“விழி கதவைத் திறடி! உங்க அம்மா, அப்பாகிட்ட நான் பேசுறேன்” என கதவுக்கு வெளியே நின்றபடி பத்ரன் குரல் கொடுக்க, உள்ளேயிருந்து எந்த பதிலும் வரவில்லை.
“குட்டச்சி…” மீண்டும் அழைத்துப் பார்த்தான், அறைக்குள் முழு அமைதி.
கதவின் பெருமூச்சுடன் பார்த்தவன் வெளியே சோபாவில் அமர்ந்துகொண்டான். இப்போதைக்கு அவளிடம் எதுபேசினாலும் தவறாக போய்விடும் என அவனுக்குத் தெளிவாக தெரிந்தது. அவளுடைய மனம் எந்த அளவுக்குக் காயப்பட்டிருக்கிறது என்பதையும் உணர்ந்திருந்தான்.
கொஞ்ச நேரம் தனியா இருக்கட்டும், கோபம் குறைஞ்சதும் பேசிக்கலாம் என தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டவன், அவளைத் தொந்தரவு செய்யாமல் அடுத்ததாக சோமசுந்தரத்திற்குப் போன் செய்தான்.
யாருக்கும் சொல்லாமல் தாலி கட்ட துணிச்சல் இருந்தவனுக்கு, பெண்ணைப் பெற்றவர்களிடம் பேசுவதற்கு மட்டும் அத்தனை தயக்கம்!
அங்கு ஏற்கெனவே மகன்கள் மூலம் நடந்த விஷயங்களை அறிந்திருந்த பார்வதியும் சோமசுந்தரமும் மனம் நொந்துபோய் அமர்ந்திருந்தனர்.
இவனுங்க மனுஷங்கதானா? என்று ஆயிரமாவது முறையாக அதே கேள்வி சோமசுந்தரத்தின் மனதில் எழுந்தது.
“இவங்களைப் போயா நம்ம பொண்ணுங்க காதலிக்கணும்? வாங்க அவங்க வீட்டுக்கே போய் என்னன்னு கேட்போம்!” என்று ஆத்திரத்துடன் எழுந்த பார்வதியை சமாதானப்படுத்த முயன்றார்.
“பொறுமையா இரு பார்வதி!”
“என்ன பொறுமை? நம்ம பொண்ணு வாழ்க்கை என்ன விளையாட்டா! திடீர்னு தாலி கட்டிட்டு வந்து நிக்கிறாரு”
“நீ சொல்றது புரியுது ஆனா, இப்போ நாம கோபப்பட்டு அங்க போய்ச் சண்டை போட்டா, நம்ம பொண்ணுங்கதான் இன்னும் கஷ்டப்படுவாங்க. திகள் வருத்தத்துல இருக்கா, போன் பண்ணியும் எடுக்கலை. நிலா இப்போதான் பேசினா. முதல்ல அந்த வீட்டுப் பெரியவங்களை பார்த்துப் பேசிட்டு முடிவெடுக்கலாம்”
கணவன் வார்த்தையில் பார்வதி அமைதியானாலும், அவருடைய முகத்தில் இருந்த கோபம் மட்டும் குறையவில்லை.
இருவரும் ருத்ராவின் வீட்டுக்குக் கிளம்ப தயாரான நேரத்தில்தான் பத்ரனின் அழைப்பு வந்தது.
“ஹலோ!”
“மாமா… நான் பத்ரன் பேசுறேன்” சோமசுந்தரம் பதில் பேசவில்லை,
அந்த மௌனத்திலேயே அவருடைய கோபத்தைப் புரிந்துகொண்டான் பத்ரன்.
“சாரி மாமா! நான் கல்யாணம் பண்ணிக்கணும்ங்கிற நோக்கத்துல இங்க வரல. திகளை நான் ரொம்பக் கஷ்டப்படுத்திட்டேன். இப்போ காதல்னு சொன்னாலும் அவளால மனசார என்னை நம்ப முடியல. அதான் விழியை நம்ப வைக்கத் தாலி கட்டிட்டேன்”
“உங்க நியாயம் இருக்கட்டும் தம்பி. எங்க நிலைமை? எங்களைவிடுங்க திகள் இதை எதிர்பார்த்திருக்க மாட்டா! ஒவ்வொரு தடவையும் நீங்க அவளை நோகடிக்கிறிங்க. என் பொண்ணுங்க இரண்டு பேருக்கும் அன்பைத் தவிர வேற எதையும் காட்டத் தெரியாது
ஆனால், அவங்களுக்கு கிடைக்குறது வலியும் ஏமாற்றமும் மட்டும்தான்!”
சோமசுந்தரத்தின் குரலில் இருந்த ஆதங்கம் பத்ரனின் நெஞ்சை அழுத்தியது.
“மாமா நான்…”
“நாங்க உங்க வீட்டுக்கு போய்ட்டிருக்கோம். முதல்ல திகளை சமாதானப்படுத்துங்க. என் பொண்ணுக்கு உங்களை பிடிச்சிருந்தா, அவளுக்கு உங்களோட வாழ விருப்பமிருந்தா, எங்களுக்கு எந்த மறுப்பும் இல்லை. ஆனால் அவ மனசு உடைஞ்சு போயிருக்கும்போது, அவளை எதுக்கும் கட்டாயப்படுத்தாதிங்க. அவளுக்கு என்ன வேணும்னு அவளே முடிவு பண்ணட்டும்”
“சரிங்க மாமா. நான் அவளை சமாதானப்படுத்துறேன்” என்று அழைப்பைத் துண்டித்தவன், மூடியிருந்த கதவைப் பார்த்தான்.
அவளை சமாளிக்கிறதுதான் பெரிய விஷயமா இருக்கு!.
“பத்ரா நீ தைரியசாலினு சொல்லுவ! தாலி கட்டுறப்போ இருந்த தைரியத்துல பாதியாவது இப்போ இருக்கா பாரு. இவளை சமாளிக்க முடியாம கதவுக்கு வெளியே உட்கார்ந்திருக்க!” என தனக்குத்தானே முணுமுணுத்துக்கொண்டவன் அவளை தொல்லை செய்யவில்லை.
நேரம் மட்டும் நகர்ந்துகொண்டே இருந்தது. மதியம் மெல்ல மாலையாகி, மாலை போய் இரவு தொடங்கிட, பத்ரனுக்கு பொறுமை பறந்துபோனது.
“குட்டச்சி, கதவைத் திறடி!”
“விழி கதவைத் திறடி. காலையில சாப்பிட்டது, இப்போ வரைக்கும் ஒண்ணுமே சாப்பிடமா இருக்க, பசிக்கலையா?”
“சரி என் மேலதான கோபம்? காலையில அடிச்ச மாதிரி இன்னும் நாலு அடி சேர்த்தே அடிச்சுக்கோ. நான் எதுவும் சொல்ல மாட்டேன் முதல்ல வெளியே வா”
அப்போதும் பதில் இல்லை.
“ப்ளீஸ்டி விழி… என்கிட்ட பேசாம இருக்காத, நீ சாப்பிடாம இருக்கிறது எனக்குக் கஷ்டமா இருக்கு” என்றவன் குரல் கொஞ்சம் தழைந்து வந்தது.
அவன் பேசுவது ஒவ்வொன்றும் அவள் காதில் விழுந்துகொண்டுதான் இருந்தது. ஆனால், கதவைத் திறக்க மட்டும் அவளுடைய மனம் வரவில்லை.
கழுத்தில் தொங்கிய தாலியை தொட்டுப் பார்த்தாள்.
வெளியே பத்ரன் கதவைத் தட்டிக்கொண்டிருந்தான்.
“விழி இப்போ நீ கதவைத் திறக்கலைன்னா, நான் கிளம்பிடுவேன்!”
அவ்வளவுதான்! படாரெனக் கதவைத் திறந்து வெளியே வந்தாள்.
எப்போதும் போல டீஷர்ட்டும் ஷார்ட்ஸும் அணிந்து, தலைமுடியை அவசரமாக கொண்டை போட்டிருந்தாள். அழுதழுது கண்கள் சிவந்து, அவன் கட்டிய தாலி மட்டும் கழுத்தில் தனியாகத் தொங்கிக்கொண்டிருந்தது.
அவளை வேகமாக நெருங்கி அணைத்துக்கொண்டான் பத்ரன்.
அவனுடைய மார்பில் கைகளை வைத்து விலக்கினாள் “ஊருக்குப் போறேன்னு மிரட்டுறிங்களா? தயவுசெஞ்சு கிளம்புங்க! என்னைத் தனியா விட்டுடுங்க. நான் தனியாவே இருந்துப்பேன்!” என்று கத்தியவளை எப்படி சமாதானம் செய்வதெனத் தெரியவில்லை.
“அழாதடி! நீ ஏத்துப்பேன்னு தாலி கட்டிட்டேன். இவ்வளவு வருத்தப்படுவேன்னு தெரிஞ்சிருந்தா நிச்சயம் கல்யாணம் நடந்திருக்காது!
நாளைக்கு நுட்ப இந்தியா கிளம்புறேன். நீ படிப்பு முடிஞ்சு வரவரைக்கும் உன்னைத் தொல்லை செய்யல” என்றவனை முறைத்தவளோ முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
“என்னைப் பார்க்க மாட்டியா?”
“மாட்டேன்!”
“அதான் கிளம்புறிங்களே! போங்க” என்று அழுகையோடு அவனை ஓரப்பார்வை பார்த்தாள். அந்த ஒரு பார்வையிலேயே அவள் மனம் புரிந்துபோனது பத்ரனுக்கு.
சிறு புன்னகையோடு, அவள் முன்னால் மண்டியிட்டு அமர்ந்தான்.
“விழி என்னை மன்னிக்க முடியலைன்னா மன்னிக்க வேண்டாம். நான் செஞ்சது தப்புன்னு ஒத்துக்கிறேன் உன்னை நம்ப வைக்கிறேன்னு சொல்லிட்டு இவ்வளவு அழ வச்சிருக்கேன் சாரி!” என்றவன் குரல் மிகவும் தழைந்து வந்தது. இனியும் அவளை வருந்தவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான் பத்ரன்.
“எத்தனை தடவை சாரி கேட்பிங்க மாமா! என்கிட்ட சொல்லாம தாலி கட்டுனது, நம்ம சொந்தங்கள் இல்லாத கல்யாணம் எனக்குப் பிடிக்கல அதான் கோபமா இருந்தேன்.
மத்தபடி நீங்கன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். உங்களை விட்டு போக நான் நினைக்கல, நீங்களும் என்னை விட்டு போகக்கூடாது” என்று பாவமாகச் சொன்னவளை இறுக அணைத்துக்கொண்டான் பத்ரன்.
“ராட்சசி! காலையிலருந்து நான் எவ்வளவு பயந்தேன் தெரியுமா! அடிச்சிட்டு ரூமுக்குள்ள போய் உட்கார்ந்துட்ட, வீட்டுல எல்லாரும் திட்டுறாங்க உனக்குத் தாலி கட்டுனதையே தப்புன்னு நினைக்க வச்சுட்டாங்க!” அப்போதுதான் கொஞ்சம் ஆசுவாசமானான் பத்ரன்.
“பின்ன கொஞ்சுவாங்களா? நீங்க பண்ணது தப்புதான். அதனால திட்டுனா வாங்கிக்கோங்க”
“வீட்டுல பேசணும் விழி! எல்லாரும் உன்னை நினைச்சுக் கவலைப்படுறாங்க…”
“பேசலாம். அதுக்கு முதல்ல சாப்பிடலாம் பசிக்குது! நைட் அவுட்டிங் போய்ட்டு அப்படியே சாப்பிட்டுட்டு வரலாம்” என்று வெளியே ஓடப்போனவளின் இடையை பிடித்துத் தூக்கிக்கொண்டு அறைக்குள் போனான் பத்ரன்.
“இந்த அரைகுறை டிரஸ்ஸை மாத்துடி! நானும் எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது?” என்றவனைக் கண்டு சிரிப்பு வந்துவிட்டது அவளுக்கு!
“வலிச்சா நான் மருந்து போடுறேன் மாமா” என்று கண்ணடித்தவளை அடிக்கக் கை ஓங்கிட உள்ளே ஓடிவிட்டாள்.
இருவரும் உடை மாற்றிவிட்டு வெளியே போனார்கள்.
“உன்னை ரொம்ப கஷ்டப்பட்டு சமாளிக்கணும்னு நினைச்சேன் பட் ஈசியா சமாதானம் ஆகிட்ட குட்டச்சி!”
“என்மேல இருக்குற லவ்லதான தாலி கட்டுனிங்க! யாரும் இல்லாம கல்யாணம் ஆகிடுச்சுன்னு ஃபீலிங். மத்தபடி உங்கமேல கோபம் இல்ல, இன்பேக்ட் எனக்கு மிஸ். திகள்விழியை விட மிஸஸ். திகள்விழி பத்ரனா இருக்கப் பிடிச்சிருக்கு”
அவளுடைய காதல் வார்த்தையில் மயங்கியது பத்ரனின் உள்ளம். அவள் விரல்களைப் பற்றி மெதுவாக முத்தமிட்டவன்,
“நீ செமஸ்டர் லீவுக்கு வந்ததும் நமக்கு ரிசப்ஷன் வைச்சுக்கலாம் விழி! ஹாப்பி தானே?” என்றான்.
“பத்ரன் ஹாப்பின்னா நானும் ஹாப்பி!” என்றவளின் இடையில் கைகொடுத்து, தன் உயரத்துக்குத் தூக்கியவன் அவள் இதழ்களில் கரைந்து போக, சுகமாய் அவனுள் தொலைந்து போனாள் திகள்விழி.
இருவரும் கைகோர்த்தபடி, இரவுநேர விளக்குகளின் ஒளியில் மின்னிக்கொண்டிருந்த பாஸ்டன் நகரின் அழகை ரசித்தார்கள். உயரமான கட்டடங்களிலிருந்து சாலையோர விளக்குகள் வரை அனைத்தும் அந்த இரவுக்கு ஒரு தனி அழகைக் கொடுத்திருந்தன. விழிக்குப் பிடித்தமான பத்ரன் அருகில் இருப்பதாலேயே அந்த இரவு இன்னும் அழகாகத் தோன்றியது.
அவனோடு அமர்ந்து சாப்பிட்டு, கைபிடித்து கடைகளைச் சுற்றினாள்.
“கொஞ்சம் திங்க்ஸ் வாங்கிட்டு போகலாம் மாமா!” எனச் சூப்பர் மார்க்கெட்டுக்கு அழைத்து சென்றாள்.
“நிஜமாவே நாளைக்கு கிளம்புறிங்களா, மாமா?” என அவன் கையை இறுக்கமாகப் பற்றியபடி கேட்டாள்.
“ச்சே ச்சே… அது சும்மா உன்னைச் சமாதானப்படுத்தச் சொன்னது. ஒரு மாசம் இங்கேதான் இருக்கப்போறேன்!” என்றான் பத்ரன்.
அவனுடைய பதிலைக் கேட்டதும் விழியின் இதழ்களில் புன்னகை விரிந்தது. அதுவரை மனதில் இருந்த சின்ன கவலைகூடக் காணாமல் போக, அவன் கையைப் பிடித்துக்கொண்டு உற்சாகமாகக் குதித்தாள்.
“சூப்பர் மாமா! எனக்கு ரொம்ப சந்தோஷம்!”
“உண்மையாவா குட்டச்சி?” என்று அவள் முகத்தைப் பார்த்துக் கேட்டவனிடம் வேகமாகத் தலையாட்டினாள்.
“ஆமா மாமா! இப்போ வீட்டுக்குப் போகலாம் எல்லார்கிட்டயும் பேசணும்!” என்றவள், அவன் பதிலுக்குக்கூடக் காத்திருக்காமல் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தாள்.
அவளுடைய உற்சாகத்தை பார்த்துப் புன்னகைத்த பத்ரன், அவள் இழுத்த இழுப்புக்குச் சென்றான்.
இங்கே இந்தியாவில், இரு குடும்பத்தினருமே விழியை நினைத்து கவலையில் ஆழ்ந்திருந்தனர்.
காலையில் ருத்ரா வீட்டுக்குப் போன சோமசுந்தரம், பார்வதி தம்பதியினரை நிமிர்ந்து பார்க்கவே அவர்களுக்கு சங்கடமாக இருந்தது.
“பெத்த ரெண்டுல ஒண்ணுகூட உருப்படியா இல்ல!” என்று மகாதேவன் வாயைத் திறந்தே சொல்லிவிட்டார்.
“எங்களை மன்னிச்சிருங்க தம்பி. பத்ரன் இப்படி செய்வான்னு நாங்க எதிர்பார்க்கல” என்று நடராஜன் மன்னிப்புக் கேட்டார்.
“அவரு பண்ண காரியத்துக்கு நீங்க ஏன் சார் மன்னிப்புக் கேக்குறிங்க! விடுங்க, ஆல்ரெடி எங்களுக்கு பத்ரன் தம்பியை திகளுக்குக் கல்யாணம் பண்ணிக்கொடுக்க விருப்பம் இருந்தது. அவசரப்படாம இருந்திருந்தா திகள் படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் வச்சிருக்கலாம்”
அவருடைய பேச்சில் கோபத்தைவிட ஏமாற்றமே அதிகமாக இருந்தது.
“திகள் போனை எடுக்க மாட்டேங்கிறா. அவளை நினைச்சுத்தான் கொஞ்சம் கவலை…” என்று அவர் சொல்ல, மற்றவர்களுக்கும் அதே கவலைதான் இருந்தது.
என்னதான் பத்ரன் அவளுடைய கணவனாகிவிட்டாலும், திடீரென்று நடந்த திருமணத்தால் விழி எப்படி உணர்கிறாள், அவள் மனதில் என்ன ஓடுகிறது என்பதை தெரிந்துகொள்ள முடியாமல் அனைவரும் தவித்துக்கொண்டிருந்தார்கள்.
சோமசுந்தரம் இந்த அளவோடு விட்டாரே என்ற நிம்மதியில் ருத்ராவின் குடும்பத்தினர் பெருமூச்சுவிட்டனர். இல்லையென்றால், ஏற்கெனவே நடந்ததை நினைத்துக் கலங்கிக்கொண்டிருப்பவர்களிடம் மேலும் என்னென்ன கேள்விகள் எழுந்திருக்குமோ!
அந்த நேரத்தில் சூழ்நிலையைச் சற்றே இலகுவாக்கும் விதமாகச் சாம்பவி பேசத் தொடங்கினார்.
“சரிங்க அண்ணா, வந்தது வந்துட்டிங்க இன்னைக்கு இங்கேயே தங்கிடுங்க. எப்படியும் குட்டிக்கரணம் போட்டாவது விழியை சமாதானப்படுத்திடுவான் என் புள்ளை… நாளைக்குக் காலையில அவகிட்ட பேசிட்டு போகலாம், நல்ல காரியம் நடந்துருக்கு நான் போய் ஸ்வீட் பண்றேன்”
என்று சிரித்தபடி உள்ளே போனவரை
‘இந்த அரைகிறுக்கனுங்களைப் பெத்த தெய்வத்தாயே! உன் அறிவுக்கு கோவில் கட்டணும்!’ என்பது போல் பார்த்தது நிலாவின் குடும்பம்.
ஒருபுறம் மகனின் அடாவடித்தனத்தை நினைத்து அனைவரும் கவலைப்பட்டுக்கொண்டிருக்க, இன்னொருபுறம் அவன் நிச்சயம் சமாளித்துவிடுவான் என்று அசைக்க முடியாத நம்பிக்கையுடன் பேசும் சாம்பவியை பார்த்து என்ன சொல்வதென்று தெரியவில்லை!
நிலா கவலையாக இருப்பதைக் கண்டு அவளைத் தோளோடு அணைத்துக்கொண்டான் ருத்ரா.
“டோன்ட் ஃபீல் மஃபின்! என் தம்பி சமாளிச்சிடுவான், முடியலைன்னா நாம பேசலாம். நீ சோகமா இருந்தா நானும் பேபியும் சோகமாகிடுவோம்” என்று சமாதானம் செய்தான்.
“இப்படி உருகி உருகி பேசியே அண்ணனும் தம்பியும் எங்களை ஏமாத்துறிங்க! ஐ ஹேட் யூ!” என்று அவள் சிடுசிடுக்க, ருத்ராவோ “நிஜமாவா?” என்று அப்பாவியாகக் கேட்க, அவனை முறைத்தாள் நிலா.
“ஐ ஹேட் யூ பட் எனக்கு ஏகரா மட்டும் தான் வேணும்!” என்று முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
அவளுடைய பேச்சைக் கேட்ட ருத்ரா சத்தமாக சிரித்துவிட்டான்.
“சிரிக்காத ஏகரா! நான் சோகமா இருக்கேன்!” என்று முகத்தைச் சுளித்தாள் நிலா.
“மஃபின் என்ன பண்ணுதுடி? ம்ச்… த்ரீ மந்த் வரை டிராவல் பண்ணக்கூடாதுனு டாக்டர் சொல்லிட்டாங்க! இல்லைனா நம்ம எஸ்டேட்டுக்குப் போயிருக்கலாம்.
கொஞ்ச நாள் தான் ஆரலி, நான் கூப்பிடும்போது மறுக்காம வரணும். இல்ல தூக்கிட்டுப் போய்டுவேன்” என்றான் பல்லைக் கடித்தபடி.
“ம்ம்ம்…” என அவனுடைய மிரட்டலை கேட்டதும் நிலா மெல்லத் தலையை ஆட்டினாள். அவளுடைய முகம் தெளிவில்லாமல் இருப்பதைக் கண்டு அவனுடைய ஆங்கார ரூபம் விழித்துக்கொண்டது.
“இப்போ நீ நார்மலாகலைனா நான் என்ன பண்ணுவேன்னு தெரியாது!” என்று குரலை உயர்த்தினான்.
அவ்வளவுதான்!
“போடா! என்னைத் திட்டுற, நான் என்ன வேணும்னா உம்முனு இருக்கேன்?” என அழ ஆரம்பித்துவிட்டாள் நிலா!
“இப்போ என்னடா பண்ணேன் நான்?” என்று தனக்குள்ளேயே புலம்பியவன், அவளை எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் விழித்தான்.
அந்த நேரத்தில் நிலாவின் பின்னால் நின்றுகொண்டிருந்த பேபி, தங்கையின் நிலையைப் பார்த்துவிட்டு உடனே குறுக்கே புகுந்தான்.
“மாமா! இந்த கர்ப்பகால மூட் ஸ்விங் பத்தி நீங்க கேள்விப்பட்டதில்லையா?”
“கேள்விப்பட்டதில்லை! எனக்கு இவ சிரிக்கணும் அவ்வளவுதான்!”
“முடியாது சிரிக்க மாட்டேன். எனக்கு அழணும் போல இருக்கு” என்று தேம்பித் தேம்பி அழுதவளை கலவரமாகப் பார்த்தனர் விமலும் பேபியும்.
“பாஸ் இப்படி முறைச்சுட்டு நின்னா மூட் மோசமாகிடும். அவளை சமாதானம் பண்ணுங்க” என விமல் ருத்ராவை முன்னால் தள்ளிவிட,
“சமாதானமெல்லாம் வராது. வேணும்னா சல்சா பண்ணுவோம் வா!” என நிலாவை தோளில் தூக்கிப்போட்டுக்கொண்டு நடக்க,
“விடுடா பன்னிப்பயலே! என்னை தொட்ட கையைக் கடிச்சிடுவேன்!” என்றவளின் கத்தல்களை காதில் வாங்காமல் ருத்ரா அறைக்குள் போய் கதவை மூடினான்.
வெளியே நின்றிருந்த விமலும் பேபியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். இதென்னடா புதுவகையான சமாதானம்? என்பது போல இருவரும் முழித்தார்கள்.
காலை வரை அறைக்குள் சமாதான மழைதான்!
இரவு முழுவதும் அழுது, சிணுங்கி, அவனிடம் கோபப்பட்டு, கடைசியில் ருத்ரா அரவணைப்பிலேயே அடங்கிப்போனாள் நிலா. தூக்கம் விழிகளைச் சுழற்ற, அரைத்தூக்கத்தில் கூடச் சாமியாடிக்கொண்டிருந்த மனைவியை தன் நெஞ்சில் போட்டுத் தூங்க வைத்தான் ருத்ரா.
அவள் முகத்தில் இருந்த சோர்வைப் பார்த்தவனுக்கு மனம் இளகியது. அவளை இன்னும் கொஞ்சம் தன்னோடு இறுக்கமாக அணைத்துக்கொண்டு, நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான்.
“ஏகரா… திகள் போன் பண்ணுவா…” என்று நிலா தூக்கத்திலும் முணுமுணுக்க, அவன் இதழ்களில் சிறு புன்னகை மலர்ந்தது.
“நாளைக்குப் பேசிக்கலாம் மஃபின். இப்போ தூங்கு” என்று மெதுவாக சொன்னான்.
“நாளையிலிருந்து யோகா, எக்ஸர்சைஸ் சொல்லித்தர ஒருத்தரை அரேன்ஜ் பண்ணியிருக்கேன். நீ மெண்டலி ஹெல்த்தியா இருக்கணும் புரியுதா?”
அவளிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை என குனிந்து பார்த்தவன் அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை கண்டு சிரிப்பு வந்துவிட, அவளை அணைத்தபடியே தானும் தூங்கிப்போனான்.
இந்திய நேரப்படி அடுத்த நாள் காலையில் திகளும் பத்ரனும் கால் செய்தார்கள். அப்புறம் என்ன? குடும்பமே ஹாலில் கூடிவிட்டது!
சிரித்த முகத்தோடு அமர்ந்திருந்த திகளைக் கண்டதும்தான் அவர்கள் மனம் நிம்மதியடைந்தது!
“ஏன்டி பிசாசே! இப்போ இளிக்கிற, நேத்தே இந்த முகரையை காட்டியிருந்தா நாங்க டென்ஷன் ஆகியிருக்க மாட்டோம்ல…”
பேபி தங்கையைத் திட்டிட, அவள் புருஷனோ அவனை முறைத்தான்.
“திடீர்னு கல்யாணம் ஆனதும் அழுகையா வந்திருச்சு அண்ணா. நானும் படபடப்பு குறைஞ்சதும் கால் பண்ணலாம்னு இருந்தேன். அழுதழுது தூக்கம் வந்திருச்சு அதான் உள்ளயே தூங்கிட்டேன்.
ஈவினிங் எழுந்து பார்த்ததும் கல்யாணம் ஆனது ஞாபகம் வந்தது. சரி மாமா சமாதானம் பண்றவரை அப்படியே மெயின்டெய்ன் பண்ணலாம்னு…” என்று இழுத்து இழுத்துக் கதை சொன்னவளை குடும்பமே முறைத்தது.
“அப்போ நீ கோபமா இல்லையா? தூங்குறதுக்காகவா வேகமாகப் போய் கதவை படார்னு அடிச்சு சாத்துன? அப்போ கண்ணு வீங்குனதுகூட அழுகையில இல்லையா? நல்லா தூங்குன எஃபெக்ட்டா?”
பத்ரனுக்கு அவள் சேட்டைகளைக் கண்டு சிரிப்பு வந்தாலும், முகத்தை கோபமாக வைத்தபடி அவளை மிரட்டினான்.
“இல்ல மாமா… கொஞ்ச நேரம் அழுதேன் அப்புறம் தூங்கிட்டேன்!” அவளுடைய பதிலை கேட்ட பத்ரனுக்கு அவளைத் திட்டுவதா? இல்லை சிரிப்பதா? என்று தெரியவில்லை.
“திகள் நாங்க எவ்வளவு பயந்து போயிருந்தோம் தெரியுமா! அசால்ட்டா தூங்கிட்டேன்னு சொல்ற. வயசு இருபத்திரண்டு ஆகப்போகுது கொஞ்சமாவது பொறுப்பா நடக்கப் பழகு! இப்போ கல்யாணம் ஆகிடுச்சு பீ சீரியஸ்!” என்ற நிலா குரலில் இருந்த அக்கறையை உணர்ந்த திகள், உடனே தன் தலையைக் குனிந்துகொண்டாள்.
“சாரி அக்கா…” என்று மன்னிப்புக் கேட்டாள்.
சோமசுந்தரமோ மகளின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். திடீரென திருமணம் நடந்திருந்தாலும், அவளுடைய முகத்தில் தெரிந்த நிம்மதியும் மகிழ்ச்சியும் அவர் மனதிற்கு சற்றே ஆறுதலைக் கொடுத்தன.
“திகள்மா, நீ சந்தோஷமா இருக்குறதே எங்களுக்குப் போதும். பத்ரன் கூடவே கிளம்பி வீட்டுக்கு வா, உனக்கு கிராண்டா கல்யாணம் பண்ணலாம்” என்று நிலா தங்கையிடம் சொன்னாள்.
“வேண்டாம் அக்கா. செமஸ்டர் லீவுக்கு வரும்போது ரிசப்ஷன் வச்சுக்கலாம்னு மாமா சொன்னாரு”
