உருத்திரா 5❤️

 

“ருத்ரா, அவனை இறக்கிவிடு!”

“நிலா, நீ பேசாத. முதல்ல உட்காரு, மூச்சு விடக் கஷ்டமா இருக்கா?” என அவளை நெருங்கினான் பத்ரன்.

சரபனைப் பொத்தென கீழே போட்டவனோ, தம்பிக்கு முன்பாகப் போய் நிலாவைத் தூக்கிக்கொண்டு அறையிலிருந்த பால்கனிக்கு போனான்.

வெளிக்காற்று படவும் கொஞ்சம் ஆசுவாசமாக இருக்க, தும்மல் குறைய ஆரம்பித்தது. மருத்துவர் அவளை பரிசோதனை செய்து மாத்திரைகள் எழுதிக்கொடுத்துவிட்டுப் போனார்.

“என்ன சார் கீழே உட்கார்ந்திருக்கீங்க?” என்று சரபனிடம் போன விமல் கைகளை நீட்டினான்.

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மேலே ஏறுனதை நீ பார்க்கலையே! அதான் கேள்வி கேக்குற, மெதுவா தூக்கிவிடுடா!” என மெதுவாக எழுந்தான் சரபன்.

“உனக்கு எப்படி திடீர்னு அலர்ஜி வந்தது ஆரலி?” எனக் கேட்டான் ருத்ரா.

“எனக்குச் சின்ன வயசுல இருந்தே அலர்ஜி இருக்கு. திடீர்னு வரல சார். சொல்றதைக் கேளுங்க நான் ஆரலி இல்லை. கொஞ்சம் விட்டிருந்தா அலர்ஜி சீரியஸ் ஆகி செத்திருப்பேன். தயவுசெய்து பிரச்சனை பண்ணாதீங்க!” எனக் கையெடுத்துக் கும்பிட்ட நிலா வெளியே போய்விட்டாள்.

தன் பர்ஸிலிருந்த ஆரலியின் போட்டோவை வெளியே எடுத்து பார்த்தான் ருத்ரா.

“இந்தப் பொண்ணுக்கும் நிலாவுக்கும் ஏதாவது ஒரு ஒற்றுமை இருக்கா, ருத்ரா? ஆரலி சாகல, மறைஞ்சு வாழுறான்னு நீ பைத்தியம் போல உளறும்போதுகூட கோபம் வரல. இப்போ ஒரு பொண்ணை டார்ச்சர் பண்றதைப் பார்த்தா கோபம் வருது!” என்றான் பத்ரன்.

“மச்சான், ஆரலிக்கு எந்த அலர்ஜியும் கிடையாது. முக்காவாசி நேரம் காட்டுக்குள்ள சுத்துற பொண்ணு. இவ நிலாஞ்சி சொல்றதைக் கேளுடா. பார்க்கப் பாவமா இருக்கு, ஒரு பொண்ணோட சாபத்தை வாங்காத!” என்றான் சரபன்.

இருவரின் பேச்சுகளையும் காதிலேயே வாங்காமல், நிலாஞ்சியைத் தன் பக்கம் எப்படி கொண்டுவருவதெனத் தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தான் ஏகதச ருத்ரா.

“நாம இரண்டு பேரும் புலம்புறது உன் அண்ணனுக்குக் கேக்குதா பாரு! தாத்தாகிட்ட பேசு பத்ரா. இவன் நடவடிக்கை சரியில்லை, நிலாஞ்சியை ஆரலினு சொல்லி இந்தப் பொண்ணை டார்ச்சர் பண்றான். என்னைக்கு இருந்தாலும் இது ஆபத்துல போய் முடியும்!” என்று எச்சரித்தான் சரபன்.

“நான் தாத்தாட்ட பேசுறேன். அதுவரை நிலா பக்கம் இவன் போகாம நீ தான் பார்த்துக்கணும்”

“நானா? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னைத் தூக்கிச் சர்க்கஸ் காட்டுனானே! அதே போல பல தடவை காட்டிட்டான், இனி புதுசா வாங்க உயிரு இருக்காது பரவாயில்லையா?”

“உன் நண்பன் தானே, நீயே பார்த்துக்கோ! நிலா வீட்டு பக்கம் இவன் போயிடாம தடுக்கணும் இல்ல பெரிய பிரச்சனையாகிடும். 

டெண்டர் முடிஞ்சதும் ஒரு முடிவெடுப்போம். ருத்ரா ரொம்பப் பிரச்சனை பண்ணா நிலாவை ஃபாரின் அனுப்பிடுறேன்!” என்று உறுதியாகச் சொல்லிவிட்டுப் போனான் பத்ரன்.

“சார், அந்தப் பொண்ணை நாடு கடத்துறது ருத்ரா சாருக்குத் தெரிஞ்சா என்ன பண்ணுவாரு?”

“நமக்கு காரியம் பண்ணுவான்…”

“சார்…” எனப் பயத்தோடு பார்த்தான் விமல்.

“பயம் வருதா? இதே பயத்தோட இவனைக் கண்காணி வீட்டுக்குள்ள இருக்கான்னு அசால்ட்டா விட்டுடாத, அப்புறம் மர்டர் தான்! காரியம் தான்!” என விமலின் தோளைத் தட்டிவிட்டுப் போனான் சரபன்.

ருத்ரா அமைதியாகக் கண்களை மூடி காரில் அமர்ந்திருப்பதைக் கண்டு விமலுக்குத்தான் வயிற்றைக் கலக்கியது!

இப்படி வந்து சிக்கிக்கொண்டோமே என நினைக்காமல் இல்லை. சரபன் சார் நிலைமைக்கு நாம பரவாயில்லை என்று துன்பத்திலும் சிறு நிம்மதி அடைந்தான்.

மூடியிருந்த ருத்ராவின் விழிகளுக்கு இடையே பதினாறு வயது ஆரலி வந்து நின்றாள்.

“ஏகரா சார், எனக்குக் காட்டு மல்லி, காட்டு ரோஜா ரொம்பப் பிடிக்கும்.

நான் சின்னப் புள்ளையா இருக்கும்போது அம்மை வீட்டுல ஒரு செண்பகப் பூச்செடி வச்சேன். அது பூக்குறதுக்குள்ள அம்மா, அப்பா செத்துப் போய்ட்டாங்க! 

நானும் பாட்டி கூட இங்கன வந்துட்டேன். அந்தப் பூ எப்படி இருக்கும்னு நான் பார்த்ததே இல்லை. காட்டுக்குள்ள பை தூக்கிட்டு போவீங்களே, அது என்னமோ…”

“டிரெக்கிங்…”

“ஆங், டிரெக்கிங் போகும்போது என்னையும் கூட்டிட்டுப் போறீங்களா? நிறைய பூச்செடி பார்க்க ஆசை!” என்று வெள்ளந்தியாய்ச் சிரித்தாள்.

“தரையில நீ நடந்தாலே உருண்டு வர்ற மாதிரி இருக்கும். இதுல மலை மேல ஏறப்போறியா! கை, கால் உடைஞ்சு போச்சுனா என்ன பண்ணுவ? தீனியைக் குறை, உடம்பைக் கண்ட்ரோல்ல வைக்கலைனா நோய் வரும்”

எரிச்சலாக அவன் சொல்லவும் முகம் சுருங்கினாலும் அடுத்த நிமிடம் அனைத்தையும் மறந்து,

“சாப்பாட்டுல எதுக்குக் கட்டுப்பாடு சார்? பிடிச்சதைச் சாப்பிட்டு வாழலாம். நீங்களும் வயித்தைத் தட்டையா வைக்க வேர்த்து விருவிருத்து ஓடுறீங்களே! அதை நிறுத்திட்டு வயிறு நிறையச் சாப்பிடுங்க!” என்றாள்.

அவளை முறைத்த ருத்ரா, “ஒழுங்கா ஓடிப்போயிரு அடி வாங்கிறாத! அடுத்த தடவை வரும்போது நூறு கிலோ தாண்டி இருந்தா அடிவெளுத்துருவேன். ஜாக்கிரதை!” என திட்டிவிட்டுப் வந்த நினைவுகள் ஈரம் குறையாமல் நெஞ்சில் நின்றன.

அவன் எவ்வளவு கடுமையாகப் பேசினாலும், திட்டினாலும், ஏன் அடித்தால்கூட உடனே அதை மறந்து, “ஏகரா சார்!” என்று சிரித்த முகமாக வந்து நிற்பாள்.

ருத்ரா ஒன்றும் அவளைத் திட்டமிட்டுத் திட்ட வேண்டும் என நினைக்கமாட்டான். பல நேரங்களில் அவள் பேச்சாலும், பொறுப்பில்லாத தனத்தாலும் நிறையத் திட்டுகள் வாங்குவாள். காரணமே இல்லாமல் கூட பல நேரம் திட்டுவான்.

ஆரலியோடான நேரங்களை நினைவுபடுத்தியபடி வந்தவன், கார் தன் தாத்தா வீட்டில் நிற்கவும் வேகமாக இறங்கி உள்ளே போனான்.

ருத்ராவை யாரும் அங்கு எதிர்பார்க்கவில்லை. கிட்டத்தட்ட நீண்ட ஏழு வருடங்களுக்குப் பிறகு தன் வீட்டுக்கு வந்திருந்தான்.

“ஐயா ருத்ரா!” என உடைந்த குரலில் பேரனை நெருங்கினார் அபிராமி, அவனோ உணர்வுகளற்ற பார்வையுடன் அவரைப் பார்த்தபடி நின்றான்.

அவனால் அவர்களின் பாசத்தை உணர முடியவில்லை போல!

அமைதியாக அவரைக் கடந்து உள்ளே போனான். அவன் செய்கையில் மனம் உடைந்த அபிராமி அழ ஆரம்பிக்க, “அத்தை என்னாச்சு? எதுக்கு அழுறீங்க?” என்று சாம்பவி அவரிடம் அவசரமாக வந்தார்.

ருத்ராவைக் கண்டு அவருக்கும் சுற்றம் உறைந்து போனது. “ருத்ரா!” என மகனைப் பாசமாகத் தொட, அவன் தன் மீதிருந்த அவருடைய கையை எடுத்துவிட்டான்.

“தாத்தாவைப் பார்க்கணும்!” என ஒற்றை வார்த்தை பேசினான்.

அதற்குள் வேலைக்காரன் மூலம் ருத்ரா வந்திருப்பதைக் கேட்டு அவசரமாக அறையிலிருந்து வெளியே வந்தார் நடராஜன்.

“ருத்ரா வாப்பா, உட்காரு! திடீர்னு வந்திருக்க அபிராமி, பேரனுக்குப் பிடிச்சதைச் சமைக்கச் சொல்லு. இல்லை… இல்லை நீயும் மருமகளும் உங்க கையால பண்ணுங்க!” என்று உற்சாகமாகக் கட்டளையிட்டார்.

கண்களைத் துடைத்துக்கொண்டு, “சரிங்க!” என மருமகளோடு உள்ளே போனார்.

“நான் இங்க சாப்பிட வரல!”

“எனக்குத் தெரியும் ருத்ரா! இந்தக் கிழவனுக்காக ஒருவாய் சாப்பிட மாட்டியா?”

“தாத்தா…”

“சரிப்பா, நீ எதுக்கு வந்திருக்கன்னு சொல்லு!” என அவன் அருகில் அமர்ந்தார்.

“என் ஆரலி திரும்ப வந்துட்டா தாத்தா. அவளைக் கல்யாணம் பண்ணணும்!” என்றவனைச் சிறு அதிர்ச்சியோடு பார்த்தார்.

சமையலறையிலிருந்து அம்மாவும் பாட்டியும் எட்டிப் பார்க்க, அவர்களைக் கண்டுகொள்ளாமல், “யாருப்பா? அந்த மலைக்கிராமத்துப் பொண்ணா? ஆனா…” என்று இழுக்க, 

“தாத்தா, அவ சாகலைன்னு ஆல்ரெடி நான் சொல்லிட்டேன்! என் மேல இருந்த கோபத்துல எங்கயோ போய் ஒளிஞ்சுகிட்டா. ஏழு வருஷம் கழிச்சு இப்போ அவளா என் கண்ணு முன்னாடி வந்திருக்கா, மறுபடியும் அவளை இழக்க நான் விரும்பல. நீங்களே எங்க கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க!”

“சரிப்பா, அந்தப் பொண்ணைக் கூட்டிட்டு வா. நாங்க பேசுறோம் ஆரலிக்குச் சம்மதம்னா மேற்கொண்டு கல்யாண ஏற்பாடு பண்ணலாம்”

பரவால்ல பேரனின் நிலைமை தெரிந்து உசாராக நூல் போட்டார்.

“நீங்க கல்யாண ஏற்பாடு பண்ணுங்க!” என அழுத்தமாகச் சொன்னவனிடம், “அந்தப் பொண்ணுக்குச் சம்மதமா கேட்டுட்டு ஏற்பாடு பண்றேன்!” என்று அவனைவிட அழுத்தமாகச் சொன்னார் நடராஜன்.

சோபாவிலிருந்து வேகமாக எழுந்த ருத்ரா, “சோ நான் சொல்றதை நீங்க கேக்க மாட்டீங்க, ரைட்?” எனக் கோபத்தில் கேட்டான்.

“அப்படி இல்ல ருத்ரா. கல்யாணம் என்பது உன்னை மட்டுமே கணக்கிலெடுத்து முடிவெடுக்கிற விஷயம் இல்லையே! உன்கூட வாழப்போறது உயிரும் உடலும் கலந்த மனுஷி. அவளுக்கு உன்னைக் கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இருக்கணும்”

நியாயமான அவர் கேள்விகளில் அவனுக்கு கோவம் வந்தது.

“ஒருவேளை ஆரலி என்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னா?”

“நிச்சயமா உங்க கல்யாணம் நடக்காது!” என அழுத்தமாகச் சொன்ன தாத்தாவைப் பார்த்து நக்கல் சிரிப்பை உதிர்த்தவன்,

“யார் தடுத்தாலும், ஏன் ஆரலிக்கு விருப்பம் இல்லைன்னாலும் என்னோட கல்யாணம் கண்டிப்பா நடக்கும். வெயிட் அண்ட் வாட்ச் தாத்தா! உங்களுக்கு அழைப்பிதழ் வரும், கல்யாணச் சாப்பாடு சாப்பிட வந்திருங்க!” என்றவன் வேகமாக வெளியே போனான்.

“ருத்ரா நில்லுப்பா! சாப்பிட்டுப் போ!” என்று சாம்பவி மகனைத் தடுத்தார்.

இன்று கொஞ்சம் நல்ல மூடில் இருப்பான் போல! “விமல் கிட்ட லஞ்ச் கொடுத்துவிடுங்க. எனக்குப் பிடிச்ச ஐட்டம் இருக்கணும்!” என்று சிரித்தபடி சொல்லிவிட்டுப் போக, சாம்பவிக்குச் சந்தோஷம் தாங்கவில்லை.

“சரிப்பா நான் கொடுத்துவிடுறேன்!” என்றவர், “அத்தை, ருத்ரா லஞ்ச் ஆபீஸுக்குக் கொடுத்துவிடச் சொல்லிருக்கான்!” எனச் சிறு குழந்தை போலத் துள்ளிக்கொண்டு சமையலறைக்குள் ஓடினார்.

நடராஜனின் முகம் யோசனையில் இருந்தது.

இவன் பண்ற கூத்து மேடையோட நிக்காம தெருவுல இறங்குதே!

“என்னங்க, ருத்ரா அவ்வளவு சொல்றானே! அந்தப் பொண்ணையே அவனுக்குக் கல்யாணம் பண்ணி வச்சிடலாம்!” என்ற அபிராமியை முறைத்த நடராஜன், 

 

“ ஒருவேளை சாப்பாடு, பழைய மாதிரி பேரன் உன் கையால கேட்டு வாங்கிச் சாப்பிடப் போறான்னு சந்தோஷத்துல தலைகால் புரியாம பேசுறியா அபிராமி? அவன் பிடிவாதமா கேக்குறது ஒரு பொண்ணோட வாழ்க்கையை!” என்றார்.

“சரபன் சொன்னதை மறந்துட்டியா? ஆரலி பொண்ணு செத்துப் போயிட்டா. ஆக்ஸிடெண்ட் நடக்குறதுக்கு முன்னாடி ருத்ராவுக்கும் அந்த தகவல் உண்மைனு தெரியும். 

உன் பேரன் இப்போ அந்தப் பொண்ணு திரும்ப வந்துட்டான்னு சொல்றது நம்புற மாதிரி இல்லை! நான் நம்பவும் மாட்டேன். மகாதேவன், பத்ரன் வரட்டும் நாங்க பேசிக்குறோம். நீ தயவுசெய்து எதிலும் தலையிடாத!”

“ஏங்க இப்படிப் பேசுறீங்க? கல்யாணம் ஆனா ருத்ரா பழையபடி மாறி நம்ம கூடச் சேர்ந்துருவான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு!” என எதிர்பார்ப்போடு சொன்னார்.

அவரின் பேரன்பு புரியாமல் இல்லை. அதற்காக ஒரு பெண்ணை இவனிடம் பலி கொடுக்க முடியுமா?

“உன் பேரனுக்கு வந்திருக்கிற பிரச்சனையை முதல்ல சரி பண்ணணும். அடுத்து நல்லபடியா கல்யாணம் பண்ணணும். அதை விட்டுட்டு உன்னோட பாரத்தைப் புதுசா வர மருமகள் மேல இறக்க, அவ என்ன சுமைதாங்கியா? ருத்ராவோட ஆக்ரோஷம் தெரிஞ்சும் அவனுக்கு ஆதரவாப் பேசுறதை நிறுத்து!”

அவ்வளவுதான். கணவரின் கோபத்தைக் கண்டு வாயை மூடிக்கொண்டார் அபிராமி.

தன் வீட்டில் இருக்கும் அலுவலக அறைக்குள் போன நடராஜன், முதலில் போன் செய்தது சரபனுக்குத்தான். அவர்களுக்கென நேர்ந்துவிட்ட கோவில் கடா அவன் இருக்கும்போது என்ன கவலை!

தன் அலுவலகத்தில் அமர்ந்திருந்த சரபன், நடராஜன் அழைத்ததும் உடனே போனை எடுத்தான்.

“தாத்தா!”

“ருத்ரா வீட்டுக்கு வந்தான் சரபா! அங்க என்னதான் நடக்குது? ஏதேதோ சொல்றானே!”

“என்ன தாத்தா சொன்னான்?”

“ஆரலி என்கிட்ட திரும்ப வந்துட்டா, எனக்குக் கல்யாணம் பண்ணிவைங்கன்னு சொல்றான்”

தன் தலையில் அடித்துக்கொண்ட சரபன், காலையில் நடந்ததை கடகடவெனச் சொல்லிவிட, பெரியவருக்கோ அதிர்ச்சி.

“என்னடா சொல்ற?”

“ஆமாம் தாத்தா. பாவம் அந்தப் பொண்ணு! எதை வச்சு நிலாவை ஆரலினு சொல்றான்னு எங்களுக்கும் புரியல. இப்போ கல்யாணம் பண்ணி வைக்கச் சொல்றான். எனக்குப் பயமா இருக்கு நீங்க கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ண ஒத்துக்கிட்டீங்களா?”

“இல்ல… அந்தப் பொண்ணைக் கூட்டிட்டு வரச் சொல்லிருக்கேன். அவ வாயால ருத்ராவைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னா கல்யாணம்னு சொன்னேன்”

“ஐயோ! அவன் உங்களை எதுவும் பண்ணிடலையே?” எனக் கொஞ்சம் பதற்றமாகக் கேட்டான் சரபன்.

இவனைத் தூக்குவது போலப் பெரியவரைத் திடீரெனத் தூக்கினால், பாடியாகிவிடுவாரே!

“நான் நல்லா இருக்கேன். என்னை ஒண்ணும் பண்ணல பட், யார் தடுத்தாலும், ஏன் அந்தப் பொண்ணுக்கு விருப்பம் இல்லைன்னாலும் இந்த கல்யாணம் நடக்கும்னு சவால் விட்டுட்டுப் போயிருக்கான்”

“இவன் மேல பத்ரன் பயங்கரக் கோபத்துல இருக்கான், தாத்தா! ஆல்ரெடி நிலாவை ஃபாரின் அனுப்பிடலாம்னு ஒரு யோசனை, இப்போ முடிவா அவளை அனுப்பி வச்சிடலாம். என்ன சொல்றீங்க?”என்று கேட்டவனுக்கு நண்பனை பற்றிய கவலை அதிகம் இருந்தது.

“நடக்குற விஷயத்தைப் பேசு சரபா! ருத்ரா பார்வையில பட்ட அடுத்த நொடியிலிருந்து அந்தப் பொண்ணு அவன் கண்காணிப்புல இருப்பா. அவனை மீறி நிலாவை நாடு கடத்துறது ஈஸி இல்ல. வெளிநாடு ஒண்ணும் போக முடியாத தூரம் இல்லையே!”

“இப்போ என்னதான் பண்றது தாத்தா? நிலா ஃபேமிலி மிடில் கிளாஸ். அவங்க பொண்ணுக்குச் சின்னப் பிரச்சனைனாலும் முழுக் குடும்பத்தையும் பாதிக்கும். 

 

ஏற்கனவே ஒருத்தி இறந்த குற்றவுணர்ச்சியில ருத்ரா பட்ட கஷ்டத்தைக் கூட இருந்து பார்த்த எனக்குத் தெரியும். மறுபடியும் அதே தப்பு நடந்திடக்கூடாது!” என்றவன் குரலில் இருந்த தீவிரத்தை நடராஜனும் உணர்ந்தார்.

“பத்ரன் வந்ததும் பேசி முடிவெடுக்குறேன் சரபா! அதுவரை நிலா வீட்டுக்கு ருத்ரா போயிடாம பார்த்துக்கோ!”

“சரிங்க, தாத்தா!” எனப் போனை வைத்தவன் எண்ணம் முழுவதும் நண்பன் மீதே இருந்தது.

நிலாஞ்சி தலையில் கைவைத்து தனது டெஸ்க்கில் அமர்ந்திருந்தாள். தொடர் தும்மலால் மூக்கு சிவந்து, தலைவலி தாங்க முடியாமல் வேதனையோடு இருக்க, ருத்ராவைப் பற்றிய பயம் வேறு நெஞ்சில் நிமிடத்துக்கு நிமிடம் பெரும் பிரளயமாக எழுந்துகொண்டிருந்தது.

தன்மேல் அவன் கண்கள் காட்டும் தீவிரம் நிலாஞ்சிக்கு ருசிக்கவில்லை. நிலாஞ்சியாக அவளை நேசித்தாலே பயங்கரமான டாக்ஸிக் காதல் என மறுத்துவிடும் அளவுக்கு ருத்ராவின் காதல் இருக்க, ஆரலி என்ற பெண் என நினைத்து தன்னை நெருங்குபவனைச் சுத்தமாக அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அவன் கழுகுப் பார்வையிலிருந்து காணாமல் போகப் பெண்ணவள் உள்ளம் ஆசை கொண்டது. அது நடக்கவே நடக்காத காரியம் என அவளுக்குத் தெரியவில்லை பாவம்! அரைநாள் விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டுக்குக் கிளம்பிவிட்டாள்.

“தை தத்த… இப்படி… கை வளைவா…” என மாணவர்களுக்கு அழகாக ஜதி பிடிக்கச் சொல்லிக்கொண்டிருந்தாள் திகள்விழி.

அடர்த்தியான இமைகளை இயற்கையிலேயே பெற்றிருந்ததால், கண்மை லேசாகத் தீட்டினாலும்கூட அழகாக அஞ்சனைகளை எடுத்துக்காட்டும். நேர்த்தியான வளைவு நெளிவுகளைக் கொண்ட பெண்ணவளின் கூந்தல் நதி போலப் பிட்டம் வரை நீண்டிருந்தது. செயற்கைப் பொலிவு சிறிதும் இல்லாமல் பார்ப்பவரின் மனம் கவர்வாள் திகள்விழி.

“ரொம்ப அழகா ஆடுற திகள்! பொண்ணு எனக்கே உன்னைப் பார்த்தா…”

“என்னைப் பார்த்தா?”

“ம்… உன்னைத் தூக்கிட்டுப் போயிடணும்னு தோணுது!” என்று அவள் தோழி கண்ணடிக்க, “ச்சீ! ச்சீ! அவளா நீ? நான் அப்படி இல்லைப்பா” என்றவளைச் சிரிப்போடு துரத்தினாள்.

“திகள்விழி!” என்ற ஆசிரியரின் குரல் கேட்கவும், “எஸ் மேம்!” என அவரிடம் ஓடினாள்.

“அடுத்து வர நாட்டியாலயா காம்படீஷன்ல நம்ம ஸ்கூல் சார்பா நீ கலந்துக்கப் போற, பிரிபேர் ஆகிக்கோ திகள். நோ எக்ஸ்க்யூஸ்!” என்றார்.

“கண்டிப்பா மேம்! நான் ஜெயிப்பேன் என்னை நம்புங்க”

அவளுக்குச் சந்தோஷம் தாங்க முடியவில்லை. இந்தப் போட்டியில் ஜெயித்தால் அவள் ஒரு நடனக் கலைஞர் என்ற அங்கீகாரம் ஊர் பார்க்கக் கிடைக்கும்! நிச்சயம் ஜெயிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தாள்.

“அக்கா அதிசயமா இருக்கு, சீக்கிரம் வீட்டுக்கு வந்துட்ட? அம்மா எங்க காணோம்?”

“அம்மா மார்க்கெட் போயிருக்காங்கடி, எனக்கு ஒரே தலைவலி திகள். அதான் ஹாப் டே லீவ் எடுத்துட்டு வந்துட்டேன். மேடம் நீங்க சீக்கிரம் வந்துட்டீங்க?” என்று கேட்ட நிலாஞ்சியைக் கண்டு சிரித்தவளோ, 

“இன்னைக்கு வெள்ளிக்கிழமை! கோவிலுக்குப் போவேன் அக்கா மறந்துட்டியா? அதோட உனக்கு ஒரு குட் நியூஸ்!” என்று புன்னகை முகமாகச் சொன்னாள்.

“என்ன குட் நீயூஸ்… சொட்டை மண்டையன் கால் உடைஞ்சு போச்சா?”

“அக்கா!”

“சரி, சரி கோபப்படாத!” என்று திகளைத் தன் அருகில் அமர்த்தினாள் நிலாஞ்சி.

“நாட்டியாலயா டான்ஸ் காம்படீஷன்ல எங்க டான்ஸ் ஸ்கூல் சார்பா நான் கலந்துக்கப் போறேன்!” என்றவளைக் கண்கள் விரியப் பார்த்த நிலா, “உண்மையாவா செல்லம்? சூப்பர்! கங்கிராஜுலேஷன்ஸ்! நீ இன்னும் பெரிய இடத்துக்குப் போகணும்” எனத் தங்கையைக் கட்டிக்கொண்டாள்.

“உனக்கு என்ன வேணும்னு சொல்லு, அக்கா வாங்கித் தரேன்”

“ஏற்கனவே நீ நிறைய வாங்கிக் கொடுத்திருக்க தேவைப்படும்போது கேக்குறேன். சண்டே எனக்குப் சிக்கன் பிரியாணி பண்ணிக்குடு அக்கா!” என்று கேட்ட தங்கையிடம், “கண்டிப்பா! பிரியாணி, சிக்கன் கிரேவி, 65-ன்னு அசத்திடுறேன்!” என்றாள் நிலா.

“ஓகே, நான் கோவிலுக்குக் கிளம்புறேன். அம்மா வந்ததும் சொல்லிடு!” என்று வேகமாகக் கோவிலுக்குக் கிளம்பி ஓடினாள் திகள்விழி.

நிலாவுக்கு அதிகம் சாமி கும்பிடுவதில் உடன்பாடில்லை, அளவாக கடவுளை வேண்டிக்கொள்வாள். திகள்விழி அப்படி இல்லை. வாராவாரம் கோவில், அடிக்கடி பூஜை எனப் பக்தியில் திளைக்கும் பெண்.

சேலையில் அழகாகக் கோவிலுக்குப் போன திகள், கடவுளை வணங்கிவிட்டு அங்கிருந்த கல் மண்டபத்தில் அமர்ந்து தான் தேடும் நபர் வருகிறாரா எனப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

மாலை ஆறரை மணியைத் தாண்டியதும் சோகமாக எழுந்தவள், வீட்டுக்குப் போகலாம் என மெதுவாக நடந்து வர, அவள் எதிர்பார்த்துக் காத்திருந்த நபர், “விழி, என்னடி அதுக்குள்ள கிளம்பிட்ட?” என்று கேட்டபடி உள்ளே வந்தார்.

இடுப்பில் கைவைத்து அவரை முறைத்த திகள்விழி, “அபி, நீ லேட்டா வந்துட்டு என்னைக் கேள்வி கேக்குறியா? உன்கூடப் பேச மாட்டேன் போ!” என முகத்தைத் திருப்பினாள்.

“ஐயோ என் தங்கப்பொண்ணே! இன்னைக்கு தாமதமாகிடுச்சு. எனக்காக நீ காத்திருப்பன்னு அவசரமா வந்தேன் கோவிச்சுக்காத!” என அவள் நாடியைப் பிடித்துக் கொஞ்சினார் அபி.

அபி என்று திகள்விழியால் செல்லமாக அழைக்கப்படும் அவர், ருத்ராவின் அருமைப் பாட்டி அபிராமி.

“சரி அடுத்த வாரம் வரும்போது எனக்குப் புளியோதரை பண்ணிக் கொண்டு வரணும். அப்போதான் முழுசா மன்னிப்பேன். பவி டார்லிங் வரலையா?” எனப் பாட்டியின் கையைப் பிடித்து உள்ளே கூட்டிக்கொண்டு போனாள்.

கோவில் வாசலில் நின்று இருவரையும் பேவெனப் பார்த்த பத்ரன் என்ற ஜீவனை இருவருமே கண்டுகொள்ளவில்லை.

“அவளுக்கு வேலை இருக்கு விழி. அதான் வரல, சாமி கும்பிட்டுட்டியா?”

“அதெல்லாம் ஆச்சு, இந்தா ஸ்வீட்!” எனப் பெட்டியை நீட்டியவள், “ஒண்ணு மட்டும்தான் எடுக்கணும். சுகர் அதிகமானா பவி திட்டும்!” என்று கண்டிப்பாகச் சொன்னாள்.

 

❤️ Loading reactions...
1 Comment

You cannot copy content of this page

error: Content copy warning!!