உருத்திரா❤️22

 

அவளை பார்த்தபடியே திரும்பி படுத்தவன் “உன் குடும்பத்தைப் பத்திச் சொல்லு!” என்றான்.

அவன் கேள்வியில் சற்று ஆச்சரியமாக அவனை பார்த்தவள், மடைதிறந்த வெள்ளமாக சொல்ல ஆரம்பித்தாள்.

“என் குடும்பம் ரொம்பச் சின்னது சார். அப்பா பேரு சேனா, அம்மா பேரு குழலி. நான் ஒரே பொண்ணு”

“மலைமேலதான் நாங்க இருந்தோம். அங்க வசதி அதிகம் கிடையாது ஆனா எனக்கு அந்த வீடு ரொம்பப் பிடிக்கும். அம்மா பாம்பு கடிச்சு இறந்துட்டாங்க.

அப்பாவும் வேலைக்குப் போன இடத்துல ஆக்ஸிடென்ட்ல இறந்துட்டாரு. அதுக்கப்புறம் அம்மாவை பெத்த அம்மாச்சிதான் என்னைப் பார்த்துக்கிட்டாங்க”

ருத்ரா அமைதியாக அவள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தான்.

“எங்க அத்தை என்னை அவங்ககூட வச்சுக்கணும்னு நினைச்சாங்க. ஆனா அம்மாச்சி விடல, அங்கையே இருந்தா எனக்கும் எதுவாவது ஆகிடும்னு பயம்! அவங்களை எதிர்த்து என்னை ஊருக்குள்ள கூட்டிட்டு வந்தாங்க. இங்க வந்து ஆறு வருஷம் ஆகுது சார்!”

“திரும்ப உன் பழைய வீட்டுக்குப் போகலையா?”

ஆரலி மறுப்பாக தலையசைத்தாள், “போக ஆசைதான்! ஆனா அம்மாச்சி விட மாட்டாங்க, என் வீட்டு வாசல்ல நிறைய பூச்செடி, மரம் எல்லாம் நட்டு வச்சிருந்தேன். இப்போ அதெல்லாம் வளர்ந்திருக்குமானு தெரியல”

“செண்பகம், மனோரஞ்சிதம், காட்டுமல்லி எல்லாம் எனக்கு பிடிக்கும். அப்பா ஒருநாள் காட்டுக்குள்ளருந்து ரோஜாச் செடி எடுத்துட்டு வர்றேன்னு சொன்னாரு. அது கொத்துக் கொத்தா பூக்குமாம் ஆனால் கடைசிவரை அந்த செடியை பார்க்கவே இல்லை!” என்று சோகமாக சொன்னாள் ஆரலி.

“சரி நான் உனக்கு அந்த செடிகளையெல்லாம் வாங்கித் தர்றேன், இங்கேயே நட்டு வச்சு வளர்த்துக்கோ?” என்றான்.

“ஆங்! நிஜமாவா சார்?” என ஆரலி நம்ப முடியாமல் அவனை பார்த்தாள்.

“ஆமாம்!”

“அப்படின்னா எனக்கு ரொம்ப சந்தோஷம் ஏகரா சார், ரொம்ப நன்றி!”

அவளுடைய முகம் பூவாய் மலர்ந்தது.

அந்த சிரிப்பை கண்ட ருத்ரா, ஏன் என்று தெரியாமலேயே அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

அந்தச் சிறிய குடிசையில், மழையின் சத்தத்துக்கு இடையே, இருவரும் பேசிக்கொண்டே இருந்தார்கள்.

எப்போது தூங்கினார்கள் என்றே அவர்களுக்குத் தெரியவில்லை. மறுநாள் காலையில் மழை நின்றிருந்தது. காலை வெளிச்சத்தில் மெதுவாக கண்களை திறந்தான் ருத்ரா.

அவன் போர்த்தியிருந்த கம்பளிக்குள் அவனோடு சேர்ந்து படுத்திருந்தது ஒரு உருவம்! 

முதலில் ஒன்றும் புரியாமல் பார்த்தவன் சிறிது நேரம் கழித்து தான் எங்கிருக்கிறோம் என்று நியாபகம் வர, வேகமாக கம்பளியை விலக்கினான்.

ஆரலி சுகமாக அவன் இதயதுடிப்பு ஓசையை கேட்டபடி நெருக்கமாய் படுத்திருந்தாள், இரவு குளிரில் நடுங்கியவள் அவன் அருகில் உருண்டு வந்து படுத்ததை உணரவில்லை.

ஆரலி மீதிருந்து வரும் வித்தியாசமான சுகந்தம் அவனை அமைதியாக்கியது! 

காலை பனியில் நனைந்திருக்கு பச்சைபுல்லின் மனம் போல, அவள் வாசனை இருக்க ருத்ராவால் அவளை விட்டு விலகமுடியவில்லை.

தன் காலை குனிந்து பார்த்தான், வலி சற்று குறைந்திருந்தது.

அவளை எழுப்ப மனமில்லாமல் சில நிமிடங்கள் பார்த்துக்கொண்டிருந்தவன் இதழ்களில் மெல்லிய புன்னகை! 

அவள் முழித்திருக்கும் போது இப்படி சிரித்திருந்தால், அந்த சிரிப்பழகில் மயங்கி விழுந்திருப்பாள் ஆரலி.

அவள் முகத்தை மறைத்துக்கிடந்த முடிகளை விலக்கி காதின் பின் சொருகியவன், மெத்தென இருக்கும் கன்னத்தை லேசாக வருடினான்.

அதில் கூச்சம் வர, “ஏகரா சார்” என்ற அழைப்போடு கன்னத்தை தேய்த்துக்கொண்டு தூங்க ஆரம்பித்தாள்.

ஏகரா என்ற அழைப்பில் இன்னும் சிரிப்பு வந்தது. என்னவோ அவள் துருதுரு பேச்சு எரிச்சலை தந்தாலும், உள்ளே ரசிக்கதான் செய்யும் அவன் மனம்.

அவனை பார்த்தாலே மற்றவர்கள் பயந்து பேசாமல் ஒதுங்கிப்போனாலும், இவள் ஒரு பொழுது கூட அவன் பேரை உச்சரிக்காமல் இருக்கமாட்டாள். அவன் எவ்வளவு திட்டினாலும் அதை துடைத்துப்போட்டு, கண்களில் மின்னலோடு அவனிடம் வருவாளே!

ஒழுங்கா படி! என அத்தனை தடவை திட்டியும் கேட்காமல் இருப்பவள் மீதே அவனுக்கு கோவம்!

ருத்ரா எஸ்டேட் வந்த இரண்டே நாளில், அடுத்த வருடம் 11 ஆம் வகுப்பு, அவளை பள்ளியில் சேர்ப்பது மட்டும் இல்லாமல் ஹாஸ்டலில் தங்கி படிக்க வைக்க ஏற்பாடு செய்துவிட்டான்.

ஊருக்கு போகும் போது சொல்லிக்கொள்ளலாம் என அமைதியாக இருந்தான். அவள் ஏகரா என்ற அழைப்புக்கு அவன் மனம் அவனுக்கே தெரியாமல் அடிமையாகிப்போனது.

கெஸ்ட் ஹவுஸ் போகவேண்டுமே! மெதுவாக அவளை கீழே படுக்க வைத்துவிட்டு விலகி அமர்ந்த ருத்ரா, மெதுவாக அவளை எழுப்பினான்.

“ஆரலி! எழுந்துரு விடுஞ்சிடுச்சு”

தூக்கக் கலக்கத்துடன் விழித்தவள்,

“ம்ம்… என்ன சார்?” என்றாள்.

“நீ உன் வீட்டுக்குப் போ. நான் கெஸ்ட் ஹவுஸுக்குப் போறேன்”

 

“தனியாவா போவீங்க? நடக்க முடியுமா? நான் துணைக்கு வரட்டுமா?”ஆரலி உடனே எழுந்து நின்றாள்.

 

“வேண்டாம் நான் போயிடுவேன்!” என ருத்ரா எழுந்து நின்று, மெதுவாக நடந்து பார்த்தான்.

வலி ரொம்பவே குறைந்திருந்தது! பிறகு தன்னுடைய பேக்கிலிருந்து ஒரு கார்டை எடுத்தான்.

“இது என்னோட நம்பர். உனக்கு எப்போ உதவி தேவைப்பட்டாலும் தயங்காம கால் பண்ணு”

ஆரலி அந்த கார்டை வாங்கிக்கொண்டாள்.

“சரிங்க சார்! நீங்க பார்த்துப்போங்க” என்றவளை ஒரு கணம் திரும்பி பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

மலையிலிருந்து வீட்டிற்குத் திரும்பிய ஆரலிக்கு வாசலிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அவளுடைய அத்தை காத்தாயி வீட்டிற்குள் அமர்ந்திருந்தார்.

அவரைப் பார்த்ததும் ஆரலி வழக்கம்போல பாசமாக, “அத்தை!” என்று கத்திக்கொண்டு ஓடிவந்தாள்.

காத்தாயி கோவத்தில் “எங்கடி போயிட்டு வர? வயசுப் பொண்ணு வீட்டுல தங்காம, பிரெண்டு வீட்டுக்கு போறது என்ன பழக்கம்?” என்று  திட்டிட,

ஆரலி பயத்தில், தன் அம்மாச்சியைப் பார்த்தாள்.

அவர் கண்களால் அமைதியாக இருக்கும்படி சைகை செய்தார்.

“இல்லை அத்தை. அவ தனியா இருந்தா. அதான் துணைக்கு…” என்று சமாளித்தாள்.

 

“சரி, சரி! இப்போ அதை பத்தி பேச வேண்டாம்! ஆரலி நீ உள்ளப்போ” என அம்மாச்சி அவளை உள்ளே அனுப்பிவைத்தார்.

அத்தை வந்திருந்ததால், அடுத்த இரண்டு நாட்களும் அவள் வேலைக்கு போகவில்லை.

அவர் காரணம் இல்லாமல் வரவில்லை என மூன்றாம் நாள் தெரிந்தது. 

காத்தாயி தன்னுடைய மூத்த மகனுக்கு இரண்டாவது திருமணம் செய்ய பெண் தேடிக்கொண்டிருந்தார்.

அவனுடைய முதல் மனைவி உடல்நலக் குறைவால் இறந்துவிட, வீட்டில் இருக்கும் பிள்ளைகளை பார்த்துக்கொள்ள ஒரு பெண் வேண்டும்,

அதற்கு தன் சொந்தத் தம்பியின் மகளான ஆரலியை பெண்கேட்டு வந்திருக்கிறார்.

பதினாறு வயது பெண்ணுக்கு, நாற்பது வயது ஆளை கல்யாணம் செய்ய கேட்பதை பார்த்து அம்மாச்சி நெஞ்சில் கைவைத்து நின்றுவிட்டார்.

அவனுக்கு இரண்டாவது மனைவியாக ஆரலியைக் கொடுத்துவிட்டால், தன்னுடைய குடும்ப பிரச்சினை தீர்ந்துவிடும் என காத்தாயி நினைத்தார்.

“இது என்ன பேச்சு காத்தாயி? என் பேத்தி இன்னும் சின்னப் பொண்ணு”

என்று அம்மாச்சி அதிர்ச்சியுடன் மறுத்தார்.

காத்தாயி முகத்தைச் சுளித்த படி, “இவ இருக்கிற சைஸுக்கு வெளியே மாப்பிள்ளை கிடைக்குமா? என் பையன் பெரிய மனசு பண்ணி கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டிருக்கான்!” என மனசாட்சி இல்லாமல் பேசினார்.

அவர் வார்த்தைகளைக் கேட்ட அம்மாச்சியின் கண்களில் கண்ணீர் பெருகியது.

“ஆத்தா! உன் புள்ளையா இருந்தா இப்படி ஒரு கல்யாணம் பண்ணி வைப்பியா? உன் தம்பி பொண்ணுதானே, கொஞ்சமாவது மனசாட்சியோட பேசு!”

“அம்மாச்சி, எனக்கு கல்யாணம் வேண்டாம்! நான் ஒத்துக்க மாட்டேன்!” என ஆரலி பயத்துடன் அம்மாச்சி கையைப் பிடித்துக்கொண்டாள்.

“நீ என்னடி ஒத்துக்கிறது? நான் வரும்போதே நம்ம முறைத் தாலியை எடுத்துட்டு வந்துட்டேன். இப்போ என் பையன் வந்து உன் கழுத்துல தாலியைக் கட்டிட்டா, நீ என்னோட வீட்டுக்கு வந்துதான் ஆகணும்!”

அவர் வார்த்தைகளைக் கேட்ட ஆரலியின் உடல் நடுங்க ஆரம்பிக்க, வீட்டை விட்டு வெளியே ஓட ஆரம்பித்தாள்.

எங்கே போவது? யாரிடம் உதவி கேட்பது?

அவளுக்கு உதவி செய்ய இந்த உலகத்தில் யாருமே இல்லையென்று நினைத்துக் கொண்டிருந்தபோதுதான், திடீரென ருத்ரா முகம் நினைவுக்கு வந்தது.

அவன் கொடுத்த போன் நம்பர் வீட்டுல இருக்கு! 

திரும்ப அவசரமாக வீட்டிற்குள் ஓடியவள், சாமி படத்தின் அருகில் வைத்திருந்த அவன் குடுத்த கார்டை எடுத்துக்கொண்டு வேகமாக மெயின் ரோட்டுக்கு ஓடினாள்.

அங்கிருந்த போன்பூத்திலிருந்து ருத்ராவுக்கு போன் செய்தாள். அவன் தனக்காக வருவானா? உதவி செய்வானா? என எதையும் யோசிக்கவில்லை. தனக்கு ஒரு ஆபத்து என்றதும் அவனிடம் தான் செல்லச்சொல்லி ஆரலி மனம் சொன்னது.

“ஹலோ!” என்ற ருத்ரா குரல் கம்பீரமாக ஒலித்தது.

“ஹலோ” என்று எதிர்முனையில் அழுகைச் சத்தம் கேட்டதும் ருத்ரா புருவம் சுருக்கினான்.

“ஏகரா சார்…” என அழுதுகொண்டே அழைத்தாள் ஆரலி.

“ஆரலி… என்னாச்சு? ஏன் அழற?”

“சார்… அத்தை வீட்டுக்கு வந்து என்னை அவங்க பையனை கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்லி மிரட்டுறாங்க. அத்தை பையன் ரொம்ப வயசானவரு சார். அவர்கூட என்னை கட்டாயப்படுத்தி அனுப்பப் பார்க்கிறாங்க, எனக்கு பயமா இருக்கு என்னைக் காப்பாத்துங்க ஏகரா சார்!” என்று அழுதபடி சொன்னாள்.

அவளுடைய அழுகையை கேட்டதும் ருத்ராவுக்கு உடல் இறுகியது.

“நீ எங்கேயும் போகாத, வீட்டுல இரு. நான் உடனே வரேன்!” அவ்வளவுதான். அதற்கு மேல் அவளிடம் எதுவும் கேட்காமல் அழைப்பைத் துண்டித்தவன், அருகிலிருந்த சரபனிடம் கூட சொல்லாமல் காரை எடுத்துக்கொண்டு ஆரலியின் வீட்டை நோக்கிப் பறந்தான்.

உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வீட்டு வாசலில் நின்றிருந்தாள் ஆரலி.

உள்ளே அவளுடைய அத்தை, மாமா, அவர்களுடன் வந்திருந்த சில ஆண்கள் என ஒரு சிறிய கூட்டமே கூடியிருந்தது. ஆரலி அத்தை மகன், அம்மாச்சியிடம் தன் அதிகாரத்தைக் காட்டிக்கொண்டிருந்தான்.

“என்னம்மா பெரியவங்களா இருக்கிங்கன்னு மரியாதை குடுத்து பேசிட்டு இருக்கேன். என் மாமா பொண்ணை, எனக்கு கட்டிக்கொடுக்க வேண்டியதுதானே? உங்களுக்கு என்ன பிரச்சனை?”

“என் பேத்திக்கு இப்போ கல்யாணம் வேண்டாம், சின்னப்பொண்ணுப்பா அவளைக் கட்டாயப்படுத்தாதிங்க!” என்று கண்ணீரோடு கெஞ்சிக்கொண்டிருந்தார் அம்மாச்சி.

“அதெல்லாம் முடியாது, இப்போவே முடிவு சொல்லுங்க!”

அந்த நேரத்தில் வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.

ருத்ரா வேகமாக உள்ளே நுழைய, அவனுக்குப் பின்னால் பயத்துடன் ஓடிவந்தாள் ஆரலி. அவனை பார்த்ததும் அவளுக்குள் இருந்த பயத்தில் பாதி குறைந்தது.

“யாருடா நீங்க?” என்றான் ருத்ரா அதிகாரமாக,

அங்கிருந்தவர்கள் அவனை ஏற இறங்கப் பார்த்தனர்.

“மைனர் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு மிரட்டி நடுவீட்டுல பிரச்சனை பண்ணிட்டு இருக்கீங்களா? போலீஸுக்குக் கால் பண்ணவா?”

ருத்ரா குரலில் இருந்த அதிகாரத்தை பார்த்ததும் கூட்டத்திலிருந்த சிலர் சற்றே தயங்கினர்.

“தம்பி, இது எங்க குடும்ப விஷயம். நீங்க தலையிடாதிங்க, இது உறவுமுறை கல்யாணம். இந்த பொண்ணை எங்க வீட்டுப் பையனுக்குக் கொடுக்க வேண்டிய முறை இருக்கு. பொண்ணு கேட்டு வந்திருக்கோம்!” என்று ஆரலியின் மாமாவைக் காட்டினார் ஒருவர்.

அந்த ஆளைப் பார்த்ததுமே ருத்ராவின் முகம் இறுகியது.

பளார்! என யாரும் எதிர்பாராத நேரத்தில் ஆரலி மாமா கன்னத்தில் ஓங்கி அறைந்தான் ருத்ரா.

“உன் வயசென்ன? இவ வயசென்ன? உன் பொண்ணு வயசுல இருக்குற பொண்ணைக் கல்யாணம் பண்ண உனக்கு எவ்வளவு தைரியம்?”

“என்ன தைரியம் இருந்தா கை நீட்டுவ?”

“என்னடா பண்ணுவ? என்னை மீறி ஆரலியை எப்படிக் கல்யாணம் பண்ணிக்கிட்டு போறன்னு நானும் பார்க்கிறேன். இன்னொரு தடவை அவளை தொட முயற்சி பண்ணிப் பாரு. அப்புறம் உன் கையைத் தூக்க முடியாதபடி செஞ்சிடுவேன்! என ருத்ரா ஆத்திரத்தில் கொதித்தான்.

சண்டை தீவிரமாக, அம்மாச்சியின் திடீரென ஒரு யோசனை தோன்றியது.

ருத்ரா தான் இப்போது ஆரலிக்கு கிடைத்த ஒரே பாதுகாப்பு என்பதை புரிந்துகொண்டார். காத்தாயி குடும்பம் எளிதில் விட்டுவிடும் ஆட்கள் இல்லை. எப்படியாவது ஆரலியை இந்த ஆபத்திலிருந்து நிரந்தரமாக காப்பாற்ற வேண்டும் என்று நினைத்து, ஒரு தவறான முடிவை எடுத்தார்.

“என்ன தம்பி கை நீளுது? எங்க வீட்டு பையனை அடிக்கிற அளவுக்கு வந்துட்டியா?” என்று அங்கிருந்தவர்கள் சண்டைக்கு வர ஆரம்பித்தனர்.

அவர்களை கவனிக்காமல் ருத்ராவிடம் வந்த அம்மாச்சி, தன் கையில் வைத்திருந்த கருப்பு கயிற்றை அவனிடம் கொடுத்து, “தம்பி இந்த கருப்பு கயிறை மட்டும் என் பேத்தி கழுத்துல போட்டுடுங்கப்பா. அதுக்கப்புறம் யாரும் அவளை தொந்தரவு பண்ண மாட்டாங்க” என்றார்.

“என்ன இது?”

“இந்த கயிறை மட்டும் அவளுக்கு போட்டு, என் பேத்தியை எப்படியாவது காப்பாத்திடுங்க தம்பி. உங்களைத் தவிர வேற யாரும் இப்போ எங்களுக்கு உதவி செய்ய முடியாது” என்று கெஞ்சினார்.

சண்டையை கண்டு ஓரமாக நின்று அழுதுகொண்டிருந்த ஆரலிக்கோ என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.

ஏற்கனவே கோபத்தின் உச்சத்தில் இருந்த ருத்ரா, அது ஏதோ சாதாரண கருப்புக் கயிறு என்றுதான் நினைத்தான். தாலி மஞ்சள் கலரில் தான் அவன் பார்த்திருக்கிறான்.

“இதுக்குத்தானா இவ்வளவு பிரச்சனை? சரி கொடுங்க!” என்றவன் ஓரமாக நின்ற ஆரலி கழுத்தில் கயிற்றை மாட்டிவிட்டான்.

அடுத்த நொடியே அங்கிருந்த கூட்டம் மொத்தமும் அமைதியானது.

“என்ன தம்பி… தாலியே போட்டுட்டீங்க!” என்றார் அங்கிருந்த பெரியவர் ஒருவர்.

அவர் வார்த்தையில் ருத்ரா அதிர்ந்து போய், “என்னது… தாலியா?” என்று கேட்டான்.

“ஆமா தம்பி. இது எங்க சமூகத்து தாலி, கருப்பு கயிறுலதான் கட்டுவோம்”

ஒரு நொடி அவனுக்குச் சுற்றியிருந்த உலகமே நின்றுவிட்டது.

“என்ன விளையாடுறிங்களா? தாலி மஞ்சள் கயிறுலதானே இருக்கும்? இந்த கருப்பு கயிறு எப்படி தாலியாகும்?”

“எங்க வழக்கம் அப்படித்தான் தம்பி, கயிறோட ஒத்த குண்டு மணி இருக்கும்”

அவ்வளவுதான்! ருத்ராவுக்கோ கோபம் பல மடங்கு அதிகமானது, அவனை ஏமாற்றிவிட்டார்கள் என ஆத்திரம் எரிமலையாக வெடித்தது.

ஆரலியோ நடப்பது எதுவும் புரியாமல் கண்களில் கண்ணீருடன் நின்றுகொண்டிருந்தாள்.

“சரிப்பா… கயிறு போட்டுட்ட, இதையும் ஆரலி கழுத்துல கட்டிடு. அப்போதான் முறைப்படி எல்லாம் முடியும்” என்று இன்னொரு கயிற்றை நீட்டினார் அம்மாச்சி.

அதை பார்த்ததும் ருத்ராவின் பற்கள் கோபத்தில் இறுகின.

“என்ன நினைச்சுட்டு இருக்கிங்க? உங்க ஒருத்தரையும் சும்மா விடமாட்டேன்”

என கத்திவிட்டு வெளியேற திரும்பினான்.

அம்மாச்சி அவன் முன்னால் கையெடுத்து கும்பிட்டு நின்றார்.

“தம்பி! உங்க கால்ல கூட விழுறேன். இது தான் கடைசி, இனிமேல் யாரும் அவளை தொந்தரவு செய்ய மாட்டாங்க. தயவுசெய்து இதையும் கட்டிடுங்க”

வயதான பெண்மணியின் கண்ணீரைப் பார்த்ததும் அவனால் அப்படியே செல்ல முடியவில்லை.

விருப்பமில்லாமல் அந்தக் கயிற்றை வாங்கியவன், ஆரலியின் கழுத்தில் கட்டிவிட்டு வேகமாக வெளியே போனான்.

அந்த நேரத்தில் தான் கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவர் தன் மொபைலில் அந்த நிகழ்வை போட்டோவாக எடுத்து வைத்திருந்தார்.

அங்கிருந்து கிளம்பிய ருத்ராவுக்கு, இதுவரை ஆரலி மீது இருந்த பெயர் தெரியாத ஒன்றும் சுத்தமாக மறைந்துவிட்டது.

அவளுக்கு உதவி செய்ய வந்த தன்னை ஏமாற்றிவிட்டார்களே என நினைத்து ஆத்திரம் எல்லையை கடந்தது.

 

ருத்ரா வெளியே சென்றதும் ஆரலியின் அத்தை அவளுடைய அம்மாச்சியை வாய்க்கு வந்தபடி திட்டிவிட்டு, சொந்தக்காரர்களை அழைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.

அனைவரும் சென்றதும் அம்மாச்சியிடம் ஓடிவந்தாள் ஆரலி.

“அம்மாச்சி ஏன் இப்படிப் பண்ண? ஏகரா சாரை ஏன் தாலி கட்ட வச்ச? என்னைக் காப்பாத்த வந்தவரை பழியாக்கிட்ட, இப்போ நம்மளை தப்பா நினைப்பாரே!” என்றவளுடைய குரலில் கவலையும், குற்றவுணர்வும் கலந்திருந்தது.

“என்ன செய்யறது ஆத்தா? எனக்கு வேற வழியே தெரியலையே! உன் கழுத்துல கிடக்குறது வெறும் கயிறுதான். அதை தாலியா நினைக்கணும்னா மனசால ரெண்டு பேரும் ஒன்னா வாழணும். நான் உன்னை எப்படியாவது காப்பாத்தணும்னு நினைச்சு இப்படி பண்ணிட்டேன்” என அம்மாச்சி அழுதார்.

“நாளைக்கு இந்தக் கயிறை கழட்டி குடுத்திரு, நம்ம மலைக்கோவில் உண்டியல்ல போட்ரலாம்”

“சரி அம்மாச்சி! பாவம் ஏகரா சார் கோபத்துல முகமெல்லாம் சிவந்து போயிருந்தாரு. நாளைக்கு நான் நேர்ல போய்ப் பேசுறேன். இது வெறும் கருப்புக் கயிறுதான், கல்யாணத் தாலி கிடையாதுனு அவருக்கு விளக்காம சொல்றேன்” என்று அம்மாச்சியை சமாதானம் செய்தாள்.

அவன் திட்டுவான் என தெரியும், இருந்தும் ஒரு நம்பிக்கை! வினையமில்லாத அவள் உள்ளம் நடந்ததை ருத்ரா மன்னித்துவிடுவான் என நம்பியது.

கெஸ்ட் ஹவுஸில் அவன் ஆடிய ருத்ர தாண்டவம் தெரியாமல், அவனை நம்பிக்கொண்டிருந்தாள் அந்த பேதை.

மறுநாள் அம்மாச்சியிடம் அந்த இரண்டு கயிறுகளையும் கழற்றிக் கொடுத்துவிட்டு ருத்ராவைப் பார்க்கச் சென்றாள்.

ஏற்கனவே கோபத்தில் இருந்த ருத்ரா, அவள் என்ன சொல்ல வருகிறாள் என கேட்கத் தயாராக இல்லை. 

ஆரலியை அடித்து, வெளியே துரத்திவிட்டான். ருத்ரா வெறுப்பில் நொந்து போய் இருந்தவளுக்கு அதன் பிறகு சரபன் மூலம் கிடைத்ததெல்லாம் அநியாயங்கள் மட்டுமே!

உண்மைகளை சொல்லிவிட்டு, தன் அம்மாச்சியின் நினைவில் கலங்கிய கண்களை துடைத்துக்கொண்ட நிலா,

ருத்ராவின் குடும்பத்தினர் முன்னிலையில் நின்று தன் கழுத்தை தொட்டுப் பார்த்தாள்.

“அது வெறும் கருப்புக் கயிறு ஆன்ட்டி, இரண்டு உயிர்களை இணைக்குற புனிதமான தாலி கிடையாது. எனக்கு உங்க பையனோட கல்யாணம் ஆகல”

என்று அழுத்தமாக சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்.

அவள் பதில் அனைவரையும் அமைதியாக்கியது. அவளுக்கு இப்போது யாருடைய ஆறுதலும் தேவையில்லை, தனிமை மட்டுமே தேவைப்பட்டது.

“வீட்டுக்குப் போகலாம் தாத்தா. அங்க போனதும் நான் தெளிவா எல்லாத்தையும் சொல்றேன்” என்று ருத்ரா சொன்னதும் மற்றவர்களும் அமைதியாக சரி என்றார்கள்.

 

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!