காதல் கணம் -12

காதல் கணம் 12

ஷ்ரதாவோ அவனது அவஸ்தை புரியாமல், “என்னது அத்தான்? என்ன நான் பதில் சொல்லணும்? படிச்சிப் பார்க்கணும்? ஃபர்ஸ்ட் நான் போட்டுக் கொடுக்க சொன்ன கணக்கை எல்லாம் போட்டுட்டீங்களா? நோட்டைக் குடுங்க” என்று அவன் கையிலிருந்ததை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டாள்.

சிவனேஸ்வரனின் கண்களோ அலை பாய்ந்தன. கடிதம் எங்கே தவறியிருக்கும்? என்ற பயம் அவன் குரல்வளையை கவ்விப் பிடிக்க, குழப்பத்துடனேயே அவளிடமிருந்து விடைபெற்றான்.

அவனுக்காக நியூடீலக்ஸ் தியேட்டர் அருகே காத்திருந்த வீசி, அவனின் சோர்ந்த முகத்தைப் பார்த்து, “டேய்! என்னாச்சு? ஏன் இப்படி எதையோ பறிகொடுத்தவன் மாதிரி இருக்க?” என்று வினவ,

“இல்ல மச்சி” என்றபடியே இன்னும் சிந்தனா உலகிலேயே சிக்கிக் கிடந்தான் சிவனேஸ்வரன்.

வீசி அவனிடம் ஆழம் பார்ப்பவனாக விளையாடினான்.

“எதையாவது தொலைச்சிட்டியா சிவா? எதையாவதுன்னா? லவ் லெட்டரை. லவ் லெட்டரைன்னா? என்னுயிர் ஷ்ரதாஞ்சலிக்குன்னு ஆரம்பிக்குமே அப்படி.” என்று சொல்லவுமே,

போன உயிர் போனவாக்கிலேயே எக்ஸ்பிரஸ் பிடித்து திரும்பியதை உணர்ந்த சிவனேஸ்வரன், “திருட்டு படவா! நீ தான் எடுத்து வச்சிருக்கியா? குடுடா” என்று  அவன் சட்டைக் காலரைப் பற்றினான்.

அவன் கையை எடுத்துவிட்ட வீசி, தன் சட்டையின் உள்பாக்கெட்டிற்குள்ளிருந்து ஒரு காகிதத்தை எடுத்து நீட்டினான்.

சிவனேஸ்வரன் படக்கென்று வாங்கி தன் பேண்ட் பாக்கெட்டிற்குள் பத்திரப்படுத்திக்கொள்ள, “என்னடா லவ்வா?” என்ற வீசி, “நீ பண்றது தப்பு சிவா. படிக்கிற பொண்ணு மனசுல இது மாதிரி சபலத்தை உண்டு பண்றது ரொம்பத் தப்பு. உங்க ரெண்டு பேரோட ஃப்யூச்சருக்குமே இது நல்லதில்ல.” என்று அறிவுரை வழங்கினான்.

மறுபடியும் அவன் முன் தான் தோற்றுவிட்டது போலவே தோன்ற, “நீ என்ன தான்டா சொல்ல வர்ற வீசி?” என்று அவன் மேல் எரிந்து விழுந்தான்.

“இப்போதைக்கு அவளை டிஸ்டர்ப் பண்ணாதன்னு சொல்றேன்.” என்று முடிந்தளவு அவனுக்கு அறிவுரை கூறிய வீசி, பின், ‘உன் இஷ்டம்’ என்றுவிட்டான்.

அவனின் இந்த அறிவுரையில் அவன் கண்முன்னமே அந்தக் கடிதத்தை சுக்குநூறாக கிழித்துப் போட்ட சிவனேஸ்வரன், பிற்காலத்தில் அச்செயலே தான் தன் வாழ்நாளில் செய்த மிகப்பெரிய தவறு என்று புலம்பினான்.

வெற்றிகரமாக வீசி புத்தகக்கடையில் வேலைக்குச் சேர்ந்த மூன்றாம்நாள், அவனைத் தேடி கடைக்கு வந்த சிவனேஸ்வரன், “வீசி, ஒரு ஹெல்ப்டா” என்று அவசரக்கதியில் கூறினான்.

“ஹெல்ப்பா? சொல்லுடா என்ன புக் கண்டுபிடிச்சு கொடுக்கணும். ஃப்ளூயிட் மெக்கானிக்சா? தெர்மோ டைனமிக்ஸா?” என்று ஆர்வமாக விசாரித்தான் வீசி.

“டேய்! அதெல்லாம் இல்லடா. இது வேற ஹெல்ப்.”

“வேற ஹெல்ப்னா?”

“இவ்வளவு நாள் நான் என் மாமா பொண்ணுக்கு மேத்ஸ் டியூசன் எடுத்துட்டு இருந்தேன் இல்ல?”

“ஆமா சொன்னியே. ஒரே தடுமாற்றமா இருக்குன்னு”

“உஷ்! இப்போ அவளுக்கும், எனக்கும் கஷ்டகாலம்டா. ஒரே டைம்ல எங்க ரெண்டு பேருக்கும் எக்ஸாம் வந்திட்டதால எனக்கு இப்போ அவளுக்கு சொல்லிக் கொடுக்க முடியாத நிலைமை. நான் மட்டும் இப்போ போகலைன்னு வை; மாமா வெளிலயிருந்து அவளுக்கு டியூசன் மாஸ்டர் ரெடி பண்ணிருவாருடா. டேய் டேய் நீ தான் இதுல இப்போ எனக்கு ஹெல்ப் பண்ணனும்டா” என்று பரிதாபமாகக் கேட்டான்.

வீசியோ, “நான் என்ன பண்ண முடியும்?” என்று தோள்களை குலுக்கினான்.

‘புரியலை?’ என்பது போல் பார்த்தான் சிவனேஸ்வரன்.

வீசி மூளையில் மின்னல் வெட்டிய அடுத்தநொடி, “டேய்! இந்த புக் ஸ்டாலை விட்டு என்னால வேற எங்கயும் நகர முடியாதுன்னு உனக்கு தெரியுமில்ல? அப்புறமென்ன இப்படி கேட்கற?” என்றான்.

“ம், தெரியும். அதுக்குத் தான் அவளை இங்க வர சொல்லலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்.”

“அதெல்லாம் சரிபட்டு வராதுடா. நீ வேற ஆளைப் பார்த்துக்கோ.”

“டேய்! உன்னை விட்டா எனக்கு வேற யாரு இருக்கா? வெறும் ரெண்டு வாரத்துக்கு மட்டும் தான்டா.”

புத்தகத்தை வகை பார்த்து அங்குமிங்குமாக அடுக்கி வைத்துக் கொண்டிருந்தபடியே அலுத்துக் கொண்டான் வீசி. “உன்னோட ஒரே ரோதனையா போச்சுடா.” என்று.

“உனக்கு இந்த வேலையை வாங்கிக் கொடுத்ததே நான் தான்டா. பழசெல்லாம் கொஞ்சம் ஞாபகம் வச்சிக்கோ.”

“டேய்! நான் பாடப் புத்தகத்தை தொட்டே மூணு வருஷம் ஆகுதுடா. எல்லாம் டச்சு விட்டுப்போச்சு.”

“அதெல்லாம் ஒன் டைம் பார்த்தா ஞாபகம் வந்திடும்” எனவும், கொஞ்சம் யோசித்தவன், எதிரிலிருந்தவனின் அனத்தலில் சரியென்றான்.

அப்போது மனநிறைவாக உணர்ந்த சிவனேஸ்வரன், இந்த உலகிலேயே சிறந்த உத்தமனாக வீசியை மட்டும் தான் நினைத்தான். வீசி நிச்சயமாக ஷ்ரதாவிடம் கல்மிஷப் பார்வையோ, கேலிப்பேச்சோ வைத்துக்கொள்ள மாட்டான் என்று நம்பினான்.

அந்நியப் பெண்கள் என்றாலே வீசிக்கு கூச்சம் என்று தெரியும். ஆனாலும், வீசி பார்ப்பதற்கு கொஞ்சம் அழகானவன் என்பதால் லேசாகப் பயந்தான். முடிவாக, ‘நண்பனின் காதலியை கைப்பற்றும் அளவிற்கு வீசி வஞ்சகன் அல்ல’ எனும் நம்பிக்கையே அவனுக்கு பெரும் ஆறுதலை தந்தது.

மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு சென்றவன், ஷ்ரதாவை சந்தித்த நாளில் அடுத்தக்கணமே அவ்விஷயத்தை பற்றி தெரிவித்தான்.

அவளோ, “வேண்டாம் அத்தான்” என்று மறுதலித்தாள்.

அவன் எப்படியோ அரும்பாடுபட்டு கெஞ்சி அவளை சம்மதிக்க வைக்க, ஷ்ரதா இதைவிட ஒரு அவஸ்தையை தான் தன் வாழ்நாளிலேயே சந்திக்க முடியாது என்று எண்ணிக் கொண்டாள். ஆனால், தலையெழுத்துபடி அவள் வீசியை நேரில் சென்று சந்திக்கும்படி தான் ஆனது.

சம்பவம் அன்று மாலையில் ஷ்ரதா தன் சீருடையை களைந்துவிட்டு, புதிதாக எடுத்திருந்த பிஸ்தா பச்சை குர்த்தியையும், பழுப்பு பச்சை  பட்டியாலாவையும் அணிந்து கொண்டாள். கிளம்பும் அவசரத்தில் அவள் வலப்புற தோளில் ஒழுங்கின்றி தொங்கிக் கொண்டிருந்த பழுப்பு பச்சை துப்பட்டாவை கழுத்தைச் சுற்றிப் போட்டுக்கொண்டாள். அதிக மெனக்கெட்டு கண்ணில் இரண்டுமுறை காஜலைத் தீட்டினாள். உதட்டிலும் லிப்கிளாஸ் மின்னின. பிறகு, கண்ணாடியில் பார்க்க தன் அலங்காரம் திருப்தியாக இருக்கவும், கீழே இறங்கி வந்தாள்.

இவ்வளவு நாளில் இல்லாமல் இன்று அவள் அதிக சிரத்தையெடுத்து கிளம்பியிருந்தது அவளை உற்றுப் பார்க்க வைத்தது அவளது உற்றத் தோழியை. காரணம் கேட்டதற்கு அது இதுவென்று மழுப்பிவிட்டாள் ஷ்ரதா.

புத்தகக்கடையை நெருங்க நெருங்க, அவள் நடையானது அன்னநடையானது.

அவள் அகப்போராட்டம் புரியாமல், “வேகமா வா ஷ்ரதா” என்று துரிதப்படுத்தினாள் அவளின் நெருங்கிய தோழி தாரிணி.

இருவரும் சரியாக ஆறுமணிக்கு, ‘ஷ்ரதாஞ்சலி புக் ஸ்டால்’ என்று பெரிதாக பெயர்ப்பலகை மாட்டப்பட்டிருந்த அந்த கடைக்குள் நுழைந்தபோது தாரிணியை  மட்டும்  பார்த்துவிட்டு, “என்ன புக் வேணும்?” என்று எழுந்து நின்றான் வீசி.

வாடிக்கையாளர்கள் என்று நினைத்துக் கொண்டான் போலும்.

சுவாசவோட்டம் அதிகமாகிய ஷ்ரதாவிற்கு, உடலின் உஷ்ணம் கூடி காய்ச்சல் வரும் போல் இருந்தது.

தாரிணி துடுக்காக, “சார், நாங்க டியூசனுக்கு வந்திருக்கோம்” என்றாள்.

அப்போது தான் ஷ்ரதாவையும் பார்த்தவன் ஞாபகம் வந்தவன் போல், “ஆமா, ஆமா, சிவனேஸ்வரன் சொன்னான், வாங்க!” என்று உள்ளே அழைத்துச் சென்று, புத்தகம் வாசிக்க போடப்பட்டிருந்த வட்டமேசை நாற்காலிகளைக் காட்டி, இருவரையும் அமரச் சொன்னான்.

எதிர் சுவரில், ‘ஆயிரமாயிரம் கருத்துகள் உள்ளிருப்பினும், மூடிக்கொண்டு அமைதியாய் தான் இருக்கின்றன புத்தகங்கள்’ என்று அழகழகாய் வாசகங்கள் ஒட்டப்பட்டிருந்தன. அவற்றை வாசித்துவிட்டு நாசுக்காக சிரித்துக்கொண்டாள் ஷ்ரதா.

“ம், சிவா சொன்னான்; மேத்ஸ்ல தான் நீங்க வீக்குன்னு. எக்ஸாம் எப்போ ஸ்டார்ட் ஆகுது?”

“கம்மிங் மண்டே சார்.”

“ஓ! ஒரு வாரம் இருக்கா? சிவாவுக்கு தான் இன்னைக்கு இன்டெர்னல் எக்ஸாம் இல்ல?”

“ம்.”

“சொல்லுங்க? இன்னைக்கு என்ன ஹோம்வொர்க்?” என்று கேட்டவன் அதற்கும் தாரிணியே பதிலளித்து தன் புத்தகத்தை நீட்டவும், எடுத்துக்காட்டு கணக்குகளை வைத்தே பயிற்சி கணக்குகள் முழுவதையும் போட்டு முடித்தான்.

அவனின் இந்த அசகாய செயலில் ஷ்ரதாவும், தாரிணியும் கண்சிமிட்டும் சிலைகளாகினர்.

இந்தியக் குழந்தைகளைப் பொறுத்தவரை பயிற்சி கணக்குகள் என்பது அநியாயத்தின் கருப்பை. ஐம்பதையும், ஐம்பதையும் கூட்டினால் எவ்வளவு என்பது எடுத்துக்காட்டு கணக்காக இருந்தால், நிச்சயம் ஆயிரத்து நூத்து பனிரெண்டையும் தொள்ளாயிரத்து பதினைந்தையும் கூட்டி, ஏழால் கழித்து, முப்பத்து மூன்றால் பெருக்கினால் எவ்வளவு என்பதே பயிற்சி கணக்காக இருக்கும். எனவே, அவர்களின் அதிர்ச்சிக்கு காரணமில்லாமல் இல்லை.

ஆனால், ஷ்ரதா தான் கூடுதலாய் மலைத்துப் போயிருந்தாள். பனிரெண்டு பூத கணக்குகளை இருபத்தைந்து நிமிடத்தில் போட்டு முடித்துவிட்டவனின் அசாத்தியத்திறமை இரும்பில் ஏறிய துருவாய் இன்னும் அவள் மனதைப்போட்டு அரிக்கவாரம்பித்தது. தான் பிறப்பெடுத்ததே வீண் என்று எண்ணுமளவிற்கு வந்துவிட்டாள்.

‘முருகா! என்னவொரு மோசடி இது. ப்ளீஸ் எப்படியாவது அவரோட இந்தத் திறமையை மறக்க வச்சிரு. வர்ற தைப்பூசத்துக்கு பால்குடம் தூக்குறேன்’ என்று தீவிரமாய் திருப்பரங்குன்றம் முருகனுக்கு வேண்டுதல் ஒன்றை வைத்தாள்.

“என்ன பார்க்கற? புரிஞ்சதா?” -அவன் தன்னிடம் பேசிய முதல் வார்த்தை பரவசப்படுத்துவதற்கு பதில் பதைபதைக்க வைத்தது.

“ஆங்? புரிஞ்சது. புரிஞ்சது.” என்று இருமுறை தலையாட்டினாள், புரியாமலேயே.

பின், அவன் அடுத்தடுத்த கணக்குகளை பொறுமையாக சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்க, ஷ்ரதா இம்முறை ரிஸ்க் எடுக்க தயாராக இல்லை. ரொம்பவே சிரமப்பட்டு மனதை ஒருநிலைப்படுத்தி கணக்கில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள்.

நிமிட முள் அரைவட்டம் போட்டு முழுதாக முப்பது நிமிடங்களை கடந்தபோது, அவனும் இரண்டு முறை “குட்” சொல்லியிருந்தான் அவளுக்கு.

அவ்வேளை பக்கத்து தேநீர் கடையிலிருந்து அவன் எப்போதும் தேநீர் அருந்தும் நேரத்திற்கு தேநீர் தம்ளர் ஒன்றை எடுத்து வந்திருந்தார் நாகூர் அண்ணா.

நடையில் அவசரம் காட்டியவரை நிற்பாட்டி, “உங்களுக்கு குடிக்க என்ன வேணும்?” என்று தன் மாணவிகளிடம் திரும்பினான் வீசி.

ஷ்ரதா, “எதுவும் வேண்டாம்” என்று குனிந்தபடியே மறுப்பாக தலையாட்ட,

தாரிணியோ பசியில், “பால் சார்” என்றாள்.

ஷ்ரதா அவளின் தொடையை நிமிண்டியதைப் பார்த்துவிட்ட வீசி நாகூர் அண்ணாவிடம், “ரெண்டு பால்” என்று சொல்ல,

தாரிணி, “இவளுக்கு பால் பிடிக்காது. பூஸ்ட் கொண்டு வாங்க.” என்று உரக்கச் சொல்லி, அதற்கும் ஷ்ரதாவிடம் வாங்கிக்கட்டி கொண்டாள்.

ஷ்ரதா தன்னிடம் முகம் கொடுத்துப் பேசாததற்கும், தாரிணியின் தொடையை நிமிண்டியதற்கும் அவளின் பணத்திமிரே காரணம் என்று முடிவு கட்டினான் வீசி.

அவன் யோசனைக்கேற்ப அடுத்த கால்மணி நேரமும், “சார் இது என்ன சொல்லுங்க? சார் அது எப்படி வரும்?” என்று தாரிணி தான் மாற்றி மாற்றி கேள்விகேட்டுக் கொண்டிருந்தாளே தவிர, ஷ்ரதா வாயையே திறக்கவில்லை.

அவன் இடையிடையே கேள்வி கேட்டபோது கூட, “ஹான்?.. ஹூம்.. இல்ல.. ம்” என்றே பதிலளித்தாள்.

அவனுக்குள் ‘இவளது சுபாவமே இப்படி தானா? இல்ல அகம்பாவமா?’ என்ற கேள்வி எழுந்த வண்ணமிருந்தது.

முழுதாக ஒன்றரை மணி நேரம் கடந்ததும், “போயிட்டு வர்றோம் சார்” என்று இருவருமே எழுந்து நின்றனர்.

“ம்” என்று தலையை ஆட்டியவன், ஷ்ரதா தன் செருப்பின் வாரை மாட்டிக்கொண்டிருந்த போது,

“அக்கா எப்படி இருக்காங்க?” என்று நலம் விசாரித்தான்.

திருமணமாகி இரண்டு வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த மதுபாலா அப்போது தான் கருத்தரித்திருந்தாள். ‘மதுபாலாவை எங்க வீட்டுக்கு ஒரு வாரம் கூட்டிட்டு போறோம்’ என்று அபிராமி கேட்டபோதுக் கூட அருண்மொழியும், விஜயாதித்தனும் மறுத்து விட்டார்கள். அந்தக் கோபம் அவனுக்குள் இன்னும் கனன்றுகொண்டு தான் இருந்தது.

அவனிடம், “ம், நல்லா இருக்காங்க.” என்று சொல்லிவிட்டு உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடியேவிட்டாள் ஷ்ரதா. 
 

காதல் கணம் கூடும்…

❤️ Loading reactions...
1 Comment

You cannot copy content of this page

error: Content copy warning!!