அத்தியாயம் 3
அன்று வளவன் அவனுடைய மெக்கானிக் செட்டில் வேலை செய்து கொண்டு இருக்கும் போது, சத்யனிடம், “சத்யா.. எக்ஸாம்க்கு எல்லாம் படிச்சிட்டியா??” என்று கேட்டிட,
“ஆமாண்ணே. ஓரளவுக்கு படிச்சிட்டேன்.” என்றான்.
“ம்ம்ம். இப்போ இதுல நல்ல மார்க் எடுத்தான்டா, அடுத்து நல்ல குரூப் எடுக்க முடியும். அப்பறம் +2 முடிச்சிட்டு நல்ல கோர்ஸ் எடுத்தா தான், கேம்பஸ்ல செலக்ட் ஆகி, காலேஜ் படிச்சி முடிச்சதும் அப்படியே வேலைக்கு போயிறலாம்டா. அதுக்கு அப்புறம் உன் குடும்பத்தை நல்ல படியா பார்த்துக்கலாம்டா.” என்றபடி சத்யனுக்கு அறிவுரை கூறிக் கொண்டிருந்தான்.
“ஆமாண்ணே.. நான் நல்லா படிச்சி வேலைக்கு போனாத் தான் நீங்க சொல்றபடி அம்மாவையும் தங்கச்சியையும் நல்லா பார்த்துக்க முடியும்.” சத்யன் கண்ணில் ஆர்வம் பொங்க, வளவனிடம் கூறினான்.
வளவனோ, ஒரு சின்ன சிரிப்புடன், “அதுக்குத் தான் இந்த வேலையை எல்லாம் நான் பார்த்துகிறேன். நீ போய் படி..” அவனிடம் கூற, அவனும் “சரிண்ணே..” என்று தலையாட்டியபடி, புத்தகத்தை எடுத்துக் கொண்டு ஒரு ஓரத்தில் அமர்ந்து கொண்டான்.
வளவனுக்கும் படிப்பின் அருமை தெரியும் அல்லவா.
தன் தந்தை இல்லாமல் போனதால், தான் படிக்க முடியாமல் போனது போல, சத்யனுக்கும் அப்படி ஆகி விடக் கூடாது என்று எண்ணி, அவனே சத்யனை படிக்க வைக்கின்றான்.
சத்யன், வளவனின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் குடும்பம் தான்.
சத்யனுக்கு தந்தை இல்லாததால், அவனின் தாய் இவனிடம் வேலைக்கு வைத்துக் கொள்ளும்படி கேட்க, வளவனோ, இவரின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அவனை வேலைக்கும் வைத்துக்கொண்டு, படிக்வைத்துக் கொண்டும் இருக்கின்றான்.
சத்யனும் பள்ளி முடித்தப் பிறகு நேரே இங்கு தான் வருவான். தன்னுடைய அன்றைய வீட்டுப் பாடத்தை எல்லாம் முடித்து விட்டு, வளவனுக்கு கூட மாட, ஒத்தாசையாக இருப்பான்.
வளவன் எங்கு சென்றாலும், சத்யனை பார்த்துக் கொள்ளும்படி கூறி விட்டு, கிளம்பி விடுவான்.
அவனும் பொறுப்பாக வளவன் இல்லாத நேரத்தில் பார்த்துக் கொள்வான்.
அதே சமயம், விடுமுறை நாட்களில், சத்யனுக்கு வாகனங்களை பழுது பார்க்கும் வேலையையும் கற்றுக் கொடுப்பான்.
“படிப்பு மட்டும் இல்லாம, ஏதாவது ஒரு வேலையை நம்ம கத்து வச்கிகனும்டா. எப்பவுமே அது நமக்கு கைக் கொடுக்கும்.” என்று எப்படி கையாள வேண்டும் என்பதனையும் தெளிவாக சொல்லித் தருவான் வளவன்.
ஒரு மென் சிரிப்புடன், அவன் படிப்பதை பார்த்து விட்டு, அவனுடைய வேலையைத் தொடர்தான்.
அவன் அலைபேசி அடிக்கும் சத்தம் கேட்டு, திரும்பிப் பார்க்க, சத்யன் அலைபேசியை எடுத்து வந்து அவனிடம் கொடுத்தான்.
“யாருடா??” என்று கேட்க,
“தெரியலைண்ணே.. ஏதோ நம்பர்.” என்று உதட்டை பிதுக்கியபடி கூறியவன், அவனிடம் கொடுத்து விட்டு, மீண்டும் விட்ட வேலையைத் தொடர்ந்தான்.
வளவனும் யோசனையுடன் எடுத்து காதில் வைத்தவன் ”ஹலோ..” என்க,
“ஹலோ.. நாங்க E3 ஸ்டேஷன்ல இருந்து கால் பண்றோம். வளவன்றது யாரு??” அந்தப் பக்கம் கான்ஸ்டபுல் ஒருவர் இவனிடம் கேட்க,
வளவனுக்கோ, போலீஸ் ஸ்டேஷன் என்றதும் சற்று பயம் தொற்றிக் கொண்டது.
அதை அவரிடம் காட்டிக் கொள்ளாமல், “நான் வளவன் தான் சார் பேசுறேன். சொல்லுங்க சார். என்ன விஷயம்??” என்று கேட்டான்.
“உன் மச்சான் தானே குமார்??” கேட்க,
“ஆ..ஆமா.. சார்.” அவனைப் பற்றி விசாரிக்கிறார்கள் என்றால், அவனுக்கு எதுவும்… அல்லது அவன் எதுவும்.. என்று மூளை நிலை கொள்ளாமல் ஏதேதோ எண்ணங்களை சிறிது நேரத்தில் மாற்றி மாற்றி யோசித்துக் கொண்டிருந்தது.
“போலீஸ் ஸ்டேஷனுக்கு கிளம்பி வாப்பா” என்று என்ன விசயம் என்று கூறாமல், பொத்தாம் பொதுவாக, கிளம்பி வா என்று கூறினால், என்னவென்று நினைப்பது என்று நினைத்தவன், அவரிடம், “சார் என்ன ஆச்சு.. அவனுக்கு ஒன்னும் இல்லையே??” பதட்டமாக வந்த அவனின் குரலின் தொனியை வைத்தே, அவன் எந்த அர்த்தத்தில் கேட்கின்றான் என்று பொறி தட்டிய பிறகு தான், “அவனுக்கு ஒன்னும் இல்ல தம்பி. நீ கிளம்பி வா. இன்ஸ்பெக்டர் கொஞ்ச நேரத்துல வெளிய கிளம்பிருவாறு. நீ உடனே வந்தா அவருகிட்டத் பேசிரலாம். இல்லனா சாயந்திரம் ஆகிடும்ப்பா” வளவனிடம் கூற, அவனும், “சரி சார்… நான் இப்பவே கிளம்பி வரேன்.” என்றவன், அலைபேசியை வைத்து விட்டு, உடனே சதயனிடம், “சத்யா.. எனக்கு கொஞ்சம் அவசர வேலை இருக்கு. நீ பார்த்துக்கோ. யாராவது வந்து கேட்டா, அண்ணன் முக்கியமான வேலையா வெளியப் போய் இருக்காரு. எப்போ வருவாருன்னு தெரியாதுனு சொல்லுடா” என்று சட்டையை எடுத்து மாட்டியபடி, அவசரமாகவும் பதட்டமாகவும் கூறினான்.
அவனின் அவசரத்தை உணர்ந்த சத்யனோ, கிளம்பும் போது எதுவும் கேட்க வேண்டாம் என்று எண்ணி,” சரிண்ணே..” என்று மட்டும் கூறினான்.
வளவனும் அங்கிருந்து அவசரமாக, தனது வண்டியை எடுத்துக் கொண்டு அந்த காவல் நிலையத்தை நோக்கிச் சென்றான்.
போகும் வழியில், “இவன் என்ன பண்ணித் தொலைச்சானு தெரியல??” என்ற யோசனையுடன் காவல் நிலையத்தையும் நெருங்கி விட்டான்.
காவல் நிலையம் வாசலில் வண்டியை நிறுத்தி விட்டு, உள்ளே சென்றவன், ஒரு கான்ஸ்டபுளிடம் சென்று, “சார்.. என் பேரு வளவன். எனக்கு போன் பண்ணி வரச் சொன்னாங்க.” என்று கூற, அவரோ வேறு ஒரு கான்ஸ்டபிளைக் காட்டி, “அவருகிட்டப் போய் கேளுப்பா” என்று அனுப்பி வைத்தார்.
அந்தக் கான்ஸ்டபிளை காணும் போது தான், அங்கே ஒரு மேசையில் குமார் அமர்ந்து இருந்தான்.
குமாரோ, வளவனைக் கண்டதும், தலையைக் குனிந்து கொண்டான்.
அவனும் ஒரு பெருமூச்சுடன், அவரிடம் சென்று தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ள, அவரும், “ஹான். உக்காருப்பா..” என்றவர், “உன் மச்சான், காலேஜ்ல, ஒரு பையன் கூட அடிதடி தகறாரு பண்ணி, அந்தப் பையனுக்கு அடிபட்டு ஹாஸ்பிடல்ல சேர்த்து இருக்காங்க இப்போ. அந்தப் பையனோட பேரன்ஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்காங்க. அதுனால, அவனை விசாரிக்க கூட்டிட்டு வந்து இருக்கோம். இன்னும் இன்ஸ்பெக்டர் FIR போடல. படிக்கிற பையன். அவன் லைப் கேள்விக் குறி ஆகிரும்னு போடாம வச்சி இருக்காரு.” என்று பொறுமையாக, வளவனுக்கு அனைத்தையும் எடுத்துக் கூறினார்.
“ஓகே சார். அப்போ நான் ஏதாவது வக்கீல் கிட்ட பேசி ஜாமீன் எடுக்க ஏற்பாடு பண்றேன். அது போக, அவங்க பேரன்ஸ் கிட்டயும் பேசிப் பாக்குறேன் சார். இந்த கேஸ் வாபஸ் வாங்க முடியுமான்னு” கான்ஸ்டபிளிடம் கூறி விட்டு, குமாரை முறைப்புடன் ஒரு பார்வைப் பார்க்க, அவனுக்கோ வளவனின் பார்வையை சந்திக்க முடியாமல் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்.
வெளியே வந்தவன், தன்னிடம் வாடிக்கையாக வண்டியை சர்வீஸ்க்கு விடும் வழக்கறினர் ஒருவரிடம் தொடர்பு கொண்டு, நடந்த அனைத்தையும் கூறினான்.
அவரும் அனைத்தையும் கேட்டுக் கொண்டு, “சரி இப்போ நீ எங்க இருக்க வளவா??” என்று கேட்க,
“நான் போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல தான் சார் நின்னுட்டு இருக்கேன்.” என்றான்.
“சரி நீ அங்கேயே இரு. நான் ஒரு அரை மணி நேரத்துல வந்துருறேன்.” என்றவர், குமாருக்காக உடனடியாக, ஜாமீனுக்கு ஏற்பாடு செய்தார்.
பின்னர், அந்த காவல் நிலையம் வந்து வளவனுடன் சேர்ந்து, காவல்துறை ஆய்வாளருடன் சென்று, குமாருக்கான, ஜாமீனை காட்ட, அவரும் பார்த்து விட்டு, கான்ஸ்டபிள் ஒருவரிடம், “அவனை அனுப்பி வையுங்க..” என்றவர், வளவனைப் பார்த்து, “நீங்க பாதிக்கப்பட்ட, பையனோட, அம்மா அப்பாகிட்ட பேசிட்டு முடிஞ்ச அளவுக்கு கேஸ் வாபஸ் வாங்க ட்ரை பண்ணுங்க..” என்றவர், குமாரைப் பார்த்து, “காலேஜ்க்கு போனால், ஒழுங்கா படிக்கிற வேலையை மட்டும் பாரு. அடுத்த தடவை இது போல பண்ணிட்டு இருந்த, பாவம் எல்லாம் பாக்க மாட்டேன். முட்டிக்கு முட்டி தட்டிருவேன். பார்த்துக்கோ..” என்று அவனை அதட்ட, அவனும் பயந்து கொண்டு சரி என்று தலை ஆட்டினான்.
குமாரை வெளியே அழைத்து வந்த வளவனோ, “என்னடா பண்ணித் தொலைச்ச.??” என்று பல்லைக் கடித்துக்கொண்டு கேட்டான்.
“அது வந்து.. மாமா..” என்றவன், என்ன விஷயம் என்று முழுதாகக் கூறாமல், மென்று முழுகினான்.
“சொல்லித் தொலடா” என்று ஒரு அதட்டு அதட்ட,
“ஒரு பொண்ணுக்காக சண்டை போட்டோம். அது வாய் வார்த்தை முத்தி, கை நீட்ட வேண்டியதா போயிருச்சு..” என்று தயங்கியபடி கூறினான்.
சட்டென்று வளவனுக்கு கோபம் வந்து விட, அடிக்கச் சென்று விட்டான்.
ஆனால் பொது இடம் கருதி, அப்படியே நிறுத்தி விட்டான்.
“பொது இடம்னு பாக்குறேன். இல்லனா அடி வெளுத்து இருப்பேன்.” என்று கூற, குமாரும் அமைதியாக இருந்தான்.
வக்கீல் அவர்கள், நடப்பதை பார்த்துக் கொண்டே இருந்தவர், “வளவா.. போதும். நீங்க போய் அந்த அடிபட்டப் பையனை பார்த்துட்டு, அவங்க பேரன்ஸ் கிட்ட பேசிப் பாருங்க.” என்றவர் அங்கிருந்து கிளம்பி விட,
வளவன் குமாரிடம், “அந்தப் பையனை எந்த ஹாஸ்பிடல்ல சேர்த்து இருக்காங்க??” என்று கேட்டான்.
குமாரும் மருத்துவமனையின் பெயரைக் கூற,
இருவரும் அங்கு கிளம்பிச் சென்றனர்.
மருத்துவமனையை அடைந்ததும், இருவரும் உள்ளே சென்று, அடிபட்ட பையனின் பெயரைக் கூறி விசாரிக்க, இருக்கும் தளம் மற்றும் அறையின் எண்ணைக் கூறினார்.
அங்கு சென்றுப் பார்க்க, அவனோ, தலை, கை மற்றும் காலில் எல்லாம் அடிபட்டு கட்டுப் போட்டு இருந்தான்.
அவர்கள் பெற்றோர் அருகில் இருக்க, குமாரைப் பார்த்ததும் “எதுக்குடா இங்க வந்து இருக்க, திரும்பவும் என் பையனை அடிக்க வந்து இருக்கியா??” என்று பதறிக் கொண்டு கேட்டார்.
“அய்யோ அம்மா. அதுக்காக எல்லாம் இங்க வரல..” வளவன் ஆரம்பிக்க,
“நீ யாருபா..” உன்னை அவன் கூட்டிட்டு வந்து இருக்கானா??” என்று அவர் கேட்க,
“அப்படி இல்லம்மா. அடிச்சதுக்கு மன்னிப்பு கேட்கத் தான் கூட்டிட்டு வந்து இருக்கேன்.” என்றிட,
“அடிக்கிறதும் அடிச்சிட்டு, மன்னிப்பு வேறயா” என்று கோவத்துடன் கேட்டர்ர்.
வளவன் அமைதியாக இருந்தான்.
பின்னர், “ஏதோ சின்னப் பையன். ஒரு அவசரத்துல யோசிக்காம அடிச்சிட்டான். இனி இப்படி பண்ண மாட்டன் ம்மா. அதுக்கு நான் உத்தரவாதம் கொடுக்கிறேன்.” என்று வளவன் கூறிட,
அவர் அமைதியாக இருந்தார்.
வளவன் சட்டென்று காலில் விழப் போக, இதை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
“அட என்னப்பா… எந்திரி..” என்றவர், சற்று தள்ளி நிற்க, “அம்மா.. ஏதோ சின்னப் பையன் தெரியாம அடிச்சிட்டான். அவனை மன்னிச்சிருங்க. கோர்ட் கேஸ்னு போனால், அவன் வாழ்க்கை பாலாயிரும். கொஞ்சம் யோசிங்க ம்மா.. சார் நீங்களும் யோசிச்சு
பாருங்க சார்..” என்று இருவரிடமும் கூற, அவர்களும் யோசித்து விட்டு, “உனக்காக மன்னிச்சு விடுறேன்.” என்றவர், “கேசை நாங்க வாபஸ் வாங்கிடுறோம். இனிமேலாவது அவனை ஒழுங்கா இருக்க சொல்லு.” என்றார்.
“ரொம்ப நன்றிம்மா…” என்ற வளவன், குமாரிடம், “அவங்ககிட்ட மன்னிப்பு கேட்டு, நன்றி சொல்லிட்டு வா..” என்று கூறி விட்டு, அவன் வெளியேறிச் செல்ல, குமாரும் அவர்கள் பெற்றோரிடம் மன்னிப்பை யாசித்து விட்டு, நன்றியையும் கூறி விட்டு, அங்கிருந்து கிளம்பி வளவன் பின்னால் சென்றான்.
நேராக வீட்டிற்கு வண்டியை செலுத்த, சிறிது நேரத்தில் அவனது அலைபேசிக்கு அழைப்பு வர, அழைப்பை ஏற்றவனுக்கு, காவல் நிலையத்தில் இருந்து குமார் மேல் போடப்பட்ட வழக்கு திரும்ப பெறப்பட்டது என்று கூறினர்.
அப்பொழுது தான் ஒரு பெரும் நிம்மதி ஒன்று குடி கொண்டது.
ஒரு பெருமூச்சுடன், குமாரிடம் தகவலைக் கூறிவிட்டு, வீட்டிற்குச் செலுத்தினான்.
தொடரும்…
