இதயம்! – 04

இதயம்!

துடிப்பு – 04

மறுநாள் எழுந்து தயாராகி அலுவலகத்துக்கு செல்ல முயன்றவளை தடுத்திருந்தார்,கணேஷ்வரி.

பாவையவளோ,அவரை திருதிருத்து பார்த்திருக்க,”இன்னிக்கு முகூர்த்த பொடவ எடுக்கப் போகனும்..ஆஃபீஸ் போகாத சரியா..?” கட்டளையாய் கூறி விட்டுச் செல்ல,கையறு நிலையில் தவித்தவளை கண்ட பார்வதிக்கும் மனம் பாரமானது.

“உன்ன பேசாம அநாத ஆசிரமத்துல விட்டிருந்தா கூட உன்னோட வாழ்க்க நல்லா இருந்து இருக்கும்ல..” சமயலறையில் தனக்கு உதவிக்கு வந்தவளிடம் சொல்லிட,அவளின் பார்வை முறைப்புடன் அவர் மீது படிந்தது.

அவளுக்கும் பயம் தான்.தன் வாழ்க்கையின் போக்கு புரியவில்லை,தான்.ஆயினும்,ஏதோ ஒரு சிறு துளி நம்பிக்கை.

கும்மிருட்டில் ஒற்றைப் புள்ளி வெளிச்சமாய்..

அடர் கானகத்தின் நடுவே கிடக்கும் பாதங்களின் சிறு வழித்தடமாய்.

அவளுக்குள்ளும் சிறு நம்பிக்கை.

ஏனென்று சரிவர காரணத்தை சொல்லத் தெரியாது,அவளுக்கு.மனதின் ஆழம் அதை நம்பியது.

ஆழ் மனதின் நம்பிக்கைகள் ஒரு போதும் பொய்ப்பதில்லை!

அவளிடம் வம்பிழுக்கவென்றே,சதீஷ் சமயலறைக்குள் வந்த போதிலும்,கணேஷ்வரியின் வருகை அவனை அப்படியே விரட்டி விட்டிருந்தது.

அவனின் பார்வையில் வெந்து தணிந்தவளோ,”இவன் இடுப்புல ஏறி மிதிச்சு இடுப்பெலும்ப ஒடக்கல  என் பேரு தமிழ் இல்ல..” என சபதம் எடுத்தது எல்லாம் வேறு கதை.

பத்து பத்தரை மணி போல் பார்வதியின் குடும்பம் உட்பட,அனைவரும் துணிக்கடைக்கு கிளம்பி இருந்தனர்.

அதுவும் நல்ல நேரம் பார்த்தே,அந்தப் பயணமும்.

தர்மேந்திரனிடம் இருக்கும் அரசியல் செல்வாக்கிற்கு,ஒன்றென்ன பத்து பதினைந்து துணிக்கடைகளை வீட்டில் இறக்க முடியும்.ஏனோ,கணேஷ்வரிக்கு துணிக்கடைக்கு சென்று உடை தேர்ந்தெடுத்தாலே,திருப்தி எழும்.அதற்காகத்  தான் இந்த பயணமும்.

தனக்குப் பக்கத்தில் நின்றிருந்த சதீஷைக் கூட,அவளால் சமாளித்து விடலாம்.ஆனால்,சதீஷிடம் இருந்து தன்னை பாதுகாக்க பக்கமிருக்கும் கணேஷ்வரியின் தொல்லையைத் தான்,அவளால் தாளவே முடியவில்லை.

சதீஷிடம் இருந்து தன்னை காத்த போதிலும்,ஆயிரம் புடவைகளை தன் மேல் வைத்துப் பார்த்தவரின் கேள்விகள் அவளுக்கு அனல் மூட்டியது.

“கல்யாணத்துக்கு இது நல்லா இருக்கும்..சாந்தி முகூர்த்தத்துக்கு இது..அடுத்த நாள் ரிஷப்ஷனுக்கு லெஹங்கா பாக்கலாமா..” அவர் கேட்டிட,எதுவும் பேசாமல் இருந்தாலும்,மனமோ அவரிடம் பதில் கூறாமல் இருந்திடுமா என்ன..?

“இந்த கல்யாணம் மட்டும் நடந்துதுன்னா அடுத்த நாள் உன் மகன் பொணமா தான் டி இருப்பான்..வெய்ட் பண்ணி பாரு..” மனதிற்குள் உறுதி எடுத்தவளோ,திருமணம் நடந்தால்,ஒன்று தான் தப்பிப்பது இல்லையென்றால் சதீஷை கொலை செய்வது என்ற தீர்மானத்துக்கே வந்திருந்தாள்.

கட்டிய பாவத்துக்காக,நாளொரு மங்கையும் பொழுதொரு பெண்ணுமாய் காலம் கழிப்பவனுடன்,அவளால் வாழ இயலாது.

வெறுமனே,தாலி கட்டி விட்டான் என்பதற்காக,கேடு கெட்ட பெண் பித்தனுக்கு மனைவியாக இருக்க ஒரு போதும் ஒப்புக் கொள்ள மாட்டாள்,பாவையவள்.

“என்னமா யோசன..?” பாசத்துடன் கேட்ட கணேஷ்வரியிடம் எதையும் கூற முடியாமல்,பல்லைக் கடித்தவளோ,சிரித்து சமாளித்தாள்,அப்பாவி போல்.

பார்வதிக்கு எதுவும் செய்ய முடியாத நிலை.அவருமே,தன் கணவரிடம் கெஞ்சிப் பார்த்து விட்டார்.அக்காளின் பேச்சை தட்டாத தம்பி,மனைவியின் வார்த்தைகளை செவியில் சேர்த்துக் கொள்ளவே இல்லை,என்பதே உண்மை.

பாவையவளின் நல்ல நேரமோ என்னவோ,சதீஷுக்கு அரசியல் வட்டத்தில் இருந்து அவசர அழைப்பொன்று வர கிளம்பியிருந்தான்,கணேஷ்வரியையும் உடன் அழைத்துக் கொண்டு.

கணேஷ்வரியும் அங்கு சென்றாக வேண்டிய கட்டாயம்.

“நீயும் உன் சித்தியும் பாத்து துணியெல்லாம் எடுத்துட்டு வாங்க..” சில உடைகள் மீதமிருக்கவே,அவர்களை வாங்கச் சொல்லி விட்டு,கண்காணிக்க பத்து பேரை நியமித்து விட்டே,நகர்ந்து போனார்,அவர்.

“கருமம்ம்ம்ம்ம்ம்” முணுமுணுத்தவாறு உடைகளை ஏனோ தானோவென்று அவள் ஆராய்கையில்,அவன் விழிகள் இடுங்கி கூர்மையாகின.

முதுகுப்புறம் தெரியுமாறு நின்று,யாருடனோ அலைபேசியில் கதைத்துக் கொண்டிருந்த ஆடவனைக் கண்டதும் அவள் நெற்றி மத்தியில் முடிச்சுக்கள் தோன்றிட, இதழ்களோ “வேதாஜி” என தமக்குள் மெதுவாய் அசைந்து கொள்ள,அவளை மீறி இதயத்தில் சின்னச் சந்தோஷம்.

“சித்தி ஒரு நிமிஷம்..” கொஞ்சம் அவள் முன்னேறப் பார்த்த தருணம்,திமுதிமுவென தடியர்கள் நான்கைந்து பேர் வந்து வழி மறித்திட,அப்போதே அவளின் சூழ்நிலை உரைத்தது.

அவள் யோசித்துக் கொண்டிருக்கையிலேயே,அவ்வாடவன் நகர்ந்திருக்க,அவளுக்கு சிறு தவிப்பு கிளை விரித்தது,அனுமதி எதுவும் கேளாமலே.

அவனாய் இருக்குமோ..?

அவனாய் இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் என்ற எண்ணம் முளைத்தாலும்,அவனாக இருந்தும் ஓரிரு வார்த்தை கூட பேச முடியவில்லை,என்ற ஆதங்கமும் எழ,அவனாக இருக்க மாட்டான் என்றே மனம் தன்னைத் தேற்றிக் கொண்டது.

அவன் மனதில் அவள் எப்படிப்பட்டவள் என்று தெரியாது.அவளைப் பொறுத்த வரை,அவள் வாழ்வில் கண்டதோர் நல்ல ஜீவன்.”டிஃபரண்ட் ஸோல்..” என அவ்வப்போது மின்னல்  கீற்றாய்,அவன் நினைவு எட்டிப் பார்க்கையில் ராகவியிடம் கூறுவதுண்டு.

அவள் வாழ்வில் அழகியதோர் அத்தியாயம் அவன் என்பது தான்,அவள் எண்ணப்போக்கு.

விதி எதை விதைத்து வைத்திருக்கிறதென்று,யாருக்குத் தெரியும்..?

                ●●●●●●

இரு நாட்களுக்கு பிறகு

சாத்வேதின் வீடே,பரபரப்பாக இருக்க,அங்கு பிரஜினின் விழிகளில் சிறு நம்பிக்கை துளிகள்.

அமிதேஷும் அவ்னித்தும் முகத்தில் தோன்றிய நம்பிக்கை கீற்றுடன் நடந்து வர,அவர்களின் பின்னர் அழுத்தமான நடையுடன் நடந்து வந்தான்,அரிமாவவன்.

“என்ன விஷயம் பிரஜின்..?” பதட்டத்துடன் சாத்வேதின் குரல்.

“நா சொன்ன மாதிரி அபியோட ரேடியேஷன்கு ரெஸிஸ்ட் பண்ற ஒரு ஹார்ட கண்டு பிடிச்சாச்சு..” என்று அவர் அழுத்திக் கூறிட,அவர் கூறிய விடயத்தை கிரகித்துக் கொள்ளவே,சில நிமிடங்கள் பிடித்தது,மற்றையவர்களுக்கு.

“யாரு யாரு அது..?” விழிகளில் மிதந்த சந்தோஷத்துடன் கேட்கையிலேயே,பிரஜினின் அழைத்திட,கதவைத் திறந்து கொண்டு வந்தாள்,பெண்ணொருத்தி.

இருபதுகளில் முற்பகுதியில் இருப்பதாக தான்,அவளின் தோற்றம் கூறிற்று.இதயம் கிடைத்து விட்டது,என மகிழ்ந்த போதிலும்,அதற்கு சொந்தக்காரியாக வந்து நின்றவளைக் கண்டதும்,அனைவரின் மனதிலும் மெல்லிய குற்றவுணர்வு.

“இது யாரு..?” என யோசித்தவருக்கு எதுவும் பிடிபடவில்லை.எங்கோ,கண்ட முகம் என்றே நினைவடுக்கில் தோன்ற,அதன் இடுக்குகளில் இருந்து வெளிக்கொணர்வது இலகுவாக இருக்கவில்லை,அவ்னித்துக்கு.

“நா பவனி..என்னோட முழு விருப்பத்தோட தான் நா இந்த முடிவு எடுத்து இருக்கேன்..” என்று அவள் தீர்க்கமாகவே உரைத்திட,அதில் உள்ளம் பதறியது அங்கிருந்த விஹானாவுக்கு தான்.

அவருக்கும்,அவள் வயதில் மகள் இருக்கிறதே.

“இல்லமா நாங்க..” எனும் போதே,குறுக்கே இடை வெட்டினார்,வித்யுத்.

“பாவ புண்ணியம் பாக்கற நெலமைல நாம இல்ல..நம்மளுக்கு அபியோட உயிர் முக்கியம்..உங்களுக்கு அப்றம் எந்த அரசியல் வாரிசும் இல்லாம போனா நம்ம நாடு அப்டியே அவங்க கை வசம் போகும்னு உங்க தாத்தா எடுத்த முடிவு மறந்துருச்சா சார்..?” அமிதேஷ் அழுத்திக் கேட்கவுமே,நிதர்சனம் உரைத்தது.

இன்னுமே,அரசாட்சியில் திளைத்திடும் நாடு அது.

கார்வேனியா!

அந்த நிலப்பரப்பில் மொத்தம் ஐந்து நாடுகள் மட்டுமே.கார்வேனியா பெரிய நிலப் பரப்பை ஆக்கிரமித்து பலம் வாய்ந்த நாடாக முதலிடம் இருக்க,அதற்கு அடுத்து தம்பேத்வின்.

கார்வேனியாவுக்கும் தம்பேத்வின்னுக்கும் இடையில் முன்பிருந்தே,பனிப் போர் நடந்திருக்க,அதை முடிவுக்கு கொண்டு வந்தது,சாத்வேதின் பாட்டனாரே.

அதுவும்,தம் நாட்டின் அரச வம்சத்தில் வாரிசு இல்லாத பட்சத்தில்,அவர்களின் ஆட்சியின் கீழ் தம் நாடு வரும் என்ற ஒப்பந்தத்தின் கீழே.

போர் என்ற பெயரில் அப்பாவி மக்களை கொன்று புதைப்பதை தவிர்க்கவே,அவர் அப்படி ஒரு தீர்மானம் எடுத்திருக்க,அது அவர்களுக்கு எதிராகவே திரும்பி இருந்தது.

ஆண்களை மட்டுமே,வாரிசாகக் கொள்ளும் சமூகமும் அந்த இடத்தில் பிரச்சினை தான்.

தம்பேத்வின் மக்கள் பசியிலும் பட்டினியிலும் அல்லோலப்பட,அங்கு நடக்கும் மிருகத்தனமான ஆட்சியின் கீழ் தன் மக்களை அனுப்ப விரும்பவில்லை,சாத்வேத்.

அப்படி வாரிசு இல்லாமல் போன பின்னர்,அவர்கள் அடி பணிந்து போகவில்லை என்றால்,நிச்சயம் பெரும் போர் மூளும்.

அதிலும் உயிர் துறந்து சிதையப் போவது இதே,அப்பாவி மக்கள் தான்.

ஆக,அபிஷேக்கின் உயிரை எப்படியேனும் காப்பாற்றியாக வேண்டிய கட்டாயம்.

“எனக்கு அப்றம் ரெண்டு தம்பிங்க இருக்காங்க..எங்கம்மாவுக்கு ப்ரெய்ன் ட்யூமர்..அதுக்கு ட்ரீட்மண்ட் பண்ணனும்..இது எல்லாத்தயும் நீங்க பொறுப்பு எடுத்துப்பீங்கன்னா ஹார்ட்ட தர நா ரெடி..” அழுத்தம் திருத்தமாய் உரைத்தவளை,இமைக்க மறந்து பார்த்தனர்,அமிதேஷும் விஷ்வின்னும்.

அதற்கு பிறகு,வேலைகள் துரிதமாய் நடந்த போதிலும்,ஒரு பரிசோதனை முடிவு எதிர்மறையாய் வந்திடவே,துவண்டு போயினர்,மருத்துவர்கள்.

தொடர்ந்து பலவழிகளில் முயன்ற போதிலும்,அபிஷேக்குக்கான தீர்வு தான் கிடைத்தபாடில்லை.

அன்றும் ஏதோ அழுத்தத்தில் இருந்த,சாத்வேதை தேற்றி விட்டு அவரின் மாளிகையில் இருந்து வெளியேறுகையில் வெண்கரமொன்று தன்னை இடையிட,சட்டென சுதாரித்து நடையை நிறுத்தியவனின் முன்னே,ஆழ்ந்த பார்வையுடன் நின்று இருந்தாள்,அக்ஷதி!

அவளைக் கண்டவுடன் அவன் உணரும் முன்பாகவே,விழிகளில் கடுமை ஏறிக் கொள்ள,என்னவாயினும் நாட்டின் ஆட்சியாளரான ஜனாதிபதியின் மகள் ஆயிற்றே.

மரியாதை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தான்,அரிமாவவன்.

“ஆஜு..” அவள் அழைத்திட,அரிமாவனனின் முகம் சிவக்க,தாடை இறுகியது.

“என்னோட நேம் ஆஜ்வின் மேடம்!” முகத்தில் இல்லாத கடுமை குரல் வழியே பரவியிருந்தது,மறுப்பதற்கல்ல.

“எதுக்காக என்ன அவாய்ட் பண்றீங்க ஆஜு..?” வேறு யாரென்றாலும்,நிச்சயம் அவளின் காதலில் கரைந்திருப்பது சர்வ நிச்சயம்.

ஆஜ்வினைப் பொறுத்த வரையில் அதற்கான சாத்தியம் இல்லை என்பதே உண்மை.

“எல்லா கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லல மேடம்..” இழுத்து வைத்த பொறுமையுடன் பேசியவனுக்கு,அவளின் பேச்சில் அதீத சினம்.

“வன் இயர் தாண்டிப் போச்சு..இன்னுமே அத மனசுல வச்சிகிட்டு..நா பண்ண தப்ப மன்னிக்கவே மாட்டியா ஆஜு..?” அவள் விழிகள் கலங்கக் கேட்டிட,அவன் விழிகள் சிவந்து போயின.

“நா பண்ண தப்பால தான உனக்கு என் மேல இருந்த லவ் காணாமப் போச்சு..” அவள் அழ,நெற்றியை அழுத்தமாய் நீவிக் கொண்டான்.

அவள் மீது காதல்!

ம்ஹும் இல்லவே இல்லை;சத்தியமாய் இல்லை.

ஈர்ப்பு கூட வந்தது கிடையாது.அவ்னித்தின் வளர்ப்பு அதற்கு இடம் தந்திருக்கவும் செய்யாது.

தன்னை காதலிக்க வைப்பதாக தோழியரிடம் பந்தயம் கட்டி தன் பின்னே,அவள் சுற்றிட,அவ்விடயம் அவனுக்கு அவர்களிடையிலான ஒப்பந்தம் நடைபெற்ற பொழுதே அவனுக்கு தெரியும்.

அவளுக்கு வேண்டுமென்றால்,அது விளையாட்டாக இருக்கலாம்.ஆனால்,உணர்வுகளுடன் விளையாடுவதை அவனால் அத்தனை எளிதில் ஜீரணித்திட முடிந்ததில்லை.

அந்த செயலோ என்னவோ,அவள் மீது அவனுக்கு நல்லெண்ணம் வராமல் செய்து விட்டிருக்க,அப்படியே வந்திருந்தாலும் அது ஈர்ப்பாகியிருக்கவே,வாய்ப்பு மிகக் குறைவு தான்.

ஏனெனில்!?

அது ஏனெனில்..!?

அது ஏன் எனில்…!?

காரணம் கொஞ்சம் காலம் தள்ளியே தெரிய வரட்டும்!

விளையாட்டுக்கென செய்தது,நிஜத்தில் அவன் மேல் காதல் கொள்ள வைத்திட,அதன் பின் அவனை துரத்தியது,அவள் நேசம்.

அவள் தன் பின்னே சுற்றுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல்,”நீங்க பெட் கட்டி லவ் பண்ண வக்க ட்ரை பண்ணது தெரிஞ்சும் நா எப்டி மேம் உங்கள லவ் பண்ணுவேன்..?” அவளை வெட்டி விட,அவன் வினாவெய்தியது,அவனுக்கு எதிராகவே திரும்பி இருந்தது.

அவனுக்கு தன் மேல் காதல் இருந்ததாகவும்,அது உண்மை தெரிய வந்ததும் காணமல் போனதாகவும்,அவளாகவே கற்பனை செய்து கொண்டு,அவன் பின்னே வர,அது நிறுத்தும் மார்க்கம் தான் புலப்படவில்லை,அரிமா அவனுக்கு.

அவளோ அழுகையை நிறுத்தவில்லை.அவனோ,மெல்ல அவ்விடத்தில் இருந்து அகலப் பார்த்திட,அதற்கும் அவள் வழி விட்டாள்,இல்லை.

கேவிக் கேவி அழுதவளை காணக் காண,அவன் இழுத்து வைத்த பொறுமை கொஞ்சம் கொஞ்சமாய் சிதைவது போல்.

அப்படியே,அவளின் தலையை இழுத்து சுவற்றில் முட்ட வைத்தால் என்னவென்ற எண்ணம் அவனுள் எட்டிப் பார்த்திட,அண்ணாந்து பார்த்து இதழ் குவித்து ஊதி,தன்னை கட்டுக்குள் வைத்துக் கொண்டான்,வெகு சிரமத்துடன்.

சில நிமிட அழுகைக்கு பின்,அவளே தேறி வர,அரிமாவனின் இடக்கரமோ நுதலுரசிய அடர் கேசத்தை பின்னே ஒதுக்கியது.

“உனக்கு என் மேல வரவே வராதா ஆஜு..”

“ஹன்ட்ரன்ட் பர்சன்ட் வாய்ப்பேயில்ல இல்ல மேம்..”

“என்னத் தவிர இந்த உலகத்துல உனக்கு காதலிக்க யாரு கெடப்பா..? என்ன தவிர உன் காதலுக்கு தகுதியா இப்போ இந்த உலகத்துல யாராச்சும் இருக்காங்களா ஆஜு..? இல்ல தான..?” அவள் எகிற,அவன் ஏறிப் பாய்வான் என அவள் எதிர்பார்த்திருக்க,அதற்கு மாறாய் இருந்தது,அவனின் செய்கை.

ஹேசல் நிற விழிகளினோரம் மெல்லிய மின்னல் கீற்றொன்று மின்னி மறைய,அடர் கற்றை மீசையுடன் சேர்த்து மேலிதழை மடித்து கடித்தவனின்,மீசைக்குள்  ஒளிந்து ஆட்டம் காட்டி நின்றது,கண்ணுக்கே தெரியா சின்னப் புன்னகைத் துளியொன்று.

“என்ன தவிர இந்த உலகத்துல யாரு இருக்கா.. ஆஜு ? சொல்லு ஆஜு..சொல்லுங்குறேன்ல..உன் காதலுக்கு தகுதியா இந்த உலகத்துல யாரும் பொறந்து இருக்காங்களா..? சொல்லு.. இல்ல பொறந்து வரப் போறாங்களா சொல்லு ஆஜு..” சற்றே,ஆவேசம் எட்டிப் பார்த்தது,அவள் பிதற்றலில்.

நிதானமாய் அழுத்தமாய்,கத்தி முனைப் பார்வையுடன் அவளை ஏறிட்டான்,ஆஜ்வின்.

“கரெக்ட் மேம்..என் காதலுக்கு தகுதியான ஆள் கண்டிப்பா நீங்க இல்ல..அதே மாதிரி இந்த உலகத்துல இந்த ஆஜ்வினோட காதலுக்கு தகுதியா யாரும் பொறந்ததும் இல்ல..இனிமே பொறக்கப் போறதும் இல்ல..காட் இட்..” அசைக்க முடியா உறுதியுடன் உரைத்தவனின் வார்த்தைகளில் மறைபொருள் என்னவோ..?

அவள் திகைத்து விழிக்க,வெட்டும் பார்வையுடன் அவளை கடந்து விட்டிருந்தான்,அரிமாவவன்.

நான்கு நாட்கள் கடந்திருந்த சமயம் அது.

அமிதேஷும் சாத்வேதும் பிரஜினை சந்திக்க வந்திருக்க,சத்திர சிகிச்சை ஒன்றை முடித்து விட்டு அவர் வரக் கொஞ்சம் தாமதமாகிப் போனது.

வந்தவரோ,முதல் வேலையாக வித்யுத்தை அழைத்து விட்டு,அரிமாவவனுக்கு அழைப்பு விடுத்திட,புருவம் சுருக்கி பார்த்தார்,சாத்வேத்.

“ஆஜுக்கு எதுக்கு பிரஜின் ஃபோன் பண்றீங்க..?அவன எப்ப பாரு எதுக்கெடுத்தாலும் கூப்டுகிட்டு..அவனோட ரிஸர்ச கூட ஒழுங்கா செய்ய விடாம.. அவன் ஒரு ஸ்பேஸ் சைன்டிஸ்ட்னு அடிக்கடி மறந்து போகுதா உங்க எல்லாருக்கும்..? ” என்று சற்றே காட்டமாகவே,வினவிட உடனடியாக எந்த வித பதிலையும் சொல்லவில்லை,பிரஜின்.

சாத்வேதுக்கு எரிச்சல்.எதற்கெடுத்தாலும்,சம்பந்தமே இல்லாமல் அவனை இழுப்பது அவருக்கு பிடிக்கவில்லை.அவனின் ஆராய்ச்சியை தொடர்வதற்கு,இது இடைஞ்சல் என அவருக்குத் தெரியுமே.

“சரி ஆஜ்வின் வரட்டும்..ஆஜ்வின் வர்ரதுக்கு முன்னாடி நா சில விஷயங்கள சொல்லிர்ரேன்..”

“ம்ம்ம்ம்ம்..”

“அபியோட பாடில இருந்தும் சரி ஆஜுவோட பாடில இருந்தும் சரி இன்டர்னல் அன்ட் எக்டர்னலா ரேடியேஷன் நடக்குதுன்னு சொன்னேன்ல..நார்மலா நாம அவங்க பாடிய டச் பண்ணும் போது அந்த ரேடியேஷன் நம்மளோட நார்மல் செல்ஸ்குள்ள வரும்..”

“என்வயர்மன்ட்கு எக்போஸ் ஆக முன்னாடியே நம்ம பாடிக்குள்ள போறதுனால அதோட வீரியம் முன்ன மாதிரி கொறஞ்சிறாது..பட் அதுக்குன்னு ரொம்ப ஆபத்துன்னும் இல்ல..பட் லாங் டைமா ரொம்ப நேரமா அது நம்ம செல்ஸ்குள்ள வந்ததுன்னா அது நம்மளோட நார்மல் செல்ஸ்கு டேஞ்சரா முடியும்..பெரிய பெரிய வியாதிங்க வர்லாம்..டச் பண்ணா மட்டுந்தான் இது போகும் ரைட்..?!” 

“ம்ம்..பட் அப்டி ரேடியேஷன் நடக்குற ஒருத்தர் பாடில இருந்து..ஐ மீன் அபி ஆஜுவ டச் பண்ணா ஆஜு பாடில இருந்து அபி பாடிக்கு ரேடியேஷன் போகும்..அதே மாதிரி அபி பாடில இருந்து ஆஜு பாடிக்கு போகும்..பட் அந்த செல் ரெஸிஸ்டன்ஸ் இருக்குறதால அவங்களுக்குள்ள ப்ராப்ளம் இல்ல..”

“ம்ம்ம்ம்ம்..”

“இந்த உலகத்துல மூனே மூணு பேர் தான்,அந்த ரேடியேஷன்கு ரெஸிஸ்டன்ஸ் இருக்குற செல்ஸோட இருக்குறது..ஒன்னு நம்ம ஆஜு.. அந்த பொண்ணு பவனி..”

“அடுத்து யாருப்பா..?”

“அது யாருன்னு தெரியாது..?”

“மூணு பேருன்னு உங்களுக்கு எப்டி தெர்யும் பிரஜின்..?”

“அந்த விஷயத்த நம்ம ஆஸ்ட்ரனாமி ஹெட் பிரதீஷ் வந்து விளக்கமா சொல்லுவாரு..” அவர் கூறுகையிலேயே,உள் நுழைந்தான்,அரிமாவன்.

வந்தவனோ,எதுவும் பேசாமல் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து கொள்ளலானான்.

“அபிக்கு ட்ரீட்மண்ட் பண்ண நாம அந்த மூணாவது ஆள கண்டு பிடிக்கனும்..அவரோட டெஸ்ட் எல்லாம் ஓகேவாச்சுன்னா இட்ஸ் ஈஸி..”

“இல்லன்னா..”

“இல்லன்னா நாலாவது ஒருத்தர் இருக்காரு..அவர கண்டு பிடிச்சு டெஸ்ட் எல்லாம் பண்ணி பாக்கனும்..”

“என்னப்பா மாத்தி மாத்தி பேசறீங்க..? நம்ம உலகத்துல மூணு பேர் இருக்குறதா சொல்லிட்டு நாலு பேர்ங்குறீங்க..?” அமிதேஷ், சிடுசிடுத்தான்.

“நம்ம உலகத்துல மூணு பேர்..நம்மள மாதிரி மனுஷங்குற வாழ்றாங்களே அந்த பூமி..அதுல ஒருத்தருக்கு பை லக்ல இந்த செல் ரெஸிஸ்டன்ஸ் கெடச்சி இருக்கு..!”

ஆம்!

இவர்கள் இருப்பது, பூமியைப் போன்றே மனிதர்கள் வாழும் இன்னொரு விண்கோள்.

அது இரண்டாம் உலகம்!

வின்னோரா கிரகம்!

அவர் கூறியதைக் கேட்ட சாத்வேதின் இதயம் வேகமெடுத்து துடித்தது.

துடிக்கும்.

2026.03.15

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page