உருத்திரா❤️ 21

 

பேபி உதவியோடு தன் உணவுப் பழக்கங்களைச் சீராக்கினாள். உடற்பயிற்சி, நடைப்பயிற்சி என மெதுவாகத் தன்னை மாற்றிக்கொண்டாள். உடல் எடை குறைய ஆரம்பித்து மங்களான நிறம் தங்கமென மின்ன ஆரம்பித்தது.

அவள் ஏற்கெனவே அழகிதான்! உடல் எடையால் முகம், கழுத்து, கை என கருப்பு நிற நிறமிகளால்(dark pigmentation) நிறைந்திருக்கும். இப்போது உடல் எடை குறைய நிறமிகள் மறைந்து அவள் பொழிவான நிறம் வெளியே தெரிய ஆரம்பித்தது.

அடுத்து விபத்தால் முகத்தில் இருந்த ஏகப்பட்ட தழும்புகளை மாற்ற பேஷியல் சர்ஜரி தேவைப்பட்டது! 

வேண்டாம்! நான் இப்படியே இருக்குறேன் என பயந்து ஆப்ரேசன் செய்ய மறுத்தவளை சமாதானம் செய்து ஒத்துக்கொள்ள வைத்தார்கள். சில, பல மாற்றங்களோடு அவள் முகம் புது பொழிவு பெற்றது.

கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தவளுக்கு தன்னையே நம்ப முடியவில்லை. அவளை ஆரலி என யாரும் சொல்லமுடியாத அளவு மாறியிருந்தாள்.

காயங்கள் முழுதாக ஆறி, உடல்நலம் மேம்பட்டதும், அவள் தேகத்தின் இயற்கையான வனப்பு மெல்ல வெளிப்பட்டது.

கண்ணாடி முன் நின்று தன்னையே பார்த்துக்கொண்டிருந்த ஆரலியிடம், “என்ன அக்கா, உன்னையே பார்த்துட்டு இருக்க?” என்று கேட்டபடி வந்தாள் திகள்.

“நானா இது?” என ஆரலி மெதுவாகக் கேட்டாள்.

திகள் சிரித்தபடி, “ஆமாம்! நீதான்… உன்னோட அழகு மட்டும் மீண்டு வரல, இத்தனை வலியையும் தான்டி மறுபடியும் வாழணும்னு உன் மனசும் மீண்டு வந்திருக்கு” என்றவளை ஆரலி அணைத்துக்கொண்டாள்.

ஒருநாள் இரவு பார்வதி, சோமசுந்தரத்திடம் தன் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் மனம் திறந்து சொன்னாள் ஆரலி.

அம்மா, அப்பாவின் இறப்புக்கு பின் அம்மாச்சிதான் அவளை மலையை விட்டு கூட்டிவந்து ஊருக்குள் வைத்து வளர்த்தார்.

அவளுடைய உலகம் சிறியது,அந்த உலகத்தை சரபன் அழித்துவிட்டான்.

“அம்மா நான் எந்தத் தப்பும் செய்யல! யாரையும் ஏமாத்தல, யாருக்கும் தீங்கு நினைக்கல. ஆனால் என்னை உயிரா நினைச்சு வாழ்ந்த அம்மாச்சியை அந்தப் பாவி கொன்னுட்டான்!” என ஆரலி கதறி அழுதாள்.

“நான் அவனை சும்மா விடமாட்டேன் அம்மா! என் அம்மாச்சியை கொன்னதுக்கு அவன் பதில் சொல்லியே ஆகணும்!”

சோமசுந்தரம் அவளுடைய கைகளைப் பற்றிக்கொண்டார்.

“நீ கண்டிப்பா அவனுக்கு தண்டனை வாங்கி தரலாம், அதுக்கு முன்னாடி நீ உன்னை வலிமையாக்கணும். படிச்சு ஒரு நல்ல நிலைக்கு முன்னேறணும். உன்னை நசுக்க நினைச்சவனுக்கு முன்னாடி நீ தலைநிமிர்ந்து நிற்கணும். அதுக்கு நாங்க எப்பவும் உன் கூட துணையா இருப்போம்!” என்றார்.

பார்வதியும் “நீ எதுவுமே தனியா செய்ய வேண்டியதில்லை நிலா. உனக்கு நாங்க இருக்கோம்!” என ஆறுதல் சொன்னார்.

அந்த வருடம் உடலையும்,  மனதையும் சீராக்கிக்கொள்ள ஓய்வெடுத்தாள். அடுத்த வருடம் வேறு பள்ளியில் நிலாஞ்சி என்ற பெயரில் பன்னிரண்டாம் வகுப்பில் சேர்ந்தாள்.

பழைய வாழ்க்கை அவளைப் பாதிக்கக்கூடாது என்பதில் கவனமாக இருந்தாள்.

அவளுடைய மனதின் மூலையில் ஒரு பெயர் மட்டும் மறையாத சுவடாய் இருந்தது.

ருத்ரா!

அவனை நினைத்தாள் என்று சொல்லுவதை விட, அவன் விட்ட வார்த்தைகளையும், அவமானப்படுத்திய விதத்தையும், வீட்டைவிட்டு துரத்திய நாளையும் மறக்கமுடியாமல் இருந்தாள் என்பதே சரியாக இருக்கும்.

சோமசுந்தரம் சொன்னது போல தன்னுடைய வாழ்க்கையைத் தானே உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்பது ஒன்றே அப்போதைக்கூ அவளுடைய குறிக்கோளாக மாறியது.

ஐந்து வருடங்களுக்குப் பிறகு! தன் படிப்பு முடித்ததும் ஆரலி விமலிடம் வந்து, “அண்ணா எனக்கு ருத்ரா, சரபன் இரண்டு பேரை பத்தின முழு விவரம் வேணும்!” என்றாள்.

மறுக்காமல் விமல், அவள் கேட்ட தகவல்களைச் சேகரிக்க ஆரம்பித்தான்.

ருத்ராவின் நிலைமையைப் பற்றி அறிந்தபோது அவனுக்கே கோபம் வந்தது. சரபன் எவ்வளவு மோசமான துரோகத்தைச் செய்திருக்கிறான் என புரிந்தது.

ஆரலி ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப யோசித்தாள்!

ருத்ரா உண்மையிலேயே டிலூசனாலாக பாதிக்கப்பட்டிருக்கிறானா? இல்ல அவனும் ஏதாவது நாடகம் ஆடுகிறானா?

“இந்த அரைக்கிறுக்கன் அவ்வளவு வீக்கான ஆள் இல்லையே!” என்று தனக்குள் முணுமுணுத்தாள்.

அவள் நினைத்தது போலவே, ருத்ராவின் நடவடிக்கைகளில் பல முரண்பாடுகள் இருந்தது.

ருத்ராவை தள்ளி இருந்தே கண்காணிக்க ஆரம்பித்தவளுக்கு, 

தான் நினைத்தது போல ஆள் நாடகம் ஆடிக்கொண்டிருப்பதை கண்டு டென்ஷன் ஆகிவிட்டாள். அதுவும் ஆரலி மீது அவன் கொண்டிருக்கும் பைத்தியத்தை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

“இருக்கும்போது என்னை அடிச்சு விரட்டிட்டு, இப்போ என்னைத் தேடுறானா? அதுவும் காதல் ஒரு கேடு” என கோபமாக இருந்தாள்.

ருத்ரா உண்மையில் என்ன நினைக்கிறான்? என்னைக் காதலிக்கிறானா?இல்ல என்னை தேடுறதுக்கு பின்னாடி வேறு ஏதாவது காரணம் இருக்குதா?

அதைத் தெரிந்துகொள்ள முடிவெடுத்து யாருக்கும் சந்தோசம் வராத படி 

அவனுடைய நிறுவனத்தில் பெங்களூரு பிரான்ச்சில் வேலைக்கு சேர்ந்தாள்.

சென்னைக்கு மாற்றல் கிடைத்தபோது, அவளுடன் குடும்பமே சென்னைக்கு வருவதாக அடம்பிடித்தது! நிலா எவ்வளவோ மறுத்தும் அவளை தனியாக விட அவர்கள் சம்மதிக்கவில்லை.

சோமசுந்தரம் வேலை பார்க்கும் பேங்கில் பேசி எளிதாக சென்னை பிரான்ச் மாற்றல் வாங்கிக்கொண்டார்.

பார்வதிக்கோ பல முக்கிய மாநிலங்களில் மருத்துவமனைகள் இருந்ததால், அவருடைய பொறுப்புகளைப் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது.

சகுந்தலாவின் கணவர் ராமும் பார்வதியும் பார்ட்னர்ஸ் என்பதால், பார்வதி இல்லாத நேரங்களில் மருத்துவமனைகளின் நிர்வாகத்தை அவரே கவனித்துக்கொள்ள கணவனோடு சென்னை கிளம்பினார் பார்வதி. விமல் முதலில் சரபனின் உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தான்.

அவனுடைய ஒவ்வொரு நடவடிக்கையையும் கவனிப்பதோடு, ருத்ராவின் நிலைமையையும் ஆராய்ந்தான்.

திகள்விழி அபிராமி, சாம்பவி ஆகியோரிடம் நெருங்கிப் பழகியதும் ஏற்கெனவே திட்டமிட்டதுதான்.

அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்றுகொண்டிருந்த திகள், ஆரலிக்காக தன்னுடைய நான்காம் ஆண்டு படிப்பை ஆறு மாதங்களுக்கு ஒத்திவைத்துவிட்டு, சென்னையில் சாதாரண நடன மாணவியாக சுற்றிக்கொண்டிருந்தாள்.

ஆரலியைப் பெயரளவில் தன்னுடைய அக்காவாக நினைக்கவில்லை,

இரத்த உறவு இல்லாவிட்டாலும், அவளை தன்னுடைய சொந்தமாகவே நினைத்தனர்.

ஆனால் ருத்ராவை சந்திப்பதற்கு திட்டம் போடும் முன்பே, எதிர்பாராத விதமாக ஹோட்டலில் நடந்த நிகழ்வு அவளே எதிர்பாராதது.

நிலாஞ்சியை இத்தனை எளிதாக ஆரலி என ருத்ரா அடையாளம் கண்டுகொள்வான் என்று அவள் நினைக்கவே இல்லை.

முதலில் அதிர்ச்சியடைந்தாலும், பிறகு அதையே சாதகமாக்கி அவனிடம் ஆரலி இல்லை என மறுத்தாள்.

திட்டப்படி அனைத்தும் நடந்தாலும், ஆரலி மீது ருத்ரா கொண்டிருந்த வெறித்தனமான காதல் அவள் உள்ளத்தை தடுமாற வைத்தது.

அவள் ஆரலி இல்லை என்று எத்தனை முறை மறுத்தாலும், அவன் ஏற்க மறுத்தான்.

முதல் முறை பொக்கே வாங்கி வந்த போது, எனக்கு அலர்ஜி என்று மறுத்தாளே! அவளுக்கு காட்டு மலர்களால் அலர்ஜி இல்லை.

அந்த பொக்கேவில் பெரிய பூக்களோடு சேர்ந்து வந்திருந்த, பேபிஸ் ப்ரித் என்று அழைக்கப்படும் சிறிய வெள்ளை மலர்கள்தான் அவளுக்குத் தும்மலை ஏற்படுத்தின. பெங்களூருக்கு வந்த புதிதில் இந்த மலர்களால் தனக்கு ஒவ்வாமை ஏற்படுவதை அவள் கவனித்திருந்தாள்.

ருத்ரா அவளிடம் மலர்களை கொண்டுவந்தபோது, அதையும் தெரிந்தே தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, தன்னை ஆரலி இல்லை என்று நிரூபிக்கவும் முயன்றாள்.

அதே நேரத்தில் சரபனிடம் இயல்பாக பேசுவதற்காக அவள் பட்ட பாடு தனி!

ஒவ்வொரு முறையும் ருத்ராவிடம் ‘நான் ஆரலி இல்லை’ என அவள் போராடும் போது, அவன் ‘நீ என் ஆரலி!’ என்று அழுத்தமாக சொல்லும் கணம்! 

அந்த விடாப்பிடியான காதல் மனதை தடுமாற வைத்தது.

ஆரலிக்கு அவன் செய்ததை மன்னிக்கவும் முடியாது, மறக்கவும் முடியாது. நிலாவாக அவனோட வாழலாம் என முயற்சி செய்தாள். ஒவ்வொரு தடவையும் ‘நான் நிலா’ என அவனுக்கு சொல்லவில்லை தனக்கே சொல்லிக்கொண்டாள். 

ஆனால் ஆரலியின் கணவனை அல்லவா நிலாஞ்சி தனக்கு சொந்தமாக்கிக்கொள்ள நினைத்தாள்…

அவன் தெளிவாக இருந்து அவளை குழப்பி விளையாடினான்.

இதற்கிடையில், சரபனின் வழியிலே போய் அவனை பிடிக்க திட்டம் போட்டுக்கொண்டிருந்தபோது, பெங்களூரில் வைத்து ருத்ரா அவளை கடத்தி சென்றதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

“இவன் என்னடா, எல்லா பிளானையும் மாத்திவிடுறான்!” என கடுப்பாகிவிட்டாள். பின்ன உசுரை குடுத்து குடும்பமே நடிச்சா! எல்லாத்தையும் குழப்புறானே.

சரி எங்கு கடத்திவந்து வைத்தான் என்று பார்த்தால் அவள் வாழ்க்கையில் அதிகமாக வெறுக்கும் இடத்திற்கு, ஆரலியாக மாற விரும்பாதவளிடம் பழைய நினைவுகளை திணிக்கிறானே என்று அவனை கோவத்தில் வெறுத்தாள் பெண்ணவள்.

‘விட்டா நானே இவனை போட்டுத்தள்ளிட்டு ஜெயிலுக்கு போய்டுவேன் போல, அதுக்குள்ள சரபனை சிக்க வைக்கணும்’ என ருத்ராவோடான திருமணத்திற்கு சம்மதம் சொன்னாள்.

சரபன் ஏதாவது பிளான் வைத்திருப்பான் என கணித்து வைத்திருந்தாலும், வெயிட் பண்ண வேண்டாம் என ‘கல்யாணத்துல விருப்பம் இல்ல’ என்று அவள் அழுது புலம்பியபோது சரபன் அதை உண்மை என்று நம்பி சிக்கிக்கொண்டான் சரபன்.

அவன் குடுத்த மருந்துகள் பேபியின் உதவியோடு மாற்றப்பட்டன. நிலாஞ்சி குடும்பத்தினர் ஒவ்வொருவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேடத்தை சிறப்பாகச் செய்தார்கள்.

அவர்கள் திட்டத்தில் எதிர்பாராமல் நடந்த ஒரே விஷயம் பத்ரன், திகள்விழி காதல் மட்டும்தான்!

சோமசுந்தரம் கதையை சொல்லி முடிக்க, இப்பவே கண்ணக்கட்டுதே என நொந்து போனது ருத்ரா வீட்டுக்கூட்டம்.

“அடுத்து நீ உன் கதைய சொல்லு ருத்ரா? நிலாஞ்சி தான் ஆரலினு எப்படி கண்டுபிடிச்ச?” என்று கேட்டார் நடராஜன்.

“அது வந்து…” என குரலை செருமினான் ருத்ரா.

‘நீ தான் தைரியமான ஆளாச்சே! சொல்லுடா… என்னை மோந்து பார்த்து கண்டு பிடிச்சேனு சொல்லு’ என்று உள்ளே திட்டியபடி அவனை அலட்சிய பார்வை பார்த்தாள் நிலா.

“அது எனக்கும் அவளுக்கு இருக்குற பர்சனல் தாத்தா! அவள் ஆரலினு தெரிஞ்சதும் உடனே ஆகாஷ் மூலமா எல்லா விஷயத்தையும் தெருஞ்சுக்கிட்டேன்”

“அடுத்த நாளே எனக்கு நிலா பேமிலி பேக்ரவுண்ட் தெரியும். அவள் எதுக்காக வந்திருக்கானு தெரியல, ஆரலியா வந்திருந்தா என்கிட்ட நேரடியா வந்துருக்கணும், வேற ஒரு பொண்ணோட அடையாளத்துல வாழுறது எனக்கு புரியல சோ அவள் எதுக்காக வந்திருக்கானு தெரிஞ்சுக்க ஆரலியை கூடவே வச்சுக்கிட்டேன்.

சரபனால அவளுக்கு ஆபத்து வர அதிகம் வாய்ப்பிருக்கு. உண்மையை சொல்லமறுத்துவளை, வேற வழி இல்லாம காயப்படுத்தினேன்

அவள் வாயாலே என்னை எந்த அளவு வெறுக்குறானு தெரிஞ்சுகிட்டேன். ஆரலியா அவ மாற விரும்பலைனு புரிஞ்சது, எல்லா தப்பும் என்னோடது! இவ்வளவு நாள் ஆரலி வரணும்னு காத்திருந்தேன் இப்போ அவள் என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துப்பேன்” என அமைதியாக சொன்னான் ருத்ரா.

“தண்டனையா!” என்று விரக்தியாக சிரித்தவளோ,

“செய்யாத தப்புக்கு தண்டனை கொடுத்து என்னை வெளிய அனுப்பும் போதே நமக்குள்ள எல்லாம் முடிஞ்சது ருத்ரா, நான் கிளம்புறேன்” என வெளியேறப்போனவளை தடுத்தார் சாம்பவி.

“அம்மாடி இவன் உன்னை பொண்டாட்டினு சொல்றான்! உங்க இரண்டு பேருக்கும் மட்டும் தெரிஞ்ச கல்யாண விஷயத்தை தெளிவா சொல்லுமா!”

ருத்ராவை திரும்பி முறைத்த நிலா! “உங்க பையனுக்கு ஆரலியை சுத்தமா பிடிக்காது ஆன்ட்டி. என்னை திட்டாத நாளே இல்லை எஸ்டேட் வந்துட்டு போற கொஞ்ச நாள்ல கூட பார்க்குறப்போ எல்லாம் சிடுசிடுனு இருப்பாரு. 

நடக்க முடியல, நீ எதுக்கும் லாயக்கில்லாதவனு திட்டுவாரு!” என கண்கள் கலங்க சொன்னவள் தங்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மையை சொல்ல ஆரம்பித்தாள்.

டிரெக்கிங் பொன அன்று ஆரலி நடக்க முடியாமல் கீழே வந்தவளை தேடி சரபன் வந்தபோது, அவளைக் காணவில்லை.

“சரி வேகமா வீட்டுக்குப் போயிருப்பா போல!” என்று நினைத்துக்கொண்டு அவன் கெஸ்ட் ஹவுஸ் கிளம்பிவிட்டான்.

ரிஷியும் சந்துருவும் அவனுக்கு பின்னே வந்துவிட, தனியாக மேலே ஏறிக்கொண்டிருந்த ருத்ராவின் கால் திடீரென்று தடுமாறியது.

மலைப்பாதையில் இருந்த கல்லில் கால் தவறி விழுந்ததில், அவனுடைய கணுக்கால் லேசாகப் பிசகிட,

“ச்சே!” வலியைத் தாங்கிக்கொண்டு எழுந்தவன், மெதுவாக நடக்க ஆரம்பித்தான்.

வலி மிகப்பெரிதாக இல்லாவிட்டாலும், மலை ஏற முடியாத அளவுக்கு அவனைத் தொந்தரவு செய்தது.

திரும்பி கெஸ்ட் ஹவுஸ் செல்லலாம் என்று நினைத்தவன், தான் வந்த பாதை மாறியிருப்பதைக் கவனிக்காமல் நடக்க ஆரம்பித்தான். சிறிது நேரம் நடந்த பிறகுதான் பாதை மாறி வேறு பக்கம் வந்திருப்பதை உணர்ந்தான்.

உடனே போனை எடுத்து முத்துவுக்கு கால்செய்திட, சுத்தமாக சிக்னல் இல்லை!

“ச்சே! இந்த நேரத்துலதான் போனும் வேலை செய்யாது!” என தன்னையே திட்டிக்கொண்டு, சுற்றிலும் பார்வையை ஓட்டினான்.

சிறிது தூரத்தில் மாங்காய் மரத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய குடிசை போன்ற வீடு தெரிந்தது.

யாராவது இருக்கிறார்களா என்று பார்க்க வீட்டின் அருகே சென்றான்.

அங்கே ஒரு மூலையில் அமர்ந்து அழுதுகொண்டிருந்தாள் ஆரலி.

“ஏய்! நீ இன்னும் வீட்டுக்குப் போகலையா?” என்று சத்தமாக கேட்டான் ருத்ரா.

திடீரெனக் கேட்ட குரலில் பயந்து எழுந்தாள் ஆரலி.

“ஏகரா சார் நீங்க இங்க என்ன பண்றீங்க? இந்தப் பாதை உங்களுக்கு எப்படி தெரியும்?”

“நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாம நீ என்னை எதிர் கேள்வி கேட்டுட்டு இருக்க, முதல்ல இது என்ன இடம்னு சொல்லு!” என்று ருத்ரா அவளை முறைத்தான்.

“இதுவா? இது எனக்குப் பிடிச்ச இடம் சார்”

“உனக்குப் பிடிச்ச இடமா?”

“ஆமாம் என் மனசு கஷ்டமா இருந்தாலும், சந்தோஷமா இருந்தாலும் இங்க வந்திடுவேன். நீங்க திட்டவும் கவலைல இங்க வந்தேன்!” என்று சொல்லும்போது அவள் முகம் சுருங்கியது.

ருத்ரா ஒரு கணம் அவளை கூர்ந்து பார்த்தான், அவன் பார்வையில் ஆரலி தன்னுடைய அழுகையை மறைத்துக்கொண்டு,  “நீங்க ஏன் காலைத் தாங்கிக்கிட்டு நிக்கிறிங்க சார்?” உள்ள வாங்க என அவனை உள்ளே கூப்பிட்டாள்.

“அது ஒண்ணுமில்லை! கால் ஸ்லிப் ஆகிடுச்சு சரியாகிடும்” என மெதுவாக குனிந்து குடிசை வீட்டுக்குள்ளே போனான்.

குடிசைக்குள் களிமண்ணால் கட்டப்பட்ட சிறிய சுவர், ஒரு மண் அடுப்பு, பனை ஓலைப் பாய், ஒரு கனமான கம்பளி, சில பாத்திரங்கள் மட்டுமே இருந்தன.

அந்த சிறிய இடத்தில் இருந்த அமைதி ஒருவிதமான மனநிம்மதியை தந்தது, 

ஆரலி அவசரமாகப் பாயை விரித்தாள்.

“சார், இங்க உட்காருங்க!”

ருத்ரா அவளுடைய உதவியை மறுக்க நினைத்தாலும், கால் வலித்ததால் அவள் நீட்டிய கையைப் பிடித்துக்கொண்டு மெதுவாக அமர்ந்தான்.

அவன் காலை கண்டவளோ “வீக்கம் அதிகமாக இருக்கு சார்” என்று பதறினாள்.

“ம்ச் லைட்டா ஸ்லிப் ஆகிட்டேன்! காலையில சரியாகிடும்”

“அப்போ இங்கனையே இருக்கப்போறோமா சார்! ராத்திரி ஆகப்போகுது இன்னும் கொஞ்ச நேரம் போனா சுத்தமா பாதை தெரியாது, நான் வேணா ஓடிப்போய் ஆட்களை உதவிக்கு கூட்டிட்டு வரவா!” என வேகமாக சொன்னவளிடம்,

“தேவையில்லை நீ கீழ போறதுக்குள்ள இருட்டிடும், மேடம் ஓடுற உடம்பா வைச்சுருக்கிங்க!” என்றவன் வார்த்தையில் முகம் சுருங்கிய ஆரலி, “சரி சார் நீங்க ஓய்வெடுங்க! நான் வெளிய இருக்கேன்” என எழுந்து வெளியே போகப்பார்த்தாள்.

“மழை வர மாதிரி இருக்கு உள்ளையே உட்காரு” என்று அதட்டினான். படக்கென அவன் அருகிலேயே அமர்ந்தாள் ஆரலி.

நேரம் ஆக ஆக இருட்ட ஆரம்பித்தது, ருத்ரா கால்களில் வலி அதிகமாக, சிறு மண்ணெண்ணெய் விளக்கு ஒளியில் அவன் முகத்தில் அவஸ்தையை கண்ட ஆரலி, வேகமாக எழுந்து வெளியே ஓடினாள்.

“எங்க போற ஆரலி?”

“அடிபட்ட இடத்துக்கு பச்சை இலை கட்ட எடுத்து வர்றேன் சார்”

“ஏய் இருட்டுக்குள்ள ஏதாவது பள்ளத்துல உருண்டு போய்டாத” என்று கத்தியவனை கண்டுகொள்ளாமல் போய்விட்டாள்.

பத்து நிமிடத்தில் சில இலைகளுடன் திரும்பி வந்தவள் அவற்றை மெதுவாகக் கசக்கி, வீங்கியிருந்த கணுக்காலின் அருகில் வைத்தாள். பிறகு தன்னுடைய பாவாடையின் ஓரத்திலிருந்து சிறிய துணியை கிழித்து, காயம்பட்ட இடத்தில் கவனமாக கட்டினாள்.

“இது மருத்துவ இலை சார். எங்க அம்மாச்சி எனக்கு அடிக்கடி கட்டிவிடுவாங்க! நாளைக்கு வலி சரியாப்போய்டும்”

அவள் முகத்தை விட்டு ருத்ரா பார்வை அகலவில்லை. அந்த கண்களில் தான் எத்தனை கனிவு! அவளை திட்டுவதை தவிர எதற்கும் அவளிடம் வாய் திறக்காதவன் மீது தாய்மை உணர்வை அல்லவா மழையாக பொழிகிறாள்.

உப்பியிருக்கும் அந்த கன்னத்தில் அவன் பார்வை இரண்டு நிமிடங்கள் அதிகமாக நிலைத்து போனது.

“என்ன சார் பார்க்கிறீங்க? வயிறு பசிக்குதா?”

அவன் பதில் சொல்லாமல், அவளையே ஆழ்ந்து பார்த்தான்.

“இருங்க அம்மாச்சி காலையில செஞ்ச கொரங்கட்டி டிபன் பாக்ஸ்ல இருக்கு. நான் சாப்பிட வச்சிருந்தேன், எனக்கு பசி இல்ல நீங்க சாப்பிடுங்க!” என டிபன் பாக்ஸை திறந்து அவனிடம் நீட்டினாள்.

இந்த முறை மறுப்பு சொல்லாமல் எடுத்து சாப்பிட ஆரம்பித்தான். அதன் சுவை அவனுக்குப் பிடித்திருந்தது.

“இது என்ன ஸ்வீட்?”

“கொரங்கட்டி சார். கேப்பை வச்சு செய்வோம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்!”

அவளுடைய முகம் சிரிப்பில் மலர பேச ஆரம்பித்தாள் “எங்க அம்மாச்சி நான் சின்னப் பிள்ளையா இருந்தப்போ அம்மாவுக்கு தெரியாம தேனு கூட கலந்து செஞ்சு தருவாங்க. அது இன்னும் சூப்பரா இருக்கும்!”

வெளியே மழை கொட்டத் தொடங்கிட,

காற்றின் குளிர் குடிசைக்குள் நுழைந்தது.

ருத்ரா மெதுவாக பாயில் படுத்தான்.

அவனுக்குக் குளிராக இருப்பதை உணர்ந்த ஆரலி, அங்கிருந்த கம்பளியை எடுத்து அவனுக்குப் போர்த்திவிட்டாள்.

“உனக்குக் குளிரலையா?”

“எனக்கு எல்லாம் தாங்கும் உடம்பு சார்! இந்த குளிரு உங்களுக்கு தான் ஒத்துக்காது, நீங்க தூங்குங்க. நான் வெளிய காவலுக்கு இருக்கேன்” என்று எழுந்தாள்.

அதுவே இரண்டு ஆள் படுக்கும் அளவேயான குடிசை, அவன் படுக்கவும் இடம் பற்றாக்குறையாக வெளியே போகப் பார்த்தாள்.

“நீயும் படு ஆரலி, காவல் எல்லாம் வேண்டாம்!”

“காட்டு மிருகம் எதுவும் மழைக்கு ஒதுங்கி வந்தா என்ன பண்றது சார்?”

என்றவளுடைய கேள்வியில் ருத்ராவுக்கு தூக்கமே போய்விட்டது.

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!