இதயம்! – 05

இதயம்!

கேலக்ஸி (Galaxy) என்பது விண்மீன் கூட்டத்தை  குறிக்கும்.

நமது பூமி இருக்கும் விண்மீன் கூட்டம் தான்,இந்த பால்வெளி(Milky way).

பால்வெளிக்குள் ஏராளமான கோள் மண்டலங்கள் உண்டு.

ஒரு நட்சத்திரத்தை சுற்றி இருக்கும் கோள்கள்,துணைக் கோள்கள்,தூசு மற்றும் விண்கற்கள் அனைத்தும் உள்ளடங்கலாக கோள் மண்டலம் எனப்படும்.

பூமி இருக்கும் கோள் மண்டலம் தான்,சூரியக் குடும்பம்(Solar system).

பால்வெளி என்பது பிரபஞ்சத்தின் ஒரு பகுதி.அண்டவெளியில்,ஏராளமான பிரபஞ்சங்கள் இருப்பதாக விஞ்ஞான ரீதியாக,நிரூபிக்கப்பட்டுள்ளது.

துடிப்பு – 05

ஓரிஃபியன் யுனிவர்ஸ்!

பூமி இருக்கும் பிரபஞ்சத்தில் இருந்து,பல ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கும் பிரபஞ்சம் அது.

அந்த பிரபஞ்சத்தில் இருக்கும் ஒரு விண்மீன் கூட்டமே,கிராவிஸியா கேலக்ஸி.

கிராவிஸியா கேலக்ஸியே,ஓரிஃபியன் யுனிவர்ஸின் மிகப் பெரிய விண்மீன் கூட்டம்.

கிராவிஸியா கேலக்ஸியில்,வின்னோரா கிரகம் உள்ளடங்கும் கோள் மண்டலமே,லம்னோரா சிஸ்டம்.

சூரியனைச் சுற்றி,பூமி உட்பட எட்டு கோள்களும் வலம் வருவது போல்,வின்னோரா கிரகம் உட்பட பதினேழு கிரகங்கள் மைய நட்சத்திரமான லம்னோராவை,சுற்றி வலம் வந்து கொண்டிருக்கின்றன.

பூமியில் சூரியன் உதித்து மறைவது போல்,அங்கும் லம்னோரா உதித்து மறையும்.ஆனால்,என்ன வடக்கில் உதித்து தெற்கில் மறையும்.

லம்னோரா சிஸ்டத்தில் பதினேழு கோள்களும்,தொன்னூற்றி இரண்டு துணைக் கோள்களும் உண்டு.

பதினேழு கோள்களை கொண்டிருந்த போதிலும்,அதில் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற வளங்களையும் வெப்ப நிலையையும் வளி மண்டலத்தையும் உடைய ஒரே கோள்,வின்னோரா கிரகமே.

மனிதன் வாழ்வதற்கு தேவையான அனைத்தையும் அது கொண்டிருந்த போதிலும்,அதுவே மிகச் சிறிய கோள்.

மிகச்சிறிய கோளில்,தொன்னூறு சதவீதமான பகுதியை சமுத்திரங்கள் அடைத்திருக்க,மிகுதி பத்து சதவீதத்திலே இடம் கொள்கின்றன,கார்வேனியா உட்பட ஐந்து நாடுகளும்.

ஆக,வின்னோரா கிரகத்தில் இருப்பது மொத்தம் ஐந்து நாடுகள் மட்டுமே.

மிகச்சிறிய கோள் எனினும்,அங்கும் மனிதர்கள் உண்டு.பூமியில் இருக்கும் மனிதர்களைப் போன்று தான்,அவர்களும்.

பூமியைப் போன்றே,மனிதர்களின் பழக்க வழக்கங்கள்,தேவைகள்,உணர்வுகள் எல்லாம்,அங்கிருப்பவர்களிடமும் இருந்தது.

அறிவியில் மற்றும் தொழிநுட்ப ரீதியில் பூமியை விட பல படி முன்னிலையிலேயே இருந்தனர்,அக்கிரகத்தினர்.

அது தான்,இரண்டாம் உலகமொன்று இருப்பதாய் பூமியில் இருப்பவர்களுக்கு தெரிய வராத போதிலும்,தம்மைப் போன்றே மனிதர்கள் வசிக்கும் இடமாக இந்த பூமி இருப்பது அவர்களுக்கு அறிய வர முழு முதற் காரணம்.

பூமியைப் போல் அல்லாது அங்கிருக்கும் வளி மண்டலம் சற்றே வித்தியாசமானது.ஆக்ஸிஜனே,அங்கு முதன்மை வாயுவாக இருக்க,அடுத்த இடத்தை ஹீலியம் பிடித்திருந்தது.

அத்துடன் கால நேரமும்  அங்கு பூமியுடன் ஒப்பிடும் போது வித்தியாசப்பட்டிருந்தது.பூமியில் கடந்திடும் ஒரு நாள்,அங்கு ஏறத்தாழ நான்கு நாட்களுக்கு சமனாக அமையும்.

அப்படிபட்ட கிரகமே,வின்னோரா!

பூமி என்றதுமே,சாத்வேதின் இதயம் வேகம் எடுத்திட,அவர் முகத்தில் தோன்றிய மெல்லிய மாற்றங்களை உற்றுக் கவனித்தன,அரிமாவவனின் நேத்திரங்கள்.

அவரின் விழிகளில் தெரிந்த அலைப்புறுதலும்,ஒரு வித பயமும் அவனின் சிந்தனைப் பெட்டியை கிளறி விட,அதை மனதுக்குள் குறித்து வைத்துக் கொள்ளவும் மறந்திடவில்லை.

அதற்குள் பிரஜினின் பேச்சு,அவனை திசை திருப்பியிருந்தது.

“நம்ம கிரகத்துல இருந்து பல லைட் இயர் டிஸ்டென்ஸ்ல இருக்குற  நம்மள மாதிரியே மனுஷங்கள வாழ்ற இன்னொரு உலகம் தான் இந்த பூமி..நம்மள விட ரொம்ப பெரிய ப்ளேனட்..இங்க இருக்குற பாபுயேலஷன விட அங்க இருக்குற பாபுயுலேஷன் ரொம்ப அதிகம்..”

“ஆனா நம்ம கிட்ட இருக்குற அளவு சைன்ஸும் டெக்னாலஜியும் அவங்க கிட்ட இல்ல..அது தான் ரெண்டாவதா அவங்கள மாதிரியே மனுஷங்க வாழ்ற இன்னொரு உலகம் இருக்குன்னு இன்னுமும் அவங்களால கண்டு பிடிக்க முடியாம இருக்கு..”

தனக்குத் தெரிந்தவற்றை அவர் ஒப்பிக்க,ஏற்கனவே அறிந்த விடயம் என்ற போதிலும்,மறுக்காமல் செவிமடுத்தனர்,சாத்வேதும் ஆஜ்வினும்.

“ப்பா! இப்போ விஷயத்துக்கு வாங்க..நம்மளுக்கு இப்போ அபியோட ட்ரீட்மண்ட் பத்தின விஷயங்கள் தான் முக்கியம்..” 

“கொஞ்சம் பொறு அமித்..எதுக்கு எடுத்தாலும் சுள்ளு சுள்ளுன்னு அவசரப் பட்டு கிட்டு..” என்றவரோ,நரைத்த தாடியை நீவிக் கொண்டார்.

“சரி விஷயத்துக்கு வர்ரேன்..நமக்கு தெரிஞ்ச வர அபி தவிர  பவனிக்கும் அடுத்து ஆஜ்வினுக்கும் தான் அந்த ரேடியேஷன்குரிய ரெஸிஸ்டன்ஸ் இருக்கு..ரைட்!”

“பவனியோட அம்மா கிட்ட போய் விசாரிச்சப்போ தான் தெரிய வந்தது,அவங்களும் நியூக்ளியர் பாம் டெஸ்டிங் ரேஸ்கு எக்போஸ் ஆகி இருக்காங்கன்னு..அதுவும் பவனி தன்னோட வயித்துல இருக்குறது தெரிய வர்ரதுக்கு முன்னாடி..”

“தட் மீன் ஆர்கன் எல்லாம் உருவாகுற பீரியட்ல..ஸோ அதனால தான் பவனியோட பாடிலயும் அந்த ரெஸிஸ்டன்ஸ் இருக்கு..”

“ஆஜுவுக்கும் அபிக்கும் நடந்தத யோசிச்சு,நான் அந்த பவனி பொண்ணோட ஜீன அனலைஸ் பண்ண அனுப்பி வச்சேன்..”

“டேன் காட் அவளோட ஜீன்ல எந்த மியூட்டேஷனும் நடந்தது இல்ல..அப்டி சின்னதா நடந்த மியூட்டேஷன்ஸ் கூட சைலன்டாவே இருக்குறதால அவ ஹார்ட்ல எந்த ப்ராப்ளமும் இல்ல..”

“சுருக்கமா சொல்லப் போனா,நம்மள மாதிரியே இருக்குற நார்மல் பர்சன் தான் அவ..ஒரே ஒரு வித்தியாசம் ரேடியேஷனும் அதுக்குரிய ரெஸிஸ்டன்ஸும் அவ கிட்ட இருக்கு..அது மட்டுந்தான் வித்யாசம்..”

“பட் ஆஜுவோட கேஸ் அப்டி இல்ல..அவனுக்கு இந்த மியூட்டேஷன்னால பாதிப்பு ஏற்பட்டாலும் அது அவனுக்கு மிராகலான பவர கொண்டு வந்து சேத்து இருக்குறது தான் உண்ம..எல்லாருக்கும் தெரியும்,அவன் பல்ஸ் ரேட் தர்டி ஃபைவ் டூ ஃபார்டி ஃபவ் தான் இருக்கும்..நார்மலான ஒருத்தரோட பலஸ் ரேட் சிக்ஸ்டீ டூ ஹன்ட்ரட் வர இருக்கும்..”

“ஃபார்டி ஃபைவா நம்மளோட ஹார்ட் ரேட் எல்லாம் கொறஞ்சதுன்னா ஹார்ட் ஃபெயிலியர் தான்..சாகக் கூட செய்வாங்க..பட் ஆஜுவோடது அப்டி இல்ல..”

“அதுவும் இல்லாம அவனோட ஹார்ட்டோட கன்ட்ராக்ஷன் ஃபோர்ஸும் ரொம்ப கம்மி..அதனால தான் அவன் ஹார்ட் சவுண்டும் ரொம்ப கம்மியா இருக்கும்..நார்மல் ஸ்டெத்தால கேக்க கூட முடியாத அளவு கம்மியா இருக்கும்..”

“ஹார்ட் சவுண்ட் வர்ரது நம்ம ஹார்ட்ல இருக்குற வால்வ்ஸ் க்ளோஸ் ஆகறதால தான்..அதோட வேகமும் இன்டென்ஸிடியும் கன்ட்ராக்ஷன் ஃபோர்ஸ்ல தங்கி இருக்கு..அதனால தான் அவனோட லப் டப் சவுண்ட நம்மளால கேக்க முடியாம இருக்கு..”

நிஜம் தான்!

அரிமாவவன் மூச்சை அடக்கிப் படுத்திருந்தால்,இறந்தவன் என்றல்லவா நினைக்கத் தோன்றும்.

ஏறி இறங்காத மார்புக்கு சத்தமிடா இதயம்,ஒத்து ஊதிட யாரையும் எளிதில் நம்ப வைத்திட முடியும்.

“ஹார்ட் ரேட் கம்மியான பாடி டிஷ்யூஸ்கு ப்ளட் போறது கம்மியாகி ஆக்ஸிஜன் நியூட்ரியன்ஸ் சப்ளை கொறஞ்சி போய்ரும்..”

“அப்றம் தொடர்ந்து கம்மியானா செல்ஸ் செத்து ஆர்கன் ஃபெயிலியர் ஆகிரும்..பாடில ப்ளட் வால்யூம் கொறஞ்சாலோ இல்லன்னா ஹார்ட் ஒழுங்கா பம்ப் ஆகலன்னாலோ நடக்குறது இது தான்..”

“ஆஜுவோட பாடில இங்க தான் மிராகில் இருக்கு..அவனோட செல்ஸ் எல்லாம் கம்மியான ஆக்ஸிஜன்கு அடாப்ட் ஆகி இருக்கு..அப்டின்னா இப்போ அவனோட ஹார்ட் ரேட்டும் பம்ப் ஆகற ஸ்ட்ரென்த் உம் கம்மி..”

“ஸோ டிஷ்யூஸ்கு போற ப்ளட் கம்மியா தான் இருக்கும்..அதுல்லாம ப்ளட்ல இருந்து செல்ஸ்கு போற ஆக்ஸிஜன் எக்ஸிட்ரா எல்லாம் கம்மியா தான் இருக்கும்..அபியோட ப்ராப்ளம் இது தான்..அவன் ஒடம்புல இருக்குற செல்ஸ்கு இந்த லோ ஆக்ஸிஜன்ல சர்வைவ் பண்ண முடியாது..அதுல்லாம நெறய கம்பளிகேஷன்ஸும் இருக்கு..”

“ஆஜ்வின் பாடி செல்ஸ் அப்டி இல்ல..மியூட்டேஷன்னால அவனோட செல் பவர் ஹவுஸோட ஜீனும் அஃபெக்ட் ஆகி இருக்கு..அதுவும் பாஸிட்டிவ்வா..அதனால அவனோட செல்ஸ் எல்லாம் கம்மியான ஆக்ஸிஜன்லயும் எஃபெக்டிவா வேல செய்யும்..”

“அது தான் அவன் நம்மள மாதிரி நார்மலா இருக்க காரணம்..அதுல்லாம அவன் பாடில ப்ளட் வால்யூமும் கம்மி..பட் இது ரெண்டாலயும் வர்ர ஆக்ஸிஜன் டெஃபிஷியன்ஸலயும் நார்மலா இருக்குற மாதிரி தான் அவனோட ஆர்கன்ல இருக்குற செல்ஸ் உருவாகி இருக்கு..”

“ஸோ அவனுக்கு இந்த மியூட்டேஷன்னால பாஸிடிவ் எஃபெக்ட் தான்..ஒரு மிராகில்னு சொல்லலாம்..நம்மளால ஆக்ஸிஜன் கொறஞ்சா சர்வைவ் பண்ண முடியாது..பட் அவனால முடியும்”

“அதுல்லாம நார்மலா ஹார்ட் கன்ட்ராக்ஷன் ல ப்ராப்ளம் இருக்குறவங்களுக்குரிய எந்த ஒரு மெடிகல் காம்ப்ளிகேஷனும் ஆஜுவுக்கு இருந்தது இல்ல..ப்ளட் வால்யும் கம்மியா இருக்குறது தான் ரீசன்னா இருக்கும்னு கெஸ் பண்ண முடிஞ்சாலும் கன்ஃபார்ம் பண்ண முடில..எக்ஸாக்ட் ரீசன ஃபைன்ட் அவுட் பண்ண ரிசர்ச் அன்ட் ப்ரொஸீஜர்ஸ் இப்போ போய் கிட்டு தான் இருக்கு..”

“சரி இப்போ எதுக்கு இவ்ளோ வெவரமா இதெல்லாம் சொல்லி கிட்டு இருக்கீங்க டேடி!”

“அவசரப்படாம இரு அமிதேஷ்..அடில இருந்து தெரிஞ்சி கிட்டா தான் உனக்கு ஈஸியா இருக்கும்..”

“இந்த விஷயம் எல்லாம் எனக்கு தெரிஞ்சு என்ன ஆகப் போகுது டேட்..ஆஜுக்கு தெரிஞ்சா போதும் ல..”

“அது ஏன்னு கூடிய சீக்ரம் உனக்கு தெரிய வரும்..” அவர் கூறுகையிலேயே,அனுமதி கேட்டுக் கொண்டு உள் நுழைந்தார்,பிரதீஷ்.

கார்வேனியாவின் விண்வெளி ஆராய்ச்சிய மைய பிரதம அதிகாரி என்பதோடு,அவர் தலை சிறந்த விண்வெளி ஆராய்ச்சியாளரும் கூட.

               ●●●●●●●●

பூமியில்..

சரியாக,இன்னும் ஒரு வாரத்தில் திருமணம்!

சதீஷின் பெயருடன் தன் பெயரை இணைத்து வந்திருந்த திருமணப் பத்திரிகையை வெறித்தவளுக்கு,அதை அப்படியே கிழித்துப் போடும் வேகம்.

ஆனால்,அதைச் செய்திட இயலாது.அப்படி செய்து விட்டாலும்,கழுகுக் கண்களும் பாம்புக் காதுகளும் உடைய,கணேஷ்வரியிடம் இருந்து,அவளால் நிச்சயம் தப்ப முடியாது.

அவளுக்கு,திருமணம் பற்றி பெரிதாய் எந்த வித கனவும் இருந்து விடவில்லை.வெளிநாட்டு மாப்பிளையாய் இருக்கக் கூடாது என்பது மட்டுமே,அவளின் ஒரே ஒரு ஆசை.

தன்னை இந்த நரகத்தில் இருந்து காப்பாற்ற ஒருவன் வந்து விட்டால் போதும் என்ற எண்ணம் மட்டுமே,அந்த சமயம் மேலோங்கி இருந்தது.

திருமணம் செய்து விட்டால்,இந்த வீட்டில் இருந்து வெளியேறி விடலாம் என்று எண்ணியிருந்தது எல்லாம்,சதீஷுடனான திருமணப் பேச்சின் பொழுதே,நொருங்கிப் போயிருந்தது,என்னவோ உண்மை.

பாவையவளோ,ஒரு முடிவில் தான் இருக்கிறாள்.திருமணம் வரை நல்ல பிள்ளையாக நடித்து,முன் தின இரவு எப்படியேனும் அவர்களின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு தப்பிக்க வேண்டும்.

பார்வதியின் உதவியுடன் அதற்குண்டான திட்டங்களை தீட்டவும் மறந்திடவில்லை.அப்படி இல்லையெனில்,திருமண இரவன்று சதீஷை கொலை செய்வது.

வேறு வழி இருக்கவில்லை,அவளுக்கு.எப்படியும் அவனுக்கு மனைவியாகிட முடியாது என்கின்ற பட்சத்தில்,வேறு உபாயம் புலப்படவில்லை,அவளுக்கு.

முட்டாள் தனம்!

அது புரிந்த போதிலும்,வேறு வழி கிடைக்காத விடத்தில் அது முட்டாள் தனமாக அவளுக்குத் தோன்றவில்லை.

அவளுக்கென்று,யாரும் இல்லாத பட்சத்தில் சிறை செல்வது,இந்த வீட்டில் அவனுக்கு மனைவியாக இருப்பதை விட எவ்வளவோ மேல் என்றே தோன்றிற்று.

ஏனோ,ராகவியிடன் கதைத்தால் தேவலை என்று தோன்ற,பத்திரிகை கொடுக்க வேண்டும் என்ற சாக்கில் அவளைக் காண வந்திருந்தாள்,அவளின் ஆசிரமத்திற்கு.

திருமண நாள் நெருங்கி விட்டதென்று,வேலைக்குச் செல்லவும் தடை விதித்திருக்க தோழியைக் காணவும் வழியில்லாமல் போயிருந்தது,பாவையவளுக்கு.

வதனத்தில் எவ்வித சலனமுமின்றி,தன்னிடம் பத்திரிகையை நீட்டியவளைக் காணக் காண சினம் வெடித்தது,தோழியவளினுள்.

“அவனுங்க தான் கிறுக்குத் தனமா ஏதோ பண்ணி கிட்டு இருக்கானுங்கன்னா நீ என்னன்னா பத்திரிக்கய நீட்ட வந்திருக்க..”

“இத சாக்கா வச்சு தான் உன்ன பாக்க வர முடியும்..இல்லன்னா விடுவாங்களா சொல்லு..”

“சரி இப்போ என்ன பண்ணப் போற சொல்லு..அந்த நாசமானப் போனவன கட்டிக்கப் போறியா..?”

“செத்தாலும் அந்த கூமுட்டய நா கட்டிக்க மாட்டேன்..ஏறி மிதிச்சு அவன் இடுப்பெலும்ப ஒடக்கனும்..ப்ச்ச்..விஷயத்த கேளு..கல்யாணத்துக்கு முந்தின நாள் ரிஷப்ஷன் இருக்குல..”

“ம்ம்ம்ம்ம்..”

“அதுக்கு என்ன கூட்டிட்டு போறதுக்கு வண்டில வருவாங்க..மாப்ள ஒரு டைம்லயும் நா பொண்ணு ஒரு டைம்லயும் தான் மண்டபம் போனும்னு அந்த நாசமாப் போன ஜோசியக்காரன் சொல்லி இருக்கான்..”

“அது சரி..என்னன்னாலும் அந்த யான உன் வால் பிடிச்சுட்டல சுத்தும்..”

“அங்க தான் இருக்கு டிவிஸ்ட்டே..பையன வாசல்ல வச்சு ஆரத்தி எடுத்து பெத்த நா..த்தூ தாய் தான் உள்ள அழச்சிண்டு போகனுமாம்..அதனால கணேஷ் என் கூட வர மாட்டா..பார்வதி சித்தி தான் என் கூட வருவாங்க..அங்க நீ என்ன பண்ணனும்னா..”

“முத்து அண்ணன் ஹெல்ப் பண்றதா சொல்லி இருக்காரு..எனக்கு பதிலா நீ தான் மண்டபத்துக்கு போகனும்..நீ எங்க போகப் போற..?”

“வேதா ஜி கிட்ட..”

“அவரு..? எப்டிடி..? யோசிச்சு யோசிச்சு பாத்தேன்..அவர தவிர வேற யார் கிட்ட பேசறதுன்னு தெரில..போகும் போது அவரு டெல்லியில இருக்குறதா சொல்லிட்டு போனாரு..எப்டி சரி டெல்லி போய் சேந்தா போதும்..அதுக்கப்றம் அவரு பாத்துப்பாரு..” உறுதியாய்,உரைத்தவளுக்கு மறந்து போயிருந்தது,விதி என்று ஒன்று இருப்பது.

“சரி ஏர்போட் போறதுக்கு என்ன பண்ணப் போற..? இவனுங்க கண்ணுல சிக்காம எப்டி ஏர்போட் போவ..?”

“ரவி தான் ஹெல்ப் பண்றேன்னு சொன்னான்..அதுவும் பார்வதி சித்தி அவன் கிட்ட கெஞ்சி கேக்கவும் பெத்த தாய் இவ்ளோ கெஞ்சறாங்களேன்னு ஒத்து கிட்டு இருக்கான் போல..”

“சரி முத்து அண்ணன் ரவி இவங்க யான கிட்ட விஷயத்த சொல்ல மாட்டாங்களாடி..? அது தான் எனக்கு பயமா இருக்கு!”

“முத்து அண்ணன கன்ஃபார்மா நம்பலாம்..ரவி தான் எனக்கே லைட்டா டவுட்டா இருக்கு..ஆனா நம்பறத தவிர வேற வழி ஏதாச்சும் இருக்கான்னா இல்லயே..அதனால நம்பித் தான் ஆகனும்..நம்புவோம்..ஏதாச்சும் ஒன்னு நடந்து தான ஆகனும்..” சலிப்புடன் கூறியவளோ,சில நிமிடங்களின் பின்,அங்கிருந்து கிளம்பி இருந்தான்.

இரவு நேரம்,

அறைக்கதவை தாழ் போட்டு,பாதுகாப்புக்கு கதிரை ஒன்றை முட்டுக் கொடுத்து விட்டு வந்து படுத்துக் கொண்டவளின் விழிகளில் உறக்கத்தின் நாமமும் இல்லை.

மனதில் பல வித சிந்தனைகள் அலைக்கழித்திட,ஏனோ அவனின் எண்ணமும் மின் வெட்டாய் மனதை மோதிப் போக,”வேதாஜி” என இதழ்கள் சன்னமாய் முணுமுணுத்து ஓய்ந்தன.

இதுவரை,அவள் வாழ்வில் எந்த ஆண் மீதும் அவளுக்கு நம்பிக்கை வந்தது இல்லை.

தனக்கு யாருமில்லை என்று தெரிந்தால்,தன்னை பயன் படுத்திக் கொள்ளக் கூடும் என்கின்ற பயம் மனதில் அப்பியிருக்க,ஆண் தோழர்களே அவளுக்கு இல்லை.

அதுவும் தோழியொருத்தி ஒருவனால் ஏமாற்றப்பட்டதை கேள்வி பட்டதில் இருந்து,ஆண்வாசத்தில் இருந்தே பத்தடி தள்ளி நிற்பாள்,அவள்.

அவள் சந்தித்த ஆண்களும் அதற்கு ஒரு காரணம்.

ஆனால்,அவன்!

அவள் எண்ணங்களில் இருந்து மாறுபட்டவன்!

அவள் கணிப்புக்களில் இருந்து வேறுபட்டவன்!

அவளில் சிறு நம்பிக்கையை ஏற்றியவன்!

அவளின் நம்பிக்கையின்மையை முடிந்தளவு மாற்றியவன்!

அவனுடனான பழக்கம்,வெறுமனே மூன்று வாரங்கள் தான்.அவளின் “ரிஸர்ச்” விடயமாக கல்லூரித் தோழர்களுடன்,கேரளா சென்றிருந்த பொழுது தான்,அவனும் வந்திருந்தான்,அவ்விடம்.

அவன் வந்திருந்தது,அவனின் தேவைக்காக என்ற போதிலும்,தங்குமிடங்கள் அண்மையில் இருந்ததால் அவனைத் தெரிய வந்தது.

அதுவும்,வாட்டசாட்டமான வாலிபன் என்றால் போதாதா..?

பெண்களிடையே,அவனே பேசு பொருளாகிப் போக,அது தான் அவளையும் கவனிக்கத் தூண்டியது.

அடிக்கடி காண்பாள்.அவள் சோம்பல் முறித்து யன்னல் வழியே பார்க்கையில்,அவனோ வெளிக்கிளம்ப தயாராகி இருப்பான்.

அவள் பார்ப்பாள்.அவனின் பார்வை வீச்சு,அவளைத் தழுவுமா என்பது கூட,அவளுக்கு தெரியாது.பெரிதான பேச்சு வார்த்தையும் இருந்தது கிடையாது.

ஆயினும்,அவன் அவளுக்கு ஒரு பாதுகாப்புணர்வைத் தருவது போன்றே,அவளுக்குள் தோன்றிக் கொண்டிருக்கும்.

ஒரு முறை,வழி தெரியாது சற்றுத் தள்ளிப் போய்,அவள் சிக்கிக் கொள்ள,உதவிக்கு வந்தது,சாட்சாத் அவனே என்றிருக்க,அதன் பின் அவன் மீதான மரியாதை மலையளவு உயர்ந்து நின்றது என்றால் மிகையாகா.

அதன் பின்னரான நாட்களில்,அவனைப் பார்த்து நட்புடன் அவள் புன்னகைத்த போதிலும்,அவன் அவ்வளவாய் பதில் தந்ததாய் அவள் நினைவேட்டில் பதிந்தது,கிடையாது.

அவனது சொந்த ஊரில் அவனுக்கு ஒரு காதலி இருப்பதாகவும்,இருவருக்கும் விரைவில் திருமணம் என்றும் ஒரு கருத்து அவள் நட்பு வட்டத்தில் பரவியிருந்தது,அந்தப் பொழுதில்.

“நம்ம கண்ல சிக்கற ஹேன்ட்சமான ஆளுங்க எல்லாருமே,கமிட்டடா தான் இருக்கானுங்க..” தோழியொருத்தி மாரில் அடித்து புலம்பியது நினைவில் வர,மெல்ல சிரித்தும் கொண்டாள்.

அப்போதே,அவளுக்கு ஒரு எண்ணம்,நிச்சயமான அவன் வாழ்வில் வரப் போகும் பெண் கொடுத்து வைத்தவள் என்று.

அதுவும் மறுமுறையும்,அவள் வழி தவறிச் சென்று திணறிய பொழுது,ஆபத்பாந்தவனாக வந்தது அவன் தான்.

சிகையில் இருந்து நீர்ச் சொட்டச் சொட்ட,கையில் குடையுடன் அவளை நோக்கி வந்தவனின் விம்பம்,நிச்சயம் இரசனைக்கு உரியதே.

அதுவும் மழைக்கு ஒதுங்கி நின்ற,தன்னிடம் அவன் குடையை நீட்டியதை,இன்று வரை அவளால் மறக்கவே இயலாது.

“ஹெல்ப்கு யாரும் இல்லியா..?” மீண்டும் அவள் தனியே சிக்கியதை குறிப்பில் வைத்து கேட்க,அவளுக்கு சங்கடமானது.

ஆண் நட்பு வட்டம் இல்லை என்பதை அவனிடம் சொல்லவும் மனம் வரவில்லை.

“இருக்காங்க..ஆனா..” தலை தாழ்த்தி இழுத்திட,அவனின் கூர்ப்பார்வை அவளை ஒரு முறை வெட்டிச் சென்றது.

“இங்க இருந்து போற வர என்ன ஹெல்ப்னாலும் எனக்கு ஃபோன் பண்ணு..” அதட்டலுடன்,அவனின் அலைபேசி எண்ணையும் நீட்டியிருக்க,பயத்துடன் முழித்து,அமிழ்த்திட தயக்கத்துடன் வாங்காமல் நின்றவளோ,அடுத்து அவன் பார்த்த ஒற்றைப் பார்வைக்கு கட்டுப்பட்டு இருந்தாள்.

“உன்ன பாக்கும் போது எனக்கு என் தங்கச்சி நியாபகம் வர்ரா..” அவளின் மனதின் எண்ணம் அறிந்தாற் போல்,அவன் கூறிட திகைத்து விழித்தாலும்,அவளின் மனதை அரித்துக் கொண்டிருந்த கேள்விக்கு பதில் கிடைத்த திருப்தி அவளில்.

அதன் பின்னர்,காணும் போது அவள் சிரித்தால்,அவனும் மெல்லியதாய் புன்னகைப்பான்.

அப்படி வெறுமனே,விழியசைவும் புன்னகையுமாக மட்டுமே,அவர்களின் பழக்கம்.ஆயினும்,அது அவளின் மனதில் ஆழப் பதிந்து போயிருந்தது.

காரணத்தை அவள் ஆராயவில்லை.ஆயினும்,ஏனோ அதையெல்லாம் நினைக்கையில் அவளிதயம் கொஞ்சம் வேகமெடுத்து துடித்தது.

துடிக்கும்.

2026.03.16

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page