ஆயிரம் ஜெனனமெடுத்தாலும் அத்தனையிலும் என் உயிரும் உயிர் சுமக்கும் நேசமும் உன்னையே வந்து சேரும் காதலே…!
உன்னில் சிறையாகிறேன் – 33
மயங்கிச் சரிந்த அருவியைத் தாங்கிப் பிடித்த ரோஹித் பதறிப் போனான், “மேடம்… மேடம்… கண்ணைத் திறங்க மேடம்” அவனது அலறல் கேட்டு நர்ஸ்கள் ஓடி வந்தனர்,
ரத்தம் கொடுத்த களைப்பும், போதிய உணவில்லாததும் அவளை அடியோடு சாய்த்திருந்தது, அவசர சிகிச்சைப் பிரிவின் அருகிலேயே அவளுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது,
மறுபுறம், அந்தப் பெரியவர் மருந்துச் சீட்டை வாங்கிக் கொண்டு வெளியே வந்தவர், அருவி சொன்ன அந்த வார்த்தைகளையே அசைபோட்டுக் கொண்டிருந்தார்,
”ஒரே ஒரு ஆக்ஸிடெண்டுல என் மொத்த குடும்பத்தையும் தொலைச்சுட்டேன்” அந்த வரிகள் அவரது ஆழ்மனதில் ஏதோ ஒரு பழைய காயத்தைத் தட்டியது,
“யார் இந்தப் பெண்? இவள் முகம் ஏன் இவ்வளவு பரிச்சயமாக இருக்கிறதே யாராக இருக்கும்” என்று யோசித்தார்,
அடுத்து வந்த நாட்களில் அருவி குழந்தையுடன் மருத்துவமனையில் இருக்க திருவாசகம் அவ்வப்போது வந்து போனார், ஆனால் ரோஹித் ஒரு நிமிடம் கூட அருவியை அகலாமல் அவளுடனேயே இருந்தான்,
யாழினிக்குக் காய்ச்சல் குறைந்து, அவள் மெல்லக் கண் விழித்து “மம்மி…” என்று அழைத்தபோதுதான் அருவியின் ஜீவன் மீண்டும் உடலுக்குள் வந்ததைப் போல இருந்தது,
பெரியவர் அடிக்கடி வந்து அருவியிடம் பேசிவிட்டுச் செல்வார், அதுவும் அவள் குடும்பத்தை எப்படி இழந்தாள் என்ற பேச்சுக்களே அதிகமாக இருக்க அது ரோஹித்திற்கு சுத்தமாக பிடிக்கவில்லை,
அருவிக்காக எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான், அவர் வந்து பழைய விஷயங்களை பேசும் பொழுது அருவியின் முகம் வாடிப்போய்விடுகிறது,
அவனைப் பொருத்தமட்டிலும் அருவி எதற்காகவும் கலங்கக் கூடாது, ரோஹித்தால் பொறுக்க முடியவில்லை,
ஒருகட்டத்தில் பெரியவர் அங்கிருந்து சென்றதும், ரோஹித் அருவியின் அருகில் வந்தான்,
”மேடம், தப்பா எடுத்துக்காதீங்க, இந்தப் பெரியவர் ஏன் இப்படிப் பழசையே கேக்குறாரு, நீங்களும் அவர் பேசும்போதெல்லாம் ரொம்ப அப்செட் ஆகிடுறீங்க,
இதெல்லாம் நமக்கு தேவையா, இனிமே அவர்கிட்ட பேசாதீங்க மேடம்” என்றான் வருத்தத்துடன், அருவி அவனையே பார்த்தாள்,
“பரவாயில்லை ரோஹித் அவர் ஏதோ ஆர்வத்துல கேக்குறாரு, எனக்கும் அன்னைக்கு நடந்ததை யார்ட்டயாவது சொல்லணும்னு தோணுது, அவ்ளோ தான்” என்றாள் அருவி,
“யார்கிட்டயாவது சொல்லனும்னு தோணுனா அதுக்கு தான் நான் இருக்கேனே எங்கிட்ட சொல்லுங்க மேடம்” என்றான் ரோஹித்,
“எல்லாகிட்டயும் எல்லா விஷயத்தையும் சொல்ல முடியாது ரோஹித், நீ வந்து இரண்டு நாளாகுது நீ வீட்டுக்கு போ ரோஹித், நான் தனியா மேனேஜ் பண்ணிப்பேன்” என்று கொடாக் கண்டியாக அருவி சொல்ல,
“நீ இங்க இருக்கும் போது வீட்டுக்கு போய் நான் என்ன பண்ணப் போறேன் மேடம்” என்று விடாக் கொண்டனாக ரோஹித் சொல்ல,
இனி பேசிப் பலனில்லை என்று வாயை மூடிக் கொண்டாள் அருவி,
யாழினிக்குக் காய்ச்சல் முழுமையாகக் குறைந்து, டாக்டர் வீட்டிற்கு போகலாம் என்று சொல்லி விட்டார்,
ரோஹித் ஹாஸ்பிட்டல் பில்லை கட்டிவிட்டு மருந்துகளை வாங்கிவரச் சென்றிருந்தான்,
யாழினி இப்போது கட்டிலில் அமர்ந்து ரோஹித் கொடுத்த பொம்மையோடு விளையாடிக் கொண்டிருந்தாள்,
அருவி வீட்டிற்கு செல்வதற்காக உடமைகளை எடுத்து பையில் அடுக்கிக் கொண்டிருந்தாள், அப்போது அந்தப் பெரியவர் அங்கே வந்தார்,
“என்னம்மா வீட்டிற்கு கிளம்பிட்டாங்க போல, குழந்தைக்கு இப்போ எப்படி இருக்கு” என்று கேட்டார்,
“இப்ப பரவாயில்ல, டாக்டர் வீட்டுக்கு போலாம்னு சொல்லிட்டீருங்கய்யா” என்று சிரித்த முகமாக சொன்னாள் அருவி,
“நல்லதும்மா சந்தோஷமா போயிட்டு வாங்க, அப்புறம்மா உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்” என்று சொன்னவர், ஒரு நிமிடம் தயங்கினார்,
“ஏன் தயங்குறீங்க, எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லுங்க” என்றாள் அருவி,
“அது… வந்தும்மா…, இதை உங்கிட்ட சொல்லியே ஆகனும்னு மனசு கிடந்து துடிக்கிதும்மா, அதான் சொல்றேன்” என்று நிறுத்தியவரை கேள்விக் குறியோடு பார்த்தாள் அருவி, கண்களை மூடி மன தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தொடர்ந்தார் அந்தப் பெரியவர்,
“நீ உன் குடும்பத்துக்கு நடந்ததா சொன்ன ஆக்ஸிடெண்ட், அது நடந்தப்போ அந்த ஏரியா ஸ்டேஷன்ல நான் தான் ரைட்டரா இருந்தேன்” என்று அவர் சொன்னதும்
அருவி கையில் இருந்த துணியைப் அப்படியே போட்டுவிட்டு அவரைத் திகைப்புடன் பார்த்தாள்,
”ஆமாம்மா… என் சர்வீஸ்ல நான் பார்த்த ஆக்ஸிடெண்டிலேயே மோசமான என மனசை உலுக்குன ஆக்ஸிடெண்ட் அதுதான், இப்ப வரைக்குமே என்னால மறக்க முடியலம்மா,
அன்னைக்கு ஸ்பாட்டுக்கு நான் போய் சார்ஜ் ஷீட் (குற்றப்பத்திரிகை) எழுதினேன், நடந்த சம்பவத்தை நேர்ல பார்த்த அத்தனை சாட்சிகளையும் ஒன்னு விடாம விசாரிச்சு எல்லாமே எழுதினேன்,
அடுத்த கொஞ்ச நேரத்துல மேலிடத்துல இருந்து பெரிய பெரிய அதிகாரிகள் ஒவ்வொருத்தரா வந்தாங்க, நான் கூட ஆரம்பத்துல பெரிய ஆக்ஸிடெண்ட் நடந்ததால தான்,
எல்லா அதிகாரிகளும் வந்திருக்காங்க போலன்னு நினைச்சேன். ஆனா போக போக தான் விஷயமே எனக்கு தெரிஞ்சுது” என்று அவர் சொல்லச் சொல்ல அருவியின் விழிகள் ஆர்வமிகுதியில் விரிந்தன,
“அங்க ஆக்ஸிடெண்ட் ஆனா ரெண்டு காரை மட்டும் தான் கணக்குல காட்டுனாங்க, ஆனா நான் ஸ்பாட்ல பார்த்தப்போ அங்க மூணாவதா ஒரு கார் இருந்துச்சு,
அந்த காரோட வேகமும், அது வந்து மோதுன விதமும்தான் மத்த ரெண்டு வண்டிகளையும் தூக்கி வீசுச்சுன்னு நான் விசாரிச்ச விட்னஸ் சொன்னாங்க,
ஆனா மேலிடத்து உத்தரவுப்படி, அந்த ஆக்ஸிடெண்டுக்கு காரணமான காரைப் பத்தின விவரமே அந்த கேஸ்ல இருக்கக்கூடாதுன்னு சொல்லி பழைய சார்ஜ் ஷீட்டை கிழிச்சுப் போடச் சொன்னாங்க” என்று
சொன்ன பெரியவர் தன் கையில் இருந்த கோப்பைத் திறந்து, கசங்கி பாதியாகக் கிழிந்த ஒரு காகிதத்தையும் அருவியிடம் நீட்டினார்,
”ஆக்ஸிடெண்ட் பண்ணது பெரிய இடத்து ஆள் போல, ஆக்ஸிடெண்ட் ஆன கொஞ்ச நேரத்துக்குள்ளயே அப்படி ஒரு கார் இருந்ததுக்கான அடையாளமே தெரியாத அளவுக்கு எல்லாத்துயும் துடைச்சு எடுத்துட்டு போயிட்டாங்க,
அந்த கார்ல வந்த ஆளுக்கு பெருசா காயம் எதுவும் இல்ல, ஆளு நல்லா வாட்ட சாட்டமா இருந்தாரு, பணக்காரங்க பணத்திமிருல அப்பாவி உசிருகளை காவு வாங்கிட்டு ஒன்னுமே தெரியாத மாதிரி,
பணத்தால அடிச்சே எல்லாரையும் விலைக்கு வாங்கிட்டாங்கம்மா, ஒன்னா இரண்டா அத்தனை உசிரைக் குடிச்ச பாவிகளை சட்டத்தால எதுவுமே பண்ண முடியலைம்மா,
ஏன்னா இந்த மாதிரி ஆளுகளுக்காக தான காக்கி சட்டையும் கறுப்பு கோட்டும் வேலை செய்யது, நம்மள மாதிரி சாதாரண ஆட்களை மனுஷங்களா பாக்காதப்போ நமக்கான நீதியும் நியாயமும் மட்டும் எப்படி கிடைக்கும் சொல்லு,
எனக்கு தான் மனசாட்சி கேக்கால, கிழிச்சுப் போடச் சொல்லி குடுத்த சார்ஜ் சீட்டையும் அதுக்கூட ஆக்ஸிடெண்ட் பண்ண காரோட போட்டோவையும் யாருக்கும் தெரியாம மறைச்சு வச்சிருந்தேம்மா” என்று ஒருசில புகைப்படங்களையும் எடுத்துக் காட்டினார்,
அதை வாங்கிப் பார்த்தாள் அருவி அதில் ஒரு கறுப்பு நிற சொகுசு கார் முன்பக்கம் சேதாரமான நிலையில் நின்றிருந்தது, அதற்குள் ஆட்கள் யாரும் இருப்பதாக தெரியவில்லை,
“ஏதோ என்னால முடிஞ்சது இது தான்ம்மா, உங்கிட்ட விஷயத்தை சொல்லி இதை எல்லாம் குடுக்கனும்னு தோணுச்சு குடுத்துட்டேன் நான் வர்றம்மா” என்று கூறிய பெரியவர்,
தான் இத்தனை ஆண்டுகாலமாக சுமந்த பெரும் பாரத்தை இறக்கி வைத்த திருப்தியில் அங்கிருந்து சென்றார்,
அருவி காரின் புகைப்படத்தையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள், அவளின் உலகத்தையே ஒருநொடியில் இல்லாமல் செய்த வாகனம் அல்லவா,
அப்போது பணம் கட்டிவிட்டு மருந்துகளை வாங்கிக் கொண்டு வந்த ரோஹித், அருவியிடம் வந்தான், அவன் வந்ததைக் கூட கவனிக்காமல் சிலையென அவள் நிற்க,
என்ன இது இப்படி வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று ரோஹித்தும் வந்து பார்த்தான், அதில் ஒரு கார் முன்பக்கம் சேதாரத்தோடு நின்றிருந்தது,
“என்ன மேடம் கார் ஆக்ஸிடெண்டா, யாருக்கும் எதுவும் ஆகலையே, ஆமா மேடம் இது சாரோட காரா இல்ல ஐயாவோட காரா” என்று ரோஹித் கேட்க, சுயநினைவு மீண்டவளாக அவனைப் பார்த்தாள்,
“என்ன உளர்ற, இது யாரோட கார்ன்னே தெரியல, இனிமே தான் கண்டுபிடிக்கனும்” என்றாள் அருவி,
“இதுல கண்டுபிடிக்க என்ன இருக்கு அதான் அந்த கார்ல கம்பெனி லோகோ இருக்கே அதை பார்த்தா தெரியல” என்று ரோஹித் சொன்ன பின்பு தான் அதை கவனித்தவளுக்கு தூக்கிவாரிப்போட்டது,
அந்தக் காரின் முன்பக்கத்தில், சிதைந்திருந்த போனெட்டின் நடுவே, அக்னியின் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வச் சின்னம் தெளிவாகப் பொறிக்கப்பட்டிருந்தது,
அந்தச் சின்னம் அவளுக்குப் பரிச்சயமானது தான், அக்னியின் ஆபீஸ் ஃபைல்கள், அவனது கார், ஏன் அவனது விசிட்டிங் கார்டில் கூட அந்தச் சின்னத்தைப் பார்த்திருக்கிறாள்,
அருவிக்குத் தலை சுற்றியது, உலகமே அவளைச் சுற்றி வேகமாகச் சுழல்வது போல ஒரு பிரம்மை,
“இல்ல… இது நிஜமா இருக்கக் கூடாது, இது நிஜமா இருக்கக் கூடாது, என் குடும்பத்தோட சாவுக்கும் என் அக்னிக்கும் எந்த சம்பந்தமும் இல்ல” என்று அவள் உள்ளம் மண்டியிட்டுக் கெஞ்சியது,
என்ன தான் அழுதாலும் புரண்டாலும் ஏன் மாண்டு மடிந்தாலும் உண்மை, உண்மை தானே, அதை மறுக்கவோ மாற்றவோ முடியாதல்லவா, கசந்தாலும் ஏற்க தானே வேண்டும்,
திருவாசகம் முதன்முறையாக தன்னைத் தேடி வந்ததில் இருந்து இன்றுவரை நடந்தவைகளை கணக்கிட்டுப் பார்த்த அருவியின் இதயம் சுக்குநூறாக உடைந்தது,
அவளது கண்கள் சிவந்து, கண்ணீர் தாரை தாரையாகக் கொட்டியது, அதைக் கண்டதும் ரோஹித் பதறிப்போனான்,
“மேடம்… மேடம்… என்னாச்சு, ஏன் அழுகுறீங்க, அந்த போட்டோவுல என்ன இருக்கு, கம்பெனி லோகோ இருந்தா அது சாரோட கார்னு எப்படிச் சொல்ல முடியும்,
அவங்க கம்பெனியில எத்தனையோ கார் இருக்குமே, அதுல ஏதாவது ஒன்னாக் கூட இருக்கலாம், சாருக்கு எதுவும் ஆகியிருக்காது மேடம்” என்று அவளைத் தேற்ற முயன்றான்,
ஆனால் அருவி எதையும் கேட்கும் நிலையில் இல்லை, அவளது மனதில் அக்னியின் மேல் இருந்த பிம்பம் தரையில் விழுந்த மண்குடம் போல் நொறுங்கிப் போனது,
குழந்தையை ரோஹித்திடம் ஒப்படைத்து விட்டு அங்கிருந்து புயலெனக் கிளம்பி வந்தாள்,
மருத்துவமனையிலிருந்து நேராக அக்னியின் வீட்டு வாசலில் வந்து நின்றாள் அருவி,
வீட்டிற்குள் நுழைந்தவள் ஹாலில் அமர்ந்திருந்த திருவாசகத்தின் முன் நின்றாள், அங்கே அந்நேரம் அருவியை எதிர்பாராத திருவாசகம்,
கலைந்த தலையோடும் சிவந்த கண்களோடும் ஆவேசத்தின் மொத்த ரூபமாக நிற்கும் அருவியைப் பார்த்துத் திடுக்கிட்டு எழுந்தார்,
”அருவி… என்னம்மா ஆச்சு? குழந்தைக்கு எப்படி இருக்கு? ஏன் இப்படித் தனியா…” – அவர் பேசி முடிக்கும் முன்பே, தன் கையில் இருந்த புகைப்படங்களை அவர் முகத்திற்கு நேராக நீட்டினாள்,
”இது யாருடைய கார் தாத்தா” என்ற அருவியின் குரல் அந்த அவ்விடமெங்கும் இடி முழக்கமாய் எதிரொலித்தது,
திருவாசகம் அந்தப் புகைப்படத்தைப் பார்த்து ஏற்பட்ட அவரது கை நடுக்கமும் அவரது மௌனமும் அருவியின் சந்தேகத்திற்கு நெய்யூற்றியது,
தொடர்ந்து வாசிப்போம் வாங்க
