உருத்திரா 4❤️

 

அடுத்த நாள் காலை ருத்ரா வீட்டுக்கு வந்த சரபன், வேலையாட்கள் பரபரப்பாகச் சுற்றுவதை குழப்பமாகப் பார்த்தபடி ருத்ராவின் அறை நோக்கிப் போனான்.

“என்னடா இது அதிசயமா இருக்கு! ஒன்னு காலையில கலவரமா இருக்கும், இல்ல டல்லா போகும். இன்னைக்கு என்ன வேலை பார்க்குறாங்க?” என்று புலம்பிய படி ருத்ராவின் அறைக்கதவைத் திறக்க, சிரித்த முகமாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான் ருத்ரா.

“மச்சான் ருத்ரா! சிரிக்கிறது நீதானா? ஒரு நிமிஷம் இரு, உண்மையான்னு பார்த்துக்குறேன்!” என்று தன் கைகளைக் கிள்ளிப் பார்த்தவனோ,

“உண்மைதான்! நீ சிரிக்கிற, இன்னைக்கு என்ன ஸ்பெஷல்? வெளியே போகப்போறோமா, சீக்கிரம் சாப்பிடுறியே ஒரே அதிசயமா இருக்கு”

“நீயும் உட்கார்ந்து சாப்பிடு!” என சரபனுக்கும் பிளேட் எடுத்து வைத்தான் ருத்ரா.

“மகாபிரபு! இன்னைக்கு உங்க கருணையைக் கண்டு புல்லரிக்குது! 

புல்லரித்துப்போனவனுக்கு நண்பனின் நிலை நியாபகம் வர,

“ஆமா, இதுல உள்குத்து எதுவும் இல்லையே?” என சந்தேகமாகக் கேட்டவனை முறைத்த ருத்ரா, “வேண்டாம்னா கிளம்பு!” என்றான்.

“சரி கோவிச்சுக்காத மச்சான். சும்மாதான் ஒரு கன்பர்மேஷன்!” என்று சாப்பிட ஆரம்பித்தான்.

“எக்ஸ்க்யூஸ் மீ, சார்…”

“யாருடா அது?” என்று சரபன் திரும்பிப் பார்த்தான். காட்டுரோஜா, செண்பக மலர், காட்டுமல்லி மற்றும் மனோரஞ்சிதம் என நால்வகை மலர்களால் நிறைந்த பொக்கே கையில் வைத்துக்கொண்டு நின்றான் ஒருவன்.

“எஸ் இங்க வச்சுட்டுப் போ!” என்று ருத்ரா சைகை செய்ய, பவ்யமாக அதை டேபிளில் வைத்துவிட்டு சென்றான்.

“இது என்னடா வித்தியாசமான பொக்கே! நார்மலா ரோஸ் இல்லைனா வேற பிளவர்ஸ்தான் இருக்கும். இது என்ன பூ மஞ்சள் கலர்ல?”

“செண்பகப்பூ…”

“வாட்? செண்பகப்பூ பாட்டுல தான் இந்த பெயரை நான் கேட்ருக்கேன், நேர்ல இப்போ தான் பார்க்குறேன். சரிடா யாருக்கு இந்தப் பொக்கே?”

அவனுக்கு மண்டையில் மணியடிக்க ஆரம்பித்தது. ஏதோ சரியில்லையே என உள்ளம் பிராண்ட,

“போகும்போது சொல்றேன் சரபா. இன்னும் கிஃப்ட் வரலை. வந்ததும் கிளம்பலாம்!” என்றான் ருத்ரா.

பத்து நிமிடங்கள் கழித்து, சமையல் செய்யும் அக்கா ஒரு டிபன் பாக்ஸை ருத்ராவிடம் கொடுக்க, “கமான், கிளம்பலாம்!” என்று உற்சாகமாக எழுந்தான். அவனுடைய நடவடிக்கை வித்தியாசமாக இருப்பதைக் கண்டு சரபனுக்குச் மேலும் சந்தேகம் அதிகமானது.

“ருத்ரா நில்லு! எங்கே போறோம்னு சொல்லு. நீ நடந்துக்குறது வித்தியாசமா இருக்கு, ஆர் யூ ஆல்ரைட்?”

“நான் நல்லா இருக்கேன் சரபா. உனக்கு சர்ப்ரைஸ் பண்ணலாம்னு நினைச்சேன் பட், நீ பொறுமை இல்லாம கேக்குற! இப்பவே சொல்றேன். என் ஆரலி கிடைச்சுட்டா”

“என்ன?”

“ஆமாம், நண்பா! ஆரலியை நேத்து நைட் பார்த்தேன்!” என்றவனைக் கண்டு தலைசுற்றியது சரபனுக்கு.

இவன் அடங்கவே மாட்டானா என்று கடுப்பாக இருந்தது.

“ஏன்டா இப்படி பண்ற? ஒரு நாள்… ஒரே ஒரு நாள்… நாட் ஈவன் அ சிங்கிள் டே! உன்னோட பொய்யான நம்பிக்கைக்கு விடுதலை கிடைக்காதான்னு கடவுள் கிட்ட வேண்டிட்டு இருக்கேன். 

இப்போ அந்த நம்பிக்கை உண்மையான உயிரா திரும்பி வந்திருச்சு சொல்றியா? ஒழுங்கா ரூம்ல உட்கார்ந்து ரெஸ்ட் எடு. நான் ஆபீஸ் போறேன்!” என வெளியே போகத் திரும்பியவனை முந்திக்கொண்டு ருத்ரா வெளியேறிவிட,

“இவன் அடங்கமாட்டான்!” என்ற எரிச்சலில் அவனும் பின்னாடியே போனான்.

“மரியாதையா காரை விட்டு இறங்கிடு இல்ல, உன் மூஞ்சி அடையாளத்தை மாத்திடுவேன்!” என்ற ருத்ராவின் கர்ஜனையில் பயந்தாலும் அமைதியாக முன்னால் ஏறி அமர்ந்துகொண்டான் சரபன்.

இங்கு நிலாஞ்சியின் வீட்டில் வழக்கம்போல லேட்டாகத் தூங்கி எழுந்தவளோ, அவசரமாக ஆபீஸுக்குக் கிளம்பிக்கொண்டிருந்தாள். புது ஸ்கூட்டியில் ஜாலியாகத் திகள்விழி சீக்கிரமாகக் கிளம்பிப் போய்விட, பார்வதி இன்று மகளை விரட்டிக்கொண்டிருந்தார். திட்டுகளுக்கு இடையே வேகமாக வண்டியை எடுத்துக்கொண்டு ஆபீஸ் வந்து சேர்ந்தாள் நிலாஞ்சி.

அவளை உள்ளே விடாமல் மறித்தது நண்பர்கள் கூட்டம்.

“ஏன்டி நிலா, நேத்து சொல்லாம எங்க போய்த் தொலைஞ்ச? உன்னைக் காணோம்னு ஒரே டென்ஷன். அப்புறம் நீ வண்டி எடுத்துட்டுப் போறதை பாலாஜி பார்த்ததா சொல்லவும் எங்களுக்கு நிம்மதியா இருந்துச்சு!”

வயது பெண்ணல்லவா! நண்பர்கள் அவளை காணாமல் தேடி அலைந்திட அவள் வண்டியை ஓட்டிக்கொண்டு போவதை நிலாவோடு வேலைசெய்யும் ஒருவன் கவனித்து சொன்னதால் நிம்மதியாக வீட்டுக்கு கிளம்பினார்கள்.

“அதை ஏண்டி கேக்குற? நேத்து நைட் ஹோட்டல் கார்டன் ஏரியா நல்லா இருக்குன்னு சுத்திப் பார்த்துட்டு இருந்தேன். யாருன்னே தெரியல ஒரு பொறுக்கி வந்து மேல மோதிட்டான். இரண்டு பேரும் கீழே விழுந்துட்டோம் அப்போ சரியா கரண்ட் கட் ஆகிடுச்சு”

“ஆங் அப்புறம்?” பெரிய ரொமான்ஸ் சீன் போலயே என்று ஆர்வமாக சுற்றியிருந்தவர்கள் கேட்க,

“அப்புறமா? நான் என்ன கதையா சொல்றேன்? அவனைத் தள்ளிவிட்டு எழுந்திருக்கப் பார்த்தா, மறுபடியும் இழுத்துப் போட்டு கட்டிப்பிடிச்சுட்டான்டி!”

“ஐயோ”

“எனக்கு செம கோவம். அதான் ஹேர்பின் வச்சு ரத்தம் வர அளவுக்குக் குத்திட்டு ஓடி வந்துட்டேன். அப்புறம் மூட் அவுட் அதான் வீட்டுக்குக் கிளம்பிட்டேன்!” என்று சோர்வாக சொன்னாள் நிலா.

“சரி கோவப்படாத நிலா. ஆள் யாருன்னு பார்த்தியா? அடுத்த தடவை பார்த்தா வச்சுச் செஞ்சுருவோம்” என்றாள் ஒருத்தி.

“இல்ல… இருட்டுல ஒண்ணும் தெரியல! விடுங்க, நானே இப்போதான் டென்ஷன் இல்லாம இருக்கேன். வாங்க உள்ளே போகலாம். டைம் ஆச்சு!” என அவர்களோடு பேசியபடி உள்ளே போனாள்.

காரில் அமர்ந்திருந்த சரபனுக்கு மூளை தாறுமாறாக யோசித்துக்கொண்டே வந்தது.

‘பூ வாங்கியிருக்கான். ஒரு வேளை கல்லறைக்குப் போகப்போறானா? இவன்தான் ஆரலி செத்துட்டான்னு நம்ப மாட்டேங்கிறானே! கிஃப்ட்னு சொல்லிட்டு டிபன் பாக்ஸ் வச்சிருக்கான். 

 

எனக்கு ஒண்ணுமே புரியல. எதுக்கும் இவனோட சிடுமூஞ்சி தம்பிக்கு ஒரு மெசேஜ் போடுவோம்!’ என்று போனை எடுத்தவன், கார் வந்து நின்ற இடத்தைக் கண்டு மேலும் அதிர்ச்சியடைந்தான்.

‘இது பத்ரன் பார்த்துக்குற கன்ஸ்ட்ரக்ஷன் தானே! ஐயோ காலைலயே ஆரம்பிச்சுட்டானே’

“ருத்ரா, இங்க எதுக்கு வந்திருக்கோம்? உன் தம்பி பார்த்தா அசிங்கம் அசிங்கமா கேப்பான்டா… நில்லு!” என சரபன் அவனைத் தடுக்கப் பார்த்தான்.

தன் டிரைவரிடம் பொக்கேவைக் கொடுத்த ருத்ரா, சரபனின் சட்டைப் பட்டன்களை சரியாக மாட்டிவிட்டபடி, “நான் நல்ல மூட்ல இருக்கேன் சரபா! இதே மாதிரி நீ கேள்வியா கேட்டுட்டு இருந்தா, என் நண்பனா இருக்குற உன்னைப் பரலோகம் அனுப்பிடுவேன். 

நல்லா கேட்டுக்கோ இதான் லாஸ்ட் வார்னிங். நல்ல பையனா நடந்துக்கணும் சரியா?” என்று அவன் கன்னத்தைத் தட்டியவன், தன் உடைகளைச் சரிசெய்துகொண்டு பொக்கேவோடு உள்ளே போனான்.

“சார்…” எனப் பாவமாக விமல் பின்னால் இருந்து கூப்பிட்டான்.

“கேட்டுட்டியா?”

“ம்ம்ம்…”

“சரி வெளியே சொல்லிடாத! இப்போ என்ன பண்றனா, இவன் தம்பி மீட்டிங்ல ஹால்ல உட்கார்ந்திருப்பான். அவனைப் போய்க் கூட்டிட்டு வா….

இரு இரு என்ன சொல்லிக் கூட்டிட்டு வருவ?”

“உங்க அண்ணன் ருத்ரா சார் வந்திருக்கார்னு சொல்லுவேன்”

“ருத்ரா பெயரைச் சொன்னா டென்ஷன் ஆவான் பரவாயில்ல, உடனே வாங்கன்னு கையோட கூட்டிட்டு வா!” என்று விமலை அனுப்பிவிட்டு ருத்ராவின் பின்னால் ஓடினான் சரபன்.

விமல் உயிரைக் கொடுத்து ஓடி, மீட்டிங்கில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த பத்ரனிடம் ருத்ரா வந்திருப்பதைச் சொல்ல,

“அவன் வந்தா நான் என்ன பண்ணணும்? ரூம்ல உட்காரட்டும். மீட்டிங் முடிஞ்சதும் பேசிக்கிறேன்!” என்றான் பத்ரன்.

“ஐயோ, சார்! அவரு காதலிக்கிற பொண்ணு… பேருகூட ஏதோ… ஆங், ஆரலி! அந்தப் பொண்ணு கிடைச்சிருச்சுன்னு பொக்கேவோட கிளம்புனாரு. 

இப்போ உங்க ஆபீஸுக்கு வந்திருக்கார். ஒருவேளை அந்தப் பொண்ணு இங்க வேலை பார்க்க வாய்ப்பிருக்கு! கொஞ்சம் வாங்களேன். பயந்து பயந்து வருது!” என்று தயக்கத்தோடு அழைத்த விமலை முறைத்துக்கொண்டே அவனோடு வெளியே வந்தான் பத்ரன்.

பத்ரன் அறை உள்ளே ருத்ரா போய் பத்து நிமிடம் இருக்கும், வாசலில் நின்றிருந்த சரபனோ உள்ளே எதுவும் தெரிகிறதா எனக் கண்ணாடியைத் துளைக்காத குறையாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.

“இடியட்! எதுக்கு பல்லி மாதிரி கதவைத் தேய்ச்சுட்டு நிக்குற? உள்ளே போக வேண்டியதானே” என்று திட்டினான் பத்ரன்.

“எப்பா நல்லவனே! உன் அண்ணன் இதுக்கு மேல வரக்கூடாதுன்னு சொல்லியிருக்கான். இவ்வளவு நாளா செத்த பொண்ணு திரும்ப வரும்னு சொல்லிக்கிட்டு இருந்தான். இப்போ உயிரோட வந்துடுச்சுன்னு சொல்றான். நீயாவது உண்மை என்னன்னு கேளு!”

“ச்சே, உள்ளே வந்து தொலைங்க” எனக் கதவைத் திறந்துகொண்டு மூவரும் உள்ளே போக அங்கு கண்ட காட்சியில் மூவரும் வாயை பிளந்து நின்றனர்.

ருத்ரா எம்.டி. சேரில் அமர்ந்திருக்க, அவன் மடியில் நிலாஞ்சி உட்கார்ந்து அவனை அடித்துக்கொண்டிருந்தாள்.

“விடுடா பொறுக்கி! பத்ரன் சார் வரட்டும், உன்னைக் கொல்லச் சொல்றேன்” எனக் கத்தியவளை ஒற்றைக் கையால் அழுத்தமாக பிடித்துத் தன்னைப் பார்க்க வைத்தவன்,

“கொடிச்சி, என் மேல இன்னும் கோவம் போகலையா?” என்று மென்மையாகக் கேட்டான்.

“சார், அந்தப் பொண்ணு பேரு கொட்டாங்குச்சியா?” என்று சந்தேகமாக சரபன் காதை கடித்தான் விமல்.

“நீ வேற ஏன்டா நேரங்காலம் இல்லாம காமெடி பண்ணிட்டு இருக்க? அது கொட்டாங்குச்சி இல்ல, கொடிச்சி! ஆரலி காட்டுல வளர்ந்த பொண்ணு. அவங்க பாட்டி செல்லமா கொடிச்சின்னு கூப்பிடுவாங்க!” என்று விளக்கமாகச் சொன்னவன் கோவத்தில் உறைந்து போய் நின்ற பத்ரனைக் கண்டு,

“தம்பி உறைஞ்சு நிக்குற நேரமா இது? உன் அண்ணனைத் தடுத்து நிறுத்துப்பா!” என முன்னால் அவனை தள்ளிவிட்டான்.

“ருத்ரா!” என்ற பத்ரனின் கர்ஜனையில் சாவகாசமாகத் திரும்பியவனோ, தம்பியை என்ன என்பது போல் பார்த்தான்.

“சார், ப்ளீஸ் ஹெல்ப்!” எனப் பத்ரனை நோக்கி ஓடப்போனவளின் கைகளை அழுத்தமாகப் பிடித்தான் ருத்ரா. 

“ஸ்ஆஆஆ!” என்று வலியில் நிலா முகம் சுருங்கியதும், தாமதிக்காமல் தன் கைகளை எடுத்துவிட்டான். அடுத்த நொடி பத்ரனுக்குப் பின்னால் வந்து நின்றுகொண்டாள் நிலாஞ்சி.

சற்று நேரத்திற்கு முன்பு…

இன்னும் இரண்டு நாட்களில் டெண்டர் இருப்பதால், ஃபைல்களைத் தயார் செய்துகொண்டு வந்த நிலாஞ்சி, பத்ரனைப் பார்க்க அவன் அறைக்குள் வந்தாள். அவனோ முக்கியமான இன்வெஸ்டர்களோடு மீட்டிங் அறையில் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தான். சரி, வந்ததும் ஃபைலைக் காட்டலாம் என அவன் அறையில் காத்திருந்தாள்.

அப்போதுதான் ருத்ரா அந்த அறைக்குள் வந்தான். அவனை யாரென்று அடையாளம் தெரியவில்லை. ஆனால், பார்க்கப் பெரிய இடத்து பிஸினஸ்மேன் போல இருக்கவே,

“வெல்கம் சார்! பத்ரன் சார் மீட்டிங்ல இருக்காரு. 

நீங்க உட்காருங்க, நான் இன்ஃபார்ம் பண்ணிட்டு வரேன்…

மே ஐ நோ யுவர் நேம், ப்ளீஸ்?” என்று பவ்யமாகக் கேட்டவளின் உச்சி முதல் பாதம் வரை துளித்துளியாக ரசித்தன அவன் கண்கள்.

கண்ணாடி போட்டிருந்ததால் அவளுக்கு ருத்ராவின் பார்வை தெரியவில்லை. நேராகப் பத்ரனின் சீட்டில் போய் அமர்ந்த ருத்ரா,

“நான் வெயிட் பண்றேன். நீங்க உங்க வேலையைப் பாருங்க!” 

“ஓகே, சார்! காபி எடுத்துட்டு வரேன்!” என அவனுக்கு மெஷினில் காபி கலந்து கொண்டுவந்து டேபிளில் வைத்தவளின் கைகளைப் பிடித்து மடியில் அமரவைத்து அக்கப்போர் செய்ய ஆரம்பித்தான்.

அவன் தொடுகையில் திடுக்கிட்டவள்,

“ஹேய், நேத்து நீ தானே என்னை இடிச்சுக் கீழே தள்ளுனது? உனக்கு அறிவில்லையா ராஸ்கல், விடுடா பன்னி. 

நேத்தே நல்லா வாங்கியிருப்ப! கரண்ட் இல்லாததுனால அதனால ஹேர்பின்னோட விட்டேன். இல்ல கத்தி எடுத்து சொருகியிருப்பேன்!” என்று அடித்தாள்.

“குத்து ஆரலி!” என்று தன் நெஞ்சுப் பகுதியைக் காட்டினான். ஏற்கெனவே நேற்றைய காயத்தில் பேண்டேஜ் போட்டிருந்தது. அவள் கைகளை பிடித்து அடிப்பட்ட இடத்தில் அழுத்தமாக வைத்தான் ருத்ரா.

“கைய விடுடா ராஸ்கல்!” என அவள் கதறிக்கொண்டிருந்தபோதுதான் மூவரும் உள்ளே வந்தார்கள்.

“சார்…” எனப் பயத்தோடு தன் கைகளைப் பிடித்து நிற்பவளைப் பார்த்த பத்ரன், “டோன்ட் பானிக்! நான் இருக்கேன்!” என்று சமாதானம் செய்தான்.

பத்ரன் எவ்வளவு பெரிய கோபக்காரன் என வெளியே பெயர் வாங்கியிருந்தாலும், பெண்களிடம் கண்ணியம் காப்பவன். தவறாக ஒரு பார்வைகூட யாரையும் ஏறெடுத்துப் பார்க்க மாட்டான். அதனால்தானே தைரியமாக நிலாஞ்சி அவனோடு வேலை செய்ய ஒத்துக்கொண்டாள்.

“ருத்ரா, ஒழுங்கா வீட்டுக்குக் கிளம்பு! முன்னப்பின்ன தெரியாத ஒரு பொண்ணுகிட்ட எப்படி நடந்துக்கணும்னு தெரியாதா? மரியாதையா நீயே வெளியே போயிடு. இல்ல செக்யூரிட்டி வச்சுக் கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளுவேன்!”

அண்ணன் அக்கப்போரு அதிகமாவதை வன்மையாக கண்டித்தான் பத்ரன்.

சேரில் கம்பீரமாக அமர்ந்த ருத்ரா, “நான் இங்க பிரச்சனை பண்ண வரல பத்ரன். என் காதலியைப் பார்த்துப் பேசிட்டு போக வந்தேன். அவளுக்கு என் மேல இருக்குற கோவத்தைக் குறைக்க வந்தேன்!” என்றான்.

“சரிடா, அதுக்கு உன் காதலி ஆரலியை போய் பார்க்காம, இந்தப் பொண்ணை மடியில் வச்சுக் கொஞ்சிட்டு இருக்க!” என்று குரலை உயர்த்திய தம்பியை முறைத்த ருத்ரா,

“இவதான் என் ஆரலி, என் காதலி, என் பொண்டாட்டி!” என்று அழுத்தமாகச் சொன்னான்.

“எனக்கு மயக்கம் வருது. புடிடா!” என சரபன் பின்னால் சாய்ந்துவிட,

“நான் ஒண்ணும் உன் பொண்டாட்டி கிடையாதுடா, கிறுக்குப் பயலே!” என ருத்ராவைப் பார்த்துக் கத்தியவளோ, பத்ரனிடம் திரும்பினாள்.

“சார், என் பேரு நிலாஞ்சின்னு உங்களுக்கு நல்லாவே தெரியும். நான் யாரையும் லவ் பண்ணல, இவன் யாருன்னே எனக்குத் தெரியாது. நேத்து நைட் ஹோட்டல்ல இவன் என்கிட்ட மிஸ்பிஹேவ் பண்ணான். இன்னைக்கு பட்டப்பகல்ல உங்க முன்னாடியே என்னைக் கட்டிப்பிடிக்கிறான், தப்பா பேசுறான்!”

விட்டால் அழுதுவிடுவாள் போல, ருத்ரா மீது ஆத்திரமாக வந்தது நிலாஞ்சிக்கு,

“ரிலாக்ஸ் நிலா. அவனுக்குப் பதிலா நான் சாரி கேட்டுக்குறேன் பிகாஸ் ஹி இஸ் மை எல்டர் பிரதர். 

கொஞ்சம் உடம்பு சரியில்லாம இருக்கான், நாங்க பார்த்துக்குறோம். நீ போய் வேலையைப் பாரு!” என்றான் பத்ரன்.

“பிரதரா?” என எச்சில் கூட்டி விழுங்கிய நிலாஞ்சி, “சரி சார்!” என்று கதவை நோக்கி நடக்க,

“நில்லு ஆரலி!” என்ற ருத்ராவின் சத்தம் கேட்டது.

“ருத்ரா…”

அதிருப்தியுடன் வந்தது பத்ரனின் குரல்.

“இந்தா உனக்காகக் கொண்டுவந்தேன். நீ ஆசைப்பட்டுக் கேட்ட பூக்கள்ல சிலது இருக்கு!” எனப் பொக்கேவைக் கொடுத்தான்.

‘நான் எப்போடா உன்னைப் பார்த்து ஆசையா கேட்டேன்?’ என்ற பாவனையில் நின்றவளோ,

“வேண்டாம் சார்! எனக்கு wild flowers pollen (காட்டுப்பூக்களோட மகரந்தம்) வாசனையைச் சுவாசிச்சா அலர்ஜி வரும்!” என வாங்க மறுத்துவிட்டாள்.

அவளை அழுத்தமாகப் பார்த்தவனோ, டிபன் பாக்ஸைத் திறந்து நீட்டினான். அதில் கேப்பை மாவு உருண்டைகள் போல ஏதோ இருந்தன.

“இது கொரங்கட்டி. உனக்குப் பிடிச்ச ஸ்வீட்!” என்று ஒன்றை எடுத்து அவளுக்கு ஊட்டிவிட்டான்.

“பிடிச்சிருக்கா? உன் அம்மாச்சி செய்றது போல வராது, எனக்குத் தெரியும் இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ!” என்றவனைப் பைத்தியம் போலப் பார்த்தாள் நிலாஞ்சி.

அவள் பார்வையின் அர்த்தம் புரிந்து சரபனுக்கும், பத்ரனுக்கும்கோபம் வந்தாலும் அந்தப் பெண்ணின் மீது கோபப்படக் காரணம் இல்லை என்பதைப் புரிந்துகொண்டு அமைதியாக நின்றனர்.

“நீங்க பத்ரன் சாரோட அண்ணன். சோ நான் பொறுமையாப் பேசுறேன். நான் ஆரலி கிடையாது. என் பேரு நிலாஞ்சி. நீங்க நினைக்கிற பொண்ணு நான் இல்ல. உங்களை இதுக்கு முன்னாடி நான் பார்த்ததுகூட கிடையாது! நான் பிறந்து வளர்ந்தது பெங்களூரு.

நீங்க தேடுற பொண்ணுக்கு இந்தப் பூக்கள், இனிப்பு பிடிக்கலாம். எனக்கு ரெண்டுமே சுத்தமா பிடிக்கல. உங்களையும் சேர்த்துத்தான் சொல்றேன். மறுபடியும் என்னை ஆரலின்னு கூப்பிடாதீங்க. எரிச்சலா இருக்கு!” என நிதானமாகச் சொல்லிவிட்டுத் திரும்பியவளின் கைகளைப் பிடித்திழுத்துத் தன்னோடு அணைத்தான் ருத்ரா.

“டேய்!” எனப் பதறி இருவரும் அவனை நெருங்கிட,

“ஸ்டே அவே ஃப்ரம் அஸ்!” என்ற ருத்ராவின் கர்ஜனையில் பத்ரனும் சரபனும் பின்னால் நகர்ந்தனர். நிலாஞ்சி பயத்தில் கண்களை மூடிக்கொண்டாள்.

பொக்கேவில் இருந்த காட்டுரோஜாவை எடுத்து அழகாக அவள் ஜடையில் சொருகிய ருத்ரா பொக்கேவை அவள் கைகளில் திணித்தான்.

“கண்ணைத் திற ஆரலி!” என்றவனது மென்மையான குரலில் கண்களைத் திறந்தவளின் விழித்திரை நீரால் நிரம்பியிருந்தது.

“இந்தப் பூவைப் பார்க்க ஆசையா கூட்டிட்டுப் போங்கன்னு சொன்ன! என்னால அப்போ காட்டுக்குள்ள கூட்டிட்டுப் போக முடியல.

சாரி! இப்போ உனக்காக இந்த நாலு செடிகளையும் நம்ம வீட்டுல நட்டு வைக்கச் சொல்லியிருக்கேன். நினைச்ச நேரம் நீ பறிச்சு வச்சுக்கலாம்!”

பேச்சு மென்மையாக இருந்தாலும், அவனது கைகள் அவளை இறுக்கமாக அணைத்திருந்தன. ருத்ராவின் நெஞ்சு வரை மட்டுமே உயரம் இருந்தவள், அழுகையோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

சில நொடிகளிலேயே பூவிலிருந்து வந்த மகரந்த வாசனையால் நிலாஞ்சிக்குத் தும்மல் வர ஆரம்பித்தது.

“என்ன ஆச்சுடி?”

“உன் அண்ணன் என்ன செவுடனா? அந்தப் பொண்ணு காட்டுப்பூக்கள் அலர்ஜி தரும்னு சொல்லுச்சுல! மூக்குல திணிக்காத குறையா பூவை வச்சிருக்கிட்டு என்ன ஆச்சு, நொன்ன ஆச்சுன்னு கேக்குறான்!” 

சரபனும் வாயை அடக்கத்தான் பார்க்கிறான், ருத்ரா செய்யும் பைத்தியக்காரத்தனத்தால் டென்ஷனாகி உளறவிட்டு மொத்து வாங்குவது தான் அவன் வேலை.

“இவ்வளவு தெளிவா வாய் பேசுறியே அவன்கிட்ட பேசிப் பார்ப்போம்!” என்றான் பத்ரன் பல்லை கடித்தான்.

“அவன்கிட்ட பேசி இருக்குற உசுரும் போகணுமா, அமைதியா வேடிக்கை பார்ப்போம்!”

தும்மல் நிமிடங்கள் கடந்தும் நிற்காமல் போக,

“ரெண்டு பேரும் கல்லு மாதிரி நிக்காம டாக்டரை வரச் சொல்லுங்க இடியட்ஸ்!” என்று ருத்ரா சத்தமிட, விமல் போனைத் தூக்கிக்கொண்டு ஓடினான்.

“திமிரைப் பாரு!” என்று முணுமுணுத்த சரபன், நிலாஞ்சியை நெருங்கி அவள் தலையில் வைத்திருந்த பூவையும், கையில் இருந்த பொக்கேவையும் பிடிங்கி குப்பைத்தொட்டியில் போட, அடுத்த நொடி அந்தரத்தில் தொங்கினான்.

“ஐயோ என்னடா பண்ற? ருத்ரா நான் உன் நண்பன்டா, என்னை விட்டுரு!” என்று சரபன் கதறினான். அவனது கதறல் ருத்ராவின் காதில் ஏறவில்லை.

“சார் ஹச்… அவரை ஹச்… விடுங்க… ஹச்… எனக்கு ஹச்… காட்டுப்பூ ஹச்… அலர்ஜி…” என தும்ம ஆரம்பித்தாள்.

 

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!