காதல் கணம்-13

காதல் கணம் 13

ஷ்ரதா புத்தகக்கடைக்கு வரத் தொடங்கி இரண்டுநாள் கடந்த நிலையில், மதியநேரம் தான் மட்டும் கடையில் தனித்து உட்கார்ந்திருந்தான் வீசி.

அப்போது ‘க்ரீச்’ சப்தத்துடன் வந்து நின்ற ஒரு சுமோவிலிருந்து திமுதிமுவென்று அடியாட்கள் நால்வர் இறங்கினார்கள்.

அவர்களைக் கண்டதும் அவர்களின் ஆகிருதியிலேயே அவர்களுக்கும், இவ்விடத்துக்கும் துளிகூட சம்பந்தம் இல்லையென்று புரிந்துகொண்ட வீசி, கல்லாவிலிருந்து எழுந்து நின்றான்.

வந்தவர்கள் அவன் கையில் ஒரு நூறு ரூபாய் தாளைத் திணித்து, அந்த மாகாளிப்பட்டி சாலையின் மூலையில் உள்ள பனைமரத்து பிரியாணி கடையில் சென்று, பிரியாணி சாப்பிட்டு வரச்சொன்னார்கள்.

அவனுக்கு அவர்களின் திட்டம் எதுவும் புரியவில்லை எனினும், ஏதோ தவறு நடப்பது மட்டும் புரிந்தது. கோபத்தில் கையிலிருந்த ரூபாய் தாளைக் கசக்கினான்.

வந்திருந்தவர்களில் ஒருவன் அவனைப் பார்த்து முறைக்க, வீசி அவனது காலைப் பார்த்தான். வீசியின் உள்ளக்கொதிப்பிற்கு தூபம் போடும் விதமாய் அந்த முறைமுகத்தான் செருப்பு காலுடன் உள்ளே வந்திருந்தான்.

மேலும், இன்னொருவன் மூன்றரையடி உயரத்தில் இருந்த புத்தக அடுக்கின் மீது ஏறி உட்கார்ந்து,  புத்தகத்தை விரலில் வைத்து சுழற்றினான். வீசியால் அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை.

“புக்ஸை தொடாதீங்க” என்று கிட்டத்தட்ட கட்டளையிடும் குரலில் கத்தினான்.

புத்தக அடுக்கிலிருந்து குதித்திறங்கி வந்தவன், “என்னடா எங்கக்கிட்டயே சத்தத்தை கூட்டுற?” என்று கடுவாக்குரலில் கேட்க, வீசி அசையாமல் அவனையே முறைத்தபடி நின்றிருந்தான்.

தன் சகாக்களிடம், “டேய்! பாருங்கடா இவனை. முறைக்கிறான்.” என்று நக்கலடித்தவன், “அய்யோ! பயமாயிருக்குப்பா.” என்று கேலி செய்துகொண்டே அவனருகில் வந்தான்.

“இது விஜியண்ணாவோட கடைடா. நீ இங்க வேலைப் பார்க்கற கூலி. நீயே முதலாளி கிடையாது. நாங்க சொன்னதை செய்டா வெண்ண!” என்று அவன் நெஞ்சில் கைவைத்து தள்ளினான்.

அவ்வளவு தான்! அடுத்தநொடி வீசி அறைந்த அறையில், தான் உட்கார்ந்திருந்த புத்தக அடுக்கின் மீதே மல்லாக்க விழுந்தான்.

வீசியின் இந்தத் திடீர் தாக்குதலில் மற்ற மூவரும் சுதாரித்து, “ஹேய்!” என்று ஏககாலத்தில் சத்தம் எழுப்பி அவனை அடிக்கப்பாய, வீசி நிதானமாக தன் கையையும், காலையும் அகட்டி கராத்தே ஸ்டான்ஸ் அமைத்தான்.

வீசியின் கண்களில் துளிக்கூட பயமில்லை. அவர்களை வேட்டையாடும் வெறி மட்டுமே கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது.  

புத்தகங்களின் மீது விழுந்து கிடந்தவன், “ஜீவாண்ணா, அன்னைக்கு சொல்லல? கான்ஸ்டபிளையே ஒரு பொடியன் ஜெயிச்சிட்டான்னு. அது இவன் தாண்ணா” என்று வலியில் முனகினான்.

வீசி இன்னும் அவர்களை அடிக்கும் தோரனையில் தான் நின்றிருந்தான். “இப்போ வெளியப் போறீங்களா? என்ன சொல்றீங்க?” என்றும் கர்ஜித்தான்.

‘போகவில்லை எனில் உங்கள் தாய் இன்று பேரிழப்பை சந்திப்பாள்’ எனும் செய்தி அதில் பொதிந்திருந்தது. வந்தவர்கள் சற்று நிதானித்தார்கள்.

சற்று முன்பு ஜீவாண்ணா என்று அழைக்கப்பட்டவன் மட்டும், “என்னடா இந்தப்பொடியன் நம்மளையே மிரட்டிப் பார்க்கிறான்? டேய்! நீ ஒரு தடவை எங்கக்கிட்ட வாங்கினா தான் சரி படுவ.” என்றபடியே வேகமாக வீசியை நெருங்கி, தன் வலக்கையை அவன் முகத்தில் குத்துவது போல் ஓங்க, லெஃப்ட் ஃபார்வர்ட் ஸ்டான்ஸில் நின்றிருந்த வீசி தன் முகத்தை பின்னால் இழுத்து, கண்ணிமைக்கும் நேரத்தில் வலக்காலை உயர்த்தி, ‘நச்’சென்று அவன் பின்புற குறுக்கில் உதைத்துத் தள்ளினான்.

சடக்கென்று இடுப்பு எலும்பு முறிந்து ‘ஹா’ என ஓலமிட்டபடியே தரையில் விழுந்து கதறினான் அந்த ஜீவாண்ணா.

புத்தகங்களின் மீது படுத்துக் கிடந்தவன் வேகமாக எழுந்து அருகிலிருந்த நாற்காலியை தூக்கிக்கொண்டு அடிக்க வர, நூலிழையில் விலகிய வீசி, காற்றில் ஏறி அவனை ஃப்ரண்ட் கிக் கொடுத்து வீழ்த்தினான். அப்படியும் முயன்று எழுந்து நின்றவனை, மீண்டும் அவன் உயிர் நாடியிலேயே உதைத்து படுக்க வைத்தான்.

இந்த சாகசங்களை எல்லாம் அரண்டு பார்த்திருந்த மற்ற இருவரும், “டேய்! எங்க ஆளுங்க மேலயே கை வச்சிட்டில்ல?” என்று கோபமாக ஓடி வர, அருகில் வகைப் பார்த்து பிரித்திருந்த பத்து ராட்சதப் புத்தகங்களையும் சரமாரியாக அவர்களை நோக்கி எறிந்து தன்னை தற்காத்துக்கொண்டான் வீசி.

முதல் மூன்று புத்தகங்களை தவிர்த்து மற்றவையெல்லாம் குறி தவறின. ஆனாலும், மேலே பட்டுவிட்ட புத்தகமே அவர்களின் வேகத்தை குறைக்க போதுமானதாக இருந்தது.

இன்னும் வீசியெறிய ஏதேனும் இருக்கிறதா? என்று தேடிப் பார்த்தவன் அருகிலிருந்த பேப்பர்வெயிட்டையும் குறிபார்த்து எறிந்தான். அது இரண்டாவதாக வந்தவனது நெற்றிப்பொட்டில் பட்டு ரத்த ருசிப் பார்த்தது. பின்னால் வந்தவனது அலறலிலேயே முன்னால் வந்தவன் நின்றுவிட்டான்.

இன்னொரு பேப்பர் வெயிட்டும் தன் கையில் சிக்கியிருக்க, தூக்கிப்போட்டு பிடித்துக் கொண்டிருந்தவனிடம், “ஹேய் வேணாம். வேணாம்.” என்று மீதமிருந்தவன் கெஞ்சிக் கொண்டிருந்தான்.

அப்போது வீசிக்கு பின்னாலிருந்து, “இங்க என்ன கலவரம்?” என்றொரு கம்பீரக்குரல் கேட்டது.

வீசி திரும்பிப் பார்த்தபோது அதிர்ந்துபோனான். ஏனெனில் அங்கு தன் டிரைவருடன் அவனை கண்டிக்கும் பாவனையில் நின்றிருந்தது விஜயாதித்தன்.

அவரைப் பார்த்ததும் பேப்பர்வெயிட்டை கீழே போட்டுவிட்டு தலை குனிந்து நின்றான் வீசி.

நிலைமையை சாதகமாக்கி எழுந்து நின்ற அடியாட்கள் நால்வரும், “அண்ணே, இவன் எங்களை..” என்று வலியோடு பேச முயல,

“ஹிம்” என்று கையுயர்த்தி நிறுத்தியவர்,

“என்ன தம்பி நம்ம பயல்வ கிட்டயே உன் வீரத்தை காட்டியிருக்க? நான் இப்போ ‘ம்’னு ஒரு வார்த்தை சொன்னா போதும்; என் கண்ணு முன்னாடியே பொருளெடுத்து போட்டுத் தள்ளிருவானுக. யோசிக்கத் தெரியாதப் பயலுக தம்பி. இவங்கக்கிட்ட வச்சிக்காத. இது என் கடை. நான் சொல்லித் தான் இவனுங்க இங்க வந்தானுக. இனி வேலை இருந்தா வரவும் செய்வானுக. அவனுகளை பகைக்கிறது என்னை பகைக்கிறதுக்கு சமம். உறவுக்காரப் பையனா போயிட்டியேன்னு சும்மா விடுறேன். இல்ல… ம், போ தம்பி!” என்று உறுமினார் அவர்.

வீசியிடம் அடி வாங்காமல் பிழைத்திருந்தவன், விஜயாதித்தன் இருந்த தைரியத்தில் வீசியின் காலரைப் பிடித்து வெளியே சாலையில் இழுத்துவந்து தள்ளினான்.

வீசி கோபத்தில் விறுவிறுவென எதிரிலிருந்த பள்ளிக்கூடத்திற்குள் நுழைந்தான். அங்கு தண்ணி டேங்க் அருகில்போய் உட்கார்ந்து கொண்டவனுக்கு ஒரே குழப்பமாய் இருந்தது.

இவர்கள் உள்ளே வந்ததன் நோக்கம் என்ன? புத்தகத்தை எடுத்துக்கொண்டு போகப்போகிறார்களா? சே! ஒன்றும் விளங்கவில்லையே? என்றே குழம்பிக் கொண்டிருந்தான்.

அன்றுமாலை ஷ்ரதா தன்னிடம் டியூஷன் வந்தபோது விஜயாதித்தன் மேலுள்ள கோபத்தில் நிமிடத்திற்கொருமுறை அவளை முறைத்துக்கொண்டே இருந்தான் வீசி. ஒரு கட்டத்தில் பொறுக்கமுடியாமல் வெளிப்படையாகவே திட்ட ஆரம்பித்துவிட்டான்.

“கண்ணுல மை அது இதுன்னு நல்லா இழுக்க மட்டும் தெரியுது இல்ல? கணக்கு போடத்தெரியாதா?” என்று கடுமையாகத் திட்டிவிட்டான்.

கணக்கை சரியாகப் போட்டுக்கொண்டிருந்த தாரிணியோ அவளை பாவமாகப் பார்த்தாள்.

திட்டிவிட்டு அவன் வாடிக்கையாளர்களை சந்திக்கச் சென்றுவிட, கைக்குட்டையால் தன் கண்களை துடைத்தபடியே உட்கார்ந்திருந்தாள் ஷ்ரதா. கண்ணீர் குடம் குடமாக கொட்டிக் கொண்டிருந்தது.

நாகூர் அண்ணா கொண்டு வந்த பூஸ்ட்டையும் அவள் இன்று குடிக்க மறுத்துவிட்டாள்.

அவளை கவனித்துக் கொண்டிருந்த வீசிக்கும், தான் அதிகமாய் பேசிவிட்டதாகத் தான் பட்டது.

எப்போதும் தாங்கள் கிளம்பும் நேரத்திற்கு தாரிணி எழுந்து நிற்க, ஷ்ரதா அனைத்து கணக்குகளையும் முடித்துவிட்டு தான் வருவேன் என்று பிடிவாதம் செய்தாள்.

தாரிணியோ நேரம் தாண்டிவிட்டதால் வேறு வழியில்லாமல் வீட்டிற்கு கிளம்பிவிட்டாள்.

ஷ்ரதா மட்டும் தொடர்ந்து கணக்குகளை போட்டுக்கொண்டிருக்க, யாருமில்லா தனிமை… அவனுக்கு அவளை பார்க்கச் சொல்லிக்கொண்டே இருந்தது. திரும்பி திரும்பி பார்த்தான். இன்னும் அழுகையை முழுகிய பாடில்லை அவள்.

அவனுக்கு கடுப்பாயிருந்தது. எழுந்து அவள் அருகில் வந்து நோட்டைத் திருத்தினான். அவள் அவனை நிமிர்ந்துக்கூட பார்க்கவில்லை.

அவனுக்கு இவ்வளவு நாள் எதுவும் பேசாமல் இப்போது திடீரென அவள் பெயரைச் சொல்லி அழைக்கவே தயக்கமாக இருந்தது.

இறுதியில் தானே இறங்கி வந்து மன்னிப்புக் கேட்டான், “என் வார்த்தைகள் உன்னை ஹர்ட் பண்ணியிருந்தா, சாரி” என்று.

அவள் விழிகளை உயர்த்திப் பார்த்தாளே ஒழிய பதில் பேசவில்லை.

‘ஹப்பா! என்ன கண்ணுடா சாமி! இப்படி பார்க்கறா?’ என்று மிரண்டவன், நோட்டைத் திருத்தி அவளிடமே கொடுத்தான்.

எழுந்து நின்றவள், “தனியா போயிடுவ இல்ல?” என்றவனுக்கு,

“ம்” என்று தலையை மட்டும் ஆட்டிவிட்டு, அவனை திரும்பிப் பார்த்தபடியே சென்றாள்.

அடுத்த நாள் மாலை அவள் வந்தபோது கணக்கில் அவள் இடறும் இடம் எவை என்பதை அவளிடம் பேச்சுக்கொடுத்தே கண்டுபிடித்துவிட்டான் வீசி.

பின், அவளிடம் சிரித்துக்கொண்டே கேட்டான், “நீ ஏன் தாரிணியை மாதிரி வெளிப்படையா பேச மாட்டேங்கிற ஷ்ரதா?” என்று.

ஷ்ரதாவுக்கோ அவன் தன் பெயரை அழைத்த கணமே அகவுலகம் சுழல மறுத்து நின்றுவிட்டது. ஆம், அவள் பெயரை முதல்முறையாக உச்சரித்திருந்தான் வீசி. அது தெரியாமல் தான் அவன் தொடர்ந்து ஏதேதோ பேசிக்கொண்டிருந்தான்.

நடுவில் மாட்டிக்கொண்ட தாரிணியோ அவர்கள் இருவரையும் மாறிமாறி பார்த்தாள். ‘இவரு ஏன் இப்படி புலம்புறாரு? க்ளாஸ்ல அவ ஸ்பீக்கர் தான் எட்டு ஊருக்கு கிழியுமே?’ என்றும் மனதுள் முரண் பேசிக்கொண்டாள்.

நீண்ட சொற்பொழிவின் முடிவில் அவன், “ம் சொல்லு! இனி நீ வாய் திறந்து பேசுவியா?” என்றதும்,

‘ம்’ என்று அதற்கும் தலையாட்டி வைத்தாள் ஷ்ரதா.

அவன், “சுத்தம்” என்று தன் தலையில் கை வைக்கவும், அடக்கமாட்டாமல் சத்தம்போட்டு சிரித்தாள் தாரிணி.

அன்றைய கலகலப்பான நாளைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அவன் ஒவ்வொரு கணக்கையும் அவளுக்குப் புரியும்படி ஒரு தடவைக்கு நான்கு தடவையாய் சொல்லிக்கொடுத்தான். அது நடுநிசியில் எழுப்பிக்கேட்டால் கூட அடுத்த ஸ்டெப் என்னவென்று சொல்லும் அளவிற்கு அவளுக்கு மனப்பாடமாகிவிட்டது.

இதுவரை சாத்தானின் உறைவிடமாய் தோன்றிய கணக்குப் புத்தகம் சட்டென்று தேவதைகளின் கூடாரமாய் மாறிய விந்தை மயிர் கூச்செறியச் செய்தது அவளை.

அதன் நீட்சியாய் கனவில் “MATHEMATICS” நகரத்திற்குள் நுழைந்தாள். அங்கு நகரின் அனைத்துப் பகுதிகளிலும், தான் கணக்குப் புத்தகத்தில் பார்த்த குறியீடுகளும், எண்களுமே நகரவாசிகளாய் தெரிய, தலை கிறுகிறுத்துப் போனாள்.

அவள் விழி விரிய அந்த ‘கிராப் ஷீட்’ கட்டமைப்பில் இருந்த நரகத்தின் வீதிகளுக்குள் நடந்தபோது, ஒவ்வொரு கணித வகுப்பின் போதும் தான் சபித்த மேதைகளையெல்லாம் சந்திக்க நேர்ந்தாள். உளமார அவர்களிடம் மன்னிப்பும் கேட்டாள். அப்போது கனவிலேயே தன் ஆத்மா பரிசுத்தமாகிவிட்டது போல் ஒரு புளகாங்கிதம் அவளிடம்.

அந்நிலையிலேயே தூக்கத்தில் முணுமுணுத்தாள், “தான்க்யூ வருண் அத்தான்” என்று.

தன் மகளின் படிப்பார்வத்தை மீனாட்சி, விஜயாதித்தனின் காதிலும் போட்டு வைத்ததின் பலன், தன் மகளை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடினார்.

தேர்வன்றும் ஷ்ரதாவின் கடினமுயற்சி அவளை கைவிடவில்லை. ஆனால், ரிசல்ட் தான் அவள் எதிர்பார்த்தபடி வரவில்லை. மிகுந்த கவலையால் அவள் முகம் கூம்பிப்போனது.

‘சரி கணக்குல நூற்றியெழுபது வாங்கியதே பெரிய விஷயம். இதையும் விட்டா அவர்கிட்ட பேச வாய்ப்பே கிடைக்காது’ என்றவள் தனக்குத்தானே ஆறுதல் கூறிக்கொண்டு, தன் அன்னையிடம் தாரிணியின் வீட்டிற்கு செல்வதாக பொய்கூறிவிட்டு, நேரே தங்கள் புத்தகக்கடைக்கு சென்றாள்.

ஆனால், அங்கு வீசியிடம் பேசிக்கொண்டிருந்த சிவனேஸ்வரனைக் கண்டதும் சகலமும் உறைந்துப் போய்விட்டாள்.

காதல் கணம் கூடும்…

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!