உருத்திரா ❤️ 34

அடுத்த நாள் காலை…

இரவு முழுவதும் தன்னை இறுக்கமாக அணைத்துக்கொண்டு உறங்கிய விழியின் கதகதப்பில், உலகத்தையே மறந்து உறங்கிக்கொண்டிருந்த பத்ரன் மெல்ல விழித்தான். 

கண்களைத் திறந்தவனின் பார்வை முதலில் விழுந்தது தன் மார்பில் முகம் புதைத்திருந்த திகள்விழியின் மீதுதான்.

அவளுடைய ஒரு கை பத்ரன் கழுத்தை சுற்றியிருக்க, பாதி தேகத்தை அவன் மீது போட்டு படுத்திருந்தாள். அவனிடமிருந்து விலகிவிடக் கூடாது என்பதற்காக தன் கால்களை அவன் கால்களோடு பிணைந்திருந்தாள் பெண்ணவள்.

அவளை கண்டதும் இதழ்களில் தோன்றிய புன்னகையோடா ‘குட்டச்சி…’ என மனதிற்குள் கொஞ்சியவன், விழி கன்னத்தை மெதுவாகத் தீண்டினான்.

உறக்கத்திலும் அவன் ஸ்பரிசத்தை உணர்ந்தவள், இன்னும் கொஞ்சம் அவனுடைய மார்புக்குள் முகத்தைப் புதைத்துக்கொண்டாள்.

“மாமா… தூக்கம் வருது!” என கண்களைத் திறக்காமலேயே முணுமுணுத்தாள்.

“இன்னைக்கு காலேஜுக்கு லீவ் போட்டேன்ல… கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேன்” என்று

சொன்னவள் அவனை மேலும் இறுக்கமாக அணைத்துக்கொள்ள, பத்ரனின் புன்னகை இன்னும் விரிந்தது.

இப்படியே அவளை அணைத்துக்கொண்டு பிறவிகள் கடந்துவிட ஆசைதான். ஆனால் அவன் முடிக்க வேண்டிய வேலைகள் இருக்கின்றனவே!

“விழிமா, வெளிய போகணும்டா டைமாச்சு எந்திரி!” என்று எழுப்பினான்.

“ம்ச்…” என நிமிர்ந்து பார்த்து அவனைக் கோபமாக முறைத்துவிட்டு, போர்வையை முகம் வரை இழுத்துப் போர்த்திக்கொண்டாள்.

அவளுடைய கொஞ்சலான கோபத்தைக் கண்டு சிரித்தவன், அவளை மீண்டும் கன்னத்தில் தட்டினான்.

“போடி குட்டச்சி. போய் ரெடியாகு!”

வேறு வழியில்லாமல் படுக்கையை விட்டு எழுந்த திகள்விழி, சோம்பல் முறித்தபடி குளியலறைக்குள் நுழைந்தாள்.

“உள்ள போய்த் தூங்குனா, கதவை உடைச்சுட்டு வருவேன் குட்டச்சி!”

“போய்யா! தூங்கவிட மாட்டேங்கிற!”

என்று அழுகைக் குரலில் புலம்பியபடி தயாராக ஆரம்பித்தாள்.

அரைமணி நேரம் கழித்து, பாத்ரோபோடு கதவைத் திறந்து வந்தவளை வெறும் அறையே வரவேற்றது.

“மாமா?” என்றா அறை முழுவதும் பார்வையைச் சுழற்றினாள்.

எங்க போனாரு இவரு?

படுக்கையின் மீது அழகாக மடித்து வைக்கப்பட்டிருந்த புடவையைப் பார்த்ததும் அவளுடைய புருவங்கள் சுருங்கின.

அருமையான டிசைனர் புடவை! அதற்குப் பொருத்தமான நகைகளும் அருகில் வைக்கப்பட்டிருந்தன. ஒன்றும் புரியாமல் அவற்றைத் தொட்டுப் பார்த்தாள்.

எதுக்கு இதெல்லாம்? எங்க கூட்டிட்டுப் போகப் போறாரு? என்ற யோசனையோடு “மாமா!” என்று கத்தியபடி கீழே ஓடிவந்தாள்.

பத்ரன் விழி புடவை நிறத்தில் சட்டை அணிந்துகொண்டு சமைத்துக்கொண்டிருந்தான்.

“குட்டச்சி கிளம்பலையா? புடவை பெட்ல இருக்கு. அதை கட்டிக்கோ”

“ஆனால்… எங்க போறோம்?”

“க்விக்! டைமாச்சு. இப்போ பேச நேரம் இல்ல கார்ல போகும்போது தெளிவா சொல்றேன்!” என்று அவளை அவசரப்படுத்தினான்.

“ம்ம்ம்…” என வந்த வேகத்தில் மேலே போய் தயாராக ஆரம்பித்தாள்.

அவன் சமைத்து முடிக்கவும், திகள்விழி கிளம்பிக் கீழே வரவும் சரியாக இருந்தது.

லேசான ஒப்பனை. அழகாக அணிந்திருந்த டிசைனர் புடவை. அதற்குப் பொருத்தமான நகைகள். சிறிய காதணிகள், கழுத்தை அலங்கரித்த மெல்லிய நகை, கைகளில் வளையல்கள் எனப் பார்ப்பதற்கே அழகுத் தேவதையாக வந்துகொண்டிருந்தாள் திகள்விழி.

அவளைக் கண்டதும் பத்ரன் சில நொடிகள் அப்படியே நின்றுவிட்டான்.

அவன் பார்வையில் இருந்த ரசனையைப் புரிந்துகொண்டவள், வெட்கத்துடன் தலையை குனிந்தாள்.

“என்ன மாமா… அப்படிப் பார்க்கிறிங்க?” என்று அவள் கேட்ட அடுத்த நொடியே அவளை நெருங்கியவன், இடுப்பைப் பற்றி மேலே தூக்கி அணைத்துக்கொண்டு அவள் கன்னத்தைக் கடித்து வைத்தான்.

“ஆவ்… மாமா! வலிக்குது…”

“என்ன பண்றது? இப்படியொரு அழகை முன்னாடி வச்சிட்டு என்னால சும்மா இருக்க முடியலையே! அப்படியே கடிச்சுச் சாப்பிடத் தோணுது”

தன் கண்களில் தோன்றும் ரசனையையும் கிறக்கத்தையும் மறைக்காமல் காட்டினான். அவனுடைய குரலில் வழிந்த காதலும் கிறக்கமும் திகள்விழியின் கன்னங்களைச் சிவக்க வைத்தன.

“உங்க பார்வையைப் பார்த்தாலே பயமா இருக்கு. விட்டா உண்மையாவே சாப்பிட்டுடுவிங்க போல!”

தன் குட்டை முடியை ஒற்றைக் கிளிப்பில் அடக்கியிருந்தாள் திகள்விழி. அவள் முடிகளை வலிக்கப் பற்றிய பத்ரன், கண்ணாடியாய் மின்னும் அவள் கழுத்தில் முத்தமிட்டான். அவனுக்கோ போதை கொஞ்சமும் குறையவில்லை.

அதே கிறக்கமான குரலில், “முடி ஏன்டி கட் பண்ண? நீ நடக்கும்போது உனக்குப் போட்டியா அதுவும் ஆடி அசைஞ்சு என்னைக் கொன்னு போடும்!” என்றான்.

அவனுடைய காதல் வார்த்தைகளில் திகளுக்கோ மேலும் வெட்கம் வந்தது.

“உங்க மேல இருந்த கோவத்துல வெட்டிட்டேன் மாமா! சாரி…”

என்றவளின் தாடையில் கடித்த பத்ரன்,

“இதுக்கெல்லாம் சாரி கேட்கணுமா? உனக்கு கம்பர்டபிளா இல்லைனா வளர்க்க வேண்டாம் குட்டச்சி! உனக்கு எது பிடிக்குதோ அதைப் பண்ணு”

“அதெல்லாம் இல்ல. எனக்கு லாங் ஹேர்தான் பிடிக்கும். இங்க வந்தும் அதை மெயின்டெயின் பண்ணேன்! நீங்க இன்னொரு பொண்ணைக் கல்யாணம் பண்ணப்போறிங்கன்ற வெறுப்புல, 

உங்களுக்குப் பிடிச்சது எதுவும் என்கிட்ட இருக்கக்கூடாதுன்னு கட் பண்ணிட்டேன். இனி வளர்க்க வேண்டியதுதான்…” அவள் கடைசி வார்த்தைகளில் இருந்த வலியைப் புரிந்துகொண்ட பத்ரன், அவளைத் தன்னிடமிருந்து விலக்காமல் நெற்றியில் இதழ் பதித்தான்.

“சரி உன் இஷ்டம்! வா, சாப்பிடலாம்”

என அவளோடு சாப்பிட அமர்ந்தான்.

“இந்த பிரெட் சாப்பிட்டு இரண்டு நாள்ல நாக்கு செத்துப்போச்சு. உனக்குக் கஷ்டமா இல்லையா விழி?”

“கஷ்டமா! ரொம்பக் கஷ்டம் மாமா… சில டைம் லேப் முடிச்சிட்டு டயர்டா வரும்போது பயங்கரமா பசிக்கும். சமைக்க உடம்பு ஒத்துழைக்காம பால் மட்டும் குடிச்சிட்டு தூங்கிடுவேன். 

 

சில டைம் சாப்பாடு வெளிய வாங்கி சாப்டுவேன், ஒரு டைம் ஃபுட் பாய்சன் ஆகிடுச்சு. அப்போயிருந்து வெளிய சாப்பிடப் பயம்… அம்மாகிட்ட சொன்னா ஏதாவது ஏற்பாடு பண்ணுவாங்க. இருந்தாலும் அவங்களை கஷ்டப்படுத்த மனசில்லை இப்படியே மூணு வருஷத்தை ஓட்டிட்டேன்”

அவளை ஆதுரமாகப் பார்த்தது பத்ரனின் விழிகள்.

“குட்டச்சி செஃப் இல்லை இந்தியன் மேய்ட் நான் இங்க அரேஞ்ச் பண்றேன். இனி ஹெல்த்தியா சாப்பிடணும் ஓகேவா!”

“உங்களுக்கு சிரமம் வேண்டாமே! ஆல்ரெடி வீடு, கார் வாங்கியிருக்கிங்க. இப்போ இதுவும் தேவையா?”

“எனக்கு உன்னோட ஹெல்த் ரொம்ப முக்கியம்! திகள்விழின்னா பத்ரனோட சரிபாதி. உன்னை கவனிச்சுக்குறது என் பொறுப்பு!” என்றான் உறுதியாக.

அவன் காதலில் புன்னகை பிறக்க, பத்ரனின் கைகளை இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள் திகள்விழி.

இருவரும் சாப்பிட்டதும் காரில் கிளம்பினார்கள்.

“எங்க போறோம்னு இன்னும் சொல்லல!”

“கல்யாணம் குட்டச்சி. கோவிலுக்கு போறோம்”

“ஓஓஓ… உங்களுக்குத் தெரிஞ்சவங்க கல்யாணமா? அதான் பாஸ்டன் வந்திங்களா?” என்றவளை முறைத்த பத்ரன்,

“உனக்காக வந்தேன் விழி!” என அழுத்தமாகச் சொல்ல, அவள் வாய் மூடிக்கொண்டது.

சிவன் கோவிலில் வண்டி நிற்க, கோவிலைப் பார்த்ததும் திகள்விழி ஆச்சரியப்பட்டாள்.

“மாமா கோவிலா?”

“இறங்கு குட்டச்சி” அவளுக்காகக் காரின் கதவைத் திறந்துவிட்டான்.

அங்கே அவர்களை வரவேற்க ஒரு தமிழ்க் குடும்பம் காத்திருந்தது. பத்ரனைப் பார்த்ததும் அவர்கள் புன்னகையுடன் நெருங்கினர்.

“வாங்க தம்பி!”

அவர்களிடம் புன்னகையுடன் பேசிய பத்ரன், திகள்விழியின் கையைப் பற்றிக்கொண்டான்.

“வாங்க நேரமாச்சு” என்றதும் ஒன்றும் புரியாமல் அவர்களுடன் உள்ளே சென்றாள் திகள்விழி.

கோவிலின் மணி ஓசையும், மந்திரங்களின் ஒலியும் அவளுடைய மனதுக்குள் அமைதியை ஏற்படுத்தின.

சன்னதியின் முன் நின்றவள், சுற்றிலும் பார்வையைச் சுழற்றினாள்.

பொண்ணையும் மாப்பிள்ளையையும் காணோமே? எதிரில் நின்றிருந்த குடும்பத்தினரையும், அருகில் நின்றிருந்த பத்ரனையும் மாறி மாறிப் பார்த்தாள்.

“மாமா… பொண்ணு, மாப்பிள்ளை எங்க?”

விழி கேள்விக்குப் பதில் சொல்லாமல், அவளுடைய கையைப் பற்றியிருந்தவன் மெதுவாக அவளை சிவபெருமானின் முன் நிறுத்தினான்.

“சாமி கும்பிடு விழி!” என்றவனிடம் மேற்கொண்டு கேள்வி கேட்காமல் கண்களை மூடினாள்.

தன் மாமா தன்னைவிட்டு எப்போதும் பிரியக்கூடாது என்று மனதார வேண்டிக்கொண்டாள்.

எதிரில் நின்றிருந்த குடும்பத்தினர் வீடியோ எடுக்க, திகள் விழியின் கழுத்தில் தாலி கட்டினான் பத்ரன்.

அட்சதை விழும் உணர்வில் கண்களைத் திறந்தவள் பார்வையில் பத்ரனின் முகமும் நெஞ்சுப் பகுதியும் தெரிய, நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

சுற்றியிருந்தவர்களின் கைதட்டலுக்கு இடையில் குனிந்து தன் கழுத்தைப் பார்க்க, மஞ்சள் தாலிக்கயிறு மின்னியது.

“மாமா!” என்று அதிர்ச்சியாக அழைத்தவளுக்கோ கண்கள் கலங்கிப்போயின.

இதை அவள் எதிர்பார்க்கவில்லை…

“சார் ரெக்கார்டிங் முடிஞ்சது!” என எதிரே இருந்தவர் கைகளை உயர்த்த, விழி என அவள் கண்களைத் துடைத்துவிட்டான் பத்ரன்.

அடுத்த நொடி, அவனுடைய நெஞ்சில் படபடவென்று அடிக்க ஆரம்பித்தாள்.

“மாமா! ஏன் இப்படி பண்ணிங்க? நமக்குக் கல்யாணம்னு ஏன் சொல்லல? யாருக்கும் தெரியாம இப்போ கல்யாணம் பண்ண வேண்டிய அவசியம் என்ன?” என்று கேட்டவளின் கண்ணீர் நிற்கவே இல்லை.

“எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு, மாமா!” என தன்னை அணைக்கவந்த அவனுடைய கைகளைத் தட்டிவிட்டவள், வேகமாக கோவிலுக்கு வெளியே ஓடினாள்.

“விழி! நில்லுடி!…”

“ரொம்ப தேங்க்ஸ் காய்ஸ்! நான் உங்களுக்குக் கால் பண்றேன்!” என அந்தக் குடும்பத்தினரிடம் அவசரமாகச் சொல்லிவிட்டு, அவளைப் பின்தொடர்ந்தான்.

காரில் அமர்ந்து அழுதுகொண்டிருந்தவளை கண்டு பத்ரனுக்கு கோபம் வந்துவிட்டது. வேகமாக டிரைவர் சீட்டில் ஏறியவன்,

“உன்கிட்ட கல்யாணம்னு சொல்லித்தானே கூட்டிட்டு வந்தேன்” என்றான்.

“நமக்குக் கல்யாணம்னு எப்போ சொன்னிங்க?”

“இப்போ என்னடி? உன்கிட்ட சொல்லாம தாலி கட்டுனது தப்புதான், வேண்டாம்னா கழட்டிப் போடு… இரு நானே கழட்டுறேன்!” எனக் கைகளை அவள் கழுத்தை நோக்கிக் கொண்டு செல்ல, சப்பென அவன் கன்னத்தில் அறைந்துவிட்டாள் திகள்விழி.

பத்ரன் அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தான்.

அவளோ ஆத்திரத்தில் நடுங்கிக்கொண்டிருந்தாள்.

“உன் இஷ்டத்துக்கு தாலி கட்டுவ! ஏன் தாலி கட்டுனன்னு கேள்வி கேட்டா தாலியை அறுத்து எறியப் பார்க்குறியா? தாலியில கை வச்சா கொன்றுவேன் உன்னை!

நீ ஆம்பள… யாருக்கும் பதில் சொல்ல வேண்டியது இல்ல. ஆனால் நான் ஒவ்வொரு இடத்திலும் பதில் சொல்லணும்… அவன் தாலி கட்டும்போது நீ கண்ணை மூடிட்டு நின்னியா? உன் சம்மதம் இல்லாமலா தாலி கட்டுனான்னு கேப்பாங்க!

உண்மையா நான் கண்ணை மூடிட்டு தான இருந்தேன். எனக்கு இதைப்பத்தித் தெரியாதுன்னு சொன்னா நம்புவாங்களா? என் அம்மா, அப்பா நிலைமையை யோசிச்சியா? அவங்க என்ன நினைப்பாங்க? அவங்களுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்?” என்று கடைசி வார்த்தையை சொல்லும்போதே அவளுடைய குரல் உடைந்தது.

தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டாள்.

பைத்தியக்காரனை வைத்துக்கொண்டு இன்னும் என்னென்ன அனுபவிக்க வேண்டுமோ! என்று நொந்துபோனாள் திகள்விழி.

அவள் அடித்தது கோபத்தைக் கொடுத்தாலும், திகள் கேட்கும் கேள்வி நியாயமாக இருப்பதால் அமைதியாகத் திட்டுக்களை வாங்கிக்கொண்டான் பத்ரன்.

தன் காதலை நிரூபிக்க வேண்டும் என்று நினைத்தவன், அவளுடைய பயத்தையும் குடும்பத்தின் சூழ்நிலையையும் மறந்துவிட்டான்.

அதை ஒப்புக்கொள்ள அவனுடைய ஈகோ இடம் கொடுக்கவில்லை. விழியை திரும்பிப் பார்த்து பெருமூச்சுவிட்டான்.

“சரி அழாதே!” அவ்வளவுதான் அவனால் சொல்ல முடிந்தது.

அவளோ அவனைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. வீட்டுக்கு வரும்வரை ஒரு வார்த்தை பேசிக்கொள்ளவில்லை இருவரும்.

உள்ளமோ உலைகலமாகக் கொதிக்க, வேகமாக இறங்கி, செருப்பைக் கழட்டி எறிந்துவிட்டு அறைக்குள் போய் கதவை அடித்துச் சாற்றினாள் திகள்விழி.

பின்னாடியே போய்க் கதவைத் தட்டினான் பத்ரன்.

அவள் கோபமாக இருந்தாலும் சமாதானம் செய்ய வேண்டுமே! அதான புருஷன் வேலை! ஆமா அவ எங்க கோபமா இருக்கா? கொலைவெறில இருக்கா சார்!

“குட்டச்சி கதவைத் திறடி! நான் சொல்றதைக் கேளு!”

உள்ளே இருந்தவளோ கட்டிலில் அமர்ந்தபடி கண்ணீரைத் துடைத்துக்கொண்டிருந்தாள்.

“உன்னை விட்டு நான் போகமாட்டேன்னு வாய்வார்த்தையால சொன்னா நீ நம்பமாட்டேங்கிற அதான் தாலி கட்டுனேன்!”

“நீ இஷ்டத்துக்கு எனக்கு காது குத்த ட்ரை பண்ணாத! ஆல்ரெடி சின்ன வயசுலயே காது குத்தி, மூக்கும் குத்திட்டேன். போய் உன் சமாதானத்தை வீட்டுல இருக்குறவங்ககிட்ட சொல்லு. நீ பண்ண காரியத்துக்கு கட்டையை எடுத்து வெளுக்கும் அபி! வாங்கிட்டு உயிரோட இருந்தா இங்க வா. முதல்ல இந்தியா கிளம்பு!” என்று கத்தினாள்.

“நாம சேர்ந்து சமாளிக்கலாம் விழி…”

“என்ன மயிருக்கு சேர்ந்து சமாளிக்கணும்?” என்றவளின் பேச்சில்,

“என்னடி திட்டுற? மாமா பாவம்!” என்றானே பார்க்கலாம்!

அவனுடைய பரிதாபமான குரலை கேட்டவளுக்குச் சிரிப்பு வரவில்லை. மாறாக, இன்னும் கோபம் வந்தது.

“ஒழுங்கா ஓடிப்போயிடு! உன் திமிருக்கு யார்கிட்டயும் சொல்லாம தாலி கட்டுவ. திட்டு மட்டும் சேர்ந்து வாங்கணுமா? முடியாது ஒழுங்கா வீட்டுல பேசி அவங்களை கன்வின்ஸ் பண்ணிட்டு கதவைத் தட்டு!” என்று அவனுடைய மனைவி கறாராகச் சொல்லிவிட,

மொபைலை எடுத்தவன், கோவிலில் நடந்த திருமணத்தின் வீடியோவை வீட்டிலிருந்தவர்களுக்கு அனுப்பிவைத்தான்.

அனுப்பிய சில நிமிடங்களிலே அவனுடைய மொபைலில் தொடர்ந்து கால் வர ஆரம்பித்தது.

ஒன்று, இரண்டு, மூன்று… என திரையில் மாறி மாறித் தெரிந்த ருத்ரா, நிலா பெயர்களைப் பார்த்தவன் பயத்தில் எச்சில் விழுங்கினான்.

பத்ரன் அனுப்பிய வீடியோவைப் பார்த்துக்கொண்டிருந்த விமலும் பேபியும் அதிர்ச்சியில் உறைந்திருந்தனர்.

“அந்தாளுக்குக் கால் பண்ணு!” என விடாமல் போன் செய்ய,

அடுத்த நொடி பத்ரனின் அழைப்பு ஏற்கப்பட்டது.

“யோவ் மாமா” என்று பேபி ஹைபீச்சில் கத்தினான்.

“ப்பூ… நீங்கதானாடா…?”

“என்னது நாங்கதானாவா! எங்கையா எங்க தங்கச்சி? அண்ணனும் தம்பியும் என்ன விளையாட்டு காட்டுறிங்களா? அதிசயமாக லவ் பண்றானுங்களேம்மா!”

என்று விமல் அடுத்து கத்திட, பத்ரன் காதிலிருந்து மொபைலை சற்றுத் தள்ளிப்பிடித்தான்.

“டேய் மெதுவா பேசுடா!”

“மெதுவாவா பேசணும்? அதிசயமா லவ் பண்றிங்கனு நினைச்சா, கல்யாணமே பண்ணிட்டு வந்திருக்கிங்க! அதுவும் எங்களுக்குத் தெரியாம!”

பேபி அவனிடமிருந்து மொபைலைப் பிடுங்கிக்கொண்டான்.

“மாமா! இதெல்லாம் நல்லாவா இருக்கு? ஒரு வார்த்தை சொல்லியிருக்க வேண்டாமா?”

“வேற என்ன பண்ண சொல்ற, உன் தங்கச்சியை கோவத்துல நீ வேண்டாம்னு திட்டி அனுப்பிட்டேன், கோவம் போனதும் திரும்பி வந்தா நான் வேண்டாம்னு ஓடப்பார்க்குறா! வேற பொண்ணுக்கு எங்க போறது?” என பாவமாக கேட்டான்.

“அதுக்கு சமாதானம் தான பண்ணனும், கல்யாணம் பண்ணிட்டு வீடியோ அனுப்புறது என்ன நியாயம்?” என்றவன் கேள்விக்கு பத்ரன் வாயைத் திறக்கவே முடியவில்லை.

போனை கட்பண்ணிய விமல் வீடியோ கால் செய்தான்.

“திகள் எங்க மாமா?” என்று கேட்டுக்கொண்டிருக்கும் போதே,

நிலா பதறியடித்துக்கொண்டு கீழே வர அவள் புருஷன் அதற்கு மேல் பதறிக்கொண்டு நிலா பின்னே வந்தான்.

“ஏன்டா இப்படி பண்றிங்க? நிம்மதியா பொண்டாட்டி கூட டைம் ஸ்பென்ட் பண்ண விடுங்கடா!” என ருத்ராவே நொந்துகொள்ளும் அளவுக்கு அவன் குடும்பம் அவனை வைத்து விளையாடியது.

“அண்ணா திகளுக்கு கால் பண்ணு! அவள் அழுதுட்டு இருப்பா!” எனத் தங்கையைப் பற்றி தெரிந்து சரியாக சொன்னாள் நிலா.

அவளுடைய குரலில் இருந்த தவிப்பைப் புரிந்துகொண்ட விமல், உடனே பேபி போனலிருந்து திகள்விழிக்கு அழைக்க முயன்றான். ஆனால், அழைப்பு ஏற்கப்படவில்லை.

“பாரு! அவ போனை எடுக்கவே இல்லை!”

என்றதும் நிலாவின் முகம் கவலையில் சுருங்கியது.

“நிலா!” எனப் பாட்டி கத்திக்கொண்டு வர,

“பாட்டி வயசான காலத்துல எதுக்கு டென்ஷனாகுற? வந்து உட்காரு. எங்களுக்கும் உன் பேரன் பண்ண காரியம் அதிர்ச்சியாதான் இருக்கு!” என பேபி அவரை அமரவைத்து தண்ணீர் கொடுத்தான்.

“ஆங்… பேரனா? நான் இந்தப் புடவை டிசைன் காட்டத்தானே வேகமா வந்தேன்” என்ற பாட்டியை நால்வரும் முறைத்தனர்.

“எதே புடவையா?”  

“பாட்டி உன் அட்டகாசம் எல்லைமீறிப் போகுது! உன் சின்னப்பேரன் பகுமானமா கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்காரு. நீ என்னடானா புடவை பார்க்குறியா?”

“என்னடா உளறுற? பத்ரனுக்குக் கல்யாணம் ஆகிடுச்சா?”

“நாங்க உளறல. இதோ பாரு!” என வீடியோவைப் போட்டான் விமல்.

“ஐயோ!” என்ற ரியாக்ஷன் அபிராமியிடமிருந்து வரவில்லை.

“ஹையோ! பத்ரனுக்குக் கல்யாணம் ஆகிடுச்சா” என்று சந்தோசமாக கேட்ட அபிராமி, வீடியோ காலில் திரையில் தெரிந்த பேரனை கண்டு,

“டேய் பத்ரா வாழ்த்துக்கள்டா, கல்யாணம் பண்ணிக்கபோறேனு சொல்லவே இல்ல! இரு நான் சாம்பவிகிட்ட சொல்லி அவளையும் கூட்டிட்டு வரேன்!” எனச் சந்தோஷமாக ஓடிய பாட்டியை வினோதமாக நிலா குடும்பம் பார்த்தது.

அதுசரி, பேரன் கல்யாணமான மறுநாளே அப்பா ஆனதுக்கு விழா எடுக்க ரெடியா இருந்த பாட்டியை என்ன சொல்றது?

“ஏன் பாஸ்? உங்க ஃபேமிலில எல்லாருமே இப்படித்தானா?” என்று ருத்ராவிடம் சீரியஸாகக் கேட்டான் விமல்.

“ஏன் கேக்குற?”

“இல்ல! ஒண்ணுக்கு இரண்டு தங்கச்சியை இங்க கல்யாணம் பண்ணி குடுத்திருக்கோம்! எனக்கென்னவோ நீங்க யாருமே நார்மல் பீப்பிள் இல்லைன்னு தோணுது!” என்றவனை முறைத்த ருத்ரா, பத்ரனிடம் திரும்பினான்.

“என்ன பத்ரா இது?” என்று கடுமையான குரலில் கேட்டான் ருத்ரா. அண்ணனுடைய கோவம் புரிந்து, அமைதியாக “ப்ரோ…” என்றதும்,

“என்ன நினைச்சுட்டு இருக்க? கல்யாணம் பண்ணிட்டு வீடியோ அனுப்புற, முதல்ல திகளோட சம்மதம் கேட்டு கல்யாணம் பண்ணியா?”

பத்ரன் அமைதியாக இருப்பதை கண்டு, “ருத பத்ரா” என்று ருத்ரா கர்ஜிக்க நிலா பயந்து அண்ணன்கள் அருகில் போய்விட்டாள். அவர்களோ நிலாவை முன்னே நிறுத்தி பின்னால் மறைந்துகொள்ள, “எருமைகளா நான் 

“ப்ரோ, திகள் ரொம்ப வருத்தப்பட்டா. அவளைத் தனியா விட்டுட்டு இன்னும் இரண்டு வருஷம் என்னால நிம்மதியா இருக்க முடியாது. நான் அவளை நம்ப வைக்க எவ்வளவோ முயற்சி பண்ணேன். நான் அவளை விட்டுட்டுப் போகமாட்டேன்னு சொன்னாலும் அவ நம்பல.”

அவன் குரலில் இருந்த தவிப்பை ருத்ரா கவனித்தான்.

“அதுக்காக இப்படியா பண்ணுவ?”

“எனக்குத் தெரியும், ப்ரோ. நான் தப்புப் பண்ணிட்டேன். ஆனா, அவளை என் மனைவியா ஏத்துக்கிட்ட பிறகு, அவள் உலகத்துல எந்த மூலைக்குப் போனாலும் நான் நிம்மதியா இருப்பேன். அவளை விட்டுட்டுப் போற எண்ணமே எனக்கு இல்லை.”

அவன் பேச்சிலும் நியாயம் இருப்பது போல ருத்ராவுக்குத் தோன்றியது.

“உன்னைப் போல லூசா இருக்காரு உன் தம்பி! உங்க பாயிண்ட் ஆஃப் வியூவ்ல இருந்து யோசிக்காதீங்க. எங்களைப் பத்தியும் யோசிங்க!” என்ற மனைவியின் பேச்சில் இதுவும் சரிதான் என்று தோன்றியது.

“முதல்ல திகள் எங்க, பத்ரன்? அவளை வரச் சொல்லுங்க!” என்று நிலா தவிப்பாகச் சொன்னாள்.

“கதவை லாக் பண்ணிட்டா, அண்ணி! உள்ள போக முடியல…”

அதைக் கேட்டதும் நிலா நெற்றியில் கைவைத்துக்கொண்டாள்.

“ஐயோ! அவ கோபப்பட்டா எவ்வளவு பிடிவாதம் பிடிப்பான்னு உங்களுக்கு தெரியாது”

பத்ரன் அமைதியாக இருந்தான்.

“அவளை சமாதானப்படுத்துறதை விட்டுட்டு, எங்களை சமாதானப்படுத்தப் போறிங்களா? முதல்ல அவகிட்ட பேசுங்க!” என்ற நிலாவின் குரலில் இருந்த அக்கறை அவனுக்குப் புரிந்தது.

“சரிங்க அண்ணி” என அழைப்பைத் துண்டித்தவன், மீண்டும் திகள் அறைக்கு வெளியே நின்று கதவை தட்டினான்.

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!