கனவிலும் நினைவிலும் நீதானென்றால், நான் எங்கு தொலைந்தேனோ நீயறிவாயா காதலே…!
உன்னில் சிறையாகிறேன் – 32
அக்னி சென்ற ஐந்தாம் நாள் விடியற்காலை மூன்று மணி, இருளும் ஒளியும் போராடிக் கொண்டிருந்த நேரத்தில், அருவியின் மடியில் கிடந்த யாழினியின் உடல் தணலாய் கொதித்தது,
”மம்மி… மம்மி… மம்மி…” என்று குழந்தை பிதற்ற, தொட்டுப் பார்த்த அருவியின் கையைச் சுட்டது,
பதற்றத்தில் அவளது இதயம் சுவரில் மோதும் பந்தாய் துடித்தது, ஐந்து நாட்களாக அக்னியின் நினைவிலேயே உருகிக் கொண்டிருந்தவளுக்கு,
இப்போது குழந்தையின் காய்ச்சல் பெரும் பதற்றத்தைத் தந்தது, எப்போது விடியுமெனக் காத்திருந்து விடிந்ததும் முதல் வேலையாக மருத்துவமனைக்கு ஓடினாள்,
அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர், காய்ச்சலின் தீவிரத்தைக் கண்டு சிகிச்சையளித்தனர்,
“வைரல் பீவர் மாதிரி இருக்கு, பீவர் சரியாகுற வரைக்கும் குழந்தைய மானிட்டர் பண்ணிட்டே இருக்கனும் எதற்கும் இரண்டு நாள் இங்கயே அட்மிட் பண்ணுங்க” என்று டாக்டர் சொல்ல,
“பெருசா ஒண்ணும் பிரச்சனை வராது இல்ல டாக்டர்” என்று அருவி ஆதங்கத்தோடு கேட்க,
“நத்திங் வொரி, இப்போதைக்கு டிரிப்ஸ் போயிட்டு இருக்கு, பீவர் ஹையா இருக்கிறதால பேபியும் நல்லா தூங்கிட்டு இருக்காங்க, நீங்க கவலைப்படாதீங்க” என்று அருவிக்கு தைரியம் சொல்லி விட்டுச் சென்றார் டாக்டர்,
யாழினிக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் குளுக்கோஸ் ஏற்றப்பட அதை வெளியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தாள் அருவி, அப்போது ஒரு குரல்,
“எனக்கு ஒரு போன் பண்ணிருந்தா, உங்களுக்கு துணையா நான் வந்திருப்பேனே மேடம்” என்று கேட்டது திடுக்கிட்டுத் திரும்பினாள் அருவி ரோஹித் நின்றிருந்தான்,
“நீ… நீ.. எப்படி இங்க வந்த, நான் இங்க இருக்கேன்னு யார் சொன்னது” என்று கேட்டாள் அருவி,
“மேடம், நான் கேட்டதுக்கு எப்போ தான் பதில் சொல்லிருக்கீங்க இப்ப சொல்ல, எனிவே நான் உங்கள பாக்க வீட்டுக்கு போனேன்,
அங்க தான் குழந்தைக்கு உடம்பு முடியாம நீங்க இங்க இருக்கிறதா சொன்னாங்க, இப்ப குழந்தைக்கு எப்படி இருக்கு மேடம்” என்று ரோஹித் கேட்க,
“இப்ப கொஞ்சம் பரவாயில்ல, இன்னும் இரண்டு நாள் ஹாஸ்பிட்டல்லயே அட்மிட் பண்ண சொல்லிருக்காங்க” என்று அருவி சொல்ல, ரோஹித் வெளியே இருந்து குழந்தையை எட்டிப் பார்த்தான்,
யாழினிக்குட்டியோ காய்ச்சலின் வீரியத்தால் வெளிறிய முகத்தோடு கண்களை மூடிக் கொண்டு படுத்திருந்தாள்,
பிறகென்ன அக்னி இல்லாமல் தனித்து நின்ற அருவிக்கு துணையாக நின்றான் ரோஹித், மூச்சுக்கு முன்னூறு தரம் மேடம் மேடம் என்று அழைத்தே அருவிக்கு தலை வலியை உண்டு பண்ணினான்,
“இவ்ளோ நேரம் கூட இருந்து ஹெல்ப் பண்ணதுக்கு ரொம்ப தேங்க்ஸ் ரோஹித், நீ போய் உன் வேலையைப் பாரு” என்று
அவனை இங்க இருந்து தயவுசெய்து போடா என்று மட்டும் தான் நேரடியாகக் கூறவில்லை, மற்றபடி எப்படி அவள் சொன்னாலும் அவன் போவதாகத் தெரியவில்லை,
“மேடம் நான் ஆபீஸ்க்கு லீவ் போட்டிருக்கேன், அதனால எனக்கு அங்க எந்த வேலையும் இல்ல மேடம், என்னோட ஒரே வேலை உங்க கூட இருக்கிறது தான் மேடம்” என்று சொல்ல, அவள் தலையில் கை வைத்துக் கொண்டாள்,
“என்னாச்சு மேடம் தலை வலிக்குதா, பாப்பா கூட இருந்ததால உங்களுக்கும் பீவர் வந்திருக்குமோ, சரி வாங்க மேடம் எதுக்கும் ஒரு தடவை செக் பண்ணிடலாம்” என்று அவன் அழைக்க,
“எனக்கு ஒரு வலியும் இல்ல ரோஹித், நான் சும்மா தான் தலையில கை வச்சேன், அதுக்கே ஏன் இவ்ளோ சென்சிடிவ் ஆக்குற” என்று நொந்து போனாள் அருவி,
அதன் பின்பு ரோஹித்தின் விடாத மேடம் அர்ச்சனையில் அருவிக்கு நிஜமாகவே தலைவலிக்கத் தொடங்கியது, இவனை கொஞ்ச நேரமாவது விரட்ட நினைத்த அருவி,
“ரோஹித், தயவுசெஞ்சு எனக்காக ஒரு காஃபி மட்டும் வாங்கிட்டு வர்றியா” என்று அவனைச் சாதுர்யமாக பேசி அனுப்ப முயன்றாள்,
“அதுக்கெதுக்கு மேடம் தயவுசெஞ்சுன்னு ப்ளீஸ் பண்ணி கேக்குறீங்க, ஒரு காஃபி வாங்கிட்டு வாடான்னு ஆடர் போடுங்க மேடம்” என்று கடுப்படித்தான் ரோஹித், அருவிக்கு தலைவலி அதிகமானது,
“எனக்கு காஃபியே வேணாம், போதுமா, கொஞ்ச நேரம் அமைதியா இரு ரோஹித் அது போதும்” என்று முகத்தை திருப்பிக் கொண்டாள்,
“என்ன மேடம் இதுக்கெல்லாம் கோவிச்சுக்கறீங்க, இதோ இப்பவே போய் ஒரு நல்ல காஃபியா நான் வாங்கிட்ட வரேன் மேடம்” என்று அங்கிருந்த லிஃப்டை நோக்கி நடந்தான் ரோஹித்,
சிறிது நேரமேனும் தொல்லை தொலைந்ததென ஒரு நீண்ட பெருமூச்சு விட்ட அருவி தலையை பின்னால் சாய்த்து கண்களை மூடிக் கொண்டாள்,
அப்போது அக்னி அவள் இடையோடு சேர்த்தணைத்து இதழ்களைப் பிடித்து இழுத்து சிறைபிடித்து மூச்சு முட்ட வைத்தான், அந்தக் காட்சியைக் கண்டு மூச்சு வாங்கிக் கொண்டே கண் விழித்தவளுக்கு அப்போது தான் வந்தது கனவ தானென்ற நிதர்சனம் உணர்ந்தது,
பலமைல்த் தொலைவில் இருந்தாலும், சிறிது நேரம் கண்ணை மூடி கனவுகூட காண விடாமல் இம்சித்தான் அக்னி, இனியேது உறக்கம் என்ற நிலையில் எழுந்து அங்கேய உலாத்திக் கொண்டிருந்தாள் அருவி,
அந்நேரம் அந்த மருத்துவமனை வளாகமே ஒரு ஆம்புலன்ஸ் சைரன் சத்தத்தில் அதிர்ந்தது, ஸ்ட்ரெச்சரில் ரத்த வெள்ளத்தில் ஒரு உருவத்தை அவசர சிகிச்சைப் பிரிவு நோக்கித் தள்ளிக்கொண்டு ஓடினார்கள், அவள் முன் தரையில் சிதறிக்கிடந்த அந்த ரத்தத் துளிகளைப் பார்த்ததும்,
”ஐயோ… என்ன இது, இவ்வளவு ரத்தம் போகுதே” என்று அருவியின் உதடுகள் தனக்குள்ளேயே முணுமுணுத்தன,
அப்போது ஒரு இளந்தாய், தன் கையில் இருந்த குழந்தையோடு ஓடி வந்தாள். அவளது தலைமுடி கலைந்து, கண்கள் வீங்கி, உடை கலைந்து பார்க்கவே பரிதாபக் கோலத்தில் இருந்தாள்,
தகவலறிந்து வந்த டாக்டர்கள் அவசர சிகிச்சை பிரிவின் உள்ளே செல்ல முயல,
“டாக்டர்… என் புருஷனைக் காப்பாத்துங்க, காலையில தான் வேலைக்குக் கிளம்பிப் போனாரு, இப்படி ஆகும்னு நினைக்கலையே, டாக்டர்… ப்ளீஸ் அவரை எப்படியாவது காப்பாத்திக் குடுங்க டாக்டர்” என்று கதறினாள்,
“எங்களால காப்பாத்த முடிஞ்சா நிச்சயமா உங்க புருஷனை காப்பாத்திடுவோம், அதுக்கு நீங்க கொஞ்ச அமைதியா எங்க வேலையை செய்ய விடுங்க” என்று கூறி டாக்டர் ஐசியுவிற்கு உள்ளே நுழைந்தார்,
டாக்டர் உள்ளே போய் சிறிது நேரம் கழித்து வேகவேகமாக வெளியே வந்த நர்ஸ்,
“பேஷண்டுக்கு ரத்தம் ரொம்ப அதிகமா போயிருச்சு, அவருக்கு O நெகட்டிவ் ரத்தம் வேணும். இது ரொம்ப ரேர் குரூப். எங்க பிளட் பேங்க்ல ஸ்டாக் இல்லை,
வேற இடத்துல இருந்து வர ரெண்டு மணி நேரம் ஆகும், இப்பவே இமீடியட்ட ப்ளட் வேணும் இல்லன்னா அவர் உயிரோட காப்பாத்துறது ரொம்ப கஷ்டம்” என்று நர்ஸ் சொல்ல,
”அய்யோ கடவுளே இப்ப ரத்தத்துக்கு நான் எங்க போவேன், என்ன பண்ணுவேன், என் பிள்ளைக்கு அப்பா இல்லாம போயிடும் போலயே” அவளது கதறல் அந்த மருத்துவமனைச் சுவர்களையே உலுக்கியது,
அவளின் அழுகையை பார்க்க பொறுக்காமலும் தன் மகனின் உயிரைக் காக்க வழி தெரியாமலும் தவித்து நின்ற அடிபட்டவரின் வயதான தந்தை, நர்ஸின் முன்னாடி வந்து நின்று,
“என்னோட ரத்தத்தை எவ்ளோ வேணாலும் எடுத்துக்கோங்க, தயவு பண்ணி என் பையனை மட்டும் எப்படியாவது காப்பாத்துங்க” என்று கலங்கிய விழியோடு கையை நீட்ட,
“உங்க ப்ளட் குரூப்பும் உங்க பையனோட ப்ளட் குரூப்பும் மேட்ச் ஆனா தான் சார் நீங்க ரத்தம் குடுக்க முடியும்” என்றாள் நர்ஸ்,
“அப்போ உடனே டெஸ்ட் பண்ணி பாருங்க” என்று அவர் சொல்ல, நர்ஸ் அவரிடம் சிறிது ரத்தத்தை சேகரித்து சென்று விட்டு திரும்பி வந்தவள்,
“சாரி சார் உங்க ப்ளட் உங்க பையன்கூட மேட்ச் ஆகல, அதனால உங்ககிட்ட ரத்தம் எடுத்துக்க முடியாது” என்று சொல்ல, அந்த வயதான முதியவரும் விடாப்பிடியாக நின்றார்,
“இங்க பாருங்க சார், உங்களை பார்த்தா படிச்சவர் மாதிரி தெரியுறீங்க, சொன்னா புரிஞ்சுக்கோங்க” என்று நர்ஸ் புரிய வைக்க முயன்றாலும்,
மகனை காப்பாற்ற போராடும் தந்தையால் தன் கையறு நிலையை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை, அந்நேரம் வரை நின்று நடந்ததை பார்த்தவளுக்கு இனியும் பொறுக்க முடியாது என்று,
“சிஸ்டர்… எனக்கும் அதே குரூப் தான், என் உடம்புல இருக்கிற மொத்த ரத்தத்தையும் கூட எடுத்துக்கோங்க ஆனா அந்த மனுஷன் உயிரை காப்பாத்துங்க” என்று தாமாக முன் வந்தாள் அருவி,
அந்த இடத்தில் அந்த நேரத்தில் ஆதரவற்று நின்ற குடும்பத்தினருக்கு அவளை காணும் போது கடவுளாகத் தெரிந்தாள்,
நேரம் தாமதிக்காமல் நர்ஸ் உடனே அருவியை அழைத்துக் கொண்டு அதே மருத்துவமனையில் இருந்த ரத்த வங்கிக்குச் சென்றாள்,
“சிஸ்டர் ஒரு எமர்ஜென்ஸி, ஒரு பேஷண்டுக்கு உடனே ஆப்ரேஷன் பண்ணியாகனும், அதுக்ஙு இவங்ககிட்ட இருந்து ப்ளட் எடுத்து குடுங்க” என்று நர்ஸ் சொல்ல,
அங்கிருந்த செவிலியர் உடனே செயல்பட்டனர், அடுத்த சில நிமிடங்களில் அருவியிடம் இருந்து ரத்தம் எடுக்கப்பட்டது,
ஒரு பாக்கெட்டில் ரத்தம் கொடுத்த பிறகு அருவியின் முகம் வெளிறிப் போனது, தலை சுற்றியது, ரத்தம் எடுத்தவுடன் அவளுக்கு ஒரு ஆப்பிள் ஜூஸ் கொடுத்தனர்,
அதைவாங்கிக் குடித்தவளுக்கு கிறக்கம் இன்னும் குறையவில்லை இருந்தும் எழுந்து மெல்ல நடந்து அவசரசிகிச்சை பிரிவுக்கு வந்தாள்,
சில மணிநேர போராட்டத்திற்கு பிறகு ஆப்ரேஷன் தியேட்டரின் முன்பு எரிந்து கொண்டிருந்த சிவப்பு விளக்கு அணைந்தது, அடுத்து கொஞ்ச நேரத்தில் டாக்டர் வெளியே வந்தார்,
“டாக்டர்…. டாக்டர் இப்ப என் பையன் எப்படி இருக்கான், அவனுக்கு ஒன்னும் இல்லையே” என்று பரிதவித்துக் கேட்டார் அந்த வயதானவர்,
“இப்ப அவர் ஓகே தான், ஒரு பிரச்சனையும் இல்ல, மயக்கத்துல இருக்கார், மயக்கம் தெளிஞ்சதும் நர்ஸ் வந்து சொல்லுவாங்க அப்புறமா போய் பாருங்க” என்று டாக்டர் சொல்லவும்,
“என் பையன் உசிரை காப்பாத்தி குடுத்ததுக்கு ரொம்ப நன்றி டாக்டர்” என் கை எடுத்து கும்பிட்டார்,
“சரியான நேரத்துக்கு ரத்தம் கிடைச்சதால தான் எங்களால ஆப்ரேஷனை நல்லபடியா பண்ண முடிஞ்சது, முடிஞ்சா உங்க நன்றியை அவங்கிட்ட சொல்லுங்க” என்று கூறிய டாக்டர் அங்கிருந்து செல்ல,
கைக்குழந்தையோடு நின்றிருந்த பெண் ஓடி வந்து அருவின் கால்களைக் கட்டிக் கொண்டாள், அவள் பின்னால் வந்த வயதானவரோ கை எடுத்து கும்பிட்டு கண் வடித்தவாறு தன் நன்றியைத் தெரிவித்தார்,
“அய்யோ என்ன பண்றீங்க, முதல்ல எழுந்திரிங்க” என்று அப்பெண்ணை எழுப்பி விட்ட அருவி பெரியவரின் கையை கீழே இறக்கி விட்டாள்,
“என் பையன் உயிரை காப்பத்தின உன் உருவத்துல நான் கடவுளையே பாக்குறேம்மா, நீ அந்த கடவுளுக்கும் மேல, எத்தனை தடவை உனக்கு நன்றி சொன்னாலும் போதாது” என்று பெரியவர் கண்கலங்கினார்,
“நீங்க கடவுளா பாக்குற அளவுக்கு நான் எதுவும் பண்ணல, நானும் ஒரு சாதாரண மனுஷி தாங்க, ஒரே ஒரு ஆக்ஸிடெண்டுல என் மொத்த குடும்பத்தையும் தொலைச்சுட்டேன்,
அதனால தானோ என்னவோ உங்க வலியை என்னால புரிஞ்சுக்க முடிஞ்சுது, அப்போ என்னால என் குடும்பத்தை தான் காப்பாத்த முடியல,
ஆனா இப்ப உங்க பையனோட உயிரை காப்பாத்த ஒரு சின்ன ஹெல்ப்பாவது பண்ண முடிஞ்சுதே அதுவே எனக்கு போதும்” என்று கூறியவள்,
அங்கிருந்து நகர்ந்து செல்ல அந்தப் பெரியவர் அவளின் முகத்தை உற்று நோக்கியவாறு எதையோ யோசித்துக் கொண்டு நிற்க, நர்ஸ் வந்து மருந்துச் சீட்டை கொடுத்தாள், அதை வாங்கிக் கொண்டு அங்கிருந்து போனார் பெரியவர்,
ரத்தம் கொடுத்து விட்டு சத்தான ஆகாரம் சாப்பிடாமல் இருந்ததாலோ என்னவோ, அருவியின் நடை தளர்ந்து கால்கள் மடிய, சுவற்றைப் பிடித்துக் கொண்டே சாயப் போனவளை, தாங்கிப் பிடித்து அருகே இருந்த நாற்காலியில் அமர வைத்தான் ரோஹித்,
“இவ்ளோ நேரமா எங்க போனீங்க மேடம், உங்கள எங்கெல்லாம் தேடினேன் தெரியுமா” என்று அவன் சொல்லி முடிக்கும் முன்பே அவள் தலை தொங்கியது மயங்கி விட்டாள் போலும்,
தொடர்ந்து வாசிப்போம் வாங்க
