உயிரென வந்தாயோ- 2

அத்தியாயம் 2

அன்று ஞாயிற்றுக்கிழமை. வீட்டினில் பரப்பரப்பாக வேலை செய்து கொண்டிருந்தனர். 

“ஏன்டி.. மாப்பிளை வீட்டுக்காரங்க இன்னும் கொஞ்சம் நேரத்துல வந்துருவாங்க. இன்னுமா வேலையை பார்த்துட்டு இருக்க. முதல்ல குளிச்சிட்டு சட்டு புட்டுனு கிளம்பி வா.” என்று நாகராஜ் தன் மனைவி செண்பகத்திடம் கூறிக் கொண்டிருந்தார். 

“இதோங்க. வேலை எல்லாம் முடிஞ்சது. அவ்ளோதான். எல்லாம் எடுத்து வச்சிட்டு போய் ரெடி ஆக வேண்டியது தான்.” என்றிட, 

“ம்ம். அப்படியே உன் மக கிளம்பிட்டாளானு பார்த்து அவளையும் ரெடியா இருக்கச் சொல்லு.” என்று கூறி விட்டு வெளியில் சென்றார்.

செண்பகமும், அவசரமாக குளியல் அறைக்குச் சென்று குளித்து விட்டு வந்தவர், மகள் அர்ச்சனாவின் அறைக்கு, அவளை பார்க்கச் சென்றார். 

ஆனால், இதற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லாத போல அமர்ந்து இருந்தாள் அவள். 

“என்னடி.. நீ இன்னும் ரெடி ஆகலையா?? உங்க அப்பனுக்கு தெரிஞ்சா கத்த ஆரம்பிச்சிருவாரு. சீக்கிரம் கிளம்புடி.” என்று கூற, அவளோ யாருக்கோ வந்த விருந்து என்பது போல அமைதியாக இருந்தாள்.

அதைப் பார்த்த செண்பகம், “அர்ச்சனா.. எனக்கு உன் மனசு புரியுது. ஆனா உன் வாழ்க்கை இப்படி ஒத்தையா போயிடுமோனு ஒரு பயம். அதுனால தான் உங்க அப்பா வரன் பாக்குறாரு. புரிஞ்சிக்கோம்மா” என்றார். 

அவளும் ஒரு பெருமூச்சுடன், தன் அன்னையை ஏறிட்டு, “நானும் உங்களுக்காகத் தான் ஒவ்வொரு முறையும் சம்மதிக்கிறேன். ஆனா, என்ன நடக்குது கடைசியா.. வர்றவங்க அது வேணும் இது வேணும்னு நம்ம தகுதிக்கு மீறி கேட்கும் போது அது தடைபட்டு போய், அடுத்த கொஞ்ச நாள்ல, அடுத்த வரன் கொண்டு வந்து நிறுத்துறீங்க. எனக்கும் ஒவ்வொரு தடவையும் அவங்க முன்னாடி பொம்மை மாதிரி போய் நிக்க கடுப்பா இருக்கும்மா.” என்றாள் ஆதங்கமாக. 

“இந்த தடவை, அப்படி எல்லாம் எதுவும் ஆகாதுடி. ஏன்னா உங்க அப்பா புரோக்கர்கிட்ட சொல்லிட்டாரு. வசதிக்கு மீறி எதுவும் செய்ய முடியாதுன்னு. அதுனால இந்த இடம் கண்டிப்பா அமையும்.” என்றார் செண்பகம். 

அவள் எதுவும் பேசவில்லை. ஒரு பெருமூச்சுடன் அமைதியாக, தயார் ஆகிக் கொண்டிருந்தாள். 

அவளுக்கு விருப்பம் இல்லை என்றாலும், கட்டாயத்தின் பேரில் மட்டுமே பெற்றோர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நடந்து கொள்கிறாள். 

அர்ச்சனாவிடம் பேசிவிட்டு, வெளியில் வந்த செண்பகம், தன் கணவரிடம் சென்று, “ஏங்க, அர்ச்சனா ரெடி ஆகிட்டா.” என்று மட்டும் கூற, அவரும் “ம்ம்” என்று மட்டும் கூறி விட்டு, மாப்பிள்ளை வீட்டினருக்காக, காத்துக் கொண்டிருந்தார். 

சிறிது நேரத்தில், வாசலில் கார் ஒன்று வந்து நிற்க, நாகராஜோ, “மாப்பிள்ளை வீட்டுக் காரங்க வந்துட்டாங்க போல..” என்று செண்பகத்திடம் கூறி விட்டு, வாசலை நோக்கிச் செல்ல, 

அவரை பின் தொடர்ந்த வண்ணம் செண்பகமும் சென்றார். 

“வாங்க வாங்க..” என்று வரவேற்று, வீட்டின் உள்ளே அழைத்துச் சென்றவர், முன்னறையில் அமர வைத்தனர். 

“செண்பகம்.. வந்தவங்களுக்கு முதல்ல, குடிக்க தண்ணி கொண்டு வா” என்று தன் மனைவியிடம் கூற, அவரும் வந்தவர்களுக்கு முதலில் குடிக்கத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்..

ஒரு வயதான ஆண் மற்றும் பெண் இருக்க, அவர்கள் தான் மாப்பிளையின் தாய், தந்தை எனக் கூறாமலே, அறிந்து கொண்டனர். 

இன்னும் இருவர் யார் என்று தான் தெரியவில்லை. ஒரு வேளை, மாப்பிள்ளை வரவில்லையோ என்று நினைத்து இருந்தனர். 

“பொண்ணை வரச் சொல்லுங்க.” என்று அந்த வயதான பெண்மணி கூற, “போய் அர்ச்சனைவை கூப்டுட்டு வா” என்று அருகில் நின்று இருந்த தன் மனைவியிடம் கூறினார். 

அவரும் உள்ளே சென்று, அர்ச்சனாவை அழைத்துக் கொண்டு வெளியில் வந்தார்.

“வந்தவங்களுக்கு வணக்கம் சொல்லுமா” என்று செண்பகம் கூற, அதனை ஒரு சலிப்புடன் கேட்டுக் கொண்டு, அவர்களைப் பார்த்து வணக்கம் வைத்தாள். புன்னகை சிறிதும் இல்லை அவள் முகத்தில். 

மாப்பிள்ளையின் பெற்றோருக்கு பெண்ணை பிடித்து விட, “எங்களுக்கு பொண்ணை பிடிச்சி போச்சு. நீங்களும் உங்க சம்மதம் சொல்ல்லிட்டா, மேற்கொண்டு பேசலாம்.” என்றார் வயதான பெண்மணி. 

“அது..” என்று நாகராஜ் இழுக்க, 

“என்ன ஆச்சு??” என்று வயதான ஆண் கேட்டார். 

“இல்ல. நாங்க இன்னும் மாப்பிள்ளையை பாக்கலையே??” என்றார் நாகராஜ். 

அந்த வயதான ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“என்ன இப்படி சொல்றீங்க. இதோ இவன் தான் என் பையன்.” என்று அருகில் இருந்த நாற்பத்தி ஐந்து வயது மதிக்கத் தக்க, நபரைக் காட்டினார். 

அவரைப் பார்த்ததும் மூவருக்குமே அதிர்ச்சி. 

அர்ச்சனா ஒரு முறை தன் தந்தையை கலங்கிய கண்களுடன் பார்த்து விட்டு, விறு விறுவென, உள்ளே அறைக்குச் சென்று விட்டாள்.

முன் பக்க தலையில், முடி இழந்து சொட்டையாக, பார்ப்பதற்கே, வயதான தோற்றம் போல இருந்தார். 

இவனுக்கு என் மகளை கொடுப்பதா.. அப்படி ஒன்றும் என் மகளின் தரம் குறைந்து விடவில்லை என்று மனதின் உள்ளே நினைத்தவர், 

“மன்னிக்கணும். இந்த சம்மந்தம் எங்களுக்கு வேண்டாம்” என்றார் நாகராஜ். 

“ஏன்?? என்ன ஆச்சு.” என்று கேட்டார் அந்த வயதான பெண்மணி. 

“இல்லை எங்களுக்கு விருப்பம இல்லை. நீங்க வேற இடம் பார்த்துகோங்க.” என்று நாசூக்காக கூறிப் பார்த்தார் நாகராஜ். 

“நீங்க சொல்ற கண்டிஷனுக்கு எல்லாம் ஒத்துக்கிட்டு தானே வந்து இருக்கோம். அப்புறம் என்ன வேண்டாம்னு சொல்றீங்க?” என்றார். 

“அப்பவே நாங்க யோசிச்சு இருக்கனும். அப்போ புரியல ஏன்னு. இப்போதான் புரியுது.” என்றார் நாகராஜ். 

“என்ன புரிஞ்சது. நீங்க பேசுறது எங்களுக்கு ஒன்னும் புரியல.” என்றார் மாப்பிள்ளையின் அப்பா. 

“மாப்பிளைக்கு வயசு அதிகம்னு எங்களுக்கு தெரியாது. ப்ரோக்கரும் எங்ககிட்ட சொல்லல..” என்றார். 

“ஓஹோ.. உங்கப் பொண்ணுக்கு இது ரெண்டாவது கல்யாணம். ஆனா என் பையனுக்கு இது தான் முதல் கல்யாணம். அதை முதல்ல நியாபகம் வச்சிக்கோங்க. எங்க லெவலுக்கு இல்லனாலும், சரி பரவாயில்லைன்னு வந்தா, வேண்டாம்னு சொல்றீங்க.” என்றார் அந்தப் பெண்மணி. 

இப்பொழுது நாகராஜ் மற்றும் செண்பகத்தின் முகமும், அறையின் உள்ளே இருந்த, அர்ச்சனாவின் முகமும், வாடித் தான் போனது. 

“சரி முடிவா என்ன தான் சொல்ல வரீங்க???” என்று அந்தப் பெண்மணி கேட்க, 

நாகராஜ், ஒரு பெருமூச்சுடன், “நீங்க கிளம்புங்க. வேற சம்மந்தம் பார்த்துகோங்க.” என்று கை எடுத்து கும்மிட, 

அந்தப் பெண்மணியோ, “ம்முக்கும்.. இப்படி வர்றவனை எல்லாம் வேண்டாம்னு சொன்னா, இப்படியே காலம் முழுக்க இருக்க வேண்டியது தான்.” என்று பேசியபடியே அங்கிருந்து சென்றார். 

நாகராஜ் அப்படியே சோபாவில் அயர்ந்து போய் அமர்ந்தார். 

“என்னங்க..” என்று அழைத்தபடி, செண்பகம் அவரின் அருகில் அமர, “கொஞ்ச நாளைக்கு இந்த கல்யாணப் பேச்சு எதுவும் இல்லாம நம்ம பொண்ணு நிம்மதியா இருக்கட்டும். திரும்பத் திரும்ப நம்ம பொண்ணு அசிங்கப் பட்டு தான் போறா. அவ இஷ்டபடி இனி வாழ எதிர் காலத்துல அவளுக்கு யாரைவது பிடிச்சி இருக்குனு வந்து சொன்னா அப்போ பார்த்துக்களாம்.” என்று ஆதங்கத்துடன் பேசினார் தன மனைவியிடம். 

தன் அப்பா பேசிய வார்த்தைகள் எல்லாம் அர்ச்சனாவின் காதினிலும் விழுந்தன. 

முதல் திருமணம் முடிந்து ஒரு வாரமே ஆன நிலையில், கணவன் இறந்து விட, பல கனவுகளுடன் புகுந்த வீட்டுக்குச் சென்ற அர்ச்சனா, மீண்டும் பிறந்த வீட்டுக்கே தஞ்சம் புகுந்தாள்.

சில மாதங்கள் வீட்டிலேயே தஞ்சம் இருந்தவள், இது சரி வராது என்று நினைத்து, அதற்குப் பிறகு அவள், புது நிறுவனத்திற்கு பணியில் சேர்ந்தாள்.

பழைய இடத்திற்குச் சென்றால், அங்கு உடன் வேலை புரிவோரின் பரிதாபப் பார்வையும், ஏளனப் பேச்சுகளையும் சந்திக்க வேண்டி இருக்கும் என்று எண்ணி, புது இடத்தில, புதிதாக, தன்னை பொருத்திக் கொண்டாள். 

 ஒரு வருடம் ஆன நிலையில், அர்ச்சனாவின் தந்தை, அவளுக்கு கட்டாயத்தின் பேரில் மீண்டும் வரன் பார்க்க ஆரம்பிக்க, அங்கு இங்கு என்று நீண்டு கொண்டே சென்று, கடைசியாக, இன்றோடு முடிவுக்கு வந்து இருக்கின்றது. 

 நாகராஜிடம் பேசிவிட்டு, அர்ச்சனைவை தேடிச் சென்ற, செண்பகம்,“அர்ச்சனா, நீ எதுவும் வருத்தபடாத.. உங்க அப்பா இனி இந்தப் பேச்சை எடுக்கவே மாட்டாருமா” என்றிட, 

அவளோ ஒரு பெருமூச்சுடன், “நான் இங்க உங்க பொண்ணாவே இருந்துட்டு போய்டுறேன். இல்ல நான் இருக்கிறது உங்களுக்கு பாரமா இருந்துச்சுனா சொல்லிருங்க. நான் வெளிய எங்கயாவது ஹாஸ்டல்ல போய் தங்கிக்கிறேன்.” என்று கூற, 

“ஏன்டி.. எதுக்குடி இப்போ இப்படி பேசிட்டு இருக்க. உன்ன பாரம்னு நெனச்சா நாங்க இத்தனை வருஷம் உன்னை பார்த்துட்டு இருந்தோம். எங்க காலத்துக்கு அப்புறம் நீ தனி மரம் ஆகிரக் கூடாதுன்னு தான் உனக்கு மறு கல்யாணம் பண்ண நெனச்சோம். ஆனா நீ இப்படி பேசிட்டு இருக்க. என்கிட்ட கேட்ட போல உங்க அப்பாகிட்ட இப்படி கேட்டுப் புடாத. உங்க அப்பா மனசு உடைஞ்சி போய்டுவாரு.” என்று ஆதங்கத்துடன் பேசினார் செண்பகம். 

அர்ச்சனா அமைதியாக இருக்க, “இனிமே உங்கிட்ட கேட்காம நாங்க இதைப் பத்தி பேச மாட்டோம். உனக்கு எதிர் காலத்துல கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இருந்தா பண்ணிக்க. இல்லனாலும் ஒன்னும் இல்ல. பார்த்துக்கலாம்” என்று கூறி விட்டு, அங்கிருந்து சென்றார். 

அர்ச்சனாவும் பெண் தானே.. அவளுக்கும் கணவன் குழந்தை குடும்பம் சகிதமாக வாழ வேண்டும் என்ற ஆசை உண்டு. 

ஆனாலும் இந்த சமூகம் அவளை மறுமணம் செய்கின்றாள் என்ற கண்ணோட்டத்தில் பார்ப்பதால், அதற்கு ஏற்ற போல, வரதட்சணை கேட்கிறார்கள் அல்லது இப்படி வயதான ஆண் வந்து முன் நிற்கிறார்கள். அவளுக்கு இதை எல்லாம் பார்த்து சலித்து போய் விட்டது.  இனி திருமணமே வேண்டாம் என்ற எண்ணத்திற்கு வந்து விட்டாள். இது வரைக்கும் பட்டது எல்லாம் போதும் என்று அனைத்தையும் மூடி திரையிட்டுக் கொண்டாள்.

அவளின் மனத்தை அறிந்த மணவாளன் வருவானா அல்லது அவள் வாழ்க்கை இப்படியே திரை மூடி செல்லுமா என்று பொறுத்து இருந்து பார்ப்போம். 

 

தொடரும்.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page