை அவளது கையைப் பிடித்தாள். “பயப்படாதே… கடல் எல்லாவற்றையும் விழுங்காது. சில நேரங்களில் அது உயிர்களையும் காப்பாற்றும்.” ஆனால் அம்பையின் மனதுக்குள்கூட ஒரு கேள்வி எழுந்தது. அந்தப் புயல் இரவில் ‘வீனஸ் உண்மையில் உயிரோடிருக்கிறானா?’ என்ற கேள்வியில் அம்பைத் திக்பிரமையில் ஆழ்ந்தாள். அம்பையின் மடியிலேயே தலை சாய்த்த மயூரியின் நினைவுகளில் தன் மணாளனின் காதல் வேட்கை நினைவில் வந்தது. ‘எத்தனை ஆனந்தம்! எத்தனை கனவுகள்!’ என்று நினைத்தவள் ‘அவன் எப்போது வருவானோ வரட்டும்’ என்ற நினைவில் உறங்கினாள். *** கற்கோவிலின் முன்னே உடைந்து போன பாய்மரப் படகொன்றின் மேல் உட்கார்ந்தாள் சித்திரப் பாவை. சமுத்திர ராஜனை கூர்மையான பார்வையுடன் வெறித்தாள். தொலைதூரத்தில் மின்னிய வெளிச்சத்தைக் கண்டவளின் முன்னே வந்து நின்றது இந்திர விழா (காமன் விழா) நாட்கள். கொற்கையில் அவளது காமன் விழாவை நினைத்துக் கொண்டே களித்தாள். வைகறை விடியல் புலரும் நேரம் வரப்போவதை அறிந்தவள் சிலம்பொலி மின்ன மீண்டும் நடந்தாள். சிலம்புகளின் சப்தத்தில் மணல் துகள்கள் வழியை விட்டது. இரவில் முட்டையிடும் ஆமைகள்கூட ஓடி ஒளிந்து கொண்டது. சித்திரப் பாவை நடந்து போனது நாட்டியம் ஆடியது போலவே இருந்தது. மீண்டும் மணற்சிற்பத்துக்குள் சரணடைந்தாள். கண்கள் யவனதேசம் இருந்த திசையைப் பார்த்தபடி இருந்தது. கொற்கை நகரின் கடல்கோல் கொற்கை நகரையே இழுத்து அணைத்துக் கொண்டது. இதோ இந்தச் சித்திரப் பாவைப் பல்லாயிரம் வருடங்கள் கடந்தும் தன் காதலனுக்காகக் கடற்கரையில் தவம் இருக்கிறாள். அலர்மேல்வள்ளி தன் கனங்களையும் தவிப்பையும் சேர்த்து கல்லாய் சமைகிறாள் காரிருளின் வண்ணத்தை வாரி எடுத்து தன்மீது பூசிக்கொண்ட வானதி காற்றுபுகா இறுக்கத்தில் நான் உறைய நிசப்தம் இல்லாமல் உருக வேண்டும் சேர்பவனின் வதனம் காண மருள் சொருகி வீழ்ந்து கிடந்தாள் பாவை வருவான் அவள் தேவன் என்று அவனின் ஸ்பரிசம் பட்டதும் உயிர்த்தெளுவாள் இச்சிலை அழகி! இன்றும் நிற்கிறாள்! அலைகடலின் மணற்பரபில்லில் சிலையாய் யுகங்கள் பலப் பல கடந்து காதலில் கசிந்துருகி இன்றும் நிற்கிறாள்! இரவும் பகலும் உரசும் வேளையில் உயிர்பிப்பாள் பலஜென்மங்களாகக் காத்திருக்கிறாள்! பேதை அவள் பூப்படைய! மொட்டவிழ்த்து மலரிதழ் விரிக்கக் கார்வண்டை எதிர்நோக்குவாள் பெண்ணவள்! வெள்ளைநிற மணல்பரப்பில் வெண்குடங்களின் பாரத்தை தேன்பாகாய் செண்பகமலரின் வாசம் தனை தன்னுள் எடுத்து சங்குகழுத்தில் ஏகாந்தமாய் மணம்வீச தன் மணாளனை தேடுகிறாள்! இந்த அலைகடல் பெண்ணவள்! அலை வருடி நிற்கும்.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page