காதல் கணம்-11

காதல் கணம் 11

உள்ளே உள்ளதை எட்டிப் பார்க்க முடியாத அளவிற்கு உயரமாய் காம்பவுண்ட் சுவர் போடப்பட்ட அந்த வீட்டின் எல்லைக்குள், நண்பர்கள் இருவரும் ஒருசேர நுழைந்தபோது நுழைவுவாயிலில் மூன்று உயர்ரக கார்கள் நின்றிருந்தன.

ஆங்காங்கே வெள்ளை சட்டை பிரமுகர்கள் வேறு கூட்டம் கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

உள்ளே செல்லச் செல்ல முரட்டு ஜாம்பவான்கள் முகத் தோற்றத்திலும், ஆகிருதியிலுமே அவர்களை மிரட்டிப் பார்த்தார்கள்.

வீட்டிற்குள் நுழைந்த சிவனேஸ்வரனை பார்த்ததும், பேசிக்கொண்டிருந்த மூவரை கைக்கூப்பி வழியனுப்பிவிட்டு, வெளியே தனக்காக காத்திருந்த கான்ஸ்டபிளை மறந்தவராக, “வாங்க மாப்பிள்ள! மீனாட்சி, மாப்பிள்ளைக்கு பூஸ்ட் கொண்டா!” என்று தன் மனைவியிடம் உத்தரவிட்டார் விஜயாதித்தன்.

இத்தனைக்கும் அவர் வீசியையும் பார்க்கத் தான் செய்தார். ஆனால், அவனை முகமன் கேட்கத் தான் அவருக்கு மனம் வரவில்லை.

“படிப்பெல்லாம் எப்படிப்போகுது மாப்பிள்ள?”

அப்போது முதுகலை பொறியியல் முதல் வருடத்தில் இருந்தான் சிவனேஸ்வரன்.

வீசியின் வீட்டிலும் பொருளாதார நிலைமை சாதகமாக இருந்திருந்தால் சிவனேஸ்வரனுடன் தான் அவனும் படித்துக் கொண்டிருப்பான். ஆனால், சூழ்நிலை அவனை அரசு பாலிடெக்னீக் கல்லூரியில் கொண்டுபோய் தள்ளியிருந்தது.

இயந்திரப் பொறியியலில் டிப்ளமோ முடித்திருந்தான் அவன். அதிலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தான்.

விதி தன்னை இப்படியொரு இக்கட்டில் கொண்டுபோய் தள்ளுமென்று அவன் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. இப்போது விஜயாதித்தன் தன்னை புறக்கணித்தது வேறு சுருக்கென்றது.

“மாமா, வீசி என் ஃப்ரெண்ட்”

“வீசியா?”

“வருண் சக்கரவர்த்தி. ஷார்ட்டா வீசி மாமா”

ஏதோ ஹஸ்யம் கேட்டது போல் ரசித்துச் சிரித்தார் விஜயாதித்தன்.

“சரிங்க மாப்பிள்ள, அவரையும் உட்காரச் சொல்லுங்க.”

வீசியோ கர்வமாக வேண்டாமென நின்றபடியே இருந்தான்.

“மாமா, உங்க புத்தகக்கடைக்கு ஆள்வேணும்னு போர்டு மாட்டியிருந்ததை பார்த்தோம்.”

“ஆமா மாப்பிள்ள. வாஸ்தவம் தான். உங்களுக்கு அப்படி யாரையாவது தெரியுமா?” என்று அகஸ்மாத்தாகக் கேட்டார் விஜயாதித்தன்.

“ஆமா மாமா, அந்த வேலையை நீங்க வீசிக்கு கொடுக்கணும். வீசி சொல்லிக் கொடுத்தா எல்லாம் கத்துக்குவான் மாமா. அவனை நீங்க வேலைக்கு எடுத்துக்கணும்.” எனவும், அவர் கொஞ்சம் யோசித்தார்.

பின், தன் மருமகனிடம் விளையாட ஆசைப்பட்டவராக, “சரிங்க மாப்பிள்ள, உங்க ஃப்ரெண்டுக்கு நான் வேலைப்போட்டு கொடுக்கறேன். ஆனா, உங்க ஃப்ரெண்ட் நம்ம வைக்கிற பரீட்சையில பாஸ் பண்ணனுமே” என்று பீடிகைப் போட்டார்.

சிவனேஸ்வரன் சற்று முன்னே குனிந்து, “என்ன பரீட்சை மாமா?” என்று ஆர்வமாகக் கேட்டான்.

அவர், “டேய் முருகேசு!” என்று சத்தம் போட்டு அழைக்க,

“என்னங்கய்யா?” என்று வெளியிலிருந்து முரட்டு ஆசாமி ஒருவன் உள்ளே ஓடி வந்தான்.

அவனிடம், “வெளிய நிக்கிற அந்த கான்ஸ்டபிளை உள்ள வரச்சொல்லு!” என்றார்.

பின், மிடுக்காய் உள்ளே நடந்து வந்த கான்ஸ்டபிளைக் காட்டி, “இதோ நம்ம ஆளு தான் இவரு. உங்களை விட நாலு வயசு மூத்தவராயிருக்கும். ப்ரொமோஷன் கேட்டு வந்திருக்காரு. இவரோட புஜபலத்துக்கும், உங்க ஃப்ரெண்டோட புஜபலத்துக்கும் ஒரு போட்டி வச்சிப் பார்ப்போம் மாப்பிள்ள. யாரு ஜெயிக்கிறாங்களோ அவங்களுக்கு அவங்க கேட்டதை கொடுப்போம்.” எனவும்,

“மாமா” என்று தயங்கியபடியே தன் நண்பனைப் பார்த்தான் சிவனேஸ்வரன்.

வீசி தைரியமாய் சரியென்றான். அவனுக்கு வேலை சிவனேஸ்வரனின் பரிந்துரையால் கிடைத்தது என்பதைக் காட்டிலும், தன் திறமையால் கிடைத்தது என்றால் ஆத்ம திருப்தியே.

அங்கிருந்த கிரானைட் டீபாயிலேயே இருவரும் தங்கள் பலத்தை நிரூபிக்க கைகளைக் கோர்த்தார்கள்.

நினைத்ததைக் காட்டிலும் கான்ஸ்டபிள் அறிவழகனுக்கு வீசியின் கையை சமாளிப்பது சவாலாகவே இருந்தது.

“சபாஷ்! சரியான போட்டி” என்று இருவருக்கும் நடுவிலிருந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார் விஜயாதித்தன்.

பத்து நிமிடங்களுக்கு மேலாகவே இருவரும் போராடிக் கொண்டிருந்தார்கள். வீசிக்கு காதோரத்தில் வியர்த்து வழிந்தது.

கான்ஸ்டபிள் அறிவழகனுக்கோ ஒரு சிறுவனிடம் தான் தோற்றோம் என்று சொல்லிக்கொள்ள  விருப்பமில்லை என்பதால், தன் வலுவைத் திரட்டி முயன்றுக் கொண்டிருந்தார்.

வீசிக்கும் விட்டுக் கொடுக்க மனமில்லை போல், தன்னம்பிக்கையுடன் போராடினான். அவன் முகம் ஒரு கணம் கூட சோர்ந்து போகவில்லை.

கான்ஸ்டபிளுக்கு அவன் தன்னைப் பார்த்து பயப்படவில்லை என்பதே ஆச்சரியமாக இருந்தது.

மீண்டும் மீண்டும் போக்குக்காட்டி கரங்கள் இரண்டும் சமநிலையில் வர, விஜயாதித்தனுக்கு ஏமாற்றமாக இருந்தது.

திடீரென கான்ஸ்டபிளின் மேல் ஏதோ வந்து விழுந்ததில் அவர் கவனத்தை திசை திருப்ப, கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை வீழ்த்தியிருந்தான் வீசி.

சிவனேஸ்வரனோ தன் நண்பனை சந்தோஷத்தில் கட்டித் தழுவிக்கொண்டு குதித்தான்.

விஜயாதித்தன் தன் தொண்டையை செருமிக் கொண்டவராக, “சின்னப்பையன் கிட்டப்போய் தோத்துட்டியேய்யா” என்று கான்ஸ்டபிளை உஷ்ணப்படுத்த, கான்ஸ்டபிள் அறிவழகனோ வீசியை முறைத்தபடியே வெளியேறினார்.

அங்கங்கு ஓரமாய் நின்று இதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த விஜயாதித்தனின் அடியாட்களுக்கெல்லாம் வீசியைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது.

“ம், உங்க ஃப்ரெண்டு பலசாலி தான் மாப்பிள்ள. நாளைக்கே வேலையில வந்து சேரச் சொல்லுங்க. இப்படி ஆள் தான் எனக்கும் வேணும்.” என்ற விஜயாதித்தன், தன் ஆள் ஒருவனை அழைத்து,

“விஷயத்தை முடிச்சிடு” என்றார்.

மாஃபியா குழுக்கள் போல் அடியாட்கள் வைத்து நிர்வாகம் செய்கிறவரிடம், ‘முடிச்சிடு, போட்டுத் தள்ளிடு, தூக்கிடு’ எனும் பிரயோகங்கள் தானே சரளமாக வரும்?

சிவனேஸ்வரன், “தான்க்ஸ் மாமா” என்றுவிட்டு தன் காலருகில் உருண்டு வந்த அழிப்பியை கையிலெடுத்து ஆராய்ந்தான்.

‘இந்த இரேஸர் மட்டும் கீழ விழுந்து கான்ஸ்டபிளோட கவனத்தை திசை திருப்பியிருக்கலைன்னா வீசி ஜெயிச்சிருக்கிறது கஷ்டம் தான்’ என்று எண்ணிக்கொண்டே மேலே அன்னார்ந்துப் பார்த்தான்.

வீசியும் களைப்பாக தன் வியர்வையை சுண்டி எறிந்துகொண்டே அவனைத் தொடர்ந்து மேலே நிமிர்ந்துப் பார்த்தான்.

சிவனேஸ்வரனுக்கு கையசைத்து ‘ஹாய்’ சொன்ன அந்தப் பெண், வீசி தலையை உயர்த்தவுமே கையிலிருந்த புத்தகத்தால் தன் முகத்தை மூடி உள்ளே ஓடிவிட்டாள்.

‘இவ்ளோ நேரமும் ஒருப்பொண்ணு என்னை பார்த்துக்கிட்டு இருந்தாளா?’ -இவ்வெண்ணம் எழுந்ததுமே கலவரமானான் வீசி.

ஆனால், அப்போது தான் சிவனேஸ்வரனின் பிரத்யேக அலங்காரத்திற்கும் அவனுக்கு விடை கிடைத்தது.

“கமலா, மாப்பிள்ளைக்கு ஒரு பூஸ்ட் கொண்டா” என்று விஜயாதித்தன் கூக்குரலிட்டதுமே, வந்திருப்பது தன் ஷிவா அத்தான் தான் என்று அனுமானித்துக்கொண்டு, தன்னறையிலிருந்து ஓடி வந்து எட்டிப் பார்த்த ஷ்ரதாஞ்சலிக்கு, அங்கு வீசியைக் கண்டதுமே நாடி நரம்பெல்லாம் மின்சாரம் பாய்ந்தது.

உள்ளுக்குள் ஹார்மோன் நதியும் வஞ்சமில்லாமல் ஊற்றெடுத்தது.

கீழே அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்றே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு ஏதோ ஊமை நாடகம் பார்ப்பது போலவே சகலமும் தெரிந்தது.

திடீரென வீசியும், காவலதிகாரி ஒருவரும் தன் பலத்தை நிரூபிக்க போராடுவதைப் பார்த்து, தன் மனதிற்கினியவனை ஜெயிக்க வைக்கும் பொருட்டு, உள்ளே தேடுதல் வேட்டையில் இறங்கி, கையில் சிக்கிய அழிப்பியை எடுத்து வந்து, சரியாய் குறிப்பார்த்து எறிந்தாள்.

தன் திட்டப்படி அவன் ஜெயித்ததும் ஆவலோடு அவனைப் பார்த்துக் கொண்டிருந்தவள், அவன் தன்னை பார்க்கிறான் என்று தெரிந்ததுமே வெட்கத்தில் உள்ளே ஓடிவிட்டாள்.

விஜயாதித்தன், “சரிங்க மாப்பிள்ள, நீங்க இருந்து சாப்பிட்டுட்டு போங்க. நான் முக்கியமான வேலை ஒண்ணு வந்திருக்கு; போய் முடிச்சிட்டு வந்திடுறேன்” என்று கிளம்பியதும்,

“டேய் வீசி! நீ வெளிய நியூடீலக்ஸ் தியேட்டர் கிட்ட வெயிட் பண்ணு. நான் ஒரு பத்து நிமிஷத்துல வந்துடுறேன்” என்றபடியே பக்கத்தில் மாடிப்படியேறினான் சிவனேஸ்வரன்.

வீசியும் சந்தேகத்துடனே சரியென்று வெளியேறினான்.

அவன் அகன்றதுமே வெக்வெக்கென்று மாடிப்படியேறி நேரே ஷ்ரதாவின் அறைக்கு முன்பு வந்து நின்றவன், அவள் ஜன்னலில் ஏறி உட்கார்ந்திருப்பதைக் கண்டு கதவை டொக்டொக்கென்று தட்டினான்.

ஜன்னல் கம்பியில் முகம் புதைத்து சற்று முன்பு நடந்ததையே நினைத்து நினைத்து தன்னால் சிரித்துக் கொண்டிருந்தவள், கதவு தட்டப்படும் சத்தத்தில் திரும்பிப் பார்த்தாள்.

அங்கு சிவனேஸ்வரனைக் கண்டதும் துள்ளிக் குதித்து ஓடிவந்து அவன் கையைப் பற்றிக்கொண்டாள்.

“ஷ்ரதா, உன் முகம் இன்னைக்கு ரொம்ப டாலடிக்குதே.” என்று உண்மையை கேலித்தொனியில் கூறியவனுக்கு,

“அது உங்களைப் பார்த்த சந்தோசம் தான்.” என்று சமயோஜிதமாய் பதில் கூறினாள் ஷ்ரதா.

“உண்மையாவா?”

“சத்தியம் பண்ணினா தான் நம்புவீங்களா?”

அவன் அங்கிருந்த சாய்வு நாற்காலியில் உட்கார்ந்தபடியே மறுத்தான். “இல்ல, இல்ல. ஆமா எங்க உங்க மதுபாலா அண்ணியை காணோம்?”

“அண்ணாவும், அண்ணியும் யாரோ தூரத்து சொந்தக்காரங்க மேரேஜ்க்குப் போயிருக்காங்க. சரி சொல்லுங்க. நீங்க என்ன வேலையா இன்னைக்கு இங்க வந்தீங்க?”

“அது மாமாக்கிட்ட சொல்லி என் ஃப்ரெண்ட் ஒருத்தனுக்கு வேலை வாங்கிக் கொடுக்கலாம்னு வந்தேன்.”

“ஃப்ரெண்டா? அது யாரு?”

தெரிந்தும் தெரியாதது போல் பாவனை அவளிடம்.

அவன் நாற்காலியில் ஆடியபடியே, “நீ பார்க்கலையா? இரேஸர் எல்லாம் எறிஞ்சு அவனை ஜெயிக்க வச்ச?” என்று தன் கையிலிருந்த அழிப்பியை அவளிடம் நீட்டினான்.

அவள் அதனை வாங்கிக்கொண்டு நைசாக அவன் நாற்காலிக்கு பின்னால் வந்து நின்று அவன் உச்சந்தலையில் நாடி புதைத்தபடியே ரகசியம் பேசினாள். “அது நான் உங்க மேல இல்ல எறிஞ்சேன். தவறி அந்த போலீஸ் மேல பட்டுடுச்சி.” என்று பொய் கூறினாள்.

கண நேரத்தில் தான் இமயமலையில் இருப்பது போலுணர்ந்த சிவனேஸ்வரன், ‘எனக்கு ஏத்துன லவ் இன்ஜக்சன கடவுள் உனக்கும் ஏத்திட்டாரா ஷ்ரதா?’ என்று சிலிர்ப்புற்றான்.

“ஷ்ரதா, இன்னைக்கு என் கூட வந்தது யார் தெரியுமா?”

“யாரு அத்தான்?”

“எல்லாம் உனக்கு தெரிஞ்ச ஆண்மகன் தான்.” என்று பீடிகை போட்டான்.

“ம்ம்…. சொல்லுங்கத்தான்” என்று ஏகபோகமாய் சிணுங்கினாள்.

“உங்க அண்ணியோட தம்பி வருண் சக்கரவர்த்தி இருக்கான்ல? அவன் தான் என் ஃப்ரெண்ட் ஷ்ரதா.”

“ஓஹோ! முகத்தை சைடா பார்க்கும்போது எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு நினைச்சேன் அத்தான்.”

“ஷ்ரதா, அத்தான் உனக்கு ஒண்ணு கொண்டு வந்திருக்கேன். எங்க அது என்னன்னு சரியா சொல்லு பார்க்கலாம்?”

முன்னே வந்து நின்றவள் சாய்வு நாற்காலியின் கைகளைப் பிடித்துக்கொண்டு, “தெரியல அத்தான். நீங்களே சொல்லுங்க” என்று அவன் முகத்திற்கு நேராக குனிந்தாள்.

அவள் வாசனையின் அடர்த்தியில் அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை. தன் முகத்தை முயன்று பின்னோக்கி இழுத்தான். அந்நிலை இன்னும் அபாயகரமாக இருந்தது.

உள்ளுக்குள் எதிரிக்கும் இந்நிலை வரக்கூடாது என்று நினைத்துக்கொண்டான்.

அவன் கையிலிருந்த பிரவுன் அட்டைப் போட்ட நோட்டைப் பார்த்தவள் முகத்தில் சோககீதம் வாசித்து, “போங்கத்தான், முந்தாநாள் நான் போட்டுக் கொடுக்க சொன்ன கணக்கை போட்டுட்டு வந்திருப்பீங்க. அதைத் தானே இப்படி சஸ்பென்ஸ் எல்லாம் வச்சி பெருசா பில்டப் பண்ணிக்கிட்டு இருக்கீங்க?” என்று கேட்டபடியே கட்டிலில் போய் அமர்ந்தாள்.

அதுவும் ஒருக்காலை மடக்கியும், ஒருக்காலை தொங்கவிட்டும் அம்பாள் போல் அமர்ந்திருந்தாள். ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்த அவள் வலது பாதத்தைப் பிடித்து முத்தமிட வேண்டும் போல் அவனுக்குள் ஒரு உந்துதல் உண்டானது.

ஆசையை அடக்கிக்கொண்டவன், ‘இப்போ வேணாம். அவ சின்னப்பொண்ணு. பயந்திடுவா’ என்று தனக்குத்தானே புத்திமதி சொல்லிக்கொண்டான்.

“இது இல்ல, வேற ஒண்ணு கொண்டு வந்திருக்கேன். சொல்லு பார்க்கலாம்?” என்றவனுக்கு,

“ம்? தெரியலையே. நீங்களே சொல்லுங்கத்தான்” என்று சலிப்பாக பதில் வந்தது அவளிடம்.

ஷ்ரதாஞ்சலி அப்போது பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் பாவை. அவள் பயந்து விட்டால் என்ன செய்வது என்பதை காட்டிலும், தன்னை அவள் தவறாக எண்ணிவிட்டால் என்ன செய்வது என்பது தான் பெரிய பிரச்சனையாக இருந்தது அவனுக்கு.

அவன் மெதுவாய் அவளருகில் அமர்ந்து, “உனக்கு என்னை பிடிக்குமா ஷ்ரதா?” என்றான்.

அவளோ விழிகளை மட்டுமே உயர்த்தி, “ஓ! பிடிக்குமே” என்றாள்.

அவன் அதில் தைரியம் பெற்று, “ஷ்ரதா, நான் இப்போ உன்கிட்ட ஒண்ணு குடுப்பேன். நீ அதை படிச்சிட்டு உடனே பதில் சொல்லணும்னு அவசியம் இல்ல.” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே தன் கையிலிருந்த நோட்டை திறந்துப் பார்த்து அதிர்ந்தான்.

மிகப்பெரும் அசம்பாவிதம் நிகழ்ந்திருந்தது. அவன் எடுத்து வந்த காதல் கடிதத்தை தற்போது காணவில்லை.

“கடவுளே! உள்ள தானே வச்சேன்?” என்று ரத்த அழுத்தம் எகிறி அங்கேயே  குனிந்து சுற்றும் முற்றும் தேடிக்கொண்டிருந்தான்.

காதல் கணம் கூடும்… 

❤️ Loading reactions...
2 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!